Advertisement

அத்தியாயம் 17
மூன்று நாட்களாகியும் ஷக்தி வந்து கௌஷியிடம் பேச முயற்சிக்கவில்லை. கௌஷியும் அவனிடம் பேசவில்லை.
சந்தியா கொஞ்சம் தேறி இருந்தாலும் வெற்றியோடு இருந்தாள். அதானால் வெற்றிக்கு ஷக்தியோடு அலைபேசியில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கூட அமையவில்லை.
சந்தியாவுக்கு ஷக்தி மற்றும் கௌஷிக்கிடையில் நடந்தவைகள் தெரியவில்லை. யாரும் சொல்லவும் விரும்பவில்லை.
கௌஷி தனது முடிவில் உறுதியாக இருக்க கதிர்வேலனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மூத்த மகளின் வாழ்க்கையை எண்ணி இளைய மகளை பலி கொடுப்பதா? நிச்சயமாக முடியாது.
எதற்கும் சக்தியிடம் ஒருதடவை பேசிப் பார்க்கலாம் என்று எண்ணினால் அவனை அலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. அது அனைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்கு செல்ல முடியாது சாம்பவி கண்டபடி பேசி பிரச்சினை பண்ணுவாள் என்று தெரிந்தும் செல்வது முட்டாள்தனம்.
என்ன செய்வது என்று யோசித்தவர் வெற்றியிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
சந்தியா தூங்கிய பின் மாமனாரும் மருமகனும் பேச ஆரம்பித்தனர்.
கதிர்வேலன் கௌஷியின் முடிவை சொல்ல. “நீங்க என்ன முடிவெடுத்திருக்கிறீங்க மாமா?” என்று கேட்டான் வெற்றி.
“நான் என்ன மாப்புள முடிவெடுக்கணும். சேர்ந்து வாழ போறவங்க அவங்க தானே. ஆனாலும் ஷக்தி இப்படி பண்ணி இருக்க கூடாது. பேசலாம்னு போன் பண்ணா போன வேற சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்காரு” வெறுமையான குரலில் மொழிந்தார் மாமனார். அவரால் சக்தியா இப்படி ஒரு காரியத்தை செய்தான் என்று நம்பவே முடியவில்லை.
“மாமா ஷக்தி என் கூட பொறந்தவன், என் கூடவே வளர்ந்தவன். எனக்கு அவன பத்தி நல்லாவே தெரியும். அவனுக்கு அம்மான்னா உயிர். அம்மாவ யார் திட்டினாலும் சண்டைக்கு போவான். அப்பத்தா ஒரு தடவ திட்டினத்துக்கு கல்ல எடுத்து அடிச்சி அவங்க மண்டைய பொளந்துட்டான். ரொம்ப சின்ன வயசுல நடந்த சம்பவம் எங்குறதால அவனுக்கு நியாபகம் இல்ல. இத சாக்கா வச்சி அம்மா அப்பாவ கூட்டிகிட்டு தனிக்குடித்தனம் வந்துட்டாங்கனு அப்பத்தா புலம்பும்.
அவனுக்கு உங்க மீது, உங்க குடும்பத்து மீதும் எந்த கோபமும் இல்ல. எல்லாம் அம்மாவாலத்தான். அதுவும் சின்ன வயசுல. இப்போ புரிஞ்சிகிட்டான். அன்னைக்கி கூட கௌஷி ஓட சந்தோசமா வாழணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். உங்களுக்கு சந்தேகமா இருந்தா நான் அவன் கூட பேசுறேன். கூடவே நீங்களும் இருங்க. அவன் ஏன் அப்படி பேசினான். என்ன காரணம்னு உங்களுக்கே தெளிவா புரியும். அவன் சரியான அம்மா கொண்டு” கூடப் பொறந்தவனை விட்டுக் கொடுக்காமல் வெற்றி மாமனாரை சமாதானப்படுத்த முயன்றான்.
“நீங்க சொல்லுறது எனக்கு புரியுது மாப்புள. ஆனா கௌஷி ஒரு முடிவோடு இருக்கா. ஷக்தி மாப்புள என்ன முடிவோட இருக்கார்னு தெரியல. நாம பேசி என்ன பிரயோஜனம். அவங்க ரெண்டு பேரும் இல்லையா பேசணும். பேசினா நிரந்தரமா பிரிஞ்சிடுவாங்களோனு பயமா இருக்கு மாப்புள” உடைந்து அழவே ஆரம்பித்தார் கதிர்வேலன்.
கதிர்வேலன் இயல்பில்லையே அமைதியானவர், பிரச்சினை வந்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யாதவர். மூத்த மகள் எங்கோ சந்தோசமாக இருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அவள் இருக்கும் நிலை இவ்வாறு இருக்க, இளைய மகளின் வாழ்க்கை வேறு கேள்விக்குறியானத்தில் ஒரு தந்தையாக கதிர்வேலன் ரொம்பவே மனமுடைந்து போனார்.
வெற்றிக்கும் அவர் நிலை நன்றாகவே புரிந்தது. அதனால்தான் சந்தியா முற்றாக குணமடைந்தபின் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று எண்ணி இருந்தான். மாமனாரை அவனால் இவ்வாறு பார்க்க முடியவில்லை.
“என்ன மாமா இந்த குடும்பத்துக்கு ஆணிவேரா இருக்க வேண்டிய நீங்களே இப்படி உடைஞ்சி போனா எப்படி? இருங்க நான் ஷக்திய போய் பார்த்து பேசிட்டு வரேன். என்ன நினைச்சுகிட்டு இருக்கான் அவன்” இரவென்றும் பாராமல் கிளம்பினான் வெற்றி. 
   
அழைப்பு மணி அடிக்கவும் “போய் கதவை திறங்க” என்று சாம்பவி கத்துவது கேட்டக்கவும் “இந்த அம்மாக்கு தொண்டையை மட்டும் பிரம்மன் தகரத்தால படைச்சிட்டான் போல” வெற்றி நினைக்கும் பொழுதே கதவை திறந்தார் கபிலர்.
“நீயா? என்னடா இந்த நேரத்துல? சந்தியாக்கு ஒன்னும் இல்லையே” பதட்டமாக கேட்டார்.
“அவ தூங்குறா. சக்தி எங்க?” சுற்றியும் முற்றியும் பார்க்க, சாம்பவி கீரை ஆஞ்சுகொண்டிருந்தாள். குறைஞ்சது இருப்பது கட்டாவது இருக்கும் என்று புரிய, எதுக்கு? இவ்வளவு என்று கேட்க எழுந்த நாவை அடக்கினான் வெற்றி. அதை கேட்கப்போய் சாம்பவி ஏடாகூடமாக பதில் சொல்வாள். கோபத்தில் தானும் ஏதாவது பேச நேரிடும். அதன்பின் வந்த வேலையை மறந்து செல்ல வேண்டியதுதான் என்று புத்தியில் உரைக்க, அமைதியானான்.
மகனின் பார்வையை புரிந்துகொண்ட கபிலரோ “கொரோனானால பாதிக்கப்பட்டவங்க, கடைகள் மூடினதால சாப்பாடில்லாம கஷ்டப்படுறவங்க என்று இன்னும் பல பேருக்கு நம்ம அபார்மண்ட்ல இருக்குறவங்க சேர்ந்து சாப்பாடு கொடுக்குறாங்களாம். இந்த மூணு நாளா உங்க அம்மா இந்த வேலையாதான் இருக்கா. நாளைக்கு கீரை சேர்க்க இப்போவே ஆஞ்சி வைக்கிறா”
“இவ்வளவுமா?” தன்னை அறியாமல் கேட்டு விட்டான். தனி ஆளா கஷ்டப்படுவதை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
“கூடமாட நானும் சுத்தம் செஞ்சி கொடுத்தேன்டா.. வீட்டுல இருக்குற பொம்பள இவ ஒருத்திதான். எனக்கு இந்த வேல தெரியாது” என்ற கபிலர் டீவி ரிமோர்ட்டோடு அமர்ந்துகொள்ள வெற்றி சக்தியின் அறைக்கு நுழைந்தான்.
மூத்த மகனைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் சாம்பவி. தான் அழைத்து அவன் வரவில்லை என்ற கோபம்தான் அவளுக்கு.
கபிலர் சொன்னது என்னவோ உண்மைதான். அனைவரும் சேர்ந்து சாப்பாடு கொடுப்பது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேலையை பகிர்ந்தேடுத்துக் கொண்டது என்றதும் உண்மையே. அதை கொடுத்தது பருவதம் என்பதுதான் அவர் அறியாதது.
பருவதம் அத்த ஒரு வில்லங்கம் புடிச்சவங்க, வாய கொடுத்தா… எல்லாத்தையும் கறந்துடுவாங்க உஷாரா இருங்க. என்பதுதான் அவளுக்கான பெயர். ஆனால் அந்த தகவல்களை வைத்தே யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதையும் அவள் அறிந்துகொள்வாள்.
அப்படித்தான் சாம்பவியை பற்றியும் தகவல் வந்தது. அவளை பற்றி அவளுக்கு சிறிதும் நல்லெண்ணம் இருக்கவில்லை. அதே போல் சாம்பவி கௌஷியின் வீட்டில் சத்தம் போட்டது தெரிய வரவே “இவளையெல்லாம் ரொம்ப ஆட விட்டிருக்க கூடாது. பொண்ணுக வாழ்க்கை என்ன கிள்ளு கீரையா?” சாம்பவிக்கு பாடம் புகட்ட முடிவெடுத்தாள் பருவதம்  
எல்லாராலும் பருவதம் அத்த என்று அழைக்கப்படும் பருவதற்கு வயது அறுபது இருக்கும். பார்க்க ஐம்பதை தாண்டாத தோற்றம். அதற்கு காரணம் சின்ன வயதில் ரொம்பவும் கஷ்டப்பட்டதுதான். எட்டு பேரோடு பிறந்தவள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டாள். திருமணமாகி மாமியார் கொடுமை. ஐந்து பிள்ளைகளை பெற்றாள் ஆண் பிள்ளைகள் மூவரும் மருமகளின் பேச்சை கேட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார்கள். இரண்டு மகளையும் கட்டிக்கொடுத்தாயிற்று கணவன் இறந்தபின் நிலத்தை எழுதி வாங்கிக்கொள்ள மகன்கள் திட்டமிட அவள் செய்தது அடுக்குமாடி குடியிருப்பு கட்ட விருப்பம் தெரிவித்து அதில் தனக்கும் ஒரு வீட்டை கட்டிக்கொண்டது. வீட்டோடு கணிசமான பணமும் கைக்கு வர, அதை வங்கியில் போட்டு வட்டிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
இது அவளுடைய நிலம் என்று யாருக்கும் தெரியாது. அவளும் யாருக்கும் சொன்னதில்லை. சொல்ல நினைத்ததும் இல்லை. இங்கே குடியிருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று மட்டும் எண்ணினாள். அதுதான் தனது இறந்து போன கணவனுக்கு தான் செய்யும் சிறந்த காரியமாகவே கருதினாள்.
மக்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று முடிவெடுத்த பொழுது சாம்பவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பர்வதம் “புண்ணிய காரியமில்ல. இருக்குற சிட்டுவேஷனுக்கு சமையகாரன நம்ப முடியாது. நாமதான் சமைக்கணும். சிலபேர் காசு கொடுக்கிறதா சொல்லிட்டாங்க. சிலபேர் சமைச்சி கொடுக்கிறதா சொல்லுறாங்க. ஒருசிலர்தான் காசும் கொடுத்து சமச்சியும் கொடுக்கிறதா சொல்லுறாங்க. ஆளாளுக்கு ஒரு வேலைய பகிர்ந்துக்காம இருக்கக் கூடாதுனு எல்லாருக்கும் வேல கொடுத்திருக்கேன்”
“நல்ல விஷயம்” சாம்பாவியும் ஒருத்தி தன்னை மதித்து வந்து பேசுகிறாள் என்று ஒத்துக்கொண்டாள். புண்ணியகாரியமும் கூட மறுக்க முடியவில்லை.
முதல் நாளே பத்து கிலோ வெங்காயத்தை கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றிருக்க, பருவதம் அழைத்து “உங்க வீட்டுல நாலு பொம்பளைங்க இருக்காங்க ஆளுக்கு இரண்டற கிலோனா டக்குனு வேல முடிஞ்சிடும். ஜமாய்ங்க”
“நாலா…” சாம்பவி புரியாது கேட்க,
“ஆமா… நீங்க, உங்க சம்மத்தியம்மா, ரெண்டு மருமகளுங்க. எல்லாம் அறிஞ்சி அனுப்புங்க. புண்ணியகாரியம் எல்லா அருளும் உங்களுக்கு கிடைக்கட்டும்” என்று அலைபேசியை துண்டிக்க
“ஐயோ  அதுங்க கூட நான் எப்படி போய் வேல செய்யிறதாம்? புண்ணியகாரியம் வேற. மறுக்கவும் முடியாது” வெங்காயத்தை அழுதழுது உரித்து, வெட்டி முடித்தவள் அனுப்பி வைக்க, அடுத்தநாள் பச்சை மிளகாயும், குடை மிளகாயும் , இஞ்சி, மற்றும் வெள்ளை பூண்டு வந்து சேர்ந்தது. மறுக்க முடியாமல் எல்லாவற்றையும் தோலுரித்து இடித்து, மிளகாயை வெட்டி முடிக்கையில் கை எரிய ஆரம்பித்திருந்ததது.
இன்று கீரையை அனுப்பி இருந்தாள் பருவதம் அத்த. தான் பழிவாங்கப்படுவது தெரியாமளையே வேலை செய்துகொண்டிருந்தாள் சாம்பவி.
“என்னங்க உங்க மூத்த மகன் எதுக்கு வந்திருக்கானாம்?”
“ஆமா இவ பேச்சு கேட்டு ஆடினா இவ புள்ளன்னு தலைல தூக்கி வச்சி கொஞ்சுவா. இவ பேச்சு கேக்கலைனா என் புள்ளையா? இவளும் இவ நியாயமும். நல்லா வருது வாயில. அன்னைக்கு செவுட்டுல ரெண்டு போட்டப்போ இன்னும் நாலு சேர்த்து போட்டிருக்கணும் விட்டுட்டேன். இன்னொரு சந்தர்ப்பம் அமையாமளா போய்டும்” கருவிக்கொண்டவர்.
“என்ன கேட்டா? எனக்கு என்னடி தெரியும்? நீயே கேளு” கபிலர் மனைவியின் புறம் திரும்பாமலே பதில் சொன்னார்.
கணவன் அடித்ததெல்லாம் சாம்பவிக்கு ஒரு பொருட்டே இல்லை. காரியம் நடக்க வேண்டும் என்றால். இதையெல்லாம் பெருசு படுத்தக் கூடாது என்று அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள்.
கபிலருக்கு அவளை திருமணம் பேசும் பொழுதே அவள் அன்னை லட்சுமி “மாப்பிளைக்கு கூடப்பொறந்த அக்கா தங்கை என்று நாலு பேர். தாய் மாமன் சீர் செஞ்சே சொத்தை கரைச்சிடுவாளுக பாத்துக்க, உன் மாமியார்காரி சொன்ன பேச்ச கேட்டுகிட்டு இருந்தா நாக்கை வழிக்கத்தான் முடியும். ஏதாவது பண்ணி உன் புருஷன தனிக்குடித்தனம் கூட்டிகிட்டு போய்டு. எந்த காரணத்துக்கும் உன் புருஷன் கிட்ட மட்டும் முகத்தை தூக்கி வச்சிக்காத. அப்பொறம் காரியம் கைகூடாது பாத்துக்க” என்று மகளுக்கு அறிவுரை சொல்லி இருக்க, சாம்பாவியும் இதுநாள்வரை அப்படித்தான் நடந்துகொள்கின்றாள்.
கபிலருக்கு ஒருமுகம். கபிலரின் வீட்டாருக்கு ஒரு முகம் என்று இருந்தவள்தான். இந்திரா மற்றும் இந்திராவின் மக்கள் என்று வரும் பொழுது சுயரூபத்தை காட்டிவிடுகிறாள்.
“நான் எதுக்கு கேக்க போறேன். அவதான் வேணும்னு அவ கூட ஓடிப்போனவன் தானே. வந்தவன் வீட்டுக்கா வந்தான். அவ வீட்டோட மாப்பிள்ளையா சொகுசாதானே இருக்கான். இவ்வளவு நடந்தும் அந்த வீட்டை விட்டுத்தான் வந்தானா? இல்ல எட்டி பார்த்தானா? இல்லயே. இப்போ எதுக்கு வந்திருக்கான் தெரியுமா? ஷக்தி மனச மாத்தி அந்த சிறுக்கியோட சேர்த்து வைக்க வந்திருக்கான். நடந்திடுமா? அவன் என் பையன். நான் சொல்லுரதத்தான் செய்வான். இவளுங்க பேச்சையும் கேக்க மாட்டான். இவன் சொல்லுறதையும் செய்ய மாட்டான்” பெருமையாக சொன்னாள் சாம்பவி.
“உனக்கு பட்டாதான் புரியும்” முணுமுணுத்த கபிலர் எந்த பதிலையும் சொல்ல பிடிக்காமல் தொலைக்காட்ச்சியின் சத்தத்தை அதிகரித்தார்.  சாம்பவி வெற்றியையும் இந்திரா வீட்டையும் வசை பாட ஆரம்பித்தாள்.   
“டேய் ஷக்தி எந்திரிடா… போன எதுக்குடா.. ஆப் பண்ணி வச்சிருக்க? ஆபிசிலிருந்து போன் பண்ண மாட்டாங்களா?” தூங்கிக் கொண்டிருக்கும் தம்பியின் பின் புறம் தட்டினான் அண்ணன்.
அவன் தூங்கி இருக்கவில்லை போலும். யோசனையில் இருந்தான் போலும். “வாடா… இப்போதான் உனக்கு உன் தம்பி நியாபகம் வந்துச்சா… போன் சார்ஜ் போட மறந்துட்டேன். மெயில் தான் பண்ணுவாங்க. லப்டோப்ல பார்த்துப்பேன்” என்றவன் மேசையை பார்க்க அவனது மடிக்கணனி மேசையின் மீது இயக்கத்தில் தான் இருந்தது.
“சரி என்ன முடிவெடுத்திருக்க?” வெற்றி தம்பியை ஏறிட
“எத பத்தி கேக்குற?” ஷக்தி அண்ணனை ஏறிட்டான்.
“தெரியாத மாதிரியே பேசுறது, புரியாத மாதிரியே பதில் சொல்லுறது இந்த விளையாட்டெல்லாம் விடு ஷக்தி. பி சீரியஸ். அங்க கௌஷி டைவோர்ஸ் வேணும்னு சொல்லிக்கிட்டு இருக்கா. பண்டமிக் சிட்டுவேஷனால லாயர் பார்க்க முடியலன்னு சொல்லி வச்சிருக்கேன்” என்றான் வெற்றி.
“ஒஹ்.. ஓஹ்.. போய் பார்க்க முடிஞ்சிருந்தா… டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருப்பாளா? அதுக்கு நீயும் உடந்தையா?” கோபத்தில் எகிறினான் ஷக்தி.
“ஏன்டா… கோபப்படுற? அப்படி நடக்கக் கூடாதுன்னுதான் அப்படி ஒரு பொய்ய சொல்லி வச்சிருக்கேன்னு சொல்லுறேன். இப்போ எல்லாம் ஒன்லைன்லயே கல்யாணம் பண்ணுறாங்க டைவோர்ஸ் கிடைக்காதா?” வெற்றி சிரிக்க. முறைத்தான் தம்பி.
“உனக்கு என் வாழ்க சிரிப்பா போச்சு இல்ல” ஷக்திக்கு கௌஷியை நினைக்கையில் கோபமும் வெறுமையும் ஒன்றாகவே வந்தது.
“இது நீயா இழுத்து கிட்டத்தது தம்பி. அம்மா குணம் தெரிஞ்சே அவங்களுக்கு சப்போர்ட் பண்ணா விடுவாளா உன் பொண்டாட்டி”
“எனக்கு அம்மாவும் வேணும் அவளும் வேணும்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் ஷக்தி.
“கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆச பட்டா எப்படி தம்பி? ஏதாவது ஒண்ண விடணும்”
“கௌஷிய டைவோர்ஸ் பண்ண சொல்லுறியா?” மீண்டும் கோபத்தில் எகிறினான் தம்பி.
“இல்ல. அம்மாவ ஊருக்கு அனுப்ப சொல்லுறேன்” என்றான் வெற்றி.
“என்ன சொல்லுற?” புரியாது கேட்டான் தம்பி
“எனக்கு ஒர்க் ப்ரோம் ஹோம் தான். அதனால் நான் சந்தியாவ கூட்டிகிட்டு ஊருக்கு போலாம்னு இருக்கேன். இங்க பிளட்டுல அடஞ்சி கிடந்தா அவ மனசு மாற மாட்டா. ஊருக்கு போனா, சந்திரா அத்த, பிரணவ், ஊர் சூழல்னு மாற்றம் ஏற்படும். கூடவே அத்தையையும் மாமாவையும் கூட்டிட்டு போயிடுறேன். நீயும் அப்பாவையும் அம்மாவையும் கார் ஏற்பாடு பண்ணி அனுப்பிட்டு”
“ஒண்ணாகவே போலாமே செலவும் மிச்சம்” ஷக்தி யோசனை சொல்வதாக நினைத்து கூற,
“வேற வினையே வேணாம். ஊருக்கு போய் சேருறதுக்குள்ள எத்தன சண்ட வந்திருக்குமோ?” வெற்றி நெற்றியை தடவ
“ஆமா… காச மிச்ச படுத்த நினைச்சி பிரச்சினையை காசு கொடுக்காம வாங்கிட வேண்டி இருக்கும். பட் அண்ணா நீ ஒண்ண மறந்துட்ட. என் பொண்டாட்டியும் ஊருக்கு போக தயாரான என்ன பண்ணுறது?”
“நீ தானே மேனேஜர். அவளுக்கு ஆபீசில் வேல இருக்குனு இன்னைக்கே மெயில் அனுப்பிட்டு. நா நாளைக்குத்தான் ஊருக்கு போறத பத்தி பேச போறேன். அவளுக்கு உன் மேல சந்தேகம் வராது. அவளும் நீயும் மட்டும்தான் இங்க இருப்பீங்க. ஒண்ணா இருந்து பேசி உங்க பிரச்சினையை தீர்த்துக்கோங்க”
“தேங்க்ஸ்டா அண்ணா” வெற்றியை கட்டிக்கொண்டான் ஷக்தி. 
ஷக்தி அனுப்பிய மெயிலை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் கௌஷி. அவனை விட்டு விலகி விட நினைத்தாலும் இந்த வேலையால் அவனோடு இணைந்து தானே இருக்கின்றாள். பேசாம வேலையை விட்டு விடலாமா? என்று கூட எண்ணினாள்.
“என்ன கௌஷி லப்டப்ப பார்த்து மொறச்சிகிட்டு இருக்க” அவள் அருகில் அமர்ந்தான் வெற்றி.
“பேசாம வேலைய விட்டுடலாமான்னு தோணுது மாமா” கௌஷி தீவீர முகபாவனையில் சொல்ல
“நாசமா போச்சு” பதறியவன் “என்ன கௌஷி விளையாடுறியா? உனக்கு என்ன பைத்தியமா? வேலைய விடுறேன்னு சொல்லுற” கோபமாக பேச அரண்டாள் கௌஷி.
இவர்களை ஒன்று சேர்க்க தான் ஒரு திட்டம் போட்டு தம்பியிடம் பேசி விட்டு வந்தால் இவள் அதை சுக்குநூறாக்குவதில்லையே இருக்கிறாளே என்ற கோபத்தில் கத்தி இருந்தான் வெற்றி.
ஒரு நாளும் வெற்றி தன்னிடம் கோபமாக பேசியதில்லை. அவ்வாறிருக்க இன்று இவனுக்கு என்னவாயிற்று அவனை பயப்பார்வை பார்த்தவளுக்கு அக்காவின் நிலைமைதான் மாமாவின் கோபத்துக்கு காரணம் என்று புரிந்தது.
கௌஷியின் முகத்தை பார்த்து தன்னை சுதாரித்துக் கொண்ட வெற்றி “வேலைய விடுறது ரொம்ப சுலபம் ஆனா வேலை கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருக்குற சிட்டுவேஷன்ல எத்தனை பேருக்கு வேலை போகுமோ தெரியல. இதுல நீ வேற இருக்குற வேலைய விடணும்னு சொல்லுற. ஒர்க் ப்ரோம் ஹோம் தானே அப்படியே ஆபீஸ் போக வேண்டி இருந்தாலும் வாரத்துக்கு ஒருநாள் போக வேண்டி இருக்கும். அதுக்காக வேலைய விடுறது முட்டாள்தனம். நீ வேற சக்திய பிரியணும்னு முடிவெடுத்திருக்கனு மாமா சொன்னாரு இந்த நேரத்துல வேலைய விடுறது நல்லதா? நீயே யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்” எழுந்து சென்று விட்டான்.
ஒரு பெண் சொந்தக் காலில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்று கௌஷி நன்றாகவே அறிவாள். வெற்றி சொல்வதும் சரியென்று தோன்றியது. அது தவிர இந்த நேரத்தில் வேலையை விட்டால் சக்திக்கு முகம் கொடுக்க தைரியம் இல்லாமல் வேலையை விடுவதாக கதை கூட கட்டலாம். அப்படி ஒரு பேச்சு வர நடந்துக்கொள்ளக் கூடாது. என்ன நடந்தாலும் அவனை நேருக்கு நேராக சந்தித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் கௌஷி. 
கௌஷி செய்த குளறுபடியால் காலையில் வெற்றிக்கு ஊருக்கு செல்ல முடிவெடுத்ததை பேச முடியவில்லை. அதனால் அவன் சந்தியாவிடம் பேச சந்தோசமாக தலையசைத்தவள் மதிய உணவின் பொழுது பெற்றோரிடம் தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. மூச்சு முட்டுவது போல் இருக்கிறது ஊருக்கு செல்லலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறினாள்.
“என்னக்கா… மாமாக்கு வேலை இருக்கே அவர் எப்படி உன் கூட வருவாரு” கௌஷி வெற்றிக்காக பேச
“எனக்கு ஒர்க் ப்ரோம் ஹோம் தான் கௌஷி. ஊருல இருந்தே பார்த்துப்பேன். நா சந்தியா இல்லாம இருக்க மாட்டேன்பா…” என்றான் அவன்.
“ஊருக்கு போய் அங்க எங்க தங்க போறீங்க?” கலவரமாகவே கேட்டாள் இந்திரா. 
தங்களது சொந்த வீட்டை விற்று அல்லவா சென்னையில் வீடு வாங்கினோம். வெற்றி சந்தியாவை அழைத்துக்கொண்டு ஊரில் சாம்பவியின் வீட்டுக்கல்லவா செல்ல வேண்டும். மனநிம்மதிக்காக செல்பவர்களுக்கு நிம்மதி கிட்டுமா? என்ற அச்சம்தான் இந்திராவுக்கு வந்தது.
“பண்ண வீட்டை பிரணவ் சுத்தம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னான் அத்த. என்னால தனியா சந்தியாவை பாத்துக்க முடியும் என்ன நீங்க எல்லாரும் கூட இருந்தா நல்லா இருக்கும்” என்றான் வெற்றி.
சந்திராவிடம் இங்கு நடந்த பிரச்சினையை வெற்றி கூறியதோடு இவ்வாறு செய்யலாமா? என்று கேட்டிருக்க, எங்க வீட்டுல தங்கினால் அதற்கும் உன் அம்மா பிரச்சினை பண்ணுவாள். பண்ண வீட்டில் தாங்கிக்கொள்ளும்படி சந்திராதான் கூறி இருந்தாள்.    
அக்காவின் நிலைமையை எண்ணி “ஆமா அம்மா… அப்பாவும் வேலைக்கு லீவு போட்டதால நீங்க ரெண்டு பேரும் அக்கா கூட ஊருக்கு போயிட்டு வாங்களேன்” தன்னிலைமையையும் கூறினாள் கௌஷி.
இந்திராவுக்கு மூத்தமகளோடு செல்லவும் வேண்டும். அதற்காக இளைய மகளை தனியாக விட்டு செல்ல முடியாதே
“நீ மட்டும் தனியா இருக்க போறியா? நீயும் எங்க கூட வா. மாப்புள மாதிரி நீயும் வீட்டுல இருந்தே வேல பாரு” இந்திரா சொல்ல
“அவதான் வாரத்துக்கு ஒரு நாள் ஆபீஸ் போகணும்னு சொல்லுறாளே. அவ என்ன குழந்தையா? எங்களை பாத்துகிறவளுக்கு அவளை பாத்துக்க தெரியாதா? எல்லாம் அவ பாத்துப்பா. நீ ஊருக்கு போக தயாராகு” மனைவியை விரட்டினார் கதிர்வேலன்.
சந்தியாவுடன் பேசிய மறுகணமே கதிர்வேலனிடம் எல்லாவற்றையும் ஒப்பித்திருந்தான் வெற்றி. அதனாலயே மனைவியின் பேச்சை மறுத்து பேசி இருந்தார். ஒருநாளும் மறுத்து பேசாத கணவனின் பேச்சை புரியாது குழம்பியவாறே உள்ளே சென்றாள் இந்திரா.
ஊரடங்கு தளர்ந்த மறுநொடி ஊருக்கு செல்ல ஒரு வேனையும் வெற்றி ஏற்பாடு செய்திருந்தான். சக்தியை அழைத்து இனி நீ பார்த்துக் கொள் என்று விட்டு பயணப்பொதிகளை வண்டியில் ஏற்றலானான்.
இந்திரா இளைய மகளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி குளிர்சாதனப்பெட்டியில் ஒரு வாரத்துக்கு தேவையான உடனடி உணவிலிருந்து, சமையலுக்கு தேவையான அனைத்தையும் செய்த்து வைத்திருப்பதாக கூற, “நான் பார்த்துக்க மாட்டேனா… எதுக்கு இதெல்லாம் பண்ணுற”
தனியா இருக்குறதால, எதையாச்சும் கொறிச்சிட்டு சும்மா இருந்துடாதடி. நேரத்துக்கு சாப்பிடு. சரியா” என்று விட்டே கிளம்பினாள்.
இவர்கள் இந்த பக்கம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாக அந்த பக்கம் சக்தியும் தனது பெற்றோரை ஊருக்கு அனுப்ப வழி செய்துகொண்டிருந்தான்.
கபிலரும் ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததால் உடனே சரி என்று விட, சாம்பவி மகனையும் அழைக்கலானாள்.
“நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்புங்க. நான் வீட்டுல இருந்தே வேல பார்க்கலாமான்னு பாக்குறேன். முடியலைன்னா வேலைய விட்டுட்டு வந்துடுறேன்” என்றான்.
“என்னடா சொல்லுற, நிஜமாவா?” சாம்பவிக்கு சந்தோசம் தாளவில்லை. மகன் ஊருக்கு வந்து விட்டால் கௌஷியை பற்றி நினைக்க மாட்டான். விவாகரத்து வாங்கி அவனுக்கு வேறொரு திருமணம் செய்து விடலாம் என்று எண்ணினாள். அதனால் ஷக்தி சொன்னதை நம்பி ஊருக்கு கிளம்பி இருந்தாள்.
ஆனால் கபிலர் பொறுப்பான தந்தையாக ஊருக்கு செல்லும் முன் சக்தியிடம் அவனது கல்யாண வாழ்க்கையை பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்டிருந்தார்.
சக்தியும் நடந்த உண்மைகளை கூறி,  கௌஷியை தவிர வெற்றியோடு மற்ற அனைவரும் ஊருக்கு செல்வதாக கூறியவன், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கௌஷியிடம் பேச வேண்டும் என்றான்.
எதுவும் பேசாமல் அவனது தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சாம்பவியோடு ஊருக்கு கிளம்பி சென்றார் கபிலர்.
ஷக்தி கௌஷியோடு எவ்வாறு பேசுவது என்று யோசனையில் இருக்க சந்தர்ப்பம் தானாக அமைந்தது.

Advertisement