Advertisement

அத்தியாயம் 16
தூங்கி எழுந்த சந்த்யா வீடு முழுக்க கணவனை தேடி அலைய, இந்திராவோ குடிக்க காபியை நீட்டியவாறு “என்னம்மா…” என்று கேட்டாள்.
“அத்தான் எங்க? காலைலயே எங்க போனாரு? என் கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாரே” பதட்டமானாள் சந்த்யா.
“எதுக்குமா பதட்ட படுற? முதல்ல உக்காரு” கதிர்வேலன் மகளை அமர்த்தி மனைவியின் கையில் இருந்த காபியை வாங்கி மகளிடம்  கொடுத்தவாறே “வெற்றி மாப்புள ஷக்தி மாப்புளையோட தூங்க போனாரு. ரொம்ப நாள் கழிச்சு அண்ணனும் தம்பியும் சேர்ந்திருக்காங்க இல்ல. நிறைய பேசணும்னு சொல்லிட்டு போனாங்க” 
“ஏன் என் கிட்ட சொல்லாம போனாரு?” காபியை அருந்தாமலையே கலவரமானாள் சந்த்யா.
“அக்கா இது உனக்கே ஓவரா தெரியல. மாமா அவர் வீட்டுக்கு தானே போய் இருக்காரு. வந்துடுவாரு” கௌஷி “என்ன இது?” எனும் விதமாக பேச
“உனக்கு புரியாது கௌஷி. ஆறு வருஷமா அவர் கூட இருந்திருக்கேன். எங்க போனாலும் சொல்லாம போக மாட்டாரு. இன்னக்கி மட்டும் என்ன புதுசா” சந்தியாவின் குரல் கூட கமறி இருந்தது.
“அது  நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது இப்போ தான் நாங்க எல்லாரும் இருக்கோமே” என்றாள் இந்திரா.
ஆனால் சந்த்யா சமாதானமடைவதாக தெரியவில்லை. கௌஷிக்கு அக்காவை இப்படி பார்க்க முடியாமல் தனது அறைக்கு சென்றவள் வெற்றியை அழைத்து இங்கு நடக்கும் கூத்தை கூற, வெற்றி உடனே வருவதாக கூறி அலைபேசியை துண்டித்தான்.
கௌஷி அழைத்ததும் துள்ளிக் குதித்து எழுந்து குளியலறைக்குள் நுழைந்த அண்ணனை அழைத்த ஷக்தி “சந்தியாவுக்கு ஒன்னும் இல்லையே” என்று கேட்டிருக்க,
“அவளுக்கென்ன? அவ நல்லாத்தான் இருக்கா, என்னதான் ரொம்ப மிஸ் பண்ணுறாளாம்” குளியலறை கதவை திறந்தவன் அவசர அவசரமாக கதவிலிருந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வெளியேற சக்தியும் காரியாலயத்துக்கு செல்லும் பையை கழுத்தில் மாட்டியவாறு அண்ணனின் பின்னால் வெளியேறினான்.
“என்னங்க இது? கூப்பிட கூப்பிட கண்டுக்காம போறானுங்க. அம்மானு கொஞ்சம் கூட மதிக்க மாட்டானுங்களா? காலைல எந்திரிச்சதும் காபி கூட குடிக்காம அந்த சூனியக்காரியைகள தேடி போறானுங்க. நீங்க கொஞ்சம் என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?”
தனது இரண்டு மகன்களும் சாப்பிடாமல் செல்வதைக் கண்டு சாம்பவி கத்துவதையும் பொருட்படுத்தாது இருவரும் மின்தூக்கியில் நுழைந்திருந்தனர்.
“அதான் போய்ட்டானுகளே, வீட்டுக்கு வரட்டும். என்னனு கேக்குறேன்” மனைவியின் தொண தொணப்பிலிருந்து தப்பிக்க பேசி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டார்  கபிலர்.
“கிழிப்பீங்க கிழிப்பீங்க” சாம்பவியின் சத்தம் அரைமணித்தியாலத்துக்கு ஓயவே இல்லை. 
வெற்றியும் சக்தியும் வரும் பொழுது கௌஷியின் வீட்டுக் கதவு திறந்துதான் இருந்தது.  வெற்றியை கண்டதும் சந்த்யா ஓடி வந்து “எங்க போனீங்க? ஏன் என் கிட்ட சொல்லாம போனீங்க” சண்டையிடாத குறையாக கேட்க,
“இதோ இவன்தான் தியா என்ன இழுத்துக்கிட்டு போனான். நீ வேற அத்த மடில நல்லா தூங்கிட்டு இருந்தியா உன்ன டிஸ்டர்ப் பண்ண தோணல” ஷக்தியை கைகாட்டிய வெற்றி முகம் கொள்ளா புன்னகையில் சொல்ல, முகத்தை சுளித்தாள் அவன் மனையாள்.
மும்பாயிலிருந்து வந்து வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பொழுது ஊருக்கு செல்லலாம் என்று அவனை நச்சரித்த சந்த்யா கோமாவிலிருந்து கண்விழித்த பின் வெற்றியை எதற்கும் நச்சரிக்கவில்லை.
காலை. மாலை, மதியம் என்று மூன்று வேளையும் அவளை பார்க்க வரும் வெற்றி அவளுக்கு உணவூட்டி, தைரியம் சொல்லி விட்டுத்தான் செல்வான். அவன் எங்கு செல்கிறான். என்ன செய்கின்றான் என்பதையும் பேச்சு வாக்கில் ஒப்பிப்பான். கல்யாணத்துக்கு முதல் இருந்தே அவன் அப்படித்தான். கல்யாணத்துக்கு பிறகு சொல்லாமல் எங்கும் சென்றதில்லை.   
தாதிகள் மற்றுமன்றி, பக்கத்துக்கு படுக்கையில் இருக்கும் நோயாளிகள், அவர்களை பார்த்துக்கொள்ள இருப்போர் என்று அனைவருமே “நீ ரொம்ப கொடுத்துவச்சவமா… இப்படி ஒரு புருஷன் கிடைச்சிருக்கான். தினமும் காலைலயே கோவிலுக்கு போயிட்டு வந்து உனக்கு திருநீர் பூசி விடுவான். நீ கண்ணு முழிப்ப எங்குற அவன் நம்பிக்கைதான் இன்னக்கி நீ கண்ணு முழிக்க காரணம்”
“இதுவே வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் இன்னொரு பொம்பளய கட்டி இருப்பான்”
“எத்தன பொண்ணுங்க புருஷன் சரியில்லாம பொறுத்துகிட்டு குடும்பம் நடத்துறாங்க தெரியுமா?”
“அட மனுசனா பொறந்தா குறை இருக்கத்தான் செய்யும். கோவம் வந்தா வார்த்தையை விடத்தான் செய்வாங்க. கஷ்டமும், துன்பமும்  வரும் போதுதான் உண்மையான குணத்த பார்க்கலாம். உன் புருஷனுக்கு உன் மேல பாசம் ஜாஸ்தி. உனக்கு ஏதாவது ஆகிடுமோ எங்குற பயம்தான் உன்ன அதட்டி அவன் கைக்குள்ள வச்சிக்க பாத்திருக்கான். எப்படியோ பெரிய கண்டத்துல இருந்து தப்பி பொள்ளாச்சி வந்துட்ட. இனிமேல் சந்தோசமா இருங்க” என்று சாந்தலக்ஷ்மியும் கூறி இருந்தார்.
யார் யாரோ சொல்லித்தான் கட்டிய கணவனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?  கணவனின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் சந்தியாவை துணுக்குற செய்தாலும், அவன் கோபம் கூட அவள் மீதான அன்பும், அக்கறையும் என்பதை உணர்ந்துகொண்டாள்.
எதுவும் இருக்கும் பொழுது அருமை தெரிவதில்லை. இழக்கும் பொழுதுதான் கவலையடைகிறோம்.
வெற்றியும் சந்தியாவின் அன்பை புரிந்துகொண்டிருந்தாலும் கோபத்தில் நிறையவே அவளை காயப்படுத்தி இருந்தான். சந்த்யா மனதில் ரண வேதனையோடு பொறுமையாக இருந்தாள்.
சந்தியாவை இழந்து விடுவேனோ என்ற தருணத்தில் வெற்றி அவன் கோபத்தை கை விட்டிருந்தான். கோமாவிலிருந்து கண்விழித்த சந்தியாவும் கணவன் தன்மீது வைத்திருக்கும் அன்பை முற்றாக உணர்ந்து கொண்டாள்.
சில அசம்பாவிதங்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடாது என்று இருந்தாலும், நடப்பது நன்மைக்கே!
“அடப்பாவி நான் உன்ன கூப்பிடவே இல்ல” சக்தியின் மைண்ட் வாய்ஸ் எகிறி குதிக்க,
“மாப்புள குளிச்சீங்களா? வாங்க சாப்பிடலாம்” கதிர்வேலன் வெற்றியை அழைக்க “இவ்வளவு நாளா இங்க இருந்த நான் ரெண்டாம்பட்சம் ஓடிப்போன அவன் மாப்புளையா?”  ஷக்தி அவரை முறைக்க முடியாமல் நின்றிருந்தான்.
“அவர் துணியெல்லாம் இங்கதான் இருக்கு. எப்படி குளிச்சிருப்பாரு. வாங்க அத்தான் துணி எடுத்து தரேன். நீங்க குளிச்சிட்டு வாங்க. நானும் இன்னும் சாப்பிடல. ஒன்னாவே சாப்பிடலாம்” என்றாள் சந்தியா. வெற்றியை கண்ட பின்தான் அவள் கண்களில் மின்னலோடு, முகம் தெளிவுற்று, இதழ்களும் விரிய ஆரம்பித்திருந்தன.   
“அவ இன்னும் காபி கூட குடிகள மாப்புள” இந்திரா ஆதங்கப்பட,
“நானும் காபி சாப்பிடல அத்த. சந்தியா தேடுவான்னு வந்துட்டேன். குளிச்சிட்டு வரேன். டிபன் சாப்பிடலாம்” வெற்றி சந்தியாவோடு பேசியவாறு அறைக்குள் செல்ல ஷக்தி கௌஷியைத்தான் பார்த்தான்.
கௌஷி கடமைக்காக அவனுக்கு பரிமாறுகின்றாள். அவன் ஊட்டி விட்டால் உண்ணுகின்றாள். அவன் கைகோர்த்து தோள் சாய்ந்தவள்தான். இந்த கொஞ்சம் நாளாக அவனிடமிருந்து விலகி இருப்பது போல் தெரிகிறது. வீட்டில் நடக்கும் பிரச்சினைகளால் குழம்பி இருக்கின்றாளா? அப்படி இருந்திருந்தால் ஆறுதலுக்கு என்னிடம் அல்லவா வந்திருக்க வேண்டும்.
ஓவியாவின் விஷயம் தெரிய வந்த பின்தான் இப்படி நடந்துக்க கொள்கின்றாளோ? அது ஒரு பிரச்சினையே இல்லை என்றுதானே அன்று கூறினாள். இவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
ஷக்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட கௌஷி “எங்க கிளம்பிட்டீங்க? அதான் ஊரடங்கு போட்டு ஆபீஸ மூடிட்டாங்களே” ஷக்தி எந்த பதிலும் சொல்லவில்லை என்றதும் “என்ன பசிக்குதா? வாங்க சாப்பிடலாம்” சாதாரணமாகவே அழைக்க
“சுத்தம் கொஞ்சம் கூட காதலே இல்ல. கடமை மட்டும் தான்” சக்திக்கு ஆயாசமாக இருந்தது.
சந்திராவும் சகாதேவனும் எப்படி வாழ்ந்தார்கள் என்று அவன் கண்கூடாக பார்த்திருக்கின்றான். சகாதேவனின் விழியசைவை வைத்தே சந்திரா நடந்துக் கொள்வாள்.
இந்திராவும், கதிர்வேலனும் காதலித்து திருமணம் செய்தவர்கள் கிடையாது ஆனாலும் எந்த விதமான சண்டை, சச்சரவுமின்றி  எந்த பிரச்சினை வந்தாலும் ஒரே மாதிரி சிந்தித்து முடிவெடுக்கிறார்கள்.
தனது பெற்றோர் இரு துருவங்கள்தான். தந்தை பொறுமையின் சிகரமாக இருப்பதால் குடும்பம் பிரியாமல் வாழ்கிறார்கள். இதுநாள்வரை  அன்னையை அடித்ததும் இல்லை. திட்டியதும் இல்லை. முயன்ற மற்றும் புரிய வைக்க முயற்ச்சி செய்வார். முடியாத பட்சத்தில் அமைதியாக சென்று விடுவார்.
“ஒரு குடும்பம் நிலைக்க, அதன் அமைதிக்கு இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டுமா? தனது பெற்றோரை போல் ஒரு வாழ்கை தன்னால் நிச்சயமாக வாழ முடியாது.
தான் கௌஷியை காதலிக்கவில்லை என்றால் நிச்சயமாக விவாகரத்து வாங்கி இருப்பேன். சுயநலமான முடிவாக தெரிந்தாலும் அது தான் அவளுக்கும் நல்லது. தான் அவளை காதலிப்பது போல் அவளும் தன்னை காதலிப்பாள் என்று எதிர்பார்க்க முடியுமா? அவள் பிரச்சினைதான் என்ன? பேசிவிடுவது நல்லது” என்ற முடிவுக்கு வந்தான் ஷக்தி.
வேலைக்கு செல்லும் பொழுது பேச முடியாது. ஆபீசில் கூட பேச முடியாது. முன்ன மாதிரி ஆபீஸ் விட்டு வெளியே செல்ல முடியாது. பொது இடங்கள் பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்டது மட்டுமல்லாது. ஊரடங்கு வேறு வெளியே எங்கும் சென்று நிம்மதியாக, பொறுமையாக, அமைதியாக பேச முடியாது.
எது பேசினாலும் வீட்டில்தான் பேச வேண்டி இருந்தது. தனது வீட்டில் எதுவும் பேச முடியாது. கௌஷியின் வீட்டிலும் பேச சந்தர்ப்பம் அமையாது. என்ன செய்யலாம்? யோசனையிலையே சாப்பிட்டு முடித்தான் ஷக்தி.
“கௌஷி ஆப்பீஸ் விஷயமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும் உன் ரூமுக்கு போலாமா?” ஷக்தி கௌஷியை ஏறிட்டான். 
 “இப்பொவேவா?” உதட்டை சுளித்தவள் “அதான் ஒபிசியலா ஆபீசுக்கு லீவ் விட்டாச்சே நாளைக்கு பார்க்கலாம்” அசால்டாக சொன்னவள் உள்ளே செல்ல
“இவ ஒருத்தி… நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேக்க மாட்டாளா?” செல்லும் அவளை முறைத்தவாறு அங்கேயே அமர்ந்துகொண்டவன் தொலைக்காட்ச்சியை இயக்கினான்.
குளித்து விட்டு வந்த வெற்றி சந்தியாவோடு அமர்ந்து உணவுண்ண, ஷக்தி அவர்களை பொறாமையாக பார்த்திருந்தான்.
“இதுங்க வேற நடு வீட்டுல ரொமான்ஸ் பண்ணி உசுர வாங்குதுங்க” அவர்களை ஷக்தி திட்டிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே நுழைந்த சாம்பவி ஷக்தி டீவி பார்த்துக் கொண்டிருப்பதையும், வெற்றி சந்தியாவுக்கு ஊட்டி விடுவதையும் கண்டு கொதித்தாள்.
கபிலரரிடம் எரிந்துகொண்டிருந்தவள் அவர் கண்டுகொள்ளவில்லை என்றதும் இந்திராவையும், அவள் பெற்ற பிள்ளைகளையும் ஒரு கைப்பார்த்தே தீர வேண்டும் என்று மின்தூக்கியில் ஏறி இருந்தாள்.
சாம்பவியை கண்டு சந்த்யா வாயில் இருந்ததை முழுங்கிவாறே எழுந்து நின்றவள் “வாங்க அத்த” என்று வரவேற்க,
“என்னடி வாங்க அத்த? உனக்கு சேவகம் செய்யத்தான் என் பையன மயக்கி இழுத்துட்டு ஓடினியா? என் பையன என் கிட்ட இருந்து பிரிச்சி உன் காலடி செருப்பா வச்சிருக்க இல்ல. நீ எல்லாம் என்ன ஜென்மமோ. நல்லா வாழ்ந்துடுவியா? அந்த கடவுளுக்கே அடுக்கல அதான்டி எக்சிடன் பண்ணி உனக்கு குழந்தை பொறக்காத மாதிரி பண்ணிட்டான்”
“அம்மா”
“அம்மா”
வெற்றியும், சக்தியும் ஒரே நேரத்தில் கத்த, சம்பவியின் சத்தம் கேட்டு, இந்திரா, கௌஷி மற்றும் கதிர்வேலன் என்று அனைவரும் வாசலுக்கு வந்திருந்தனர்.
சாம்பவி சொன்னதைக் கேட்டு “ஐயோ ஐயோ என் பொண்ணு வாழ்க போச்சே… நான் பயந்தா மாதிரியே நடந்துருச்சே, ஏன் மாப்புள எங்க கிட்ட சொல்லல” இந்திரா கதற
“என்ன மாப்புள உங்க அம்மா என்னென்னமோ சொல்லுறாங்க? கௌஷிமா நீயாச்சும் சொல்லுமா?” கதிர்வேலன் மாப்பிளைகளிடத்தில் நம்பிக்கை இல்லாமல் சின்ன மகளிடம் விசாரித்தார்.
கௌஷிக்கே இது புதிய செய்தி. அவள் என்னவென்று சொல்வாள். அப்படி எதுவும் மருத்துவர் சொல்லவில்லையே. வெற்றியிடம் ஏதாவது கூறி இருப்பாரோ? அவள் வெற்றியைத்தான் ஏறிட்டாள்.
கண்விழித்த சந்தியாவுக்கு தலையில்தான் அறுவைசிகிச்சை செய்தார்கள். கைதான் உடைந்திருந்ததாகவும் அவள் கோமாவில் இருக்கும் பொழுதே கை குணமாகி விட்டதாகவும் தானே வெற்றி கூறினான். இந்த அத்தை என்ன சொல்கிறாள்? இந்த அத்தான் என்னிடம் எதை சொல்லாமல் மறையத்தார். ஒரு நொடி ஆடிப்போன சந்த்யா “என்னங்க அத்த என்ன சொல்லுறாங்க?” வெற்றியை உலுக்கினாள்.
வெற்றி மறுத்து பேச முன் சாம்பவியின் பின்னால் வந்த கபிலர் அவளை இழுத்து கன்னத்தில் “பளார்’ என்று அறைந்திருந்தார்.
ஒருநாளும் அடித்திராத கணவர் அடித்ததில் சாம்பவி அதிர்ச்சியில் உறைந்தது ஒரு நொடிதான் “பார்த்தியாடா இந்த சூனியக்காரிங்க உங்க ரெண்டு பேரையும் மட்டும்தான் மயக்கிட்டாங்கனு நினச்சேன். உங்க அப்பாவையும் சேர்த்து மயக்கிட்டாங்க. இத்தனை வருஷத்துல இல்லாத பழக்கம் இங்க வந்ததும் கைய நீட்டுறாரு”
கதவும் திறந்திருக்க,  சாம்பவியின் கீச்சுக் குரலில் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளின் கதவு திறக்கப்பட்டு எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
“அம்மா என்ன பேசுற நீ?” என்றவாறே வாசற் கதவை சாத்தினான் ஷக்தி. 
சாம்பவியின் பேச்சும், குரலும் ஒரு தினுஸாகவே இருக்க அவளை அருவருப்பாக பார்க்கலாயினர் பெண்கள்.   
“உனக்கு ஒரு அறை பத்தாதா, என் பொறுமைய சோதிக்காத அமைதியா வீட்டுக்கு கிளம்பு” மனைவியை அதட்டினார் கபிலர்.
சாம்பவி பேசிய பேச்சு இந்திராவின் கோபத்தை தூண்டி இருக்க “என்ன பேச்சு பேசுறா பாருங்க, முதல்ல அவள வீட்டை விட்டு போக சொல்லுங்க” கோபத்தில் சொல்லி இருந்தாலும் இந்திராவின் கண்கள் கலங்கித்தான் இருந்தது. 
“அத்த அம்மா பேசியது தப்புதான் அதுக்காக வீட்டை விட்டு போக சொல்லுறது நல்லா இல்ல” சாம்பவி கோபமாக இருக்கின்றாள் அவளை மேலும் கோப்படுத்தினால் பிரச்சினை தான் அதிகமாகும் என்ற எண்ணத்தில் ஷக்தி அன்னைக்காக பரிந்து பேசினான்.
“ஓஹ்… ஒஹ்… அம்மாவை பேசினா மகன் கொந்தளிக்கிறாரு. யேன்னு உங்களுக்கு இன்னுமா புரியல” பெற்றோரை பார்த்த கௌஷி ஷக்தி மற்றும் சாம்பவி ஆறு வருடங்கள் கழித்து நடந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் வந்தது பழிவாங்க மட்டுமே என்று அவர்களின் திட்டத்தை பற்றி கூற, வாயடைத்து போனான் ஷக்தி.
எந்த விஷயம் கௌஷிக்கு தெரியக் கூடாது என்று இருந்தானோ அதை அவள் தெரிந்துக் கொண்டதும் இல்லாமல், அதை மனதில் போட்டு பூட்டி வைத்து சமயம் பார்த்து அனனைவரிடமும் போட்டுக் கொடுத்து விட்டாள். 
இந்த்ராவுக்கும், கதிர்வேலனுக்கும் நம்பவே முடியவில்லை. தங்களோடு சொந்த மகனை போல் நடந்து கொண்ட ஷக்தி இவ்வளவு நாள் நடித்தானா?
“என்ன ஷக்தி இது?” வெற்றி அதிர்ச்சியாக கேட்க, கபிலர் ஷக்தியை அறைந்தே விட்டார்.
“அப்பா….”
“என்னடா அப்பா… அன்னக்கி அவ்வளவு கெஞ்சினது இதுக்குத்தானா? கேவலமா இல்ல. உனக்கு மட்டும் ஏன்டா உங்கம்மா புத்தி வந்தது” உடைந்தே விட்டார் கபிலர்.
“ஏன் என் புத்திக்கு என்ன குறைச்சல்?” சாம்பவி குறுக்கிட
“உன்ன யார் பேச சொன்னா…” கபிலர் கையை ஒங்க சாம்பவி பின்வாங்கியதோடு ஷக்தி அன்னையை தாங்கிக் கொண்டான்.
 அதை பார்த்த கௌஷிக்கு சக்தியின் மீது வெறுப்புதான் கூடியது.
“என்னங்க முதல்ல உங்கம்மா சொன்னதுக்கு எனக்கு விளக்கம் சொல்லுங்க” சந்த்யா வெற்றியை உலுக்க,
“அவன் கிட்ட என்னடி கேக்குற? அதான் நான் சொல்லுறேன். என் பசங்க வாழ்க்கைல இருந்து போய் தொலைங்க டி…”
“அம்மா….” வெற்றி கத்த
“முதல்ல கிளம்புங்கடா… இந்த சூனியக்காரிங்க சகவாசம் தேவ இல்ல”
வெற்றியும் சாம்பவியின் பேச்சை மறுத்து பேசாததால் வெற்றியை உலுக்கியவாறே சந்த்யா அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்திருந்தாள்.  
“ஐயோ என் பொண்ணு” இந்திரா கத்தியவாறே சந்தியாவின் அருகில் வர, வெற்றி அவளை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றான்.
“இப்படித்தான் அம்மாவும் பொண்ணுகளும் நடிச்சே ஏமாத்துறாளுங்க” சாம்பவி முகத்தை சுளிக்க,
“நீ அடங்கவே மாட்டியா? முதல்ல கிளம்பு” அவளை இழுக்காத குறையாக கபிலர் அழைத்து செல்ல
“ஷக்தி அவன் கெடக்குறான் விளங்காதவன் நீ வா…” சின்ன மகனை அழைத்தாள் சாம்பவி.
“நீ போ… நான் வரேன்” அவர்களுக்காக கதவை திறந்து விட்டான் ஷக்தி.
இந்திராவும் கதிர்வேலனும் வெற்றியின் பின்னால் சென்றிருக்க, கௌஷி சக்தியை முறைத்தவாறு அங்கேதான் நின்றிருந்தாள்.
“டேய் வாடா…” சாம்பவி கத்தியவாறே கபிலரோடு மின்தூக்கியில் நுழைய
“நீயும் இடத்தை காலி பண்ணா பிணையில் போட்டு கழுவி சுத்தம் செய்ய ஈஸியா இருக்கும் பாரு. கிளம்புறியா” கௌஷி வெறுப்பை கக்கினாள்.
“என்னமா பேசுறா…”  புருவம் நீவியவன், என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என்று யோசிக்க
“இன்னும் கிளம்பல” கதவின் பக்கம் கை நீட்டினாள் கௌஷி. 
“கௌஷி… நா என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் புரிஞ்சிக்க, அன்னக்கி அம்மாவ…” ஷக்தி தன் பக்கம் விளக்க முயல
“போதும்” கையை நீட்டி தடுத்தவள் “சின்ன வயசுல இருந்தே என்ன பிடிக்காது. இது ஒன்னு போதாது நமக்கு நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்த. உங்க குடும்ப மானத்த காப்பாத்திக்க நீ காதலிக்கிறத மறச்சி என் கழுத்துல தாலி கட்டின. தாலி கட்டின கொஞ்சம் நேரத்துலையே உனக்கு போன் வந்தது. அப்போ யார் பேசினாங்கனு தெரியல. ஆனா பேசினது வெற்றி மாமான்னு அவர் சொல்லி தெரிஞ்சி கிட்டேன். அப்போ நீ சொல்லித்தான் உங்கம்மாக்கு வெற்றி மாமாவும், அக்காவும் கல்யாணம் பண்ணது தெரிஞ்சிருக்கு.   மண்டபத்துல கூடி இருந்த மொத்த கூட்டத்துக்கும் உங்கம்மா கூப்பாடு போட்டு சொன்னாங்க” கௌஷி சொல்ல சொல்ல அவள் கண்களிலும் ஷக்தியின் கண்களிலும் அவர்களின் கல்யாண நாள் கண்ணில் விரிந்தது.
“அவங்க கல்யாணத்த பயன்படுத்திகிட்டு உன் காதலியோடு சேர, உங்கம்மாவ தூண்டி ஊருகாரங்க, சொந்தபந்தங்க முன்னாடி எங்க குடும்பத்தை அவமானப்படுத்தி மண்டபத்தைவிட்டு போனவன் தானே நீ”
“ஆமா நீ சொல்லுறது எல்லாம் உண்மை. நா எதையும் மறுக்க மாட்டேன். ஆனா நான் சொல்லுறத கொஞ்சம் கேளு…” ஷக்தி புரியவைக்க பார்க்க
“ஆகா… அதான் உன் வாயாலையே சொல்லிட்டியே இன்னும் என்ன சொல்ல வேண்டி இருக்கு? சின்ன வயசுல என்ன கஷ்டப்படுத்தினது பத்தாதுன்னு ஆறு வருஷம் கழிச்சி பழி வாங்க வந்திருக்க, உனக்கெல்லாம் என்ன ஈன புத்தியோ…”
“கௌஷி… நீ என் பொறுமைய சோதிக்கிற” கௌஷியின் ஒரே வார்த்தையில் பல்லைக் கடித்தான் ஷக்தி.
“நீ தான் என் பொறுமையை சோதிச்சிகிட்டு வாசலையும் அடைச்சிகிட்டு நிக்கிற. கிளம்புறியா காத்து வரட்டும்”
“என்ன நீ என்ன துரத்துலையே குறியா இருக்க, நான் சொல்லுறத கேக்க மாட்டியா?”
“கேப்பேன். அப்படியே கேட்டாலும் உன் கிட்ட டைவோர்ஸ் மட்டும் தான் கேப்பேன். கொடுப்பியா?” சக்தியை முறைத்தவாறே நின்றிருந்தாள் கௌஷி.
“இதுதான் உன் முடிவா?” தன்னை சற்றும் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல். தன்னை பேச கூட விடாமல் பொரிந்து தள்ளுபவளிடம் என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது ஷக்தியின் கோபம் எல்லை கொஞ்சம் கொஞ்சமாக கடக்க ஆரம்பித்திருந்தது.
“ஆமா…” என்று கத்தியவளின் கையோ வாசல் கதவு நோக்கியே இருக்க,
“சரிதான் போடி…” கோபத்தில் வெளியேறி இருந்தான் ஷக்தி.
அவன் வெளியேறியதும் கதவை வேகமாக பூட்டியவள் கதவில் சாய்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.
“மாப்புள சந்தியாக்கு என்ன? உடனே ஆஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்” கதிர்வேலன் பதற
“இல்ல மாமா அவளுக்கு ஒன்னும் இல்ல. எங்கம்மா பேசின பேச்சு கேட்டு அதிர்ச்சிலதான் மயங்கி விழுந்துட்டா. பயப்படுற மாதிரி ஒன்னும் இருக்காது. ஊரு இருக்குற நிலமைல ஆஸ்பிடல் போக முடியாது” என்றவாறே அருகில் இருந்த தண்ணீர் குவளையிலிருந்து நீரை தெளித்து சந்தியாவை எழுப்ப முயன்றான்.
“மாப்புள உங்க அம்மா சொல்றது எல்லாம் உண்மையா?” இந்திராவின் பதட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
கதிர்வேலன் மின் விசிறியை சுழலவிட்டபடியே ஏசியையும் ஒன் செய்து விட்டார்.
வெற்றி சந்தியாவின் முகத்தில் நீரை தெளித்து  எழுப்பி நீரை புகட்டலானான்.
“என்னங்க… என்னங்க… நம்ம பாப்பா..” சந்த்யாவால் தன்னை சுத்தி என்ன நடக்கிறது என்று ஒரு நொடி புரியாமல் குழம்பி இழந்த தன் குழந்தையை தேடலானாள்.
“ஒன்னும் இல்லமா.. ஒன்னும் இல்லமா… நம்ம பாப்பா எங்கயும் போகல வந்துடுவா…” வெற்றி மனைவியை ஆசுவாச படுத்த முயன்றான்.
“நம்ம பாப்பா தானே நம்மள விட்டு போய்ட்டா… இனிமேல் வரவே மாட்டாளா?” வெற்றியின் நெஞ்சில் சாய்ந்து கதற, இந்திராவின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிய ஆரம்பித்திருக்க, கதிர்வேலனால் மகளை இந்த நிலையில் பார்க்க முடியாமல் அறையை விட்டு வெளியே சென்று விட்டார்.
வெளியே வந்த கதிர்வேலன் கௌஷி தரையில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதை கண்டு அவளிடம் விரைந்து விசாரிக்க ஆரம்பிக்க, அவளோ அவரைக் கட்டிக்கொண்டு அழுவதை நிறுத்தவில்லை.
கதிர்வேலனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகளுக்கு ஆறுதல் மட்டும் சொல்ல ஆரம்பித்தார்.
“எங்கம்மா சொன்னதை கேட்டு மனச குழப்பிக்காத தியா… உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லா தான் இருக்க. நமக்கு குழந்தை பொறக்கும். முதல்ல உடம்பு குணமாகட்டும் சரியா…” அவளின் முதுகை நீவி விட்டுக்கொண்டே இருக்க, சந்தியா அவனை இறுக கட்டிக் கொண்டாள்.
வெற்றி சொன்னதை கேட்டு நிம்மதி அடைந்த இந்திரா பூஜையறைக்கு விரைந்து வேண்டிக்கொண்டாள்.
வெளியே வந்த இந்திரா கணவனும் சின்ன மகளும் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களின் அருகில் வர, “அப்பா டிவோஸுக்கு ஏற்பாடு பண்ணுங்க. போதும்பா… என்னால முடியல” கௌஷி விரக்தியாக பேச, ஆறு வருட காத்திருப்புக்கு பின் சின்ன மகளின் வாழ்க்கை கேள்விக்குறியானதை உணர்ந்து இடிந்து அமர்ந்து விட்டாள்.

Advertisement