Advertisement

அத்தியாயம் 15
ஒருவாறு சந்த்யா டிஸ்டாஜாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். மகளுடைய நிலையை கண்டு கதிர்வேலனும், இந்திராவும் அவளை கட்டிக் கொண்டு அழ, கபிலரும், சாம்பாவியும் அமைதியாக பார்த்திருந்தனர்.
கௌஷியும் சக்தியும் சந்தியாவை சந்தித்த பொழுது வெற்றி தாதியிடம் விசாரித்து இன்னும் இரண்டு நாட்களில் சந்தியாவை டிஸ்டாஜ் செய்வதாக கூறியதும் சக்தியிடம் “நாங்க வீட்டுக்கு வரல ஷக்தி. மாமா வீட்டுக்கு போறோம். உனக்கு தான் அம்மாவ பத்தி தெரியுமே. சந்த்யாவ ஏதாவது பேசிட்டா அப்பொறம் வீண் பிரச்சினைகள் உருவாகும்” என்றான்.
இப்படி ஒரு நிலையில் இருப்பவளை அன்னை பேச மாட்டாள் என்று ஷக்தி நினைத்தாலும், அண்ணனோடு இந்த இடத்தில் இதை பற்றி வாக்குவாதம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. சந்த்யா இருக்கும் நிலையில் அவள் அவளுடைய பெற்ரோடு இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்ற எண்ணத்தில் “சந்த்யா இருக்கும் நிலைமைக்கு அவ அத்த கூட இருக்கிறதுதான் சரி. இத நீ கேக்கனுமா?” என்றவன் புன்னகைத்து தான் பார்த்துக்கொள்வதாக தலையசைத்தான்.
சக்தியின் எண்ணமெல்லாம் இத்தனை வருடங்கள் கழித்து மூத்தமகனை காணும் அன்னை அவனை தன்னோடு நிருத்திக்கொள்ள அழைப்பாள் கூடவே சந்தியாவையும் நன்றாக பார்த்துக்கொள்வாள் என்றே இருந்தது.  
இருந்தாலும் அண்ணனுக்கு வாக்கு கொடுத்தாயிர்றே அன்றிரவே தாயையும், தந்தையும் உக்கார வைத்து வெற்றியையும், சந்தியாவையும் கண்டு பிடித்து விட்டதாகவும், சந்தியாவின் தற்போதைய உடல்நிலையையும் எடுத்துக் கூறியவன் இப்போதைக்கு அவர்கள் கௌஷி வீட்டில் இருப்பதுதான் சரி என்று கூற, கபிலரும் சரி என்று விட்டார்.
சாம்பாவியும் மறுத்து ஏதும் பேசவில்லை. சீக்காளி மருமகளுக்கு சேவகம் செய்ய தனக்கு என்ன தலையெழுத்தா? அவள் அம்மாவே அவளை பார்த்துக்கொள்ளட்டும். என் மகனை பார்த்தால் போதும் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.
அன்னையின் அமைதி சக்திக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தாலும் புரிந்துகொண்டாள் என்று சந்தோஷமடைந்தான்.    
மூத்தமகனை கண்டதும் கட்டி அணைத்து நலம் விசாரித்தவள் அன்னை மகள் கதறலை கேட்டவாறு வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தாள்.
“இதுக்காம்மா வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிகிட்ட?” கதிர்வேலன் அழ, கௌஷி தந்தையின் அருகிலையே அமர்ந்திருந்தாள்.
சக்தியும் கௌஷியும் மருத்துமனையிலிருந்து வீடு திரும்பியதும் இந்திராவும், கதிர்வேலனும் வாசலை பார்த்தவாறே அமர்ந்திருப்பதைக் கண்டு அன்னையிடம் என்ன கூறுவது? அக்காவை பற்றி எப்படி சொல்வது என்று கௌஷி தடுமாற, அவளையும் தங்கியவனாக அழைத்து வந்து சோபாவில் அமர்த்திய ஷக்தி தனது மாமனார் மாமியாரிடம் சந்த்யா மருத்துமனையில் இருப்பதையும், அவளுக்கு நடந்த விபத்தை பற்றியும் கூறலானான்.
இந்திரா அழுது கரைய, கதிர்வேலன் மெளனமாக கண்ணீர் வடிக்கலானார்.
“அய்யோ என் பொண்ணு யாருமில்லாத அனாதையா இப்படி தவிக்கிறாளே, மூணு வேலையும் சாப்பிட்டு நான் சந்தோசமா இருக்கிறேனே” இந்திரா நெஞ்சில் அடித்துக்கொள்ள,
“வெற்றி மாப்புள கூட அவ சந்தோசமா இருக்கான்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன் மாப்புள. இப்படி ஆகிருச்சே… நான் இப்போவே என் பொண்ண பார்க்கணும்” கதிர்வேலன் பிடிவாதம் பிடிக்க, சக்திக்கு நிலைமையை எடுத்துக் கூறி அவரை சமாதானப்படுத்துவது பெரும்பாடானது.
கொரானா பரவுவதால் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு போடப்போவதாக அறிவிக்கவும், சொந்த ஊரைப்பார்த்து செல்வோர், பஸ்தரிப்பிடங்களிலும், ரயில் நிலையத்திலும் குவிய ஆரம்பித்தனர்.
இந்த சூழ்நிலையில் வெளியே செல்வது ஆபத்து என்று சொல்லி புரியவைத்து, நாளை மறுநாள் சந்தியாவும், வெற்றியும் வீட்டில் நம்மோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறிய பின்னும் புலம்பியவாறே இருந்தவர்கள் மகளைக் கண்டதும் அழுது கரைய ஆரம்பித்திருந்தனர். இந்த இரண்டு நாட்களாக கௌஷி பெற்றோரை விட்டு அகலவில்லை. அவர்களை சாப்பிட வைப்பது, தூங்க வைப்பது என்று அவள் அருகிலையே இருந்தாள். அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற அச்சம்தான் அவளுள் பரவி இருந்தது.
கதிர்வேலனுக்கும், இந்திராவுக்கும் தங்கள் இருமகள்களும் இரு கண்கள்தான். என்னதான் சந்த்யா வீட்டை விட்டு ஓடிப்போய் வெற்றியை திருமணம் செய்திருந்தாலும், அவள் மீது கோபம் கொண்டு இந்திராவோ, கதிர்வேலனோ தகாத வார்த்தைகளை கொண்டு திட்டவே, சாபமிடவோ இல்லை.
அவர்களின் வளர்ப்பு எப்படி என்று அவர்களுக்கு நன்கு தெரியும். சூழ்நிலையின் காரணமாகவும், வெற்றியின் பேச்சை மறுக்க முடியாமலும் சந்த்யா இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பாள். வெற்றியும் தாங்கள் பார்த்து வளர்ந்த பையன் தானே, சென்றவர்கள் எங்கோ நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்றுதான் தினம், தினம் கடவுளை வேண்டுவார்கள். ஒரு நாள் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என்று தாங்கள் மனதுக்குள்ளையே எல்லாவற்றையும் பூட்டியவாறு காத்திருக்கலாயினர்.
இதே வெற்றி சாம்பவியோடு பெண் கேட்டு வந்தால் கட்டிக்கொடுக்க யோசித்திருப்பார்கள். அதற்கு காரணம் சாம்பவியின் குணம் மட்டும்தான். அப்பொழுது கூட அக்கா சந்திராவும்,  மாமா சகாதேவனும் சொன்னால் கௌஷியை ஷக்திக்கு கட்டிக்க கொடுத்தது போல் ஒத்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். 
“ஏம்மா கல்யாணம் பண்ணி ஆறு வருஷம் ஆச்சுல்ல. பாப்பா இல்லையா?” அழுகையை நிறுத்திய இந்திரா சட்டென்று கேட்டதும் சந்தியா கதறிக் கதறி அழ ஆரம்பித்தாள்.
மனைவியை சமாதானப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லாமல் முகம் இறுக்கியவனாக அமர்ந்திருந்தான் வெற்றி.
என்னதான் அவர்களுக்கு சண்டை சச்சரவு இருந்தாலும், இரவில் நடக்கும் ஊடலுக்கு எந்த குறைவும் இல்ல.
சண்டை போட்டிருக்கோம், கோபமாக இருக்கேன் என்று சந்தியா பிடிவாதம் பிடித்தாலும், “சீ வா” என்று அவளை கட்டாயப்படுத்தி தனது தேவையை தீர்த்துக் கொள்வான் வெற்றி.
ஆண்களுக்கு என்னதான் மனைவியின் மீது கோபம் இருந்தாலும், இந்த விஷயத்தில் மட்டும் கோபத்தை கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
அவன் தேவை தீர்ந்தபின் சமாதானம் கூட அடையமாட்டான். அடுத்த நாள் காலையில் கூட கோபத்தை இழுத்து பிடித்தவனாகத்தான் நின்றிருப்பான்.
தான் கருவுற்றததை அறிந்துகொண்டவள் இந்த குழந்தையால் தங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கக் கூடும் என்ற ஆசையில் அத்தானிடம் பகிர்ந்துகொள்ள மாலையில் அவன் வந்தால் நேரில் நற்செய்தி கூற வேண்டும் என்று அலைபேசி வழியாக கூட அவனிடம் சொல்லாமல் இருந்தாள்.
அன்றுதான் அந்த கோர விபத்து நிகழ்ந்திருக்க, சந்தியாவின் குழந்தையும் கருவிலையே கலைந்திருந்தது. அதை வெளியே சொல்ல முடியாமல் அழுபவளை அனைவரும் புரியாது பார்த்திருக்க இந்திரா மனதில் எழுந்த ஒருவித அச்சத்தோடு மகளை சமாதானப்படுத்தினாள்.
“எக்சிடண்ட் ஆகும் போது ஐம்பது நாட்கள் கருவை சுமந்திருந்தா அத்த. எக்சிடன் ஆனதுல” என்ற வெற்றி உதடு கடித்து மனதில் இருக்கும் ரணத்தை கட்டுப்படுத்த முயற்ச்சி செய்ய அழுகையை நிறுத்திய சந்த்யா “அத்தானுக்கு எப்படி தெரியும்? நான்தான் சொல்லவே இல்லையே” கணவனையே பார்த்திருந்தாள்.
“நீங்க கேட்டதுல அவளுக்கு பாப்பா நியாபகம் வந்திருக்கும். இவள பரிசோத்தித்த டாக்டர் குழந்தை கலஞ்ச விசயத்த சொன்னன்போ” இந்திராவுக்கு பதில் சொன்னவாறே மனைவிக்கும் சேர்த்தே பதில் சொன்னவன் அவள் கையை ஆறுதலாக பிடித்துக் கொண்டான்.
சந்தியாவை கௌஷியும், இந்திராவும் மாறி,மாறி பேசி சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் சமாதானமாகி பேசிக்கொண்டிருந்தாள். சாம்பவி மனதுக்கு ஒரு கணக்கை போட்டவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“இந்து இப்படியே பேசிகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? போ…மா போய் மாப்பிள்ளைக்கும், சந்தியாக்கும் நல்ல சாப்பாடா சமைச்சி போடு. பாரு எப்படி இருக்காங்கனு” கதிர்வேலன் சொல்ல, கண்களை துடைத்துக் கொண்ட இந்திரா மறு பேச்சின்றி சமயலறைக்குள் புகுந்தாள்.
வெற்றியையும்,சந்தியாவையும் கண்டு பிடித்த மகிழ்ச்சியை பிரணவ் வீட்டில் கூறி இருக்க, சந்திராவும் அலைபேசி அழைப்பு விடுத்து அனைவரோடும் பேசி இருக்க, பிராணாவ்வும் வெற்றி மற்றும் சந்தியாவோடு பேசி பெரிய மனிதனாக ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். 
சாம்பவி போதும் இருந்தது என்று கணவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட, சந்த்யா அப்பாவின் மடியில் தலை வைத்து தூங்கி இருந்தாள்.
அவசர அவசரமாக சமைத்த இந்திரா சந்தியாவை எழுப்பி உணவை ஊட்டி விட, வெற்றி மாத்திரைகளை கொண்டு வந்து கொடுக்க, இந்த்ராவே மகளுக்கு மாத்திரைகளை கொடுத்து தண்ணீரும் கொடுத்தாள்.
விபத்து நடந்த அன்றிலிருந்து வெற்றிதான் சந்தியாவை கவனித்துக் கொண்டிருந்தான். குடும்பத்தாரோடு சேர்ந்ததிலிருந்து மனைவிக்கும் தனக்கும் நடுவில் ஒரு சுவரே எழுப்பப்பட்ட உணர்வில் இருந்தான் வெற்றி.
கதிர்வேலனோடு அமர்ந்து வெற்றியும், சக்தியும் உணவுண்ண கௌஷி பரிமாறினாள்.
வெற்றி உண்டு விட்டு வந்து சந்தியாவை பார்க்க, அவளோ கௌஷியின் அறையில் இந்திராவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
தனது எல்லா உரிமையும் பறிபோன உணர்வுதான் வெற்றிக்கு. கோபம் கூட வந்தது. இந்த கோபம் கூட மனைவின் மீதான அதீத காதலால் வருவதுதான் என்பதை அந்த நொடி உணர மறந்தான்.
இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவள் மீதான அன்பும், அக்கறையினாலும்தான் அவளை கைக்குள் பொத்தி வைத்துக்கொள்ள எண்ணுகின்றான் வெற்றி. விட்டால் பறந்து விடும் என்று பறவையை கைக்குள் பொத்தி வைக்க முடியாது இறுக்கி பிடித்தால் இறந்து விடும் என்பதை புரிந்துகொள்ளாமல் இருக்கின்றான். அதே போல் சந்தியாவையும் தன் கட்டுப்பாட்டில் தன் பேச்சை மட்டும் கேட்ப்பவளாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் வெற்றி எண்ணினான். அதனால்தான் தாங்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போதிலும் சந்த்யா எவ்வளவோ கெஞ்சியும் ஊருக்கு செல்ல மறுத்து விட்டான்.
அவள் தனக்கானவள் தனக்கு மட்டும்தான் எல்லா உரிமையும் இருக்க வேண்டும் என்று எண்ணியது மட்டுமல்லாது, அவள் அன்பும் தனக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் எதற்காக பயந்தானோ அது இன்று அவன் கண்முன்னால் நடந்துகொண்டிருக்கின்றது.      
அம்மா, அப்பாவ பார்த்ததும் புருஷன மறந்துட்டா” கொஞ்சம் பொறாமை கூட எட்டிப் பார்க்க “வா ஷக்தி நாம நம்ம வீட்டுக்கு போலாம்” என்று தம்பியை அழைத்தான் வெற்றி.
“என்ன மாப்புள?” ஏதும் பிரச்சினையோ என்று கதிர்வேலன் கலங்க
சிரித்த முகமாக “இவன் கூட பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு மாமா” சக்தியை காட்டியவன் “பேசியும் ரொம்ப நாளாச்சில்ல அதான்…” என்று இழுக்க, புரிந்துகொண்டவராக கதிர்வேலன் “சரி” என்றார்.
“சும்மாவாச்சும் சொல்லுறாரா பாரு. என் பொண்ண தனியா விட்டுட்டு போயிடாதீங்கன்னு. எப்படா கிளம்புவான்னு காத்துகிட்டு இருக்காங்க போல” முணுமுணுத்தவாறே தம்பியோடு கிளம்பி சென்றான்.
“ஏன் டா வந்தோம். மாமனார் வீட்டுல சோபால கூட தூங்கி இருக்கலாம் போலயே” என்று என்னும் அளவுக்கு சாம்பவி மகனை பிடி பிடி என்று பிடித்து விட்டாள்.
தான் என்னமோ அவனுக்கு ராஜவம்சத்து பெண்ணை பார்த்து கட்டி வைக்க பார்த்ததாகவும், அதை வெற்றி எட்டி உதைத்து விட்டு சென்றது போல் பேச “போதும்மா… ஆயிரம் பொண்ண கொண்டு வந்து நிறுத்தினாலும் நான் சந்தியாவை தவிர யாரையும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்” வெற்றி உறுதியாக சொல்ல
“அதுக்காக இப்படியா ஊர் முன்னாடி எங்க மானத்த வாங்குவ? எப்பேர்ப்பட்ட குடும்பம் எங்க குடும்பம். அப்பாவ தலைகுனிய வச்சிட்டல்ல”
“அவர் எங்க தலை குனிஞ்சாரு. அதான் மாமாகிட்ட பேசி கௌஷிய எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்களே” ஷக்தி குறுக்கிட
“நீ பேசாத, ஆறு வருசமா அவ வேணாம்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் திடிரென்று அவதான் வேணும்னு ஒத்த கால்ல நிக்கிற, கூறுகெட்டவன்” இரண்டு மகன்களையும் வெளுத்து வாங்கலானாள் அன்னை.
கபிலரும் அங்குதான் இருந்தார். வெற்றி செய்த காரியம் மன்னிக்க முடியாத காரியமாக இருந்தாலும், அது நடந்து ஆறு வருடங்கள் ஆகி இருக்க, ஏற்கனவே அவன் மனவேதனையில் இருப்பது தெரிந்தும் மேலும் இதை பற்றி பேசி அவனை துன்புறுத்த வேண்டுமா? என்று அவர் அமைதியாக இருந்தார்.
ஆனால் அவர் மனைவி அப்படி அமைதியாக இருப்பவள் அல்லவே “சாம்பவி… போதும். பல வருஷம் கடந்து வீட்டுக்கு வந்த பிள்ளைய இப்படி திட்ட ஆரம்பிச்சின்னா ஏன் டா வந்தோம்னு தான் அவனுக்கு எண்ண தோணும். போங்க போய் படுங்க” மனைவியை அடக்கியவாறு மகன்களை கிளப்பினார்.
“இவர் ஒருத்தர் முக்கியமான விஷயம் பேச வரும் போது எப்ப பார்த்தாலும், தடா போட்டுக்கிட்டு. உங்களுக்கு தூக்கம் வருதுன்னா போய் தூங்குங்க” என்றவள் வெற்றியை பார்த்து “ஏன் டா எக்சிடன் ஆனதுல கரு கலஞ்சிருச்சுனு சொன்ன. உன் பொண்டாட்டியால திரும்ப குழந்தை பெத்துக்க முடியுமா? முடியாதா?”
அன்னையின் கேள்வியில் திடுக்கிட்டவன் முகம் இறுக்கியவாறு முறைக்கலானான்.
“என்னடா முறைக்கிற? கேட்ட கேள்விக்கு பதில சொல்லு. முடியாதுனா ஒன்னும் பிரச்சினை இல்ல. அதே காரணமா சொல்லி அவளை அத்து விட்டுட்டு உனக்கு வேற ஒரு பொண்ண பார்த்து நான் கட்டி வைக்கிறேன்” நெஞ்சில் கைவைத்தவாறு சாம்பவி சொல்ல
“இப்படி ஒரு சூழ்நிலையில் கூட இந்த அம்மாவால் இப்படி எல்லாம் எப்படித்தான் பேச முடிகிறதோ” தன் அன்னை மீது தான் கண் மூடித்தனமாக பாசம் வைத்திருப்பதனால் அவளை கணிக்க தவறியதை ஷக்தி புரிந்து கொண்டான். ஆனால் வெற்றி அவளை சரியாகத்தான் கணித்து வைத்திருக்கின்றான் என்பதையும் புரிந்துகொண்டான்.    
“சாம்பவி என்ன பேச்சு இது? நாக்க அடக்கி பேசு. அந்த வீட்டுல நாம ஒரு பொண்ண இல்ல ரெண்டு பொண்ண மருமகளா கூட்டிட்டு வந்திருக்கிறோம்” என்றார் கபிலர்.
கபிலர் ஏதோ ஒரு அர்த்தத்தில் சொல்ல, “ஏன் ஒரு பொண்ண மட்டும் கட்டி இருந்தா ஈஸியா அவளை அத்து விட்டிருக்கலாம்னு சொல்ல வாரீங்களா?” கோபத்தில் எழுந்து நின்று விட்டான் வெற்றி.
 “டேய் நான் அந்த அர்த்ததுல சொல்லல. உங்க அம்மாவ பார்த்து பேசத்தான் சொன்னேன். இதுல உன் வாழ்க மட்டும் இல்ல. ஷக்தி வாழ்க்கையும் அடங்கி இருக்கு. இவ புரியாம பேசிகிட்டு இருக்கா” கபிலரும் எழுந்து விட்டார்.
“என்னங்க நீங்க இவன் கிட்ட போய் எல்லாம் விளக்கம் சொல்லிக்கிட்டு. என்னக்கி இவன் நம்ம பேச்சு கேட்டிருக்கிறான். அவளுங்க பேச்சு கேட்டுத்தான் ஆடுறான்” சாம்பாவியும் கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
“யேம்மா.. நீ கண்டபடி இப்படி எதுக்கு கத்துற?” சக்தியும் கத்த ஆரம்பித்தான்.
“டேய் இருடா.. நான் பேசுகிறேன்” என்ற வெற்றி “இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? எக்சிடண்ட் ஆனதுல சந்தியாவுக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா? இதுதானே உங்க கேள்வி? நான் ஒன்னு கேக்குறேன். எனக்கு ஆக்சிடன் ஆகி கையோ, காலோ ஒடஞ்சி காலத்துக்கும் முடமா போய் இருந்து சந்த்யா என்ன வேணாம்னு சொல்லி இருந்தா உங்களுக்கு சந்தோசமா? ஏன் நீங்க சொன்ன மாதிரியே அதே எக்சிடண்ட்டுல இடுப்புல அடி பட்டு ஆண்மையே போய் என்னால அப்பாவாக முடியாம போய் சந்த்யா என்ன டிவோர்ஸ் பண்ண முடிவு பண்ணா அவ எடுத்த முடிவு சரினு சொல்வீங்களா?”
வெற்றியின் இந்த உருக்கமான பேச்சுக்கெல்லாம் சாம்பவி அதிர்ச்சியடையவுமில்லை. அசரவுமில்லை. “அதான் உனக்கு ஒன்னும் ஆகலையே. உன் ஜாதகம் அப்படிப்பட்ட ஜாதகம்டா… எதுவும் ஆகாது. உனக்கு வரும் கண்டணமெல்லாம் உன் பொண்டாட்டிக்குத்தான் போய் சேரும். அப்படி ஆக்க கூடாது என்றுதான் தேடித்தேடி ஒரு ஜாதகத்தை கண்டுபிடிச்சி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தேன். நீதான் அந்த கல்யாணத்தையே நிறுத்திட்டு கண்டத்த கல்யாணம் பண்ணிக்கிட்டியே” கொஞ்சம் கூட வெற்றி சொன்னதை கண்டு கொள்ளாமல் பேசினாள் சாம்பவி.
வெற்றிக்கு கோபத்தை விட வெறுப்புதான் அதிகமாக இருந்தது. பிள்ளை பாசம் இருக்க வேண்டியதுதான் அதற்காக செத்து பிழைத்து வந்தவளின் மீது கொஞ்சம் கூட கருணை தோன்றாதா?
“எனக்கு வேண்டியதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு அடுத்த வாரிசுதான். அவளால பேரனையோ பேத்தியையோ பெத்துத் தர முடியலைன்னா அவ எதுக்குன்னு கேக்குறேன். நான் சொல்லுறத கேளு வெற்றி உன் பொண்டாட்டிய அத்து விட்டுட்டு நான் சொல்லுற பொண்ண கட்டிக்க”
அன்னையின் இந்த பேச்சு வெற்றியின் கோப எல்லையை கடக்க செய்ய, சக்தியை பிடித்து சாம்பவியின் முன் நிறுத்தியவன் “உங்களுக்கு பேரன் பேத்தியை பார்க்கணும்னா இதோ இவன் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிக்கோங்க. ஓடிப்போன நான் செத்துப்போனதா தலை முழ்கிடுங்க. இன்னொரு தடவ சந்தியாவ டிவோர்ஸ் பண்ணுறது பத்தி என் கிட்ட பேசினீங்க நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. என் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லனு அவ கிட்டயோ அத்த, மாமா கிட்டயோ போய் பேசிப்பார்க்கலாம்னு கனவு காணாதீங்க. அப்படி ஏதாவது பேசி இருந்தீங்க அப்பொறம் நீங்க என்ன பார்க்க முடியாம போய்டும்” ஷக்தியிடமே “உன் ரூம் எது” என்று கேட்டிருக்க, ஷக்தி கை காட்டியதும் உள்ளே சென்றவன் கதவை அறைந்து சாத்தி இருந்தான். 
“என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான். நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேக்க மாட்டேங்குறான்” கணவனிடம் சாம்பவி புலம்ப ஆரம்பிக்க
“போம்மா… போ… போய் தூங்கு” கபிலர் அவளை பொருட்படுத்தாது தூங்க செல்ல, சக்தியை பார்த்தால் அவனும் அன்னையிடம் சிக்காமல் அறைக்கு சென்றிருந்தான்.
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி மிரட்டிட்டு போறான். இவனுகள பெத்து வளர்த்து ஆளாக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தானே தெரியும்? ஒருத்தனும் என் பேச்ச கேக்க மாட்டேங்குறானுங்க. நீங்களாச்சும் பேசி புரியவைங்க” அறைக்கு வந்த சாம்பவி கணவனிடம் கண்ணீர் சிந்தியவாறே புலம்ப ஆரம்பித்தாள்.
“புள்ள பெத்துக்க முடியாதவள வச்சிக்கிட்டு காலத்துக்கும் குடித்தனம் நடத்த முடியுமா?  அப்படி நடந்தா? என்ன பண்ணி இருப்ப, இப்படி நடந்தா என்ன பண்ணி இருப்ப? என்று வியாக்கியானம் பேச நல்லாத்தான் இருக்கும். ஊரு, உலகம், சொந்தபந்தம், என்ன பேசனும்னு கொஞ்சம் யோசிக்க வேணாம்? இவனுங்கதான் அறிவில்லாம பேசுறானுங்கன்னா நீங்களும் அமைதியா இருந்தா எப்படி?
என்னங்க… என்ன அமைதியா இருக்கிறீங்க? ஏதாச்சும் சொல்லுங்க?” கணவனை உலுக்க கபிலர் தூங்கி இருந்தார்.
“இவர் ஒருத்தர் முக்கியமான முடிவெடுக்கும் போது எப்படித்தான் நிம்மதியா தூக்கம் வருதோ” கணவனை திட்டியவாறு தூங்க முயன்றாள் சாம்பவி.
“ஆமா… உன்ன கல்யாணம் பண்ண சொல்லி எங்கப்பா கேட்டப்போ அவர் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தலையசைச்சேன் பாரு அப்போ முடியாதுனு முடிவெடுக்காம இருந்தேன் பாரு இத்தனை வருஷமா அதுக்குதான் அனுபவிக்கிறேன்” கண்மூடியவாறே மனதுக்குள் பொருமலானார் கபிலர்.
ஷக்திக்கு அண்ணனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அவன் நினைத்திருந்தால் அன்னையை சமாதானப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு பேசவில்லை. சந்தியாவை விட்டுக் கொடுக்காமல் அன்னையை எதிர்த்து நின்றான். 
தான் என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? அன்னையிடம் கௌசியை விட்டுக்கொடுத்து விட்டோம். அவளை பழிவாங்கத்தான் திருமணம் செய்ததாக கூறியது மட்டுமல்லாது. இந்திரா அத்தையையை வேறு கௌஷியை வைத்து விரட்டுவதாக கூறி அன்னையின் மனதை குளிர்விக்க பேசுவதாக எண்ணி கௌஷியையும் அவள் குடும்பத்தையும் அன்னையிடம் விட்டுக்கொடுத்து விட்டோம்.
அதேபோல் அன்னையிடம் கூறிய பொய்யால் அவள் கௌஷியிடம் அன்பாக பேசி நடித்துக் கொண்டிருப்பதை அறியாமல் கௌஷி அத்தை மனம் மாறியதாக நினைத்துக் கொண்டிருக்கின்றாள்.
இந்த உண்மை எல்லாம் இருவருக்கும் தெரிந்தால் என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்? என்பதை யோசிக்கையில் தான் உண்மையிலயே கௌஷியை காதாலிக்கிறேனா? என்ற சந்தேகம் ஷக்திக்கு வந்தது.
சந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசியதால், சந்தியாவோடு வீட்டை விட்டு சென்றதால் வெற்றிக்கு பெற்றோர் மீதோ, தம்பியின் மீதோ பாசம் இல்லையென்று சொல்ல முடியாதே. அன்னை செய்வது தவறு. தன் காதல் முக்கியம் பேசி புரியவைக்க முடியாது என்று அன்று முடிவெடுத்தான். இன்றும் அதே தவரைதான் அன்னை செய்கின்றாள் என்றுதான் அன்னையிடம் இப்படி பேசினான் என்று ஷக்திக்கு தெளிவாக புரிந்தது.
வெற்றி அவ்வளவு சொல்லியும் இப்படி பேசுபவளை சமாதானப்படுத்தாமல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசியவன் நல்ல கணவன்தான். சந்த்யா கொடுத்து வச்சவதான்.
தாய் பாசம் தன் கண்ணை மறைக்க, அவளை சமாதானப்படுத்துவதாக நினைத்து, தான் செய்து வைத்திருக்கும் இந்த வேலை மட்டும் கௌஷிக்கு மட்டும் தெரிஞ்சது “செத்தேன்”
“என்னடா தூக்கம் வரலையா?” தம்பியை ஏறிட்டான் அண்ணன்.
“ப்ச்.. இந்த அம்மா ஏன் தான் இப்படி இருக்காங்களோ… இந்திரா அத்தைக்கும் அம்மாக்கும் உண்மையிலயே என்னதான் பிரச்சினை? அவங்க பிரச்சினை பண்ணுறது போலவும் தெரியல. இவங்கதான் புலி  வால பிடிச்சா மாதிரி விடாம இருக்காங்க” வெறுப்பை கக்கினான் ஷக்தி.
வெற்றி தனக்கு தெரிந்த உண்மைகளை கூறியவன் “அம்மா பொறாமைல பண்ண ஆரம்பிச்சது வெறுப்புல பண்ணிக்கிட்டு இருக்காங்க. அது இந்திரா அத்த பொண்ணுங்கவரைக்கும் தொடருது. அம்மாகொண்டு நீயும் உண்மை தெரியாம கௌஷிய சின்ன வயசுல என்ன பாடு படுத்திட்ட, ஆமா நீ எப்படி கௌஷிய கல்யாணம் பண்ண சம்மதிச்ச?” வெற்றிக்கு இந்த கேள்விக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும் என்றிருந்தது.
“நான் அவள சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணுறேன்” ஷக்தி சிரித்தவாறே சொல்ல
      
சத்தமாக சிரித்த வெற்றி “கேக்குறவன் கேனயனா இருந்தா கொரானாகு மருந்தே வெளவால் சூப் தான்னு சொல்லுவ போலயே”
கவலையை மறந்து வெற்றி சிரித்து முடித்து தம்பியை பார்க்க, அவன் எதோ யோசனையில் இருந்தான்.
“என்னடா… இன்னும் என்ன சொல்லி என்ன ஏமாத்தலாம்னு பாக்குறியா?”
“நான் ஒன்னும் உன்ன ஏமாத்தள. நம்ம அப்பாவழி தாத்தா இருக்காரே அவரு நம்ம மகாதேவன் தாத்தா பத்தி ஒன்னு சொல்லுவாரு. லாபம் இல்லாம அவர் எதுவும் செய்ய மாட்டார்னு. அப்படி இருக்கும் பொழுது இந்திரா அத்தையையும், சந்திரா அத்தையையும் எப்படி வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து வளத்தாரு? அதுக்கு எப்படி நம்ம பாட்டி சம்மதிச்சாங்க? எனக்கு சந்தேகமாகவே இருக்கு”
“பாட்டி எங்க சம்மதிச்சாங்க? சந்திரா அத்தைய அவங்க சாகுறவரைக்கும் திட்டிகிட்டே தான் இருந்தாங்களாம். அவங்களோட மறு உருவம்தான் நம்ம அம்மானு அப்பாத்தா சொல்லுமே” என்று சிரித்தான் வெற்றி.
“அங்கேயும் மாமியார் மருமக சண்டைதானா?” ஷக்தி புன்னகைத்தான்.
மகாதேவன் தனது நண்பனின் பிள்ளைகளை அழைத்து வந்ததன் காரணம் அறியவரும் பொழுது சாம்பவி குடும்பத்தினரது நிலைமைதான் என்னவோ?

Advertisement