Advertisement

அத்தியாயம் 14
மும்பாய் சென்ற வெற்றிக்கு வேலை என்னவோ கிடைத்து விட்டதுதான். ஆனால் தங்குவதற்காக கிடைத்த வீடும், ஏரியாவும்தான் சரியாக அமையவில்லை.
ஊரில் சொந்த நிலபுலன்களில் காற்றோற்றமாக, சுதந்திரமாக சுற்றித்திருந்து வளர்ந்தவர்கள் சந்தியாவும், வெற்றியும், மும்பையில் மொழி தெரியாத ஊரில் பத்துக்கு பத்து அறையில் அடைக்கப்பட்டு சிறை பறவை போல் ஆனதை எண்ணி சந்த்யா மெளனமாக கண்ணீர் வடிக்காத நாளே இல்லை.
தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது என்று அவள் வெற்றியை ஒரு குறை சொல்லவில்லை. ஆனால் மனதளவில் துவண்டு போனவள் அவனிடம் ஒரு ஒதுக்கத்தை காமிக்கலானாள்.
ஆனால் அது கூட வெற்றியின் கண்களுக்கு தென்படவில்லை. ஆபீஸ் சென்றால் வீடு. ஞாயிறு ஒருநாள் தான் விடுமுறை. அன்று முழுவதும் வீட்டில் நிம்மதியாக உறங்குவது என்று வெற்றியின் நாட்கள் நகரந்துகொண்டிருக்க, மனைவியின் மனநிலையை உணரத் தவறினான்.
இயல்பிலையே சந்தியா அமைதியான பெண். இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவள். அதிகம் பேச மாட்டாள். தெரியாத ஊரில் அவள் வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டாம் வீட்டில் இருக்கட்டும் என்று வெற்றி நினைக்க, நாள் முழுவதும் தனிமையில் இருக்கும் சந்தியாவுக்கு வீட்டாரின் நியாபகம் அதிகமாக தாக்கியது.
தான் செய்தது தவறு என்று உள்மனம் குத்திக் கிழித்துக் கொண்டிருக்க, தந்தையோடு பேசினால்தான் நிம்மதியாக இருக்கும் என்று எண்ணினாள்.
கையில் அலைபேசியும் இல்லை. போன் செய்ய வேண்டும் என்றால் தெருமுனையில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும். அங்கே அவள் போன் செய்ய கூடிய வசதி இருப்பதாக போர்ட் வைக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கின்றாள்.
வெற்றி இல்லாமல் இதுவரை அவள் எங்கும் சென்றதில்லை. காய்கறியிலிருந்து, தண்ணீர் வரை வீட்டு வாசலுக்கு வந்து விடும், வெற்றி வேலைக்கு செல்லும் முன் அவளுக்கு உதவி விட்டுத்தான் செல்வான். அதனால் அவளுக்கு தனியாக வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதில்லை.
இன்று அவன் இல்லாமல் செல்ல வேண்டும். வீட்டுக்கு அழைப்பதாக கூறினால் அவன் கோபம் கொள்ளவும் கூடும் என்று உணர்ந்தவள் எதையும் யோசிக்காமல் வீட்டை பூட்டிவிட்டு, தனியாக பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் வசிக்கும் பாதையை தாண்டி இருப்பாள் “இதோ பாருடா மெட்றாஸ் மைனா… இன்னைக்குத்தான் கூட்ட விட்டு வெளிய வருது” என்று ஹிந்தியில் ஒருவன் சொல்ல தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று அறியாத சந்த்யா முன்னோக்கி நடக்க,
“அதுவும் தனியாக” இன்னொருவன் அவள் எதிரே வந்து நின்றான்.
வீட்டாரின் சிந்தனையில் வந்தவள் தன்னை சுற்றி ஆறு பேர் நிற்பதைக் கண்டதும் திடுக்கிட்டு விலகி செல்ல முற்பட, அவர்கள் அவளை செல்ல விடாது ஹிந்தியில் அவளை பற்றி ஏதேதோ பேச ஆரம்பிக்க சந்தியாவின் மனதுக்குள் அச்சம் கவ்விக் கொண்டது.
அவளுக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது. “எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லாதே. இந்த ஏரியா ஒரு மாதிரி என்று ஆபீஸ்ல சொன்னாங்க. அவசரத்துக்கு குடிவந்துட்டோம். வேற ஏரியால வீடு இப்போதைக்கு பார்க்கவும் முடியாது, கொஞ்சம் பொறுத்துக்க, ஒரு மூணு மாசம் போகட்டும் அப்பொறம் வேற வீடு பார்க்கலாம்” என்று வெற்றி அவளை பலதடவை சொல்லி இருந்த போதிலும் குருட்டு தைரியத்தில் வந்து விட்டாள்.
இவர்களிடமிருந்து இவளை யார் காப்பாற்றுவது? வெற்றியும் இந்த நேரத்தில் ஆபீசில் அல்லவா இருப்பான். உடல் வெட வெடவென்று நடுங்க ஆரம்பிக்க, வியர்வையில் குளித்தவளுக்கு இதயம் வேறு படபடவென துடிக்க ஆரம்பித்திருந்தது.
ஒருவன் அவளை தொட நினைக்கையில் அவன் தலையில் யாரோ தட்ட வலியில் துடித்தவன் திரும்பிப் பார்த்தான்.
“ரோட்டுல போற ஒரு பொண்ண விடுறதில்ல. போங்கடா…” என்று ஹிந்தியில் கர்ஜிக்க சந்தியாவை சுற்று போட்ட அந்த ஆறு பேரும் தலை தெறிக்க ஓடி மறைந்தனர்.
“ஊருக்கு புதுசாமா?” என்ற அந்த குரல் திருநங்கையாக இருந்தாலும், வெற்றிலை குதப்பியதில் வித்தியாசமாக ஒலித்தது.
“நீங்க தமிழா?” என்ற சந்தியாவுக்கு புது தெம்பே வந்தது.
மொழி தெரியாத ஊரில் தாய் மொழி பேசும் ஒருவர் கிடைத்தால்? அவர் யாராக இருந்தால் என்ன? அவள் முகம் சட்டென்று மலர்ந்து அவரோடு சரளமாக உரையாட ஆரம்பித்தாள்.
“எனக்கு எல்லா பாஷையும் தெரியும். உன் வீடு எங்க?”
“பக்கம்தான். வங்கக்கா வீட்டுக்கு போலாம்” என்றவள் வந்த வேலையையும் மறந்து அவரை வீட்டுக்கு அழைத்தாள்.
“நான் உன் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சா உன்ன தான் தப்பா பேசுவாங்க” என்று சிரிக்க,
“என்னக்கா இப்படி எல்லாம் பேசுறீங்க?” வெகுளியாக சிரித்தாள் சந்த்யா.
சந்தியாவுக்கு துணையாக சென்று வீட்டில் விட்டவர் விடைபெற்று செல்ல அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குசுகுசுவென பேச ஆரம்பித்தனர்.
“ஐயோ அவங்களோடவே போய் போன் பண்ணிட்டு வந்திருக்கலாம். மறந்துட்டேன்” தலையில் தட்டிக் கொண்டவள் நடந்த சம்பவத்தை வெற்றியிடம் சொல்ல மறந்தாள்.
அதன் பின் வெற்றியின் வீட்டில் அடிக்கடி கரண்ட் போனது, யார் யாரோ பகலிலும், நடு இரவிலும் வந்து கதவை தட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
வெற்றிக்கோ, சந்தியாவுக்கோ என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை.
வெற்றி யோசனையில் இருக்கும் பொழுதுதான் “ஏங்க நாம ஜாக்ருதி அக்கா கிட்ட உதவி கேட்டா என்ன?”
“யாரு கிட்ட?” என்ற வெற்றியின் முகம் இறுகி இருந்ததை அறியாமல் சந்தியா மீண்டும் அந்த பெயரை சொல்ல, அவளை அறைந்தவன் “அவ யாரு? என்ன? என்று தெரியுமா உனக்கு? படிச்சு படிச்சு சொன்னேனே வெளிய எங்கயும் போகாதே என்று கேட்டியா? இப்படி வம்ப விலை கொடுத்து வாங்கிட்டு வந்து நிக்கிறியே, இன்னுமா உனக்கு புரியல நமக்கு நடக்குற எல்லாத்துக்கும் அவதான் காரணம். அவ பொம்பளைங்கள வச்சி தொழில் பண்ணுறவ, இந்த ஏரியால எந்த பொண்ணாவது முக்காடில்லாம போறத பாத்திருக்கியா?”
கணவன் அடித்ததில் அதிர்ந்து கன்னத்தில் கைவைத்து நின்றிருந்தவள் “இல்ல” என்று தானாக தலையசைந்தாலும், இந்த நான்கு மாதங்களாக தானும் வெற்றியோடு செல்லும் பொழுது அவ்வாறுதான் செல்வதாக நியாபகம் வந்தது.
“அவ விடமாட்டா… உன்ன விட மாட்டா… என் தப்புதான். இந்த ஏரியாவை பத்தி தெரியாம குறைவான வாடகைக்கு வீடு கிடைச்சதும் குடிவந்துட்டேன். இங்க என்ன நடக்குதுன்னு உன்கிட்ட சொல்லாம விட்டது என் தப்புதான். இது எந்த மாதிரியான ஏரியா என்று தெரிஞ்சும் இங்க இருந்து உன்ன வேற இடத்துக்கு கூட்டிகிட்டு போகாதது எந்தப்புத்தான்” கதறிக் கதறி வெற்றி அழ, சந்தியா புரியாது முழித்தாள்.
“ஏங்க இல்லங்க. அவங்க ரொம்ப நல்லவங்க” என்று அன்று நடந்ததை கூற முற்பட வெற்றி சந்தியா சொல்வதை காதுகொடுத்து கேட்க முனையவில்லை.
தன்னோடு வேலை செய்யும் நண்பன் விகாஷை அழைத்து நடந்ததை கூற, அவனுக்கும் வியர்க்க ஆரம்பித்திருந்தது.
“போலீசுக்கே காசு கொடுத்து தொழில் பண்ணுறவ அவ, அவ கண்ணுல மாட்டுனா விடாம துரத்திக்கிட்டே இருப்பா… நா சொல்லுறத கேளு, நீங்க இங்க இருந்த ஆபத்து என்ன கேட்டா உடனே சென்னை போய்டுங்க” என்று அறிவுறுத்த,
வெற்றி யோசிக்கவில்லை “முதல்ல இங்க இருந்து கிளம்பலாம்” என்றவன் அவசர அவசரமாக எல்லாவற்றையும் எடுத்துவைக்கலானான்.
கணவன் புரியாது நடந்து கொள்வதாக முணுமுணுத்தவாறே சந்தியாவும் எல்லாவற்றையும் எடுத்து வைக்கலானாள்.
“நான் போய் ஆட்டோ பிடிச்சிட்டு வரேன். நீ இங்கயே இரு. பத்திரமா இரு. யார் வந்து கதவை தட்டினாலும் திறக்காத, நான் வந்து பேசினா மட்டும் திற” என்றவன் வெளியேறி இருக்க, சந்தியா தலையசைத்தாள்.
பெரிதாக அவர்களிடம் பொருட்கள் இல்லை. துணிகளும் பத்து பன்னிரண்டுதான் இருக்கும். யார் கண்ணையும் கவராது அவற்றை பைகளில் அடுக்கியவன் ஆட்டோ பிடித்து வந்து எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு சந்தியாவையும் அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என்று நினைக்க, நண்பன் அழைத்து அங்கிருக்கு எந்த ஆட்டோவில் ஏற வேண்டாம், நீங்க வீட்டுல இல்லனதும் தேட ஆரம்பிச்சி. ஆட்டோ டைவர் கிட்ட விசாரிச்சு பின்னாடியே வந்திடுவாங்க. நான் உதவி செஞ்சது தெரிஞ்சா நாலு அடி அடிச்சிட்டு போவா… , நான் ஒண்டிக்கட்டை சமாளிச்சிக்கிறேன். நான் எனக்கு தெரிஞ்ச ஆட்டோவை அனுப்புறேன். அதுவரைக்கும் பொறு” என்றவன் சொன்னபடியே ஆட்டோவை அனுப்பி இருந்தான்.
மரண பயத்தோடுதான் வெற்றி ஆட்டோவில் பயணம் செய்து ரயில்நிலையத்தை அடைந்திருந்தான். அவனுக்காக காத்திருந்த நண்பன் விகாஷ் ட்ரைன் டிக்கட்டை கையில் கொடுத்து வழியனுப்பி வைத்திருந்தான்.
ரயில் நகர, நகரத்தான் வெற்றிக்கு உயிரே வந்தது. நிம்மதியாக கண்ணை மூடிக்கொண்டான். சந்தியாவுக்கோ கணவன் ஓவரியேட் செய்வதாக தோன்ற கோபமாக அமர்ந்திருந்தாள். ஆனாலும் சென்னை செல்வதால் பெற்றோரை பார்க்க செல்லலாம் என்ற நம்பிக்கையில் சற்று கண்ணயர்ந்தாள்.
சென்னையை வந்தடைந்தவர்களுக்கு வாழ்க்கை ஒன்றும் சொர்க்கமாக அமைந்து விடவில்லை. வெற்றிக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பென்றாகிப் போக, வீடும் அவ்வாறுதான். ஆறு மாத வாடகை, ஒரு வருட வாடகை என்று கேட்பதால் கையிருப்பை கொடுத்தால் அவசரத்துக்கு என்ன செய்வதாம் என்று யோசித்தவன் சந்தியாவோடு பேசி ஒரு வீட்டில் ஒரு அறையில் வாடகைக்கு குடியேறினர்.
வாடகை என்னவோ கம்மிதான். எரியாவும் எந்த பிரச்சினையும் இல்ல. ஆனால் மாலை எட்டு மணியானதும் மின்சாரத்தை அந்த வீட்டம்மா துண்டித்து விடுவாள். தண்ணீர் கூட வெளியில்தான் பிடித்து வர வேண்டும். கழிவறையும் வெளியேதான். வாடகை மட்டும் சரியாக கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் கத்த ஆரம்பித்து விடுவாள்.
இரண்டு மாதங்கள் வேலை தேடியும் வெற்றிக்கு ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. சந்தியாவும் இங்கே இருக்க வேண்டாம் ஊருக்கு செல்லலாம் என்று அவனை நச்சரிக்க ஆரம்பித்திருக்க, கையிருப்பும் கரைந்துகொண்டே வர, மனஉளைச்சலுக்கு ஆளானவன் அவளைத்தான் கடுகடுக்கலானான்.
“மும்பையில் நல்ல வேலைல இருந்தீங்க. யார் யாரோ சொல்லுறத கேட்டு. வேலைய விட்டுட்டு வந்துடீங்க. அதுக்கு நான் என்ன பண்ண?” என்று இவளும் சீற, வெற்றி கோபத்தின் உச்சிக்கே போனான்.
“ஏன்டி என்ன மாதிரியான சூழ்நிலையில இருந்து தப்பி வந்திருக்கோம் என்று கொஞ்சமாச்சும் புரிஞ்சிதான் பேசுறியா? அதுசரி அறிவிருந்தா சொல்பேச்சு கேட்டிருப்ப”
“உங்க பிரெண்டு என்று ஒருத்தன் சொன்னதை நம்பி ஓடி வந்துட்டு என்ன சொல்லுறீங்களா? அவன் உங்கள நல்லா ஏமாத்திட்டான். இந்நேரம் அவன் உங்க இடத்துல ஜாலியா வேல பார்த்துகிட்டு இருப்பான். என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க? நான் சொல் பேச்சு கேக்காதவளா? ஆமா என் அம்மா அப்பா சொல் பேச்சு கேக்காமம்மா உங்க பின்னாடி வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும். இன்னக்கி நான் இந்த நிலமைல இருக்கேன்னா சொல்பேச்சு கேக்காததுதான் காரணம்” என்று ஆவேசமானாள்.
“சரிதான் போடி… எப்ப பார்த்தாலும் அம்மா… அப்பானு என் உசுர வாங்கி கிட்டு, அவ்வளவு பாசம்னா அவங்க கிட்டயே போய் தொலை” என்றவன் கோபமாக வீட்டை விட்டு வெளியேற சந்தியா அழ ஆரம்பித்திருந்தாள்.
மும்பாயில் இருக்கும் பொழுது இருந்த மனஉளைச்சல் இங்கு வந்த பிறகு வெற்றியின் வேலையின்மை காரணமாக அதிகமானதே தவிர குறையவில்லை.
வேலை தேடி தேடி சோர்ந்து போன வெற்றியும் மனைவியின் தோன தொணப்பை தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்து சின்ன சின்ன சண்டைகள் இருவருக்கிடையில் அடிக்கடி வர ஆரம்பித்திருக்க, சந்தியா ஊருக்கு செல்லலாம் என்று கூறுவதும், வெற்றி திருமணம் செய்யும் பொழுதே எந்த காரணத்தைக் கொண்டும் ஊருக்கு செல்வதில்லை என்ற முடிவெடுத்ததையும் அதற்கு சந்த்யா சம்மதித்ததையும் நியாபகப்படுத்தி சண்டையிட தினம் ஒரு வாக்குவாதம், தினம் ஒரு சண்டை என்று தான் அவர்களது வாழ்க்கை போய் கொண்டிருந்தது.
“ஏன்மா.. புருஷனுக்கு வேலை இல்லனா இப்படித்தான் வீட்டுல தினம் தினம் சண்டை வரும். நீயாச்சும் வேலைக்கு தான் போயேன். ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு. படிச்சிருக்கீங்க. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்க போறீங்க? புள்ளகுட்டி பெத்துக்கிட்டீங்கன்னா, குடும்பம் ஆகிட்டா, போட்ட சண்டை எல்லாம் காணாம போய்டும். அனுபவத்துல சொல்லுறேன்மா.. வேல கிடைக்கிறவரைக்கும் உன் புருஷன கிடைக்கிற வேலைய பார்க்க சொல்லு. வாடகை கொடுக்கணும், சோத்துக்கு என்னதான் வழி? நாலு காச சேர்த்து வச்சா தானே நாளை பின்ன உதவும். விவரம் தெரியாத புள்ளைங்களா இருக்கீங்களே” வீட்டுக்காரம்மா ஆதங்கப்பட, சந்தியாவுக்கு அவர் கூறும் உண்மை சுட்டது.
“பிறந்து வளர்ந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு, வீட்டாரை விட்டு திருமணம் செய்து கொண்டது சந்தோசமாக வாழத்தானே. இப்படி தினமும் சண்டை பிடித்து நிம்மதியை தொலைத்து வாழத்தானா அத்தானை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்” யோசித்த சந்த்யா இப்போது இருக்கும் பிரச்சினைக்கு தானும் வேலைக்கு செல்லமாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
வெற்றிக்கே வேலைகிடைப்பது குதிரை கொம்பான நிலையில் டிகிரி கூட இல்லாத தனக்கு மட்டும் கலெக்டர் உத்தியோகமா கிடைத்து விடப் போகிறது என்றெண்ணியவள் வீட்டு பக்கத்திலுள்ள கடைகளில் வேலை இருக்கா என்று கேட்டுப் பார்க்க ஆரம்பித்தாள்.
இதையறிந்த வெற்றி இன்னும் அவள் மீது கோபப்பட ஆரம்பித்தான். ஆண்களுக்கே ஆனா ஈகோ எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.
“எனக்கு சம்பாதிக்க துப்பு இல்லனு நீ வேலைக்கு போக போறியா?” என்று சத்தம் போட
“என்ன நீங்க புரியாம பேசுறீங்க?” நீங்களும் ரெண்டு மாசமா வேல தேடிகிட்டுதானே இருக்கிறீங்க? இப்படியே போனா பேங்க்ல இருக்குற மிச்ச காசும் கரைஞ்சிடும் அப்பொறம் சோத்துக்கு என்ன பண்ணுறது? உங்களுக்கு வேலை கிடைக்கிற வரைக்காவது நான் வேலைக்கு போறேன்” இதுதான் என் முடிவு என்று சந்த்யா பேச சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விசிறியடித்தவன் எழுந்து சென்றிருந்தான்.
இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள ஸ்டேஷனரி ஷாப் இல் அவளுக்கு வேலை கிடைத்தது. மெயின் ரோட்டில் அமைந்திருந்தபடியாலும், பாடசாலைக்கு அருகே இருந்தபடியாலும் சனி மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கொஞ்சம் கூட்டம் அதிகம் தான்.
தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியை கணவனோடு சந்த்யா பகிர்ந்து கொள்ள, “ஆமா பெரிய கலெக்டர் உத்தியோகம் பாரு. ரொம்ப சந்தோச படாத, உன் சம்பளம் சாப்பாட்டுக்கே பத்துமான்னு தெரியாது. வாடகை நான்தான் கொடுக்கணும்”
அவள் உதவி செய்ய வேண்டும் என்று வேலைக்கு செல்ல நினைப்பதை புரிந்துகொள்ளாது, தன்மானம் சீண்டி விடப்பட்ட சிங்கமாய் சீறினான் வெற்றி.
வயதான ஒரு பெண்மணிதான் கடைக்கு சொந்தக்காரர். தனியாகத்தான் கடையை நடத்துகிறார். அவர் பெயர் சாந்தலக்ஷ்மி. மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறானாம், மகளை கட்டிக் கொடுத்து கோயம்புத்தூரில் வாசிக்கிறாளாம். சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு செல்ல விருப்பம் இல்லையாம். அதனால் முன் பகுதியில் கடைவைத்து இருக்கிறாளாம். வேலைக்கு தெரியாத பசங்களை வைத்துக் கொள்ளவும் பயமாக இருக்கிறதாம்.
தனியாக இருக்கும் பெண் என்றால் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல், அடித்துப் போட்டு விட்டு, பணத்தையும், கழுத்திலிருக்கும் நகையைக்கும் திருடிக்கொண்டு கூட போய் விடக் கூடும் என்று அச்சப்பட்டு வைக்கவில்லையாம். அதனாலயே வேலைக்கு ஆள் தேவை என்று போர்டு மாட்டவில்லையாம்.
“இந்த காலத்துல பெண்களைத்தான் நம்ப முடியாது. என்னை மட்டும் எப்படி வேலைக்கு சேர்த்தீங்க அம்மா…”
வேலைக்கு சேர்ந்த உடன் ஒன்றும் சாந்தலக்ஷ்மி சந்த்யாவிடம் நெருங்கிப் பழகவுமில்லை. அதிகமாக பேசவுமில்லை. இந்த பேச்சு வார்த்தை கூட அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில் தான் இருந்தது.
“உனக்கு முன்னாடி ஒரு பொண்ணு வேல பார்த்தா. அவ பாட்டுக்கு வருவா. வேல பார்ப்பா காச வாங்கிட்டு போவா. ஆனா நீ அப்படி இல்ல. உன்ன பார்த்ததும் நல்ல பொண்ணா மனசுக்கு பட்டது சரி இருக்கட்டும் பார்க்கலாம்னு இருந்தேன். நான் தனியா இருக்குறது தெரிஞ்சதும் எனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வர ஆரம்பிச்ச. அதுவும் எனக்கு கொலஸ்டரோல் இருக்குனு தெரிஞ்சி அதுக்கு ஏத்தா மாதிரி சமைச்சி எடுத்து வர.
ஒருநாள், இரண்டுநாள் பண்ணலாம். ஒரு மாசமா பண்ணுற. அன்பா பண்ணுற. நடிக்கல. அந்த நம்பிக்கைல தான் இதெல்லாம் சொல்லுறேன்” என்று சிரிக்க, சந்தியாவின் முகத்திலும் புன்னகை.
வெற்றியின் முறைப்பையும் பொறுத்துக் கொண்டு சந்த்யா வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்க, வெற்றி வேலை தேடி அலைந்துகொண்டிருந்தான்.
தன் பேச்சை மனைவி கேட்பதில்லை என்ற கோபமும் வெற்றிக்கு சேர்ந்துகொள்ள எல்லாவற்றிலும் குற்றம் காண ஆரம்பித்தான். சமைக்கும் சாப்பாட்டில் இருந்து, துவைக்கும் துணி கூட ஒழுங்காக துவைக்க வில்லை என்று குறை கூறியவன் அவளுக்கு எந்த உதவியையும் செய்வதில்லை.
என்னதான் வாக்குவாதம் செய்தாலும், வீட்டுக்கு தண்ணீர் பிடிப்பது, காய்கறி வாங்குவது என்று எல்லா வேலைகளையும் செய்தவன், கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு உதவுவதை நிறுத்தி கோபத்தை மட்டும் காட்ட ஆரம்பித்தான்.
சந்தியாவுக்கு சந்தோஷமும், நிம்மதியும் கிடைப்பது ஸ்டேஷனரி ஷாப் கடை என்றாகிப் போக, கணவனின் புறக்கணிப்பை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த ஆறு மாதத்தில் பாடசாலையில் படிக்கும் குட்டிக் குழந்தைகள் அவளுக்கு சிறந்த தோழிகள். பெற்றோர்கள் வர தாமதமானால் தயக்கமில்லாமல் கடையில் வந்து அமர்ந்து விடுவார்கள்.
பெத்தவர்களுக்கும் இவளை நன்கு தெரியும் என்பதால் பார்த்துக்கொள்ளும்படி கூறிச் செல்வார்கள்.
அப்படி ஒரு குட்டிக் குழந்தைதான் இன்பா. அவள் சிரித்தால் மனம் குளிரும். சந்தியாவுக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவள்தான் அவளோடு அதிக நேரம் கடையில் இருக்கிறாள். பேசி சிரிக்கிறாள். வயது ஆறுதான்.
அவளுடைய தந்தைதான் பாடசாலைக்கு விடுவதும், அழைத்து செல்வதும். அன்னை இரண்டாவது குழந்தையை பெற்றிருப்பதால் இன்னும் ஒரு மாதத்துக்கு வர மாட்டாளாம். எல்லாம் இன்பா சொன்னவைகள்தான்.
தந்தை வேலை செய்யும் இடத்திலிருந்து வர வேண்டியதால் தாமதமாகிறது. பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டு இரு என்று சொன்னாலும் கேளாமல் இன்பா கடைக்கு வந்து விடுவாள். பாதையை கடந்து வர வேண்டியதால் அவளது தந்தைக்கு அதில் விருப்பமில்லை.
“நான் சிகியூரிட்டி அங்கிள் கிட்ட சொல்லி ரோட் கிராஸ் பண்ணிக்கிறேன் ப்பா…” தந்தையை சமாளித்து சம்மதமும் பெற்றிருக்க, சந்த்யா அவளுக்கு உணவூட்டிக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு மகள் ஸ்டேஷனரி ஷாப்க்கு வருவதை தடுக்க தோன்றவில்லை.
ஒருநாள் பாடசாலை விட்ட உடன் வராத இன்பாவை காணாது சந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தாள். பாடசாலைக்கு வரவில்லை என்ற கேள்வியே இல்லை தந்தையின் வண்டியிலிருந்து இறங்கும் முன்னமே “அக்கா” என்று இவளை அழைத்து கையசைத்தவாறுதான் வண்டியிலிருந்து இறங்குவாள். இவள் கையசைத்த பின்தான் பாடசாலைக்குள்ளேயே செல்வாள்.
இன்று உள்ளே சென்றவளைக் காணவில்லை. “என்ன இன்னைக்கு காணோம். எங்க போனாளோ” என்று சிந்தித்தவாறே சந்த்யா வெளியே வந்திருக்க இன்பா நுழைவாயிலுக்கு வந்திருந்தாள். சிகியூரிட்டியை காணவில்லை. அவர் இருந்தால் பாதையை கடக்க உதவுவார். அவர் எங்கே போனார் என்று சந்த்யா கண்களால் அலசும் பொழுது சின்னவள் இவளைக் கண்டு பாதையை கடந்திருந்தாள். எதிரே கார் வந்து கொண்டிருந்தது.
“இன்பா வராத போ…” என்று கத்தியவாறு சந்த்யா அவளிடம் ஓட, அக்காவைக் கண்டு அணைக்க வந்தவளை தள்ளி விட்டிருந்த சந்தியா கார் மோதி தூக்கி எறியப்பட்டு பாடசாலையின் மதில் சுவரின் அடித்தளத்தை கட்ட கொண்டு வரப்பட்டிருந்த பெரிய கருங் கற்களின் மேல் விழுந்ததிருந்தாள்.
இரத்த வெள்ளத்தில் அவளை பார்த்து இன்பா அதிர்ச்சியில் மயங்கியே விழ, அங்கிருந்தவர்கள் மருத்துமனைக்கு தகவல் கூறி இருவரையும் உடனடியாக அனுமதித்தனர்.
காரில் மோதியது கல்லில் மோதியது என்று சந்தியாவுக்கு பலமான அடி. காரில் மோதியதில் கையெழும்பு முறிந்திருக்க, கல்லில் மோதியதில் தலையில் அடிபட்டு கோமாவுக்கே சென்றிருந்தாள்.
விஷயமறிந்த வந்த வெற்றி மனைவியின் நிலையை பார்த்து கதறி துடித்தான். தன்னால்தான், தன் புறக்கணிப்பால்தான் இவளுக்கு இப்படி ஆகிற்று என்று புலம்பலானான்.
இன்பாவுக்கு அடி ஏதும் இல்ல. அதிர்ச்சியில் உறைந்து மயங்கியவள் மனப்பிறழ்வுக்கு ஆளாகி இருக்க, அதற்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
நான்கு வருடங்களுக்கு மேலாக கோமாவில் இருந்தவள் கண்விழிக்கையில் வெற்றி உருகுலைந்துதான் போய் இருந்தான்.
“ஏன் டா இவ்வளவு நடந்திருக்கு அறிவிருக்கா உனக்கு. வீட்டுக்கு வந்திருக்க வேணாமா? எனக்காவது தகவல் சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே? தனியா கஷ்டப்படணும் என்று தலையெழுத்தா என்ன?” ஷக்தி கடிந்துகொள்ள,
“என்னாலதான் இவ இந்த நிலமைல இருக்கா. இவ நல்லபடியா குணமான பின்னாலதான் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் என்று நினச்சேன். இவள இப்படி பார்த்தா அத்தையும், மாமாவும் தாங்க மாட்டாங்க” என்ற வெற்றி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
அவன் சொல்வதிலும் உண்மை இருந்தது. வீட்டை விட்டு சென்றவர்கள் எங்கோ சந்தோசமாக இருக்கிறார்கள் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இந்த நிலைமையில் பார்த்தால் தாங்க மாட்டார்கள் என்று புரிய சக்தியும், கௌஷியும் அமைதியானார்கள்.
“எனக்கு வேலையும் கிடைச்சிருச்சு. நான் மட்டும் எங்குறதால ஒரு ரூம்ல தங்கி இருக்கேன். இவ வேல பார்த்த கடை ஓனர் அம்மாதான் நான் இல்லாத நேரத்துல இவள பார்த்துகிறாங்க”
“அக்கா கண்ணுமுழிச்சு எவ்வளவு நாள் ஆச்சு?”
“இரண்டு வாரம்தான்”
“இன்னும் என்ன தலைல கட்டு?” ஷக்தி புரியாது கேட்க
“சின்னதா ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்தது இவ கண்ணு முழிச்சி பிறகுதான் பண்ண முடியும்னு சொன்னாங்க. கண்ணு முழிச்சி பிறகு பண்ணாங்க”
“ஓ…” என்றனர் சக்தியும், கௌஷியும்.
அங்கே சற்று நேரம் அமைதி நிலவ “எப்போ டிஸ்டர்ஜ் செய்றாங்களாம்” கேட்டது சக்திதான்.
“இன்னக்கி பெரிய டாக்டர் வந்து பார்த்த பிறகு சொல்லுறதா சொன்னாங்க. அவர் வந்து பார்த்தாரா சந்த்யா?” மனைவியிடம் விசாரித்தான் வெற்றி.
அவள் தலைசாய்த்து “ஆமாம்” என்றாளே தவிர வேறு எந்த தகவலும் அவளுக்கு தெரியவில்லை.
“டிஸ்டர்ஜ் பண்ணா எங்க போவீங்க? வீட்டுக்கு வாங்க” என்றாள் கௌஷி.
சந்த்யா கணவனின் முகம் பார்க்க கண்ணசைத்து சம்மதம் தெரிவித்தான் வெற்றி.

Advertisement