Advertisement

அத்தியாயம் 13
ஒருவாரம் மகனோடு தங்கி விட்டு செல்லலாம் என்று வந்த சாம்பவிக்கு மூன்றாம் நாளே ஊருக்கு போய்டலாமா? என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தாள் கௌஷி.
ஷக்தி மூன்று வேளையையும் தங்களது  வீட்டில் சாப்பிட்டது போல் அவளும் சாப்பிட ஆரம்பித்து சாம்பவிக்கு வேலைகளை இழுத்து வைத்தாள்.
சக்திக்கு பிடிக்கும் என்று இந்திரா பிடிக்கும் என்று வித, விதமாக சமைத்துக் கொடுத்தது போல் ஒன்றும் சாம்பவி செய்ய முனைய வில்லை. சாதம் வைத்தால் சாம்பார் பொரியலோடு முடித்துக் கொண்டாள்.
“இதுதான் உங்கம்மா வாய்க்கு ருசியா சமைக்கிறதா?” சக்தியை கிண்டல் செய்பவள் ஆபிசிலிருந்து செல்லும் பொழுது பலாக்காய், பிஞ்சு பலாக்காய், கீரை, என்று சுத்தம் செய்து சமைக்கும் உணவுப்பொருள்களாகவே பார்த்துப் பார்த்து வாங்கி சக்தியின் கையில் கொடுத்து, அவனை கொஞ்சி “அத்த செமயா சமைப்பாங்களாம் ப்ளீஸ் அத்தான். எனக்குன்னு சொல்லாதீங்க” என்பாள்.
ஓவியா விஷயத்தில் மனைவி பெருந்தன்மையாக “அது முடிஞ்சி போன சாப்டர் அத்தான் அத விடுங்க, எதுக்கு அத பேசிகிட்டு” என்று சொன்னதிலிருந்து சக்தியின் மனம் கௌஷியின் காலடியில்தான். அவள் என்ன சொன்னாலும் செய்ய காத்திருப்பவன் இப்படி கொஞ்சிக் கேட்டுக் கொண்டால் மறுப்பானா?
ஷக்தி வாங்கிக் கொண்டு வருவரை பார்த்து சாம்பவி எகிற “ஏன் இதெல்லாம் மனிசன் சாப்பிட மாட்டானா?” என்று பதிலுக்கு இவன் எகிறுவான். “உன்னால முடியலைன்னா சொல்லு நான் இந்திரா அத்த கிட்ட சொல்லி சமைச்சி அங்கேயே சாப்புடுறேன்” என்பான்.
என்ன சொன்னால் அவன் அன்னை அடங்குவாள் என்று அவனுக்கு தெரியாதா?
அதுக்கில்லடா… இதெல்லாம் முத்தத்துல உக்காந்து துப்பரவு செய்றதுதான் வழக்கம். இங்க எப்படி அதான் கோபப்பட்டேன். கோவிச்சுக்காதடா…” மகனை சமாதானப்படுத்தி விட்டு சமைக்க ஆரம்பிப்பாள்.
“என்னை வைத்தே எங்க அம்மாவை துரத்துவியா? உன் மகனை வைத்தே உன்னை ஒருவழி செய்கிறேன் பார்” என்பதுதான் கௌஷியின் எண்ணமாக இருக்க அதைத்தான் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
சாம்பவி எத்தனை நாள் இங்கு இருப்பாளோ அவள் இருக்கும்வரை அவள் மட்டும்தான் குறி அவள் சென்ற பின்தான் சக்தியை ஆட்டுவிக்க எண்ணினாள்.
மதிய உணவை கபிலர் நாள் தவறாமல் கொண்டு வந்து கொடுத்து விடுவார். ஆனால் கௌஷி ஞாயிற்றுக்கிழமை சக்தியின் வீட்டில்தான் சாப்பிடுவாள்.
“ஏன்டா உன் பொண்டாட்டி சரியான ஓசி சோத்துக்கு அலைபவளா இருக்கிறா” சாம்பவி மகனின் காதைக் கடிக்க,
“என்னம்மா பேசுற? தினமும் காய்கறி எல்லாம் அவதான் வாங்குறா?”
“என்னடா சொல்லுற?” சாம்பவி மகனை முறைக்க,
தான் உளறியதை உணர்ந்தவன் “அவதான் காசு கொடுக்குறானு சொல்லுறேன். ஐயா யாரு? அவளை செலவு செய்ய வச்சிட்டேன் இல்ல” பெருமையாக சொல்லுவது போல் சொல்ல, நெட்டி முறித்தாள் அன்னை.
“ராசாடா.. ராசா நீ. அவ சம்பள பணத்தை காலி பண்ண வச்சிருக்கியே அங்க நிக்கிறடா நீ”
ஷக்தி சொன்னதில் பொய்யுமில்லை. வாங்கும் பொருட்களுக்கு கௌஷிதான் காசு கொடுப்பாள். அதற்கு காரணம் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கடன் அட்டையில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கினால் நூத்துக்கு இருவது வீதம் கழிவு கிடைக்கும் என்று அழைத்து செல்வாள்.
அவனை பணம் கொடுக்க விடாமல் அவள் பணம் கொடுப்பதற்கான காரணம் கௌஷிக்கு பெரிதாகவே இருந்தது. சக்தியும் அவள் வீட்டில் உரிமையாக செலவு செய்துதான் சாப்பிட்டான். அது மாப்பிள்ளை என்ற உரிமையில் செய்ததுதான்.
இவளோடு என்றோ ஒரு நாள் சண்டை வந்தால் “எங்கம்மா ஆக்கிப் போட்டததை நல்லா ஓசில உக்காந்து சாப்பிட்டயே” என்று ஷக்தி பேசி விடக் கூடாது என்றுதான் இந்த ஏற்பாடு. அவள் காசில் தான் இவன் குடும்பம் சாப்பிடுகிறது. இவனால் அப்படி ஒரு வார்த்தையை விட முடியாதே.
அது மட்டுமல்லாது காலை உணவை உண்டு விட்டு இது நல்லா இருக்கு இது எங்க அப்பாக்கு பிடிக்கும், என்று வீட்டுக்கு பார்சல் எடுத்து செல்வாள். அதே போல் இரவு உணவையும் பார்சல் செய்துகொள்வாள். இந்திராவுக்கு சமைக்கும் வேலை எஞ்சியது.
சாம்பவித்தான் இந்திரா சமைத்ததை சாப்பிடமாட்டாள். இந்திரா சாப்பிட மாட்டேன் என்று சொல்லவில்லையே.
“என்னங்க இது இவ சாப்பிடுறது மட்டுமில்லாம அவ ஆத்தா, அப்பனுக்கும் கொண்டு போறா? எந்த ஊரு உலகத்துலயாவது இப்படி எல்லாம் நடக்குமா? பொண்ணு வீட்டுல இருந்துதான் சமைச்சி மாப்புள வீட்டுக்கு வரும். இங்க எல்லாம் தலைகீழா இருக்கு” கணவனிடம் சாம்பவி பொருமை,
“நீ அங்க போய் சாப்பிடுவியா? இல்லல” எதை சொன்னால் அவள் அடங்குவாளோ அதை சொல்லி அடக்கி விட்டு. “யாராவது சாப்பாடு கேட்டு வந்தாலே இல்லனு சொல்லுற குடும்பம் டி உங்க குடும்பம். மருமக ஆசையா கேக்குறா. ஒரு பிடி அதிகமா செய்யிறதுக்கு உனக்கு வலிக்குதா? உனக்கு ஒன்னுனா அவதான் பார்க்கணும் மறந்துடாத”
“இவர் ஒருத்தர் ஆ… ஊ என்றாலே இதையே சொல்லிக்கிட்டு” கழுத்தை நொடித்தாள் சாம்பவி.
கௌஷிக்கு தான் செய்வது அனைத்துமே சிறுபிள்ளை தனமாகத்தான் தெரிந்தது. அதற்காக மாமியாரின் மண்டையை உடைக்கவா முடியும்?
 சாம்பவியை வாஷ்ரூமில் எண்ணெயை ஊற்றி வழுக்கி விழ வைத்து மண்டையை உடைத்தால் தான் என்ன என்று  குரூரமாக அவள் மூளை கற்பனை கூட பண்ணிப் பார்த்தது. அடுத்த கணமே அதன் பின் விளைவுகளை யோசித்தாள்.
வாஷ்ரூமுக்குள் எப்படி ஆயில் வந்தது என்ற கேள்வி வரும். அதை கூட சமாளிக்கலாம். தான்தான் வாஷ் ரூமில் எண்ணெய் பூசி தலைவாரியதாகவும் எண்ணெய் கொட்டி விட்டதாகவும், அவசரமாக கிளம்பியதால் சொல்ல மறந்ததாகவும், சுத்தம் செய்ய முடியவில்லை என்றும் பழியை ஏற்றுக் கொள்ளலாம்.
திட்டு கிடைத்தாலும் மாமியாரின் மண்டை உடைந்தால் சந்தோசம் என்று இருந்து விடலாம். ஆனால் அதை சாக்காக வைத்து மாமியார் தன்னையும், அன்னையும் வேலை வாங்குவாள் என்று நினைக்கும் பொழுது அந்த எண்ணத்தை கைவிட்டாள்.
ஆனால் அன்னையும் மகனும் பேசியவைகள் அவளின் செவிகளுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்க, சாம்பவி மொட்டை மாடியில் துணி காய விட்டு வரும் பொழுது படியில் தள்ளி விடலாமா? என்று கூட எண்ண ஆரம்பித்தாள்.
“என்ன கௌஷி உன் மைண்ட் இப்படி கிரிமினலாகவே யோசிக்கிது” தன்னை தானே கடிந்துக் கொண்டவரே சாம்பவி ஊருக்கு செல்வதற்குள் என்ன செய்வது என்று சிந்தித்தவாறு மின்தூக்கியில் ஏறி இருந்தாள்.
அவள் ஏறும் நேரமே ஆறாம் மாடியில் குடியிருக்கும் பருவதம் அத்தையும் ஏற “ஆஹா வம்பு மாமி வருதே” மனதில் நினைத்தவள் புன்னகைத்து விட்டு அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்.
“என்ன கௌஷி உன் மாமியாரும், மாமனாரும் வந்திருக்காங்க போல” என்று பருவதம் அத்த பேச்சை ஆரம்பிக்க,
“விடாது கருப்பு போல இது ஒன்னு” திட்டியவாறே “ஆமாம் அத்த” என்றவள் பேச்சை முடித்துக்கொள்ள,
“ஆனாலும் உன் அத்தைக்கு ரொம்பதான் குசும்பு டி…”
“என்ன பண்ணி தொலைச்சங்களோ” என்றெண்ணியவளுக்கு ஆர்வம் மேலோங்கியது.
“வாயேன் நம்ம வீட்டுக்கு போய் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்”
“இல்ல அத்த எனக்கு வேல இருக்கு” கைக்கடிகாரத்தை பார்த்தவள் யோசித்தாள்.
“சும்மா வாடி…” என்று அழைத்து சென்று கொறிக்க கை முறுக்கும், காபியும் கொடுத்தவாறே சாம்பவியின் அட்டகாசங்களை கூற ஆரம்பித்தாள்.
“பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடின கதையா இல்லடி இருக்கு உன் மாமியார் பண்ணுற அட்டகாசம்”
மிரண்ட கௌஷியோ “அப்படி என்ன பண்ணிட்டாங்க” என்று கேட்க,
“கதவை திறந்து போட்டதும் இல்லாம அந்த வராண்டா முழுக்க கோலம் போடுறாங்களாமே. இதுல காத்தோட்டம் இல்ல. மூச்சு முட்டுற மாதிரி இருக்கு, மனிசன் இருப்பானா அது இது என்று ஒரே புலம்பலாம். அந்தம்மாக்கு இருக்க பிடிக்கலைன்னா ஊருக்கு போக வேண்டியது தானே. இங்க இருக்குற நாங்க மனுசங்க இல்லையா?
நாங்க மட்டும் என்ன ஆசைக்கா பிளைட்டுல இருக்கோம். நிலம் வாங்கி வீடு கட்ட எங்களுக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? இந்த மாதிரி இடத்துல நிலம் கிடைக்குமா? கிடைச்சாலும் எவ்வளவு விலை? அதை வாங்க யாரு பணம் கொடுக்கிறதாம்?
ஊருல நிலபுலம், வீடு வாசல் எல்லாம் இருக்குறவங்க கூட இங்க இருக்குறாங்கன்னா என்ன அர்த்தம்? வேலைக்காகத்தானே. கல்யாணம் பண்ணி மகளோ, மகனோ இங்க வந்துட்டா பேரனோ, பேத்தியோ பொறந்துட்டா வயசான காலத்துல தனியா இருக்குறத விட பிள்ளைகளோடு இருக்கலாம்னு நினைக்கிறாங்க.
ஒரு சில பெத்தவங்கதான் மருமகளோட சண்டைனு இந்த பிள்ளைக்கிட்ட கொஞ்சம் நாள். அந்த பிள்ளைக்கிட்ட கொஞ்சம் நாள்னு வாழ்க்கையை ஓட்டுறாங்க. புருஷன் இருக்குறவரைக்கும்தான் பொம்பிளைகளுக்கு மரியாதை டி கௌஷி அப்பொறம் சொத்துபத்தெல்லாம் பிள்ளைகள் பிரிச்சி எழுதி எடுத்துக்கொள்வாங்க. நடுத்தெருதான்.
“என்ன இவங்க இப்படி பேசுறாங்க” என்று கௌஷி பார்க்க
“கைத்தொழிலோ… கூலித்தொழிலோ சொந்த கால்ல நிக்கணும். நாலு காச சேர்த்து வைக்கணும் அதுதான் பொண்ணுகளுக்கு பாதுகாப்பு. அத விடு உன் மாமியார் உன் கிட்ட எப்படி நடந்துக்கிறாங்க?”
“நல்லபடியா நடந்துக்கிறாங்க அத்த” பருவதம் நாலு இடத்துக்கு சென்று நாலு விதமாக பேசிக் கூடியவள் என்பதனால் சமைத்துக் கொடுப்பதை பெருமையாகவே சொன்னாள்.
“இல்லையே உன் மாமியார் பேச்சும், நடத்தையும் சரியில்ல”
“அவங்க கிராமம் தானே. இங்க எப்படினு அவங்களுக்கு தெரியாதில்ல. நீங்கதான் சொல்லிக் கொடுக்கணும்” பவ்வியமாக பதில் சொன்னாள் கௌஷி.
“கொடுத்திடலாமே” என்ற பருவத்திற்கு சிரிப்பாக இருந்தது.
கௌஷி விடைபெறு மின்தூக்கில் ஏறியதிலிருந்து நிம்மதியாக உணர்ந்தாள். அவள் வேலை பாதியாக முடிந்திருந்தது. இனி பருவதம் சாம்பவியை பார்த்துக்கொள்வாள்.
இதற்கிடையில் சைனாவில் பரவிய மர்மமான நோய் கொரோனா என்றும் அது உலகெங்கும் பரவி விட்டதாகவும், அது இந்தியாவுக்குள்ளும் பிரவேசித்து விட்டதாகவும்,  முகக்கவசம் அணியும் படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும் தொலைக்காட்ச்சிகளின் மூலமாகவும், போலீஸ் தரப்பிலும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
“ஷக்தி என்னடா இது? என்னென்னமோ சொல்லுறாங்க? இந்த சைனாகாரங்க இந்த வைரஸ லப்புல தயாரிச்சதா சொல்லுறாங்க உண்மையா?” கபிலர் ஒரு பீதியுடன் கேட்க,
“சாதாரணமா எந்த வைரஸானாலும் குறிப்பிட்ட வெப்பநிலைலதான் ஆக்டிவ்வா இருக்கும். இந்த வைரஸ் எல்லா வெப்பநிலையில் எக்டிவ்வா இருக்குறத பார்த்தா அப்படிதான் தெரியுது. இரண்டாம் உலக யுத்தம் ஆயுதங்களை கொண்டு நடத்தினாங்க இப்போ இந்த மாதிரி பயோ வெப்பன் தான் பாவிப்பாங்க”
“அட நாசமா போறவனுக காசுக்காக என்னவேனாலும் செய்வானுகளா? அவனுக தலைல இடி விழ, இவனுகளுக்கு நல்ல சாவே வராது” சாம்பவி கண்ட மேனிக்கு சாபத்தை அளித் தெளிக்கலானாள்.
“அத கண்டுபிடிச்சவனுக்க கூட இந்நேரம் உசுரோட இருக்க மாட்டானுக. இல்லனா இவ்வளவு தூரம் பரவி இருக்காது. தவறுதலான தான் இது வெளிய வந்திருக்கணும். வேணுமென்னே விட்டிருந்தா மருந்தை கைல வச்சிகிட்டுதான் விட்டிருப்பான்”
கொத்துக்கொத்தாக அமேரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிகழும் மரணங்களை செய்திகளில் பார்த்தவாறே பேசினான் ஷக்தி.
“ஏங்க முதல்ல போய் வேப்பிலை, மஞ்சள் எல்லாம் வாங்கிட்டு வாங்க வீட்டை கழுவிடலாம்”
“அதெல்லாம் இதுக்கு சரிப்பட்டு வராது மா…. இதுக்கு வேற, சானிடைசர்னு இருக்கு நான் வாங்கிட்டு வரேன். அப்பா நீங்க வீட்லயே இருங்க. இனி சாப்பாடு கொண்டு வரேன்னு அலையாதீங்க”
“வீட்டுலயே அடஞ்சி கிடைக்க முடியாதுனு ஒரு நாளைக்கு ஒரு தடவ வெளிய போறேன் அதுக்கும் மூடு விழாவா? நல்லா வருவீங்கடா…” கபிலர் ஆதங்கப்பட்டுக்கொள்ள,
“இருபத்தி நான்கு மணித்தியாலமும் வீட்டுல இருக்குற நாங்க மட்டும் என்னவாம்?” சாம்பவி முறைக்க,
“உனக்கென்னமா டீவி சீரியல் பார்த்தே பொழுதை ஓட்டிடுவ, இனி நானும் டீவி சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டா வேண்டியதுதான். இந்த கொரோனா எப்போ ஊரை விட்டு போகுமோ” புலம்பியவாறே இடத்தை காலி செய்தார்.
சக்திக்கு ஒரே யோசனையாக இருந்தது. தானும், கௌஷியும் காரில் வேலைக்கு சென்று வருவதால் எந்த பிரச்சினையும் இல்லை. கதிர்வேலன் வேலை பார்த்துதான் குடும்பத்தை நடாத்த வேண்டுமா? அவசியம் இல்லையே வேலையை விட சொல்லலாம். முடியாதென்றால் பேசி புரிய வைத்து கொஞ்சம் நாளைக்காவது லீவு போட சொல்லலாம் என்ற எண்ணத்தோடு கௌஷியின் வீட்டுக்கு சென்றான்.
“என்ன மாப்புள  இந்த நேரத்துல” என்று வரவேற்ற மாமனாரிடம் பேசி புரியவைத்து சம்மதம் வாங்கியவன் கௌஷியிடமும் காரியாலயத்தில் எவ்வாறெல்லாம் பாதுகாப்பை மேற்கொள்ளலாம் என்று பேசிக்கொண்டிருந்தான்.
அந்நேரம் பிரணவ் அழைத்து வெற்றியும் சந்தியாவும் கிடைத்து விட்டதாகவும், அவர்கள் இப்பொழுது சென்னையில்தான் இருக்கிறார்கள் என்றும் கூற, கதிர்வேலனுக்கு மகிழ்ச்சி தாள வில்லை.
“மாப்புள வெற்றி மாப்புளையும், சந்தியாவும் இங்க சென்னைலதான் இருக்காங்களாம். வாங்க உடனே போய் பார்க்கலாம்” என்று கூப்பாடு போட ஆரம்பித்தார்.
அத பக்கம் பிரணவ் “ஹலோ ஹலோ” என்று கத்திக் கொண்டிருக்க, கதிர்வேலனின் அலைபேசியை வாங்கிய ஷக்தி
“ஏன்டா எனக்கு போன் பண்ணல” என்று மெதுவாக கேட்க,
“உங்க போனுக்குத்தான் எடுத்தேன். உங்க போன எங்க வச்சிட்டு வந்தீங்க அத்தான்” பிரணவ் பல்லைக் கடித்தான்.
ஷக்தி அலைபேசியை வீட்டிலையே விட்டு வந்ததை நினைத்து நொந்தவன் அடுத்து பேச முன் “கௌஷி அக்கா வேற போன் எடுக்க மாட்டேங்குறாங்க, என்னதான் செயிரீங்க ரெண்டு பேரும்?  அதான் நான் சித்தப்பாக்கு எடுத்தேன். பக்கத்துல உங்க குரல் கேட்டதும் போன எடுத்தது நீங்கன்னு விசயத்த சொல்லிட்டேன்”
“சரிடா அட்ரஸ் கொடு நான் போய் அவங்கள கூட்டிட்டு வந்துடுறேன்” ஷக்தி ஒரு துள்ளலோடு சொன்னான்.
அன்று இருந்த மனநிலை இன்று கொஞ்சம் கூட இல்ல. வெற்றி செய்த காரியத்தால் தானே சக்திக்கு கௌஷி கிடைத்தாள் அந்த சந்தோசம் அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது.
“ஆ… சொல்வாங்க சொல்வாங்க ஜீ. எச் போனாவே அவங்கள பார்க்கலாம்”
“என்னடா சொல்லுற?” என்ற சக்திக்கு கொரோனா பீதிதான் வந்தது.
“சந்தியா அக்காக்கு உடம்பு முடியலன்னு தான் தகவல் வந்தது என்ன? எது? என்று ஒன்னும் தெரியல. நீங்க போய் பார்த்து விசாரிங்க. எங்களுக்கும் தகவல் சொல்லுங்க” என்றவனின் குரலில் கோபம்தான் எஞ்சி இருந்தது.
மருத்துவமனையில் ஒருத்தி படுத்து கிடக்கிறாள் அப்படி என்ன வெற்றிக்கு வீட்டுக்கு தகவல் சொல்ல மனம் வராமல் இருக்கின்றான். ஒன்றுகிடக்க, ஒன்று ஆனா பின்னால்தான் தகவல் சொல்வானா?
கதிர்வேலனையோ, கபிலரையோ அழைத்து சென்றால் பிரச்சினை வரும் அல்லது மருத்துவமனையை கண்டால் பதறுவார்கள் என்று ஷக்தி கௌஷியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
தாங்களும் வருவதாக கூறிய இந்திராவையும், கதிர்வேலனையும் ஆயிரம் சமாதானங்கள் கூறி, வந்தால் வெற்றி, மற்றும் சந்த்யாவுடன் தான் வருவதாக கிளம்பி இருந்தனர்.
ஜீ.எச் கொஞ்சம் பரபரப்பாகத்தான் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் முகக்கவசம் அணிந்த முகங்கள்தான். சிலர் முகக் கவசம் அணியத் தெரியாமல் வாய்க்கு மட்டும் அணிந்து மூக்கை வெளியே காட்டிக் கொண்டிருக்க, தாதிகள் அவர்களை திட்டிக் கொண்டிருந்தனர். சமூக இடைவெளி என்பது கொஞ்சம் கூட கடைபிடிக்கப்படவில்லை. இப்படி இருக்கையில் இந்த நோயை பரவ விடாமல் எவ்வாறு தடுப்பது? என்று புலம்பலாயினர்.
ஷக்தியும், கௌஷியும் கூட முகக் கவசம் அணிந்திருந்தனர். தங்கள் மீது யாரும் மோதி வீடாக கூடாதென்று மிகவும் கவனமாக ஷக்தி இருக்க, கௌஷி அவன் கையை இருக்க பற்றி இருந்தாள்.
தனியார் மருத்துமனைபோல் நோயாளியின் பெயரை சொன்ன உடன் இந்த அறை என்று சொல்வார்களா என்ன? குழம்பியவனாகத்தான் சென்று விசாரித்தான் ஷக்தி.
“ஏன் பா நீ வேற வந்து எங்க உயிரை எடுக்குற? பேர சொன்னா மட்டும் பெர்சன்ட் எந்த வார்டனு சொல்ல முடியுமா? எந்த நோய் சம்பந்தமா அட்மிட் ஆகி இருக்காங்கனு சொன்னா தானே எந்த வார்டனு சொல்ல முடியும்?” அங்கிருந்தவர்கள் கடிய, பிரணவ்வை அழைத்தாள் கௌஷி.
“வாங்கி கட்டிக்கிட்டீங்களா?” சிரித்தான் தம்பி.
“ஏன் டா” கௌஷி திட்ட முடியாமல் திணற,
“பின்ன தனி ஒருவனா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவங்க எங்க இருக்காங்கனு கண்டு பிடிச்சேன். இந்த நாசமா போன கொரோனாவாலா என்னால அங்க வர முடியல, அந்த கோபம்தான்”
முகநூலில் அவர்களோடு யாராவது தொடர்பில் இருக்கிறார்களா என்று விசாரித்ததில் பிராணாவ்வுக்கு எந்த தகவலும் கிட்டவில்லை. ஆனால் அவர்களை மும்பாயில் பார்த்ததாக ஒருவர் கூற அவரை சந்தித்து பேசியவன், மும்பாய் செல்ல ஆயத்தமாகும் பொழுதுதான் வெற்றியை சென்னையில் பார்த்ததாக பிரணவ்வின் பாடசாலையில் படித்த நண்பனொருவன் தகவல் கூறி இருந்தான்.
உடனடியாக நண்பனுக்கு மேலும் விசாரித்து தகவல் கூறும்படி சொல்ல, சந்தியா ஜீ.எச்சில் அனுமதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது. அவனால் வர முடியாத சூழ்நிலை உருவானதால்  உடனே வீட்டாருக்கு தெரிய படுத்த இதோ சக்தியோடு கௌஷி வந்து விட்டாள். 
“நான் ஒரு நம்பர் அனுப்புறேன். அது என் பிரெண்டோட அண்ணன் நம்பர் அவர் அங்கதான் சிகியூரிட்டியா வேல பாக்குறாரு. அவர்கிட்ட பேசுங்க. சந்த்யா அக்கா எந்த வார்டுல அட்மிட் ஆகி இருக்காங்க என்று கூட அவருக்கு தெரியும்” என்றவன் ஒரு அலைபேசி எண்ணை அனுப்பி இருந்தான்.
அந்த நண்பன் வேலை செய்யும் இடத்தில் அவனுடைய நண்பனின் நண்பனை பிடித்து அவனுடைய அண்ணன் இந்த சிகியூரிட்டி என்று ஒரு சுற்று சுற்றித்தான் வெற்றியை கண்காணித்துக் கொண்டிருந்தான் பிரணவ்.
பிரணவ் அனுப்பிய அலைபேசி என்னை தொடர்புகொண்டு பேசியதில் அவரே வந்து கேன்டீனுக்கு அழைத்து செல்ல, “வார்டுக்கு செல்ல முடியாதா?” என்று கேட்டான் ஷக்தி.
“விசிட்டிங் நேரம் தொடங்க இன்னும் நாப்பது நிமிஷம் இருக்கு தம்பி. வெற்றி சார் உங்க பிரதர் தானே அவர் மனைவிக்கு மூணு வேலை சாப்பாடும் கேன்டீன்லதான் வாங்கிட்டு போவாரு. வார்டு போக முன்னாடி இங்க வருவாரு. நீங்க அவரை இங்கயே மீட் பண்ணி பேசிடுங்க” தனது வேலை முடிந்து விட்டதாக ஒரு தலையசைப்பினூடாக அவர் விடைபெற ஷக்தி அவருக்கு நன்றி கூறி கொஞ்சம் பணம் கொடுக்க,
“என்ன தம்பி நீங்க மனுசனுக்கு மனிசன் இந்த சின்ன உதவிய கூட செய்ய மாட்டேனா? உதவனும் என்றா? அங்க ஒரு உண்டியல் இருக்கு அதுல போடுங்க ஆபரேஷனுக்கு காசில்லாதவங்களுக்காவது உதவும்” என்றவர் புன்னகையோடு நடந்தார்.
குடும்பத்தின் அருமை தெரிந்த இப்படி நல்ல உள்ளம் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கேன்டீனில் கூட்டம் அதிகம் இல்லையென்றும் இல்லை. கௌஷியும் சக்தியும் ஒரு ஓரமாக அமர்ந்து வாசலையே பார்த்தவண்ணம் இருக்க, முகக்கவசம் அணிந்து வருபவர்களில் வெற்றியை மட்டும் கண்கள் விடாது கவனித்தன.
மெலிந்த கருத்த உருவம் ஒன்று தனியாக உள்ளே நுழைய “அது வெற்றி அத்தான் இல்ல” என்றாள் கௌஷி.
வேறு யாரையோ அவள் தவறுதலாக சொல்கிறாள் என்று நினைத்த ஷக்தி “அது வெற்றியா? உன் கண்ணு நல்லா தெரியுது” என்று கிண்டல் செய்ய,
கணவனை முறைத்தவள் ஓடிச்சென்று “வெற்றி அத்தான்” என்று அந்த மெலிந்த உருவத்தின் முன் நின்றாள்.
“கௌஷிமா நீ எங்க இங்க?” அதிர்ச்சியாக வெற்றி கேட்க்கும் பொழுதே
“இவ ஒருத்தி யாரைப்பார்த்தாலும் வெற்றி அத்தான் என்று கிட்டு” என்றவாறு வந்த சக்தியும் அண்ணனின் குரல் கேட்டு திகைத்து உற்றுநோக்கலானான்.
“டேய் வெற்றி என்னடா ஆச்சு? என்னடா இந்த கோலம்?” அதிர்ச்சியில் சக்தியின் கண்கள் தெறிக்கும் அளவுக்கு சென்றது.
“நல்லா இருக்கீங்களா?” வெற்றி இவர்களை பார்த்து கேட்க,
“அத நாங்க கேட்கணும்டா” என்றவாறே ஷக்தி அண்ணனை கட்டிக்க கொண்டான். அந்த நேரத்தில் அவன் எங்கே இருக்கின்றோம் என்று பார்க்கவுமில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை.
“டேய் டேய் என்ன பண்ணுற?” வெற்றி கத்த
அவன் பேச்சை ஷக்தி செவிமடுக்கவே இல்லை. ஆறுவருடங்கள் கழித்து கிடைத்த தமையனை விடாது இறுக்கிக் கொண்டான். 
கௌஷியின் நெற்ரிக் கும்முமமும், தாலியும் வெற்றியின் புருவம் உயர்த்த “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சா?” கண்களை விரித்தான் வெற்றி.
இவர்களின் சின்ன வயது சண்டை இவனுக்கு தெரியாதா? இவனும் சந்தியாவும் ஓடிப்போனதுக்கு பிறக்குமா? வீட்டார்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்? ஆச்சரியம் குறையாத பார்வையை இருவர் மீதும் வீச,
“எல்லாத்தையும் இங்கயே பேசுவீங்களா? அக்கா எங்க?” கௌஷி தீர்க்கமாக பார்க்க வெற்றியின் முகம் சட்டென்று மாறியது.
“சந்தியா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்குறது எங்களுக்கு தெரியும். உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகத்தான் வந்தோம்” என்றான் ஷக்தி.
வெற்றி ஒரு வார்த்தை பேசவில்லை சந்தியா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு இருவரையும் அழைத்து சென்றான்.
வெற்றிக்கு தான் சளைத்தவளில்லை என்று மெலிந்த தேகத்தோடு கண்ணில் கருவளைகளோடும், தலையில் பெரிய கட்டோடு படுத்திருந்தாள் சந்தியா.
அக்காவை இந்த நிலைமையில் பார்த்து கௌஷி தேம்பித் தேம்பி அழ, கண்விழுத்த சந்தியா தங்கையை கண்டு அவளும் அழ ஆரம்பித்தாள்.
அண்ணன் தம்பி இருவரும் அவர்களை சமாதானப்படுத்த, சந்தியாவுக்கு என்ன நடந்தது என்று கூற ஆரம்பித்தான் வெற்றி.

Advertisement