Advertisement

அத்தியாயம் 12
ஐந்து நாட்களாக ஷக்தி கௌஷியை சந்திக்கவில்லை. தனியாகத்தான் ஆபீஸ் சென்று வந்து கொண்டிருந்தான். அவளுக்கு உடம்பு முடியவில்லை என்று ஒரு வாரம் லீவ் போட்டிருக்கின்றாள். மெயிலில் அவனுக்குத்தானே அனுப்பி இருந்தாள். ஒரு நாள் கூட வேலைக்கு லீவ் போட்டிராதவள் லீவு போட்டிருப்பது உடம்பு முடியாமல் இல்லை. மனசு சரியில்லை என்பதனால் தான் என்று சக்திக்கு நன்கு தெரியும்.
காலையும் மாலையும் அவளை பார்க்க செல்கின்றாள். ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை. பார்த்தால் தானே பேசலாம். பேசினால் தானே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். தன்னோடு பேசவே பிடிக்காமல் அறையில் அடைந்து கிடப்பவளை என்னவென்று சொல்வது?
அவளது அலைபேசிக்கு அழைத்தாலும் அது அனைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பதில் வருகிறது.
“கௌஷி இப்போ எப்படி இருக்கா? அத்த” இந்திராவிடம் மெதுவாக விசாரித்தவாறு அவளது அறைக்குள் நுழைய முயன்றான் ஷக்தி.
“தலை வலிக்குதுன்னு சொல்லி இப்போதான் தூங்க போனா மாப்பிள்ளை” என்றாள் மாமியார்.  
அவளுக்கு ஒன்றுமில்லை. அவனை பார்க்கப் பிடிக்கவில்லை என்பதினால் வந்த தலைவலி என்று புரிய அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக ஆபீஸ் சென்றான்.
சக்திக்கு ஓவியாவை எண்ணி கோபம் வரவில்லை. தன்னை நினைத்துதான் கோபம் கோபமாக வந்தது. ஓவியா பேசி விட்டு சென்றதை நினைத்துப் பார்த்தவன் முதலில் அவள் ஏதோ கோபத்தில் பேசி இருப்பாள். கௌஷியை பார்த்ததும் தான் வாழ வேண்டிய வாழ்க்கை என்று பெண்களுக்கே உரித்தான பொறாமையில் கூறி இருப்பாள் என்றுதான் எண்ணினான்.
ஆனால் அன்று தங்கள் சேர்ந்து வாழ வாய்ப்பிருக்கும் பொழுது முகமறியாத கௌஷிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த நல்ல உள்ளம் கொண்ட ஓவியா இன்று இப்படி பேசுகிறாள் என்றால் அவள் வாழ்க்கை நன்றாக இல்லையோ?
தான் அவசரப்பட்டு எடுத்த முடிவால் கௌஷியும் சந்தோசமாக இல்லை. ஓவியாவும் அவளது கல்யாண வாழ்க்கையில் சந்தோசமாக இல்லையோ? என்று கவலையடைந்தவன் முதன் முதலாக ஓவியாவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
அவள் திருமணம் செய்திருப்பது அவள் அன்னைவழி சொந்தம்தான். செல்வத்தில் எந்த குறையும் இல்லை. அவள் கணவன் சென்னையில் ஐடியில் வேலை செய்கின்றான். சொந்தமாக வீடு. அவனுக்கு வண்டி இவளுக்கு வண்டி என்று ஏகபோக வாழ்க்கைதான்.
சொத்துசுகம் இருந்தால் மட்டும் போதுமா? சந்தோசமாக இருக்கிறாளா? என்று தோண்டித் துருவிய பின்தான் ஓவியாவின் குணத்தையே  அறிந்துகொண்டான்.
அன்று அவள் பேசியதும், இன்று அவள் நடந்து கொண்ட முறைக்கும் என்ன காரணம் என்று புரிய, தவறான ஒருத்தியை காதலித்த தன் மேல்தான் அவனுக்கு கோபம் வந்தது.
அவன் மனசாட்ச்சியோ “அது காதலே இல்ல. நீதான் காதல்னு சுத்திகிட்டு இருந்த. நல்லவேளை தப்பிச்ச” என்று கேலி செய்ய,
“பட்டுத் திருந்தானும் என்று இருந்தவன, கௌஷி கழுத்துல தாலி கட்ட வச்சி காப்பாத்திட்டான் கடவுள். அத புரிஞ்சிக்காம நான் வேற” தலையை உலுக்கிக் கொண்டவனுக்கு கௌஷியை நினைத்து தானாக முகம் மலர்ந்தது. 
ஒருவாரம் தானே லீவ் போட்டிருக்கிறாள். அதன்பின் ஆபீஸ் வந்துதானே ஆகா வேண்டும். அதுவும் என்னோடுதானே வந்தாக வேண்டும். பேசாமல் இருந்து விடுவாளா? பேசி புரிய வைக்கலாம் சக்தியும் அவளை தொந்தரவு செய்யவில்லை. 
இங்கே கௌசி உண்ண பிடிக்காமல், உறங்க தோன்றாமல் சதா சிந்தனையில் அமர்ந்திருந்தாள்.
ஊரில் அவர்களது குடும்பத்துக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அவளும் சரி அவள் அக்கா சந்தியாவும் வீட்டுக்கு அடங்கிய பிள்ளைகள் தான். அதிர்ந்து கூட பேசாதவள் சந்தியா. அப்படி பட்டவள் வெற்றியோடு ஓடி விட்டாள் என்ற அதிர்ச்சி முடியுமுன் அவள் கழுத்திலிருந்த தாலியை இறக்க பார்த்திருக்கின்றான் அவள் கணவன்.
அவன் நினைத்திருந்தால் இந்த திருமணத்தையே நிறுத்தி இருக்கலாம். தனது கழுத்தில் தாலியையும் கட்டி விட்டு, வேறொரு பெண்ணை காதலிப்பதாக விட்டு செல்வதாக முடிவோடு இருந்தான் என்றால் பழிவாங்கத்தான் எல்லாம் செய்தானா? இப்போ எதற்காக வந்திருக்கின்றான்? திருந்தி விட்டானா?” கேலியாக சிரிப்பை உதிர்த்தவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாது முழிக்கலானாள்.
சட்டென்று சிரிக்க ஆரம்பித்தவளுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. “நல்லா வேணும் அவனுக்கு. என் கழுத்துல தாலிய கட்டிட்டு, அந்த குண்டச்சி பின்னாடி போனானா? கல்யாணம் ஆனவன் என்றதும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா இல்ல. என்ன இருந்தாலும் குண்டம்மா.. தமிழ்நாட்டு கலாச்சாரத்தை மதிக்கிற பொண்ணுன்னு நிரூபிச்சிட்டா. அவ “நீ வேணாம் போ” என்று துரத்தவவும். இந்த அத்தான் எப்படி பேந்த பேந்த முழிச்சிகிட்டு நின்னு இருப்பாரு”
சக்தியின் பெரிய கண்களை உருட்டியவாறு அவன் நிற்கும் தோற்றம் கண்ணில் வர, இவள் கண்களில் நீர் வரும் வரை சிரிக்கலானாள்.
சிரித்து ஓய்ந்தவள் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அறையிலையே அடைந்து கிடப்பது அன்னையும், தந்தையும் பயந்து என்ன? ஏது? என்று விசாரித்தவாறே மருத்துவமனைக்கு செல்ல அழைத்தவண்ணம் இருக்கின்றனர்.
“உன் மருமகன் வாங்கிக் கொடுத்த மருந்தை சாப்பிட்டாலே போதும் குணமாகிடும், நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும்” என்று அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கின்றாள் கௌஷி.
என்னதான் கௌஷிக்கு சக்தியின் மீது கோபம் இருந்தாலும் அவனை விவாகரத்து செய்யய்யவோ, நடந்ததை வீட்டாரிடம் கூற வேண்டும் என்றோ கௌஷி எண்ணவில்லை. தனது பெற்றோர்களின் மனம் நோகும் என்று அவளாகவே காரணம் கண்டு பிடித்து நடந்ததை கூறாது மறைக்கலானாள்.
சக்தியை பிடிக்காது வெறுக்கின்றேன் என்று அவனுக்கு முகம் காட்டாமல் அறையில் அடைந்து கிடப்பவள் அவனோடு வாழவா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வர வேண்டாமா? அவன் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தால் என்றால் நடந்ததை வீட்டில் கூறி அதற்குண்டான வேலையை பார்க்க வேண்டும். அவனோடு வாழ வேண்டும் என்று இருப்பவள் இப்படியா? அறையில் அடைந்து கிடப்பது. கௌஷி என்ன நினைக்கிறாள் ஒன்றும் புரியவில்லை.
ஆனால் அவளை மாற்றுவதற்காகவே வந்து சேர்ந்தாள் சாம்பவி.  
“மருமகளே எங்க டி இருக்க? உனக்குத்தான் சீமப்பால் கொண்டு வந்திருக்கேன். எவ்வளவு தூரம் பயணம் செஞ்சி கலைப்புல வந்திருக்கேன். ஒரு சொட்டு தண்ணியாச்சும் கொண்டு வா… உன்ன பார்க்கத்தானே வந்திருக்கேன்” பெரிய சத்தத்தோடு உள்ளே நுழைந்தவளை அறையிலிருந்து அடித்துப் பிடித்து வெளியேறி வரவேற்றாள் கௌஷி.
இந்திரா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, “எப்படி இருக்க மருமகளே” கௌஷியிடம் நலம் விசாரித்தவள் இந்திராவை கண்டுகொள்ளவில்லை.
கௌஷி தலையை ஆட்டி வைக்க, “உனக்கு உடம்பு முடியல ஒருவாரமா நீ ஆபீஸ் போகலனு ஷக்தி சொன்னான். அதான் மாமா சூப்பு வைக்க ஆட்டுக்கால், வாலும் வாங்கிட்டு வர கறிக்கடைக்கு போய் இருக்கிறார்” கபிலர் அங்கில்லாததற்கு அவளே காரணம் கூறினாள்.
“ஐயோ எதுக்கு சம்மந்தி. வந்த உடனே அண்ணனை கடைக்கு அனுப்பினீக இவர் வரும் போது வாங்கி வர சொல்லி இருப்பேனே” இந்திரா பதற
அவளை கண்டு கொள்ளாமல் “அது மட்டுமில்ல நான் இருக்கும் வரைக்கும் என் கையாள சக்திக்கு ஆக்கிப் போடணும். அவனுக்கு பிடிக்கும்ன்னு கறியும் வாங்கிட்டு வர சொன்னேன். உனக்கு உடம்புக்கு எப்படி இருக்கு?”
மகனுக்காக வாங்கிட்டு வர சொன்னாளா? சொல்லும் போது மருமகளுக்கும் வாங்கி வர சொன்னாளா? அல்லது மருமகளுக்கு சூப்பு வைச்சி கொடுக்கணும் என்ற எண்ணத்தில் சொல்லும் பொழுது மகனுக்காகவும் சொன்னாளா? அவள் பேச்சில் இருந்து எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.
வந்ததும் வராததுமாக தெரியாத ஊர் என்றும் பாராமல் கணவனை கடைக்கு அனுப்பி விட்டு தான் மாட்டு மருமகளின் வீட்டுக்கு வந்து அவளை அக்கறையாக நலம் விசாரிப்பது கணவனை அழைத்து வர பிடிக்காமல் என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.
“சரி மருமகளே நான் நம்ம வீட்டுக்கு போறேன். நீ ரெஸ்ட் எடு. எனக்கு ஏகப்பட்ட வேல கிடக்கு. இந்த ஷக்தி துணிய கழட்டி கண்ட இடத்துல போட்டு வச்சிருப்பான்” என்ற சாம்பவி அவர்களது பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பி இருந்தாள்.
வந்தாள்.
பேசினாள்.
சென்றாள்.
“ஆமா அத்த வரதா சொல்லவே இல்லையே” கௌஷி அன்னையை ஏறிட
“எனக்கும் தெரியல, மாப்புள காலைல வந்தப்போ கூட சொல்லலையே, மறந்திருப்பாரு” என்றாள் இந்திரா.
ஓவியாவின் காதல் விவகாரம் நியாபகம் வரவே “ஆமா உன் மாப்பிளை சொல்ல வேண்டிய எல்லாத்தையும் சரியா மறந்துடுவாரு” முகத்தை சுளித்தாள் கௌஷி.
சாம்பவிக்கு கொடுக்கப்பட்ட தண்ணீர் செம்பு கேட்பாரற்று மேசையில் கிடந்தது.
இந்திரா கணவனுக்கு அழைத்து சம்மந்தி வீட்டுக்காரர்கள் வந்திருப்பதை கூறி மதிய உணவுக்கு அவர்களை அழைக்கும்படி கூறி இருக்க, கபிலரை அழைத்து பேசி விட்டு அழைப்பதாக கூறினார் கதிர்வேலன்.
“அந்தம்மா விவரமா மதியத்துக்கு சாப்பாடு செஞ்சி எடுத்துட்டுதான் வந்திருக்காங்க, இரவைக்கும் சமைக்க, கறி வேற வாங்கினாங்களாம். மாப்பிளையை வரும் போது காய்கறி வாங்கிட்டு வர சொன்னதாக அந்தம்மாவே சொல்லிட்டதாக சொல்லுச்சு”
கணவன் பெருமூச்சோடு அலைபேசியை அனைத்த விதத்தில் சாம்பவிக்கு தங்களது வீட்டில் கை நனைக்க இஷ்டமில்லை என்று தெள்ளத்தெளிவாக இந்திராவுக்கு புரிந்து போனது.
ஆனால் அப்படியெல்லாம் விட முடியாதே இன்னும் மூன்று மாதங்களில் கௌஷியும், சக்தியும் சேர்ந்து வாழப் போகிறார்கள். அவர்களுக்காகவாவது சாம்பவியை பொறுத்துப் பொய்தானே ஆகா வேண்டும். பெருமூச்சு விட்டுக்கொண்டாள் இந்திரா.
தினமும் வரும் ஷக்தி அன்று வீட்டுக்கு வராதது, அவனது குரல் வீட்டில் ஒலிக்காதது கௌஷிக்கு ஒரு வித வெறுமையை ஏற்படுத்தி இருந்தது.
“டெய்லி மாப்புள கூடவே சாப்பிட்டு இன்னக்கி அவர் இல்ல என்றது ஒரு மாதிரி இருக்கு இந்து” கௌஷி நினைத்ததை கதிர்வேலன் சொல்ல மகள் தந்தையை ஏறிட்டாள்.
“நம்ம கௌஷியும்தான் ஒரு வாரமா மாப்புளைய பார்க்கல ஏங்கிப் போய் இருக்கா” இந்திரா கிண்டலடிக்க
“அம்மா…” இவள் பல்லை கடித்தாள் என்றால் வெட்கப்படுகிறாள் என்று தாயும், தந்தையும் அதற்கும் கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
“சரி சரி மாப்புளைக்கு குழிபணியாரம் என்றா ரொம்ப புடிக்கும் நாளைக்கு காலைல செஞ்சி தரேன் கொண்டு போய் கொடுக்குற சாக்குல பேசிட்டு வா” இந்திரா மகளை சமாதானப்படுத்துவதாக நினைத்துக் கூற, அன்னையை கடிய முடியாமல் இளித்து வைத்தாள்.
  “ஏன்டா ஷக்தி தலைக்கு எண்ணெய் பூசி குளிக்க மாட்டியா” நடு வாசலில் ஒரு இருக்கையை போட்டு அவனை அமர்த்தி தலைக்கு எண்ணெய் தேத்துக் கொண்டிருந்தாள் சாம்பவி. சக்தியும் துண்டைக் கட்டிக்கொண்டு கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான்.
“இந்த இந்த பக்கம் வா கொஞ்சம் வெயில் படட்டும்” என்று அவனை நகர்த்தி ஜன்னல் புறம் அமர வைக்க சக்தியின் முகம் ஜன்னல் புறமும், சாம்பவியின் முதுகு கதவின் புறமும் இருந்தது.
“ஏன்டா நீ சொன்னதுக்காத்தான். அந்த சுண்டெலிக்கிட்ட நல்ல விதமா பேசுறேன். இல்லனா நான் எதுக்கு அவ கிட்ட பேசப் போறேன்” கழுத்தை நொடித்தவள் “இருந்தாலும் அந்த இந்திரா கூட எல்லாம் சமரசம் ஆகா முடியாது. உன் பொண்டாட்டிய அனுசரிச்சு போறதே பெரிய விஷயம். பார்த்துக்க”
“சரிம்மா… சரிம்மா…” அவன் தலைமுடி அன்னையின் கையில் இருப்பதனால் வாயால் சொல்வதோடு தலையையும் ஆட்டு வைத்தான் ஷக்தி. 
“சும்மா சொல்ல கூடாதுடா ஆத்தாளும், மகளும் நம்ம வீட்டை நல்லா சுத்தபத்தமா தான் வச்சிருக்காளுங்க, நீ சொன்னது போல நல்லபடியா  பேசுனதுல இவளுங்க உன்ன நல்லா பாத்துக்கிறாங்க இல்ல. நான் பெத்த என் பையன் உனக்கு என்ன போலவே அறிவு டா… அவளுங்கள உன் காலடில வச்சிக்கணும்னு நினச்சியே நீ தான்டா என் பையன். சம்பளம் இல்லா வேலைக்காரிங்களாகவே அவளுங்கள வச்சிருக்கே. சபாஷ் டா..” 
“ம்ம்…” என்றவன் வேறு எதுவும் பேச வில்லை.
அன்று கௌஷி  “உங்க அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் எங்க வீட்டுக்கு வருகிறாயா?” என்று கேட்டது அதன் பின் பேசியது எல்லாம் குத்திக் கிழித்து இருக்க, சாம்பவி இரவு அழைத்து “என்ன அந்த வீட்டுலையா இருக்க?” என்று கேட்டதும்தான் தாமதம் அவளை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டான்.
“ஐயோ என் மகன ஒரே நாள்ல மயக்கி, மாத்திட்டாளுகளே! அந்த சூனியக்காரிங்க” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.
அன்னையை எப்படி சமாளிப்பது என்று முழித்தவன் “ஏன் மா அறிவிருக்கா உனக்கு? உனக்குத்தான் இந்திரா அத்தைய பிடிக்காதில்லை. அவங்கள நீ திட்டானா மட்டும் போதுமா? நீ திட்டுறத விட உன் மருமகளே அவங்கள திட்டினா எப்படி இருக்கும்?” என்று கேட்க, சாம்பவியின் ஒப்பாரி நின்றது.
“என்னடா சொல்லுற?”
“பின்ன நா எதுக்கு அவள பொண்டாட்டியா ஏத்துக்கிட்டேனாம். எல்லாம் உனக்காகத்தான் மா… எனக்கு வேலைக்காரிங்களா அம்மாவும் மகளும் இருப்பாளுங்க. என் பொண்டாட்டிய கைக்குள்ள போட்டுக்கிட்டு அவள வச்சே அவ அம்மாவ துரத்துறேன் பாருங்க” என்றான்.
“அப்படி சொல்லுடா… நான் பெத்த மகனே. நாளைக்கே போன போட்டு என் மருமக கிட்ட பேசுறேன்” என்றவள்தான் கௌஷியிடம் அன்பாக பேசி இருந்தாள்.
ஒரு பிரச்சினையை சமாளிக்க இன்னொரு பிரச்சினையை இழுத்துக் கொண்டிருந்தான் ஷக்தி. சாம்பவி இப்போதைக்கு இங்கு வரமாட்டாள் என்று எண்ணி இருக்க வந்து விட்டாள்.  வந்தவள் இந்திரா வீட்டுக்கு செல்ல விரும்பாததால் எந்த பிரச்சினையும் வராது என்று அன்னை சொல்வதை தங்களது வீட்டில் தானே பேசுகின்றோம் என்று அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் ஷக்தி.
ஆனால் அவனுக்கு குழிப்பணியாரம் எடுத்துக்கொண்டு வந்த கௌஷி இவர்களின் பேச்சைக் கேட்டு கொதிநிலைக்கு சென்றாள்.
காரணம் கதவு திறந்துதான் இருந்தது. ஊரில் காற்றோட்டமாக இருந்து பழகிய சாம்பவிக்கு இப்படி குடியிருப்பு வீட்டில் கதவை பூட்டி வைத்திருப்பது மூச்சு முட்டுகிறது என்று கதவை திறந்து போட்டிருக்க, மணியை அழுத்த முனைந்த கௌஷி கதவு திறந்து இருக்கிறதே உள்ளே போகலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் பொழுதுதான் சாம்பவி இந்த பேச்சை ஆரம்பித்திருந்தாள்.
என்ன பேசுகிறார்கள் என்று கேட்டவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. அன்னையையும், மகனையும் அடித்தே கொல்லும் வெறியில் இருந்தவள் மின்துக்கியின் சத்தம் கேட்டு ஓடிச்ச் சென்று அப்பொழுதுதான் படியேறி வருவது போல் பாவலா செய்தாள்.  
மின்தூக்கியில் வெளிப்பட்டது கபிலர்தான். கௌஷியை கண்டு முகம் மலர்ந்தவர் “நீ இப்போதான் வாரியாமா..”
அவருக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று புரிய, “ஆமாம் மாமா குழிப்பணியாரம் பண்ணேன். உங்களுக்கு கொஞ்சம் எடுத்து வந்தேன்” என்றவாறே அவரோடு உள்ளே நுழைய, “குழிபணியாரமா” என்றவாறு ஓடி வந்தான் ஷக்தி.
“யாரு பண்ணா? உங்க அம்மாவா?” இந்திரா செய்ததை தான் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவல்லவா சாம்பவி
“இல்ல அத்த நான் தான் பண்ணேன்” தன்னெஞ்சறிய பொய் சொன்னவள் தானே சாம்பவிக்கு “சாப்பிட்டு பாருங்க அத்த…” என்று ஊட்டியும் விட சாம்பாவியும் வேறு வழியில்லாது உண்டு விட்டு  “நல்லா இருக்கு” என்றாள்.
சக்தியும், கபிலரும் எதையும் கண்டுகொள்ளாது பணியாரம் சாப்பிட கௌஷி அவர்களுக்கு கடும் காபி போட சென்றாள்.
“நல்ல ருசியாதான் இருக்கு” இந்திரா செய்திருந்தால் வாயில் வைத்துக் கூட இராத சாம்பவி கௌஷி செய்தாள் என்றதும் சுவையில் சாப்பிட ஆரம்பித்தாள்.
“எங்கம்மா பண்ணா சாப்பிட மாட்டீங்களோ? இனி எல்லாம் இப்படித்தான் இருக்கும் அத்த. சாப்பிட்ட பின்னாடி உங்க கையையே வாயில விட்டு வாந்தி எடுக்க வைக்கிறேன்” கருவிக்கொண்டவள்.
“எப்படி எப்படி எங்களை உங்களுக்கு வேலைக்காரிங்களா வச்சிக்கத்தான் ஆறு வருஷத்துக்கு பிறகு வந்திருக்கீங்களோ? வாங்க வாங்க யாருக்கு யார் வேலை செய்றாங்கன்னு பாக்குறேன்” காபியை எடுத்துக் கொண்டு சென்றவள் கொடுத்து விட்டு சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்.
அவ்வாறு முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு சாதாரணமாக பேசுவது கௌஷிக்கு இலகுவான காரியமில்லை. ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம்தான். முகத்தில் தோன்றும் மாற்றங்களை மறைப்பது எவ்வளவு கடினம். ஆனால் அவள் பார்க்கும் வேலையின் புண்ணியத்தால் அவளுக்கு சிரமமில்லாமல் முகத்தில் தோன்றும் மாற்றங்களை சடுதியாக மாற்ற முடிந்தது.
கணனியில் வேலை பார்க்கும் இவள் சில நேரம் காப்பீடு பற்றி விளக்கம் கேட்டு வரும் வாடிக்கையாளர்களிடம் மாட்டிக்கொள்ளவும் நேர்ந்திருக்கிறாள். யாரும் இருக்கையில் இல்லையென்றால் அந்த வேலையையும் பார்த்து தானே ஆகா வேண்டும் என்று இவள் விளக்கம் கேட்பவர்களுக்கு தானாகவே முன் வந்து விளக்கமளிப்பாள். அவர்கள் கேட்கும் கேள்வியில் இவள் இரத்த அழுத்தம் எகிறி குத்தித்து முகம் அதை பிரதி பலித்து விடும், மேனேஜர் கூட இப்படி வாடிக்கையாளர்களை ஹாண்டல் பண்ணாதே என்று கடுமையாக சொல்லி இருக்கிறார். அதனாலயே அவள் அவளை கட்டுப்படுத்த முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறாள். அது இன்று அவளுக்கு உதவி இருக்க, இந்திரா குழிப்பணியாரம் கொடுத்து அனுப்பியதும், சக்தியை தனியாக சந்திப்பதை விட குடும்பத்தோடு சந்தித்தால் தனக்கு கொஞ்சம் மனதைரியம் ஏற்படும் என்றுதான் வந்தாள்.
வந்தவளுக்கு கேட்க கிடைத்த அதிர்ச்சியான விஷயம் சாதாரண விஷயமா? இவர்களை ஒருவழி பண்ண வேண்டாமா? தன்னை யாரும் கவனித்து விடக் கூடாது என்றுதான் மின்தூக்கியின் சத்தம் கேட்டதும் அப்பொழுது படியில் ஏறி வருவது போல் வந்தவள், தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் தானே காபி போட சென்றாள்.
குழிப்பணியாரம் தீர்ந்த பின்தான் சக்திக்கு கௌஷி முழுசாக கண்ணில் பட்டாள்.
“ஹோய் கௌஷி எப்படி இருக்க? உடம்பு சரியாகிருச்சா?” அவன் கொஞ்சம் கிண்டல் தொனியில் தான் கேட்டான். பெற்றோர்கள் இருந்ததனால் அடக்கியே வாசித்திருக்க,
“எனக்கு என்ன அத்தான். நான் ஜம்முனு இருக்கேன். அத்தைய பார்த்ததும் காய்ச்சல் போயிருச்சு. அவங்க சூப் வச்சி கொடுத்ததும் பாருங்க, உடம்பு சோர்வு கூட பறந்து போச்சு. சும்மா சொல்லக் கூடாது அத்தையோட கைப்பக்குவம் தனிதான். நீங்க இப்படி ஆரோக்கியமா இருக்குறதுக்கு காரணமே அத்தைதான் போங்க” சாம்பவியை புகழோ புகழ சாம்பவி உச்சி குளிர்ந்து போனாள்.
“என்ன இவளுக்கு காத்து கருப்பு ஏதும் அடிச்சிருச்சோ? எங்கம்மாவை புகழுறா? ஏதோ சரியில்லையே? என்னவா இருக்கும்.
“இவ இங்க வந்ததே அபூர்வம். வந்ததும் இல்லாம இவ்வளவு பேசுறா? என் மேல கோபம் போச்சா? அத்தான்னு பாசமா வேற பேசுறா? என்ன விஷயமா இருக்கும்? ஷக்தி மைண்ட் வாயிசிலையே மண்டையை பிச்சிக் கொண்டவாறே கௌஷியை கவனித்தான்.
இப்போ அத்தான் அப்பொறம் ஆப்பு என்றறியாது கௌஷி வந்ததே சந்தோசம் என்றெண்ணலானான்.
“அத்த இங்க இருக்குறவரைக்கும் நானும் அத்த கையாலையே சாப்புடுறதா டிசைட் பண்ணிட்டேன். எப்படியும் மதியத்துக்கு அத்தானுக்கு ஆபீசுக்கு சாப்பாடு வந்துடும் அப்போ எனக்கும் சேர்த்து அனுப்பிடுங்க, காலைல நான் இங்க வந்து சாப்பிட்டு அத்தான் கூட ஆபீஸ் போகிறேன். இரவைக்கு எல்லாரும் ஒண்ணாகவே சாப்பிடலாம்” கௌஷி சாம்பவியை பேசவிடாது பேசி முடித்தாள்.
“அதுக்கு என்னம்மா… நானே பொழுது போகாமத்தான் இங்க இருக்க போறேன். உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வரும் சாக்குல கொஞ்சம் ஊர சுத்தி பாத்துக்கிறேன்” என்று சிரித்தார் கபிலர்.
“ஆகா எங்கம்மா இவளுக்கு சமைச்சி போடணுமா? என்ன திட்டம் போடுறா?” என்று சிந்தித்தவனுக்கு அன்னையோடு பேசியதை அவள் கேட்டிருப்பாள் என்று தோன்றவே இல்லை.
கணவனை முறைத்தவாறே அமர்ந்திருந்தாள் சாம்பவி.
  “குழிப்பணியாரம் எப்படி இருக்கு மாமா?” சாம்பவியை பாராது கேட்டாள் கௌஷி.
“என்னம்மா கேள்வி இது எவ்வளவு ருசி தெரியுமா? உங்கம்மாக்கு அப்படியே அண்ணி கைப்பக்குவம்தான். நா எத்தனை தடவ சாப்பிட்டு இருப்பேன். அண்ணி சமச்சங்களா? உங்க அம்மாவா? என்று நானே குழம்பிப் போவேன். ஆனா இன்னைக்கி அந்த குழப்பம் எல்லாம் இல்ல”
இந்த பதிலுக்காகத்தான் கௌஷி இந்த கேள்வியையே கேட்டாள். யாரிடம் கேட்டாள் என்ன பதில் கிடைக்கும் என்று அவளுக்கு தெரியாதா?
குழிப்பணியாரம் என்றால் சக்திக்கு மட்டுமல்ல பிரணவ்வுக்கும் உயிர். சந்திரா எவ்வளவு செய்து கொடுத்தாலும், “போம்மா… நீ என்னதான் பண்ணாலும் சித்தி பண்ணுறது போல இல்ல” என்று குறை சொல்வான். அதற்கு காரணம் அதை சாக்காக வைத்து சித்தியின் வீட்டுக்கு சென்று வருவதே.
இதை அறியாத இந்திராவோ பிரணவ்வுக்காக குழிப்பணியாரம் செய்து கௌஷியின் கையில் கொடுத்து விடுவாள். அங்கு வரும் கபிலர் சாப்பிட்டு பெரியம்மாவை புகழ், அது இந்திரா செய்ததாக சந்திர சொல்லிச் சிரிப்பாள். இதை வைத்தே அவரிடம் கேட்டு சாம்பவிக்கு குழிப்பணியாரம் செய்தது நானில்லை என்று சொல்லாமல் சொல்லியவள் “அத்தான் கொஞ்சம் வாரீங்களா உங்க கூட பேசணும்” என்றவாறு எழுந்து செல்ல, சாம்பவி குளியலறைக்கு ஓடி இருந்தாள்.
  சக்திக்கும் கௌஷியிடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தது அவளே அழைக்கவும் அவள் பின்னால் ஓடி வந்தவன் அவள் மின்தூக்கியில் நுழையவும் “ஹோய் நான் இன்னும் குளிக்கல துண்டோடு எப்படி வராதாம்?” என்று கத்த
“குளிச்சிட்டு பொறுமையா வாங்க அத்தான். ஒன்னும் அவசரமில்லை” சிரித்தவாறே அவனுக்கு விடை கொடுத்தவள் முகம் மின்தூக்கியின் கதவு மூடப்பட்டதும் மாறியது.

Advertisement