Advertisement

அத்தியாயம் 11
அழைப்பு மணி அடிக்கவும் “கதவு திறந்துதான் இருக்கு உள்ளவா கௌஷி” உள்ளே இருந்து குரல் கொடுத்தான் ஷக்தி.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் இருவரும் சினிமாவுக்கு செல்லலாம் என்று தீர்மானித்திருக்க, கௌஷி தயாராகி சக்தியை தேடி அவன் வீடு வந்திருந்தாள்.
கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவளும் குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்க, “இன்னுமா குளிக்கிறான்?” என்றவாறே சோபாவில் அமர்ந்து ஒரு மேகசினை புரட்டலானாள்.
மூன்று நிமிடங்கள் கடந்த நிலையில் துண்டோடு தலையை துவட்டியவாறே அவள் முன் நின்ற ஷக்தி “ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு துணி மாத்திட்டு வந்திடுறேன்” என்றவன் அங்கேயே நின்று தலையை துவட்ட அவனை அப்படி ஒரு கோலத்தில் கண்டவள் முதலில் அதிர்ந்து பின் தலையை குனிந்து கொண்டாள்.
சின்ன வயதில் அவனை ஆடையில்லாமல் கண்டிருக்கிறாளா? நியாபகம் இல்லை. அவளுக்கு நியாபகம் தெரிந்த நாள் முதல் அவன் மேலாடை இல்லாமல் இருந்ததும் இல்லை.
ஷக்தி இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகின்றது. அவளும் எத்தனையோ தடவை அவன் இருக்கும் பொழுதும், தனியாகவும் சுத்தம் செய்ய வந்திருக்கிறாள். இப்படி ஒரு சூழ்நிலை உருவானதே இல்லை. என்னதான் கணவனாக இருந்தாலும் சக்தியை இப்படி ஒரு கோலத்தில் கற்பனை கூட பண்ணிப் பார்த்திராதவளுக்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாளுவதென்று சிறு தடுமாற்றம் தோன்ற பேச்சற்று அமைதியானாள்.
இதே சக்தியோடு பெரியம்மா வீட்டில் பதினாறு நாட்கள் ஒன்றாகத்தான் இருந்தாள். அப்பொழுது அவனை ஒரு தடவையாவது மேலாடை இல்லாமல் பார்க்கவில்லையா?  அவன் குளித்து விட்டு துண்டோடு வீட்டுக்குள் வந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அவனை பார்க்கத்தான் கௌஷி இல்லையே அவள் பெரியம்மாவோடு அறையில் அல்லவா இருந்தாள். அவனை அங்கு அப்படி பார்த்திருந்தாலாவது சகஜமாக இருந்திருப்பாள்.
ஏன் வெற்றியை அவள் மேலாடை இல்லாமல் பலதடவைகள் பார்த்திருக்கின்றாள். அது அவன் அவர்களோடு ஓடையில் குளிப்பான். சின்ன வயதில் இருந்தே சாதாரணமாக பழகியதில் வெற்றியை அவ்வாறு பார்த்ததில் ஏற்படாத மாற்றம் இவர்களோடு ஒட்டாத சக்தியை பார்த்தில் உள்ளுக்குள் ஏற்பட ஆரம்பித்திருந்தது.
“சினிமா பார்த்துட்டு அப்படியே வெளியே எங்கயாச்சும் போய் சாப்பிட்டு பீச் போலாமா? இல்ல பார்க் போலாமா? இல்ல வேற எங்கயாவது போலாமா?” அவளிடமிருந்து பதில் வராது போகவே தலையை துவட்டுவதை நிறுத்தியவன் என்னவென்று பார்கலானான்.
கௌஷி முகம் சிவந்தவாறு தலை குனிந்து அமர்ந்திருந்த தோற்றமே என்ன விஷயம் என்று சக்திக்கு புரிய, அவளை சீண்டவேன்றே அவளருகில் சென்று ஒட்டி அமர்ந்து கொண்டவன் மீண்டும் அதே கேள்வியை கேட்க, குளிர்ந்த அவன் தேகம் தீண்டியதில் விதிர்விதிர்த்து போனவளாக துள்ளி எழப்போனவளை இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டது மட்டுமல்லாது அவள் இடையோடு கையையும் போட்டு இறுக்கி இருந்தான்.
“என்ன பண்ணுறீங்க விடுங்க?” கௌஷி அவன் முகம் பார்க்கவே இல்லை. கையிலிருந்த மேகசினை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தாள்.
“என்ன கௌஷி ஹஸ்கி வாய்ஸ்ல எல்லாம் பேசுற? உனக்கு இப்படி எல்லாம் பேச வருமா?” குனிந்திருந்தவளின் முகம் பார்க்க முயன்றான் ஷக்தி.
“முதல்ல போய் டிரஸ் மாத்திட்டு வாங்க அத்தான்” என்றாள் இவளும் முகத்தை இவனுக்கு காட்டாமல். 
“சரி என்ன பாரு. அதுக்கு எதுக்கு அங்குட்டு பார்த்து யார்கிட்டயோ சொல்லுற. என்ன பார்த்து சொல்லு” கிண்டல் சிரிப்பை உதிர்க்க, அவனை பார்த்து முறைத்த கௌஷி கையிலிருந்த மேகஸினால் அவனை அடிக்க முயன்றாள். 
“என்ன முறைக்கிற தலையை துவட்டி விடு” என்றவனோ அதை லாவகமாக ஒற்றைக் கையால்பற்றி அப்புறப்படுத்தி இருந்தான்.
“முதல்ல கைய எடுங்க” அவள் இடுப்பில் பின்னி இருந்த அவன் கையை இழுக்க அவள் படபடப்பு குறையவே இல்லை.
“நீ முதல்ல தலையை துவட்டி விடு” குழந்தையாய் மாறி அவள் நெஞ்சில் சாய்ந்தவன் இரு கையாலும் அவள் இடையை கட்டிக்கொள்ள, அவளின் இதயத்துடிப்புதான் கண்டமேனிக்கு தாளம் போட ஆரம்பித்திருந்தது.
அதை அவள் நெஞ்சில் சாய்ந்திருக்கும் அவனுக்கும் கேட்டிருக்க, “ஹோய் எதுக்கு இப்படி பயந்து நடுங்குற? நா இப்போ உன்ன என்ன பண்ணிட போறேன்?” என்று அவள் முகத்தை இழுத்து தன் புறம் திருப்பிக் கேட்க, கௌஷிதான் முழிக்கலானாள். 
அவள் தடுமாற்றமும், அவன் தொடுகையால் அவள் மேனியில் ஓடி மறையும் சிலிரிப்பும் அவனுக்கு உட்ச்சாகத்தை கொடுக்க, “நான் உன்ன ஒண்ணுமே பண்ணல. கிஸ் கூட பண்ணலையே” என்றவனோ அவளை இழுத்து அவளது இதழ்களை கவ்வி இருந்தான்.
ஷக்தி அவளை முத்தமிட வேண்டும் என்று நெருங்கவில்லை. சீண்டவென்று நெருங்கியவனுக்கு அவர்களுக்கேயான தனிமையும், நெருக்கமும், கௌஷியின் பதட்டமும் அவனை தூண்டி இருந்தது.
சற்றும் யோசிக்காது அவளை தன் புறம் இழுத்தவன், அவளது அகல விரிந்த விழிகளில் மயங்கி கள்ளுண்ட வண்டாக, முத்தமிடலானான்.
கௌஷி சக்தியின் முத்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளே அவனைக் கண்டால் ஓடிச்சென்று கைகோர்ப்பாள். தோளில் சாய்வாள். அதுவரைக்கும்தான் அவளது நெருக்கம் இருந்ததே ஒழிய, இதெல்லாம் தாங்கள் ஒன்று சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தாள் அதற்கு காரணமும் சக்திதான். அவன் இவளை கன்னத்தில் கூட இதுவரை முத்தமிட்டதில்லை.
பூச்சூடும் போது கூடு கௌஷியின் இதயம் படபடக்கும், கண்களை மூடிக்கொள்வாள். ஆனால் ஷக்தி கருமமே கண்ணாக பூவை சூடி விட்டு விலகி விடுவான்.
“ஒரு முத்தம் கூட கொடுக்க மாட்டானா? சரியான கஞ்சன்” என்று மனதில் அவனை வசை பாட ஆரம்பித்தவளின் மனசாட்ச்சி “ஏன் நீ கொடுக்க வேண்டியது தானே” என்று கேட்ட போதுதான் “ரொம்ப கட்டுப்பாடா இருக்காரு போல. நாமதான் ரொம்ப எதிர்பார்க்கின்றோம்” தன்னையே நொந்துகொள்வாள்.
அதனால் இன்று இப்படி நிகழும் என்று அவள் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்தவளுக்கு அவனிடமிருந்து விலகக் கூட தோன்றவில்லை.
அவள் இசைந்துக் கொடுப்பதாக சக்தி மேலும் முன்னேறி அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டவாறே அவன் கைகளும் அவள் மேனியில் ஊர்வலம் போக, அவளின் பெண்மை விழித்துக்கொண்டு அவனிடமிருந்து திமிறி விலக முயன்றாள். 
“ப்ச் என்னடி..” பெண்ணவளின் விருப்பமின்மை அவனுக்கு கோபத்தோடு எரிச்சலையும் கொடுத்திருந்தது.
“இல்ல. இன்னும் நாலு மாசத்துக்கு இதெல்லாம் கூடாது தீட்டு…” திக்கித் திணறி சொன்னவள் “நான் கீழ இருக்கேன். நீங்க வாங்க” அவனது பதிலையும் எதிர்பாராது அவனை தள்ளி விடாத குறையாக எழுந்து சென்றவள், கதவை திறந்துக்கொண்டு வெளியேற
“நல்லா வச்சானுங்க, சாங்கியம், சம்பரதாயம்னு. இவளுக்கும் அதெல்லாம் சரியா இப்போதான் நியாபகம் வரணும். கூறுகெட்டவ” தன்னால் கௌஷியை மட்டும்தான் வசை பாட முடியும் என்ற தைரியத்தில் அவளை வசை பாடியவாறே தயாராகி கீழே சென்றான்.
கீழே வண்டியின் அருகே வந்து நின்ற கௌஷிக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை. நடந்ததையே நினைத்து நாணப் புன்னகையில் மிதந்து கொண்டிருந்தாள்.
“என்ன கௌஷி சண்டே அதுவுமா ஊர் சுத்த போய்ட்டிங்க போல” கிரிஜாவின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள், அவள் பார்வையில் இருந்த க்ரோதம் கண்டு அமைதியாக புன்னைத்தாள்.
“கொடுத்து வச்சவடி நீ. புதுசா கல்யாணம் பண்ணவங்க கூட இப்படி என்ஜோய் பண்ண மாட்டாங்க. கல்யாணம் பண்ணி ஆறு வருஷம் கழிச்சு உனக்கு வந்த வாழ்வ பாரேன்” கோபத்தில் குத்திக் பேசலானாள்.
“ஆமாக்கா சில தரித்திரம் புடிச்சதுங்களுக்கு வாழ்க்கைல எந்த நன்மையையும் நடக்குறது இல்ல. ஏன்னா அதுங்களும் சந்தோசமா இருக்குறது இல்ல. அடுத்தவங்க சந்தோசமா இருக்குறத பார்த்து பொறுக்குறதும் இல்ல பாருங்க” கௌஷி சூடாகவே பதில் சொல்ல, தான் என்ன சொன்னாலும் அமைதியாக கேட்கும் கௌஷியா இவள் என்று அதிர்ந்த கிரிஜா அடுத்து என்ன பேசுவது என்று தடுமாறும் பொழுது மின்தூக்கியிலிருந்து வெளிப்பட்டான் ஷக்தி.
“என்ன ஏதாவது பிரச்சினையா?” என்று ஷக்தி கௌஷியிடம் கண்களாளேயே வினவ “மறுப்பாக தலையசைத்தவள்
“சரிக்கா உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேல இருக்கும் நாங்க கிளம்புறோம்” என்று அவளை கண்டுகொள்ளாது சக்தியோடு கிளம்பினாள்.
கௌஷி யார் மனமும் புண்படும்படி பேசுபவல்ல ஏனோ கிரிஜாவை தள்ளியே வைக்க இப்படி பேசுவதுதான் சரி என்று தோன்ற பேசி இருந்தாள்.
கிரிஜாவை சந்தித்தபின் கௌஷியின் மனநிலை முற்றாக மாறி இருந்தது. சக்தியும் அவள் தன்னைக் கண்டால் நாணிக் கோணி முகம் காட்ட மறுப்பாள் என்று எதிர்பார்க்க, கௌஷியின் இயல்பான பேச்சே அவள் மீண்டு விட்டாள் என்று புரிய அவனும் சாதாரணமாக பேசலானான்.
மூன்று மாடிகளைக் கொண்ட மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் என்பதனால் மற்றுமன்றி அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு கூட்டம் அலை மோதியது. அங்கு கேன்டீன் வேறு இருந்ததால் அதற்க்கு தனி க்யூ இருக்கவே,
“ஏதாச்சும் வாங்கிட்டே உள்ள போலாம்னு பார்த்தா இப்படி வரிசை கட்டுதே! என்ன பண்ணுறது?” ஷக்தி கூட்டத்தைக் கண்டு இன்று வந்திருக்கக் கூடாதோ என்று கூட எண்ணினான். எண்ணியது உண்மை இன்று வந்திருக்கவே கூடாதபடி இன்றைய நாள் அமையப்போவதை அவன் அறியவில்லை.   
“எனக்கு இப்போவே கண்ணக் கட்டுது. ஒன்னு பண்ணுங்க, நீங்க டிக்கட் வாங்க வரிசைல நில்லுங்க, நான் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்” கௌஷி அவன் பதிலை எதிர்பாராமல் வரிசையில் நிற்க, சக்தியும் சிரித்தவாறே டிக்கட்டுக்கான வரிசையில் நின்றான்.
கீழ் மாடியில் குழந்தைகளுக்கான எதோ ஒரு கார்ட்டூன் படம், இரண்டாம் மாடியில் தமிழ் படம் மூன்றாம் மாடியில் ஹாலிவுட் படம் என்று டிக்கட்டுக்கான வரிசைகள் இருக்க, ஷக்தி இரண்டாம் வரிசையில் நின்றிருந்தான்.
“டேய் விஷயம் தெரியுமா? சைனால எதோ ஒரு மர்மமான நோய் பரவிக்கிட்டு வருதாம்” ஆங்கிலப் படத்துக்கான வரிசையில் நின்றிருந்த ஒரு வாலிபன் சொல்ல,
“ஆமாடா அவனுக்கு எதையும் விடுறதுல்ல, கண்ட கண்ட பூச்சியெல்லாம் சாப்புடுறானுங்க, வவ்வால சாப்பிட்டு தொலைச்சி எதோ வைரசுனு நியூஸ்ல சொல்லி கிட்டு இருந்தாங்க”
எங்கோ ஒரு நாட்டில் என்றதும் சாதாரண செய்தியாக பார்க்கப்படும் ஒன்று தங்களது நாட்டுக்குள் புகுந்து எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்று அறியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்க, அதனால் ஏற்படப்போகும் உயிர் பலிகளின் எண்ணைக்கையை அறியாமல் சக்தியும் அதை ஒரு செய்தியாக காதில் வாங்கிக் கொண்டு வரிசையில் முன்னேறிக் கொண்டிருந்தான்.
“இரு பாப்பா டிக்கட் வாங்கிட்டு போய் சாப்பிட பாப்கார்ன் வாங்கிக்கலாம். வாங்கிக்கிட்டுதான் உள்ள போறோம். டிக்கட் வாங்கினா தானே படம் பார்க்க முடியும்” பக்கத்து வரிசையில் தனது நான்கு வயதான குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் அந்தப்பெண்.
தனக்கு மிகவும் பரிச்சயமான குரல் என்று நினைத்தவாறே ஷக்தி அந்த பெண்ணை பார்க்க சற்று பூசினால் போல இருந்த அவளது முதுகுப்புறம்தான் தெரிந்தது.
“யாரிவ?” என்ற யோசனையினையிலையே பார்வையை குழந்தையிடம் செலுத்த அந்த முகம், அதே முகம் அது ஓவியாவின் முகம். “ஓவியாவா?” தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டவன்.
சென்று பேசலாமா? வேண்டாமா? என்று யோசிக்கையில் அவளே இவன் புறம் திருப்ப இவனை கண்டு கொண்டவள் முகத்தில் சந்தோஷமோ, தூக்கமோ இல்லை. அந்நியப்பார்வைதான்.
இவனை கண்டவள் முதலில் தனது மையிட்ட பெரிய கண்களை சுழற்றி பார்த்தது அவன் அருகில் யார் இருக்கிறார்கள் என்றுதான்.
அவள் பார்த்ததும் இவன் “ஹாய்” என்று கையசைக்க முகத்தையெல்லாம் சுளிக்கவில்லை.
புன்னகைத்தவள் கேட்ட கேள்வி “இன்னும் தனியாவா இருக்க ஷக்தி” என்பதுதான்.
அந்த கேள்விக்குள் வலி, வேதனை, க்ரோதம் எல்லாம் அடங்கி இருந்ததை ஷக்தி உணரவில்லை உணர்ந்திருந்தால் அவளிடம் பேச்சுக் கொடுத்திருக்க மாட்டான்.
“இல்ல. நான் என் கௌஷியோட சேர்ந்துட்டேன். தேங்க்ஸ் டு யு ஓவியா. நீ மட்டும் அன்னைக்கி எனக்கு புரிய வச்சிருக்காம இருந்தா. நான் என் கௌஷியா இழந்து உன் கூட பொய்யான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்” ஷக்தி காதலோடு சொல்ல, அவன் கண்களில் கௌஷிக்கான காதலைக் கண்டு உள்ளுக்குள் கொதித்தாள் ஓவியா.
ஓவியா சக்திக்கு பக்கத்து ஊருதான். கபிலரருக்கு தூரத்து சொந்தமும் கூட, வீட்டுக்கு ஒரே பெண். செல்ல மகள். அவள் வைப்பதுதான் சட்டம்.
கல்லூரியில் தன்னை சுற்றி வருபவர்களை விசாரித்ததில் சக்திதான் தங்களது இனத்திலும், செல்வத்துக்கும் பொருத்தமானவன் என்று அறிந்துதான் அவன் காதலுக்கு சம்மதம் சொன்னாள்.
இறுதியாண்டு என்பதால் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தவளுக்கு சக்திக்கு நடந்த திருமணம் தெரிய வரவில்லை. சக்தியும் கௌஷியை விவாகரத்து செய்து ஓவியாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்து விட்டான்.
ஆனால் ஸ்டடி லீவு ஊருக்கு சென்ற ஓவியாவுக்கு சக்திக்கு திருமணமான விஷயம் தெரியவரவும் வெகுண்டாள். என்னதான் செல்வம் கொட்டிக் கிடந்தாலும், ஒரே ஜாதியாக இருந்தாலும் இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டியவன், எனக்கு கணவனா? ஒருனாலும் முடியாது என்ற மனப்பாங்கில் இருந்தாள் ஓவியா.
அவளுக்கு இரண்டாவது என்ற வார்த்தையே பிடிக்காது. அப்படி இருக்கும் பொழுது ஷக்திக்கியின் இரண்டாம் தாரமாக காலா காலத்துக்கு வாழ்வாள் என்று அவன் எப்படி நினைத்தான், அவனுக்கு தண்டனை கொடுக்க, தந்தையிடம் தனக்கு மாப்பிளை பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி கூறியவள் திருமணமும் செய்து கொண்டுதான் பரீட்ச்சை எழுதவே சென்றாள்.
தாலியோடும், நெற்றி வகுத்தில் குங்குமத்தோடும் வரும் ஓவியாவை கண்டு அதிர்ந்த ஷக்தி கதறாத குறையாக, காரணம் கேட்டு நிற்க,
“உனக்கும் தான் கல்யாணம் ஆச்சு ஷக்தி நீயும் அந்த பொண்ண ஏத்துக்கிட்டு வாழு. அதுதான் உனக்கு நல்லது. இதுதான் நமக்கு கடவுள் விதிச்சது. யாருக்கு யாருன்னு கடவுள் போட்ட முடிச்ச நம்மால மாத்த முடியாது. அந்த பொண்ணு கண்ணீருல நாம சேர்ந்து வாழ முடியாது ஷக்தி. உனக்காகத்தான் இந்த முடிவு” வஞ்சத்தை தனக்குள் அடக்கியவள் நல்லவளாக பேச
ஷக்தி மனம் கேளாமல் “ஓவியா நீ அவசரப்பட்டிடியோனு தோணுது எனக்கு அவளை சுத்தமா பிடிக்காது. நான் அவ கூட எப்படி சேர்ந்து வாழ்வனு நினைச்சி நீ இந்த முடிவெடுத்த? இதனாலதான் நான் உன்கிட்ட என் கல்யாணத்த பத்தி சொல்லாம மறைச்சேன். நான் பயந்தா மாதிரியே ஆகிருச்சு” தொண்டை அடைக்க, குரல் கமர பேசுபவனை ஆயாசமாக பார்த்திருந்தாள் அவள்.
“நீதான் நான் சொல்லுறத புரிஞ்சிக்க மாட்டேங்குற ஷக்தி. எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. என்ன மறந்துடு” அழுதவாறே செல்லும் ஓவியாவை  வெறுமையோடு பார்த்திருந்தான். 
அன்றுதான் ஷக்தி ஓவியாவை கடைசியாக பார்த்தது. அவள் திருமணமாகி சென்னையில் இருப்பது தெரியும். எங்கு இருக்கிறாள் என்று தெரியாது. அறிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை.
காதல் தோல்வியில் கொஞ்சம் காலம் துவண்டான். ஓவியா தனக்கில்லை என்று மீண்டு வரவே அவனுக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்க, பிடிக்காத கௌஷியை ஏற்றுக்கொள்ள நான்கு வருடங்கள் தேவைப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.   
ஓவியாவின் எண்ணமெல்லாம் தனக்கு கிடைக்காத ஷக்தி, தன்னை ஏமாற்றிய ஷக்தி காலத்துக்கும் தனி மரமாக தன்னை நினைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதே! அதுதான் அவள் அவனுக்கு கொடுக்கும் தண்டனையாக எண்ணி வேறொருவனை திருமணம் செய்திருந்தாள். ஆனால் இன்று அவன் மனைவியோடு சேர்ந்து விட்டானாம். பிடிக்காதவள் என்று சொல்லிவிட்டு சேர்ந்து விட்டதாக சொல்கின்றான். அதுவும் காதலோடு சொல்கின்றான். எப்படி இருக்கும் அவளுக்கு? எரியாதா?
“ரொம்ப சந்தோசம் ஷக்தி. ஆமா எங்க உன் வைப்” வார்த்தைகளில் இருந்த அக்கறை உள்ளத்தில் கொஞ்சம் கூட இல்லை. யார் அவள் பிடிக்கவில்லை என்றவனை வசியம் செய்த மேனகை? என்று கண்களால் அலசலானாள்.
“யாரு அத்தான் இவங்க?” என்றவாறு அங்கே வந்தாள் கௌஷி கையில் பாப்கோர்னோடு. 
“ஓஹ்… இவதானா அது அத்தான் பொத்தானுக்கிட்டு” மனதுக்குள் பொறுமியவள் “என்ன தெரியலையா? என்ன பத்தி ஷக்தி சொல்லி இருப்பான்னு நினச்சேன். நான் ஓவியா ஷக்தியோட எக்ஸ் லவர். நீதான் ஷக்தி வைப்பா. பிடிக்காம உன் கழுத்துல தாலி கட்டினதா சொன்னான். உன்ன பிடிக்காமத்தான் என்ன தேடி வந்தான். நா வேணான்னு சொன்னதும் உன்ன தேடி வந்துட்டான்” என்று சிரித்தாள். அவள் சிரிப்பு சொன்னது ஷக்தி “இந்த ஓவியாவை நீ என்னைக்கும் மறக்க மட்ட” என்று இதற்கிடையில் அவள் குழந்தையோ கௌஷியின் கையிலிருந்த பாப்கோர்னைட் கண்டு அடம் பிடிக்கலானது.
“நான் உனக்கு வேற வாங்கி தரேன் டி செல்லம் யாரோ சாப்பிட்டது நமக்கு எதுக்கு? கண்டவங்க வாய் வச்சதெல்லாம் நாம சாப்பிடக் கூடாது” என்றவள் கௌஷியை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்த்து விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.
கௌஷிக்கு சுருக்கென்றானது. “என்ன சொல்லிட்டு போறா? என்ன எச்சில் இலைல சாப்பிடுறவனு சொல்லிட்டு போறாளா?” ஒரு நொடி அதிர்ந்தவாறே சக்தியை ஏறிட்டவள் அவனை முறைக்க, அவனோ புரியாது முழித்தான்.
கௌஷியின் விழிகளை மூடித்திறந்து, இமைகள் பல தடவைகள் படபடத்ததைதான் ஷக்தி கண்டான். ஆனால் அவள் மனதின் ஓட்டம் மின்னல் வேகத்தில் இருந்ததை அவன் உணரவில்லை.
“கௌஷி, கௌஷி” என்று அவளை அழைத்தவாறு அவன் இருந்தான். 
“தன்னையா சொன்னாள். அவளை காதலித்த சக்தியை தான் வைத்திருப்பதாக குத்திக் காட்டி விட்டு செல்கிறாளா? இவளால்தான் இவன் திருமணத்தை ரத்து செய்ய பிடிவாதமாக இருந்தானா? அன்னைக்கி மண்டபத்துல அத்தனை பேர் முன்னிலையிலும் நாம அவமானப்பட்டு நின்னப்போ அப்படியொரு கேலிப் புன்னகையை உதிர்த்து விட்டு போனதுக்கு பின்னால இருக்குற காரணம் இவளோட காதலா?” எல்லாம் கடகடவென நியாபகத்தில் வரவும் சக்தியை எரித்து விடுவது போல் பார்த்த கௌஷி பாபிகார்னை அவன் மூஞ்சியில் விசிறியடித்து விட்டு விறுவிறுவென கிளம்பி இருந்தாள்.
ஒரு கணம் என்ன நடந்தது என்று சக்திக்கு புரியவில்லை. ஓவியா நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள். பின் ஏன் அவ்வாறு சொன்னாள். கௌஷி ஏன் கோபம் கொண்டாள். குழப்பத்தில் கௌஷியின் பின்னால் ஓடி இருந்தான்.   
கோபமாக நடக்கும் மனைவியை சில எட்டுக்களில் தடுத்து நிறுத்தியவன் “என்ன ஆச்சு கௌஷி. இப்போ எதுக்கு கோபமா போற? நாம வந்தது படம் பார்க்க”
தான் பருவத்தில் காதலித்தது குற்றமில்லை. அதை மறைத்தது கூட குற்றமில்லை என்பது போல் ஷக்தி பேச எரிமலை குழம்பாக அவனை ஏறிட்டவள் “நம்ம கல்யாணமன்னைக்கு இந்த கல்யாணமே வேணாம்னு போக காரணம் உங்க காதல் தானா?”
“அது…” ஷக்தி என்ன பதில் சொல்வதென்று தடுமாற,
“சொல்லுங்க” உறுமினாள் கௌஷி.
“நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளு கௌஷி. எதுனாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். ஆசையாசையா படத்துக்கு வந்தோம். இன்னைக்கி கடைசி நாள் வேற. படம் பார்த்துட்டு போவோம்” அவளை எண்ணி இவன் பேச மேலும் கொதித்தாள் இவள்.
“எப்பவுமே உங்களுக்கு சுயநலம்தான் இல்ல. உங்கள பத்தி மட்டும்தான் யோசிப்பீங்க. அன்னக்கி நாங்க அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்பட்டு நின்னப்போ உங்க காதல்தான் முக்கியம்னு போய்ட்டிங்க.
இன்னக்கி உங்க காதலி உங்களுக்கு இல்லைனு ஆனதும் என்ன தேடி வந்திருக்கீங்க. என்ன ஒரு சுயநலம் உங்களுக்கு. எல்லாம் நடிப்பு. ஊருக்காக வந்தீங்களா? நல்ல பேர் எடுக்க நடிப்பா? அவார்டா கொடுக்க போறாங்க?
எப்படி எப்படி? நான் குண்டானாதான் பார்க்க அழகா இருக்கேனா? ஏன் சொல்ல மாட்டீங்க? அவ குண்டா இருக்கா இல்ல அதான் உங்க கண்ணுல விழுந்து மனசு நிறைஞ்சி இருக்கே. அவ நினப்புலையேஎன் கிட்ட பேசுவீங்களா?” கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்று கூட புரியாமல் பொரிந்துத் தள்ளலானாள்
“ஹோய் என்னடி பேசுற?” வாயடைத்து போனான் ஷக்தி.
“இனி பேசுறதுக்கு என்ன இருக்கு? அதான் எல்லாம் முடிஞ்சிப் போச்சே” அவனை உதறி விட்டு பாதையில் வேகமாக நடந்து வழியில் செல்லும் ஆட்டோவில் ஏறி இருக்க, சக்திதான் தலையில் கை வைத்து நின்றிருந்தான்.

Advertisement