Advertisement

அத்தியாயம் 10
அறைக்கு வந்த சக்திக்கு தூக்கம் தொலைந்திருந்தது. கௌஷி சொன்னவைகள் அனைத்தும் உண்மை என்பதால் அவனால் மறுத்து பேச முடியவில்லை.
சாம்பவி ஒவ்வொரு தடவையும் இந்திராவை பேசும் பொழுது அவன் அமைதியாகத் தானே பார்த்திருந்தான். ஏன் திருமணத்துக்கு பின் கதிர்வேலன் வந்து எத்தனை தடவை அவமானப்பட்டு சென்றிருப்பார். ஒரு தடவையாவது அன்னையிடம் அப்படி பேசாதே என்று கூறி இருப்பானா? இல்லையே,
சில நேரம் அவன் வீட்டில் இல்லைதான். கதிர்வேலன் வந்து சென்றதும், அன்னை அவரை பேசியதையும் அவன் தந்தையின் மூலம் அறிய நேர்ந்த பொழுதும் அவன் அமைதியாகத்தான் இருந்தான். தந்தையிடம் கூட “அம்மா இப்படி பேசி இருக்கக் கூடாது” என்று கூறியதும் இல்லை. அன்னைக்கு அலைபேசி அழைப்பு விடுத்து நீ இப்படி பேசியது தப்பு இனி பேசாதே என்று கூறியதுமில்லை.
ஷக்தி ஒரு தடவை கூறி இருந்தால் போதும் சாம்பவி சக்தியிடம் எகிறி இருப்பாள் சக்தியும் அன்னையின் மீது பாய்ந்து இருப்பான். தனது செல்ல மகன் கையை விட்டு போய் விடுவானோ என்ற அச்சத்தில் சாம்பவி கொஞ்சம் அடங்கி இருப்பாள்.
இன்று அவனால்தானே சாம்பவி அடங்கி இருக்கிறாள். அவனால் தடுக்க முடிந்த ஒரு செயலை அவன் தடுக்காமல் விட்டதன் விளைவு? அதை அவன் அன்று செய்யாமல் விட்டதால் எவ்வளவு மனக்கஷ்டங்களை கௌஷியும் அவள் குடும்பமும் அனுபவித்திருப்பார்கள்.
கௌஷிக்கு அவன் அன்னை மீதான மனக்கசப்பை அவனால் இந்த ஜென்மத்தில் போக்க முடியுமா என்று தெரியாது. அதற்காக அன்னையை பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருக்க முடியுமா?
மேலும் அங்கிருந்தால் பேச்சு வார்த்தை முற்றி சண்டையில்தான் முடியும் என்று நன்கு புலப்பட்டதால் அமைதியாக கிளம்பி வந்திருந்தான்.
அவனும்தான் நடந்தவற்றை மாற்ற முயற்சிக்கின்றான். வந்த அன்றே ஆபீசில் ஒரே போடாக அவனது பேச்சால் அனைவரையும் கவர்ந்து விட்டான். அதே போல் சிந்தித்து கதிர்வேலனின் குடியிருப்பு தலைவரை சந்த்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அவனால் நடந்தவற்றை அவளுக்காகதான் சரிசெய்ய முயற்சிக்கின்றான். இந்த கௌஷி ஏன் புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய மறுக்கின்றாள். என்ற கோபம் கூட வந்தது.
“கோபம் வந்தா டக்கு டக்குனு ஒருமைல பேசுறா… இல்லனா மரியாதை மனசரிஞ்சி வருதா? வாய் வார்த்தையா வருதான்னு தெரியாத அளவுக்கு கொடுக்குறா. இவள வழிக்கு எப்படி கொண்டு வர்றதுனு தெரியல”
“என்னடா தலைல கைய வச்சி அமர்ந்திருக்க? நாளைக்கு எப்படி என் வண்டிய ஆட்டைய போடுறதுனு யோசிக்கிறாயா?” அறைத்தோழன் சந்தோஷ் வந்து நிற்கவும்
“நான் எதுக்கு ஆட்டைய போடணும். நண்பன் நீ கேட்டா கொடுக்க போற” ஷக்தி அவன் தோளில் கைபோட
“அட சி… கைய எடு… ஒரு வாரம்தான் என் ரூம்ல தங்குறதா சொன்ன நியாபகம் இருக்கட்டும். நாளைல இருந்து உனக்கு போக ரெண்ட்டுக்கு வண்டி ஏற்பாடு பண்ணி இருக்கேன். எனக்கு தெரிஞ்ச இடம் என்கிறதால காசு கூட வாங்கல. வண்டி வெளிய நிக்குது. இந்தா சாவி” என்று சாவியை கொடுத்தவன். “இங்க பாரு… உன் பொண்டாட்டி கூட சேரனும் அது இது என்று பேசினதாலதான். தங்க அனுமதி கொடுத்தேன். உன்னால என் சுதந்திரம் போச்சு. சீக்கிரம் வேற ரூம் பார்த்து போய்டு. என்ன கேட்டா உன் பொண்டாட்டி இருக்குற பிளாட்டுக்கே போ… வண்டி வேற வாங்கணும்னு சொன்னியே வாடகைக்கு எடுத்த இடத்துலே வாங்கிக்கலாம். செகன்ஹான்ட் வேணுமா? இல்லை புதுசு வேணுமா? வாங்கிக்கலாம்” அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டு போக,
ஷக்தி “இவனுக்கு இவன் பிரச்சினை” என்றெண்ணியவாறு பார்த்திருந்தான்.
இங்கே கௌஷி “என்ன மாப்பிள சொல்லாம கொள்ளாம போய்ட்டாரு?” என்று கேட்ட தந்தையிடம்
“அவருக்கு தூக்கம் வருது,  நீங்க தூங்கி இருப்பீங்கனு என்று அவராகவே முடிவு பண்ணி நாளைக்கு ஆபீஸ் போக வேற லேட்டாகும்னு கிளம்பிட்டாரு” என்றாள்.
“நீயாச்சும் என்ன கூப்பிட்டு இருக்கணும்மா…” கதிர்வேலன் ஷக்தி சொல்லாமல் சென்ற கவலையில் சொல்ல கடுப்பானாள் மகள்.
“ஏன் ப்பா… நான் கேக்குறேன்னு கோபப்படாதீங்க, ஷக்தி அத்தான் சின்ன வயசுல இருந்தேன் சாம்பவி அத்த மாதிரி முறிக்கிகிட்டுதான் திரிவாரு. உங்க கூடையும் சரி, அம்மா கூடையும் சரி ஒழுங்கா பேசவும் மாட்டாரு. மாப்புள என்றதும், அதுவும் ஆறு வருஷம் கழிச்சு திடிரென்று வந்து நின்றதும் இப்படி தாங்குறீங்களே, உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா? இல்ல. எனக்காக பொறுத்து போறீங்களா?”
கௌஷியின் மனதில் என்றோ முளைத்த கேள்விதான். கேட்க்க கூடாது என்று கிடப்பில் போட்டிருந்தாலும் கேட்டு விடுவதுதான் நல்லது, தனக்கொரு தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டு விட்டாள்.
“என்னடி.. நீ இப்படி பேசுற?” இந்திரா மகளை கடிய
“இந்து… அவ கேக்குறதுல என்ன தப்பு இருக்கு?” மனைவியை அதட்டியவாறு அடக்கிவிட்டு “ஷக்தி நான் பார்க்க வளர்ந்த பையன் மா… அவங்கம்மா எதுக்கு கோபப்படுறான்னு தெரியாம முறிக்கிகிட்டு இருந்தான். பேசாம இருந்தாலும் மரியாதைக்கு குறைவா என்னைக்கும் பேசினது இல்லையே.
வெற்றி அவங்கப்பா போல கலகலன்னு பேசுவான். மனிசனுங்கள மதிப்பவனா இருந்தான். கடைசில அவன் என்ன பண்ணான்? அவன் விருப்பத்துக்கு குடும்பத்தை தூக்கி எறிஞ்சிட்டு போனான். ஷக்தி அவங்கம்மா போல சிடுசிடுன்னு பேசினாலும் அவங்கம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக உன் கழுத்துல தாலி கட்டினானா இல்லையா? என்ன வெற்றி, சந்த்யா விஷயம் மட்டும் தெரிய வரலைனா அப்போ சம்மந்தியம்மா அப்படி நடந்திருக்க மாட்டாங்க, சக்தியும் அவங்க பின்னாடி போய் இருக்க மாட்டான்.
கல்யாணம் ஆகும் போது அவனுக்கும் சின்ன வயசு தானே. எது சரி? எது தப்புனு புரிஞ்சிக்கிற பக்குவம் பத்தல. கல்யாணம் என்றா என்ன? மனைவி? குடும்பம்? எல்லாம் புரிஞ்சிகிட்டு வந்திருக்கான். இப்போ போய் பழசை பேசி அவன நோகடிக்கலாமா? சொல்லு?. அதுவும் அவன் முன்ன மாதிரி இல்லையே எங்களை புரிஞ்சி கிட்டு அன்பா நடந்துக்கிறானே. வேறென்னம்மா வேணும்?”  கதிர்வேலன் பேசப் பேச மெல்ல மெல்ல கௌஷியின் முகம் தெளிய ஆரம்பித்தது.
அவளிடம்தான் சிடுமூஞ்சி சிங்காரமாக அகங்காரம் காட்டுவான் ஒழிய அவள் பெற்றோரிடம் தரக்குறைவாக பேசியதும் இல்லை. மரியாதை குறைவாக நடந்து கொண்டதுமில்லை.
“அப்போ அவனுக்கு என்னை மட்டும்தான் பிடிக்காது போல. இப்போ மட்டும் எப்படி பிடிச்சு போச்சாம்” சக்தியின் நினைவுகளுடன் உறங்கி இருந்தாள் கௌஷி.
இந்திரா பரபரப்பாக காலை உணவை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவாறு ஜாகிங் முடித்து விட்டு வந்த கௌஷி “என்னம்மா இன்னக்கி உன் மருமகன் வர்றதா சொல்லையே. என்ன பரபரப்பு வேண்டி இருக்கு மெதுவா செய்” என்று கிண்டல் செய்ய,
“மெதுவா பேசு டி… மாப்புள உள்ளதான் இருக்காரு” இந்திரா மகளை அதட்ட
“என்ன?” என்ற கௌஷி கண்களை அகல விரித்தாள்.
அவள் நேற்று பேசிய பேச்சுக்கு அவன் வீட்டுப்பக்கம் வர மாட்டான் என்று என்று எண்ணி இருந்தாள். அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்ற சிந்தனையில் இவள் இருந்தால் அவனோ இவளுக்கு முன்னால் காரியாலயம் செல்ல தயாராகி இங்கு வந்து விட்டானா?
அவள் திட்டியது கொஞ்சம் கூட பாதிக்கவில்லையா? அல்லது அதை கண்டுகொள்ளவே இல்லையா? கௌஷிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் அவனை கவனிக்காதது போல் அவன் வரும் பொழுது தங்களை கவனித்திருக்க மாட்டான் அதனால்தான் நேராக வீட்டுக்கு வந்து விட்டான் இல்லையென்றால் ஜாகிங் செய்யும் அவர்களிடம் வந்து பேசியிருப்பானே! என்றெண்ணியவாறே எங்கே அவன் என்று பார்த்தால் கழிவறை கதவை திறந்துகொண்டு வெளியே வந்தது மட்டுமல்லாது அலைபேசி வேறு காதில் இருந்தது.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லமா. மூணு வேளையும் அத்த வீட்டு சாப்பாடுதான். வெளில சாப்பிட முடியல என்றதும் அத்தைய பண்ணி கொடுக்கிறதா சொல்லிட்டாங்க. ஆமா ஆமா.. கௌஷி கூடத்தான் ஆபீஸ் போறேன். இதோ அவ இங்கதான் இருக்கா பேசு” என்றவாறே வந்தவன் அவளிடம் அலைபேசியை கொடுக்க திருதிருவென முழிக்கலானாள் இவள்.
“யார் கிட்ட பேசுறான். அவங்கம்மா கிட்டயா? அப்போ அவங்களுக்கு…” அவன் பேசியது அனைத்தும் காதில் விழவும் குழப்பத்தில் இருந்தவளிடம் அலைபேசி கொடுக்கப்படவும் ஒன்றும் புரியவில்லை. 
“அம்மா பேசுறாங்க பேசு” மீண்டும் சொல்லியவாறே அலைபேசியை நீட்ட, அதை வாங்கியவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை.
“ஹலோ” என்று மட்டும் சொன்னவள் அமைதியாக, அந்தப்பக்கம் சாம்பவி மடைதிறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தாள்.
“மருமகளே என் பையன நல்லா பார்த்துக்கம்மா… அவனுக்கு வெளிய சாப்பிட்டா ஒத்துக்காது. வாரத்துக்கு மூணு நாள் வாய்க்கு ருசியா கறி, சோறா ஆக்கிப்போடு. ரெண்டு பேரும் ஒன்னாதான் ஆபீஸ் போறீங்களாமே… வண்டி வாங்க போறதா சொன்னான். டூவீலர் வாங்காம காரா பார்த்து வாங்க சொல்லு. நாளை பின்ன குடும்பம் குட்டின்னு ஆனா, போக வர வண்டி வேணாமா? வீடு வேற பார்க்கணும்னு சொல்லுறான். உங்க பிளாட்டுலையே நல்ல வீடா கிடைச்சா நல்லா இருக்கும் அப்பாவ கொஞ்சம் பார்க்க சொல்லுமா… பசு மாடு கத்திகிட்டே இருக்கு கண்ணு போட போகுது. சீம பால் செஞ்சி அனுப்புறேன். உனக்கு ரொம்ப பிடிக்குமாமே. அப்போ நான் வைக்கிறேன். பார்த்து பத்திரமா இருந்துகம்மா… அம்மாவ கேட்டதா சொல்லு. சரியா”
மழையடித்து ஓய்ந்தது போல் இருந்த சாம்பவியின் பேச்சில் கௌஷிக்கு தலையே சுத்துவது போல் இருக்க, ஷக்தியிடம் அலைபேசியை கொடுத்து விட்டு, அமர்ந்து விட்டாள்.
“உன் பிரச்சினைக்கு இப்போ தீர்வு கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றவன் அவளிடம் பேசாது கதிர்வேலனிடம் சென்று இந்த குடியிருப்பில் வேறு வீடு வாடகைக்கு இருக்குமா என்று விசாரிக்குமாறு பேசிக்கொண்டிருந்தான்.
தந்தையோடு பேசும் சக்தியை கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் கௌஷி. “சாமாபாவி அத்தையின் சம்மதத்தோடு தான் இங்கு வந்து செல்கின்றானா? நம்பமுடியவில்லை. ஆனால் அதுதானே உண்மை.
“அத்தையின் பேச்சு முழுக்க அப்படித்தானே இருந்தது. வாய் நிறைய மருமகளே என்று வேற கூப்பிட்டாங்க, இன்னைக்கி மழை கொட்டோ கொட்டுனு கொட்ட போகுது. அம்மாவ வேற கேட்டதா சொன்னாங்க. இந்த மாற்றமெல்லாம் எப்போலா இருந்து? எப்படி ஆச்சு” ஒன்றும் புரியவில்லை. இது நல்லதுக்கா? கெட்டதுக்கா என்றும் தெரியவில்லை. எதுவோ எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி”  என்று நிம்மதி அடைந்தவள்   
மறுகணம் உண்மை என்னவென்று அறியாமல் தான்தான் வீணாக பேசி அத்தானின் மனதை நோகடித்து விட்டேன். அன்னையை பேசியதால் பொறுக்க முடியாமல் தான் ஷக்தி அத்தான் எழுந்து சென்றிருப்பார். தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவள் தான் பேசியதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணலானாள். 
உணவுண்டவர்கள் ஆபீஸ் கிளம்பி செல்ல, சக்தியோடு செல்லும் கௌஷியை முறைத்தவாறு பஸ்தரிப்பிடத்தை நோக்கி நடந்தாள் கிரிஜா.
சக்தியின் ஆபீஸ் அறையில் மதிய உணவின் பொழுது தான் பேசியதற்கு கௌஷி மனதார மன்னிப்பு கேட்க, ஷக்தி சட்டென்று அவள் கையை பிடித்து “விடு கௌஷி…”  என்றவன் “நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்று கூற வருகையில் அவள் கையை இழுத்துக்கொண்டதில் சுதாரித்தவன் தான் மனம் விட்டு பேச வேண்டிய நேரம் இதுவல்ல என்று அமைதியானான்.
சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஷக்தி கையை பிடித்ததும் படபடவென வர கையை இழுத்துக் கொண்டவளுக்கு வெக்கம் வந்து ஒட்டிக்கொள்ள அவன் முகம் பார்க்க தயங்கி தலை குனிந்து முகத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
ஷக்தியின் யோசனைபடிந்த முகத்தை அந்த நொடி கௌஷி பார்த்திருந்தால் என்ன? ஏது? என்று விசாரித்தால் ஷக்தி மனம் திறந்திருக்கவும் கூடும்.
அடுத்து வந்த நாட்கள் கௌஷிக்கு சக்தியோடு இன்பமாகத்தான் கழிந்தது. சாம்பவி கூறியது போல் கௌஷியை அழைத்துக் கொண்டு சென்றவன் கார் வாங்கி இருந்தான்.
இருவரும் ஒன்றாகத்தான் காரில் வருவதும் போவதுமாக இருக்க, கிரிஜாவை தங்களோடு செல்ல கௌஷி அழைக்கவேயில்லை.
உண்மையில் கௌஷி கிரிஜாவை அழைக்கவுமில்லை. அழைக்க வேண்டும் என்று ஷக்தியிடம் சொல்லவுமில்லை. சுயநலம் பிடித்த கிரிஜாவின் துணை தனக்கு இனி தேவை இல்லை என்ற நிம்மதியில் அவளை பற்றி நினைக்க கூட விருப்பம் இல்லாமல் இருந்தாள்.  
தன்னை கௌஷி அழைக்கவில்லை என்று கிரிஜா ஆறாம் மாடியில் குடியிருக்கும் பருவதம் அத்தையிடமும், கீழ் மாடியில் இருக்கும் புஷ்பாவிடமும் குறை கூறி இருக்க,  கௌஷி இப்பொழுது பிரிந்திருந்த கணவனோடு சேர்ந்திருப்பதாகவும், அவர்களுக்கு நடுவில் நீ நந்தி போல் குறுக்காக இருக்கலாமா? என்று அவர்கள் அவளுக்கே புத்தி கூற ஆரம்பித்திருந்தனர்.   
அதுவும் ஷக்தியின் கைகாரியம்தான். வந்த அன்றே கௌஷியை தனது வண்டியில் அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் சிவத்தை கூட்டுசேர்த்து கௌஷியின் வண்டியை பஞ்சர் செய்தவனுக்கு
“மேடம் கிரியோட போவாங்க சார்” என்று சிவம் சொன்னதும்
“எவன்டா அவன் என் பொண்டாட்டிய கூட்டிகிட்டு வண்டில போறது” இருக்கையை தள்ளியவாறு ஷக்தி எழுந்துகொள்ள
“ஐயோ சார் கிரி என்கிறது கிரிஜா மேடம்” பதட்டத்தோடு கூறினான் சிவம்.
“அவளா.. அவ ஒரு சுயநலம் புடிச்சவ” என்றவன் இந்திராவை அழைத்து தான் கௌஷியயை அழைத்து வருவதாக கூறியதோடு தாமதமாகும் என்றும் கூறி இருந்தான்.
அதேபோல் வண்டி வாங்கிய உடனே பருவதம் அத்த, மற்றும் புஷ்பாவை பார்த்து கௌஷி கிரிஜாவையும் வண்டியில் அழைத்து செல்ல அடம்பிடிப்பதாகவும், தான் அவளோடு தனியாக செல்ல ஆசைப்படுவதை புரிந்துகொள்வதில்லை என்று வருத்தத்தோடு கூறி இருந்தான்.
கௌஷிக்கு தாங்கள் புத்திமதி கூறுவதாக அவர்கள் கூற, கௌஷியை ஏதாவது காரணம் கூறி தான் அழைத்து செல்ல முடியும் கிரிஜா ஏதாவது நினைத்து விடப் போகிறாள் என்று கவலையாக கூறுவது போல் மீண்டும் கூற, தாங்கள் பார்த்துக்கொவதாக அவனுக்கு வாக்கு கொடுத்திருந்தனர் அவர்கள்.
ஷக்தி இப்படி பேசி வைத்ததன் பயன் கிரிஜாவுக்குத்தான் கெட்ட பெயரே ஆனதே ஒழிய கௌஷியை பர்வதுமும், புஷ்பாவும் குறை கூறவில்லை.
கிரிஜாவுக்கு யார் யாரிடமோ என்ன என்னவோ சொல்லிப் பார்த்தாள். “பிரிஞ்சவங்க இப்போதான் சேர்ந்திருக்காங்க, நடுல போகலாமா?” என்று அவளை அனைவரும் பேச நொந்து விட்டாள்.
நான்காம் மாடியில் ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக கதிர்வேலன் சொல்லவும், கௌஷியின் வீட்டுக்கு எதிர் வீடாக அமைய வில்லை என்ற குறையோடு  குடிசெல்ல எல்லா ஏற்பாடும் செய்யலானான் ஷக்தி. 
ஒரு ஞாயிறு காலை கௌஷியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு தேவையான தளபாடங்கள், சமையலறை உபகாரணங்கள் என்று எல்லாவற்றையும் வாங்கியவன் வீடு குடிபுகுந்தபின் வந்து சேர்ந்தால் அதை எங்கு எவ்வாறு வைக்க வேண்டும் என்று அவளோடு சென்றே வீட்டில் எவ்வாறு ஒழுங்கு படுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தான்.
“உனக்கு வீடு பிடிச்சிருக்கில்ல கௌஷி?” ஷக்தி எதிர்பார்ப்போடு கேட்கலானான்.
அவளுடைய வீடு போலவேதான் இந்த வீடும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவன் வாங்கி இருக்கும் பொருட்களில்தான் நவீனம் வழிந்திருந்தது. இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று அவள் ஒவ்வொரு தடவையும் கேட்ட பொழுதும், நமக்கத்தானே செய்யிறோம் என்று கூறும் பொழுது உள்ளுக்குள் பூரித்து போவாள்.
அவளும் வாழப்போகும் வீடல்லவா? தனது சம்பளப்பணம் சேமிப்பில்தான் இருக்கிறது அதை தரவா என்று மெதுவாக கூறிப் பார்த்தாள். கோபம் கொள்வானோ என்ற அச்சம் வேறு. ஆனால் அவன் கோபம் கொள்ளவில்லை. சிரித்தவாறே வேண்டாம் “என் மனைவிக்காக நானே எல்லாம் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்” என்று மறுத்து விட்டான்.
கௌஷி கேட்டது மட்டுமல்லாது கதிர்வேலனும்தான் கேட்டிருந்தார். அவருக்கும் புரியவைக்க படாது பாடுபட்டு, அவரையும், இந்திராவையும் அழைத்து செல்லாமல் கௌஷியை மட்டும் பொருட்கள் வாங்க அழைத்து சென்றிருந்தான். அப்படி இருந்தும் பூஜையறை சாமான்கள் அனைத்தும் இந்திரா கணவனோடு சென்று வாங்கி வந்திருந்தாள்.
இதற்கிடையில் பிரணவ் வெற்றியின் பள்ளித் தோழர்களை சந்தித்து வெற்றி அவர்களை எக்காரணத்துக்காகவும் தொடர்பு கொண்டானா? முகநூலிலாவது தொடர்பில் இருக்கின்றானா? என்று விசாரிக்கலானான்.
பள்ளித்தோழர்களை விசாரித்தது போல் கல்லூரித்தோழர்களை விசாரிக்க தானே சென்னை வர முடிவு செய்தான். சென்னை வந்தால் சித்தியின் வீட்டில் தங்குவான் இந்த தடவை தங்கவுமில்லை. சொல்லவுமில்லை.
சக்தியிடம் சொல்லி இருந்தாலே விசாரித்து கூறி இருப்பான். தந்தை சொல் தட்டாத மகனாக அவனே நேரில் வந்து விசாரிக்க எண்ணியவன் வந்து விசாரிக்கவும் செய்தான்.
வெற்றியோடு படித்தவர்களின் விலாசம், அலைபேசி எண் கூட கிடைத்தது ஆனால் அதில் அவனின் நண்பர்கள் யார் என்று தெரியவில்லை.
வெற்றியின் கல்லூரியில் விசாரித்தது போல் சந்தியா படித்த கல்லூரியிலும் விசாரித்து அவளோடு படித்தவர்களின் பெயர் பட்டியலை பெற்றுக்கொண்ட பொழுதுதான் ஒரு பேராசிரியர் “அந்த எக்ஸாம் எழுதாம போன பொண்ணுதானே தம்பி. அந்த பொண்ணுக்கு வீட்டுல படிக்க விடாம கல்யாண ஏற்பாடு பண்ணிட்டதா சொன்னா. நான் தான் வேற காலேஜ்ல எக்ஸாம் எழுத ஏற்பாடு பண்ணிக்க கொடுத்தேன். ஆமா நீ யாரு”
 “நான் அவங்களோட தம்பி சார்” என்றவனுக்கு அவருக்கு வெற்றி மற்றும் சந்தியாவின் காதல் விவகாரம் தெரியவில்லை என்று புரியவும் அமைதியாக அங்கிருந்து கிளம்பினான்.
நாட்கள் அழகாக நகர ஷக்தி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வீட்டுக்கு குடிவந்திருந்தான். சாம்பாவியும் கபிலரும் வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்க, மகாதேவனின் முப்பதாம் நாள் காரியம் இரண்டு நாட்களில் வருவதால் அவர்கள் வேறு ஒருநாளில் வருவதாக கூறி இருந்தனர்.
புதுமனை, நவீன பொருட்கள் என்று குடிவந்தது என்னவோ உண்மைதான். தூங்க மட்டும்தான் அவன் வீட்டுக்கு சென்றான். விடிந்த உடன் குளித்து ஆபீஸ் செல்ல தயாராகி கௌஷியின் வீட்டுக்கு வந்தால் காலை உணவை உண்டு விட்டு அவளோடு ஆபீஸ் பயணம்.
மதிய உணவும் இந்திரா சமைத்து அனுப்பு வைத்து விட, சில நேரம் மாலை கௌஷியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்வான், அல்லது ஐஸ் கிரீம் பாலர், பீச், பார்க் என்று சுற்றி விட்டு வீட்டுக்கு வருவான்.
வரும் பொழுது சில நாட்கள் வெளியே உண்டு விட்டு வாங்கியும் வருவான். அல்லது வீட்டில் சென்று சாப்பிடலாம் என்று வாங்கி வர, இந்திராவுக்கு வேலை இல்லை.
“எதுக்கு மாப்புள வெளிய வாங்கிட்டு வரீங்க? அரைமணித்தியாலத்துல சமைச்சிட போறேன்” முகம்கொள்ளா புன்னகையில் வாங்கிக்கொள்வாள்.
“அம்மா சும்மா நடிக்காத, காலைலயும், மதியமும்  மாப்பிள்ளைக்கு ஆக்கிப்போட்டு ரெஸ்ட் இல்லனு புலம்புரியே போ… போய் எடுத்து வை பசிக்குது” கௌஷி அதட்டினாள் முறைத்தவாறு செல்வாள் இந்திரா.
அது மட்டுமல்லாது மாதாந்தம் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான், அன்றாடம் காய்கறி, பழங்கள் என்று வாங்கி வந்து பொறுப்பான கணவன் என்று நிரூபித்தது மட்டுமல்லாது தினமும் கௌஷிக்கு பூ வாங்கி அவனே வைத்தும் விட்டு அன்பான கணவன் என்று சொல்லாமல் சொல்லலானான்.
அவன் செலவு செய்வது கதிவேலனுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், “ஏன் நான் செய்யக் கூடாதா? மாப்புளையா தான் பார்ப்பீங்களா? மகனா பார்க்க மாட்டீங்களா?” என்று அவரை பேசவிடாது பண்ணி கௌஷியின் மனதில் இடம் பிடித்து விட்டான்.
மெல்ல மெல்ல கௌஷியும் அவனிடம் நெருங்கி பழக ஆரம்பித்திருந்தாள். அவனை பார்த்தாலே முகம் திருப்பும் கௌஷி அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்து மணியடிக்க முன் சென்று கதவை திறக்கலானாள்.
“நான் வ்ருவனு உனக்கு எப்படி தெரியும் கௌஷி?” கையை தூக்கியவாறு ஷக்தி தினமும் கேட்கும் கேள்விதான்.
“நீங்க இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாதா? உள்ள வாங்க…” அவள் ஒரே பதிலைத்தான் சொல்வாள்.
உணவு உண்ணும் பொழுது முதல் பிடியை இவள் அவனுக்கு ஊட்டி விடுவதும், அவன் இவனுக்கு ஊட்டி விடுவதுமாக சிரித்து பேசி உண்பது மட்டுமல்லாது, இந்திராவிடம் விடைபெற்று மின்தூக்கியில் ஏறிய நொடி இருவரும் கைகோர்த்துக்கொள்ள கௌஷி சக்தியின் தோள் சாய்வாள்.
அவர்களது சின்ன வயதில் நடந்து பேச்சுக்களில் ஆரம்பித்து பொதுவான பேச்சுக்கள் என்று எல்லாம் பேசிக்கொண்டு காரியாலயத்தை சென்றடைவார்கள்.
சின்ன வயதில் நடந்தவைகளை ஷக்தி கிண்டல் செய்தால் கூட இப்பொழுது கௌஷிக்கு கோபம் வருவதில்லை. மாறாக சிரிப்பாள். வெக்கப்படுவாள். அவன் தோளில் அடிப்பாள்.
ஷக்தி கௌஷியிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று எண்ணி இருந்தாலும், அவள் தண்னிடம் நெருங்காமல், தன்னை புரிந்துக் கொள்ளாமல் பேசினால் கண்டிப்பாக தான் சொல்ல வருவதையும் புரிந்துகொள்ள மாட்டாள் என்று அஞ்சினான்.
அதனாலயே அவளிடம் நெருங்கிப் பழகலானான். கௌஷியும் அவனோடு அவன் எண்ணியது போலவே நெருங்கிப் பழக்க ஆரம்பித்து விட்டாள்.  இப்படியே இருந்தால் போதும் உண்மையை கூற வேண்டுமா? என்று கூட சக்திக்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.
எல்லாம் ஷக்தி ஓவியாவை சந்திக்கும்வரைதான். அவளே வந்து கௌஷியிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட போது அதுவும் தான் ஷக்தியின் முன்னாள் காதலி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது கௌஷியின் மனநிலையை ஷக்தியால் உணர்ந்துகொள்ள முடியுமா?

Advertisement