Advertisement

அவன் காதலை மொத்தமாய் உயிருக்குள் உணர்ந்தவளுக்கு அதுவே அவளை மீட்கும் வழி எனப் புரிய ஒரு நிமிடம் கூட பிரியக் கூடாதென்று மனம் தவிப்புடன் நினைத்தது.

காதல் உயிர் உணரும்

வலியல்ல… அது எனை

உயிர்க்க வைக்கும் வழி

என்று உன்னில் கண்டேன்…

பல விடியல்கள் தாண்டி ஒரு அழகான விடியல் அன்று.

“காவி…”

“இதோ வந்துட்டேன்…” கவின் அறைக்குள் இருந்து குரல் கொடுக்க பதில் குரல் கொடுத்தாள் காவ்யா.

நனைந்திருந்த கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தவள், “எதுக்கு அத்தான், காவி காவின்னு ஏலம் விடுறீங்க…” என்றாள் கணவனிடம்.

“ஹூம்… நான் ஏலமும் விடலை, கிராம்பும் விடலை, நீ இப்படி அடுக்களையே கதின்னு கொஞ்சம் கூட என்னைக் கேர் பண்ணாம இருந்தா நாம எப்படி வருங்கால இந்தியாவை வல்லரசாக்க முடியும்…” என்றான் சீரியஸாக.

“நாம எதுக்கு வல்லரசாக்கணும், நாம ஏதும் பண்ணாம இருந்தா அதுவே வல்லரசாகிடும்…” என்றாள் அவள்.

“ப்ச்… கொஞ்சம் கூட நாட்டுப்பற்று இல்லாமப் பேசாத காவி, நீ இப்படி வந்து உக்காரு…” என்று கட்டிலில் சாய்ந்தபடி அழைக்க கணவன் அருகே வந்து அமர்ந்தாள் காவ்யா.

“என்ன அத்தான் சொல்ல வரீங்க, நாம எப்படி இந்தியாவை வல்லரசாக்க முடியும்…?”

“எல்லாம் முடியும்… இரு, உனக்குப் புரியுற போலவே சொல்லறேன்… அமேரிக்கா, ஜப்பான் நாடுகள் எல்லாம் வல்லரசா இல்லையா…”

“அது சக்தி வாய்ந்த நாடுகளாச்சே, வல்லரசு தான்…”

“நம்ம பக்கத்து நாடு சைனா வல்லரசா…?”

“ஆமா, மக்கள் தொகை, பொருளாதாரத்துல பார்க்கும்போது அவங்களும் வல்லரசு நாடு தான்…” காவ்யா சீரியஸாய் யோசித்து சொல்ல கவின் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

“நம்மளோட ஜனத்தொகை சைனாவை விடக் குறைவு… அதனால தான் நம்ம நாடு இன்னும் வல்லரசாகாம இருக்கு… நாம அதுக்கு ஏதாச்சும் முயற்சி எடுக்க வேண்டாமா…?

“நாம என்ன முயற்சி பண்ண முடியும்…?”

“ஏதோ நம்மால முடிஞ்ச போல நாலஞ்சு குழந்தைகளைப் பெத்து ஜனத்தொகையைப் பெருக்கினா நம்முடைய நாட்டுக்கு செய்யற சேவையா இருக்குமே…”

அவன் சொல்ல வந்தது புரிய முறைத்தாள் காவ்யா.

“போங்க அத்தான், உங்களை…” என அடிக்க வந்தவளின் கையைப் பிடித்து அருகே இழுத்தவன் தனது கரங்களுக்குள் அவளை சிறையெடுக்க விடுவிக்க முயன்றாள்.

“விடுங்க அத்தான், அத்தை தனியா வேலை செய்யறாங்க…”

“உன் அத்தை ரொம்ப வருஷமா தனியா தான் வேலை செய்யறாங்க… எப்பப் பார்த்தாலும் பிகு பண்ணிட்டே இருக்க, உனக்கு கொஞ்சம் கூட என் மேல லவ்வே இல்லை…” அவளை விட்டு விலகி கோபமாய் சொன்னவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள முழித்தாள் காவ்யா.

“அத்தான், என்ன இப்படில்லாம் சொல்லறீங்க…?”

“பின்ன, கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்ன உன் அக்கா என் அண்ணனை உருகி உருகி லவ் பண்ணறாங்க, உன்னை லவ் பண்ணதுக்காக ஏதேதோ கோல்மால் வேலை எல்லாம் பண்ணி, கஷ்டப்பட்டு அவங்க லைனைக் கிளியர் பண்ணி கல்யாணம் பண்ணதுக்கு நீ எப்படி என் மேல லவ்வைக் கொட்டணும், நீ என்னடான்னா என்னைக் கண்டாலே ஓடற… அப்ப என் மேல லவ் இல்லேன்னு தானே அர்த்தம்…” அவன் அவளைக் கடிந்து கொள்ள சட்டென்று தலை சுற்றியது காவ்யாவுக்கு.

தலையைப் பிடித்துக் கொண்டவள் அப்படியே விழப் போக கவின் வேகமாய் அவளைத் தாங்கிக் கொண்டான்.

“காவி, எ..என்னாச்சு…”

“தலை சுத்துதுங்க…” சொன்னவள் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வர பாத்ரூமுக்கு ஓடவும் கவின் பதறினான்.

“ஐயோ, காவி… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னன்டி… சீரியஸா எடுத்துகிட்டியா…?” என்றவன், “இரு, அம்மாவைக் கூப்பிடறேன்…” என வெளியே ஓடி கீழே நோக்கிக் குரல் கொடுத்தான்.

“அம்மா… அம்மா, இங்க கொஞ்சம் வாங்களேன்…”

“என்னடா, நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்…” மல்லிகா அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்து கூறினாள்.

“காவிக்கு தலை சுத்துதுன்னு சொல்லுறா, இப்ப வாந்தி வேற எடுக்கிறா… எனக்கு பயமாருக்கு, சீக்கிரம் வாங்களேன்…” அவனது பதறிய குரல் அதற்கு மேல் மல்லிகாவை அங்கே இருக்க விடவில்லை. கவின் சத்தம் கேட்டு மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டிருந்த ரம்யாவும் ஓடி வந்தாள்.

“காவிக்கு என்னாச்சு கவின், எதுக்கு கத்துற…”

“அவளுக்கு தலை சுத்தி வாந்தி எடுக்கிறா அண்ணி…” என சொல்லுவதற்குள் மல்லிகாவும் அங்கே வந்துவிட மருமகளிடம் ஏதேதோ கேட்டவள் முகத்தில் புன்சிரிப்பு.

“அம்மா… காவிக்கு முடியலைன்னு சொல்லுறா… நீங்க சிரிக்கறீங்க… சீக்கிரம் கிளம்புங்க, டாக்டர்கிட்ட போகலாம்…”

“திருட்டு படவா, பண்ணறதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாதவன் போலவே நடிக்க வேண்டியது…” என்றவள்,

“ரம்மி, நீ போயி ஏதாச்சும் சுவீட் பண்ணு…” என அனுப்ப அவளும் சிரித்துக் கொண்டே ஓடினாள்.

கவின் தவிப்புடன் காவ்யாவின் அருகே அமர்ந்திருக்க சோர்வுடன் படுத்திருந்தவளுக்கு அவனைக் கண்டு பாவமாய் இருந்தது. இருந்தாலும் என்ன செய்வது… அத்தை ஸ்ட்ரிக்டாக அவனிடம் ‘இப்போது எந்த விவரமும் சொல்ல வேண்டாமென்று சொல்லி விட்டாரே…’ என யோசித்துக் கொண்டிருந்தாள். ரம்யா அர்ஜூனுக்கும், பூங்கொடிக்கும், மல்லிகா கணவனுக்கும் விவரம் சொல்ல சிறிது நேரத்தில் அவர்களும் வந்துவிடுவதாகக் கூறினர்.

ரம்யா கேசரியில் ஸ்பூனிட்டு எடுத்து வர அதைக் கண்ட கவினுக்கு கோபம் வந்தது.

“அண்ணி, அவளே முடியாமப் படுத்திருக்கா, ஏதாச்சும் கஷாயம் வச்சு கொண்டு வருவிங்கன்னு பார்த்தா சுவீட் எடு, கொண்டாடுன்னு கேசரி செய்து எடுத்துட்டு வரிங்க, இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா…” என்றான்.

“ஆமா, கொண்டாடத்தான் செய்வோம்…” என்றவள் ஸ்பூனில் கேசரியை எடுத்து தங்கைக்கு ஊட்டிவிட அவள் பாவமாய் கணவனைப் பார்த்தாள்.

“அக்கா, அத்தான் பாவம்க்கா… சொல்லிடலாம்க்கா…”

“ஹூம், எனக்கும் பாவமா தான் இருக்கு… ஆனா இவர் பண்ணி வச்ச வேலைதான உனக்கு தலை சுத்துச்சு, கொஞ்சம் கதறட்டும்…” எனக் கண்ணடித்து சொல்ல,

“அக்கா, வேணாம்… தேவையில்லாம அத்தானைப் பகைச்சுகிட்டா அடுத்து உனக்கு தலை சுத்தும்போது திருப்பி பழி வாங்கிருவார், பார்த்து நடந்துக்க….” எனவும் ரம்யாவின் முகத்தில் சட்டென்று நாணம் வந்து விலகியது.

“கவின், நீ கொஞ்ச நேரம் கீழ இரு, காவ்யா ரெஸ்ட் எடுக்கட்டும்… ரம்மிமா, தங்கச்சியைப் பார்துக்கடா…” என்று அவனை வெளியே போக சொன்ன மல்லிகாவை விசித்திர ஜந்துவைப் போல் நோக்கிக் கொண்டே கீழே சென்றவனுக்கு விஷயம் தெரியாததால் தலை சுத்தியது.

ஒருவழியாய் அவனது கேள்விக்கு பதில் சொல்ல அர்ஜூன், அப்பா, சரவணன், பூங்கொடி எல்லாரும் சுவீட், பழங்கள் என்று சந்தோஷமாய் வாங்கி வர புரியாமல் பார்த்தான்.

“சூப்பர்டா கவின்… அசத்திட்ட, வாழ்த்துகள்…” என்று அண்ணன் தோளில் தட்ட தந்தையோ, “டேய் சின்ன படவா, நீ என்னை விட பாஸ்ட்டா இருக்கியே…” என பெருமை பேச,

“மாப்பிள்ள, ரொம்ப சந்தோஷமா இருக்கு… எங்களுக்கு இவ்ளோ சீக்கிரம் பிரமோஷன் கொடுப்பிங்கன்னு எதிர்பார்க்கல…” என சரவணன் சொல்ல ஒருவழியாய் அவனுக்கு விஷயம் புரியத் தொடங்க குதூகலமானது.

“மல்லிகா, நம்ம குடும்பத்துல எத்தனை வருஷத்துக்குப் பிறகு ஒரு வாரிசு வரப்போகுது… சாமிக்கு காசு முடிஞ்சு வைக்கணும்…” சொல்லிக் கொண்டே பூங்கொடி மகளைக் காணச் செல்ல மற்றவர்களும் மாடிப் படியேற கவினின் முகத்தில் சந்தோஷத்தின் பிரவாகம். அவனும் அவர்களுடன் காவ்யாவைக் காண சென்றான்.

காவ்யாவுக்கு வாழ்த்து சொல்லி ரம்யா கொடுத்த சுவீட்டை வாங்கிக் கொண்டு மற்றவர்கள் நகர, சந்தோஷத்தில் பிரமித்து நின்ற கொழுந்தனின் தோளில் தட்டி, “என்ன கொழுந்தனாரே, இப்ப விஷயம் புரிஞ்சிடுச்சா… ஹாப்பியா…” என்ற ரம்யா அவர்களைத் தனியே விட்டு கதவை சாத்திக் கொண்டு வெளியே செல்ல, எதுவும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் கணவனை நெகிழ்வுடன் நோக்கிய காவ்யா, “சாரி அத்தான்… அத்தை உங்களுக்கு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க…” என தவிப்புடன் சொல்ல அவள் அருகே அமர்ந்தான் கவின்.

“காவி… நமக்கு குழந்தையா…” என்றவன் அவளது வயிற்றில் கை வைத்து சந்தோஷமாய் கேட்க புன்னகைத்தாள் காவ்யா.

“ம்ம்… நீங்கதான் முதல் பால்லயே காட்ச் பிடிச்சு என்னை கிளீன் போல்டு பண்ணிட்டிங்களே…” என வெட்கத்துடன் சொல்ல அந்த நிமிஷங்களின் அழகை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

எத்தனையோ எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் சுமந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைப் பயணம் அடுத்த படிக்கு முன்னேறிக் கொண்டிருக்க அர்ஜூனும் அடுத்த மாட்சில் ரம்யாவை கிளீன் போல்டு ஆக்கும் முயற்சியில் தீவிரமாய் இறங்க அடுத்த மாதமே அக்காவுக்கு வேண்டி காவ்யா சுவீட் செய்யும் நிலை வந்தது.

இரு மருமகள்களும் வீட்டு வாரிசை சுமக்க அவர்களை உள்ளங்கையில் வைத்து சுமந்தார் மல்லிகா.

அழகான அந்தப் பயணம் காவ்யாவின் மகள் வரவாலும், ரம்யாவின் மகன் வரவாலும் மேலும் அழகாகிப் போனது.  அன்பும், காதலும் மட்டுமே ஆட்சி செய்யும் அவ்வீட்டில் என்றும் சந்தோஷம் குறையாமல் நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்…

உயிர் சுமக்கும்

கருவறை போல்

உள்ளம் சுமந்திடும்

உன்னதக் காதல்…

உணர்வுகளில் தொலைந்து

உறவுகளில் நிறைந்து

உயிர் இருக்கும் வரை

உள்ளத்தில் நிலைத்திருக்கும்…

——-சுபம்———

Advertisement