Advertisement

அத்தியாயம் – 26

மாமனாரின் பிறந்தநாள் விழாவுக்கு முதியோர் இல்லம் சென்று அங்கே சிவகாமியைக் கண்டு திரும்பி வந்தது முதல் ரம்யாவுக்கு பழைய நினைவுகளே மனதில் அலட்டிக் கொண்டிருக்க இரவெல்லாம் உறக்கம் வருவேனா என்றது. அர்ஜூனுக்கு அன்று இரவுப் பணி என்பதால் அவன் டின்னர் முடிந்து நேரமாய் அலுவலகம் கிளம்பிவிட்டான்.

இரவு முழுதும் உறங்காமல் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள் ரம்யா.

“எப்படி எல்லாம் என்னை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள்… வெங்கடேஷின் காதலை உண்மையென்று நம்பி அவன் இறந்ததுக்கு எல்லாரையும் என்ன பாடு படுத்தினேன்… அந்த சிவகாமி என்னெல்லாம் பிளான் பண்ணி இருக்கிறாள்… என்னை மூத்த மகனுக்கு இரண்டாம் தாரமாய் கொடுக்க நினைத்ததோடு, முகத்தில் ஆஸிட் வேறு அடிக்கப் பார்த்தாளே… எந்தளவுக்கு அவள் மனது வக்கிரம் பிடித்ததாய் இருந்தால் இப்படி எல்லாம் யோசிக்கத் தோன்றி இருக்கும்… இது எதுவும் தெரியாமல் என் அர்ஜூனின் அன்பைப் புரிந்து கொள்ளாமல் எத்தனை உதாசீனப் படுத்தினேன்… அப்போதும் என்னை விட்டுக் கொடுக்காமல் என் மீது எத்தனை அன்பிருந்தால் நான் வேண்டுமென்று பிடிவாதமாய் காத்திருப்பான்…” மாறி மாறி உறங்காமல் இப்படியே இரவு முழுதும் அழுகையும், புலம்பலும், தன்னைக் குற்றப் படுத்தலுமாய் யோசித்துக் கொண்டிருந்தவள் விடியலில் தான் உறங்கத் தொடங்கினாள்.

காலையில் பணி முடிந்து வீடு திரும்பிய அர்ஜூன் நேராய் அடுக்களைக்கு செல்ல அங்கே காபி தயாரித்துக் கொண்டிருந்த காவ்யாவைக் கண்டதும் புன்னகைத்தான்.

“குட்மார்னிங் காவி… எங்க உன் மாமியாரும், அக்காவும்… இன்னும் எழுந்திருக்கலையா…” எனவும் சிரித்தாள் அவள்.

“குட்மார்னிங் பெரியத்தான்… அத்தைக்கு நேத்து நிறைய வேலை, அதான் அலுப்புல தூங்குறாங்க போல… அக்கா எப்பவும் நேரமா எழுந்திருவா, இன்னைக்கு இன்னும் காணோம், உங்களுக்கு காபி தரட்டுமா…?” என்றாள்.

“ம்ம்… குடுமா…” என்றவனுக்கு ஒரு கப்பில் ஊற்றி நீட்ட வாங்கிக் கொண்ட அர்ஜூன்,

“உன் அக்காவுக்கும் கொடுமா, நான் கொடுத்திடறேன்…” என்று சொல்ல புன்னகையுடன் இன்னொரு கப்பில் ஊற்றிக் கொடுத்தாள் காவ்யா.

இரு கப்பையும் ஒரு டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு மாடிப்படி ஏறினான் அர்ஜூன்.

அறைக்கதவு தாழிடப் பட்டிருக்க, மெல்ல தட்டினான்.

“ரமி… கதவைத் திற…”

அவனது சிறிது நேர அழைப்புக்குப் பிறகே கதவு திறந்தது. தலை கலைந்து கண்கள் சிவந்து வீங்கி, முகம் வாடி நின்றவளைக் கண்டதும் அர்ஜூனின் மனம் பதறியது.

“ரமி, என்னடா… என்னாச்சு…? ஏன் ஒரு மாதிரி இருக்க…” கேட்டுக் கொண்டே உள்ளே சென்றவன் கட்டிலில் சோர்வுடன் அமர்ந்தவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க அனலாய் சுட்டது.

“அச்சச்சோ, காய்ச்சல் அடிக்குதே…” சொல்லிக் கொண்டே காபியை டீப்பாய் மீது வைத்துவிட்டு அவள் அருகே அமர்ந்தவன், “என்னாச்சு மா… நைட் எல்லாம் தூங்கலயா, எதுக்கு இன்னும் பழசை நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற…” சொல்லாமலே புரிந்து ஆறுதலாய் கேட்கவும் அவன் முகம் நோக்கியவள் அமைதியாய் அவன் கையைக் கட்டிக் கொண்டு தோளில் சாய அவள் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டான் அர்ஜூன்.

“என்னடா, என்னாச்சு…” அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு கேட்க மெல்ல முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், “நீங்க ஏன் நைட்டு என்னைத் தனியா விட்டுட்டுப் போனிங்க…” என்றாள் குழந்தை போல்.

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “மேரேஜ்க்கு நிறைய நாள் லீவு போட்டுட்டு இப்பதானே ஆபீஸ் போகத் தொடங்கினேன், நைட் ஷிப்ட் அவாய்ட் பண்ண முடியலை… நெக்ஸ்ட் டைம் போகாம இருக்க டிரை பண்ணறேன்… அதை விடு, சூடா இந்த காபியைக் குடி…” என்றான் அர்ஜூன்.

“ப்ச்… எனக்கு வேண்டாம் அர்ஜூ, தலை வலிக்குது…” என்றாள் சிணுங்கலாய்.

“இதைக் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்திரு, ரமி மா… டிபன் சாப்பிட்டு டாப்லட் போட்டுக்கலாம்…” சொன்னவன் காபிக் கோப்பையை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

வேண்டா வெறுப்புடன் குடித்து முடித்தவளுக்கு உள்ளே இருந்த காய்ச்சலில் குமட்டிக் கொண்டு வர வேகமாய் எழுந்தவள் பாத்ரூமுக்குள் ஓடினாள். பதட்டமாய் அவளுடனே ஓடி வந்தான் அர்ஜூன்.

உள்ளே சென்ற காபி முழுதும் அப்படியே வெளியே வந்தது. வாஷ்பேசின் பைப்பைத் திறந்து விட்டு ரம்யாவின் பின்னில் நின்று அவள் முதுகைத் தடவிக் கொடுத்த அர்ஜூன் அவள் முகம் கழுவிக் கொண்டதும் டவலை எடுத்து நீட்டினான்.

சோர்வுடன் முகம் துடைத்தபடி வந்தவள் கட்டிலில் அமர, “ரமி… ரொம்ப முடியலைனா ஹாஸ்பிடல் போயிடலாமா…?” என்றான் கனிவுடன்.

“இ…இல்ல வேணாம், டாக்டர் ஊசி போடுவாங்க…” முகத்தை சுருக்கி அவள் சொல்லவும் புன்னகையுடன் அருகே அமர சோர்வுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ரம்யா.

“ஊசின்னா உனக்கு அவ்ளோ பயமா…?”

“அவ்ளோ இல்ல, கொஞ்சம் பயம்…”

“அப்புறம் எப்படி காய்ச்சலை சரி பண்ணறது…?”

“நீங்க என் பக்கத்துலயே இருந்தாப் போதும், சரியாகிடும்…” என்றவளை அவனுக்கு அவ்ளோ பிடித்தது. பதில் சொல்லாமல் கைக்குள் இருந்தவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொள்ள எதுவும் பேசாமல் அவனோடு ஒட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் ரம்யா.

அவள் முதுகில் அவன் மென்மையாய் தட்டிக் கொடுக்க, “நான் உங்க மடியில படுத்துக்கட்டுமா…” எனக் கேட்க, அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டு இதமாய் நெற்றியில் விரலால் வருடிக் கொடுக்க சுகமாய் கண்களை மூடிக் கொண்டவள் சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.

மனதுக்குப் பிடித்த மங்கை குழந்தை போல் மடியில் உறங்க, உடையைக் கூட மாற்றாமல் அமர்ந்திருந்த அர்ஜூன் தனக்குள் தாய்மையை உணர்ந்தான். அவளை சரியாய் படுக்க வைத்து தலைக்கு கீழே தலையணை கொடுத்து எழுந்தவன் பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

குளித்து உடை மாற்றி கீழே வந்தவன், ரம்யாவுக்கு காய்ச்சல் இருப்பதாய் சொல்ல மல்லிகா பதறினாள்.

“நேத்து குடும்பமா, சந்தோஷமா அந்தப் பொம்பளை கண்ணுல பட்டப்பவே வீட்டுக்கு வந்ததும் சுத்திப் போடணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்… அவ கண்ணுதான் என் மருமகளுக்கு காய்ச்சல் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்… இன்னைக்கு மறக்காம எல்லாரையும் சுத்திப் போடணும்…” என தனக்குள் சொல்லிக் கொண்டே மருமகளைக் காணப் போக அவள் நல்ல உறக்கத்தில் இருக்கவும் இட்லியை ஊற்றி மகனிடம் கொடுத்து விட்டாள்.

“ரம்யாவை எழுப்பி இட்லி சாப்பிட்டு மாத்திரை போட சொல்லுப்பா… பாவம் புள்ளை, வாடிக் கிடக்கு…” என்றவர் காவ்யாவிடம், “மதியத்துக்கு கொஞ்சம் மிளகு ரசம் வச்சுடலாம்…” சொல்லிக் கொண்டிருக்க கவின் வந்தான்.

“என்னம்மா, அண்ணிக்கு காய்ச்சல்னு காவி சொன்னா, டாக்டர்கிட்ட போகலியா…?” அவன் கேட்கும்போதே பொன்வண்ணனும் கிளம்பி சாப்பிட மேஜைக்கு வந்தார்.

“உன் அண்ணிக்குதான் சின்ன வயசுல இருந்தே டாக்டர், ஊசின்னா பயமாச்சே… அதான், சாப்பிட்டு மாத்திரை போட சொல்லிருக்கேன், சரியாகலேன்னா டாக்டரைப் பார்க்கலாம்…”

“என்னமா, ரம்யாக்கு என்னாச்சு…” பொன்வண்ணன் கேட்க, அவரிடம் விஷயத்தை சொல்ல, அவரும் கவினும் சாப்பிட்டு முடித்து மாடி அறைக்கு ரம்யாவைப் பார்க்க செல்ல அங்கே அர்ஜூன் அவளுக்கு இட்லி ஊட்டிக் கொண்டிருந்தான்.

மாமாவைக் கண்டதும் அத்தனை சோர்விலும் எழுந்து சங்கடமாய் கையில் இட்லியோடு இருந்த கணவனைப் பார்க்க பொன்வண்ணன், “உக்காரும்மா, முதல்ல சாப்பிடு… அர்ஜூன், கூடவே இருந்து என் மருமகளை நல்லா கவனிச்சுக்கடா…” எனவும் பலமாய் தலையாட்டினான் மகன்.

“அப்பா, அதெல்லாம் அண்ணன் அண்ணியை நல்லாவே கவனிச்சுப்பான்… அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும், நாம போவோம்…” என்ற கவின் அர்ஜூன் காதருகே குனிந்து, “ம்ம்.. நல்ல சான்ஸ் தான், அண்ணியை செமையா கவனிச்சிரு…” என்று கிசுகிசுக்க பொன்வண்ணன் அழைத்தார்.

“கவின், வாடா… என்னைப் போக சொல்லிட்டு நீயேன் நந்தி போல நின்னுட்டு இருக்க, அவங்க ப்ரீயா இருக்கட்டும் வா…” என்றவர் முன்னே நடக்க, “ரெஸ்ட் எடுங்க அண்ணி…” என்ற கவினும் தந்தையின் பின்னே சென்றான்.

சாப்பிட்டு மாத்திரை போட்டுக் கொண்டதும் ரம்யா, “நீங்க போயி சாப்பிடுங்க, நான் படுத்திருக்கேன்…” எனவும் அர்ஜூன் கீழே சென்று சாப்பிட்டு வந்தான். சிறிது நேரத்தில் உடல் வியர்க்கத் தொடங்க ரம்யாவுக்கு காய்ச்சல் விட்டிருந்தது.

ஆனாலும் கணவனின் மடியை விடவோ அவன் கைகளில் உணர்ந்த தாய்மையின் ஸ்பரிசத்தை விடவோ மனமின்றி அவன் அணைப்பிலேயே குழந்தையாய் ஒட்டிக் கொண்டிருந்தாள் ரம்யா.

“ரமி… காய்ச்சல் விட்டிருச்சு போலருக்கு…”

“ம்ம்… உங்களுக்கு நான் ரொம்ப சிரமம் கொடுக்கிறேனா…?” முகத்தை நிமிர்த்திக் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தவன் அவள் கண்களில் மெல்ல முத்தமிட அவனை இறுக்கிக் கொண்டு நெஞ்சத்தில் முகத்தை இன்னும் அழுத்தமாய் பதிய வைத்து கண்களை மூடிக் கொண்டாள் ரம்யா.

“ரமி, உனக்கு உடம்பு முடியலைன்னதும் மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும் தாயைத் தேடுற குழந்தை போல நீ என்னைத் தேடினது ரொம்ப சந்தோஷமா இருக்கு… உன் வலிக்கு மருந்தா இருக்கிறதை விட வேறென்ன பெரிய சந்தோஷம் எனக்கு இருக்க முடியும் சொல்லு… உன்னை பத்திரமாப் பார்த்துக்க வேண்டியது என் கடமை மட்டுமில்லை, என் சந்தோஷமே அதுதான்…” என்றவனை மனம் நெகிழப் பார்த்தவள் அவன் நெஞ்சுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

Advertisement