Advertisement

அத்தியாயம் – 15

மறுநாள் காலையில் அர்ஜூன் ஆறு மணி ஷிப்டுக்கே வேலைக்குக் கிளம்பிவிட ரம்யா எழுந்து வரும்போது அவனைக் காணவில்லை.

இரவெல்லாம் மண்டையை உருட்டி யோசித்தவள், காலையில் அவனிடம் ஸ்ட்ரிக்டாய் பேசிவிட வேண்டுமென்று காத்திருக்க அவனோ காலையிலேயே கண்ணில் படாமல் காணாமல் போயிருந்தான்.

டிபன் வேலையை காவ்யா பார்த்துக் கொள்ள ரம்யா அர்ஜூனைத் தேடியவள் அவனைக் காணாமல் ஏமாற்றமாய் அறைக்குள்ளேயே அமர்ந்து கொண்டாள்.

“அத்தான், அபீஸ் போகும்போது எங்களை வீட்டுல விட்டுடறீங்களா… அப்பா டிஸ்சார்ஜ் ஆகி வரதுக்குள்ள எங்களை அம்மா வீட்டுக்குப் போயி கிளீன் பண்ணி வைக்க சொன்னாங்க…” காவ்யா கவினிடம் சொல்ல, “ப்ச்… அதுக்குள்ள கிளம்பணுமா…” அவன் முகத்தை சுளித்தபடி கேட்க சுற்றிலும் பார்த்தவள் அவன் தலை முடியைக் கலைத்து விட்டு,

“நீங்க என்ன, என்னைத் தாலியா கட்டிக் கூட்டிட்டு வந்திருக்கீங்க, இங்கயே இருக்க…” சிணுங்கலோடு கூறியவள் அடுக்களைக்கு ஓடி விட புன்னகைத்தவன் தொடர்ந்தான்.

“ஏய் காவி… நீ மட்டும் ஓகேன்னு சொல்லு, முகூர்த்தம் கூடப் பார்க்க வேண்டாம்… இப்பவே தாலியக் கட்டிடறேன்…” என்றான் கவின் அவளை வம்பிழுத்துக் கொண்டே.

“ஆஹா, ரொம்பத்தான் ஆசை… முதல்ல நம்ம ரெண்டு பேருக்கும் ரூட் கிளியர் ஆகட்டும், அப்புறம் பார்ப்போம்…”

“ஹூம், நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்… என்னாச்சு, உன் அக்கா திடீர்னு பழைய போலவே சைலன்ட் ஆகிட்டா, ஒருவேளை ராஜேஷ் கால் பண்ணிட்டானோ…” எனக் கேட்க காவ்யா உதட்டைப் பிதுக்கினாள்.

“அப்படி ஒண்ணும் போன் பேசின போலத் தெரியலையே…”

“சரி, நீ ரம்யா மேல ஒரு கண்ணு வச்சுக்க… எந்த நேரத்திலும் நாம பத்த வச்ச பாம் வெடிக்கலாம்…”

“ம்ம்… நானும் வெயிட்டிங் அத்தான்… ரொம்ப நாளைக்குப் பிறகு அக்கா நேத்து கொஞ்சம் நார்மலா இருக்கிற போல இருந்தா, இன்னைக்கு மறுபடி வேதாளம் முருங்க மரம் ஏறின கதையா ரூமுக்குள்ளயே அடைஞ்சுகிட்டா…”

“ம்ம்… அவ முழுமையா புரிஞ்சு, தெளிஞ்சு மாறி வரணும்… வெயிட் பண்ணுவோம்… சரி, கிளம்பறது தான் கிளம்பற, அத்தானுக்கு ஏதாச்சும் கொடுத்துட்டுப் போறது…” என்றவன் அவள் கையைப் பிடித்து தன்னிடம் இழுக்க நெஞ்சில் வந்து விழுந்தாள் காவ்யா.

“அச்சோ விடுங்க அத்தான்… நான் இன்னும் உங்க லவ்வை ஏத்துக்கவே இல்லை, இதெல்லாம் ரொம்பத் தப்பு…” என்றவளை முறைத்தவன்,

“நீ இப்படியே சொல்லிட்டு இரு… அண்ணனுக்குப் பேசிட்டு இருக்கிற அத்தை பொண்ணை நான் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கப் போறேன் பாரு…” வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்ற கூறினாலும் அவளது முகம் வாடிவிட்டது.

“ஓ… ரொம்ப சந்தோஷம், தாராளமா கட்டிக்கங்க… தொல்லை விட்டுச்சுன்னு நானும் சந்தோஷமா இருப்பேன்…” உதடுகள் சொன்னாலும் கண்ணில் பனித்துளி மின்ன சிரித்தவன், அவள் கையை இழுத்து தன் அருகில் நிறுத்தினான்.

“ஹேய், காவி… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னன்டி… உடனே சீரியஸா எடுத்துகிட்டியா…?”

“நான் சீரியஸா தான் சொல்லறேன், நீங்க உங்க அத்தை மகளையே கட்டிக்கங்க…” என்றவள் அவனது பிடியிலிருந்து கையை விடுவிக்க முயல,

“ஓஹோ, என்னைக் கழற்றி விடுறதுல உனக்கு அத்தனை சந்தோஷமா…” எனக் கேட்டுக் கொண்டே அவள் இடுப்பை தனது கையால் வளைக்க நாணத்தில் சிவந்தவள், “ப்ச்… விடுங்கத்தான்…” என நெளிய, “அப்ப இந்த அத்தானுக்கு ஒரு உம்மா கொடுத்திட்டுப் போ…” என்றான் கன்னத்தைக் காட்டி.

“ப்ச்… ரொம்பப் பண்ணறிங்க அத்தான்…” என்றவள் உதட்டைக் குவித்து அவன் கன்னத்தை நெருங்க கண்களை மூடிக் கொண்டான் கவின்.

நறுக்கென்று அவள் கன்னத்தில் கடிக்கவும் வலியோடு துள்ளியவன், “ஆ… எனக் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள விலகி ஓடியவள், “வெவ்வவ்வே… யாருகிட்ட…” எனப் பழிப்பு காட்ட, “மவளே இருடி…” எனப் பின்னில் ஓடினான்.

எதற்காகவோ வெளியே வந்த ரம்யா கவின் காவ்யாவைத் துரத்திக் கொண்டு ஓடுவதைக் கண்டதும் முகம் மாறினாள்.

“காவ்யா…” மூத்தவளின் அதட்டல் குரலில் பதறிப் போய் திரும்பியவள் அக்காவின் முகத்தில் தெரிந்த கோபத்தில் உள்ளுக்குள் நடுங்கிப் போனாள்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட கவின், “அண்ணி… இந்த காவ்யாவைப் பாருங்க… என்னை லூசுன்னு சொல்லிட்டு ஓடுறா…” என்றதும் ரம்யாவின் பார்வை தணிந்தது.

“ஓ… அப்ப சரியாதான் சொல்லிருக்கா…” அசால்ட்டாய் சொல்லிவிட்டு செல்ல பல்லைக் கடித்தான் கவின்.

“ஆஹா, என்னை லூசுனதும் இந்த லூசுக்கு என்னவொரு சந்தோஷம், இந்த லூசு சிஸ்டர்ஸ்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்ல, கூடிய சீக்கிரமே நானும் ஆயிடுவேன்…”

காவ்யா அப்போதும் படபடப்புடன் நின்று கொண்டிருக்க, “ஏய் ஜூனியர் லூசு… நான் ஆபீஸ் கிளம்பறேன், வர்றதுன்னா கிளம்புங்க, வீட்டுல விட்டுடறேன்…” எனவும் முறைத்தவள் சகஜமாகி கடிப்பது போல பல்லைக் கடித்துக் காட்ட கன்னத்தைப் பிடித்துக் கொண்டவன்,

“ஆஹா, என் மாமா பெத்த ரெண்டும் டிராகுலாவாப் போயிருச்சே…” புலம்பிக் கொண்டே அறைக்கு சென்றான். அவர்களை வீட்டில் விட்டு ஆபீஸ் சென்றான்.

காவ்யா வீட்டைக் கூட்டித் துடைத்து முடிக்கையில் சரவணன், ஆசுபத்திரியிலிருந்து வந்துவிட்டார்.

ரம்யா எல்லாருடனும் சகஜமாய் கலந்து கொள்ளா விட்டாலும் அவர்களுடனே எட்டி இருந்தாள். அதிசயமாய் தந்தை ஹாஸ்பிடலில் இருந்து வரும்போது கொண்டை போடாமல் சுரிதார் அணிந்து ஜடை பின்னிப் போட்டிருந்தாள். அதுவே பூங்கொடிக்கும், சரவணன், மல்லிகாவுக்கு சந்தோஷமாய் இருந்தது. மகளிடம் சிறு மாற்றமும், நிதானமும் வந்திருக்கிறதோ என மனைவியிடம் சொல்லி சந்தோஷப்பட்டார் சரவணன்.

“ரம்மிக் கண்ணு, அப்பா ஹாஸ்பிடல்ல படுத்து உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேனா…” என்று அவருக்கு முடியாமல் போனதைக் கூட தனது குற்றமாய் நினைத்து வருத்தப்படும் தந்தையை நடிப்பதாய் அந்த சிவகாமி அத்தை சொல்லிவிட்டாளே… ரம்யா மனதுக்குள் வருத்தப்பட்டாள்.

அவரை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு மதிய சமையலை செய்தனர். மல்லிகாவும் இருந்ததால் மதிய உணவுக்கு கவினும், பொன்வண்ணனும் இங்கே சாப்பிட வந்துவிட்டனர். அர்ஜூன் கான்டீனில் சாப்பிடுவதாக சொல்லிவிட்டான். ரம்யாவுக்கு அவன் வேண்டுமென்றே தன்னைக் காணாமல் தவிர்ப்பது போல் தோன்ற கஷ்டமாய் உணர்ந்தாள். உணவு முடிந்து அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினர்.

எப்போதும் அறைக்குள் தனிமையில் அடைந்து கொள்ளும் ரம்யாவுக்கு இன்று ஏனோ மூச்சு முட்டுவது போலத் தோன்றியது. போரடித்தால் எப்போதும் டீவி பார்ப்பவளுக்கு இப்போது அதுவும் பிடிக்கவில்லை. படுக்கையில் வெறுமனே புரண்டு கொண்டிருந்தவள் மொபைல் ஒலிக்கவும் எடுத்துப் பார்க்க புதிய நம்பராய் இருந்தது.

“யாரு இது, இந்த நேரத்துல இம்சை பண்ணிட்டு…” என கடுப்புடன் கட் பண்ணி விட்டாள்.

மொபைலில் பாட்டு கேட்டபடி படுத்திருந்தவள் மனதில் முன்தினம் அர்ஜூன் காதில் கிசுகிசுத்த வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருக்க இம்சையாய் உணர்ந்தாள்.

“ச்சே… அவனை அப்பவே பளார்னு ஓங்கி ஒண்ணு விட்டிருக்கணும்… அதைப் பண்ணாததால இப்போ எரிச்சலா இருக்கு…” யோசித்தபடி கண்ணை மூடிக் கொண்டாள்.

“உனக்கு ஏன் என்னைப் பிடிக்கலை ரமி…?” கண்களில் வலியோடு ஒலித்த அர்ஜூனின் குரலில் சட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு அவனிடம் பேசத் தோன்ற அவளை நினைத்து அவளுக்கே எரிச்சலாய் வந்தது.

“ச்ச்சே… இந்த மனசு ஏன் இப்படி இடியட்டா இருக்கு… கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவன் பண்ணதுக்கு அவனை அறையணும்னு தோணுச்சு, இப்ப என்னடான்னா அவனோட பேசத் தோணுது… எனக்கே என் மேல வெறுப்பா இருக்கு… நான் ஏன் இப்படி ஆகிட்டேன்…” எனத் தவிப்பாய் உணர்ந்தாள் அவள்.

காதல் எப்போதும் அப்படித்தான்… அதை உணர்ந்த பின்னும் ஒத்துக்கொள்ளாமல் இருந்தால் காதல் கொண்ட மனதை அமைதியாய் இருக்க விடுவதில்லை… காதலின் வலிக்கு எப்போதும் அதை ஒத்துக் கொள்வது மட்டுமே வழி… அதன் வலிகளும் வேதனைகளுமே சுகமான வழி…

மீண்டும் அலைபேசி ஒலிக்கவே கடுப்பானவள், “புது நம்பரா இருந்தா திட்டி விட்டுடணும்…” என நினைத்தபடி பார்க்க சிவகாமியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“ச்சே… இப்பெல்லாம் அத்தைக்கு போன் பண்ணக் கூட மறந்துடறேன், அவங்க என்ன நினைப்பாங்க…” என தன்னை கடிந்து கொண்டு அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ அத்த…” என்றவள் எதிர்ப்புறம் அத்தையின் ஹலோவுக்காய் காத்திருக்க கலவையாய் சில குரல்கள் ஒலித்தன.

“அம்மா, நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல…” ஒரு ஆண்குரல் ஒலிக்க,

“ஒருவேளை, தெரியாம என் பெயரை அழுத்தி எனக்கு போன் வந்திருச்சோ, கட் பண்ணிடலாமா…” என யோசிக்கும்போதே அவளது பெயரை யாரோ சொல்ல புருவத்தை சுளித்தவள், “எதுக்கு என் பேரை சொல்லறாங்க… என்னைப் பத்தி என்ன பேசறாங்க…” என இயல்பாய் தோன்றும் ஆர்வம் அதைக் கேட்க வைத்தது.

“என்னடா, நான் செய்யறதுல என்ன தப்பைக் கண்டே… அந்த ரம்யாவைக் கட்டிக்க உனக்கு என்ன கசக்குதா… அந்தப் புள்ள அழகா இருக்கான்னோ, நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னோ நினைச்சா நான் இவ்ளோ பாடு படறேன்… சொத்துடா, சொத்து… ரெண்டே பொட்டப்புள்ளைங்க… அவ அப்பன் சம்பாதிச்சதும், வீடும், கடையும், நிலமும் எல்லாம் பொண்ணுகளுக்கு தான்… நம்ம நிலைமைக்கு அவங்க வசதியான இடம், அனுபவிக்க உனக்கு கசக்குதாக்கும்…”

“எப்படி மா, தம்பி லவ் பண்ண பொண்ணை என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லற, அப்படி யோசிக்கவே எனக்கு கஷ்டமாருக்கு…”

“ஏன், ஊரு உலகத்துல நடக்காத ஒண்ணையா உன்னைப் பண்ண சொன்னேன்… பாஞ்சாலி காலத்துல இருந்து நடக்கிற விஷயம் தானே… தம்பி லவ் பண்ணா என்ன, கல்யாணம் பண்ணலியே… அப்படியே பண்ணினா தான் என்ன…? உனக்கு கல்யாணமாகி பொண்டாட்டி போயி சேர்ந்த போல அவளுக்கு புருஷன் போயிட்டான்னு நினைச்சுக்க வேண்டியது தான்…”

“என்னமா இப்படி சொல்லற, அவன் உன் புள்ளைமா…”

“புள்ளையோ, தொல்லையோ… அதான் உருப்படியா எங்களுக்கு எதுவும் பண்ணாம போயி சேர்ந்துட்டான்ல, இனி அவனையே புடிச்சு தொங்கிட்டு என்ன பிரயோசனம்… இங்க பாரு ராஜேஷ்… உன் பொண்டாட்டிய அடிச்சு உதைச்சு கொஞ்சம் பணத்தைக் கறந்ததுல இந்த வீடாச்சு, இது மட்டும் போதுமா… நாமளும் சொகுசா வாழ வேண்டாமா, அதுக்கு வசதியான வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணாதான முடியும்… உன் தம்பி எப்படி பிளான் பண்ணி அவளை வளைச்சுப் போட்டான், என்ன இருந்தாலும் அவன் சாமர்த்தியம் உனக்கு இல்ல…”

“அம்மா, பாவம் அந்தப் பொண்ணு… தம்பியை உண்மையா லவ் பண்ணுச்சு, ஆனா தம்பியும் சரி, நீயும் சரி… அவ சொத்துக்காக தான் இந்த வீட்டு மருமகளாக்க நினைச்சீங்க, அதான் நடக்கலியே, விட வேண்டியது தான… எதுக்கு எனக்கு ரெண்டாம் தாரமா கொண்டு வர நினைக்கறீங்க…”

“டேய், கிறுக்குத்தனமாப் பேசாத… அந்த ரம்யாவுக்கு சொந்தமா யோசிக்கத் தெரியாது, அது ஒரு அரை மென்டல்… இப்பவும் அவ பெத்தவங்க சாபம் தான் உன் தம்பியைக் கொன்னதுன்னு நம்பிட்டு இருக்கா… நானும் சரி, உன் தம்பியும் சரி, அவளை எங்க பேச்சுக்கு கீ கொடுக்கிற பொம்மை போல தான் வச்சிருந்தோம்… இப்பவும் அவ என்னைய நம்புறா… எங்களுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்க, அப்புறம் உனக்கு அவளோட வாழ விருப்பம் இல்லேன்னா மூத்தவ போயி சேர்ந்த போல இவளையும் அனுப்பி வச்சிடலாம்… சொத்துக்கு சொத்தும் ஆச்சு, உனக்குப் பிடிச்ச போல நீ வேற பொண்ணை வேணும்னாலும் கட்டிக்க… எப்படி என் ஐடியா…” கேட்ட அன்னையை கோபமாய் பார்த்தான் மகன்.

“என்னடா அம்மாவை முறைக்கிற… அவ சரியா தானே சொல்லறா, அவ பேச்சைக் கேட்டு வாழ்க்கைல உருப்படற வழியைப் பாரு… நீயும் எத்தன காலம் தான் அடுத்தவன் ஹோட்டல்ல கை கட்டி சம்பளம் வாங்குவ, உனக்குன்னு ஒரு ஹோட்டல் வைச்சு முதலாளியா மாறணும்னு ஆசை இல்லையா… இதெல்லாம் பிளான் பண்ணி தான் வெங்கி அந்தப் பொண்ணைக் காதலிச்சான், அது அவன் இல்லாமப் போனாலும் உன் மூலமாச்சும் நடக்கட்டும்…” என்றார் அவன் தந்தை.

“என்னப்பா, நீங்களும் அம்மா மாதிரி புரியாமப் பேசறீங்க… உங்க பணத்தாசைல என்னை நம்பி வாழ வந்த சுமதியை இழந்தது பத்தாதா… அவளுக்கு நீங்க பண்ணின கொடுமை  தெரிஞ்சும் நான் அமைதியா சப்போர்ட் பண்ணாம இருந்ததால தான் அவ தற்கொலை பண்ணிகிட்டா… இனி இந்தப் பொண்ணுக்கும் பாவம் செய்ய என்னால முடியாது… என்னை விட்டிருங்க…” என்றவன் கும்பிடு போட்டுவிட்டு தன் அறைக்கு செல்ல கோபத்தில் கொத்தளித்தார் சிவகாமி.

“விளங்காத பய… என்ன இருந்தாலும் நம்ம சின்னவன் போல இவனுக்கு சாமர்த்தியம் கிடையாது… இவனை எப்படிங்க வழிக்குக் கொண்டு வர்றது…”

“நீ கவலைப்படாத சிவகாமி… அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும்னு சொல்லுவாங்க, இவன் எம்மாத்திரம்… இதைப் பத்தியே பேசிப் பேசி சம்மதத்தை வாங்கிடுவோம், நீ முதல்ல அந்தப் பொண்ணுகிட்ட நைஸாப் பேசி சம்மதம் வாங்கற வழியைப் பாரு….” என்றது அந்த ஜாடிக்கேத்த மூடி.

“ம்ம்… அவ அப்பங்காரன் நெஞ்சுவலின்னு ஆசுபத்திரில போயி படுத்திருக்கான்… எப்படியும் இந்த சமயத்துல அவ அத்தை மகனைக் கல்யாணம் பண்ணறது பத்திப் பேசாம இருக்க மாட்டாங்க, அதுக்கு முன்னாடியே நாம பேசி அவளை தயார் பண்ணி வச்சிடணும்… அந்த மூளை இல்லாத ரம்யா எப்படியும் என் பேச்சுக்கு தலையாட்டத்தான் போறா, அதுக்கு தான் நைசாப் பேசிட்டு இருக்கேன்… சரி, உங்க மகன்கிட்ட பேசியே டயர்டாகிட்டேன், எனக்கு சூடா ஒரு காபி போட்டுக்கொடுங்க, நான் ரெஸ்ட் எடுக்கறேன்…”

“சரி, சரி… போட்டு எடுத்திட்டு வர்றேன், நீ போ…” என்ற உரையாடலுடன் செல்பேசி அமைதியானது.

மனதில் எழுந்த கோபமும், ஏமாற்றமும் முகத்தை சிவக்க வைத்திருக்க சூரியப் பழமென சிவந்து நின்றாள் ரம்யா.

“ச்ச்சே… இவங்களையா நாம நம்பினோம்…” என யோசிக்கும்போதே வெறுப்பில் முகம் சுழிய கண்ணில் முணுக்கென்று கண்ணீர் இயலாமையுடன் எட்டிப்பார்த்தது.

“எத்தனை கேவலமா யோசிக்கிறாங்க, எல்லாமே பிளானா… வெங்கி என்னை உருகி உருகிக் காதலிச்சது எல்லாம் நடிப்பா…? இந்தப் பொம்பளையோட சேர்ந்து பணத்துக்காக நடிச்சதா… என் வெங்கி, என் வெங்கின்னு அவனுக்காக பெத்து வளர்த்தவங்களைக்கூட தூக்கி எரிஞ்சு கேவலமாப் பேசினனே, அதெல்லாம் இந்த பித்தலாட்டக்காரங்களுக்கு வேண்டியா…? அந்தப் பொம்பளை பசப்பு வார்த்தை பேசிப் பேசி என்னை ஒரு பைத்தியம் மாதிரி ஆக்கிருச்சே… எல்லாம் இந்த பணப்பேய்களுக்கு வேண்டியா…?” அவளால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஏமாற்றங்களே

என்றும் மாற்றங்களின்

மூலதனம்…

கோபத்தின் முடிவுகள்

சிலநேரம் கோபுரத்திலும்

கொடி ஏற்றலாம்…

Advertisement