Advertisement

அத்தியாயம் – 11

“அப்பா… எனக்கு இங்க எதுவுமே பிடிக்கலை, கலர் பிடிச்சா டிஸைன் நல்லால்ல, டிஸைன் பிடிச்சா கலர் பிடிக்கல… அந்தப் பணத்தை எனக்குக் கொடுங்க… நானே பிடிச்ச போல தேடிப் பிடிச்சு வாங்கிக்கறேன்…” கடையில் உள்ள துணிகள் மொத்தமும் புரட்டிப் போட்டும் மனம் திருப்தியாகாமல் சொன்ன மகளை சங்கடத்துடன் பார்த்தார் சரவணன்.

சொந்தத்தில் வரப் போகும் ஒரு கல்யாணத்திற்காய் குடும்பத்தோடு துணி எடுக்க வந்திருந்தனர்.

“என்னடா கண்ணு, இவ்ளோ துணியிருக்கு… எதுவுமேவா உனக்குப் பிடிக்கல, இவ்ளோ நேரம் துணியைப் பார்த்திட்டு எப்படி எதுவும் எடுக்காமப் போறது… சரி, பேருக்கு ஏதாச்சும் வாங்கிக்க, அப்புறம் உனக்குப் பிடிச்ச போல தேடிப் பிடிச்சு எடுத்துக்க…” என்றார் மெல்லிய குரலில்.

“இல்லப்பா, காவிக்கும் பிடிக்கலேன்னா பார்க்கலாம்…” என்றாள் மூத்தவள்.

“காவி, உனக்குப் பிடிச்சதை எடுத்துட்டியாமா…?” சின்னவளிடம் கேட்க அவள் இரண்டு செட் டிரஸ்ஸைக் கையில் பிடித்து, “எடுத்துட்டேன் பா…” என்றாள்.

பூங்கொடியும் அவளுக்கான சேலைகளை எடுத்து வர அதற்கு மட்டும் பில் போடுமாறு கூறியவர் பெரிய மகளின் விருப்பம் போல் கையில் பணம் கொடுத்துவிட்டார். அவளும் கல்லூரி முடிந்து தோழியருடன் இருக்கும் கடையெல்லாம் சென்று அலசி பிடித்ததை வாங்கிக் கொண்டாள்.

கல்யாண மண்டபத்தில் ரம்யாவின் உடையைக் கண்ட பெண்களின் கண்கள் திகைப்பில் விரிந்தது.

அவள் அணிந்திருந்த உடை அத்தனை அழகாய் இருந்தது.

“பூங்கொடி, காவ்யா போட்டிருக்க டிரஸ்ஸை விட ரம்யா போட்டிருக்கிற டிரஸ் ரொம்ப அழகாருக்கே, எங்க வாங்கினது…”

“நாங்க பெரிய துணிக்கடைக்கு தான் எல்லாருக்கும் டிரஸ் எடுக்கப் போனோம்… காவியும் நானும் அந்தக் கடைல வாங்கினாலும் ரம்யாக்கு அங்க எதுவும் பிடிக்கல… இந்த டிரஸ் அவளே நிறைய கடைல அலைஞ்சு திரிஞ்சு வாங்கிருக்கா… அவ எப்பவும் அப்படிதான், போனாப் போகுதுன்னு எல்லாம் தன்னோட விருப்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டா…” என்றாள் பெருமையுடன்.

அன்னை பேசியது சற்றுத் தள்ளி தன் வயது உறவுப் பெண்களுடன் அமர்ந்திருந்த ரம்யாவின் காதில் விழ பெருமையாய் உணர்ந்தாள். அந்தப் பெண்களும் அவளது உடையைப் பற்றி தான் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“இந்த நெக்லஸ் கூட ரொம்ப மாட்சிங்கா இருக்கு…”

“ம்ம்… இந்த டிஸைன் கடைல தேடிக் கிடைக்காம நாங்களே ஆர்டர் கொடுத்து செய்தோம்…” என்றாள் அவள்.

மற்றொரு நாள் சரவணன் வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார்.

பூங்கொடி எல்லாருக்கும் கண்ணாடிக் கோப்பையில் ஐஸ்க்ரீமை எடுத்து கொடுக்க, காவ்யா சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள்.

“என்னப்பா, இன்னைக்கு ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க…?”

“அது… இன்னைக்கு ரமேஷ் என்னோடதான் வண்டில வந்தார்… வழில அவர் வீட்டுக்கு ஐஸ்க்ரீம் வாங்கவும், நானும் அப்படியே வாங்கிட்டு வந்தேன்…” என்றார் சரவணன்.

“ம்ம்… டேஸ்ட் நல்லாருக்குப்பா…” சொல்லிக் கொண்டே ரசித்து சாப்பிடத் தொடங்கினாள்.

ரம்யா அறைக்குள் இருந்து வரவும் “ரம்மி, ஐஸ்க்ரீம் எடுத்துக்கடி…” பூங்கொடி சொல்ல, “என்ன பிளேவர் மா…” எனக் கேட்டாள் மகள்.

“பட்டர் ஸ்காட்ச்…”

“அது எனக்குப் பிடிக்காத பிளேவர் ஆச்சே… எனக்கு இளநீர் ஐஸ்க்ரீம் மட்டும் தான் பிடிக்கும்…” என்றவள் அன்னை எத்தனையோ சொல்லியும் வாங்க மறுத்து விட்டாள்.

“ரம்மி… அடுத்த முறை அப்பா நீ சொன்னது வாங்கிட்டு வர்றேன்… இப்ப கொஞ்சம் டேஸ்ட் மட்டும் பாருடா…” தந்தை சொல்ல, “இல்லப்பா, பிடிக்காத ஒண்ணை எதுக்கு கம்பெல் பண்ணி சாப்பிட சொல்லறீங்க… எனக்கு வேண்டாம்…” சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

“இவ்ளோ கெஞ்சியும் கொஞ்சமாச்சும் திங்கறாளா… அவ சுபாவம்தான் நமக்கு தெரிஞ்சதாச்சே… அவளுக்கு வேண்டாம்னா நாங்க சாப்பிட்டுக்குவோம், நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க…” சொன்ன பூங்கொடி சின்ன மகளுக்கு மீண்டும் கப்பில் ஐஸ்க்ரீமை போட்டுவிட்டு தனது கப்பிலும் போட்டுக் கொண்டாள்.

இப்படி அவள் அப்படித்தான்… என அவளது சுபாவங்களை ஒரு முத்திரையுடன் வீட்டினர் எல்லாரிடமும் சொல்ல, அதைப் பெருமையாய் உணர்ந்தவள் எந்த ஒரு விஷயத்திற்கும் விட்டுக்கொடுக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாமல் பிடிவாதக்காரியாய் மாறிப் போனாள்.

உடை, உணவு விஷயங்களில் அவள் பிடித்தங்களைப் பெருமையாய் பேசிய பெற்றோருக்கு வாழ்க்கை விஷயத்தில் அவளுக்குப் பிடித்ததை ஏற்க முடியாமல் போகவே இந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தனர்.

“எப்பவும் எனக்குப் பிடித்ததை ஏத்துகிட்ட உங்களுக்கு இப்போ மட்டும் என் செயல், விருப்பம் எல்லாம் ஏன் பிடிக்காமல் போச்சு…” மனதுக்குள் ரம்யா கேட்ட கேள்வி தந்தையின் கட்டிலில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தவளின் கண்ணில் கண்ணீராய் கசிந்தது.

“இவ எல்லாம் எந்தக் குடும்பத்திலயும் மருமகளாப் போக முடியாது… நம்ம குடும்பத்துக்கோ, அண்ணனுக்கோ எல்லாம் இவ செட் ஆக மாட்டா… உனக்கென்ன வேற பொண்ணா கிடைக்காது…” மாறிமாறி கவினின் குரல் ஒலித்துக் கொண்டிருக்க மனது வேதனித்தது.

“ரம்யாக் கண்ணு, என் சின்ன மகன் தான் அல்பாயுசுல போயிட்டான்… நீ என் மூத்த மகனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு மருமகளா வந்துடறியா…” சிவகாமி கொஞ்சலுடன் கேட்க ரம்யாவின் மனதோடு முகமும் சுளிந்தது.

“சுமதியோட புகுந்த வீட்டுல என்ன சொன்னாங்களோ, திட்டினாங்களோ எங்க பொண்ணு தூக்குல தொங்கிருச்சு… பெத்தவங்களும் போயி, கூடப் பிறந்தவளும் போயி என் தம்பி மவன் சிவா மட்டும் அனாதையா நிக்கறான்…” கண்ணீருடன் சொன்ன பெண்மணியின் வேதனை அவளுக்குள்ளும் பரவ, “நோ… அப்படி இருக்காது…” என வாய் விட்டு புலம்பினாள் ரம்யா.

“ரமி… நம்ம காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, எந்தக் காதல் உனக்கு வலியைக் கொடுத்ததோ, அதே காதல் உனக்கான வழியையும் காட்டும்…” வேதனை சுமந்த வார்த்தைகள் அவள் காதை உரச கண்ணை சுருக்கினாள்.

“இல்ல, உன்னை என்னால ஏத்துக்க முடியாது…” அவள் இதழ்கள் மெல்ல உச்சரித்துக் கொண்டிருக்க, “ரமி…” ஒரு இனிய குரல் அவள் கலங்கிய கண்ணைத் துடைக்க, பட்டென்று கண்ணைத் திறந்தவள் முழித்துப் பார்த்தாள்.

அருகே நின்ற அர்ஜூன் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று எழுந்தவள் சுற்றிலும் பார்க்க சரவணன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார்.

“இத்தனை நேரம் கண்டதெல்லாம் கனவா… இ..இவன் எப்போது வந்தான்…” யோசித்துக் கொண்டே அவனைப் பார்க்க, “நான் இப்போதான் வந்தேன்… ஆபீஸ் போனாலும்  வேலைல மனசு பதியல, அதான் லீவு சொல்லிட்டு வந்துட்டேன்… மாமாவோட நீயும் நல்லாத் தூங்கிட்டு இருந்த, அவங்கல்லாம் எங்கே…” என்றான்.

“ம்ம்… அத்தயும், அம்மாவும் வீட்டுக்குப் போயிட்டாங்க…”

“ஏன் ஒரு மாதிரி இருக்க, தூக்கத்துல கூட ஏதோ புலம்பிட்டு இருந்த போல இருந்துச்சு…” என்றவனுக்கு அவள் பதில் எதுவும் சொல்லாமல் மௌனிக்க, “மாமாவை நினைச்சு கவலைப்படறியா, அதான் டாக்டர் இனி பிராப்ளம் இல்லேன்னு சொல்லிட்டாரே…” என்றவன், “நீ ரொம்ப டயர்டா தெரியற… காண்டீன் போயி ஒரு காபி குடிச்சிட்டு வரலாமா…” என்றான் பரிவுடன்.

அவளுக்கும் காபி வேண்டும் போல இருக்க, “ம்ம்…” எனத் தலையாட்டினாள். முன்னில் இருந்த நர்சிடம் சொல்லிவிட்டு இருவரும் காண்டீனுக்கு சென்றனர்.

இருவரும் ஒரு மேஜையின் எதிரெதிரே அமர்ந்தனர். எப்போதும் அலட்சிய பாவனையுடன் கடினமாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பவள் இன்று ஏதோ யோசனையுடன் தலை குனிந்து அமர்ந்திருக்கவே அர்ஜூனுக்குப் பாவமாய் இருந்தது.

இருவருக்கும் காபி சொன்னவன், “வேற எதுவும் சாப்பிடறியா ரமி…” எனவும் நிமிர்ந்தாள்.

“வேண்டாம்…”

“ஏன், ஒரு மாதிரி யோசனையாவே இருக்க…” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் நகத்தை நோண்டிக் கொண்டிருந்தாள்.

“ஒருவேளை, மாமாக்கு இப்படி ஆயிட்டதால என்னைக் கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம் வந்திடுமோன்னு பயப்படறியா…” கண்களை சிமிட்டியபடி அழகான புன்னகையுடன் சொன்னவனை அவஸ்தையுடன் ஏறிட்டாள்.

நேசம் மட்டுமே சுமந்திருந்த கண்கள் அவளை நோக்கி சிரித்துக் கொண்டிருக்க, “கவின் சொன்ன போல இவனுக்கு என்ன வேற பெண்ணா கிடைக்காது…? எதுக்கு என்னையே சுத்திட்டு இருக்கான்… பார்க்க அழகாருக்கான், நல்லாப் படிச்சிருக்கான், ஓரளவுக்கு நல்ல வேலை, அப்புறம் எதுக்கு வேண்டாம்னு நிக்கற என்னையே வேணும்னு நிக்கறான்…” முன்பு அவளுக்கு குறைச்சலாய் தோன்றிய அவன் தகுதிகள் இப்போது நிறைவாய் தோன்றியதை உணரவில்லை.

அமைதியாய் காபி பருகியவளை அவன் விழிகள் ஆவலுடன் பருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு ஒரு மாதிரி தவிப்பாய் இருந்தது. வேகமாய் குடித்துவிட்டு எழுந்தாள்.

முன்னில் நடந்தவளைத் தொடர்ந்தவன், “ரமி… நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே…” என்று கை பிடித்து நிறுத்த சட்டென்று கையை இழுத்துக் கொண்டாள்.

“ச…சாரி, தப்பா நினைச்சுக்காத ரமி… இவ்ளோ நாள் என்னை வேண்டாம்னு நீ சொன்னப்ப தெரியல, இப்ப வீட்டுல சீரியஸா கல்யாணப் பேச்சை எடுக்கவும் தவிப்பா இருக்கு…”

“ஏன் இப்படி என்னைத் தொந்தரவு பண்ணறிங்க… உங்க விருப்பப்படி என்னைக் கல்யாணம் பண்ணாலும் நம்ம வாழ்க்கை நல்லாருக்கப் போறதில்லை… என்னோட சுபாவமும், பிடிவாதமும் உங்க நிம்மதியைக் கெடுத்திரும்… தயவு செய்து விலகிப் போங்க…”

“அப்படி சொல்லாத ரமி… நீ எப்படி இருக்கியோ, இதே குணத்தோட உன்னை ஏத்துக்க நான் தயார்… எனக்காக நீ உன்னை மாத்திக்கவெல்லாம் வேண்டாம்… என்னை ஏத்துகிட்டா மட்டும் போதும்…”

“என்னால வெங்கியை மறந்து உங்களோட குடும்பம் நடத்த முடியாது அர்ஜூன்… அப்பாக்கு உடம்பு சரியில்லாமப் போனதை சாக்கா வச்சு நீங்க நினைக்கறதை நடத்திக்க நினைக்காதீங்க…” என்றதும் மனது வலிக்கவே வேதனையுடன் அமைதியாக, முன்னில் நடந்தவள் அவன் பதில் சொல்லாததைக் கண்டதும் திரும்பிப் பார்த்தாள்.

“ஒரு பர்சன்ட் கூட உனக்குப் பிடிச்சவனா நான் இல்லையா ரமி…” என்றவனின் குரல் வேதனையைக் கூட்ட, “என் அத்தை மகனா, கவினை விட உங்களை எனக்குப் பிடிக்கும்… ஆனா என் புருஷனா உங்களை ஏத்துக்கதான் முடியல, தயவு செய்து புரிஞ்சுக்கோங்க…”

அதற்குமேல் அவளிடம் என்ன சொல்லுவதென்று புரியாமல் அமைதியாய் வந்தான் அர்ஜூன். சரவணன் இருந்த அறையை அடைய அப்போதுதான் அவர் உறக்கம் கலைந்து கண் விழிக்கத் தொடங்கினார்.

மகளும் மருமகனும் ஜோடியாய் உள்ளே வருவதைக் கண்டவரின் கண்கள் ஆர்வத்துடன் அவர்களைப் பார்க்க, “எழுந்துட்டீங்களாப்பா… நர்சைக் கூப்பிடறேன்…” என்றவள் வெளியே செல்ல அர்ஜூனை ஏறிட்டார் சரவணன்.

“மாப்பிள, ரம்யா ஏதாச்சும் சொன்னாளா…?” அவரின் எதிர்பார்ப்பான கேள்வி புரிய சின்னதாய் புன்னகைத்தான்.

“கவலைப்படாதீங்க மாமா, சீக்கிரமே ரம்யா சம்மதிச்சிருவா… நீங்க சீக்கிரம் உடம்பைத் தேத்திக்குங்க, அப்போ தான் கல்யாண வேலை எல்லாம் ஓடியாடிப் பார்க்க முடியும்…” என்றவனை நம்பிக்கையுடன் நோக்கிப் புன்னகைத்தார்.

அவருக்கு ஜூஸ் கொடுக்கலாமென்று ஊசியைப் போட்ட நர்ஸ் சொல்லவே சென்று வாங்கி வந்து கொடுத்தான். சிறிது நேரத்தில் அன்னையரும் வீட்டிலிருந்து சமைத்த உணவுடன் வந்துவிட்டனர்.

“அர்ஜூன், இனி அண்ணனை நாங்க பார்த்துக்கறோம், நீ ரம்யாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு… உங்களுக்கு லஞ்ச் எடுத்திட்டு வரலை…” மல்லிகா கூறினார்.

“ம்ம், சரிம்மா…” அர்ஜூன் சம்மதிக்க, “இல்ல, நான் இங்கயே இருக்கேன்…” என்றாள் ரம்யா.

“இங்க மூணு பேரு இருந்தா திட்டுவாங்க ரம்யா, நீ மாப்பிள்ளையோட கிளம்பு…” பூங்கொடி சொல்ல அவரை எரிச்சலாய் ஒரு பார்வை பார்த்தாள்.

“ரம்யா கண்ணு, கிளம்புடா…” தந்தை சொல்ல சம்மதித்தாள்.

அவர்கள் கிளம்பியதும் பெருமூச்சு விட்டாள் மல்லிகா.

“ஹூம்… ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் எவ்ளோ நல்லாருக்கு… இவ சம்மதிச்சுட்டா எவ்ளோ நல்லாருக்கும்…”

“சம்மதிப்பா மா, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…” என்ற அண்ணனை நோக்கி, “சம்மதிச்சா ரொம்ப சந்தோஷம் அண்ணா… என் அர்ஜூன் அவளை சந்தோஷமா வச்சுப்பான்…” என்றார் பெருமையுடன்.

“ம்ம்…”

“சரி, சாப்பிடறீங்களா…” கேட்ட பூங்கொடி அவரை மெல்ல எழுப்பி சாய்வாய் அமர வைத்தார்.

அர்ஜூன் ரம்யாவிடம், “ரமி… வெயிட் பண்ணுமா, வண்டிய எடுத்திட்டு வந்துடறேன்…” சொல்லி பார்க்கிங் நடந்தான்.

சில நிமிடத்தில் தன் முன் பைக்குடன் நின்றவனை நோக்கி, “பைக்லயா…?” அதிர்ச்சியுடன் கேட்டாள் ரம்யா.

“பயப்படாம ஏறு ரமி, ஸ்பீட் பிரேக்கர் இல்லாத ரூட்டுல உன்னைக் கூட்டிட்டுப் போறேன்…” என்று சிரிக்க, கடுப்புடன் அவன் பின்னில் அமர்ந்தாள்.

“தோள்ல கை வச்சுக்க ரமி, நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்…” அர்ஜூன் சொல்லவும் முதுகில் முறைத்தவளை கண்ணாடியில் நோக்கியவனுக்கு உற்சாகமாய் இருந்தது.

பிடித்தத்தில் வந்த

பிடிவாதம்…

பிரியங்களில் இளகிடுமோ…

காதலின் வலியே

காதலுக்கு வழியாய்

மாறி வாழ்த்திடுமோ…

Advertisement