Advertisement

அத்தியாயம் – 5

திங்கள் காலை அலுவலக பரபரப்பிற்கு இடையில் ராகவனிடமிருந்து மெசேஜ் வந்தது மாலினிக்கு. அலுவலகம் முடியும் முன் ஒரு அரை மணி நேரம் முன்னதாக, பக்கத்திலிருக்கும் ஒரு மாலின் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்று.

ஒப்புக்கொண்டவள், கையோடு பெர்மிஷனும் போட்டாள். சொன்னது போலவே ராகவன் காத்திருந்தான்.

“ரகு…”, அவன் முகத்தைப் பார்த்தபடியே அவன் எதிரில் அமர்ந்தாள் மாலினி.

“வா மாலினி, என்ன சாப்பிடற ?”, ராகவன் இயல்பாய் கேட்கவும், எப்போதும் போல வென்னிலா காபி ஆர்டர் செய்தாள். இருவருக்குமாக சொல்லியபின் ஒரு சிறிய மௌனம் நிலவியது.

“அஸ்வின் அங்க நடந்தது எல்லாம் சொன்னான் ரகு. எக்ஸ்ட்ரீம்லி சாரி. அம்மா இப்படியெல்லாம் பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. நாளைக்கு நான் வந்து வாழப்போற வீடுன்னு கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணவேயில்லை. “, வருத்தமாய் தெரிவித்தாள் மாலினி.

ஒரு பெருமூச்சுடன், “ஆமாம். இந்த இரண்டு நாளா எங்கம்மாவும் ஒரே புலம்பல். என்னவோ நான் அவங்களை நிர்கதியா விட்டுட்டு உங்க வீட்டோட மாப்பிள்ளையா வந்துடுவேன்னு நினைச்சிக்கறாங்க.  இல்லன்னு நான் சொன்னாலும் அவங்களுக்கு நம்பிக்கையேயில்லை.”

“நான் வேணா பேசவா அத்தைகிட்ட ? அந்த மாதிரியெல்லாம் எனக்கு எண்ணமில்லைன்னு ?”

அவள் அத்தை என்று முறை வைத்துப் பேசியது இனித்தாலும், “பெத்த பிள்ளை மேலையே நம்பிக்கையில்லை. உன்னை மட்டும் நம்பிடுவாங்களா?  உங்கிட்ட எதுவும் தப்பா பேசிட்டா அது காலத்துக்கும் வடுவா போயிரும் மாலினி. நான்தான் பேசி புரிய வைக்கணும். “, காபியை சுவைத்தபடியே கூறியவனின் கூற்றும் ஏற்றுக்கொள்ளும்படிதான் இருந்தது.

“எல்லாம் எங்க அம்மாவால வந்தது. ஆனா அப்பா கிட்ட ஒரு மாதிரி இண்டிகேஷன் குடுத்துட்டேன். இதுல நீங்க சொல்றதுதான் முடிவுன்னு. ஒன்னு கல்யாணம் தள்ளி வெச்சிட்டு உங்களுக்கு டைம் குடுக்கணும். இல்லை, இருக்கற வீட்டுக்கு நான் கல்யாணமாகி வரணும்.”

“அவங்க ஒத்துக்கலைன்னா ?”

“வேற வழி இல்லை ரகு. வேற யாரையும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லுவேன். என்ன செய்ய முடியும். ஒரு வருஷம் முடிஞ்சு நீங்க இன்னொரு ரூம் ரெடி செஞ்ச அப்பறம் கல்யாணம் செய்ய கேட்கணும்.”, தோளை குலுக்கினாள்.

“அப்போ உங்க அப்பா கிட்ட காசை வாங்கி நான் இப்பவே ரூம் கட்டணும்னு சொல்ல மாட்டியா ?”, ராகவன் அவளை ஒரு சிரிப்புடன் கேட்க,

“சொன்னா, சரின்னு சொல்லுவீங்களா ?”, அவளும் அதே சிரிப்புடன் பார்த்தாள்.

நேரடியாக அவளுக்கு பதில் சொல்வதை தவிர்த்தவன், “அவங்க சொல்றதுல நியாயம் இருக்கு மாலினி. எனக்கும் அது புரியுது. அதையே கொஞ்சம்  நல்ல விதமா சொல்லியிருக்கலாம். ம்ப்ச்…”, ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டு தன்னை சமன்படுத்தி பின் அவளை நிமிர்ந்து நோக்கினான்.

“என்ன செய்யலாம் சொல்லுங்க. உங்க முடிவுதான். “, மீண்டும் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தாள்.

“கஷ்டம்தான்.  வாங்கற கடன் ரூம் போட இன்னும் சேர்த்து வாங்கணும். திரும்ப மீண்டு வர இன்னும் நாளாகும். “, முகமும் குரலும் ஒரு சேர வருத்தத்தை தெரிவித்தது.

“ரகு. நான் இரண்டு விஷயம் யோசிச்சிருக்கேன். உங்களுக்கு சரிபடுமான்னு பாருங்க.”, பீடிகையுடன் ஆரம்பித்தாள் மாலினி.

மேலே சொல் என்பது போல தலையை ஆட்டியவன், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“அப்பாகிட்ட வரதட்சணை வாங்க உங்களுக்கு பிடிக்கலை சரி. ஆனா எனக்கு கல்யாண சீர்னு செய்வாங்கதானே ? அதை நான் பணமா வாங்கிக்கறேன். சீர் பொருளா செய்யவேண்டாம்னு சொல்லிடறேன். அது கூட, இப்ப எங்கிட்ட சேமிப்பா இருக்கு ஒரு ரெண்டு மூணு மாச சம்பளம். அதுவும் சேர்த்து நாம ரூம் கட்டிக்கலாம்.”

“இரண்டும் ஒண்ணுதான மாலினி? வரதட்சணைங்கறதுக்கு பதில் சீர் செய்யறதுன்ற பேர்ல வாங்கிக்க சொல்ற.”, ஒரு கசந்த புன்னகை வெளிப்பட்டது ராகவனிடம்.

“இல்லை, இதுல நீங்க வரவேயில்லை. எனக்கு நகை போடறதைப் பத்தி உங்களுக்கு ஒண்ணுமில்லைதான? அப்ப சீர் பொருள் தரதைப் பத்தியும் உங்களுக்கு என்ன? இதையும் நான் அப்பாகிட்ட, ‘அவங்க வீட்டுக்குப் போய் எனக்கு என்ன தேவை, எவ்வளவு இடம் இருக்குன்னு பார்த்துகிட்டு வாங்கிக்கறேன். நீங்க என் அக்கவுண்ட்ல உங்களுக்கு என்ன பட்ஜெட்டோ அதை போடுங்கன்னு சொல்றேன்.’ அவங்க போடறதை போடட்டும். நமக்கு இன்னும் தேவைபட்டா என் பேர்ல பெர்சனல் லோன் போட்டுக்கலாம். என் சாலரில சீக்கிரமா அடைச்சிடலாம். நீங்க வீட்டு மேல கடன் வாங்க வேண்டாம்.”

“பணம் மானேஜ் செய்யறது எப்படின்னு உனக்கு சொல்லியா தரணும்? “, மெச்சுதலாய் பார்த்தவன், “ஆனாலும் உன்பேர்ல லோன் எடுக்கணுமா? “, என்று யோசித்தான்.

“தேவைப்பட்டாதானே? பார்த்துக்கலாம். எப்படின்னாலும் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் குழந்தையை தள்ளிப் போடலாமான்னும் கேட்க நினைச்சேன். என் சம்பளமும் சேர்த்தா, உங்க கடன் சீக்கிரம் அடையும்.” , மாலினி தன் இரண்டாவது யோசனையைச் சொல்ல,

அகத்தின் வலி முகத்தில் தெரிய, “ம.. மாலினி…”, என்ற ராகவனின் குரல் கரகரத்தது.

“ஒரு வருஷம் கல்யாணத்துக்குத்தான் காத்திருக்க முடியாது ரகு. இதை தள்ளிப் போட்டுக்கலாம். யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். எப்படியும் ஒரு ஆறு, ஏழு மாசம் கழிச்சுதான் கேட்க ஆரம்பிப்பாங்க. அப்ப எதாவது சொல்லிக்கலாம். “

அவள் யோசனை ராகவனை குற்ற உணர்ச்சிக்குத் தள்ளியது. இன்னொரு புறமோ, தனக்காக யோசிக்கும் இவள் எனக்கு கிடைத்த வரம் என்று நெகிழவும் வைத்தது. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான் ராகவன்.

அவனது கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தைப் பார்த்து, புரிந்து கொள்ள முடியாமல், “ரகு… நான் தப்பா எதுவும்…”,

“தள்ளிப் போட வேண்டாம்னு சொல்லமுடியாத சூழல்ல இருக்கேன் நான். அதை நினைக்க கஷ்டமா இருக்கு மாலினி. இதுக்குத்தான் நான் வேண்டாம் உனக்குன்னு சொன்னேன். பார் என் கூட சேர்ந்து….” இன்னும் என்ன சொல்லியிருப்பானோ

“உங்களை இப்பவே கல்யாணம் செய்ங்கன்னு ப்ரஷர் செய்யலைன்னா இதெல்லாம் தேவையிருந்திருக்காது. நீங்க கஷ்டப்படுத்திக்காதீங்க ரகு.”, என்றாள் வேகமாக, அவன் கையை மெல்ல அழுத்தியபடி.

எப்போது அவள் கையுடன் தன்னதைக் கோர்த்தான் என்ற நினைவில்லை ராகவனுக்கு.

மற்றொரு கையும் சேர்த்து அவள் கரத்தைப் பிடித்தவன், “ எனக்காக யோசிக்க நீ இருக்கன்ற நினைப்பே எனக்கு யானை பலம் மாலினி. அப்பா போனதுக்கு அப்பறம், இது வரைக்கு வீட்ல எல்லாரும் என்னை நம்பி அவங்க சுமையைத்தான் இறக்கி வெச்சாங்க. நீ….நீதான் என் சுமையை பங்கு போட …”, கண்ணில் லேசாய் நீர் திரையிட, குரல் அடைக்க ராகவன் நிறுத்தவும்,

“ஷ்… ரகு. என்னது இது? உங்க கூட துணையா வரத்தானே துணைவியா வரேன். எல்லாம் சேர்ந்து பார்த்துக்கலாம். உங்க கமிட்மெண்ட்ஸ் முடிச்சு, நமக்குன்னு ஒரு வாழ்க்கை நல்லபடியா வாழலாம்.”, மனைவியாக வரப் போகிறவள் அத்தனை நம்பிக்கையாக சொல்லவும், சற்று நிதானத்திற்கு வந்தவன், புன்னகையோடு  மெல்ல அவள் கைகளைத் தட்டிக்கொடுத்து, விடுவித்தான்.

அவள் கொடுத்த நீரை அருந்தியவன், “சாரிமா…என்னைப் பத்தி நீ இவ்வளவு யோசிச்சிருக்க. ஆனா நம்ம கல்யாணம் கூடி வந்ததைக்கூட நாம கொண்டாடவேயில்லை. நீ சொல்லு. என்ன பண்ணலாம் ?”, என்று மாலினியைக் கேட்டான்.

“ஹ்ம்ம்… சரி, இந்த சனிக்கிழமை ஈவ்னிங் ஷோ படத்துக்கு புக் செய்யறேன். இது வரைக்கும் நாம சேர்ந்து சினிமாக்கு போனதேயில்லை. ஒரு படமாச்சம் கல்யாணத்துக்கு முன்னாடி போவோம்.”, என்றாள் விரிந்த புன்னகையோடே.

“எந்த படம்னு சொல்லு நான் புக் செய்யறேன். உங்க வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போறேன். “, என்று சம்மதமாய் ராகவன் கேட்க, மாலினிக்கு இரட்டிப்பு சந்தோஷம். அவன் வருவதாய் சொல்வதோடு தன் வீட்டிற்கும் வந்து அழைத்து செல்வது.

“அப்படியா? என்னை தியேட்டர் வர சொல்லுவீங்கன்னு நினைச்சேன். “

“அதெப்படி? உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு உரிமையா அழைச்சிகிட்டு போரேன். அதுக்காகத்தானே இதுவரை எங்கையும் அப்படி தனியா உங்கூட சுத்தினதில்லை.“

“ஆமாம்…ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்தான். நானே கேட்டும் முடியாதுன்னு இந்த காபி ஷாப் தாண்டி எங்கையுமே கூட்டிட்டு போனதில்லை. இருக்கட்டும் நம்ம பிள்ளை கேட்கும்போது, நல்லா மாட்டிவிடறேன் உங்களை.”, கலகலத்தாள் மாலினி.

அவளோடான அந்த வாழ்க்கையை நினைக்கையிலேயே இனித்தது ராகவனுக்கும்.  நினைப்பதெல்லாம் நினைத்தபடி நடந்துவிடுமா இல்லை வாழ்க்கைதான் அத்தனை எளிதில் நடக்கவிட்டுவிடுமா ?

மாலினி பலவாறாகப் பேசி அவள் பெற்றோரை சம்மதிக்க வைத்தாள்.  இளங்கோவன், தன் பெண் முன்னமே இதைத்தான் சொல்லுவாள் என்று எதிர்பார்த்ததால், பெரிதாக ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. சகுந்தலா மட்டுமே புலம்பிக்கொண்டிருந்தார். ராகவன் அவளை சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வந்த போது, மாமனாரிடம் ஒரு முறைக்காக கல்யாணம் முடிந்ததும் ரூம் போட ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தான். இருந்ததோதும், அவன் செய்வான் என்ற நம்பிக்கையில்லை என்பது போல இருந்தது அவர் முகம். வாய் மட்டுமே,

“ இருக்கட்டும் ராகவன். பத்திரமா கூட்டிட்டு போயிட்டு நேரத்தோட வாங்க.”, என்று சொன்னது.

ராகவனும் அதற்கு மேல் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.ஒரு தலையசைப்புடன் மாலினியை அழைத்துக்கொண்டு விடை பெற்றான். இளங்கோவனின் விட்டேத்தியான பதில் மனதிற்குள் தகித்தது ராகவனுக்கு. இருந்தாலும், மாலினி ஆசையுடன் கேட்டு முதல் முறையாக அவளை அழைத்துச் செல்லும்போது இந்த நினைப்பெல்லாம் வேண்டாம் என்று முயன்று மனதை மாற்றிக்கொண்டான். ஆனாலும் சுவையான பால்கோவா சாப்பிடும்போது இடையில் மாட்டிய சிறு கல்லாக ஒரு உறுத்தல் இருந்தது. மாலினி உணரவில்லை அல்லது ராகவன் உணர விடவில்லை என்பதால் அவளுக்கு அன்றைய பொழுது இனிதான நினைவாகவே அமைந்தது. அதில் திருப்தி கொண்டான் மாலினியின் ரகு.

Advertisement