Advertisement

இடம் 7
கீர்த்தியும், மிதுனும் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் கீர்த்தி மனம் அதில் செல்லவே இல்லை. அதில் வந்த காட்சி அப்படி…
திடீரென மணமகள் காணாமல் போய் விடுகிறாள், தனது காதலனை தேடி…
அதனால் அந்த மணமகனுக்கு கட்டிக்கும் முறையில் உள்ள ஒரு பெண்ணை பார்த்து அதே மணமேடையில் கட்டி வைக்கின்றனர்.
கிட்டதட்ட அதே போல் ஒரு நிகழ்வு அவள் வாழ்வில் நடந்து, இப்போது எல்லோரையும் விட்டு விட்டு இங்கே வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.
‘சரவண மாமா கல்யாணம் உடனே நம்ம எவ்வளவு ஆனந்தப்பட்டோம். ஆனா எல்லாம் அந்த பவித்ரா மண்டபத்தில் இருந்து போற வரைக்கும் தான். அதுக்கு அப்பறம் அந்த மண்டபத்தில் நமக்கு நடந்தது எல்லாம் நினைச்சா இப்போ கூட அவ்வளவு வருத்தம் கோபம் எல்லாம் வருது. அய்யோ ஏன் மா இப்படி பண்ணீங்க??. ஏன் என்னை மாமாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க??. ஏன்…’ என்று இன்னும் அவளது கேள்விகள் தொடரும் முன் மிதுன் அவளை அழைத்தான்.
“இடைவேளை கீர்த்து. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன். உனக்கு ஸ்னேக்ஸ் எதுனா வேனும்னா சொல்லு, வரும் போது வாங்கிட்டு வரேன்” என்று கேட்டான் மித்து.
“இல்ல மித்து… சாப்பிட எதுவும் வேணாம். குடிக்க மட்டும் எதுனா வாங்கிட்டு வா. நான் இங்கயே இருக்கேன்” என்று சொன்னாள்.
கீர்த்தியும், மிதுனும் அமர்ந்து இருந்த இருக்கை நடைபாதைக்கு அருகில் இருந்தது. அந்த நடைபாதையில் அடுத்த பக்கத்தின் ஓர இருக்கையில் தான் அமிரும், மதனும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் இருவரும் கூட வெளியே சென்று இருந்தனர்.
சிறிது நேரத்தில் படம் ஆரம்பித்து விட மூவரும் வரவில்லை. சில நொடிகளில் காலடி ஓசை கேட்க, சரி மித்து தான் வருகிறான் போல என்று எண்ணி, தனது கைபேசியில் ஒளியை ஏற்படுத்தி பாதையை காட்டினாள். ஆனால் வந்தது அமிரும், மதனும்…
அவளது உதவிக்கு, “ஹேய் கேர்ள்… தேங்க்ஸ்” என்று அமிர் மென் புன்னகையுடன் கூற, சிறிதாய் இதழை இழுத்து வைத்து ஒரு சின்ன தலையசைப்புடன், “ம்ம்ம்” என்ற ஒலியை எழுப்பினாள். அது அவர்களுக்கு கேட்டு இருக்குமா??. தெரியவில்லை.
கீர்த்தி மித்துக்கு தொலைபேசியில் அழைத்தாள், ஆனால் அது, “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசி கொண்டு உள்ளார். தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்” என்று தமிழில் சொல்லி விட்டு அடுத்து, “த நம்பர் யூ ஆர் ட்ரையிங்” எனும் போதே அழைப்பை துண்டித்து விட்டாள் அதை கேட்காமல்.
மேலும் சில நிமிடங்கள் பொருத்து அவள் அவனுக்கு அழைக்கவும், அவளது தோளை தட்டி குடிக்க பாணத்தை நீட்டினான் மிதுன். அவனை பார்த்ததும் அழைப்பை நிறுத்தி விட்டு அதை கையில் வாங்கினாள்.
“இதை வாங்க தான் இவ்வளவு நேரமா மித்து. அப்பனா வாங்கமாயே வந்து இருக்கலாம்ல” – கீர்த்தி.
“இல்லடா கீர்த்து. ஒரு கால் வந்தது. அதான் பேசிட்டு வர லேட் ஆகிடுச்சி” – மிதுன்.
“ஓஓஓ” என்றவள் அதற்கு மேல் கேட்டு கொள்ளவில்லை. ஆனால் மித்துவே, “வீடு ப்ளான் போட ஒருத்தங்ககிட்ட பேச சொல்லி ஏன் ப்ரெண்ட் கிட்ட சொல்லி இருந்தேன். அவன் தான் போன் பண்ணி,  அவங்க நம்பர் கொடுத்தான்” என்று சொன்னான். கீர்த்தி அதற்கு பதிலாக, கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் வட்டம் போல இணைத்து மற்ற மூன்று விரல்களையும நேராக வைத்து ‘சூப்பர்’ என்பதை சைகையால் சொன்னாள், அந்த குளிர் பாணத்தை ஸ்ட்ராவால்(straw) உறிஞ்சி கொண்டே…
எதெர்ச்சியாக இந்த பக்கம் திரும்பிய அமிருக்கு, அவளின் சைகை நன்றாகவே தெரிந்தது. அவள் அழகாய் தெரிந்தாள் அவன் கண்களிற்கு. அதன் பின் படம் பார்ப்பதும், சில நேரம் திரும்பி அவளை பார்ப்பதுமாய் இருந்தான் அமிர்.
படம் முடிந்து அனைவரும் வெளியே வந்தனர். அதற்குள் மதிய உணவு நேரம் வந்து இருக்க, அருகே இருந்த உணவகத்தினுள் நுழைந்தனர் கீர்த்தியும், மிதுன்.
உள்ளே நடந்து வந்த மித்து, அங்கே இருந்த நபரை பார்த்து விட்டு கீர்த்தியை பார்த்து முறைத்தான்.
அவனை பார்த்து லேசாய் சிரித்தவள், “வா மித்து… அங்க போய் உட்காரலாம்” என்று அந்த நபர் இருந்த மேசைக்கு அழைத்து சென்றாள்.
“ஹாய் கவிக்கா… ரொம்ப நேரம் வெயிட் பண்ணீங்களா??” என்று அந்த மேசையில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டே கேட்டாள் கீர்த்தி.
“சே.. சே… இல்ல கீர்த்து… வந்து ஒரு டென் மினிட்ஸ் தான் இருக்கும்” – சங்கவி.
“ஹலோ சார். இன்னும் கோபம் போகலையா??” என்று சங்கவி மிதுனை நோக்கி கேட்க, மிதுன் அவளை ஒன்றும் சொல்லாமல் முறைத்து விட்டு உணவுகளை ஆர்டர் செய்தான்.
அவன் அசைவ உணவு வகைகளை சொல்லி கொண்டு இருக்க, “மித்து எனக்கு சைவம் மட்டும் போதும்” என்றாள்.
“ஏன்??” – கவி
“இல்ல… பிறந்த நாள்… கல்யாண நாள்.. இல்ல எதுனா ஸ்பெஷல் டேனா நாங்க நான் வெஜ் சாப்பிட மாட்டோம்” – கீர்த்தி.
“ஓஓஓ” – கவி
“ஆனா நாங்க சாப்பிடுவோம்” என்ற மித்து தொடர்ந்து ஆர்டர் செய்தான்.
உணவு தயாராகி வரும் இடைவேளையில் கவிக்கும், மித்துவுக்கும் இருந்த வாய் கால் தகராறு கீர்த்தியின் வாய் பேச்சால் தீர்த்து வைக்கப்பட்டது.
உணவும் வர கேலி கிண்டல் பேச்சுக்களுடன் உணவு வேளையும் முடிந்தது.
கவி, “ஆமா மித்து. வீடு கட்டுற ப்ளான் என்ன ஆச்சி??” என்று கேட்டாள்.
“ஹேய்… ஆமா… யாரோ நம்பர் கொடுத்தாங்கனு சொன்னயே மித்து!!. அவங்களுக்கு கால் பண்ணி பேசலாம்ல” என்று கேட்டாள் கீர்த்தி.
“வீட்டுக்கு போய்ட்டு பண்ணலாம் நினைச்சேன்” – மித்து.
“வீட்டுக்கு போக லேட் ஆச்சினா!!. இப்பவே பண்ணி கேட்டனா… அவங்க ஃப்ரீயா இருந்தா… இன்னிக்கே இந்த அவங்கள நீ போய் மீட் பண்ணிக்கலாம்ல. இல்லனா நாளைக்கும் லீவ் போடனும் இல்லனா பர்மிஷன் போடனும்” என்று அவன் மேல் அக்கறையாய் சொன்னாள் கவி.
“சரி… சரி… பண்ணறேன்” என்ற மித்து, அமிரின் அழைப்பேசிக்கு அழைத்தான்.
இவர்களுக்கு பக்கத்து மேசையில் அமர்ந்து இருந்தவர்களில் ஒருவனின் அலைபேசியில் ஆன்ட்ராய்டு செயலியின் டிபால்ட் ரிங் டோன் ஒலித்தது. அனைத்து உயிர்களின் டிபால்ட் செயலின்படி சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினர். அங்கே தான் அமிரும், மதனும் அமர்ந்து இருந்தனர். அதில் அமிரின் அலைபேசி தான் ஒலித்தது.
“ஹலோ” அட்டண்ட் செய்து அமிர் கேட்டான்.
“ஹலோ” என்றவன், “தேவ் தான நீங்க??” என்று கேட்க, அமிரும் “ஆமாம்” என்றான்.
“நான் மிதுன். ஒரு வீடு கட்டனும்… உங்கள அப்ரோச் பண்ண சொன்னாங்க” என்ற மிதுன் அவனது தோழனின் பெயரும் சொல்ல, ஏற்கனவே அதை பற்றி சொல்லி வைத்து இருந்தான் மதன்.
“ஆமாங்க… சொல்லுங்க” – அமிர்.
“வந்து நாம இன்னைக்கே மீட் பண்ணலாமா??. நாளைக்குனா ஆபிஸ் போக வேண்டி இருக்கும்” – மிதுன்.
“ஓ சுயர். பட் நான் இப்போ வெளியே இருக்கேன். ஈவ்னிங் மீட் பண்ணலாமா??” – அமிர்.
“எஸ் எஸ். தேங்க்ஸ் தேவ்” என்ற மிதுன் அழைப்பை துண்டித்தவாறே அவனது மேசைக்கு வர, கீர்த்தியும் கவியும் அவனிடம் என்னவென கேட்டார்கள்.
“தேவ்கிட்ட பேசிட்டேன்” என்ற மிதுன் மேலும் அவன் பேசிய தகவல்களை சொல்ல, அவர்கள் மேசையில் ஒரு கவனத்தை வைத்து இருந்த அமிருக்கும் கேட்டது. மதனிடமும் அதை சொன்ன அமிரும் மிதுனும் எழுந்து அவர்கள் அருகே வந்தான்.
“ஹாய் மிதுன்” என மிதுன் கேள்வியாய் பார்ததான்.
“ஹாய். நான் தான் தேவ். இப்போ தான் என்கிட்ட பேசனீங்க. நீங்க என் நேம் சொன்னது எனக்கு கேட்டது. அது தான் வந்தேன். ஈவ்ஸ்ட்ராப் பண்ணல. ஜெஸ்ட் நேம் கேட்டதால தான் கவனிச்சேன். அப்பறம் இது மதன். இவரு தான் உங்க ப்ரெண்ட வீட்டு பக்கத்துல இருக்காரு” என்றான் அமிர்.
“ஹாய் தேவ். இட்ஸ் ஓகே. அது நேச்சுரல் தான்” என்று தேவ்வை பார்த்து கூறியவன், அடுத்து மதனை பார்த்து, “ஹாய் மதன். ரொம்ப தேங்க்ஸ் ஹெல்ப் பண்ணதுக்கு. வாங்க உட்காருங்க” என்றவன், திரும்பி கீர்த்தியிடமும் கவியிடமும் தேவ்வையும், மதனையும் அறிமுகப்படுத்தினான். அவர்களும் இவர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். அடுத்து இவர்களிடம், “இவங்க என் ப்ரெண்டஸ். இது கீர்த்தி… இது சங்கவி” என்று அவர்களை அறிமுகப்படுத்தினான்.
“வாங்க. உட்காருங்க” என்று சம்பர்தாயத்துக்கு தயங்கியவாறே மிதுன் கூறினான். இரு பெண்களுடன் வெளியே வந்து விட்டு தெரியாத ஆண்களை அவர்களுடன் அமர வைக்க மிதுனுக்கு தயக்கமாக இருந்தது. அதே போல் அவர்களை போங்கள் என்றும் கூற முடியாமல் இருந்தான்.
அதை புரிந்து கொண்ட மதனும், “இல்ல பரவாயில்ல மிதுன். நாங்க அந்த டேபில்லயே இருக்கோம். ஈவ்னிங் பாக்கலாம்” என்று கூறினான். அமிருக்கு தான் பேச்சு மிதுனிடம் இருந்தாலும் கவனம் கீர்த்தியின் மீதல்லவா இருந்தது. மதன், அமிரை இழுத்து செல்ல எத்தனிக்கும் போதே, உணவு விடுதி பணியாளர் ஒரு கேக்கை கொண்டு வந்து வைத்தார் அங்கே.
அமிர் கேக்கையும் அவர்களையும் பார்க்க சங்கவி தான், “இன்னிக்கு கீர்த்திக்கு பிறந்த நாள்” என்றாள்.
தேவ்வும், மதனும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க, “நன்றிங்க” என்று இருவருக்கும் பொதுவாய் கூறினாள் கீர்த்தி.
அவர்கள் இப்போதே நகர்வதா அது மரியாதையாய் இருக்குமா என்று குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்க்க, “நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க” என்று கீர்த்தியே கூறி விட்டாள். மிதுன் கவியின் முகத்தை பார்க்க, அவளும் ஆமோதிப்பதாய் தெரிய, மிதுன் எந்த சங்கடமும் இல்லாமல் அவர்களை அங்கே அமர பணிய, அவர்களின் கை தட்டலில் கீர்த்தி கேக்கை வெட்டி கவிக்கு ஊட்டி விட்டு விட்டு மற்ற மூவருக்கும் கைகளில் தந்தாள்.
அதன் பின் உணவு வர ஐவரும் பேசியபடியே உண்டனர். அப்படியே மிதுனின் இடத்தின் அளவு இருக்கும் ஏரியா, வீடு எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை பற்றி எல்லாம் மிதுனும், தேவ்வும் பேச, மதன் கீர்த்தியிடமும், கவியிடமும் பேச்சு கொடுத்தான்.
மதன், “ஹாய்.. நீங்க எல்லாம் ஒரு ஆபிஸில் தான் வெர்க் பண்ணறீங்களா??” என்று கேட்டான்.
“ஆமாங்க” என்று பொதுவாய் கூறினர் இருவரும்.
“ஹேய் நான் மதன். பேர் சொல்லியே கூப்பிடுங்க. இல்லனா அண்ணானு கூட கூப்பிடலாம்” என்றான் மதன்.
“சரிங்க” என்ற கீர்த்தியை கூர்மையாய் பார்க்க, “அண்ணா” என்றாள்.
அதன் பின் சங்கவியும் அண்ணா என்று அழைத்து பேசி கொண்டு இருந்தாள்.
தேவ்வின் மனது கவனம் மட்டும் அடிக்கடி கீர்த்தியிடம் சென்றது.
“சரி தேவ். நீங்க ஈவ்னிங் வரீங்களா??. நம்ம இடத்தை பார்த்து விட்டு வந்துடலாம்” என்றான் மிதுன்.
“ஓகே மிதுன்” என்ற தேவ்வும் மற்றவர்களும் உண்டு முடித்து இருந்தனர். அனைவரும் மற்றவர்களிடம் விடை பெற அவர்கள் பாதையில் பயணித்தனர்.
கொடுப்பாள்…

Advertisement