Advertisement

அத்தியாயம் 1
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு
வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துக்க கொண்டிருக்க, மணமக்களின் முகத்தில் மட்டும் ஒளியில்லை. இருவருக்கும் இது மறுமணம். மருமணத்தில் இணைபவர்கள் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டு, அறிந்துக் கொண்டு, புரிந்துக் கொண்டு அதன்பின்தான் திருமணமே செய்து கொள்வார்கள்.
ஆனால் ஜெராடுக்கும் பாராவுக்கும் இதுதான் இரண்டாம் சந்திப்பு. அதனால் கூட அந்நியர்கள் போல் ஒருவரையொருவர் பாராமல் இருக்கிறார்கள் போலும்.
முதலாவது சந்திப்பில் திருமணத்தை மறுத்த பாராவை சந்திக்க வந்த ஜெராட் அவளை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்திருந்தான். அவன் நிலைமை அவ்வாறு. தனிமையின் கொடுமை. துணையின் அவசியம். மனஉளைச்சல் என்ன வார்த்தை சொல்வது? அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
ஜெராட் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றவன் அங்கேயே ஐடி வேலையை தொடர்ந்தான்.
படிக்கும் பொழுது அங்கு அவன் சந்தித்தவள் தான் ஐவி. நீலக்கண்ணழகி. அவள் கண்கள் தான் அவனை பெரிதும் ஈர்த்தது. அவள் பேசும் பொழுது கண்களையே பார்த்திருப்பான். எக்கணம் அவள் மீது காதல் கொண்டான் என்று அவனுக்கே புரியவில்லை. புரிந்த கணம் கூறியும் இருந்தான்.
ஐவியிற்கும் ஜெராட்டை ரொம்பவும் பிடித்திருக்கவே இருவரும் காதலர்களாக மாறி ஒரே வீட்டில் வசிக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
அவள் நாட்டில் கல்யாணத்துக்கு முன்பாகவே காதலனோடு வசிப்பது ஒன்றும் தப்பாக யாரும் கருத மாட்டார்கள். அவளை பார்க்க அவளது தோழர்களும், ஜெராட்டின் தோழர்களும் அந்த வீட்டுக்கு வந்து செல்ல, ஐவியின் தம்பியான அன்றோவுக்கு மட்டும் ஜெராட்டை பிடிக்கவில்லை.
இந்தியாவில் ஜாதி வெறி தலை விரித்தாடுவது போல் மேற்கத்தீய நாடுகளில் நிற வெறி தலைவிரித்தாட, “போயும் போயும் நம்மிடம் அடிமையாக கிடந்த நாட்டிலிருந்து வந்த கறுப்பினத்தவனா உனக்கு கிடைத்தான்?” என்று அக்காவிடம் சண்டை போடலானான்.
“என்ன பைத்தியம் போல பேசுற? இந்த இருபத்தியோராம் நூற்ராண்டுல போய் நிறத்தை பத்தி பேசிகிட்டு இருக்க? ஜெராடுக்கு என்ன குறைச்சல்? அவன் ரொம்ப நல்லவன். அவன் ஒரு கிறிஸ்டியன். அதனால உனக்கு அவனை பத்தி சொல்ல ஒன்னும் இல்லனு நிறத்தை பத்தி பேசிகிட்டு இருக்க. உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு” தம்பியை துரத்தி விட்டாள் ஐவி.
ஆன்றோ ஜெராட்டை முறைத்து விட்டு கோபமாக கிளம்பி சென்று விட்டான்.
“நீ என்ன சோகமாக மூஞ்ச வச்சி கிட்டு இருக்க? அவன் கெடக்குறான் விடு. அக்கா பாசத்துல உன்ன முறைக்கிறான். வேற ஒண்ணுமில்ல. கண்டுக்காத. உன்ன புரிஞ்சிகிட்டா பிரெண்டாகிடுவான்” என்று சிரித்தாள்.
புன்னகைத்த ஜெராட்டும் எதுவும் கூறவில்லை. அவன் அவளோடு வாழும் வாழ்க்கையில் தானே எல்லாமே அடங்கியுள்ளது. அவன் மனம் திறந்து மனதில் உள்ளதை கூறும் ரகமெல்லாம் கிடையாது. இப்பொழுது கூட ஐவியிடம் “உன் தம்பியின் மனம் கவரும்படி நடந்துக்க கொள்கிறேன்” என்று கூறிடவில்லை. புன்னகை மட்டும் தான் அவன் பதில். அதுதான் அவன் குணம்.
அவன் கவலை ஐவிக்கு இருப்பதோ ஒரே தம்பி அவனே இவனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். இவனோடு பிறந்தவர்கள் நான்கு பேர் அவர்கள் ஐவியை ஏற்றுக் கொள்வார்களா?
“அவர்கள் வேண்டாமென்றால் நீ ஐவியை விட்டு விடுவாயா?” அவன் மனம் கேட்க உடனே “இல்லை” என்று பதிலும் வந்தது.
ஆகா மொத்தத்தில் அவன் காதலில் மிகவும் உறுதியாகத்தான் இருந்தான் ஜெராட்.
படித்துக் கொண்டே வேலை பார்க்கும் கட்டாயம் அவனுக்கு. இரண்டு அக்கா ஒரு தங்கை, தம்பி என்று கொஞ்சம் பெரிய குடும்பம். அப்பா ஒரு ஆசிரியர். அப்பாவின் சம்பளத்தில் தான் அனைவரும் படித்தார்கள். கடன் வாங்கி, லோன் வாங்கி அக்காக்களுக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமல்லாமல் அவனையும் வெளிநாடு அனுப்பி வைத்திருந்தார் அப்பா.
வீட்டின் தலைமகனான ஜெராட்டை தான் அவனது தந்தை சாம்சன் பெரிதும் நம்பியிருந்தார். அவரது நம்பிக்கையை கெடுக்கும் விதமாக அவன் நடந்துக்கொள்ள விரும்பவில்லை. படித்துக் கொண்டே வேலை பார்த்த சம்பளத்தில் கொஞ்சத்தை வீட்டுக்கும் அனுப்பி வைத்தான்.
காலேஜ் படிக்கும் பொழுதே ஜூனியர்களுக்கு வகுப்புகளை நடாத்தி வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாத்தித்து கொடுத்தவன் தான். வீட்டு நிலவரம் அறிந்திருந்தமையால் மகன் பொறுப்பாக இருப்பதாக அன்னையான எஸ்தரும் சொந்தங்களிடம் பெருமையாக கூறிக் கொள்வாள்.
இரண்டு வருடங்கள் படிப்புக்கு பின் ஒருவழியாக அங்கேயே ஒரு வேலையில் சேர்ந்தவனுக்கு வருமானம் கிடைக்க, அப்பாவின் கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்ததது.
அந்த நேரம் தான் அன்னையான எஸ்தர் மகனிடம் எத்தனை நாட்களுக்குத்தான் வாடகை வீட்டில் இருப்பது? இப்பொழுதுதான் நீ சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாயே சொந்தமாக வீடு வாங்கலாமா? என்று மெதுவாக பேசிப் பார்த்தாள்.
ஜெராடுக்கு இலங்கையில் வீடு வாங்குவதில் விருப்பமில்லை.
தம்பி நல்ல வேலையில் சேர்ந்தால் அவன் அவனது வாழ்க்கையை பார்த்துக் கொள்வான். தங்கையையும் திருமணம் செய்து வைத்தால் அன்னையையும், தந்தையையும் தன்னோடு அழைத்துக் கொள்ளலாம். அவ்வாறிருக்க இலங்கையில் எதற்கு சொந்தமாக வீடு?
“பார்க்கலாம். பார்க்கலாம்” என்றவன் அதன்பின் வீடு வாங்குவதை பற்றி பேசவேயில்லை.
தங்கைக்கு திருமணம் பேசும் பொழுதுதான் தந்தைக்கு உடம்பு முடியாமல் போக ஆரம்பித்திருந்தது. மருத்துவ அறிக்கை அவருக்கு புற்றுநோய் என்று கூற அதற்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்த பின் எஸ்தரும் சொந்த வீடு வாங்குவதை பற்றி மகனிடம் பேச வில்லை.
தங்கையின் திருமணத்துக்காக ஜெராட் இலங்கை செல்ல வேண்டியிருந்தது. ஐவியையும் அழைத்து செல்ல ஜெராடுக்கு ஆசையாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அவளை அழைத்து செல்வதால் வீணான பிரச்சினைகள் மாத்திரம் தான் உருவாகும் என்பதினால் அவன் மட்டும் செல்ல முடிவு செய்தான்.
அதை அவன் ஐவியிடம் கூறிய பொழுது “ஓகே நானும் என் பெற்றோரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றாள் ஐவி.
சரி பிரிஸ்டனிலிருந்து பாத் நகரத்துக்கு சில நிமிடங்கள் தானே பார்த்து பத்திரமாக போயிட்டு வா என்றான் இவனும்.
“இல்ல நான் இன்னைக்கே போகணும்” என்றாள் ஐவி.
“யேன்மா வீட்டுல ஏதும் பிரச்சினையா? யாருக்காவது உடம்பு முடியலையா?” அமைதியான குரலில் தான் கேட்டான். பதட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் அவனிடத்தில் கிஞ்சத்துக்குமில்லை.
அவனை ஒரு வெறுமையான புன்னகையோடு பார்த்தவள் “நீ கிளம்பி செல்லும் பொழுது உன்ன பிரிய எனக்கு மனம் இல்ல அதான்” என்று விட்டு அவனது பதிலையும் எதிர்பாராமல் கிளம்பி சென்று விட்டாள்.
அவள் அவன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி வியந்தவன் புன்னகைத்து விட்டு பயணத்துக்கான ஏற்பாட்டை செய்யலானான்.
அடுத்த நாள் மாலை தான் அவனுக்கு விமானம். பயணப் பொதிகளை தள்ளிக் கொண்டு இவன் வீட்டை விட்டு வெளியேறும் கணம் ஐவி வீட்டுக்கு வந்தாள்.
ரொம்பவே சோர்வாக தெரிந்தாள். “என்னடா ஆச்சு? வீட்டுல அப்பா, அம்மா கூட சண்டை போட்டியா? அவங்களும் என்ன விட்டுட்டு வர சொன்னாங்களா?”
அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் “நீ இன்னும் கிளம்பலையா? கிளம்பிட்ட என்று நினைச்சி தான் வந்தேன்” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு “சரி பத்திரமா போயிட்டு சீக்கிரம் கிளம்பி வா என்றாள்.
“நீ இப்படி அப்சட்டாக இருக்கும் பொழுது நான் எப்படி போறதாம்?” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் ஜெராட்.
“எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லா இருக்கேன். நீ கிளம்பு” அவனை அனுப்புவதில்லையே குறியாக இருந்தாள் ஐவி.
“நான் போனா நீ வீட்டுக்கு போவணு நினைச்ச. இப்போ தனியாக இருக்கணும்”
“அது ஒன்னும் பிரச்சினையில்ல. நீ அங்க போய் என்ன மறக்காம அடிக்கடி போன் பண்ணு” இவள் கிண்டல் செய்தாள்.
“சரி எனக்கு நேரமாச்சு. டாக்சி வந்திருச்சு” அவளை முத்தமிட்டு விடைபெற்றான் ஜெராட்.
ஜெராட் சென்ற நொடி கதவை சாத்திய ஐவி கட்டிலில் விழுந்து தூங்க ஆரம்பித்தாள்.
அவள் அவனிடம் கூறியது போல் வீட்டுக்கு சென்றிருக்கவில்லை. மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்து விட்டு தான் வந்திருந்தாள்.
அவன் விமானமேற சென்றிருப்பான் என்று நினைத்து வீட்டுக்கு வந்தால் அவன் இன்னுமே செல்லாமல் வீட்டில் இருந்தது அவளுக்கு அதிர்ச்சிதான். ஒருவாறு சமாளித்து விட்டாள்.
என்னதான் ஜெராட்டை காதலித்தாலும். இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகாமல் குழந்தையை பற்றி சிந்திக்கக் கூடாது என்றிருந்தாள். அவள் அவளது வேலையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்க, திருமணத்தை பற்றியே இன்னும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையை பற்றி நினைப்பாளா?
பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டிருந்த பொழுதிலும் உணர்ச்சி பெருக்கில் சிலநேரம் இப்படி ஆகி விடுகிறதே என்று தன்னையே நொந்து கொண்டவள். ஜெராட்டிடம் இதை பற்றி கூறினால் “வா உடனே திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தையை பெற்றுக்கொள்ளலாமென்று வற்புறுத்துவானோ என அஞ்சியே” அவனிடம் கூறாமல் வீட்டுக்கு செல்வதாக அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்து கொண்டு வந்திருந்தாள்.
இலங்கைக்கு வந்து சேர்ந்த ஜெராடுக்கு வரும் வழியெல்லாம் ஐவியின் ஞாபகம் என்றால் வந்து சேர்ந்த பின்னும் அவள் எண்ணங்கள் அலைக்கழித்தன. நான்கு வருடங்களாக கூடவே இருந்தவள் சட்டென்று இல்லையென்றானது மனதுக்கு நெருடலாகவே இருக்க தங்கையின் திருமணத்தில் மனமகிழ்வோடு கலந்துக்கொள்ளவும் முடியவில்லை.
“அடுத்து உனக்குத்தான் கல்யாணம். அப்பாவுக்கு வேறு உடம்பு முடியவில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட முன் சீக்கிரம் நீ திருமணம் செய்து கொள்” என்று அக்காள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.
“வாங்கின கடனே தலைக்கு மேல் இருக்கு. இந்த நேரத்தில் இந்த பேச்சு அவசியமா? அம்மா வேற சொந்தமா வீடு கட்டணும் என்று சொல்லுறாங்க. சொந்தமா வீடு வாங்கின பின்னாலதான் நான் கல்யாணமே பண்ணிப்பேன்” என்று அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
அவர்கள் நாத்தனார்களுக்கே அவனை மாப்பிள்ளை கேற்பதாக அன்னை அவன் வந்த உடனே கூறியிருந்தாள். அதுபோக, சொந்தபந்தங்களுக்கிடையிலும் அவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதும், கைநிறைய சம்பாதிப்பதும் பெரிதளவில் பேசும் பொருளாகி அவனை பார்த்த உடனே “எப்படி இருந்தவன் வெளிநாடு சென்ற உடன் மாறி விட்டானே” என்று வியந்தது மட்டுமல்லாமல் ஆளாளுக்கு அவனிடம் நலம் விசாரித்து தங்களது மகள்களையும் அறிமுகம் செய்து வைக்கலாயினர்.
அவர்களோடு இன்முகமாக பேசினாலும் திருமண வேலைகள் இருப்பதாக கழன்று கொண்டவன் மனம் முழுக்க ஐவியின் நினைவுகளே.
அவளை அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டுமோ? அழைத்துக் கொண்டு வந்திருந்தால் என்னென்ன கேள்விகள்? எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று நினைத்துப் பார்க்கையில் இந்த நேரத்தில் வீணான பிரச்சினைகள் வேண்டாம் என மனதை தேற்றிக் கொள்வான்.
தனிமையில் அவளோடு உரையாடும் பொழுது கூட நலம் விசாரிப்பவன் அவளை பிரிந்திருப்பது அவனுக்கு எவ்வளவு மனக்கவலையை கொடுக்கிறது என்று வார்த்தைகளால் கூறிடவில்லை. இதயம் உருகி காதல் மொழி பேசி அவனுக்குத்தான் பழக்கமில்லையே. குறைந்தபட்சம் மனதில் இருப்பதையாவது மனம் திறந்து பேசிவிடுபவனல்லவே.
ஒருவாறு திருமணத்தை சிறப்பாக நடாத்தி முடித்து விட்டு மீண்டும் ஐவியிடம் வந்து சேர்ந்தான் ஜெராட்.
மேலும் இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் ஜெராட் இலங்கைக்கு செல்ல நினைக்கவேயில்லை. அவனால் ஐவியை விட்டு செல்ல மனமில்லை.
எஸ்தரும் அவனை “இந்த கிரிஸ்மாஸுக்காகவாவது வீட்டுக்கு வாப்பா…” என்று மகனின் நினைவில் பாசத்தில் அழைத்தாலும் குடும்பத்துக்காக சம்பாதிக்கும் மகன் அவன் பார்க்கும் வேலையை தவிர்த்து பகுதி நேரம் வேலை பார்த்துதான் கடனையடைக்கவும், கணவனுக்கு மருத்துவம் பார்க்கின்றான் அவன் வந்தால் அதெல்லாம் சட்டென்று நின்று விடும் என்ற எண்ணம் அவளுக்கு.
ஆனால் ஜெராட் எந்த பகுதி நேர வேலையும் பார்க்கவில்லை. சம்பாதிப்பதை பங்குச் சந்தையில் இட்டு கைநிறைய சம்பாதித்துக் கொண்டுதான் இருந்தான். அவன் நினைத்தால் கடனை ஒரே வருடத்தில் கட்டியும் இருக்கலாம். அடுத்து அன்னை ஆசைப்படி வீடும் வாங்கிருக்கலாம்.
ஆனால் அவன் ஆசை ஐவியோடு வாழ ஒரு வீடு. அங்கே அன்னையையும் தந்தையையும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் இருக்க, அவளிடம் பேசியதில் அவளது ஊரில் உள்ள பழைய பங்களாவை வாங்க வேண்டும் என்பது அவளது ஆசை என்பதை அறிந்து கொண்டான். அது அவளது பூர்வீக சொத்து என்றாள்.
“கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பங்களா அது. அந்த பங்களாவின் சிறப்பே ரோமானியர்களின் காலத்தில் குடிசையாக இருக்கும் பொழுதே இருந்த கட்டமைப்பு படிப்படியாக உருமாறி பங்களாவாக மாறி உள்ளது.
எவ்வாறு இருந்ததை எப்படி உடைத்து, உடைத்து கட்டினார்களோ தெரியவில்லை. ஒரு அறைக்குள் நுழைந்தால் எந்த அறையின் வழியாக வருவோம் என்றே தெரியவில்லை.
எப்படியோ பங்களா நம் கையை விட்டு போய் விட்டது. எப்படியாவது வாங்க வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை” நீல கண்கள் பளபளக்க அவளது லட்ச்சியமே அதுதான் என்றாள்.
“நல்லவேளை பங்களாவை வாங்கின பிறகுதான் கல்யாணம் என்று சொல்லலையே” ஜெராட் கிண்டல் செய்தாலும் அவளது லட்ச்சியம் இவனது என்றானது.
அவன் சம்பாதிப்பதில் பாதியை பங்களா வாங்க ஒதுக்கி வந்தவன் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்க எண்ணி ஐவியிடம் அதை பற்றி ஒரு வார்த்தையேனும் கூறிடவில்லை.
“ஹலோ ஜெராட் நான் அம்மா பேசுறேண்டா அப்பாக்கு ரொம்ப உடம்பு முடியலடா… நீ சீக்கிரம் கிளம்பி வாடா…” எஸ்தரிடமிருந்து அழைப்பு வரவே இனிமேலும் தாமதிக்க இயலாது. தான் இலங்கை செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன் ஐவியிடம் விஷயத்தைக் கூறி அவளையும் வருமாறு அழைத்தான்.
“இல்ல ஜெராட் எனக்கு உடம்பு ஒரு மாதிரி படுத்துது. நீ மட்டும் போ… இந்த நேரத்துல நானும் கூட வந்தா யார் இந்த பொண்ணு என்று கேள்வி வந்து நீ பதில் சொல்லி சண்டை வந்து எல்லாரோட நிம்மதியும் போகும். ஏற்கனவே உங்க வீட்டுல எல்லோரும் கவலையாக இருக்காங்க. இந்த நேரத்துல என்னால இப்படி ஒரு பிரச்சினை வேண்டாமே” தன்மையாக மறுத்தாள்.
அவள் சொல்வது உண்மைதானே என்று நினைத்தவன் அவளை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு “சரி அப்போ நீ உன் வீட்டுக்கு போய் உன் அப்பா, அம்மாவை பார்த்துட்டு வா” என்றான்.
அதே வெறுமையான புன்னகையை சிந்தியவள் தலையசைத்து அவனிடம் விடைபெற்று கிளம்பி விட்டாள்.
அவள் அன்றும் சென்றது மருத்துவமனைக்கு கருவை கலைக்கத்தான். வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இவள் கிளம்பலாம் என்றிருக்க, அவன் கிளம்புவதாக வந்து நின்றான். ஆனால் இந்த முறை அவள் நிலைமை சற்று மோசமாக விமானமேற சென்ற ஜெராட்டுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு சென்றது.
அதிர்ந்தவன் விமானத்தை விட்டு மருத்துவமைக்கு பறந்தான்.
ஐவியை பார்த்தவனுக்கு கோபம் வரவில்லை. ஏன் என்ற கேள்வியும் கேட்கவில்லை. அவள் அச்சம் நன்றாகவே புரிந்தது.
“ஏன்டா… எல்லாத்தையும் சொல்லுவியே இதையும் சொல்லியிருந்தா நானே கூட்டிகிட்டு வந்திருப்பேனே. இவ்வளவுதான் என் மேல வச்சிருக்கும் நம்பிக்கையா?
“ஜெராட்”
“உன்ன கஷ்டப்படுத்துற போல எதையாவது செய்வேனா? செஞ்சிருக்கேனா?” கவலையான குரலில் இவன் கூற
“ஜெராட்” அவன் பேசப் பேச அவன் பெயரை தவிர அவள் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வரவில்லை. ஜெராட் வார்த்தைகளால் சொல்லிடாத காதலை உணர்ந்து கொண்டாள் ஐவி.
ஐவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஜெராட் விமானத்தை மட்டும் விட்டு விடவில்லை. இறுதி மூச்சை விட்ட தந்ததியை காணும் பாக்கியத்தையும் விட்டு விட்டான்.
அடுத்த அலைபேசி தந்தை இறந்து விட்டதாக வரவே ஐவியையும் அழைத்துக் கொண்டே இலங்கைக்கு பயணமானான் ஜெராட்.
ஜெராடின் வீட்டார் அவனோடு வந்த ஐவியை அவன் யாரென்று கூறாமலே அவள் யார் என்று அறிந்து கொண்டனர்.
தந்தையை அடக்கம் செய்ய முன் வர வேண்டியவன் அடக்கம் செய்து இரண்டு நாட்களுக்குப் பின் வந்து சேர்ந்திருக்கின்றன என்றால் காரணம் கூட இவளாகத்தான் இருக்கும் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரியாமலுமில்லை.
அவர்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது அவள் அவனது காதலியா? மனைவியா? என்பது மட்டுமே!
அன்னையான எஸ்தர்தான் “யார் இந்தப் பெண்? கூட வேலை பார்க்கும் பெண்ணா?” என்று கேட்டாள்.
பெற்ற மகன் தந்தையின் இறப்புக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கின்றன என்றால், அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று எஸ்தருக்கு புரியாமலில்லை. தாய் மனம் அவ்வாறு எதுவும் இருந்து வீடாக கூடாது ஏசாப்பா… என்ற வேண்டுதலோடு கேட்டிருந்தாள்.
ஜெரடுக்கும் ஐவிக்கும் எத்தனை வருட பழக்கம்? எஸ்தரின் இன்றைய வேண்டுதலை யேசுநாதர் உடனே நிறைவேற்றி விடுவாரா என்ன?
“இது ஐவி என் மனைவி” என்றான் ஜெராட்.
சொல்லாமல் கொள்ளாமல் மகன் திருமணம் செய்து கொண்டானா? என்ற அதிர்ச்சி எஸ்தரை நிலைகுலைய செய்ய எஸ்தர் எதுவுமே பேசவில்லை.
அவன் திருமணம் கூட அவள் கனவுதானே. கணவனின் உயிர் பிரியும் தருணம் கூட “மூத்தவனுக்கு ஒரு நல்லது பண்ணமா இப்படி போறீங்களே” என்று தானே அழுதாள்.
கணவனை இழந்த அவளுக்கு மகன்தான் துணை. அதுவும் இல்லையென்று தெளிவாக புரிந்து போக என்ன பேசுவது? அவனை படிக்க வெளிநாடு அனுப்பியது இந்த நாளை காண்பதற்காகவா? வாழ வேண்டிய வனை திட்டி சாபமிடவா முடியும் பெற்ற மகனல்லவா? அமைதியாக உள்ளே சென்று விட்டாள்.
ஆனால் அவன் கூடப் பிறந்தவர்கள் அமைதியாக இருப்பார்களா? அவனோடு சண்டை போட ஆரம்பித்தார்கள்.
ஒரு வெள்ளைக்காரியை திருமணம் செய்து கொண்டானே! என்ற ஆத்திரம், சொல்லாமல் திருமணம் செய்து கொண்டு விட்டானே என்ற கோபம். இங்கிலாந்திலையே இருந்து விடுவானே. குடும்பத்தில் ஒரு நல்லது கெட்டதுக்கும் இனி தலை காட்ட மாட்டானே! என்ற ஆதங்கம். எல்லாவற்றுக்கும் மேல் இனி அவன் சம்பாத்திப்பதில் வீட்டுக்கு செலவு செய்ய மாட்டானே என்ற அச்சம். அவர்களை அவனிடத்தில் பேச வைத்திருந்தது.
ஜெராட் மனம் திறந்து பேசுபவனல்லவே. சகோதரர்களுக்கு புரியவைக்க முயல்வானா? தமிழ் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த ஐவியை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவைத்துக் கொண்டான்.

Advertisement