Advertisement

அத்தியாயம் 10
புதிய சூழலுக்கும், காலநிலைக்கு தன்னை பொருத்திக்கொள்வது பராவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
இலங்கையில் இருக்கும் பொழுது சுடுநீரில் குளித்ததே இல்லை. அந்த பழக்கத்தில் வந்த அன்று குழாயை திறந்து நீருக்கு அடியில் நின்றவள் “ஐயோ அம்மா” என்று கத்த
அவளுக்கு என்ன ஆச்சோ என்று பயந்த ஜெராட் குளியலறை கதவை திறந்து கொண்டு சற்றும் யோசிக்காமல் உள்ளே வந்திருந்தான்.
“என்ன ஆச்சு” என்று ஜெராட் பதற, குளிரில் நடுங்கியவாறு நின்றிருந்தாள் பரா.
குளியலறையில் தானே குளிக்கிறோம் என்று ஒரு மெல்லிய துப்பட்டாவை தான் ஆடையாக கட்டியிருந்தாள்.  நீரில் நனைந்ததில் அவள் அங்கம் வேறு கண்ணாடியாக அவன் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருக்க, நடுங்கிக் கொண்டிருந்தவள் தன்னை மறைக்க பெரும் பாடுபடலானாள்.
இங்கு வந்த புதிதில் அவனுக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். அவளை பார்த்த உடனே என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டவன் சிரிப்பை அடக்கியவாறு சுடுநீர் குழாயை திறந்து கொடுத்து விட்டு வெளியேறினான்.
“ஐயோ நாம வேணும்னே பண்ணதாக நிச்சிருப்பாரோ… நாமதான் கதவை லாக் பண்ணிட்டு குளிக்க ரெடியானோமே” கதவை பார்த்தவள் “ஆமா இந்த பாத்ரூம்க்குக்கு எங்க இருந்தாலும் வர முடியும் எங்குறத நீ அடிக்கடி மறக்குற. பரா உனக்கு அறிவே இல்லடி. இன்னமும் ஸ்ரீலங்கால இருக்கானு நினைப்பு” தன்னை திட்டியவாறே குளிக்கலானாள்.
அன்று மட்டுமல்லாது அடிக்கடி பராவுக்கு இவ்வாறு நிகழ, எங்கே ஜெராட் உள்ளே வந்து விடுவானோ என்று முதலில் செய்வது எல்லா கதவுகளையும் பூட்டுவதுதான்.
இவள் அலறும் சத்தம் கேட்டால் கிண்டல் செய்வதற்காகவே ஜெராட் “பரா ஆர் யு ஓகே?” என்று கேட்பான்.
அவன் கிண்டல் செய்வது இவளுக்கு புரிந்தால் தானே? “ஐம் ஓகே. ஐம் ஓகே” என்று சொல்வது மட்டுமல்லாது நடுங்கியவாறே தலையை ஆட்டியும் வைப்பாள்.
இதை ஜெராட் பார்த்திருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பான்.
அது மட்டுமா… இலங்கையில் இருக்கும் பொழுது குளிர்சாதன பெட்டியிலுள்ள தண்ணீர் பாட்டிலை திறந்து வாயில் சரித்துக் கொள்வாள், அல்லது குழாயை திறந்து கையை வைத்து தண்ணீர் குடிப்பாள்.
“ஸ்கூல் டேப்ல வாய வச்சி குடிக்கிற பழக்கம் உனக்கு இன்னும் போகலையா?” என்று ஜான்சி முதுகில் ரெண்டு வைத்தாலும் கண்டுகொள்ள மாட்டாள்.
அதே பழக்கம் இங்கு வந்தும் இருக்க, குழாய் நீரின் குளிரில் அலறுவாள்.
“கிட்சன் ஹாட் வாட்டர் டேப் ஒர்க் ஆகல. ப்ளம்பரை என்னனு பார்க்க சொல்லி இருக்கேன். கொழந்த போல டேப்ல தண்ணி குடிக்காம ஹாட் வாட்டர் குடிங்க பரா பேபி” ஜெராட் கிண்டல் பண்ண
“டேப்ப திறந்த உடனே நமக்கு தேவையான டெம்பரேச்சர்ல தண்ணி வரவே வராதா?” கொஞ்சம் காட்டமாகவே கேட்டவள் “இவ்வளவு செலவு செஞ்சி ரெனவேஷன் பண்ணுறீங்களே இதெல்லாம் பார்த்து பண்ண மாட்டீங்களா?”  கையை மார்புக்கு குறுக்காக கட்டி முறைத்தவாறே அவனை அதிகாரம் செய்வாள்.
அதில் அவளது இயலாமையும், குழந்தைதனமும்தான் ஜெராடுக்குத் தெரியும்.
புன்னகைத்தவாறே “பங்களாவோட பழமை மாறக் கூடாது என்று சிலத அப்படியே விடச் சொன்னேன். அதான் இந்த கன்பியூஷன். பார்க்க பழசா இருந்தாலும் புது டெக்னோலஜி வேணும் என்று நீ புரிய வச்சிட்டில்ல. விடு நான் பார்த்துகிறேன்” என்று கண்சிமிட்டுவான். 
பரா தூங்கும் பொழுது எப்பொழுதும் போர்த்திக் கொண்டு தூங்க மாட்டாள்.
“திருமணம், விஷேஷம் என்று உன்ன எங்கயும் கூட்டிகிட்டு போக முடியாது. பாப்பரப்பேனு கைய கால விரிச்சிகிட்டு தூங்குற. பொம்பள புள்ளனா அடக்க ஒருக்கமா இருக்க வேணாம்? போர்வைய கொடுத்தா தூக்கி போடுற. உன்ன வச்சிகிட்டு நான் என்ன பண்ண போறேனோ” என்று பலமுறை புலம்பியிருக்கின்றாள் ஜான்சி.
குழந்தையாக இருக்கும் பொழுது போர்த்தி விட்டால் கால்களால் போர்வையை தூக்கத்திலையே தள்ளி விடுவாள் பரா. அவ்வளவு எளிதில் பழகிய பழக்கம் விட்டுப் போகுமா?
தூங்க ஆயத்தமான போது ஜெராட் அவளுக்கு கனமான கம்பளி போர்வைகளை கொடுக்க, குளிருக்கு போட்டிருக்கும் கம்பளி ஆடையே தனக்கு போதும் என்றும், காலில் ஷாக்ஸ் வேறு அணிந்திருப்பதாகவும் கூறி மறுத்து விட்டாள்.
அவளை வினோதமாக பார்த்து விட்டு எதுவும் கூறாமல் கட்டிலுக்கு அருகே போர்வையை வைத்து விட்டு தூங்கலானான்.
நடுஇரவில் தூக்கத்தில் குளிரினால் ஜெராடின் புறம் உருண்டு வந்து அவனை கட்டிக் கொண்டு தூங்கிருந்தாள் பரா.
இதில் “நான் உருண்டு, புரளவெல்லாம் மாட்டேன். நீங்க நடுவுல பில்லோ வைக்க தேவையில்லை” என்று அவனுக்கு அட்வைஸ் வேறு செய்திருக்க, தன்னை அணைத்திருக்கும் கையை பார்த்ததும் ஜெராடுக்கு அவள் சொன்னது ஞாபகத்தில் வந்து சிரிப்பு மூட்டியது.
இதை அவள் கண்விழிக்கையில் பார்த்தால் சங்கடப்படுவாளென்று அவளை அவளிடத்தில் நகர்த்தி போர்வையை போர்த்தி விட்டால் சமத்துக் குழந்தை போல் தூங்கி காலையில் கண்விழித்தவள்
“நான் சொல்லியும் கேட்காம போர்த்தி விட்டிருக்கான். ரொம்பதான் அக்கறை” என்று முணுமுணுத்தவாறே போர்வையை மடித்து வைத்தாள்.
“நேத்து நைட் நல்லா தூங்கினீங்களா பரா” கிண்டலாகத்தான் கேட்டான். ஜெராட் பராவின் முகம் பார்க்கவில்லை பார்த்திருந்தாலும் பராவுக்கு அவன் கிண்டல் செய்வது புரிந்திருக்க வாய்ப்பில்லை.
 “ஆ… தூங்கினேனே, ஏன் கேக்குறீங்க” இவள் அவனை வினோதமாக பார்த்து கேட்டாள்.
புன்னகையை அடக்கியவாறே “புது ஊரு, புது இடம் அதான் கேட்டேன். வேற ஒண்ணுமில்ல” என்றான் ஜெராட்.
“ஓஹ்… ஓஹ்… சரி சரி…” என்று பரா அவள் வேலையை பார்க்கலானாள்.
அடுத்தநாள் தானே பாராவை போலீஸ் கைது செய்து அமளி துமளியானது. அன்றிரவு தூங்கும் பொழுது “பரா எதுக்கும் நாலஞ்சு தலையணையை வச்சிக்கோங்க உருண்டு அந்த பக்கம் விழுந்துட போறீங்க” என்றான் ஜெராட்.
“இல்ல விழ மாட்டேன்” என்று சாதாரணமாக கூறியவள் தான் காவல்நிலையம் சென்று வந்ததால் மனம் கலங்கி இரவில் தூங்காமல் அங்கும் இங்கும் உருண்டு, புரள்வேன் என்று சொல்கிறானோ, அல்லது கெட்ட கனவேதும் கண்டு அலறி கட்டிலில் இருந்து விழுந்து விடுவேன் என்று நினைத்தானோ என்றுதான் எண்ணினாள். 
ஆனால் ஜெராட் அமைதியாக அவளை கிண்டல் செய்கிறான் என்று பராவுக்கு புரியவில்லை.
அன்று தானே ஐவி மற்றும் ஜெராடின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று ஜெராட் பராவிடம் கூறினான். “நீங்க ஓகே. தானே” சோகத்தை மறைத்தவாறு ஜெரட்டை பார்த்தவாறு கேட்டாள் பரா. 
“ஐம் ஓகே. பரா… எங்க வீட்டுல கூட நடந்தத பத்தி நான் எதுவும் சொல்லல. ஐவி ஒரு வெள்ளைக்காரின்னு எங்க வீட்டுல ஏத்துக்கல. எனோ யாருக்குமோ அவளை சுத்தமா பிடிக்கல. இந்த விஷயத்தையும் சொன்னா… அவளை பத்தி கண்டபடி பேசுவாங்க. அவ என் கூட இல்லனாலும் அவ நல்லா இருக்கணும் என்றுதான் நினைக்கிறன். எங்க போனானு தெரியாம காணாம போய்ட்டா. பெத்தவங்களுக்காவது போன் பண்ணி இங்க தான் இருக்கேன்னு சொல்லி இருக்கலாம்” ஐவி தொலைந்து  போகவில்லை. அவளுக்கு வேண்டியது போல வாழ அனைவரையும் பிரிந்து சென்றதாகத்தான் நினைத்தான் ஜெராட்.  
பொதுவாகவே ஜெராட் மனம் திறந்து பேசுபவன் கிடையாது. ஏன் பராவிடம் பேசுவது போல் ஐவியிடம் கூட பேசியது கிடையாது.
ஐவி தனது காதலி. தனது பிரச்சினைகளையும், சோகங்களையும் அவளிடம் கூறி அவளை வருந்த செய்யக் கூடாது என்று எண்ணித்தான் ஐவியிடம் ஜெராட் எதையுமே பகிர்ந்துகொள்ளவில்லை.
அவன் பிறவி குணமும் சேர்ந்துகொள்ள காதலை கூட வாய் வார்த்தையாக அடிக்கடி சொல்லாதவன், பராவை முழுமனதாக தோழியாக ஏற்றிருந்தான்.
அதனால்தான் ஐவியை பற்றியும், அவனது பிரச்சினைகள், மனநிலை என்று அவளிடம் பகிர்ந்துகொள்வதோடு, பராவை அவனுக்கு பார்த்த நொடியே பிடித்தும் இருந்தது.
அது காதலா என்னு ஜெராடிடம் கேட்டால் நிச்சயமாக இல்லை என்பான். சிலரை பார்த்த நொடியே நண்பர்களாக ஏற்றுக்கொள்வோம், சிலரை பார்த்த நொடியே காரணம் இல்லாமல் வெறுக்க ஆரம்பித்து விடுவோம். அது போல்தான் இந்த உணர்வும் என்பான். அதை தாண்டி யோசிக்க, ஜெராட் தயாராக இல்லை.
“எங்க போய்ட போறாங்க வந்துடுவாங்க. தூங்கலாமா?” ஐவியை பற்றி பேசினால் அவன் மனம் காயப்படும் என்று பேச்சை மாற்றி மறுநாள் ஷாப்பிங் போவதை பற்றி பேசியே தூங்கியிருந்தாள்.
தூங்கும் பராவின் கையை பற்றிய ஜெராட் “உன் கஷ்டத்தை மறந்து எனக்கு ஆறுதல் சொல்லுற உனக்கு எவ்வளவு நல்ல மனசு. எதோ உன் அப்பா பார்த்த மாப்புள அந்த நல்லவன் உன்ன ஏமாத்தணும் என்று நினைக்காம உன் கிட்ட இருந்து விலகி இருந்ததனால் நடந்த சம்பவத்திலிருந்து நீ மீண்டு வந்துட்ட.
அவன் உன் கூட வாழ்ந்து, உன்ன ஏமாத்தி இருந்தா உன் மனசு உடைஞ்சி நீ மீளா துயரத்துக்குள்ள போய் இருப்ப.
நீ தூய ஆத்மாவாக இருக்குறதால ஜீசஸ் உன்ன பாதுகாத்து என்கிட்ட அனுப்பிட்டாரு” மனதுக்குள் பேசினவனுக்கு தான் கடைசியாக பேசியதின் அர்த்தம் கூட புரியவில்லை.
“வறண்ட என் வாழ்க்கைல மழையா வந்த தேவதை நீ… ஐயோ கவிதை எல்லாம் வருதே…” தனக்குள் சிரித்தவன் “உன்ன பார்த்ததுல இருந்து சிரிச்சிகிட்டே இருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்” அவள் கையியை தட்டிக் கொடுத்தவன் போர்வையை அவள் கழுத்துவரை போர்த்தி விட்டான்.
பராவை பார்த்தவாறே தூங்க முயன்றவனுக்கு ஐவியின் ஞாபகங்கள் வந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
உலகத்தில் இருக்கும் எந்த ஒரு கொடிய நோயின் வலியை விடவும் காதல் தரும் வலி பல மடங்கு அதிகமானது. அவ்வளவு இலகுவில் அந்த வலி ஜெராட்டை விட்டு நீங்கிடுமா என்ன?
கண்களை மூடினால் தானே ஐவி வந்து தொல்லை செய்கிறாளென்று கண்களை மூடாமல் பராவை பார்த்தவாறு அவளை சந்தித்த நாட்களை சிந்திக்கலானான் ஜெராட்.
அவன் மனதின் ரணம் கூட, சூரியனை கண்டால் கரையும் பனிமூட்டமாய் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்க, அவனையறியாமலையே கண்ணயர்ந்தான்.
அன்று ஜெராட் விழிக்கும் முன்னே கண் விழித்ததால் தூங்கியிருந்த கோலம் புலப்படவே, அவன் நேற்று அவ்வாறு ஏன் கேட்டான் என்றும் அவன் கிண்டல் செய்வதையும் புரிந்து கொண்டாள் பரா.
அவன் கண் விழிப்பது போல இருக்கவே, வெக்கப்பட்டவள் ஓடிச் சென்று ஜெஸியை கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
கண் விழித்த ஜெராட் பரா நேரங்காலத்தோடு எழுந்து சென்று விட்டாளா? இந்த குளிருல அதிகாலையிலே எழுந்து என்ன செய்ய? இன்னமும் ஸ்ரீலங்கால இருக்கிறதாக நினைப்போ என்று எழுந்து அவளை சமயலறையில் தேடியவன் காணாது குளியலறையில் இருப்பாளென்று தட்டிப் பார்க்க சத்தம் வராமல் போகவே குழந்தைகள் அறைக்கு வந்தான்.
அங்கே ஜெஸியோடு தூங்குபவளை கண்டதும் இவன் சென்று லெனினோடு தூங்க ஆரம்பித்தான்.
குழந்தைகள் கண் விழித்தால் இவர்களோடு வந்து தூங்குவார்கள். ஆனால் ஜெஸி ஜெராட்டை நெருங்காமல் பராவின் பக்கமா மட்டும் இருந்து அவளை மட்டும் கட்டிக் கொண்டு தூங்குவாள்.
அதை கவனித்த பரா அவளை நடுவில் வைத்து அவள் அவளை அணைத்துக் கொண்டு ஜெராட்டுக்கும் சைகை செய்வாள். ஜெராடும் ஜெஸியை மெதுவாக அணைத்துக் கொள்வான்.
அப்பொழுது ஜெஸி ஜெரட்டை தடுக்கவும் மாட்டான். ஆர்ப்பாட்டம் செய்யவும் மாட்டாள். பரா கூடவே இருந்தால் அமைதியாக இருப்பாள். பரா இல்லையென்றால் ஜெராடிடம் நெருங்க மாட்டாள்.
வெளியே கிளம்பும் பொழுது பரா குழந்தைகளுக்கு குளிர் தாக்காமல் பொருத்தமான ஆடைகளை அணிவிப்பவள் கையில் கிடைத்ததை அவள் அணிந்துக் கொள்வாள்.
அவளுக்கு குளிருக்கு தகுந்தது போல் கோட்டை அணிவிப்பதிருந்து, ஷாலை போட்டுவிடுவதும் ஜெராட் தான்.
அவன் இந்த ஊருக்கு வந்து பல வருடங்களாகி விட்டன. காலநிலையும், சூழ்நிலையும் அவனுக்கு ரொம்பவே பழகி விட்டிருந்தது. ஆனால் பராவுக்கு இன்னும் பழக்கமுமில்லை. குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவளுக்கு அவளை பற்றி கொஞ்சம் கூட கவலையுமில்லையென்று ஜெராட் நனறாகவே புரிந்துகொண்டிருந்தான். அதனால் அவன் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
மாளிகையின் வேலைகள் இன்னும் முடிந்திருக்கவில்லை. முடிந்த பின் தோட்ட வேலைக்கும், வீட்டு வேலைக்கும் வேலையாட்களை ஏற்பாடு செத்துக்கொள்ளலாம் என்று பராவிடம் கூறியிருந்தான் ஜெராட்.
மாளிகையின் வேலைகளை அவள் தனியாக எவ்வாறு பார்ப்பதென்று கவலை கொள்ளவேயில்லை. மாளிகையின் பெரும்பகுதி வேலை நடப்பதனால் மூடப்பட்டல்லவா இருக்கிறது.
குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது? ஜெரடுக்கு என்ன பிடிக்கும்? என்று அறிந்து சமைப்பதும், அவர்களை பற்றி மட்டும்தான் சதா சிந்திக்கலானாள்.
விடுமுறை தினங்களில் வீட்டில் இருந்தால் வெளியில் சாப்பிடுவார்கள், அல்லது ஜெராட் தான் சமைக்கிறேன் என்று கிளம்பி விடுவான்.
“உங்களுக்கு சமைக்கக் கூட தெரியுமா? நீங்க சமைச்சா வாயில வைக்க முடியமா? ஐ மீண்ட் சாப்பிட முடியமா?” ஜெராடை போலவே சிரிக்காமல் அவனை பார்த்து கிண்டல் செய்தாள் பரா.
அவள் முதல்முறை கிண்டல் செய்ததும் புருவம் உயர்த்திப் பார்த்து புன்னகைத்தவன் “நான் சமச்சத்த சாப்பிட்டு பார்த்தா தானே தெரியும். போங்க போய் உக்காருங்க. வேடிக்க மட்டும் பாருங்க” என்றான்.
“வேடிக்கையெல்லாம் பார்க்க முடியாது. உதவி செய்ய சொல்லி கை நமநமக்கும். ஒன்னு பண்ணலாம் பசங்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு கூட்டாஞ் சோறு ஆக்கலாமா?” அவனுக்கு சரிசமமாக பேசலானாள்.
“இது நல்ல ஐடியாவா இருக்கே” என்றவன் எப்பொழுது சமைத்தாலும் ஜெஸியை தன்னோடு இருத்திக்கொள்வான்.
“ஜெஸி அப்பாக்கு அத எடுத்துக் கொடு. இத எடுத்துக் கொடு” என்று பராவும் பொருட்களின் பெயரோடு சொல்ல, ஜெஸியும் பொருட்களின் பெயரை கற்றுக் கொள்வதோடு ஜெராடிடம் ஒரு ரவுண்ட் சென்று வருவாள்.
ஜெராட் ஒவ்வொரு தடவையும் நன்றி சொல்லி புன்னகைத்தாலும், ஜெஸி அமைதியாக அவனை பார்த்து விட்டு பராவிடம் செல்வாள்.
ஜெஸி தானாகவே ஜெராடிடம் நெருங்க வேண்டும். ஜெராட் அல்லது பராவின் வற்புறுத்தலினால் ஜெஸி ஜெராடிடம் வருவது குழந்தைக்கு நல்லதல்ல என்று மிகவும் கவனமாகத்தான் பராவும், ஜெராடும் அவளை கையாண்டார்கள்.
பாடசாலையில் குழந்தைகளின் மனநிலையை, போக்கை, சிந்தனையை அறிய, சித்திர வகுப்புகளும், ஆலோசனை வகுப்புகளும், ஏனைய வகுப்புகளும் இருப்பதினால் ஜெஸியின் மாற்றங்களை கண்காணிக்கலாயினர் இருவரும்.
ஜெராட் சமைப்பதை சாப்பிட முடியுமா? என்று கேட்க பரா “ஒன்லி சண்டே தான் சமைப்பீங்களா? சாட்டர்டே நைட் கூட சமைக்கலாம்” என்று கண்சிமிட்டி சிரிக்க, ஜெராட் சத்தமாக சிரித்தான்.
“நான் வேணா வேலைய விட்டுட்டு ஒரு ரெஸ்டூரண் ஆரம்பிக்கட்டுமா?”  வாரம் ஒருநாள் சமைக்கிறேன் என்றால் தன்னை சமையல்காரனாகவே ஆகிவிடுவாய் போல் இருக்கே என்று ஜெராட் கிண்டல் செய்ய.
“இது கிரேட் ஐடியா. ரெஸ்டூரண்ட்டுக்கு இடம் கூட தேட வேணாம். மாளிகையையே ரெஸ்டாரண்ட் ஆக்கிடலாம்” என்றாள் பரா.
அவள் தீவீர முகபாவனியில் கூறினாலும், அவனிடம் வேலை வாங்க பிடிக்காமல் தான் சமையளிலையே உதவ ஆரம்பித்திருந்தாள் என்றும், அதில் ஜெஸி நெருங்கி வருவது நன்மை பயக்கும் என்பதால் அவனை தடுக்காமல் இருக்கின்றாள் என்றும் அறிந்திருந்தான் ஜெராட்.
அவள் முகபாவையை பார்த்து “இதுதான் சைக்கிள் கேப்ல ஏரோபிளான் ஒட்டுறதோ” சிரிப்பை அடக்க முடியாமல் திணறுவான் ஜெராட்.
இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒன்றாக, ஒற்றுமையாக இருவரும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு அவர்களது வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருந்தனர்.
இவர்களது சந்தோசமான வாழ்க்கையை கண்காணித்த மர்மமான அந்த உருவம் யாரையோ அலைபேசியில் தொடர்பு கொண்டது.
“சொல்லுங்க மிஸ்டர் பீட்டர் அவன் என்ன பண்ணுறான்?” மறுபக்கம் இருந்தவன் கேட்க,
“மிஸ்டர் ஜெராட், அவர் வைப் குழந்தைகள் என்று ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. என்னைய கண்காணிக்க சொன்ன அன்றோ. கண்காணிச்சேன். உன் கிட்ட சொல்லிட்டேன். இதுக்கு மேலையும் நான் இங்க வேலை பார்க்கணுமான்னு நினைக்கிறன்” என்றான் பீட்டர்.
ஜெராடை கண்காணிக்க, அன்றோ பீட்டரை ஏற்பாடு செய்திருக்க, பீட்டர் ஜெராட் மாளிகையை ரெனவேஷன் செய்த கம்பனியின் மூலம் உள்ளே வந்து ஜெராட் மற்றும் குடும்பத்தாரை கண்காணித்து ஐவியின் தம்பியான அன்றோவுக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“என் அக்காவ காதலிக்கும் போதே ஸ்ரீலங்கால கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தையை பெத்து வச்சிருக்கான். அவனைப் போய் நல்லவன் என்று அக்கா கல்யாணம் வேற பண்ணியிருக்கா. உண்மை தெரிஞ்சிதான் அவ காணாம போய் இருப்பான்னு தோணுது.
காணாம போனாலோ இவன் கொலை பண்ணானோ. நம்ம நாட்டுல சிட்டிசன்சிப் வாங்க அக்காவ கல்யாணம் பண்ணி இருப்பான். அக்கா பேர்ல இன்சூரன்ஸ் போட்டு தீர்த்து கட்டியிருப்பான். அவனை சும்மா விடச் சொல்லுறியா? நீ அவனை குடும்பத்தோட போட்டுத் தள்ளினா நான் உனக்கு லம்பா ஒரு அமவுண்ட் தரேன்” மறுபக்கத்திலிருந்து கோபமாக சீறினான் அன்றோ.
அன்றோவுக்கு ஜெராட்டை சுத்தமாக பிடிக்கவில்லை. ஐவி காணாமல் போய் விட்டாள் என்றதும் எதையும் தீரவிசாரிக்காமல் அதற்கு காரணம் ஜெராட் தான் என்று முடிவே செய்து விட்டான். 
“இங்க பாரு அன்றோ. நான் முன்ன மாதிரி எந்த குற்றமும் பண்ணுறது இல்ல. என் குடும்பம், குழந்தைங்கன்னு அமைதியா இருக்கேன். வேவு பாக்குறதுக்கு பல்கா அமவுண்ட் கொடுக்குறியேன்னுதான் ஒத்துக்கிட்டேன். உனக்கு வேண்டிய தகவலை உனக்கு கொடுக்குறேன். அது மட்டும்தான் என் வேலை. கொலை எல்லாம் நான் பண்ண மாட்டேன்” திட்டவட்டமாக கூறினான் பீட்டர்.
“சரி பீட்டர் அப்போ உனக்கு தெரிஞ்ச யாராச்சும் இருந்தா சொல்லு” ஜெராடை குடும்பத்தோடு தீர்த்துக்கட்டும் வெறியில் இருந்தான் அன்றோ.
“பழைய ஆட்கள் யார் கூடவும் நான் எந்த தொடர்பிளையும் இல்ல. என் பையன நான் ஒழுங்கா வளர்க்க வேணாம். நீ என்ன கம்பல் பண்ணீனா. உன் காசு வேணாம்னு நான் இங்க இருந்து கிளம்பிடுவேன். எப்படியும் இன்னும் ஒரு மாசமோ, ஒன்னரை மாசமோ வேலை முடிஞ்சிடும். அப்போ கிளம்பித் தானே ஆகணும்” என்றான் பீட்டர்.
பீட்டர் முன்பு கொலைக்குற்றங்களை செய்திருப்பான் போலும், பீட்டர் நினைத்திருந்தால் ஆளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம். குடும்பத்துக்காக திருந்தி வாழ்பவன் மீண்டும் இதில் சிக்கிக் கொள்ள விரும்பாமல் பழைய கூட்டாளிகள் யாரோடும் தொடர்பில் இல்லையென்று விட்டான்.
“சரி சரி நீ உன் வேலைய பாரு. நான் அமெரிக்கால இருந்து வந்த பிறகு அவனை கவனிக்கிற விதத்துல கவனிக்கிறேன்” சீறினான் அன்றோ.

Advertisement