Advertisement

அத்தியாயம் 8
ஜெராட்டுக்கு வேலை கிடைத்த நொடியே ஐவியிடம் வந்து நின்றவன் திருமணம் செய்து கொள்ளலாமா? என்றுதான் கேட்டிருந்தான்.
அவன் நினைத்திருந்தால் தனியாகவோ, நண்பர்களை அழைத்தோ மண்டியிட்டு பூச்செண்டோடு, மோதிரத்தை நீட்டி அவளுக்கு சப்ரைஸ் கொடுத்து திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டிருக்கலாம்.
அவ்வாறு கேட்டிருந்தால் ஆனந்த அதிர்ச்சியில் அவள் மறுத்திருக்கவும் மாட்டாள். ஆனால் அவ்வாறு கேட்டு அவள் விரும்பாததை செய்யக் கூட அவள் மீது காதல் கொண்ட மனம் இடமளிக்கவில்லை.
எந்தவிதமான ஆர்பாட்டமுமில்லாமல் அவளிடம் கேட்டதினால்தான் அவள் இல்ல. இப்பொழுது முடியாது. நான் எனது வேலையில் சாதிக்க வேண்டும். அதன் பின்தான் திருமணம் என்று கூறி விட்டாள்.
அவள் முடிவை மதித்தவன் சிறு புன்னகையோடு அவள் முடியை கோதி விட்டு “என்ன ரொம்ப நாள் காக்க வைக்காத” என்று சிரித்தான்.
அவனுக்கு ஐவி முக்கியம். அவள் உணர்வுகள் முக்கியம். அதானாலையே அவளது ஆசைக்கு இடமளித்தான்.
ஐவி வேலைக்கு சேர்ந்த பின் அவளே வந்து ஜெராட்டிடம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்க, நண்பர்கள் புடைசூழ, இருவரும் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்தான் அவர்களது வாழ்க்கையில் பிரச்சினைகளும், சந்தேகமும், சண்டைகளும் ஆரம்பமானது.
திருமணத்துக்கு முன்பும் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இருந்தார்கள். திருமணத்துக்கு பின்னும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இருந்தார்கள் அதில் ஒன்றும் மாற்றம் நிகழவில்லை.
ஆனால் திருமணத்துக்கு முன் இருவரும் ஒரே காலேஜில் படித்தார்கள், ஒன்றாக சென்று வந்தார்கள். ஜெராட் வேலைக்கு செல்லும் பொழுது ஐவியை காலேஜில் விட்டு செல்பவன் வரும் பொழுது அழைத்து வரலானான்.
அநேகமாக இருவரும் வெளியே சுற்றி விட்டு இரவுணவை ஒன்றாக உண்டு விட்டுத்தான் வீடு வருவார்கள்.
ஜெராட் வர தாமதமாகுமென்றால் அலைபேசி வழியாக தகவல் கூறி விடுவான்.
ஆனால் திருமணத்துக்கு பின் எல்லாமே மாறியிருந்தது. இருவருமே வேலைக்கு இரண்டு இடத்துக்கு இரு திசையில் செல்வதால் ஒன்றாக இருக்கும் நேரம் குறைந்தது.
பொதுவாக பெண்கள்தான் பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலாக சந்தித்த நாள், காதல் சொன்ன நாள் என்று எல்லா நாளையும் ஞாபகம் வைத்து கொண்டாடுவார்கள். அநேக ஆண்கள் முக்கியமான நாட்களை மறந்து மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.
ஆனால் ஜெராட் எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்து வாழ்த்த, ஐவிதான் மறந்து போவாள். இருந்தாலும் அவன் அவளை குற்றம் சொல்லவும் மாட்டான் திட்டவும் மாட்டான். அவளுக்கு சேர்த்து இவனே பரிசுப்பொருட்களை வாங்கி வருவான்.
எட்டு மாதங்கள் எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. திடீரென்று ஐவி வீடுவரவில்லை.
ஜெராட் அவளுக்கு அலைபேசி அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தான். அது அடித்து, அடித்து ஓய்ந்ததே ஒழிய இணைக்கப்படவில்லை.
நடு இரவில் வீடு வரும் பெண்களுக்கு நடக்கும் அசம்பாவிதங்கள் மீடியாவில் வருவது தானே. பதட்டமாக இருக்கவே காவல்நிலையத்துக்கு அழைத்து விட்டான்.
“பதட்டப்படாதீங்க சார். அவங்க எங்க இருக்காங்கனு பார்த்து உங்களுக்கு தகவல் சொல்கிறோம்” என்றனர் காவல்துறை.
காவல்துறையின் உதவியோடு அன்று விடியற்காலை ஐவி வீடு வந்து சேர்ந்தாள். சுயநினைவே இல்லாதபடி நன்றாக குடித்திருந்தாள்.
அவள் இருக்கும் நிலையில் எதுமே கேட்க முடியாது என்று அவளை தூங்க வைத்தான் ஜெராட்.
ஆனால் காலையில் கண்விழித்தவளோ ஜெராட் தன்னை சந்தேகப்பட்டு, கால்துறையை அணுகியதாகவும், சுத்த பைத்தியக்காரன் போல் நடந்துகொள்வதாகவும் திட்ட ஆரம்பித்தாள்.
ஜெராட் கோபப்படவில்லை. பொறுமையாக “நேற்று ஏன் வர தாமதமாய்? உனக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்றுதான் காவல்துறையை அணுகினேன்” என்றான்.
“எனக்கு வேலைல ப்ரோமோஷன் கிடைச்சிருச்சு. அதுக்கு சின்ன பார்ட்டி வச்சாங்க. அதனாலதான் லேட். அதுக்காக போலீசை கூப்பிடுவியா? சைக்கோ போல நடந்துகொள்ளாதே” என்றாள்.
“நான் உன்மீது வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் உனக்கு சைக்கோ தானம் போல் தெரிகிறதா? சரி அதை விடு. என்ன திடீர் ப்ரோமோஷன்? வேலைக்கு சேர்ந்தே எட்டு மாசம் இருக்குமா? அதுக்குள்ள எப்படி ப்ரோமோஷன் கொடுத்தாங்க?”
“நான் ஒழுங்காக வேலை பார்த்ததுனால எனக்கு ப்ரோமோஷன் கொடுத்தாங்க. இத்தனை வருஷம் வேலை பாக்குறியே உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கலன்னு ஏன் உனக்கு பொறாமையாக இருக்கா?” ஒருநாளும் அவனிடம் காட்டாத முகபாவனையை புதிதாக காட்டினாள்.
அவளுக்கு தன் மீது  ஏதோ ஒரு கோபம் அதனால் தான் இவ்வாறு பேசுகிறாள் என்றெண்ணிய ஜெராட் மிகவும் பொறுமையாக “நான் ஏன் பொறாமை பட போறேன். என் வைப் முன்னேறினா எனக்குதான் சந்தோசம். பெருமை” என்று புன்னகைத்தான்.
அவன் புன்னகையை பார்த்து ஐவிக்கு பற்றிக்கொண்டு வந்தது. “எங்க நாட்டுக்காரங்களுத்தான் புரொமோஷன் எல்லாம் கொடுப்பாங்க, அடிமை நாட்டுல இருந்து வந்தவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கொடுக்க மாட்டாங்க” ஜெராட்டை சீண்டுவது போலவே பேசி அவனை வம்புக்கு இழுக்க, புருவம் உயர்த்தி அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் வேலைக்கு கிளம்பினான்.
அன்றிலிருந்து ஐவி நேரம் சென்றுதான் வருவாள். கேட்டால் ப்ரோமோஷனால் வேலை அதிகம் என்றாள்.
எல்லா நாளும் குடித்து விட்டுத்தான் வந்தாள். அவளிடமிருந்து வரும் வாடையை வைத்தே ஜெராட் கண்டு பிடித்துக் கேட்க, வேர்க் டென்சன் என்பாள்.
“நானும் தான் வேலை பார்க்கிறேன். அதற்காக தினமும் குடிக்க வேண்டுமா? அதுவே குடிக்கு நம்மளை அடிமையாக்கிடும்” என்றான்.
“நீ ஒன்றும் எனக்கு அட்வைஸ் சொல்ல வேண்டியதில்லை. உன் வேலையை நீ பார். உன் காசிலா நான் குடிக்கிறேன்” என்று அவனை அசிங்கமாக திட்ட ஆரம்பித்தாள்.
“நமக்குள்ள காசு எங்க வந்தது? வீட்டு செலவை கூட நான் தானே பார்க்குறேன். ஆமா உன் சம்பள பணத்தை நீ என்னதான் பண்ணுற?” இத்தனை நாள் பொறுமையாக இருந்த ஜெராட்டுக்கு கோபம் கொஞ்சமாக எட்டிப்பார்க்க பல்லைக் கடித்து பொறுமை காத்தான். 
இத்தனை வருடங்களாக அவன் அவளுக்காக கணக்கில்லாமல் செலவு செய்திருப்பான். அதற்கெல்லாம் கணக்கு பார்த்திருப்பானா? நிச்சயமாக இல்லை. வேலைக்கு சொல்கிறாளே வாங்கும் சம்பளத்தை என்ன செய்யப் போகிறாய் என்று கூட கேட்டதில்லை. அவனிடத்தில் என் காசு, என் இஷ்டம் என்று பேசினால் பொறுமையை இழக்க மாட்டானா?
“என் பணத்தை நான் என்னவோ பண்ணுறேன். அத நீ கேட்கக் கூடாது” கோபத்தில் சீறினாள் ஐவி.
“நீ ஓவரா பண்ணுற ஐவி…” என்றவனால் அவளோடு சண்டை போடக் கூட மனம் முரண்டு அமைதியாக சென்று படுத்துக்கொண்டான்.
இருவரும் ஒருமனதாக இருந்தால் எவ்வளவு தொலைதூரம் பிரிந்திருந்தாலும் அவர்களை யாராலும் பிரிக்க முடியாது. ஒரே வீட்டில் இருந்தாலும் மனம் முரண்பட்டால் ஒருவர் நினைத்தால் மட்டும் எந்த உறவையும் இழுத்துப் பிடித்து, இணைத்து வைக்க முடியாது. அதுதான் ஜெராட்டின் வாழ்க்கையிலும் நடந்தது. அவன் பொறுமையாக ஐவியோடு சேர்ந்து வாழ முயற்சிக்க, அவள் அவனை விட்டு விலகுவதிலையே குறியாக இருந்தாள்.
அவர்களின் உறவில் மெல்ல மெல்ல விரிசல் விழ, ஆரம்பித்தது.
“ஐவி ப்ரேக்பஸ்ட் ரெடியா?” கழுத்துப்பட்டியை சரி செய்தவாறே ஐவியை வீடு முழுக்க தேடியலைந்தான் ஜெராட்.
“நானும் வேலைக்கு போகணும். தினமும் நான் தான் சமைக்கணுமா? ஏன் உன்னால சமைக்க முடியாதா?” காலையிலையே ஒரு சண்டையை ஆரம்பித்தாள்.
இருவரும் ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்த அன்றிலிருந்தே வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள் தான். ஜெராட் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் அவன் வீடு வர தாமதமானதால் ஐவி அவனுக்காக காத்திருக்காமல் வேலைகளை முடித்து விடுவாள்.
“நான் வந்து செய்ய மாட்டேனா? நீ படிக்கிற வேலையை பார்” என்று இவன் கூறினால்
“வர வர உன் கூட இருக்கும் டைம் கம்மியாகிக்கிட்டே வருது. ஆபீஸ்ல வேலை பார்த்தது பத்தாதென்று இதுல நீ வீட்டுக்கும் வந்து வேலை பார்த்தா சுத்தமா நாம ஒண்ணா இருக்க நேரம் கிடைக்காது” என்பாள்.
அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் காலை உணவை சமைப்பதை மறக்கவுமில்லை. ஜெராடை சமைக்க விடவுமில்லை. குடித்து விட்டு வந்தாலும் காலையில் எழுந்து அவனுக்காக சமைத்து வைப்பாள். இன்றுதான் இவ்வாறு பேசியிருந்தாள்.
“காலையிலையே ஆரம்பிக்காத. நான் போகும் வழியில்லையே சாப்பிடுறேன். நீ மறக்காம சாப்பிடு” என்றவன் கிளம்பியிருந்தான்.
தொட்டத்துக்கெல்லாம் ஐவி ஜெராடோடு சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் என்று அவன் உயிரை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்தாலேயானால் குடித்து விட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்து மீதி உயிரை எடுப்பாள்.
“என்னதான் ஆச்சு உனக்கு? ஏன் இப்படி பிகேவ் பண்ணுற?” ஜெராட் எவ்வளவு கேட்டும் அவள் போக்கை அவள் மாற்றிக்கொள்ளவேயில்லை.
இத்தனை வருடங்கள் கூடவே இருந்தவளுக்கு திருமணமான பின் அதுவும் வேலைக்கு செல்லும் பொழுது ஏற்படும் மன அழுத்தமாக இருக்கும் என்று அவளை மருத்துவரிடம் ஆலோசனைக்காகவும் {counseling} அழைத்து சென்றான்.
அங்கே அமைதியாகத்தான் இருந்தாள். இவங்களுக்கு ஒன்றுமில்லை என்றார் மருத்துவர். வெளியே வந்தவள் அவனை பிடிப்பிடியென்று பிடித்துக்கொண்டாள்.
“என்ன என்ன பைத்தியம் என்று சொல்லுறியா? டாக்டர் கிட்ட கூட்டிட்டு வந்து என்னத்த நீ நிரூபிக்க பாக்குற? எனக்கு பத்தியம் பிடிச்சிருச்சுனு என்ன மெண்டல் ஹாஸ்ப்பிட்டள்ள அட்மிட் பண்ணிட்டு, உன் அம்மா பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணலாம் என்ற என்னமோ”     
“அம்மா பாக்குற பொண்ணா? என்ன சொல்லுற? அம்மா உன் கிட்ட எப்போ பேசினாங்க? என்ன பேசினாங்க?” தன்னுடைய வீட்டார் அலைபேசி அழைப்பு விடுத்து இவளிடத்தில் ஏடா கூடமாக ஏதாவது பேசி வைத்தார்களோ என்று தான் கேட்டான்.
அப்படியே பேசியிருந்தாலும் தன்னிடம் அதை பற்றி பகிர்ந்துகொள்ளாமல் இவ்வாறுதான் நடந்து கொள்வாளா? தன் மீது இவளுக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளவுதானா? இத்தனை வருட காதலும் பொய்த்துப் போன உணர்வு அக்கணம் ஜெராட்டினுள் தோன்றியது.
“யாரும் என் கிட்ட பேசல உனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குமோனு எனக்கு தோணுது” என்றாள் ஐவி.
அவளது பதிலில் அவனது நெஞ்சாங் கூடு வெறுமையானது. அவளுக்கு அவன் மீது சந்தேகம் மட்டுமல்ல, துளியளவு நம்பிக்கையுமில்லை என்று சொல்லி விட்டாள்.
“உன் கற்பனைக்கு அளவே இல்லையா? சரி உனக்கு என்னதான் பிரச்சினை என்று சொல்லு? ஏன் இப்படி நடந்துக்கிறானு சொல்லு?” அக்கணமும் பொறுமையாகத்தான் கேட்டான் ஜெராட். பிரச்சினை என்னவென்று அறிந்தால் தானே சரி செய்ய முடியும். சண்டை போட்டால் சரியாகுமா? அதனால் தான் இவ்வளவு பொறுமையாக அவளிடம் பேசினான்.
“நீதான் பிரச்சினை. உன்ன எனக்கு பிடிக்கல” பட்டென்று சொல்லி விட்டாள்.
“ஹேய் என்ன உளறுற. எத்தனை வருஷம் லவ் பண்ணிட்டு இப்போ கல்யாணமும் பண்ணி பிடிக்கலைனு சொல்லுற? என்னதாண்டி உன் பிரச்சினை”
“உன் அன்புதான். அது என்ன சந்தேகப்படுது. டாச்சர் பண்ணுது. நீ ஒரு சைக்கோ ஜெராட் சைக்கோ” என்று கத்தியவள் மறந்தும் டைவோர்ஸ் வேண்டும் என்று கேட்கவில்லை.
அவள் சொல்ல விளைவது ஜெராடுக்கு சுத்தமாக புரியவில்லை. தான் அவள் மீது செலுத்தும் அன்பும் அக்கறையும் அவளுக்கு தொல்லையாக தெரிகிறதா? அவளுடைய சுந்தந்திரத்தை பறிப்பதாக கருதுகிறாளா?
அதற்காக அவள் இரவில் குடித்து விட்டு வீடு வருவதை பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியுமா? ஏன் இவள் புரிந்துகொள்ளாமல் பேசுகின்றாள்.
என்ன செய்வதென்று ஜெராடுக்கு புரியவில்லை. ஐவிக்கு எப்படி புரிய வைப்பது? அவள் தானே அவன் உலகம். அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா? இத்தனை வருடங்கள் கூட இருந்து புரிந்துகொள்ளாதவளுக்கு இனிமேல் எவ்வாறு புரியவைப்பது என்று புரியாமல் குழம்பித் தவித்தான் ஜெராட்.
அவனது சோகமான முகத்தை பார்த்து ஆபீஸ் கொலிக் டேவிட் என்ன? ஏது? என்று வினவ, வேலைக்கு சேர்ந்த அன்றிலிருந்தே தோழமையாக பழகுவதால் வெறுமையாக தன் பிரச்சினையை கூறினான்.
“கல்யாணமானாலே பிரச்சினைதான். ஒரு ப்ரொஜெக்ட் வேலையா அமேரிக்கா போகணும். என்ன போக சொன்னாங்க. நீ போயேன்.  ஜஸ்ட் ரெண்டு வாரம்தான். உன் பொண்டாட்டிகிட்ட சொல்லாம போ. கொஞ்சம் நாள் பிரிஞ்சிருந்தா உன்ன புரிஞ்சிப்பாங்க” என்றான் டேவிட்
ஜெராடுக்கும் அது சரியென்று தோன்றியது. இல்லையென்றால் நிரந்தரமாக ஐவி தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற அச்சம் அவனுள் எழுந்தது.
கொஞ்சம் நாட்கள் பிரிந்திருந்தால், தானில்லாத வீட்டில் தனிமையும், தன்னுடைய ஞாபகங்களும் நிச்சயமாக அவளை அலைக்கழிக்கும். தன்னிடம் மீண்டும் வந்து விடுவாள் என்று நம்பினான்.
அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் அமேரிக்கா செல்ல அவன் விரும்பவில்லை. ஐவி இரவு தாமதமாக வரும் பொழுதே அவன் மனம் பதைபதைக்கும். இவனை ஒருநாள் கூட காணவில்லையென்றால் அவள் பதற மாட்டாளா? அதானால் அவளிடம் விடைபெற்று விட்டுத்தான் அமேரிக்கா சென்றான்.
சென்றவனுத்தான் இருப்புகொள்ளவில்லை. அலைபேசி அழைப்பு விடுத்தால் அவள் பதிலளிக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பினால் அதற்கும் பதிலில்லை.
இரண்டு வாரங்கள் வேலையாக சென்றவன் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் வேலையை அவசரமாக முடித்துக் கொண்டு பத்து நாட்களிலையே ஊர் வந்து சேர்ந்தான்.
வந்தவன் ஆபீசுக்கு கூட செல்லவில்லை. பூங்கொத்தோடு ஐவியை காண அவளது காரியாலையம்தான் பறந்தான்.
அவள் அங்கு இல்லை. இன்று விடுமுறை என்றார்கள். வீட்டில் இருப்பாள் என்று ஆவலாக வந்தவனுக்கு அவன் மனைவி பெரிய அதிர்ச்சியையே கொடுத்தாள்.
அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க எண்ணி ஜெராட் அழைப்பு மணியை அழுத்தாமல் தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறந்து கொண்டு உள்ளே செல்ல, வீட்டினுள் பேச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பித்தன.
“யார் வந்திருப்பார்கள்? அதுவும் இந்த நேரத்தில்? என்றவனுக்கு ஐவியோடு மற்றுமொரு ஒரு ஆணின் குரல் தங்களது படுக்கை அறையில் கேட்கவும் அது அவளது தம்பி அன்றோவாக இருக்கும் என்று எண்ணியவனின் கண்களில் சிதறிக் கிடந்த துணிகள் விழ, அவன் மனம் எண்ணுவதை தடுக்க முடியாமல் அறை கதவை சட்டென்று திறந்து விட்டான்.
அங்கே அவன் காதல் மனைவி இன்னொரு ஆணுடன் தங்களுடைய கட்டிலில் இருப்பதை கண்டவனுக்கு பேச்சே வரவில்லை.
“யார்டா நீ” என்றான் அவன்.
“நீ இன்னும் ரெண்டு நாள்ல இல்ல வர்றதா சொன்ன?” அங்கே ஒன்றுமே நிகழாதது போல் ஐவி கிடைத்த துணியை மேனியில் கட்டிக் கொண்டு ஜெராட்டை பார்த்துக் கேட்டாள்.
கையிலிருந்த பூங்கொத்தை விசிறியடித்தவன் “முதல்ல ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறுங்க” என்று ஐவியை பார்த்து “உன் பொருட்கள் எதுவும் இங்க இருக்கக் கூடாது. டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன் சைன் பண்ணி அனுப்பு” என்றான்.
“ஓகே கூல் மேன்” என்று அந்த ஆடவன் எழுந்து வெளியே சென்றிருக்க, ஐவி எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாது தனது பொருட்களோடு வெளியேறினாள்.
அவள் சென்ற மறுகணமே ஜெராட் தரையில் விழுந்து கதறி அழுதான்.
ஐவி என்ன செய்திருந்தாலும் ஏன் அவனை கொலை செய்திருந்தாலும் கூட மன்னித்திருப்பான். தன் கண்முன்னால் நடந்த இந்த சம்பவத்தை அவனால் மறக்கவும் முடியவில்லை. ஐவியை மன்னிக்கவும் முடியவில்லை.
அவன் அனுப்பிய டைவோர்ஸ் நோட்டீசை பிரச்சினை செய்யாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவள் நீதிமாற்றத்திலும் அவனிடமிருந்து எதுவும் பெறாமல் விவாகத்து கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
“அன்னைக்கி தான் நான் அவளை கடைசியாகப் பார்த்தேன். பார்க்க ஒன்னும் செழிப்பா வாழுறது போல தெரியல. குடிச்சி குடிச்சே ஒரு மாதிரி இருந்தா” பராவின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீரோடு கூறினான் ஜெராட்.
“உங்களுக்கு அவங்க பண்ணத நினைச்சி அவங்க மேல கோபம் இருக்கு வெறுப்பு இல்லனு நினைக்கிறேன்”  இல்லையென்றால் அவள் காணாமல் போய் விட்டாள் என்றதும் அவள் அவனுக்கு செய்ததற்கு சந்தோசம் தானே அடைந்திருப்பான். இப்படி அழுது புலம்பியிருப்பானா?   
“நான் அவளுக்கு என்ன கஷ்டத்த கொடுத்தேன். என் அன்பு அவளுக்கு தொல்லையாம். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சேன். இப்படி பண்ணிட்டா. என் வீட்டுல… என் ரூம்ல… அந்த காட்ச்சி தினம் என் கண்ணுக்குள்ள வந்து நின்னு இம்ச பண்ணும். அவளை குடிக்க வேணாம்னு சொன்ன நானே அத மறக்க அவளை போல குடிகாரனாகிட்டேன். 
யாராவது உன் மனைவியை பார் என்று போட்டோ அனுப்பி இருந்தால் கூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஏன் அவளே நான் இப்படியொரு தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். தப்பு செஞ்சிருந்தா அந்த தப்ப திரும்ப செய்யக் கூடாது என்று மனம் வருந்தி என் கிட்ட சொல்லி இருப்பான்னு எண்ணி இருப்பேன்.
ஆனா அன்னைக்கி அவ என்ன பார்த்து எந்த பதட்டமும் படல. எதோ அவ புருஷன் கூட அவ ரூம்ல, அவ பெட்ல இருக்குறது போலவும், நான் அவ வீட்டை கூட்டி பெருக்க வந்தவன் போலவும் “நீ இன்னும் ரெண்டு நாள்ல இல்ல வர்றதா சொன்னான்னு கேக்குறா”
அவ எவ்வளவு என்ன பேசி இருந்தாலும் அவ மேல நான் கோப்பட்டதே இல்ல. பொறுமை, பொறுமை என்று பொறுமையாகத்தான் போவேன். என் மொத்த பொறுமையையும் அன்னைக்கி உடைச்சிட்டா.
அன்னக்கி வந்த ஆத்திரத்துல நான் அவளை கொலை கூட பண்ணி இருப்பேன். என் அம்மா என்ன அப்படி வளர்கலையே.
கல்யாணத்துக்கு முன்னாடியே அவ கூட தப்பான உறவுல இருக்கேன்னு ஜீசஸ் என்ன நல்லா தாண்டிச்ச்சிட்டாரு” ஜெராட் மனதில் இருப்பதை அவ்வளவு இலகுவில் மனம் திறந்து பேசுபவனல்லவே இன்று பராவிடம் தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்க்கலானான்.
“நாம கல்யாணம் பண்ண போறவங்க தானேனு இருந்திட்டீங்க கல்யாணம் பண்ணீங்க இல்லையா? நடந்தத நினைச்சி எதுக்கு உங்கள நீங்களே கஷ்டப்படுத்திக்கிறீங்க?
இப்போ கூட நீங்க உங்களுக்காக கண்ணீர் சிந்தலயே. நீங்க அவங்களுக்காகத்தான் கண்ணீர் வடிக்கிறீங்க? அதுவும் நடந்ததை நினைச்சி இல்ல. அவங்க காணாம போய்ட்டாங்க, அவங்களுக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டத்துல, அந்த அன்புள்ள அழுறீங்க. ஒருத்தங்க மேல வச்ச அன்பு என்னைக்கும் மாறாது” பரா அவனை சமாதானப்படுத்தியவாறே புரியவைக்கவும் முயன்றாள்.
“இல்ல. அவ பண்ணத என்னால மன்னிக்க முடியாது” பரா சொல்வதை ஒத்துக்கொள்ள முடியாமல் மறுக்க முயன்றான் ஜெராட்.
“வேண்டாம் மன்னிக்க வேண்டாம். மன்னிக்க கூடிய தப்பும் இல்லையே அது. மறக்குறது உங்க லைப்புக்கு நல்லது.
காதல் துளியளவு கூட மனசுல இல்லாத புருஷன் பொண்டாட்டியாக இருந்தாலும் இந்த மாதிரி ஒன்ன ஏற்றுக்கொள்ள மாட்டங்கதான். நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்குறீங்க உங்களால எப்படி அவங்க பண்ணத அவ்வளவு சீக்கிரத்துல மறக்க முடியும்? மனசுல ஏற்பட்ட காயம் ஆற டைம் எடுக்கும். நீங்கதான் மெல்ல மெல்ல உங்கள மீட்டெடுக்கணும். யாரும் வந்து கைதூக்கி விட மாட்டாங்க. ஏன் குடிக்கக் கூடாதுனு நீங்களே மீண்டு வரலையா?   
முதல்ல அவங்கள நினைச்சி அழுறத நிறுத்துங்க. அவங்க என்ன சின்னக் குழந்தையா? எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்குறாங்களோ? போதை தெளிஞ்சதும் எந்திரிச்சசு வந்துடுவாங்க” என்றாள் பரா.
அவள் குசும்பு பேச்சு ஜெரட்டை சீண்ட “ஏன் நான் பண்ணுறது எரிச்சலா இருக்கா?” என்றான் சட்டென்று மலர்ந்த புன்னகையை உதடு கடித்தவாறே மறைத்தான். 
“எனக்கு எங்கயும் எரியல. இப்படி சாப்பிடாம கொள்ளாம புலம்பிக்கிட்டு இருக்கிறீங்களே அதான் பிடிக்கல. நல்லா சாப்பிட்டு தெம்பா புலம்புங்க”
“அம்மா இருந்தா ஊட்டி விட்டிருந்திருப்பாங்க” என்றவனோ ஊட்டி விடுமாறும் கூறவில்லை. வேண்டாமென்று மறுக்கவுமில்லை.
அதன்பின் பரா அமைதியாக அமர்ந்திருப்பாளா? “இருங்க எடுத்துட்டு வரேன்” என்று சமயலறைக்குள் சென்று சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு வந்து அவனுக்கு ஊட்டி விடலானாள்.
ஜெராடும் அமைதியாக உண்ண ஆரம்பித்தான்.
கண்களை துடைத்தவாறே அவன் உண்ண “என்ன அவ்வளவு காரமாகவா இருக்கு?” என்று இவள் நக்கல் பண்ண
“நீ சாப்பிட்டியா என்ன?” சந்தேகமாக அவளை பார்த்தான் ஜெராட்.
“உங்களுக்கு ஊட்டிடு நான் சாப்பிடுறேன். நீங்க பேசாம சாப்பிடுங்க” மிரட்டும் தொனியில் பரா கூற அமைதியாக சாப்பிட்டு முடித்தவன் அவள் சாப்பிடும் வரை சமயலறையில் அமர்ந்து நாளை காலை ஷாப்பிங் செல்லலாம் என்றும் என்னவெல்லாம் வாங்கலாம் என்றும் பேசிக் கொண்டிருந்தான்.

Advertisement