Advertisement

அத்தியாயம் 7
“குட் மோர்னிங்” சமையலறை கதவில் சாய்ந்து வெளியே முற்றத்தை பார்த்தவாறு காபி அருந்திக்கொண்டிருந்த பாராவை பார்த்துக் கூறினான் ஜெராட்.
“குட் மோர்னிங். காபி சாப்பிடுறீங்களா? நீங்க டீ சாப்பிடுவீங்களா? இல்ல காபி சாப்பிடுவீங்களா என்று தெரியாம நான் காபி போட்டேன் சாரி” என்றாள் பரா.
“இந்த குளிர்ல காலைல எந்திருச்சு. சமையலறையில எது எங்க இருக்குனு கண்டு பிடிச்சு காபி போட்டிருக்குறீங்க. காபியே கொடுங்க” புன்னகைத்தவாறே இருக்கையை இழுத்து அமர்ந்து கொண்டான்.
“இல்ல டீ வேணும்னா சொல்லுங்க, டீயே போட்டுக் கொடுக்குறேன்” தான் அருந்திக் கொண்டிருந்த கப்பை மேசையின் மீது வைத்தவள் அவனை ஏறிட்டாள்.
விரல்கள் மேசையின் மீது தாளம் போட “காபியே ஓகே. ப்ரேக்பஸ்ட் என்ன பண்ண போறீங்க?” வெளியே இருந்துதான் இரவுணவையும் வரவழைத்தான். தானென்றால் ஆபீஸ் செல்லும் வழியில் துரித உணவு ஏதாவது வாங்கிக் கொண்டு வண்டியிலையே சாப்பிட்டு கொண்டு செல்வது வழக்கம்.
இப்பொழுது அவ்வாறல்லவே பராவோடு குழந்தைகளும் இருக்க, அவர்களை பற்றி சிந்திக்க வேண்டுமல்லவா?
காலை உணவையும் வெளியே வாங்க்கிக் கொள்ளலாமா? சமைக்க ஏதாவது வாங்கி வரட்டுமா? என்று தான் கேட்டான்.
“ப்ரிஜ்ல பிரெட், முட்ட, சீஸ், தக்காளி இருக்கு. சென்விச் பண்ணிடுறேன். மதியம் வருவீங்களா?” அவனுக்கு கப்பில் காபியை ஊற்றியவாறே பதில் கூறிய பரா அவன் முகம் பார்த்து நின்றாள்.
அவள் நீட்டிய கப்பை சிறு புன்னகையை தவழ விட்டவாறே வாங்கிக் கொண்டவன் “இல்ல நான் வர மாட்டேன். மதியம் ஆடர் பண்ணிடுறேன். பணம் நம்ம ரூம் கபோர்ட்ல இருக்கு. எவ்வளவு என்று பில்லை பார்த்து கொடுங்க. நைட்டுக்கு நான் வரும் பொழுது ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்றான்.
இங்கிலாந்து பவுண்ட் இலங்கை ரூபாயை விட பெறுமதி வாய்ந்ததாக இருக்கும். எந்த பொருள் எவ்வளவு என்று தெரியாதே, எப்படி சமாளிப்பேன் என்று ஜெராடிடமே கேட்டிருந்தாள் பரா.
“அது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. எல்லா பொருளிலும் விலை இருக்கும்” என்றவன்தான் இன்று மறக்காமல் பில்லை பார்த்து பணம் கொடுக்கும்படி கூறினான்.
“தினமும் வெளியவே சாப்பிட முடியாது. பொருள் வாங்கினா நான் வீட்டுலையே சமைச்சிடுவேன்” கூறியவாறே தன்னுடைய கப்பை கையில் மீண்டும் ஏந்திக்கொண்டாள்.
“ம்ம்… ஓகே என்ன வேணும் என்று என்று எழுதிக் கொடுங்க நான் வாங்கிட்டு வரேன்” காபியை அருந்தியவாறே இவனும் பதில் கூறலானான்.
“இங்க நம்ம கடைகள் கூட இருக்கா?” ஆச்சரியமாக ஜெராட்டை ஏறிட்டாள் பரா.
“ஒரு இந்தியன் ஷாப், ஒரு பாகிஸ்தான் ஷாப் பக்கத்துல இருக்கு. அங்கதான் வாங்குறேன்” என்றவன் எந்த கடை வீட்டிலிருந்து எந்த பக்கம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் கூறினான்.
“பாருடா… நம்ம நாடுங்கால புடிச்சி ஆட்ச்சி செஞ்சானுங்க. இப்போ நாம அவங்க நாட்டுல அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்”
“ஹாஹாஹா… சத்தமா சொல்லிடாதீங்க. சந்தேகப்பட்டானுங்க நம்மள துரத்த பார்ப்பானுங்க” என்றான் ஜெராட்.
காபியை அருந்தி முடிக்கும் வரையில் அவளோடு சிரித்து பேசியவன் “ஓகே நான் குளிச்சிட்டு வரேன். ஆபீஸ் போகணும்” என்று நகர்ந்தான்.
பரா குழந்தைகளுக்கு வேறாக, அவர்களுக்கு வேறாக சென்விச் செய்து தட்டுகளில் அடுக்கி வைத்தாள்.
குளித்து விட்டு சாப்பிட அமர்ந்த ஜெராட் “ஆமா பசங்க இன்னுமா தூங்குறாங்க? குளிரினால் தூங்குறாங்களா? நேத்து முழுநாளும் டிராவல்ல தூங்கினங்களே. உடம்புக்கு ஏதாவதா?”
“உடம்புக்கு ஒண்ணுமில்ல. டைம் டிஃபரென்ட் தான். இரண்டு நாள்ல பழையபடி ஆட்டம் போட ஆரம்பிச்சிடுவாங்க”  
“ஸ்ரீலங்காகு போகணும். பாதர பார்க்கணும் என்று அடம் பிடிக்க மாட்டாங்களே” சட்டென்று குழந்தைகள் இந்த சூழலுக்கும், காலநிலைக்கும் பொருந்துவார்களா? என்ற கவலை ஜெராட்டை வாட்டியது.
“ஜெஸிக்கு நான் இருந்தா வேற யாரும் தேவையில்லை. கூட லெனினும் இருக்கானே. அடம் பிடிக்கிறதா இருந்தால் லெனின்தான் அடம் பிடிக்கணும். ஆசிரமத்துல அம்மா, அப்பாவோட போகும் குழந்தைகள் திரும்ப வரமாட்டாங்க என்ற அளவுக்கு தெரிஞ்சி வச்சிருக்கான். சோ போகணும் என்று சொல்ல மாட்டான்”
“அப்போ அவங்களோட அம்மா….” குறும்பு மின்னும் புன்னகையோடு கேட்டான் ஜெராட்.
அவனை செல்லமாக முறைத்த பரா “என்ன அனுப்பி வைக்கத்தான் கூட்டிட்டு வந்தீங்களா?” என்று கேட்டாள்.
“தட்” என்று எதுவோ விழுந்த சத்தத்தில் இருவரின் கவனமும் சிதற,
மாளிகையை புதுப்பிக்கும் வேலை நிகழ்ந்து கொண்டிருப்பதால் அவர்கள்தான் எதையோ போட்டு உடைத்து விட்டார்கள் என்று எண்ணி “எதை போட்டு உடைச்சானுங்களோ தெரியலையே” என்றான் ஜெராட்.
“ரெனவேஷன்னு சொல்லி உங்களுக்கு மேலும் செலவை இழுத்து வைக்க போறானுங்க” சிரித்தாள் பரா.
“ஓகே… நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆச்சு” என்றவன் கிளம்ப, வாசலுக்கு வந்து வழியனுப்பி வைத்தாள்.
இப்போதைக்கு வீட்டை சுத்தம் செய்யும் வேலையில்லை. குழந்தைகள் எழுந்தால் குளிப்பாட்டி உணவூட்ட வேண்டியது மட்டும்தான்.
அவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் வரையில் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கு வீட்டில் எந்த புத்தகங்களும் இல்லை. அவர்கள் எழுத, வரைய சில புத்தகங்கள் இருந்தால் நன்று. அவர்களுக்கும் நேரம் செல்லும் என்று எண்ணிய பரா கடை பக்கத்தில் தானே அவர்கள் எழுந்துகொள்ளும் முன் சட்டென்று சென்று புத்தகங்களையும், இதர பொருட்களையும் சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கி வரலாம் என்று முடிவு செய்தாள்.
ஜெராட் பணம் வைத்திருப்பதாக கூறிய கபோடிலிருந்த பணம் எடுத்தவள் வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள்.
ஜெராட் கூறியபடி வலது புறத்தில் ஒரு கிலோமீட்டரில் இந்தியன் சூப்பர்மார்கட்டும், இடது புறத்தில் ஒரு கிலோமீட்டருக்கு குறைந்த தூரத்தில் பாகிஸ்தான் சூப்பர்மார்கட்டும் இருக்கிறது.
ஹிந்தியோ, உறுதோ பாஷை தெரியாவிடினும் குறைந்த தூரத்தில் உள்ள பாகிஸ்தான் கடைக்கே போகலாம் என்று முடிவு செய்தவள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்தாள். தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு குழந்தைகள் விழிக்கும் முன் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே அவள் சிந்தனையில் இருந்தது.    
அரை கிலோமீட்டர் சென்ற பின் பாதை இரண்டாக பிரிய, எந்தப்பக்கம் செல்ல வேண்டும் என்று பராவுக்கு புரியவில்லை. அதை பற்றி ஜெராட் கூறியிருக்கவேயில்லையே.
எந்த பக்கம் செல்வது? என்று பரா புரியாமல் முழித்துக்கொண்டிருக்க, பெட்ரோல் போலீஸ் கார் அவள் முன் வந்து நின்றது.
அவள் ஊருக்கு புதிது. இதற்கு முன் அவளை இந்த ஏரியாவில் பார்த்ததில்லை. அதனாலயே அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தனர் வண்டியிலிருந்து இறங்கிய இரண்டு காவலாளிகள்.
தெளிவாக பேசும் ஆங்கிலமே அரைகுறையாகத்தான் பராவுக்கு புரியும். இதில் ஆங்கிலேயர் வாய்க்குள் பாதி ஆங்கிலத்தை முழுங்கியவாறு பேசினால் அவள்தான் எவ்வாறு புரிந்துகொள்வாள்?
“பாஸ்போர்ட்” என்றது மட்டும் புரிய “ஹோம் ஹோம்” என்றவளை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்ற முனைந்தனர் காவலாளிகள்.
குழந்தைகள் எழுந்தால் தன்னை தேடி அழ ஆரம்பிப்பார்கள். தன்னை தீவிரவாதியென்று கைது செய்யத்தான் முனைகின்றார்களோ என்றஞ்சியவள் அவர்களிடமிரு தப்பி வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தாள். 
அவர்களும் விடாது வண்டியில் இவளை துரத்தி வர, எடுத்த ஓட்டம் பங்களாவின் உள்ளே சென்றுதான் மறைந்தாள்.
அவர்கள் விடாது அழைப்பு மணியை அழுத்த பாஸ்போர்ட்டை கையில் எடுத்துக் கொண்டு கதவை திறந்தவள் அதை அவர்களுக்கு கொடுக்காமல் திறந்து காட்டி தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் இது தன்னுடையது தான் என்று புரிய வைக்க முனைந்தாள்.
ஆனால் அவர்கள் பங்களாவை பார்த்து யோசனையாக இது ஜெராட்டின் பங்களாத்தானே அவர் எங்கே என்று கேட்டார்கள்.
ஜெராட்டின் பெயர் காதில் விழுந்ததும். “மை ஹஸ்பண்ட். வென்ட் ஓபீஸ்” என்றாள்.
“உன் கணவரை பற்றி கேட்கவில்லை. ஜெராட் எங்கே” என்று மீண்டும் கேட்கலாயினர்.
அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டாலும் பரா அதே பதிலை கூற, காவல்நிலையத்துக்கு அழைத்து ஜெராட்டை தொடர்பு கொண்டு உயிரோடுதான் இருக்கின்றானா என்று விசாரிக்க கூறினார்கள்.
பராவுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. குழந்தைகளும் எழுந்து வந்து இவளை கட்டிக்கொண்டு பசி என்று கூற, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என்று ஆங்கிலத்திலும், சைகை மொழியாலும் கூறலானாள்.  
குழந்தைகளை சாக்காக வைத்து தப்பிக்க பார்க்கின்றாளோ என்று இவள் மீது சந்தேக பார்வையை வீசியவர்கள் “சரி உள்ளே வா” என்று அவளை உள்ளே அழைத்து செல்ல முயன்றனர்.
“உண்மையில் இவர்கள் போலீசார் தானா? அல்லது போலீஸ் வேஷத்தில் இருக்கும் கொள்ளையர்களா?”
சமீபத்தில் தான் ஆஸ்திரியாவில் இந்தியர்களை அடித்தார்கள், கலவரம் என்று டீவி நிவ்ஸில் பார்த்ததாக ஞாபகம். தங்கள் நாட்டில் பிற நாட்டவர் இருப்பதை பிடிக்காத வெள்ளையர்களாயின் கொலை கூட செய்யத் தயங்க மாட்டார்களே! அவசரப்பட்டு கதவை திறந்து விட்டோமே! என்ன செய்வது? குழந்தைகளை எப்படி காப்பது? என்றுதான் அக்கணமும் சிந்திக்கலானாள்.
“கம் லெட்ஸ் கோ” என்று அவர்கள் முன்னே நடக்க “நீங்க உள்ளே வரக்கூடாது” என்ற பரா கதவை பூட்ட முயன்றாள். இரண்டு பாதியாக இருந்த அந்த பழங்கால கதவை அவளால் சட்டென்று ஒரேயடியாக தள்ள முடியவில்லை.  
நிச்சயமாக இவள் ஜெராட்டை எதோ செய்து விட்டு வீட்டை கைப்பற்றி விட்டாள். குழந்தைகள் இவளுடையதா? அல்லது வேறு யாருடையதா? என்று தெரியவில்லை. குழந்தைகளை காரணமாக வைத்து தப்பிக்க பார்க்கின்றாளேன்று பாராவை வளைத்துப் பிடித்து கையை பின்னாடி வைத்து விலங்கிட்டிருந்தனர் காவலாளிகள்.   
குழந்தைகள் அரண்டு “அம்மா, அம்மா” என்று அழ, ஆரம்பிக்க இவளுக்கும் கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது.
இவள் அழுதால் குழந்தைகள் பயந்து விடுவார்களென்று அடக்கிக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் காவல்நிலையத்திலிருந்து என்ன கூறினார்களோ, இந்த பெண்தான் ஜெராட்டை கொலை செய்திருப்பாளென்று காவல்நிலையத்துக்கு தகவல் கூறி பாராவை காவல்நிலையம் அழைத்து செல்ல வெளியே வந்தனர்.
“ஐயோ என் பசங்க இன்னும் சாப்பிடவே இல்ல. ஜெஸி பால் கூட குடிக்கல. பசங்களுக்கு பசிக்கும். என்ன விடுங்கடா…” என்று அவள் கதறுவதையும் பொருட்படுத்தாது வண்டியில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
காவலாளிகள் என்ன கேள்வி கேட்டும், குழந்தைகளுக்கு என்ன ஆச்சோ என்று பரா அழுதவாறே இருந்தாள்.
“இதுக்குத்தான் அம்மாவும், அத்தையும் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் என்று அவ்வளவு சொன்னாங்களோ? நான் தான் கேட்கல. தத்துப் பிள்ளைகள் என்று தெரிஞ்சா குழந்தைகளை என் கிட்ட இருந்து பிரிச்சி கொண்டு போவாங்களோ” என்று கலங்கி நின்றாள்.
காலையில் காவல்நிலையம் வந்தவள் மதியம் வரை தண்ணீர் சொட்டு அருந்தாமல் அழுதவாறே இருந்தாள்.
இவளுக்கு ஆங்கிலம் சரியாகாது தெரியவில்லை. இவளுடைய கடவுச்சீட்டை பரிசோதிக்கும் படியும் இவளோடு உரையாட இவளது பாஷை தெரிந்த யாரையாவது அழைத்து வருமாறு கேப்டன் உத்தரவிட்டிருந்தார்.
பரா அமர்ந்திருந்த அறையை வேகமாக திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஜெராட்.
“இங்க என்ன பண்ணுற? எனக்கு போன் பண்ண வேண்டியது தானே” என்றான். பன்மையில் பேசிக் கொண்டிருந்தவன் பதட்டத்தில் ஒருமையில் பேசியது அவனுக்கே தெரியவில்லை.
அவனை கண்டதும் ஓடிச்சென்று அவன் நெஞ்சிலையே சாய்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள் பரா.
உடல் நடுங்க அழுபவள் எவ்வளவு பயந்திருப்பாள் என்று ஜெராட்டால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளை சமாதானப்படுத்தியவாறே மெதுவாக அவள் முதுகை நீவி விட்டான்.
சட்டென்று அவனிடமிருந்து விலக்கியவள் “பசங்க… பசங்க வீட்டுல தனியாக இருப்பாங்க. என்னால… என்னால அவங்க பார்த்துக்க முடியல” மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“அவங்களுக்கு ஒண்ணுமில்ல. நீ செஞ்சி வச்ச பிரெட்டை லெனின் ஜெசிக்கு ஊட்டி விட்டு ரூம்ல ரெண்டு பேரும் விளையாடிகிட்டு இருந்தாங்க. வேலைபார்க்குறவங்க காதுல ஹெட் போன் மாட்டிகிட்டும், பின் பக்கமாக வேலை பார்த்ததுனாலையும் வீட்டுல நடந்த அசம்பாவிதம் அவங்களுக்குத் தெரியல. தெரிஞ்சிருந்தா எனக்கு போன் பண்ணியிருந்திருப்பாங்க”
ஆம் வீட்டில்தான் ஆட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்களே அவர்களையாவது உதவிக்கு அழைத்திருக்கலாம். தனது முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள் “என்ன தேடி ஜெஸி அழலையா?” கண்களை துடைத்தவாறே கேட்டாள். 
“அழுதிருக்கா… லெனின் சமாதானப்படுத்தியிருக்கான்…”
அவளிடம் பொய்யுரைக்க அவன் விரும்பவில்லை. குழந்தைகளின் வளர்ப்பில் எவ்வளவு கவனம் தேவையென்று அவளே அவனிடம் பேசி விட்டாள். குழந்தைகளை நினைத்து அவள் எவ்வளவு அச்சப்பட்டிருப்பாளென்று அவனுக்குத் தெரியும். லெனினும் ஜெஸியும் சமத்துக் குழந்தைகள். இருந்தாலும் இவ்வாறான தவறு இதன் பின் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா?   
“நீங்க… நீங்க எப்படி வந்தீங்க? ஈவ்னிங் தானே வர்றதாக சொன்னீங்க?”
“ஒரு மீட்டிங் இருந்தது அத முடிச்சிட்டு வரும் வழில உங்கள பார்த்துட்டே போகலாம்னு வந்தேன். வந்தா தானே தெரியுது நீ கேப்டனுக்கு வணக்கம் சொல்ல இங்க வந்திருக்கனு” குறும்பாக சிரித்தான்.
“நானா ஒன்னும் வரல என்ன கூட்டிகிட்டு வந்தானுங்க” பதிலுக்கு முறைத்தாள் பரா.
“எதுக்கு கூட்டிகிட்டு வந்தானுங்கனு தெரியுமா?” ஜெராட்டின் புன்னகை மறையவே இல்லை.
“தெரியல” அப்பாவியாக அவன் முகம் பார்த்து நின்றாள். 
“என்ன நீ கொலை பண்ணிட்டு என் பங்களாவை ஆட்டைய போட்டிட்டியாம்” என்றவனுக்கு சிரிப்பு அடங்கவேயில்லை.
“அடப்பாவிகளா… என் புருஷன் ஓபீஸ் போய்ட்டாருனு படிச்சு படிச்சு சொன்னேனே. மரமண்டைங்களுக்கு புரியலையா?”
“எனக்கு போன் பண்ணி இருந்தா இந்தப் பிரச்சினையும் இல்லல” சிரித்தான் ஜெராட்.
“போனா… உங்க நம்பர் கூட எனக்குத் தெரியாது. ஆபிஸ் போகும் போது எல்லாத்தையும் சொன்னவறு போன் நம்பரை கொடுக்கணுமா, இல்லையா?” முறைத்தாள் பரா.
தவறு தன்மீது தான் என்று ஒத்துக்கொண்டவன் ஆபீசுக்கு லீவ் போட்டு முதலில் வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என்றான்.
“பசங்க தேடுவாங்க வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று பரா சொல்ல அவங்களையும் அழைச்சிகிட்டுதான் வந்தேன் என்றான்.
“எங்க…” என்றவள் நெடுநாள் பிரிந்திருந்தது போல் குழந்தைகளிடம் ஓடி அள்ளி அணைத்துக்கொண்டாள்.
“ஐயோ குழந்தைகளுக்கு பசிக்குமே” என்று பரா பதற,
“வரும் வழியில்லையே சாப்பிட வாங்கிக் கொடுத்துதான் கூட்டிட்டு வந்தேன். இல்லனா இவங்க அம்மா என்ன சும்மா விட மாட்டாங்களே” பராவுக்கு பயந்தவன் போல் ஜெராட் நடித்தாலும் அவனுக்கு குழந்தைகள் மீது அக்கறை இருப்பதை நன்கு அறிந்த பராவோ அவனை செல்லமாக முறைத்தாள்.
ஜெராடிடம் வந்த கேப்டன் “நீங்கள் தான் இவர்களுடைய கணவன் என்று அறியாமல் இவங்கள கைது செய்ய வேண்டிய சூழ்நிலை. அதற்கு காரணம் உங்க ஆபீஸ்ல விசாரிச்சப்போ. நீங்க ஆபீஸ்க்கு லீவ் போட்டு இரண்டு மாசத்துக்கு மேலாகுதுனு சொன்னதும், இந்த குழந்தைகளும் தான்.
சமீபத்துல டிவோர்ஸான உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்க முடியும்? அத பத்தி க்ராஸ் வெரிஃபிகேஷன் பண்ண கூட முடியல.
உங்கள கொன்னுட்டு இந்தம்மா உங்க பங்களாவை அபகரிச்சிருக்கலாமோ என்ற சந்தேகம் உங்க ஆபீஸ் தகவலால் இவங்கள விசாரிக்க வேண்டியநிலை அதற்கும் ஒரு ரீசன் இருக்கு” என்றார்.
“இவ என் மனைவி. போனவாரம்தான் கல்யாணமாச்சு. இது நம்ம குழந்தைகள் தான்” என்றான் ஜெராட்.
போனவாரம் கல்யாணமானவனுக்கு எப்படி இந்த வயதில் இரண்டு குழந்தைகள் என்று அநாகரிகமாக எந்தக் கேள்வியையும் கேப்டன் கேட்கவில்லை. மாறாக “எல்லாத்தையும் விட நீங்க இறந்துட்டதாக சந்தேகப்பட வைத்தது ஐவியோட மிஸ்ஸிங் கேஸ் தான்” என்றார். 
“என்ன சொல்லுறீங்க? ஐவி காணாமல் போய்ட்டாளா? எப்போ?”
“பத்து நாள் ஆகுது. நீங்கதான் அவளை ஏதோ பண்ணிட்டதாக அவளோட தம்பி அன்றோ உங்க மேல கம்பளைண்ட் கொடுத்திருந்தான். விசாரிச்சதுல நீங்க ஸ்ரீலங்கா போய் இருப்பதாக தகவல். சோ ஐவி காணாமல் போனதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனாலும் திடிரென்று இவங்கள உங்க பங்களால இரண்டு குழந்தைகளோடு பார்த்ததும், உங்களுக்கும் ஏதாவது ஆகியிருக்கும் என்று தான் ஆபிஸர்ஸ் இவங்கள அவசரப்பட்டு கைது பண்ணியிருக்காங்க. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.
அவர் கடைசியாக சொன்ன எதுவும் ஜெராட்டின் காதில் விழவில்லை. ஐவி காணாமல் போய் விட்டாள் என்பது மாத்திரம் தான் அவன் மனதை இறுக செய்தது.
அவன் அவளை எவ்வளவு காதலித்தான். அவள் அவனையும் புரிந்துகொள்ளவில்லை. அவன் காதலையும் புரிந்துகொள்ளவில்லை.
“என்னாச்சு?” கேப்டன் சொன்னதில் பாதி கூட பராவுக்கு புரியவில்லை. ஜெராட் சோகமாக இருப்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.
வீட்டுக்கு வரும் வரை ஜெராடிடத்தில் அமைதி. பரா குழந்தைகளோடு பின்னால் அமர்ந்து செல்லம் கொஞ்சியவாறே வந்தாள்.
வீட்டுக்கு வந்தவன் அறைக்குள் சென்று மறைந்தான். பரா குழந்தைகளை கவனிக்க செல்ல, அவனை தொந்தரவு செய்யவில்லை.
“என்னாச்சு? இவருக்கு காபி வேணுமான்னு கேட்டாலும் என்ன தனியா விடு ப்ளீஸ்னு தொரத்துறாரு. நைட் சாப்பிட வருவாரா? வரமாட்டாரா?”
ஜெராட் ஏதோ மனக்கவலையில் இருக்கின்றான் அவனை தொந்தரவு செய்யலாகாது என்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாலை மங்கும் முன் கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்திருந்தவள் இரவுணவையும் எளிமையாக சமைத்திருந்தாள்.
குழந்தைகள் சாப்பிட்டு விட்டு கலர் சாக் மற்றும் புத்தகத்தோடு அமர்ந்து விட பரா அறைக்கதவையே பார்த்திருந்தாள்.
ஜெராட் வெளியே வருவது போல் தெரியவில்லை. மெதுவாக சென்று அவன் என்ன செய்கின்றானென்று அறையை எட்டிப் பார்க்க, அலைபேசியைத்தான் பார்த்திருந்தான்.
அலைபேசியில் அப்படி என்ன பார்க்கின்றான் என்று அவனை நெருங்கி பார்க்க, நீலக் கண்களோடு ஒரு பெண் புகை படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“யார் இது?” சட்டென்று கேட்ட பராவின் குரலில் அலைபேசியையே கீழே போட்டிருந்தான் ஜெராட்.
அவளும் அதை எதிர்பார்க்கவில்லை போலும். அலைபேசியை குனிந்து எடுத்தவள் அவன் முன் நீட்ட அமைதியாக அலைபேசியை வாங்கிக் கொண்டான்.
அவன் கண்களில் நீர் நிரம்பி இருப்பதை கவனித்தவள் “உங்க எக்ஸ் வைப்பா… இன்னக்கி உங்க கல்யாண நாள் இல்லையே. என்ன திடீரெண்டு அவங்க ஞாபகம்?” ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்தோம் என்பது பராவின் ஞாபகத்தில் இருக்க, அவன் அருகில் அமர்ந்து கொண்டு “ரொம்ப மிஸ் பண்ணுறீங்களா?” என்று கேட்டாள்.
இல்லையென்று தலையசைத்து மறுத்தவன் “அவளே மிஸ்ஸாகிட்டா” என்றான்.
“ஆமா… மிஸ்ஸிஸ்ஸாக இருந்தவங்க டிவோர்ஸுக்கு அப்பொறம் “மிஸ்” தான் அவங்க. அப்படியேவா இருப்பாங்க” என்றதும் அந்த சூழ்நிலையிலும் ஜெராட்டின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
கண்களை துடைத்துக்கொண்டவன் “அவ காணாம போய் பத்து நாட்களாகுதுனு கேப்டன் சொன்னாரு”
“என்னங்க சொல்லுறீங்க? என்ன ஆச்சு? எங்கேதான் போனாங்களாம்? ஒருவேளை உங்கள தேடி ஸ்ரீலங்கா போய் இருப்பாங்களா?”
“தெரியல”
“கவலைப்படாதீங்க வந்துடுவாங்க. எங்க போய்டப் போறாங்க” ஜெராட்டை சமாதானப்படுத்த முயன்றாள் பரா.
“ஏன் அவ அப்படி பண்ணா? ஏன் அவ என்ன புரிஞ்சிக்கவே இல்ல” பராவை கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கலானான் ஜெராட்.
அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தவளுக்கு அவனது அணைப்புதான் சங்கடமாக இருந்தது. அவளும்தான் மதியம் அவனை அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள். அவனும் தான் ஆறுதல் படுத்தினான்.
அவனுக்குள் மாற்றம் ஏதாவது நிக்காந்திருக்குமா? நிகழ்ந்திருந்தால் ஐவியை நினைத்து கண்ணீர்தான் சிந்தியிருப்பானா?
பராவின் சங்கடத்துக்கு மனமாற்றம்தான் காரணமா? அல்லது ஒரு ஆணின் தொடுகையையா?

Advertisement