Advertisement

அத்தியாயம் 6
தனது வாழ்க்கையில் எல்லா முடிவுகளும் பெற்றவர்கள்தான் எடுக்கின்றனர். குறைந்தபட்சம் குழந்தைகளை தத்தெடுப்பதையாவது தனது விருப்பத்துக்கு செய்யலாமென்று பார்த்தால் அன்னை விடவில்லை. கூடவே புதிதாக வந்த மாமியார் வேறு திருமணம் நிகழும் முன்னே அதிகாரம் செய்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைய ஆரம்பித்து விட்டாள். திருமணம் செய்யலாம் என்றவனோ வேடிக்கை பார்த்திருக்கின்றான்.
“குழந்தைகளை தத்தெடுக்க முடியாதென்றால் இந்த திருமணமே நிகழாது” ஒரே போடாக போட்டாள் பரா.
“இங்க பாரம்மா நான் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாமென்று சொல்லல. ஒரு குழந்தைக்கு ரெண்டு குழந்தைகளை நீ தத்தெடுக்குற என்று சொல்லுறதும் எனக்கு சந்தோசம். ஆனால் மனநலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாமென்றுதான் சொல்கின்றேன்.
நாளைக்கு உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் இந்தக் குழந்தைகள் உங்களுக்கு பாரமாகக் கூட தோன்றலாம். அல்லது இந்தக் குழந்தைகளால் நீ பெற்றெடுக்கும் குழந்தை பாதிப்படையலாம்” பொறுமையாக எடுத்துக் கூறினாள் எஸ்தர்.
இவர்கள் தங்களுக்கு பிள்ளைகளே வேண்டாமென்றுதான் குழந்தைகளையே தத்தெடுக்கின்றார்கள் என்ற விஷயம் இவர்களை பெற்றவர்களுக்கு தெரியாதே. தெரிந்தால் குழந்தைகளை தத்தெடுப்பது இருக்கட்டும் இந்த திருமணம் தான் நிகழுமா?
பரா ஜெராட்டை தான் முறைத்தாள். “தனக்கு பிடித்த குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சொன்னவன், குழந்தைகளை தனக்கு தேர்ந்தெடுக்க சொன்னவன் தனக்கு ஆதரவாக பேச வேண்டாமா? இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?”
“சரி அப்போ ஒரு மனநலம் குன்றிய குழந்தையையும், ஒரு ஹெல்தியான குழந்தையையும் தத்தெடுத்துகிறோம்” என்றான் ஜெராட்.
அவனும் தான் என்ன செய்வான்? அன்னையின் ஆசையை நிறைவேற்ற இந்த திருமணம். இதில் பராவின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும். அன்னையின் மனதையும் புண்படுத்தக் கூடாது. அதனால் இருவருக்கும் சாதகமான ஒரு முடிவை கூறினான்.
“நான் என்ன சொன்னா நீ என்ன பேசுற? ரெண்டு குழந்தையும் ஹெல்தியான குழந்தையாக இருக்கணும். அதுதான் உங்களுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் நல்லது. நாளைக்கு உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் நல்லது” என்றாள் எஸ்தர்.
“இங்க பாருங்க குழந்தைகளை தத்தெடுக்குறதுல எனக்கு இஷ்டமில்லை. இந்த கல்யாணம் நடக்காது” என்றாள் ஜான்சி.
ஏற்கனவே நடந்த திருமணத்தில் வீட்டு வேலைக்காரியாக தன் மகள் எவ்வளவு கஷ்டப்பட்டாள். இப்பொழுது யாரோ பெற்ற குழந்தைகளுக்கா தன் மகள் அவளது வாழ்க்கையை தொலைக்க வேண்டுமா என்ற ஆதங்கத்தில் பாராவை புரிந்துகொள்ளாது பேசினாள் ஜான்சி.
“ஜான்சி அவசரப்படாதே, குழந்தைகளை தத்தெடுக்கணும் என்ற முடிவு நம்ம பொண்ணோடது. பெருந்தன்மையாக அவங்க அதுக்கு சம்மதம் தெரிவிச்சிருக்காங்க” என்றார் பால்ராஜ்.
“என்ன பாதர் அமைதியா இருக்கிறீங்க. நீங்க இப்படி அமைதியாக இருந்தா சரியா? உங்கள நம்பித் தானே என் பொண்ண வேலைக்கு அனுப்பினேன். அவளை இப்படி பிரைன் வாஷ் பண்ணி வச்சிருக்குறீங்க” ஜான்சி பாதிரியாரை கேள்வி கேட்கலானாள்.
“அநாதை குழந்தைகள் எல்லாமே கடவுளோட குழந்தைகள். அதுவும் மனநலம் குன்றிய குழந்தைகள் கடவுளால் அனுப்பட்ட குழந்தைகள். என்ன பெத்தவங்களே பார்த்துக்கொள்ள முடியாது என்று குப்பை தொட்டியிலும், அநாதை ஆசிரமங்களின் வாசலிலும் போட்டு விட்டுட்டு போறாங்க.
குழந்தைகள் இல்லாத தம்பதியர்கள் மட்டும்தான் குழந்தைகளை தத்தெடுக்கிறாங்க. குழந்தை இருக்குறவங்க தத்தெடுக்குறத பத்தி யோசிக்கிறதே இல்ல. ஒரு குடும்பம் ஒரு குழந்தையை தத்தெடுத்தா அநாதை ஆசிரமங்களே இருக்காதே.
பரா-ஜெராட் போல சில நல்ல உள்ளம் கொண்டவங்க மட்டும்தான் குழந்தைகளை தத்தெடுக்க நினைக்கிறாங்க. அதிலையும் பரா கடவுளால் அனுப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கணும் என்று நினைக்கிறா. அவளோட உயர்ந்த குணத்தை உங்களாலத்தான் புரிஞ்சிக்க முடியல.
யேசுநாதருக்குத் தெரியாதா கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு யாரை அம்மாவா அனுப்பினா அன்பா பார்த்துப்பான்னு. இந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பாராவை யேசுநாதர் பார்த்துக்கொள்ள மாட்டாரா?” நீண்ட உரையை பேசி ஜான்சிக்கும், எஸ்தருக்கும் புரிய வைக்க முனைந்தார் பாதிரியார்.
“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்கொள்ள முடியாது பாதர். நாங்க கூட இருந்தா கூட பரவாயில்ல குழந்தைகளை பார்த்துக்கொள்ளலாம். இங்கிலாந்துல இவ தனியா குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியுமா? சாத்தியமா? ஏதாவது அசம்பாவிதம் ஆகிட்டா தத்து பிள்ளைகள் தானே அதனால கவனக்குறைவாக இறந்துட்டாங்க என்று நாளைக்கு ஒரு பேச்சு வந்துடும் இல்ல” ஜான்சி சம்மதிக்கவேயில்லை.
அதையே தான் எஸ்தரும் கூறி, மறுக்கலானாள்.
“அப்போ எனக்கு குழந்தை பொறந்தா அத நான் ஒழுங்கா வளர்க்க மாட்டேன்னு சொல்ல வரியா?” கடுப்பானாள் பரா.
“நாங்க சொல்லுறது உனக்கு புரியல. அந்த நாட்டுல சட்டமும் கடுமையாக இருக்கும். உனக்கு வேற பாஷையும் ஒழுங்கா தெரியல. ஜெராட் இல்லாத நேரத்துல உன்னால தனியா சமாளிக்க கண்டிப்பா முடியாது. உனக்கு குழந்தை உண்டாகி பொறக்குற வரைக்கும் கால அவகாசம் இருக்கு. அப்போ நீ செட்டில் ஆகி இருப்ப” என்றாள் எஸ்தர்.
“என்ன நீங்க ஹெல்தியான குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுறீங்க” எஸ்தரை முறைக்க முடியாமல் ஜெராட்டை முறைத்துப் பார்த்தாள் பரா.
“ஹெல்தியான குழந்தைகளை தத்தெடுக்குறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லமா. உனக்கு ஒண்ணுனாலும். குழந்தைகள் அக்கம் பக்கத்துல ஓடிப் போய் உதவிக்கு யாராவது கூட்டிட்டு வருவாங்க. மனநலம் குன்றிய குழந்தைகள் தான் வேண்டாம் என்று சொல்லுறேன்” பராவுக்கு புரியவைத்தாள் எஸ்தர்.
குறுக்கிட்ட ஜான்சி குழந்தைகளை தத்தெடுக்கவே கூடாது என்று வாக்குவாதம் செய்தாள்.
பாதிரியார் எவ்வளவு பேசியும், ஜெராட் புரியவைக்க முயன்றும், பரா போராடிப் பார்த்தும் மனநலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுக்க எஸ்தரும், ஜான்சியும் மட்டுமன்றி பால்ராஜும் விரும்பவில்லை.
“சரி அப்பரோ ஹெல்தியான இரண்டு குழந்தைகளை தத்தெடுக்குறதுல உங்க மூணு பேருக்கும் இஷ்டமா?” பொறுமையாக கேட்டார் பாதிரியார்.
“பாதர்…” பராவுக்கு அதில் உடன்பாடு இல்லாததினால் அவள் மறுக்க,
“இங்க பாருமா… பெத்தவங்க இஷ்டமில்லாம எதையும் செய்யக் கூடாது. அவங்க ஆசிர்வாதமும் ரொம்ப முக்கியம். நீ பார்த்துக் கொள்ளலைனாலும். ஆசிரமத்துல இருக்குறவங்க பார்த்துக்கொள்வாங்க. இப்போ  நீ உன் வாழ்க்கையை பாரும்மா.. உனக்கான நேரம் வரும் பொழுது ஜீசஸ் உன்ன கூப்பிட்டு இந்தக் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுப்பாரு” என்றார் பாதிரியார்.
பாதிரியார் அவ்வாறு பேசிய பின்பு எஸ்தரும், பால்ராஜும் அதில் உடன்பட்டாலும் ஜான்சி தன்னிலையில் இறங்கி வரவில்லை.
“என்னடா இது? எந்த பிரச்சினையும் இருக்காது என்று திருமணம் பேசினால் இப்படி மாமியாரால் பிரச்சினை வருகிறதே. அதுவும் மாப்பிள்ளையோட மாமியார்” நொந்து விட்டான் ஜெராட்.
“இங்க பாரும்மா… இனி எத்தனை வரன் வந்தாலும் குழந்தைகளை தத்தெடுக்க சம்மதம் சொன்னால்தான் நான் திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்வேன். இல்லனா காலத்துக்கும் வீட்டுலதான் இருப்பேன்.
நான் எந்தக் குழந்தையை தத்தெடுத்தாலும் சரி என்று சொல்லும் ஒரே மாப்பிள்ளை இவர் தான். ஆனால் உங்களுக்காக பாதர் சொன்னதை கேட்டு இறங்கி வந்துட்டேன். நீ பிடிவாதம் பிடித்தால் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்பொறம் என் கிட்ட புலம்பவோ, மிரட்டவோ கூடாது.
அப்படி ஏதாவது பண்ணினா நான் கன்னியாஸ்திரியாகிடுவேன்” என்றாள் பரா.
“என்னடி  என்னய மிரட்டக் கூடாதுனு சொல்லிட்டு நீ மிரட்டுறியா? ஜான்சி மகளை முறைக்க,
“நீ இத எப்படி எடுத்துக்கிட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையுமில்ல. முடிவெடுக்க வேண்டியது நீ தான்” என்ற பரா அவளது அறைக்கு சென்று கதைவடைத்துக் கொண்டாள்.
“அப்போ சம்பந்தி யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்களேன்” என்ற எஸ்தர் ஜெராட்டை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். 
பரா ஜான்சியிடம் கோபப்படவுமில்லை. பேசாமல் இருக்கவுமில்லை. வளமை போல் பேசினாள். வளமை போல் அவளது வேலைகளையும் செய்தாள்.
“என்னங்க இவ எதுவுமே நடக்காதது போல இப்படி இருக்கா?” ஜான்சிக்கு மகளை எண்ணி ஆச்சரியமாக இருந்தாலும், கோபம் குறையவில்லை.
“ஆரம்பத்துல எனக்கும் பிடிக்கலைதான். ஆனா யோசித்து பார்த்தால் அவ சொல்லுரதுலையும் தப்பில்ல. இந்நேரம் அவளுக்கு ஐஞ்சு இல்லனா ஆறு வயசுல ஒரு பையனோ, பொண்ணு இருந்திருக்கணும். கல்யாண வாழ்க ஒழுங்கா அமைஞ்சிருந்தா ஒரு குழந்தை என்ன? இரண்டு அல்லது மூணு கூட இருந்திருக்கலாம். அவ விதி இப்படியாகிருச்சு.
அவ சார்பா ஒரு குழந்தை, மாப்பிள்ளை சார்பா ஒரு குழந்தை என்று ரெண்டு குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுறா. அதுலயும் மனநலம் குன்றிய குழந்தைகளை. அவ மனசு யாருக்கு வரும் சொல்லு.
எதோ நாம சோன்னோம் என்கிறதுக்காக கொஞ்சம் இறங்கி வந்துட்டா. நீயும் பிடிவாதம் பிடிக்காம இறங்கி வா” என்றார் பால்ராஜ்.
கணவன் சொன்ன பிறகு யோசித்து சரியென்றாள் ஜான்சி. அதன்பின் எந்த தடையுமில்லாமல் பரா-ஜெராட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று அவர்களும் குழந்தைகளோடு இங்கிலாந்திலுள்ள பாத் நகரத்துக்கு வந்து சேர்ந்தனர்.
“இதுதான் நம்ம வீடா? இது என்ன வீடா மாளிகையா? கேட்டப் பார்த்தாலே பயமாக இருக்கே. சந்திரமுகி பேய் பங்களா மாதிரியே அளவெடுத்து செஞ்சிருக்காங்க” நுழைவாயினுள்ளே வண்டி நுழையும் பொழுதே புலம்ப ஆரம்பித்தாள் பரா.
“இவள் இப்படிக்கு கூட பேசுவாளா? இவங்க அப்பா இவ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு சொன்னாரு” என்ற பார்வையை அவள் மீது வீசிய ஜெராட்டின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“பங்களாத்தான் ரோமன் ஆட்ச்சி காலத்துல கட்டியிருக்காங்க. புதுசாத்தான் வாங்கினேன். ரெனவேஷன் நடந்துகிட்டு இருக்கு. மேற்கு பக்கம் எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு. கிழக்கு பக்கம் வேல நடந்துகிட்டு இருக்கு” என்றான் ஜெராட்.
“ஆஹா… சந்திரமுகி படத்துல வரது போலயே கிழக்கு பக்கம் போகக் கூடாதுனு சொல்லுறீங்களே” சிரித்தவள் “என்ன ஒரே ஒருத்தன் ஒரு மாசமா பெயின்ட் அடிச்சிக்கிட்டு இருக்கானா?” என்று கேலி வேறு செய்தாள்.
ஜெராட்டும் சிரித்தவன் வண்டியை நிறுத்தி இறங்கியவாறே “ஒரு கம்பனிக்கு காண்ட்ராக்ட் விட்டிருக்கேன். பத்து பதினஞ்சு பேர் வேலை செய்யிறாங்க. நமக்கு எந்த டிஸ்டபன்சும் இருக்காது” என்றவனோ “யாருக்காக இந்த வீட்டை வாங்கினான் என்பதை மட்டும் கூறவில்லை.
“சார் வாழ்ந்தா பங்களா வீட்டுலதான் வாழ்வீங்களோ” இவ்வளவு பெரிய வீடு தங்களுக்கு அதிகம் என்பதை இவ்வாறு கூறியவள் “ஜெசி, லெனின்” என்று தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பலானாள்.
பரா ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என்று தத்தெடுக்க எண்ணி இருந்தாங்க, ஜெசி மற்றும் லெனினை தத்தெடுக்குமாறு பாதிரியார் தான் கூறினார்.
லெனினுக்கு ஆறு வயது ஜெசிக்கு மூன்று வயது. “இது என்னோட தங்கச்சி பாப்பா” என்று லெனின் ஜெசியை யாருக்கும் விட்டுக்கொடுக்காததால் அவர்களை பிரிக்க பாதிரியாருக்கு மனம் வரவில்லை. அதுவும் ஜெசிக்கு பாராவை ரொம்பவே பிடிக்கும். அம்மா அம்மாவென்று பராவின் புடவையை பிடித்துக்கொண்டுதான் திரிவாள். 
குழந்தைகள் யாரை அம்மாவென்று அழைத்தாலும் பாடம் சொல்லிக் கொடுப்பவர்களும் சரி, வேலை பார்ப்பவர்களும் சரி அவ்வாறு சொல்லக் கூடாது என்று கூறுவதில்லை. வளரும் பொழுது அவர்களே புரிந்துகொண்ட அம்மா என்று அழைப்பது நிறுத்தி விடுவார்கள். சில குழந்தைகள் மட்டும் அன்பாக அம்மா என்று அழைப்பார்கள்.
ஜெசி ஜெராட்டிடம் செல்ல அஞ்சி பராவிடமே ஒட்டிக்கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் நாளானால் சரியாகும். உங்கள இவள் பார்த்ததே இல்லையே அதான்” என்றாள் பரா.
ஆனால் லெனினுக்கு இருவரையும் நன்கு தெரியும். “நிஜமாகவே நீங்கதான் எங்க அப்பா அம்மாவா?” ஆச்சரியமாக கண்களை விரித்து கேட்ட விதத்தில் பரா அவனை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட, ஜெராட் தலையை தடவி விட்டு மடியில் அமர்த்திக் கொண்டான்.
“ஆமாம் இவங்கதான் உன் அப்பா அம்மா” என்றார் பாதிரியார்.
“அப்போ நான் அம்மா, அப்பான்னு கூப்பிடலாம்ல டீச்சரம்மா, சார்னு கூப்பிட வேண்டியதில்லல”
ஜெராட் ஆசிரமத்துக்கு புதிது அவனை ஆசிரியராகத்தான் லெனினுக்கு அறிமுகம். அதனால் “சார்” என்றுதான் அழைத்தான். பாராவை இரண்டு வ்ருடங்களுக்கு முன்பாகவே பாதிரியார் அறிமுகப்படுத்தும் பொழுது “டீச்சரம்மா” என்று அறிமுகப்படுத்தியதால் அப்பொழுது நான்கு வயதாக இருந்த லெனின் “டீச்சரம்மா” என்று அழைக்க ஆரம்பித்து இன்றுவரை அவ்வாறுதான் அழைத்துக் கொண்டிருந்தான்.
தங்களோடு இருக்கும் குழந்தைகளை அவர்களுடைய அப்பா, அம்மா வந்து அழைத்து செல்வதாகத்தான் அவனுக்குத் தெரியும். தத்தெடுப்பதெல்லாம் அந்த பிஞ்சுக்கு புரியவில்லை.
தனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இவர்கள் தான் தன்னுடைய அப்பா, அம்மாவா? ” நீங்க என் கூடவே தானே இருந்தீங்க ஏன் இத்தனை நாட்களாக சொல்லவில்லை” என்ற கேள்வி லெனின் மனதில் எழு அதை பராவிடம் கேட்டும் வைத்தான்.
பராவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஜெராட் வருவான் தன்னை திருமண செய்ய கேட்பான். தான் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைப்பேன். அதற்கு அவன் சம்மதிப்பான். பாதிரியார் லெனினையும், ஜெசியையும் தத்தெடுக்கும்படி கூறுவாரென்று கனவா கண்டாள்?
கனவிலாவது கண்டிருந்தால் கூறியிருப்பாள். எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன் கூட்டியே எவ்வாறு சொல்வாள்?
“அதுவாடா? அப்பா வந்து சொல்லுறவரைக்கும் அம்மா வைட் பண்ணாங்க. நான் அம்மா சொல்லட்டும் என்று இருந்துட்டேன். இப்போ நாம எல்லோரும் நம்ம வீட்டுக்கு போகணும் இல்ல அதான் சொன்னோம்” என்றான் ஜெராட்.
“தான் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்க இவர் சட்டென்று சொல்லிட்டாரே. இந்த திருமணம் நிகழ்வதற்காக குழந்தைகளை தத்தெடுக்க சம்மதித்திருப்பாரென்று எண்ணியிருந்தேன். நிச்சயமாக குழந்தைகளை இவர் நன்றாக பார்த்துக்கொள்வார்” என்று மனமகிழ்ந்தவள் ஜெராட்டை பார்த்து புன்னகைக்க, அவனும் பாராவை பார்த்து புன்னகைத்து மட்டுமல்லாது அவளது கையை ஆறுதலாக பிடித்தும் கொண்டான்.
அவன் தொட்டதும் தேகமெங்கும் மின்சாரம் ஓடியது போல் ஒரு உணர்வு. பாதிரியாரோடு பேசியவாறே மெதுவாக தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள் பரா.
திருமணத்தை எளிமையாக நடாத்த வேண்டும் என்றுதான் இருவருமே விரும்பினார்கள்.
ஆனால் எஸ்தர் சொந்தமகனின் திருமணத்தை கண்கூடாக பார்க்க வேண்டும் என்று சிறப்பாகவே செய்து விட்டாள்.
கண்ணீரோடு பெற்றவர்களிடம் பரா கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் விடை பெற, எஸ்தர் மற்றும் அவளின் பெற்றோரும் அவர்களை கண்ணீரோடு வழியனுப்பி வைத்திருந்தனர்.
விமானம் ஏறும் வரையில் பேசியவாறு வந்த குழந்தைகள். நீண்ட நேர பயணத்தால் தூங்கியிருந்தனர்.
“தூங்கட்டும் விடு. நான் லெனினை தூக்குறேன். நீ ஜெசிய தூக்கு” என்றான் ஜெராட்.
“பொருட்களை கூட அப்பொறம் எடுத்துக்கலாம். வீடு எத்தனை நாட்களாக பூட்டி இருக்கு? குழந்தைகளை பெட்ல தூங்க வைக்கலாமா? போர்வையெல்லாம் மாத்த வேணாமா?” அவனை முறைத்தாள் பரா.
“அக்மார்க் பொண்டாட்டியாகாத. வெளிய குளிருது. முதல்ல குழந்தையை தூக்கு” இவள் யோசிப்பதை தான் யோசித்திருக்க மாட்டேனா? ரொம்பதான் பொண்டாட்டியாக அதட்டுகின்றாள் என்று உள்ளுக்குள் சிரிப்பாக இருக்க ஜெராட் அவ்வாறு கூறினான். அதுவும் வீட்டின் ஒருபக்கம் வேலை நடந்துக் கொண்டிருக்க, தூசியும், ஒட்டறையுமாக இருக்கும் என்பதும் அவனுக்குத் தெரியாதா?
ஆனால் அவன் அவ்வாறு சொன்னதும் பரா “சரிதான். தான் பெயருக்குத்தான் அவன் பொண்டாட்டி. எந்த உரிமையையும் எடுத்துக்கொள்ள முடியாதே” மனதுக்குள் புலம்பினாள். “ஆனால் குழந்தைகளின் விஷயத்தில் அவ்வாறு இருந்து விட முடியாதே. பேசித்தான் ஆகா வேண்டும்” ஜெசியை தூக்கியவாறே அவன் பின்னால் வந்தவள் வீட்டை பார்த்து அதிசயித்து நின்றாள்.
“என்னங்க பழைய பங்களாவை புதுப்பிப்பதாக சொன்னீங்க. புதுசா கட்டினது போல இருக்கு”
“பழையகாலத்து பங்களாத்தான். நிறைய பொருட்களும் அந்த காலத்து பொருட்கள் தான். ஒரேயடியா ரெனவேட் பண்ண ஆரம்பிச்சா பொருட்கள் நாசமாகும் என்று ஒவ்வொரு அறையா பண்ண ஆரம்பிச்சோம். அதான் மேற்கு பக்கம் வேலைகள் முடிஞ்சத்தோடு ஹால் வரைக்கும் முடிஞ்சிருச்சு.
இதுல ஒரு நல்ல விஷயம் கிச்சன், மாஸ்டர் பெட்ரூம் இந்த பக்கம் இருக்கு. சோ நாம எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கலாம்” என்றவாறே அறையை அடைந்தான்.
குழந்தைகளின் அறையில் இருவருக்கும் இரு கட்டில் போடப்பட்டு ஒரு பக்க சுவருக்கு இளம்சிவப்பு நிறமும், ஒரு பக்க சுவருக்கு நீல நிறமும் பூசப்பட்டிருந்ததோடு, கட்டில் விரிப்புக்களும் புதிதாக விரிக்கப்பட்டு சுத்தமாக இருந்தது.
“புதுசா பெயிண்ட் பண்ணதாக சொல்லுறீங்க, ஆனா குழந்தைகள் வர்றது தெரியாதே? எப்படி ரெண்டு பேருக்கும் ஏத்தது போல பெயிண்ட் பண்ணியிருக்குறீங்க?”
“வயிட் பெயிண்ட் தான் பூசியிருந்தேன். குழந்தைகளை தத்தெடுக்கும் பொழுதே போன் பண்ணி சொல்லிட்டேன். ப்ரீ டைம்ல போய் வேண்டிய விளையாட்டு பொருட்கள், புக்ஸ், ட்ரெஸ்ஸஸ் அண்ட் மற்ற பொருட்கள் வாங்கிக்கலாம்.      
குழந்தைகளை பற்றி இவ்வளவு சிந்தித்திருக்கின்றான் என்பது பராவுக்கு சந்தோசமாக இருந்தது “தேங்க்ஸ்” என்றாள்.
“ஹலோ மேடம் இவங்க என் குழந்தைகள் நான் இவங்க அப்பா அத மறந்துடாதீங்க” கிண்டல் செய்தான் ஜெராட்.
ஜெசியை அவளது கட்டிலில் பரா கிடத்தி போர்வையை போர்த்த, லெனினை அவனது கட்டிலில் கிடத்தி போர்வையை போர்த்திய ஜெராட் இரவு மின் விளக்கை எரிய விட்டவாறே அறையில் மற்றுமொரு கதவை திறந்தான்.
“இது என்ன ரூம்?” இருட்டாக இருந்ததால் பராவுக்கு புரியாமல் கேட்க,
மின்குமிழை எரிய விட்டவன் பதினைந்து அடியில் தெரிந்த கதவை காட்டி “அது நம்ம ரூம் குழந்தைகளோட ரூமுக்கு நம்ம ரூமுக்கு வந்து போக இருக்குறது இந்தக் கதவு” என்றான்.
இருவரும் பேசி ஒரே அறையில் தங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். என்னதான் கணவன் மனைவியாக வாழ்வதாக சொல்லிக் கொண்டாலும், குழந்தைகளை வளர்க்கும் பொழுது மிகவும் கவனம் தேவை.
“பாரு அம்மா, அப்பாகே இப்படி கேள்வி கேக்குறான். நீ ஒரு ரூம்லயும், நான் ஒரு ரூம்லயும் தூங்கினா வளர வளர அவனுக்குள்ள பல கேள்விகள் வரும்.
சில குழந்தைகள் கேள்வி கேட்பாங்க, சில குழந்தைகள் மனசுக்குள்ளையே போட்டு குமுறுவங்க. நம்ம குழந்தைகளுக்கு நம்மளால எந்த கஷ்டமும் வரக்கூடாது” என்றான் ஜெராட்.
பராவுக்கு அதுவே சரியென்று தோன்ற தலையசைத்து சம்மதித்திருந்தாள்.
“ஆமா இங்க ஒரு கதவு இருக்கு” என்று இரண்டு அறைகளுக்கும் இடையில் ஒரு கதவு இருக்கவே அதை திறந்து பார்க்க அது குளியலறையாக இருந்தது.
சட்டென்று ஜெராட் உள்ளே நுழைந்தவன் “வா வா…” என்று பராவின் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு குளியலறையின் வேறு ஒரு கதவின் பக்கம் வெளியேற தலை சுற்றி நின்றாள் பரா.
“என்ன இது? பங்களானு பேர் வச்சகித்துக்காக கண்ட இடத்துல எல்லாம் கதவு வச்சிருக்குறீங்க”
“இது நம்ம ரூம். நம்ம ரூமுக்கும் குட்டீஸ் ரூமுக்கும் ஒரு கதவு இருக்கு. ரெண்டு ரூமுக்கு கோமன் பாத்ரூம். ரெண்டு கதவு அவ்வளவுதான்” சாதாரணமாக கூறினான் ஜெராட்.
“ரெண்டு ரூமுக்கு எதுக்கு ரெண்டு கதவு? ஒரு கதவு இருந்திருக்கலாம். பதினைந்து அடி அதுவே ரொம்ப தூரம் போல இருக்கு. ரூமுக்கே இப்படின்னா. கிச்சன், ஹால்னு இன்னும் என்னவெல்லாம் இருக்கோ. நல்ல வேல மாடியில்ல”
“அட்டிக் இருக்கே. பேஸ்மெண்ட்டும் இருக்கு. சரி நீ பிரெஷாப் ஆகு. நான் சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்யிறேன். குழந்தைகள் எந்திருச்சா பசிக்கும்”
“ஆமா பேட்டெல்லாம் க்ளீனா இருக்கு எப்படி?”
“அதெல்லாம் ஆபீஸ் ப்ரெண்ட்ஸ் ஹெல்ப் கேட்டேன். கல்யாணம் ஆச்சு என்றதும் பார்ட்டி கேட்டுகிட்டு இருக்கானுங்க. வீடு வாங்கினத்துக்கும் சேர்த்து பார்ட்டி வைக்கணும்” என்றவாறே வெளியேறினான்.
குளித்து விட்டு வெளியே வந்த பராவும் வீட்டை சுற்றி பார்க்கலானாள்.
வாசலும், சமையலறையும் பெரிதாகத்தான் இருந்தது. அந்த பகுதியே அவர்களுக்கு போதும். இப்பொழுது வேலை நடக்கும் அறைகள் என்னவாக இருக்கும்?
வாசலில் அட்டைப்பலகைகளை கொண்டு அந்த பக்கம் செல்ல முடியாதபடி மறைத்திருக்க, “துசினால மறச்சிருப்பாங்க” என்று எண்ணினாள் பரா.
வரும் வழியில் கவனித்தாள். பெரிதாக முற்றம் இல்லாவிட்டாலும், குட்டி ஃபோன்டைன் இருந்தது. தூரத்தே ஒரு ஆப்பிள் மரமும் தெரிந்தது. முற்றம் குழந்தைகளுக்கு விளையாட போதுமானதாக இருக்க நிம்மதியடைந்தாள்.
அலைபேசி வழியாக ஜெராட் உணவு ஆடர் செய்திருப்பான் போலும் உணவும் வந்து சேர, குழந்தைகளும் எழுந்து பராவிடம் வந்திருந்தனர்.
“பரா நான் நாளைக்கே வேலைல ஜோஇன் பண்ணனும். சண்டே பிரீ தானே. உன்ன கூட்டிட்டு போய் ஊர சுத்தி காட்டுற சாக்குல எல்லா இடத்தையும் காட்டித் தாரேன். குழந்தைகளோட ஸ்கூல் விஷத்தையும் பாக்குறேன்” சாப்பிட்டவாறே கூறினான் ஜெராட்.
குழந்தைகளுக்கு ஊட்டியவாறே “ஓகே..” என்றாள் பரா.
அட்டைப்பலகையின் வழியாக ஒரு உருவம் இவர்கள் பார்த்திருந்து.
பார்த்துக்கிட்டு இருந்தது யாரு?
ரோமன் காலத்து பழைய பங்களா
ஒரு வேல பேயா இருக்குமோ?
ஆமா பேய் இருக்கா? இல்லையா? 
யாராச்சும் பார்த்திருக்கீங்களா?

Advertisement