Advertisement

அத்தியாயம் 5
ஜான்சி அஞ்சியது போல் பாராவுக்கு வரும் வரன் எல்லாமே மனைவியை இழந்து ஒன்று அல்லது இரண்டு, மூன்று குழந்தைகளின் தந்தையின் வரன்களே.
“என்ன தரகரே உங்க கிட்ட நாங்க என்ன சொன்னோம்? எம்பொண்ணுக்கு நடந்ததை மறைக்காம சொன்னோம் தானே அப்படியிருந்தும் இந்த மாதிரி வரனையே கொண்டு வாறீங்க” கோபமாக கேட்டாள் ஜான்சி.
“நான் என்னம்மா பண்ணுறது? விவாகரத்தான பொண்ணுன்னு சொன்னாலே பிரச்சினை என்னனு யாருமே கேக்குறது கிடையாது. ஆளாளுக்கு நம்ம பொண்ணு மேலதான் தப்பு சொல்லுறாங்க. இந்த வரன் கூட நான் ரொம்ப விசாரிச்சு நம்ம பொண்ண பத்தி விலாவரியாக சொல்லித்தான் எடுத்துட்டு வந்தேன்” என்றார் தரகர்.
“இல்ல தரகரே இந்த மாதிரி எந்த வரனும் வேண்டாம். ஒரு நல்ல பையனா பாருங்க” என்று ஜான்சி தரகரை வழியனுப்பி வைக்க தரகரோ முணுமுணுத்தவாறு சென்றார்.
“இப்படி வரும் வரனையெல்லாம் தட்டிக் கழிச்சா இந்த பொண்ணுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது. விவாகரத்தான பொண்ண வச்சிக்கிட்டு கல்யாணமாகாத வரன் வேணும்னா நான் எங்க போவேன்” 
திருமணம் பேசும் இவருக்கே பராவின் மீது இவ்வாறான எண்ணம் இருக்க, பால்ராஜ் எதிர்பார்க்கும் வரனை நிச்சயமாக ஒருகாலமும் இவர் கொண்டு வர மாட்டார்.
பால்ராஜ் தரகரை நம்பி காத்திருக்க இரண்டு வருடங்கள் ஓடியிருந்தது.
பாராவோ மன அமைதிக்காக ஆலயத்துக்கு சென்று வர ஆரம்பித்தவள் பாதிரியாரின் உதவியோடு ஆலயத்துக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தாள். 
பெற்றவர்களால் கைவிடப்பட்ட பிஞ்சுக் குழந்தைகள், மூன்று வயதுக்கு மேல் பத்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், மனநலம் குன்றிய குழந்தைகள் என்று குழந்தைகளை தரம் பிரித்து கல்வி கற்றுக் கொடுக்கவும், தத்துக் கொடுக்கவும் படுகிறது.
மனநிம்மதிக்காக குட்டிக் குழந்தைகளுக்கு பாடம் நடாத்த ஆரம்பித்தவள், குட்டிக் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் ஆரம்பிக்க, மனநிம்மதியோடு பாராவுக்கு நேரமும் செல்ல ஆரம்பித்தது.  
அவ்வாறு அவள் ஆலயத்தில் உள்ள காப்பகத்தில் பாடம் நடாத்தும் பொழுதுதான் எஸ்தர் அவளை பார்த்து விட்டு பாதிரியாரிடம் யாரு என்று விசாரித்திருந்தாள்.
பராவின் வாழ்க்கையில் நடந்தவைகளை பாதிரியார் கூற “என் பையனும் பொண்டாட்டிய இழந்துதான் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் படும் வேதனையை என்னால பார்க்கவே முடியல. காயம்பட்ட நெஞ்சுக்குத்தான் இன்னொரு மனம் படும் வேதனை புரியும். என் பையனுக்கு இந்த பொண்ணு பொருத்தமா இருப்பா. என் பையன் கல்யாணம் பண்ணனும் என்று நினைப்பானோ தெரியல” என்றாள்.
“எல்லாம் ஜீசஸ் கைலதான் இருக்கு. முதல்ல உங்க பையன சர்ச்சுக்கு அனுப்புங்க” என்றார் பாதிரியார்.
எஸ்தர் பலதடவை கூறி, கட்டாயப்படுத்தி, வலுக்கட்டாயமாகத் தான் ஒருநாள் ஜெராட்டை ஆலயத்துக்கு அழைத்து வந்தாள்.
பாதிரியாரோடு பேசிய பின் அவன் அடிக்கடி ஆலயத்துக்கு வர காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கணித படமும் நடாத்தலானான்.
வாரம் ஒரு நாள் வர ஆரம்பித்தவன் போகப்போக தினமும் வர ஆரம்பித்தான். வந்த அன்றே பாதிரியார் எஸ்தரின் மனக்கவலையும் அவனது மறுமணத்தை பற்றியும் பேச, எதுவுமே பேசாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒருநாள் பாராவை காட்டி எஸ்தருக்கு அவளை பிடித்திருப்பதாகவும் பாராவின் வாழ்க்கையில் நடந்ததையும் கூறி யோசித்து நல்ல முடிவாக எடுக்கும்படி கூறினார்.
ஜெராட்டால் நடந்தவற்றை மறக்கவும் முடியவில்லை. ஐவியை மன்னிக்கவும் முடியவில்லை. இங்கிலாந்தில் இருந்த பொழுது நடந்தவற்றை மறக்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி குடிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு அவன் நடவடிக்கையில் வெறுப்பு. இப்படியே, இங்கயே இருந்தால் தனக்கு பைத்தியம் பிடித்து விடுமென்று வேலையை விட்டு விட்டு இலங்கைக்கு வர முடிவு செய்தான். இத்தனை வருடங்கள் ஒழுங்காக வேலை பார்த்தவனின் பிரச்சினையும் மனநிலையையும் அறிந்த மேனேஜர் “இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் லீவ் எடுத்துக்க. வேலைய விடாதே” என்று அவனை அனுப்பி வைத்திருந்தார்.    
வந்தவன் எஸ்தரின் மடியில் படுத்து அழுது கரையலானான். “என்ன ஆச்சு” என்று கேளாமல் எஸ்தரும் மகனின் தலையை கோதிவிட்டாள்.
“என்ன வந்ததும் வராததுமா அம்மா மடில செல்லம் கொஞ்சுரியா? எங்க உன் வெள்ளக்கார பொண்டாட்டி” தம்பி ஜேம்ஸ் கோபமாகவும், நக்கலாகவும் கேட்க,
“அவ செத்துட்டா” என்றவன் தேம்பித் தேம்பி அழலானான்.
“செத்துட்டாளா?” அதிர்ந்தவன் அதன்பின் எதுவும் கேளாது உள்ளே சென்றான்.
எஸ்தருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் மகனிடம் எதுவும் கேட்கவில்லை. அவளால் முடிந்த மட்டும் அவனை பார்த்துக் கொண்டாள். ஆலயத்துக்கு சென்று யேசுநாதரிடம் பிராத்தனை செய்தாள்.
இந்த முறை யேசுநாதர் எஸ்தரின் பிராத்தனைக்கு செவி சாய்த்திருப்பார் போலும். “இந்த பெண்ணையா அன்னைக்கு பிடித்தது” என்று பாராவை சில நொடிகள் ஜெராட் வெறித்துப் பார்த்திருந்தான்.
அவனால் நிச்சயமாக இன்னொரு திருமணம் செய்துகொள்ள முடியாது. பொய்யான ஒரு நம்பிக்கையை இன்னொரு பெண்ணுக்கு ஒருகாலமும் கொடுக்கவும் முடியாது என்றுதான் பாராவை பார்த்திருந்தான்.
அதன்பின் ஒரு மாதகாலமாக அவன் இங்கு வரும் பொழுதெல்லாம் அவளை பார்த்திருக்கின்றான். நேருக்கு நேர் சந்திப்பதை முற்றாக தவிர்த்தான்.
அவளுண்டு அவள் வேலையுண்டு என்றுதான் பரா இருப்பாள். குழந்தைகளிடம் அன்பாகவும், பாசமாகவும் சிரித்த முகத்தோடும் பேசுபவளின் முகத்தை பார்த்தவாறே இருக்கும் பொழுது அவன் மனக்காயம் கூட ஆறுவது போல் தோன்ற “இப்படியே பார்த்துக் கொண்டிருந்தேயானால் அவள் மீது உனக்கு ஈர்ப்பு வந்து விடும், ஈர்ப்பு காதலாக மாறிவிடும்” என்று அவன் மனம் கேலி செய்ய தலையை உலுக்கிக் கொண்டு நகர்ந்து விடுவான்.
“என்னடா வாரம் வாரம் சர்ச்சுக்கு போய் கிட்டு இருந்தவன் இப்போ எல்லாம் டைலியும் போற” எஸ்தர் மகனை குறுகுறுவென்று பார்த்தாள்.
அன்னையின் எதிர்பார்ப்பு என்னவென்று ஜெராடுக்கு புரியாமலில்லை. அவன் எதுவும் பேசாமல் கிளம்பி வந்து விட்டான்.
இங்கிலாந்தில் பார்க்கும் வேலையை நிரந்தரமாக விட்டு விட்டு இங்கயே வந்து விடலாமா? அங்கு வாங்கிய வீட்டை விற்று விடலாமா? என்று யோசித்தான். அன்னையின் தொணதொணப்பால் பேசாமல் அங்கேயே சென்று விடலாம் என்று கூட தோன்ற அங்கே சென்றால் ஐவியின் ஞாபகம் அதிகமாகும் வாழ்க்கையே நரகமாகும் என்று எண்ணுகையில் இங்கயே இருப்பது மேல் என்று எண்ணினான்.
இங்கே வேலை தேடிப்பார்த்ததில் அங்கே கிடைக்கும் சம்பளத்தில் பாதி கூட கிடைப்பது போல் தெரியவில்லை. அது கூட பெரும் பிரச்சினையாக தெரிய என்ன செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தான்.
நாட்கள் செல்ல செல்ல “தம்பி ஜேம்ஸுக்கு திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும்” என்று எஸ்தரின் புலம்பல் அதிகரிக்க என்ன செய்வது என்று ஜெராட்டுக்கு புரியவில்லை.
“என்ன பால்ராஜ் இந்த பக்கம்” சிந்தனையில் ஆலயத்துக்குள் வந்தவன் பாதிரியாரின் குரலில் மீண்டான்    
“பரா சாப்பாட்டை மறந்துட்டு வந்துட்டா பாதர். அதான் கொடுத்துட்டு போகலாமென்று வந்தேன்”
“நீங்க கொண்டுவரலைனா அவ இங்க சமைக்கிறத சாப்பிட்டு இருப்பா” என்றார் பாதிரியார்.
பரா என்ற நாமம் காதில் விழுந்ததும் அங்கே என்ன சம்பாஷணை நிகழ்கிறது என்று மறைவாக நின்று கொண்டு ஜெராடோ “அவ எங்க வீட்டு சாப்பாடு சாப்பிடுறா இங்க சமைக்கிறத அவ சாப்பிட்டு விட்டு, வீட்டு சாப்பாட்டை குழந்தைகளுக்கு ஊட்டி விடுறா” மனதுக்குள் நினைத்தவன் புன்னகைக்க வேறு செய்தான்.
“அவளுக்கு நல்ல வரன் ஏதும் அமைய மாட்டேங்குது பாதர்” கவலையாக கூறினார் பால்ராஜ்.
“நானும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம். சரி நீங்க போய் பராவை பாருங்க” என்றார் பாதிரியார்.
“ஓஹ்… வரன் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்களா. ஏன் ஒன்னு கூட அமையல” யோசனையாக ஜெராட் பால்ராஜை பின் தொடர்ந்தான்.
“என்னம்மா இன்னக்கி சாப்பாட்டை கூட மறந்துட்டு வந்துட்ட” பராவை நோக்கி நடந்தவாறே கேட்டார் பால்ராஜ்.
“அம்மா பேக்ல வச்சிருப்பாங்கனு நினைச்சி வந்துட்டேன்ப்பா…” என்று புன்னகைத்தாள் பரா.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இங்க வேலை பார்க்க போற? உனக்கு சரியான வாரனே அமைய மாட்டேங்குது” கவலையாக மகளை பார்த்து கூறினார்.
“எனக்கு இதுவே பிடிச்சிருக்குபா…” அதற்கும் புன்னகைத்தாள்.
“என்னம்மா நீ… காலத்துக்கும் இப்படியே இருந்துட முடியுமா? உங்கம்மா புலம்பிகிட்டே இருக்கா” பராவிடம் எந்த பதிலுமில்லை.
அவர்களின் பேச்சில் ஜெராட்டுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. பராவுக்கு மறுமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை. பெற்றோருக்காக சம்மதம் கூறி இருக்கின்றாள்.
அவள் வாழ்க்கையில் நடந்ததை பார்க்கையில் யாரையும் நம்பும் மனநிலையில் அவள் இல்லையென்று தெரிகிறது. அவரவர் வாழ்க்கையில் நடப்பவைகளை வைத்துதான் அவரவர் மனநிலையும், முடிவுகளையும் எடுக்கின்றனர்.
இதில் பெற்றவர்களின் பாசம் என்ற ஒன்றினால் முடிவுகளை மாற்றிக்கொள்ளவும் நேரிடுகிறது. அதனால் கூட மீண்டும் விருப்பமில்லாத ஒன்றை செய்ய நேரிடுகிறது.
அன்னையும் தன்னை மறுமணம் செய்துகொள்ளும்படி புலம்பியவாறுதான் இருக்கின்றாள். அவளுக்காக திருமணம் செய்துகொள்ளத்தான் முடியுமா? செய்து கொண்டு பொய்யான ஒரு வாழ்க்கையை வாழத்தான் முடியுமா? அது அந்த பெண்ணுக்கு செய்யும் துரோகம் ஆகிடாதா? அதை ஏன் பெற்றவர்கள் புரிந்துகொள்வதில்லை.
அதை புரிந்துகொண்டிருந்தால் இன்று பராவுக்கு இந்தநிலைமை வந்திருக்காது என்று நினைத்தான்.
“நீ ஒன்றும் கவலை படாதேம்மா யேசுநாதர் நம்மள கைவிடமாட்டார். நமக்கு பிடிச்சது போல கண்டிப்பாக ஒரு வரன் வரும்” மகளின் தலையை தடவிக் கொடுத்து விட்டு நகர்ந்தார் பால்ராஜ்.
“யேசுநாதர் அமைதியாக இருந்தாலும் இவர் விடமாட்டாரு போலயே” சிரித்தவனுக்கு மண்டைக்குள் ஒரு யோசனை உதிக்க பராவின் முன் சென்று நின்றான் ஜெராட்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பாதர பார்க்கணுமா? டொனேஷன் கொடுக்கவா? ஒபீஸ் அந்த பக்கம்” என்று வலது புறம் கைகாட்டியவள் தலையை குனிந்து தனது வேலையில் ஈடுபடலானாள்.
“சுத்தம் நாம இவ நம்மல பார்த்துடக் கூடாதுனு விலக்கிப் போனதால இவளுக்கு நாம யாருன்னே தெரியல போலயே” தனக்குள் முணுமுணுத்தவன் “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா?”
தலையை உயர்த்தி அவனை பார்த்தவள் “ஆமா நீங்க யாரு?” புரியாத பார்வையோடு பார்த்தவள், அப்பா மாப்பிளையை இங்கயே அனுப்பிட்டாரா? இப்போ தானே வந்துட்டு போனாரு. சாப்பாடு கொடுக்கும் சாக்குல அதை சொல்ல வந்தாரா? இல்லையே எந்த வரனும் அமையல்னு தானே சொன்னாரு” என்று யோசித்தாள்.  
தன்னை பற்றி சுருக்கமாக கூறியவன், தான் இங்கு என்ன செய்கிறேன் என்பதையும் கூறினான்.
“இங்கேயா? உங்கள பார்த்ததே இல்லையே” சந்தேகமாக அவனை பார்த்தாள் பரா.
தான் அவளிடமிருந்து விலகி ஓடியதை கூறாமல் “அதுசரி… உங்களுக்குத்தான் குழந்தைகளோடு இருந்தா உலகமே தெரியாதே” என்று புன்னகைத்தான்.
பதிலுக்கு புன்னகை சிந்தியவள் “நீங்கதான் இங்கிலாந்துல இருந்து வந்த மாஸ்டரா? சரி சொல்லுங்க என்ன விஷயம் பேசணும்” குழந்தைகளை பற்றித்தான் ஜெராட் பேசப் போகிறான் என்று நினைத்து பார அவன் முகத்தை பார்த்து நின்றாள்.
“நீங்களும் உங்க அப்பாவும் பேசினது எதேச்சையா கேட்டேன். உங்களுக்கு இருக்கும் அதே பிரச்சினைதான் எனக்கும். எங்கம்மா என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாங்க” என்றான்.
“நான் இப்படி கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. இங்கிலாந்துல இருந்து வந்திருக்குறீங்க. உங்களுக்கு பொண்ணுகளை பிடிக்காத? பசங்களைத்தான் பிடிக்குமா? அம்மா கட்டாயப்படுத்துறதால கல்யாணம் பண்ணிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா?” தயங்கித் தயங்கி கேட்டு விட்டாள்.
அவள் முகபாவனைகளை பார்த்து “பக்கென்று” சிரித்து விட்டான் ஜெராட். 
தான் கேட்கக் கூடாததை கேட்டு விட்டோமோ என்று பரா அவனை பாவமாக பார்த்திருக்க, “நான் ஒரு டிவோர்சி. ஆறு வருஷமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணேன். சரி அத விடுங்க”
தன் வாழ்க்கையில் நடந்ததை கூற அவன் தயாராக இல்லாத பொழுது பராவும் அதை பற்றி தோண்டித் துருவாமல் “ஆமா எதுக்கு நானும் அப்பாவும் பேசினது பத்தி பேசணும் என்று சொன்னீங்க? அதப்பத்தி சொல்லவே இல்லையே” அப்பா பேசியதற்கு இவன் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று அவளுக்கு புரியவில்லை.
“உங்க பேச்சுல உங்களுக்கு மறுமணத்துல இஷ்டமில்லன்னு தெரியுது. உங்க வீட்டுல உங்கள கட்டாயப்படுத்துறாங்க. அதனால வேறு வழியில்லாம சம்மதிக்குறீங்க இல்லையா? எனக்கும் அதே பிரச்சினைதான். அது மட்டுமில்ல. அங்க போனா எனக்கு என் வைப் ஞாபகம் வந்து நான் பைத்தியம் ஆனாலும் ஆவேன். வீட்டுக்கு வந்தா தனிமையின் கொடுமை. மனஉளைச்சல்னு குடிக்க ஆரம்பிச்சிட்டேன். பேச்சு துணைக்கு கூட யாருமில்ல.
அதற்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அம்மா ஆசையை நிறைவேற்றினா அந்த பெண்ணுக்கு துரோகம் பண்ணினது போல ஆகிடும். அது மட்டுமா? என் மனசாட்ச்சிக்கே நான்  உண்மையா நடந்துக்க முடியாமல் போய்டும்.
என்னைப் போல மறுமணத்துல விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா கடைசி வரைக்கும் நல்ல தோழர்களா இருந்துடலாம் என்ற எண்ணம் நீங்களும் உங்க அப்பாவும் பேசினது கேட்டப்போ எனக்கு தோணிருச்சு. உங்களுக்கு இஷ்டம்னா நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா?” எதை கேட்க நினைத்தானோ அதை அப்படியே ஒளிவு, மறைவில்லாமல் தெளிவாக கேட்டுவிட்டான்.
பெற்றோருக்காகவும், உற்றார் உறவினருக்காகவும் நீ என்னை மணந்துக்கொள், ஆனால் நீ என் தோழி மட்டுமே என்று இதை விட தெளிவாக யாராலயும் கூறிட முடியாது.
ஜெராட்  இவ்வாறு ஒரு விஷத்தை தன்னிடம் சந்தித்த கணமே பேசுவான் என்று எதிர்பார்க்காத முகபாவனையை கொடுத்தாள் பரா.
சட்டென்று கேட்டதில் என்ன பதில் சொல்ல வேண்டும் என்றும் பராவுக்கு புரியவில்லை. என்ன முடிவு எடுக்க வேண்டும் என்றும் புரியவில்லை. அவனையே பார்த்திருந்தாள்.  
“என்ன ஒரே குழப்பமாக இருக்கா? இவன் யாருன்னே தெரியல. இவன நம்பி எப்படி கல்யாணம் பண்ணி இங்கிலாந்து வரைக்கும் போறது என்று யோசிக்கிறீர்களா?
என்ன பத்தி நீங்க பாதர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம். பாதர் மூலமா இங்கிலாந்துல நான் வேலை பார்க்கும் ஒபீஸ்க்கு கால் பண்ணி விசாரிங்க. உங்களுக்கு என்ன என்ன சந்தேகங்கள் இருக்கோ என் கிட்ட கேட்கலாம். ஒன்னும் பிரச்சினை இல்ல” என்றான்.
இவ்வளவு தெளிவாக பேசுபவன் பொய்யனாக இருக்க மாட்டான். தீர விசாரிக்காமல் பாதர் குழந்தைகளுக்கு பாடம் நடாத்த இவனை அமர்த்தியிருக்கவும் மாட்டார் என்று பராவுக்குத் தெரியும்.
அவன் கூறுவது எல்லாம் சரிதான். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமா? மனித மனம் ஒரு நிலையில் இருக்காது. ரெஹானை திருமணம் செய்திருந்த பொழுது அவன் தன்னை ஒதுக்கி வைத்திருந்ததனால் அவன் மீது தனக்கு எந்தவிதமான ஒரு ஈர்ப்பும் வரவில்லை. இவன் என் கணவன் என்ற எண்ணம் மட்டும்தான் அவன் இரவில் வீடு வர நேரமாகும் பொழுது மனதை பதைபதைக்க வைத்திருந்தது.
இவனை திருமணம் செய்து. இவன் என்னை ஒரு தோழியாக நடாத்தினால்? இவன்பால் என் மனம் சாயாதா? அதை இவன் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்.
இவன் சொல்வது போல் பெற்றோருக்காக திருமணம் செய்து வழுக்காட்டமாக ஒரு வாழ்க்கையையும் வாழ முடியாதே”
“என்னங்க இவ்வளவு யோசிக்கிறீங்க இந்த திருமணத்துல எனக்கு மட்டும் இல்ல உங்களுக்கும் பெனிபிட் இருக்கு.
இங்க பாருங்க ஆல்ரெடி எங்கம்மாவுக்கு உங்கள பிடிச்சுப் போச்சு. சோ என் சைட்ல பொண்ணு தேடுற பிரச்சினையோ எங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாங்களா? மாட்டாங்களா? என்கிற கேள்வியோ கிடையாது.
உங்க அப்பா எதிர்பாக்குற மாப்பிள்ளையா நான் இருக்கேன். சோ உங்க வீட்டுலையும் பிரச்சினை இல்ல.
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க ஆசையையும் நிறைவேத்தினது போல ஆகிடும். நாமளும் நிம்மதியா நம்ம வேலையை பார்த்துகிட்டு இருக்கலாம். ஒரே கல்லுல ரெண்டு மங்க. என்ன சொல்லுறீங்க?”
“இல்லங்க இது சரிப்பட்டு வராது. கல்யாணம் என்று ஒன்று ஆனா பிறகு அடுத்து குழந்தையை பற்றித்தான் பேசுவாங்க. உங்களுக்கு புரியாது. இந்த சமூகம் ஒவ்வொரு விஷயத்துலையும் பெண்களை எப்படியெல்லாம் பேசும் என்று”
“அட என்னங்க நீங்க ஆஸ்ரமத்துல இத்தனை குழந்தைகள் இருக்கே. ஒண்ணுக்கு ரெண்டு குழந்தைகளை தத்தெடுப்போம். அவங்கள நம்ம குழந்தையா வளர்ப்போம். நமக்கு குழந்தை பொறக்காதான்னு கேக்குற நம்ம பெத்தவங்களே இந்தக் குழந்தைகளை பார்த்து சமாதானமாவங்க”
அக்கணமே பராவுக்கு ஜெராட்டை திருமணம் செய்ய இருந்த தயக்கம் நீங்கி இருந்தது.
ஒரு கணம் அவன் சுயநலமாக சிந்திக்கின்றானோ என்று அவளுக்குத் தோன்றியது.
அவன் நினைத்திருந்தால் பெற்ற அன்னையை உதாசீனப்படுத்தி விட்டு இங்கிலாந்து சென்றிருக்கலாம். அல்லது அவள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்து சென்று தனக்கு பிடித்தது போல் வாழ்ந்திருக்கலாம். அங்கு நடப்பது இங்கிருப்பவர்களுக்குத் தெரியாதே.
பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற எண்ணியவன், தனது எண்ணத்தையும் நிறைவேற்றுக்கொள்ள எண்ணியது மட்டுமல்லாது. மூன்றாவது மாங்காயாக குழந்தைகளை தத்தெடுக்கவும் முடிவு செய்திருக்கின்றான்.
“சும்மா பேச்சுக்கு ஒன்னும் சொல்லலையே” புன்னகையினூடாக கேட்டவள் அவனை சந்தேகப்படுவது போல் பார்த்து வைத்தாள். 
இது நடக்காது இது சரிவராது என்று பரா கூறாமல் இவ்வாறு கூறியதில் அவள் சம்மதம் ஜெராடுக்கு தெரிந்தது.
“உங்க பயம் எனக்கு புரியுது. எங்க அம்மாகிட்ட எப்படி பேசி சம்மதம் வாங்கணும் என்று எனக்குத் தெரியும். உங்க வீட்டிலையும் நானே பேசுறேன். நம்ம முடிவுக்கு பாதர் ரொம்ப சந்தோஷப்படுவார். எந்தெந்தக் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்பதை மட்டும் நீங்க முடிவு செய்து வைங்க. நம்ம கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ணும் பொழுது குழந்தைகளையும் தத்தெடுக்குறோம். சரியா”
“உங்க மேல சத்தியமா. அம்மா மேல சத்தியமா. ஜீசஸ் மேல சத்தியமா” என்று கூறாமல் இவ்வாறு கூறியவனை பராவுக்கு இன்னும் பிடித்துத்தான் போனது.
“சரி வீட்டுல பேசி சம்மதம் வாங்குங்க” என்றவள் எழுந்து சென்று விட்டாள்.
ஜெராட்டுக்குள் பெரும் நிம்மதி பரவியது.
வீட்டுக்கு சென்றவன் எஸ்தரிடம் தான் பாராவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூற, எஸ்தருக்கு சந்தோசம் தாளவில்லை.
“ஆனா அவ ஒரு கண்டிஷன் வைக்கிறா. ஆஸ்ரமத்துல இருந்து இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கணுமாம்”
“இதுல என்னடா இருக்கு. இதுல இருந்தே தெரியாதா அவ எவ்வளவு நல்ல பொண்ணுன்னு” உடனே அலைபேசி வழியாக பாதிரியாரை அழைத்து விஷயத்தைக் கூறிய எஸ்தர் பராவின் வீட்டில் பேசும்படி கூறினாள்.
அலைபேசி வழியாக பால்ராஜுக்கு விஷயத்தைக் கூற,பால்ராஜுக்கும், ஜான்சிக்கும் ஜெராடின் வரன் பிடித்திருந்தது.
பாதர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெராட்டையும், எஸ்தரையும் அழைத்து வந்திருந்தார்.
“ரொம்ப நாள் பராவுக்கு வரன் பார்த்துகிட்டு இருந்தீங்க பால்ராஜ். யேசுநாதரின் ஆசிர்வாதத்தோடு நல்ல வரன் அமைஞ்சிருச்சு. மேற்கொண்டு நீங்க பேசிக்கோங்க” என்றார். 
பராவின் கோரிக்கையையும் அதற்கு தான் சம்மதித்ததையும், அன்னையிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் கூறினான் ஜெராட்.
“என்னது குழந்தைகளை தத்தெடுக்க போறியா? யாரைக் கேட்டு இந்த முடிவுக்கு வந்த?” ஜான்சி மகளிடம் காய்ந்தவள் ஒரேயடியாக மறுத்தாள்.
“நான் தத்தெடுக்க போறது மனநலம் குன்றிய குழந்தைகளை. அவர்களை பார்த்துக்கொள்வது வரம்” என்றாள் பரா.
இது பரா ஜெராடுக்கு கொடுத்த இன்னுமொரு அதிர்ச்சி. இவள் வித்தியாசமானவள் தான். புரியாத புதிரும் கூட என்று அவன் பார்த்திருந்தான்.
“இங்க பாருடி… குழந்தைகள் இல்லாத ஒரு மாப்பிளைக்கு உன்ன கட்டிக்கொடுக்கணும் என்று நாங்க ஆசைப்படுறோம். நீ என்னடான்னா கூடவே கூட்டிக்கிட்டு போய் ஆயா வேலை பார்க்கப் போறியா?” கோபத்தில் கொந்தளித்தாள் ஜான்சி.
“இங்க பாரும்மா நீ குழந்தைகளை தத்தெடுக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபணையுமில்ல. ஆனா மனநலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுக்குறதுல எனக்கு உடன்பாடு கிடையாது.
ஒரு குழந்தையையே பார்த்துகிறது கஷ்டம். இதுல நீ ரெண்டு குழந்தையை பார்த்துகிறேன் என்று சொல்லுற. இதுல நீ எப்படி என் பையன கவனிப்ப? வீட்டு வேலைகளை செய்வ? உனக்குன்னு ஒரு குழந்தையை பத்தி யோசிப்ப?” குழந்தைகளை தத்தெடுக்க சம்மதித்த எஸ்தரும் இதற்கு மறுப்பு தெரிவித்தாள்.

Advertisement