Advertisement

அத்தியாயம் 4
வீட்டுக்கு வந்த பரா அழுது கரையவில்லை. அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்திருந்தாள்.
“ஏன் டி இப்படி இருக்க? மனசுல கவலை இருந்தா அழுது தேதிக்க இப்படி இருக்காத. உன்ன பார்க்கவே எனக்கு பயமாக இருக்கு” அவளுக்காக அழுது கரையலானாள் ஜான்சி.
பரா என்ன ரெஹானை காதலித்தா மணந்ததாள் அழுது கரைய? இந்த நான்கு வருடங்களில் இருவரும் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக குடும்பம்தான் நடத்தினார்களா? இல்லையே. தான் ஏமாற்றமடைந்தோமா? அல்லது விடுதலையடைந்தோமா? என்று அவளுக்கோ புரியாத நிலையில் அவள் இருக்கின்றாள். 
மகளின் வாழ்க்கையை எண்ணி நிர்மலாவின் குடும்பத்தார் மீது பால்ராஜுக்கு கோபம் கொந்தளித்தாலும் மகன் செய்த காரியம் தனக்கு தெரியாது என்று அழுது கரையும் நிர்மலாவை பால்ராஜால் திட்டவும் முடியவில்லை.
கோபத்தை காட்ட வேண்டிய ரெஹான் துபாயில் இருக்க, யார் மீது கோபப்பட வேண்டும் என்று கூட புரியாமலும், என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் குழம்பி மகளை பார்த்தவாறு அமர்ந்திருந்தார் பால்ராஜ்.
உண்மை வெளி வந்த உடனே மகனிடம் பேசி வங்கியில் சேர்த்து வைத்த பணத்தையும் எடுத்து, மீதி பணத்தை கடன் வாங்கி, பற்றாக்குறையை எங்கெங்கோ புரட்டி நிர்மலா பால்ராஜ் சீதனமாக கொடுத்த பணத்தை கொண்டு வந்து கொடுத்தாள்.
மகன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தான் என்றதும் பாராவை அனுப்பாமல் இருந்ததும், உண்மையை கூறாமல் இருந்ததும் இந்த பணத்துக்காகத்தானே. பால்ராஜ் பணத்தைக் கேட்டு வீட்டுக்கு வந்து சண்டை போட முன் தானே வந்து பணத்தைக் கொடுத்து சுமூகமாக பிரச்சினையை முடித்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் ரெஹான் செய்ததற்கு தாங்களும் கூட்டு என்று போலீஸ் கேஸ் போட்டு விடக் கூடும் என்று அஞ்சினாள். 
பணம் கொடுக்க ஷான்வி தான் கூட வரமாட்டேன். “கண்டவங்க வாயில எல்லாம் என்னால விழ முடியாது” என்று கழன்று கொண்டவள் கணவனையும் அன்னைக்கு துணையாக அனுப்பவில்லை.
நிர்மலா தனியாக வந்திருந்தவள் தன்மையாகத்தான் பேசினாள். அவளுக்கும் வேறு வழியில்லையே.
“பணத்தைக் கொடுத்துட்டா எல்லாம் சரியாகிடுமா? என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகிறது?” பால்ராஜால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“நாம ஒன்னு நினச்சா விதி ஒன்னு நினைக்குதே சம்பந்தி. உங்க பொண்ண எப்படி என் வீட்டுக்கு அனுப்பினீங்களோ அப்படியேதான் திருப்பி கொடுத்திருக்கிறேன். உங்க பொண்ணுக்கு இன்னொரு கல்யாணத்த பண்ணி அவ சந்தோசமா வாழ்வா” மூக்கை சிந்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள். 
“அந்தம்மா என்ன சொல்லிட்டு போறாங்க?” ரெஹான் பராவோடு வாழவே இல்லையென்பது தாமதமாகத்தான் பால்ராஜுக்கு புரிந்தது. 
நிர்மலா தன்னிடம் கூறியது அனைத்துமே பொய். நிர்மலாவுக்கு ஏற்கனவே ரெஹான் திருமணம் செய்தது தெரியும் என்று பராவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் அதை பற்றி தந்தையிடம் வாய் திறக்கவில்லை.
ஏற்கனவே உடம்பு முடியாமல் போனவரிடம் இதை கூறப்போய் மேலும் வருத்திக்கொள்ளக் கூடும். மாறாக “நம்ம வீட்டுல திடிரென்று திருமணம் ஏற்பாடு செய்தது போல ரெஹானுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். என்னையும் ஏமாத்தி, அந்த பொண்ணையும் ஏமாத்தி இரட்டை வாழ்க்கை வாழாம அவரு காதலிச்ச பொண்ணுக்கு உண்மையா இருக்காரே” என்றாள் பரா.
“என்னம்மா பேசுற? அதற்காக இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிறதா? அதுவும் உன்ன இங்க கல்யாணம் பண்ணி இருக்கும் பொழுது அவர் அங்க எப்படி கல்யாணம் பண்ணலாம்? அந்த கல்யாணமே செல்லாது. இத நான் சும்மா விட மாட்டேன்” கோபத்தில் சீறினார் பால்ராஜ். தன் மகளுக்கு தான் ஏற்படுத்திக் கொடுத்த வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்ற கோபம் அவருக்கு இருக்கத்தான் செய்தது.
“ஏன்ப்பா… ஒருவேளை அவர் அங்க கல்யாணம் பண்ணிட்டு, இங்க வந்து அவங்க அம்மா கட்டாயப்படுத்தினதால வேறு வழியில்லாமல் என்னையும் கல்யாணம் பண்ணி இருந்தால் என்ன செய்வீங்க? அப்போ அந்த பொண்ணு தானே முதல் தாரம்”
மனம் ஒன்று சேர்ந்தால் தானே இருவர் ஒன்றாக வாழ முடியும். அதை மட்டுமே தந்தைக்கு புரிய வைக்க முனைந்தவள் நிர்மலாவின் பணத் தேவைக்கத்தானே இந்தக் கல்யாணம் என்ற சந்தேகம் பராவுக்குள் எழுந்ததை அவள் பால்ராஜிடம் கூறிடவில்லை.
“நடந்த எதையும் நம்மால மாற்ற முடியாது. அவங்கம்மாவுக்கு பயந்து அவர் துபாய்ல அவருக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் பண்ணத சொல்லாமல் இருந்திருக்கலாம்.
நமக்கு உண்மை தெரிய வந்ததினால என் வாழ்க நாசமாச்சு என்னு பேசுறத நிறுத்துங்க. உண்மையிலயே ஏன் வாழ்க நல்லா தான் இருக்கு. அதான் அந்த அம்மா பணத்தையும் கொண்டு வந்து கொடுத்தாங்களே. எந்த பிரச்சினையும் பண்ணாதீங்க. உங்க பொண்ணு உங்களுக்கே கிடைச்சிட்டானு சந்தோசப்படுங்க”
“எப்படிம்மா சந்தோஷப்பட முடியும்? பொண்ண கட்டிக் கொடுத்தது மாப்பிள்ளைக் கூட சந்தோசமா வாழ. இப்படி நீ வீட்டுக்கு திரும்பி வரத்துக்கா”
“புரிஞ்சிக்கோங்கப்பா… சந்தோசமாக வாழ ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கணும். பிடிக்காம வாழ முடியாது. எனக்கு ஒரு சூழ்நிலை. கட்டாயம் இந்த கல்யாணம் பண்ண வேண்டியது போல அவருக்கும் இருந்திருக்கும். பிரச்சினை பண்ணாதீங்க. புரிஞ்சிக்கோங்கப்பா…” இதுநாள்வரை தந்தையிடம் நேருக்கு நேராக பேசாதவள் இவ்வளவு பேசுவது பால்ராஜின் கவனத்தில் இல்லை. பராவுக்கும் அது புரியவில்லை.
வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தினால் பரா தந்தையிடம் மனதளவில் நெருங்கிப் பேசியிருக்க, பால்ராஜும் இன்முகமாக பேசாவிட்டாலும் சூழ்நிலையால் மகளிடம் கடுமையாக நடந்துகொள்ளமால் பேசிக்கொண்டிருந்தார். 
“சரிம்மா… நான் எந்த பிரச்சினையும் பண்ணல. மாப்புள. இன்னும் என்ன மாப்புள மண்ணாங்கட்டினு சொல்லிக்கிட்டு. அந்த பையன் முறையா டைவர்ஸ் கொடுக்கணும். சீதனத்துக்கு கொடுத்த அத்தனை பொருளையும் அவங்க திருப்பிக் கொடுக்கணும்” கவலையில் இருந்தவர் இப்பொழுதுதான் தெளிவாக சிந்திக்கவே ஆரம்பித்தார்.
“கொடுப்பாங்கப்பா… அவங்க எந்த பிரச்சினையும் பண்ண மாட்டாங்க” என்றாள் பரா.
அவள் அப்படித்தான் நினைத்தாள். ஆனால் அவளை ஷான்வி பேச வைத்திருந்தாள். 
பால்ராஜ் நிர்மலாவுக்கு அலைபேசி அழைப்பு விடுக்கவுமில்லை. அறிவுறுத்தவுமில்லை. சொல்லாமல் கொள்ளாமல் பராவையும், வக்கீலையும் அழைத்துக் கொண்டு நிர்மலாவின் வீட்டுக்கு சென்றிறங்கினார்.
“நான் எதுக்குப்பா…”
வரமாட்டேன் என்று அடம்பிடித்த மகளை “உன் பொருள் ஒன்றுமே அங்க இருக்கக் கூடாது. நீ வந்தால் தானே எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து பேக் பண்ண முடியும்” என்று அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருந்தார்.
இவர்கள் வண்டியோடும் வக்கீலோடும் வந்திறங்கியதை பார்த்து “போச்சு போச்சு கொடுத்த சாமானெல்லாம் கொண்டு போக வந்துட்டாங்க” என்று பதறினாள் ஷான்வி.
“எதுக்கு இப்போ கத்துற? அவங்க பொருளை அவங்க எடுக்க வந்திருக்காங்க” என்றான் அவள் கணவன் வின்சன்ட்.
“ஆஹ் அது எப்படி எல்லாத்தையும் கொண்டு போக முடியும்? நாமளும்தான் கல்யாண செலவு பண்ணோம். அந்தம்மா நம்ம வீட்டுல இத்தனை வருஷமா மூக்கு முட்ட நல்லா கொட்டிக்கிட்டு இல்ல இருந்தாங்க” என்று ஷான்வி கூறிக்கொண்டிருப்பதை கேட்டவாறே உள்ளே நுழைந்தனர் மூவரும்.
மகளின் வாழ்க்கையே போச்சு என்று பொறுமையாக பொருட்களை எடுத்து செல்ல வந்து நின்றால் இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று பால்ராஜுக்கு கோபம் அடங்கவேயில்லை.
தந்தை பேசும் முன் பரா பேசினாள். அதுவும் அவள் ஷான்வியை பார்த்து ஒன்றும் பேசவில்லை. வக்கீலை பார்த்து “இந்த வீட்டுல இருந்தவரைக்கும் சம்பளமில்லாத வேலைக்காரியா தான் இருந்தேன். இந்தம்மா அவங்க புருஷனையே சந்தேகப்பட்டு, சம்பந்தப்படுத்தி அடிக்கடி பேசி என்ன மனஉளைச்சலுக்கு ஆளாக்கி இருக்காங்க. இந்த வீட்டுல நான் தூங்கினாலும் என் அப்பா வாங்கிக் கொடுத்த கட்டில்லதான் தூங்கினேன்.
இந்தம்மா சொல்லுறது போல மூக்கு முட்ட எல்லாம் சாப்பிடல அளவாத்தான் சாப்பிட்டேன். அளவுக்கு மீறி சாப்பிட்டிருந்தா ஒன்னு நான் குண்டாகி இருக்கணும் இல்ல டயபடீஸ் வந்திருக்கணும். கல்யாணமாகி வரும் பொழுது இருந்ததை விட ஆறு கிலோ எடை குறைஞ்சிருச்சு. அதை வச்சி என்ன தெரியுது? இந்த வீட்டுல எனக்கு எவ்வளவு வேலை இருந்திருக்கு என்று தெரியுது? கல்யாண போட்டோல என்னையும், இந்தம்மாவையும் கம்பேர் பண்ணி பார்த்தா உண்மை புரியும்” என்றாள்.
ஷான்வி இரண்டாவது குழந்தையை சுமந்திருந்தாள். அதனால் கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாள். ஆறு மாத அவளது வயிற்றை பார்த்தும் பரா அவள் வீட்டு வேலைகள் எதுவும் செய்வதில்லை. தான் தான் எல்லாவற்றையும் செய்வதாக கூறி அவளை கதிகலங்க வைத்தாள். அதுதான் உண்மையும் கூட.
வின்சனின் முகத்தில் சட்டென்று கேலியான புன்னகை மலர முகத்தை முழு கையையும் கொண்டு தடவிக் கொடுத்து ஷான்விக்குத் தெரியாமல் மறைத்தான்.
அமைதியே உருவான அவனுக்குத் தெரிந்த பரா இப்படி கூட பேசுவாளா என்பது ஆச்சரியமாக இருந்தாலும், உறவில் அவள் தங்கை அவள் மனநிலை என்ன? பிரச்சி என்ன? என்று கூட கேட்ட முடியாதபடி ஷான்வி இருவரையும் சம்பந்தப்படுத்தி பேசுவது கடுப்பாக இருந்தாலும் பராவின் நலன் கருதியே ஒதுங்கி இருந்தான்.
“இது இவளுக்குத் தேவைதான்” என்றுதான் அவனுக்கு சிரிப்பாக இருந்தது.
பால்ராஜ் கூட தன் மகள் இப்படிக்கு கூட பேசுவாளா? தான் இவளை இவ்வாறு வளர்க்கவில்லையே என்று எண்ணியவர் அடுத்த கணமே “இப்படிப்பட்டவர்களிடம் இவ்வாறுதான் பேச வேண்டும்” என்று அமைதியானார்.        
“நீங்க சொன்னீங்கன்னா பிஸிக்கல் அபியூஷ் வழக்கு கூட போடலாம் மேடம்” என்றார் வக்கீல்.
ஞாயிற்றுக்கிழமை என்பதினால் நிர்மலா ஆலயத்துக்கு சென்றிருந்தாள். நிர்மலா இருந்திருந்தால் மகளை அடித்து வாயை மூட வைத்திருப்பாள். பாராவை சுமூகமாக வீட்டுக்கு அனுப்பியாயிற்று. பணத்தையும் கொடுத்தாயிற்று. மகனுக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதுதான் யேசுநாதரிடம் அவள் தினம் வைக்கும் பிராத்தனையாக இருந்தது. மகள் இவ்வாறெல்லாம் பேசி பிரச்சினையை இழுத்துக் கொண்டாளேயானால் ரெஹான் பணமும் அனுப்ப மாட்டான். இலங்கை பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டானே என்ற கவலை நிர்மலாவுக்கு கண்டிப்பாக இருக்கும்.
ஷான்வி பேசியவைகளால் இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த பராவே வாய் திறந்தாளென்றால் பால்ராஜ் சும்மா இருப்பாரா.
“என் பொண்ணு சொன்னாளென்றுதான் அமைதியா பொருட்களை எடுத்துட்டு போகலாமென்று வந்தேன். உங்களையெல்லாம் கோட்டு கேஸுன்னு இழுத்தாதான் அமைதியாவீங்க போல” என்றார்.
நிர்மலா பணத்தைக் கொடுத்து விட்டு வந்ததிலிருந்தே சீதனத்துக்கு கொடுத்த பொருட்களை எடுத்துச் செல்ல எக்கணமும் பால்ராஜ் வருவார் என்றும் வருபவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் வாய் விடக் கூடாதென்றும் மகளிடம் அறிவுறுத்தியவாறு புலம்பிக் கொண்டேதானிருந்தாள்.
ஏதோ ஒரு வேகத்தில் பேசிய ஷான்வி போலீஸ், கேஸ் என்றதும் கலங்கித்தான் போனாள். ஆனாலும் அச்சத்தைக் காட்டிக்கொள்ள முடியுமா?
“நாங்க என்ன உங்க பொண்ண கொடுமை படுத்தினோமா? நீங்க கேஸ் போடுறதாக இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்ட எங்கண்ணன் மேலதான் போடணும்” என்றாள்.
“அடிப்பாவி… ஒரு நொடியில் கூடப்பிறந்தவனையே தூக்கியெறிந்து விட்டாளேயென்று பராவும் வின்சனும் அதிர்ச்சிக்குள்ளாக “உங்க பொண்ணு ஒழுங்கா குடும்பம் நடாத்தியிருந்தா எங்கண்ணா எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணப் போறான்” நக்கலாக பாராவை பார்த்து தவறெல்லாம் பராவின் மீதுதானென்று அசராமல் கூறினாள் ஷான்வி.
“என்ன நான் கூறியது சரியா?” என்பதை போல் பரா தந்தையை பார்த்தாள்.
என்னதான் பரா எந்த பிரச்சினையும் செய்யக் கூடாது விவாகரத்து மட்டும்தான் வாங்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் பால்ராஜின் மனம் ஆறவில்லை. மகள் அறியாமல் வக்கீலிடம் ரெஹான் மீது சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க எண்ணினார்.
அன்னையின் மூலம் விஷயமறிந்த பரா தந்தையிடம் “ப்பா… போலீஸ் கோட்டு என்று போனா ஆயிரத்து எட்டு கேள்வி கேப்பாங்க. அதுவும் ரெஹான் மேல எந்த குற்றமும் இல்லனு சொல்ல தப்பே பண்ணாத என் மேல வீணா பழி போடுவாங்க. எத்தனை சினிமால பார்த்திருக்கேன்” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.
வீட்டில் தொலைக்காட்ச்சி இருந்தாலும், செய்தியை தவிர எதையுமே பார்க்க அனுமதியில்லாத பொழுது காலேஜ் செல்லும் பொழுதுதான் மாலுக்கு சென்று சினிமா பார்த்தாள். அதுவும் தந்தைக்கு தெரியாமல்.
இப்பொழுது அவர் கேட்டால் அதை கூறத்தான் முடியுமா? கூறினால் தன்னுடைய வளர்ப்பில் தவறு இருப்பதாக தந்தை மனம் வருந்த மாட்டாரா? என்று மனம் பதறினாள் பரா.
பரா கூறியதில் முக்கியமான விஷயம் மட்டும்தான் பால்ராஜின் கவனத்தை ஈர்த்து காதில் விழுந்திருக்கும் “நீ சொல்லுறதும் சரிதான்மா” என்று அமைதியாக இருந்தார்.
ஆனால் வாழ வேண்டிய மகளின் வாழ்க்கையை எண்ணி மனம் எரிமலையாய் அடங்கி இருக்கும் நேரம் ஷான்வி இப்படியெல்லாம் பேசினால் கோபம் வருமா? வராதா?  கோபத்தில்தான் கோட்டுக்கு போவேன். போலீசுக்கு போவேன் என்று மிரட்டினார்.
அதற்கே ஷான்வி பராவின் மீதுதான் தவறு என்று பேசுகிறாளென்றால் கோட்டில் என்னவெல்லாம் பேசுவாளென்றுதான் பராவும், பால்ராஜூம் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர். 
“உங்க அண்ணன் கூட நான் ஒழுங்கா குடும்பம் நடாத்தலனு நீ எத வச்சி சொல்லுற?”
பரா எதற்காக கேட்கின்றாளென்று ஷான்விக்கு புரியவில்லை. புரியாமல் அவள் உளற ஆரம்பித்தாள்.
“எங்க அண்ணனும் நீங்களும் ஒண்ணா கட்டில்ல கூட தூங்கினது கிடையாது. நீங்க கீழையும், அண்ணா கட்டில்லையும் தூங்கின கதையெல்லாம் எங்களுக்குத் தெரியும். தூங்குறது என்ன? அவன் உங்க கூட பேசவே மாட்டானே”
“இரு இரு உங்க அண்ணன் தானே என்ன ஒதுக்கி வச்சிருக்குறான் இதுல நான் எங்க உன் அண்ணன் கூட ஒழுங்கா குடும்பம் நடாத்தலனு சொல்லுற?” பாயிண்டை பிடித்தாள் பரா.  
ஒரு கணம் முழித்த ஷான்வி “ஓடி போன உங்க அக்காவை போல உங்களுக்கும் ஏதாவது அபயார் இருக்கும் என்று அவன் நினைச்சான்” என்றாள்.
“வக்கீல் சார் இந்தம்மா சொன்னதெல்லாம் ரெகார்ட் பண்ணிக்கிட்டீங்கல்ல. எங்கப்பா சீதனமா கொடுத்த பெட்ல நான் தூங்கல. அவர் மட்டும்தான் தூங்கியிருக்காரு. எங்க பெர்சனல் விஷயம் இங்க இருக்குற எல்லாருக்குக்கும் தெரிஞ்சிருக்கு. எங்க அக்கா காதல் கல்யாணம் பண்ணிகிட்டத சாக்க வச்சி அவர் காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டு என் மீது பழி போட முனைகிறார். இதுதான் இவங்க என் மேல வைக்க போற குற்றசாட்டு”
“டோன்ட் ஒர்ரி மேம். பிஸிக்கல் அண்ட் மேண்டலி உங்கள அபியூஷ் பண்ணதுக்காக குடும்பத்தையே தூக்கி உள்ள வச்சிடலாம்” என்றார் வக்கீல்.
“தான் என்ன சொன்னால் இவர்கள் என்ன சொல்கிறார்கள்” என்று குழம்பிய  ஷான்வி அமைதியாக நின்றிருக்கும் கணவனை முறைத்தாள்.
“என்ன பார்த்துகிட்டு நிக்குறீங்க? பேசுங்க”
“நான் என்ன பேச? நீதான் எல்லா உண்மையையும் சொல்லிட்டியே” வின்சன்ட் நக்கலாக கூறினான்.
“அடடே வாங்க வாங்க நீங்க இன்னைக்கி வரதா சொல்லவே இல்லையே. ஷான்வி என்ன நீ வந்தவங்கள நிக்க வச்சி பேசிகிட்டு இருக்க. முதல்ல போய் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா” ஆலயத்திலிருந்து வந்த நிர்மலா  பால்ராஜையும் பராவையும் இன்முகமாகவே வரவேற்றாள்.
“இல்லங்க ஒன்றும் வேண்டாம். நாங்க சீதனத்துக்காக கொடுத்த பொருட்களை எடுத்துட்டு போக வந்தோம்” என்றார் பால்ராஜ்.
“சரிங்க” என்ற நிர்மலா தான் கழுத்தில் அணிந்திருந்த தங்க மாலையை கழற்றி பராவின் கையில் கொடுத்தவள் “இது கல்யாணமன்று உங்க வீட்டுல எனக்கு போட்ட மாலை. அன்னக்கி வந்தப்போ கொடுக்க மறந்துட்டேன். வயசாகிருச்சில்ல” சிரமப்பட்டு புன்னகைத்தவள் “மன்னிச்சிக்கோங்க சம்பந்தி” என்று பால்ராஜை பார்த்துக் கூறவும் மறக்கவில்லை. “ஏன் நின்னுக்கிட்டே இருக்கிறீங்க உக்காருங்க”
எப்பொழுது வீட்டுக்கு வந்தாலும் நிர்மலா அவ்வாறுதான் பேசுவாள் என்பதினால் பால்ராஜால் அவளை சந்தேகத்தோடு பார்க்கவும் முடியவில்லை. சற்று முன் வீட்டில் நடந்தவைகள் அவளுக்குத் தெரியாதே.
“இல்லங்க நேரமாச்சு. நாம கிளம்பனும். பாரம்மா… நீ போய் உன் பொருட்களையெல்லாம் பார்த்து எடுத்து வை” என்றார் பால்ராஜ்.
“போம்மா… போய்… எல்லாம் எடுத்து வை. கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணமாகி நீ சந்தோஷமாக வாழனும். எங்கயாவது என்ன பார்த்தா கண்டும் காணாதது போல போயிடாத” கண்கள் கலங்க கூறிய நிர்மலா அறைக்குள் சென்று கதைவடைத்துக் கொண்டாள்.
நிர்மலா கண்டிப்பானவள் தான் கொடுமைக்கார மாமியார் கிடையாது. அதுவும் பரா அவள் தேந்தெடுத்த மருமகளாச்சே. கொஞ்சமாச்சும் கவலை இருக்காதா?
தன் மகன் தன் குடும்பம் என்று வருகையில் ஒரு அன்னையாக நிர்மலா சுயநலமாக சிந்தித்து செயல்பட்டாள். அது மனித இயல்புதானே. பராவுக்கு அது புரிந்ததினால்தான் தந்தையிடம் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்ததோடு தந்தையிடமும் எந்த ஒரு பிரச்சினையும் பண்ணக் கூடாது என்று கேட்டுக் கொண்டாள்.
நிர்மலா வந்து நல்லமுறையில் பேச ஆரம்பிக்கவும் ஷான்வி மெதுவாக நகர்ந்து அவளது அறைக்குள் சென்று விட்டாள்.
அங்கே பிரச்சினை செய்ய யாருமிருக்கவில்லை. வின்சனின் மேற்பார்வையில் உதவிக்கு வந்தவர்களோடு அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள் கிளம்பிச் சென்றனர்.
பரா வீடு வந்ததும் பால்ராஜ் அடுத்த கணமே அவளுக்கு மறுமணம் செய்து வைப்பதை பற்றித்தான் பேசலானார்.
“என்னப்பா பேசுறீங்க இப்போதான் ஒரு பிரச்சினைல இருந்து வெளி வந்திருக்கிறேன். திரும்ப போய் இன்னொரு பிரச்சினைல சிக்கிக்க சொல்லுறீங்களா?”
“என்னடி புரியாம பேசுற? உனக்கு இப்போவே இருபத்தி மூணு வயசாகுது. இங்க கல்யாணமாகாத பொண்ணுங்களுக்கே மாப்பிள்ளை தேடுறது குதிரை கொம்பாக இருக்கு. கல்யாணமாகி, டிவோர்ஸான பொண்ணுனா இன்னும் கஷ்டம். நல்லவேளை குழந்தை இல்ல. இருந்திருந்தா இன்னும் கஷ்டம். வயசு ஏற, ஏற மாப்பிள்ளையும் கிடைக்க மாட்டான். சொட்டைத்தலை மாப்பிளையோட நாலஞ்சு குழந்தைக்கு ஆயா வேலைதான் பார்க்க வேண்டி இருக்கும்” கோபமாக கூறினாள் ஜான்சி.
பராவுக்கு ஜான்சியை பார்க்கையில் ஆயாசமாக இருந்தது. ஒரு பெண்ணுக்கு திருமணம் தான் எல்லாமா? இந்த உலகத்தில் திருமணமே செய்து கொள்ளாமல் பெண்கள் இருந்ததே இல்லையா? ஏன் விதவைகளுக்கு, விவாகரத்து ஆனவர்களும் மறுமணம் செய்யாமல் இருப்பதுண்டு தானே.
நான் என்ன மறுமணம் செய்ய மாட்டேன் என்றா சொல்கின்றேன்? இப்பொழுதுதான் ஒரு இன்னலிலிருந்து வெளியே வந்தேன். உடனே என் மனதை தயார் செய்வது எப்படி? கொஞ்சம் கால அவகாசமாவது வேண்டாமா?
“என்னடி யோசிக்கிற? உங்கப்பா வேற உடம்பு முடியாம இருக்காரு. உன்ன பத்தி கவலை பட்டே அந்த மனுஷன் உசுர விட்டுடுவாரு. அவரு போய் சேர்ந்தா நான் மட்டும் உசுரோடு இருந்து என்ன பயன்? நானும் அவர் கூடவே போய் சேர்ந்துடுவேன். உன்ன ஒரு நல்லவன் கைல பிடிச்சிக்க கொடுத்துட்டா நாங்க நிம்மதியா போய் சேர்ந்துடலாம்” புடவை முந்தியால் மூக்கையும், கண்களையும் துடைத்தவாறே பேசினாள் ஜான்சி.
பார்த்திருந்த பராவுக்கு கடுப்பாக இருந்தது. எத்தனை சினிமாவில் இந்த எமோஷனல் ப்ளாகிமையில் ஸீனை பார்த்து சிரித்திருப்பாள்.
“இப்படியெல்லாம் கூடவா சினிமாவில் ஸீன் வைக்கின்றார்கள். அந்த லூசு ஹீரோயின் வேற எந்தக் கேள்வியும் கேட்காமல் இப்படி ஏமார்ந்து போய் பெத்தவங்க சொல்லுறத கேக்குது. இது எல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்பட்டு வரும்” என்று அக்காவிடம் புலம்பியிருக்கின்றாள்.
ஜான்சி அவளை மறைமுகமாக மிரட்டி சம்மதிக்க வைக்க முயன்றாலும் பெற்றவர்களின் மனக்கவலையும், எதிர்பார்ப்பும், ஆசையும் பராவுக்கு புரியாமலில்லை.
அதைவிட அவள் எதிர்காலத்தை நினைத்து அவர்களுக்கு இருக்கும் அச்சமும், அவள் மீது இருக்கும் பாசமும் அவள் கண்களுக்குத் தெரிய “உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யுங்க” என்றாள்.

Advertisement