Advertisement

அத்தியாயம் 3
“இன்னைல இருந்து கீழ தூங்க வேண்டியதில்லல. உங்க அப்பா வாங்கிக் கொடுத்த கப்பல் போல உள்ள கட்டில்ல நீங்களே தனியா சொகுசா சொகமா தூங்கலாம்” பாராவை பார்த்து நக்கலாக கூறினாள் ஷான்வி.
சட்டென்று அவள் தன்னோடு பேசியதில், ஷான்வி என்ன பேசுகிறாள்? எதை பற்றி பேசுகிறாள்? தன்னோடுதானா பேசுகிறாள் என்று குழம்பி நின்றாள் பரா.
நிர்மலா ஷான்வியை அதட்டவும் “நீயே உன் மருமக கிட்டு உன் பையன் இந்த கல்யாணம் பிடிக்காம வெளிநாட்டுக்கு சொல்லாம கொள்ளாம பறந்துட்டான் என்று சொல்லு” என்று விட்டு அகன்றாள்.
ஷான்வி அவ்வாறு கூறிய பின்தான் அவள் முன்பு கூறியதன் அர்த்தமே பராவுக்கு புரிந்தது. ரெஹானுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பது மட்டுமல்லாது தங்களது அறையில் என்ன நடக்கிறது என்பதுவரையில் இவர்கள் அறிந்துதான் வைத்திருக்கின்றனர்.
தனது அக்கா ஓடிப்போனதால் தான் ரெஹானுக்கு தன்னை பிடிக்காமல் போனதாக தான் நினைத்துக் கொண்டிருக்க, அதையும் தாண்டி ஒரு காரணம் இருப்பது போல் தெரிகிறது” பரா சிந்திக்க ஆரம்பிக்க,
“நீ என்ன இங்க பராக்கு பார்த்துக் கொண்டு இருக்க? போ.. போய் சமையலறையை சுத்தம் செய்துதுட்டு தூங்கு. ரெஹான் வேலை விஷயமாகத்தான் வெளிநாடு போய் இருக்கான் வந்துடுவான்” என்றாள் நிர்மலா.
அதன்பின் பரா அங்கே இருப்பாளா? மாமியாரின் கட்டளையை நிறைவேற்ற கிளம்பினாள்.
அவள் கணித்தது சரிதான். ரெஹான் ஏற்கனவே துபாயில் தன்னோடு வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தான். அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் அன்னையிடம் பேசி அனுமதி வாங்க வேண்டும் என்று ஆசையோடும், கனவுகளோடும் அவன் துபாயிலிருந்து இலங்கைக்கு வந்து சேர, அவன் அன்னையோ அவனை மிரட்டி, பணிய வைத்து பராவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தாள்.
அவனால் அவன் காதலையும் மறக்க முடியவில்லை. காதலியையும் மறக்க முடியவில்லை. அதனால் அவன் பாராவை ஏற்றுக்கொள்ளாமல் நிர்மலாவோடு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தான்.
“பாஸ்போர்ட் இருந்தால் தானே நீ துபாய் போவாய்? இங்கேயே ஏதாவது வேலை செய்து, மருமகளோடு குடித்தனம் செய்யும் வழியை பார்” என்று நிர்மலா ரெஹானின் பாஸ்போட்டை எரித்து விட்டாள். 
மறுவீட்டுக்கு பால்ராஜ் பலமுறை அழைத்தும் ரெஹான் போகாததற்கு காரணமும் இதுதான்.
இதை எதையுமே அறியாத பரா அக்கா ஓடிப்போனதால் தான் கணவன் முகம் திரும்புகிறான், நாளாடைவில் எல்லாம் சரியாகி விடும் என்று இருந்து விட, அவனோ மீண்டும் கடவுச்சீட்டு காணாமல் போனதாக விண்ணப்பித்து, அதை நண்பனின் முகவரிக்கு பெற்றுக்கொண்டு பரா பால்ராஜின் வீட்டிலிருந்த ஒருநாளில் துபாய் சென்று விட்டான்.
அன்று ஞாயிறு வேறு நிர்மலாவும், ஷான்வியும் ஆலயத்துக்கு வேறு சென்றிருந்தார்கள். காலையில் ரெஹான் வெளியே சென்றால் இரவில் தான் வீடு வருகிறான்.
“வேலை தேட போறவன் காலைல போயிட்டு மதியம் வர வேண்டியது தானே, இரவாகக்காட்டியும் உனக்கு என்ன வெளிய வேலை” என்று நிர்மலா தினமும் கடிந்தாலும்
“வீட்டுக்கு வந்து உன் மருமக மூஞ்சிய பார்த்திருக்க சொல்லுறியா? துபாய்ல அவ்வளவு சம்பளத்துல வேலை பார்த்த எனக்கு இங்க என்ன கூப்பிட்டா வேலை கொடுப்பான்? சொச்சமாகத்தான் சம்பளம் கொடுப்பான். அதே வேலையையும் பார்க்க முடியாது. அதற்காக சும்மா இருக்க முடியுமா? ஏதாவது ஒரு வேலையை பார்க்கணும் இல்ல” மாலையில் தான் எதோ ஒரு வேலை செய்வதாக கூறி நிர்மலாவின் வாயை அக்கணம் அடைத்திருந்தான் ரெஹான்.
இரவுணவுக்கெல்லாம் வந்து விடுபவன் இன்னும் வரவில்லையே என்று அன்னையாக நிர்மலா பதற, ஷான்வி அண்ணனுக்கு அலைபேசி அழைப்பு விடுக்கலானாள். அவனது அலைபேசி அணைக்கப்பட்டிருப்பதாக கணினிக்குரல் கூற மேலும் பதட்டமடைந்தனர்.
ஷான்வியின் கணவன் ரெஹானின் நண்பர்களை அழைத்து விசாரிக்கும் பொழுதுதான் அவன் விமானம் ஏறியதே தெரிய வந்தது.
நிர்மலாவுக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“அத்த உங்க மருமக வீட்டுக்கு தகவல் சொல்ல வேணாமா?” என்று ஷான்வியின் கணவன் கேட்ட பின்பு நெஞ்சை பிடித்தவாறு அமர்ந்துக் கொண்டாள் நிர்மலா.
“என்ன பேசுறீங்க? புரிஞ்சிதான் பேசுறீங்களா? அவங்க அப்பா ஏற்கனவே ஹார்ட் அட்டாக்கினால ஹாஸ்பிடல்ல படுத்து கிடக்குறாரு அண்ணா உங்க பொண்ண பிடிக்காம துபாய்க்கு ஓடிட்டான்னு சொல்லி அவரை ஒரேயடியா கொல்ல சொல்லுறீங்களா? அவர் செத்துட்டா அவர் பொண்ண நீங்க பார்த்துக்கலாம் என்ற நினைப்போ. போங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க” கணவனை அங்கிருந்து துரத்தி விட்டாள் ஷான்வி.
பராவுக்கு தன் கணவன் வக்காலத்து வாங்கும் பொழுதெல்லாம்  ஷான்வி தயங்காமல் இருவரையும் சம்பந்தப்படுத்தி பேசி விடுவாள். பரா அவனோடு எந்தவிதமான பேச்சு வார்த்தையும் வைத்துக்கொவதில்லை. வின்சனும்தான். அதை அறிந்தும் இவள் இவ்வாறு பேசுவதை நிர்மலா கண்டிப்பதுமில்லை. ரெஹான் கண்டு கொள்வதுமில்லை.
“என்னடி பண்ணுறது? சீதனமா பத்து லட்சம் சொலயா கொடுத்ததை வீடு வாங்கின பேங்க் கடனை மொத்தமா அடச்சிட்டேனே. என் பையன் உங்க பொண்ணு வேணாம்னு துபாய் போய்ட்டான் என்று சொன்னா… சீதனமா கொடுத்ததெல்லாம் கேட்க மாட்டாங்களா? மொத்தத்தையும் திருப்பிக் கொடுத்துடலாம். காச எப்படி திருப்பிக் கொடுக்குறது?”
இங்கே பராவின் வாழ்க்கையே கேள்விக்குறியாக நிற்க, பணத்தை பற்றி பேசலானாள் பெரியமனிசி.
“ஏம்மா இப்போ சும்மா, சும்மா பதறுற? நான் சொல்லுறத நல்லா கேளு. எத்தனை காலம் எடுத்தாலும் வெளிநாட்டுக்காரி கசந்துதான் போவா. நம்ம கலாச்சாரம், நம்ம பண்பாடு என்று ஆயிரம் பஞ்சாயத்தாகி, போன உன் பையன் இங்கதான் திரும்பி வரணும் அதுவரைக்கும் சமாளிப்போம். இப்போதைக்கு எந்த உண்மையையும் சொல்ல வேண்டியதில்லை. அதான் உன் மருமகளோட அப்பாவுக்கு உடம்பு முடியாம இருக்கே. நாம சொல்லப் போய் ஏடாகூடமாக ஏதாவது ஆகிடுமோ என்று சொல்லனு சொல்லிடுவோம்”
“நீ சொல்லுறதும் உண்மைதான். ஒரு பொண்ணு ஓடிப்போய்ட்டா. ஒரு பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிருச்சே என்று தெரிஞ்சா அந்த மனுஷன் உசுரையே விட்டுடுவாரு. அந்த பழி நம்மள வந்து சேரும்” 
“உன் மருமகள் நல்லவளோ! கெட்டவளோ! வீட்டு வேலை எல்லாத்தையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்யிறா. வேலைக்கு ஆள் வைக்க வேண்டியதில்லை” நக்கலாக கூறிவிட்டே அகன்றாள் ஷான்வி. 
பரா வந்த பிறகு ஷான்விக்கு வீட்டு வேலையிலிருந்து விடுதலை. அவளை அனுப்பிவிட்டால் தான் குழந்தையையும் பார்த்துக்கொண்டு வீட்டு வேலையையும் செய்ய வேண்டுமே என்ற கவலை அவளுக்கு.
பரா ரெஹான் இன்னும் வீடு வரவில்லையே, எவ்வாறு கேட்பது என்று தவிப்பதை பார்த்திருந்தவளின் வாய் சும்மா இருக்க முடியாமல் பேசியிருக்க, நிர்மலா பாராவை யோசிக்க விடாமல் வேலை கொடுத்து அனுப்பியிருந்தாள்.
ஜான்சி அழைத்து வீட்டுக்கு வருமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். ரெஹான் துபாய் சென்றதை எவ்வாறு கூறுவதென்று பரா முழித்துக் கொண்டிருந்தாள். கொழும்பிலையே இருந்தாலும் தந்தையின் உடல்நிலை காரணமாக அவளை விட்டுச் சென்று இரண்டு மாதங்களுக்கு பின்தான் அவளை பார்க்க பெற்றோர் வந்திருந்தனர்.
வந்த பொழுதுதான் ரெஹான் துபாய் சென்றதை கூறினாள் நிர்மலா.
“ஏன் கூறவில்லை? மறுவீட்டுக்கு கூட வராமல் போய் விட்டாரே. எத்தனை தடவை பராவிடம் வீட்டுக்கு வருமாறு கூறினேன். மாப்பிள்ளை செல்லும் முன் வந்து விட்டு செல்ல வேண்டியது தானே” என்று மகளை முறைத்துப் பார்த்தாள் ஜான்சி.
நிர்மலா என்னவோ ரெஹான் போன வாரம் போனது போல் பேச, பரா மறுத்துத்தான் பேச முடியுமா?
அன்னை அலைபேசி வழியாக வீட்டுக்கு வா, வா என்று அழைத்துக் கொண்டுதான் இருந்தாள். கணவன் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டான் என்று எவ்வாறு கூறுவதென்று இவள் முழித்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், தனியாக வீடு சென்றால் நடந்ததை கூற நேரிடும், கூறினால் தந்தையின் உடல்நிலை பாதிப்படையும் என்று அமைதியாக இருந்தாள்.
பால்ராஜும், ஜான்சியும் சென்ற பின்னர் நிர்மலாவும் அதையே கூறி பராவின் மனதில் எழுந்த கேள்விகளை அனைத்து விட்டாள்.
ரெஹான் சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் அவனிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவில்லை. அவன் துபாய்க்கு சென்றிருப்பது தெரியும். நிர்மலா பேசும் பொழுது தன்னிடம் பேசுமாறு அலைபேசியை கொடுப்பாளென்று பரா எதிர்பார்த்துக் காத்திருக்க, அப்படியொரு நாளும் வரவில்லை. நிகழ்வும் நிகழவில்லை.
பொறுத்தவள் நிர்மலாவிடம் சென்று ரெஹான் ஏன் அலைபேசி அழைப்பு விடுப்பதில்லை. “உங்களிடம் மட்டும் பேசி விட்டு வைக்கிறாரா? அல்லது நீங்கள் மட்டும் பேசி விட்டு வைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
உண்மையில்லையே அவனுக்கு தன்னோடு வாழ விருப்பம் இருக்கா? இல்லையா? அதை அவள் தெரிந்துக்கொள்ள வேண்டுமல்லவா?
ஒரு வாரத்திலையே இந்தக் கேள்வியை பரா கேட்பாளேன்று நிர்மலா எதிர்பார்த்திருக்க, பராவோ ஆறு மாதங்கள் கடந்துதான் கேட்டிருந்தாள்.
இந்த ஆறு மாதத்தில் பரா எந்த மாதிரியான கேள்விக் கேட்டாலும் பதில் கூற மனதளவில் தயாராகத்தான் இருந்தாள் நிர்மலா.
“உன் போட்டோ பார்த்து என் பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பிறகுதான் கல்யாண ஏற்பாட்டையே செஞ்சேன். எப்போ உன் அக்கா ஓடிப்போன விஷயம் தெரிஞ்சதோ அப்போ முகத்தை தூக்கி வச்சிக்கிட்டவன்தான், எதோ பிக்கள் பிடுங்கல் இருக்கு. அதனாலதான் அவசர அவசரமாக கல்யாணம் பண்ணுறாங்க. நல்லா விசாரிச்சீங்களா? என்று கேட்டான்.
“இல்ல எனக்கு பயமாக இருக்கு. நான் இன்னாரை லவ் பண்ணுறேன். என்ன சேர்த்து வைங்கன்னு சொல்லிட போறா. எனக்கு அவ கூட பேசவே பயமாக இருக்கு என்று என் கூட சண்டை போட ஆரம்பிச்சான்.
என் பையனுக்கு ஏதோ மனநோய் போல என்று நான் அவனை டாக்டர் கிட்ட கூட கூட்டிட்டு போய்ட்டேன். ஆனா நீயும் அவனை புரிஞ்சிக்காம அவன் கூட பேசாம, படுக்கைல இருந்து விலகி இருந்திருக்க”
தான் தான் பாராவை விலக்கி வைத்திருக்கிறேன் என்று ரெஹான் கூறியதை அப்படியே மாற்றி தவறெல்லாம் பராவின் மீது என்று பேசினாள் நிர்மலா.
“அப்பாவுக்கு உடம்பு முடியல என்று போனவ, அங்கேயே தங்கிட்ட, ஒரு போனாவது பண்ணியா? நீ வரவே மாட்ட என்று அவனே முடிவு பண்ணி எங்க கிட்ட கூட சொல்லாம, கொள்ளாம துபாய்க்கு போய்ட்டான். போனவன் போன் கூட பண்ணல. பண்ணினா மருமக வந்துட்டா என்று சொல்லலாம் என்று நான் காத்துகிட்டு இருக்கேன்” என்று மூக்கை சிந்த ஆரம்பித்தாள்.
பெற்ற தந்தையோ கண்டிப்பானவர். படித்ததோ மகளிர் பாடசாலையில். கல்லூரி செல்ல ஆரம்பித்து ஆறு மாதங்களில் திருமணம். கூடப்பிறந்த சகோதர்களும் இல்லை. கூடாப்பழக ஆண் நண்பர்களும் இல்லை. தந்தைவழி, தாய்வழி சொந்தங்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பும் இல்லாத பொழுது ஆண்களை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வாள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எவ்வாறு பேசுகிறார்கள்? அவர்களின் நடத்தையின் அர்த்தம்தான் என்னவென்று எவ்வாறு அறியாத பரா தன்னை விட்டு விலகி ஓடும் ரெஹானை எவ்வாறு புரிந்துக் கொள்ளவாள்?
நிர்மலா கூறியதை கேட்ட பின் தன் மீதுதான் தவறோ? தான் தான் ரெஹானை தவறாக புரிந்துக் கொண்டிருந்தோமோ? என்று குழம்பி அமைதியானாள்.
ஒரு வருடமல்ல இரண்டு வருடங்களல்ல நான்கு வருடங்கள் கடந்திருக்க, ரெஹான் இலங்கைக்கு வரவேயில்லை. அவன் சென்று ஒரு வருடம் கழித்துதான் நிர்மலாவை அழைத்து பேசியிருந்தான்.
தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு வாரிசு வரப்போவதாகவும் கூறினான்.
“டேய் என்னடா சொல்லுற? அப்போ மருமகளுக்கு நான் என்ன பதில் சொல்லுறது?”
“யாரு உனக்கு மருமகள்? உன் பேரன சுமக்குரவதான் உனக்கு மருமகள் அத நீ புரிஞ்சிக்க. வயசான காலத்துல உன் பேரப்பசங்களை நீ பார்க்க வேணாம்” பராத்தான் என் மருமகள் என்று பிடிவாதம் பிடித்தேயானால் தான் இலங்கைக்கு வர மாட்டேன். என் குழந்தைகளையும் உன் கண்ணில் காட்ட மாட்டேன் என்று மறைமுகமாக மிரட்டினான் ரெஹான்.
“அந்த பொண்ணோட அப்பா உடம்பு முடியாம இருக்கும் பொழுது உண்மையை சொல்லி நான் எப்படிடா வீட்டுக்கு அனுப்புறது? அது மட்டுமா? சீதனத்துக்காக கொடுத்த பணத்தை வச்சிதானே வீட்டுக் கடனை அடச்சேன். பொண்ண திருப்பியனுப்பும் பொழுது பணத்தை கொடுக்க வேணாமா?” மருமகளாக இருந்த பரா அந்தப்பெண்ணாக அக்கணமே மாறிப் போக, நீதான் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நிர்மலாவும் பேசினாள்.
“வீடு என் பேர்லயா இருக்கு நான் பணம் கொடுக்க? உன் பேர்லதானே இருக்கு? அதுவும் நானா பணம் வாங்கினேன்” என்றெல்லாம் ரெஹான் பேச
கடுப்பான நிர்மலாவோ “டேய் பெத்து வளர்த்து, படிக்க வச்சி, ஆளாக்கி வேலைக்கு அனுப்பினா நீ காதல் கல்யாணம் பண்ணுவியா? பெத்தத்திலிருந்தே உனக்கு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்யத் தெரிஞ்ச எனக்கு உனக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைக்க தெரியாதா? இல்ல உரிமைதான் இல்லையா?
வீடு வாங்கினது உன் குடும்பத்தோட நான் வாழத்தான். நீ அங்க இருந்தா நான் என்ன செய்ய? நீதான் பணம் கொடுக்கணும்” என்று முடிவாக கூறி விட்டாள். 
“எல்லா பெத்தவங்களும் இதையே சொல்லுங்க. என்னமோ நான் தான் உங்கள பெத்துக்க சொன்னது போல” கோபமகா அலைபேசியை துண்டித்திருந்தான் ரெஹான்.
பேரனை பார்க்கவும், மகனோடு பேசவும் பரா அறியாமல் இந்த நான்கு வருடங்களாக நிர்மலா ரகசியமாக ரெஹானோடு அலைபேசி தொடர்பில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றாள்.
பேரனோடு ஒட்டினாலும் அவன் காதலித்து மணந்தவளோடு நிர்மலாவால் ஒட்டமுடியவில்லை.
துபாய் சென்ற மருமகன் நான்கு வருடங்களாகியும் ஊருக்கு வரவில்லையே மகளின் வாழ்க்கையை எண்ணி கவலையடைந்த பால்ராஜ் அடிக்கடி பாராவை பார்க்க வரும் பொழுதெல்லாம் ரெஹானை பற்றி விசாரிக்கலானார்.
“திருமணத்துக்கு வந்தவன் ஆறு மாசம் இங்க இருந்ததினால் வேலைய விட்டு தூக்கிட்டாங்களாம். இப்போதான் வேலைல சேர்ந்திருக்கான். கல்யாணத்துக்கு வாங்கின கடனடைக்கணும் இல்ல. ரெண்டு வருஷம் அங்கு இருந்து சம்பாதிக்கட்டும்” என்றாள் நிர்மலா.
இரண்டு வருடங்கள் தாண்டியும் ரெஹான் வருவது போல் தெரியவில்லை. மீண்டும் நிர்மலாவை சந்திக்க வந்த பால்ராஜ் ரெஹான் வராவிட்டால் என்ன? பாராவை அவனோடு வாழ துபாய்க்கு அனுப்பி வைத்து விடுவோமே. எத்தனை நாட்களுக்கு இருவரும் இரண்டு இடத்தில் இருபதாம்? என்று பேச ஆரம்பித்தார்.
என்றாவது ஒரு நாள் இந்தப் பேச்சும் வரும் என்று நிர்மலா அறிந்துதான் இருந்தாள்.
“இங்க பாருங்க சம்பந்தி. எனக்கிருக்கிறது ஒரே பையன். அவன் துபாய்க்கு வேலைக்குத்தான் அனுப்பியிருக்கேன். ஒரேயடியா அங்கேயே தண்கிடவல்ல. இவ்வளவு பெரிய வீட்டைக்கட்டினது யாரு வாழ? வயசான காலத்துல நான் வாழவா? என் பையன் குடும்பம் குட்டி என்று வாழத்தானே. மருமக அங்க போனா அவனுக்கு இங்க வரணும் என்ற எண்ணமே வராது. அதனாலதான் நானே இந்தப் பேச்சு எடுக்காம இருந்தேன். இல்லனா நானே அனுப்பி வச்சிருக்க மாட்டேனா?” என்று பேசி பால்ராஜின் வாயை அடைத்தாள்.
இந்த நான்கு வருடங்களாக நிர்மலா ரெஹானோடு பேசுவது பரா அறியமாலா இருப்பாளா? ஆனால் கணவனா அவன் தன்னோடு பேசுவதில்லை என்பதிலிருந்தே எதுவோ சரியில்லை என்று மட்டும் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அது என்னவென்று தெரியவில்லை. தெரிந்துக்கொள்ளவும் அச்சமாக இருந்தது. பூதாகரமான அந்த செய்தியால் தந்தைக்கு மீண்டும் மாரடைப்பு வந்து விடுமோ என்று எதுவுமே கேளாமல் நிர்மலாவின் வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரியாகிப் போனாள் பரா.
உண்மையை எத்தனை நாட்கள் மறைக்க முடியும்? தண்ணீரில் அமிழ்த்திய பந்தாய் என்றோ ஒருநாள் பட்டென்றே வெளியே வந்தே தீரும்.
பால்ராஜின் சொந்தக்கார பையன் ஒருவன் துபாய்க்கு வியாபார விஷயமாக செல்ல அவன் அங்கே ரெஹானை குடும்பத்தோடு ஒரு மாலில் பார்த்து அதிர்ந்து அவனது தந்தைக்கு அலைபேசி வழியாக தகவல் கொடுத்திருந்தான்.
“யாராவது தெரிஞ்சவங்களாக இருக்கப் போறாங்களாடா….” என்று அவர் பேச
“பரா வீட்டுக்கரை போலவே பையன் இருக்கான் நீ லூசு மாதிரி பேசாதே டேடி… இரு உனக்கு போட்டோ ஆதாரம் அனுப்புறேன்” என்றவன் போட்டோ மட்டுமல்லாது ரெஹானை பின் தொடர்ந்து அவன் வீடு வரை சென்று உறுதி செய்து கொண்ட பின் தான் ஊர் திரும்பினான்.
“அங்கிள் நான் பரா கல்யாணத்துக்கு வந்ததினால எனக்கு ரெஹான் மூஞ்சி நல்லா பரிச்சயம். அதான் பார்த்த உடனே அடையாளம் கண்டு கொண்டேன். பேசலாம்னு போனா அங்க ஒரு குடும்பம் இருக்கு” அவன் எடுத்த புகைப்படங்களை பால்ராஜுக்கு காட்ட ஜான்சி நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.
“பொண்ணு வாழ்க பால்ராஜ் எதுவானாலும் யோசிச்சு பண்ணுங்க” என்று விட்டு தந்தையும் மகனும் கிளம்பியிருந்தனர்.
மூத்தமகள் தங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலென்று இளையமகளுக்கு தாங்கள் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் அந்த வாழ்க்கையும் இவ்வாறு கேள்விக்குறியாக நிற்கிறதே என்று மனதுக்குள் ரத்தக்கண்ணீர் வடிக்கலானார் பால்ராஜ்
“இப்படி அழுது கரைந்தால் நடந்தது இல்லையென்றாகி விடுமா?  வா ஜான்சி போகலாம் போய் சம்பந்தியம்மாவை என்ன? ஏது? என்று கேட்கலாம்” என்று இருவரும் நிர்மலாவின் வீட்டுக்கு கிளம்பினார்.
“என்ன சொல்லுறீங்க? என் பையனா? யாரோ என்னவோ சொன்னாங்க என்று அத நம்பி என் பையனையே சந்தேகப்படுறீங்களா? என் பையன் அப்படியெல்லாம் செய்யிறவன் கிடையாது” ஆடித் தீர்த்தாள் நிர்மலா.
போட்டோ ஆதாரம் மட்டும் இல்லையென்றால் ஜான்சியும், பால்ராஜூம் கூட நிர்மலா கூறுவது உண்மையென்று நம்பியிருப்பார்கள்.
“இங்க பாருங்க சம்பந்தி. போட்டோவை” என்று காட்டியதும் தான், போட்டோவில் மகன் தூக்கி செல்லம் கொஞ்சும் பேரனை கண்ணில் நிரப்பியவாறு தனக்கு இதை பற்றி தெரியவே தெரியாது என்று சாதித்து கண்ணீர் வடிக்கலானாள் நிர்மலா.
ஷான்வியின் கணவரே “உன் அண்ணன் ஊருக்கு வர மாட்டானா? கட்டின பொண்டாட்டிய வச்சி குடும்பம் நடத்துற எண்ணம் இல்லையா?” என்று பல தடவை கேட்டு விட்டான்.
“அவன் பொண்டாட்டிய வச்சி வாழ நாம சொல்லி கொடுக்கணுமா? அவனுக்கு எப்ப தோணுதோ அவன் வருவான். நான் கேக்க முடியாது” அண்ணனுக்கு திருமணமானது தனக்கு தெரியவே தெரியாது என்பது போல் பேசி சமாளிப்பாள் ஷான்வி. அதற்குமேல் கணவன் குடைந்தால் “ஏன் எங்கண்ணன் வராவிட்டால் அவளை வச்சிக்கலாம் என்ற எண்ணமா?” என்று கேட்டு அவன் வாயை அடைப்பாள். 
என்றோ ஒருநாள் உண்மை வெளியே வரும் வரும் பொழுது தாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் அன்னையும் மகளும் தெளிவாகத்தான் இருந்தனர்.
ரெஹான் துபாயில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவனுக்கு அங்கே மூன்று வயதில் ஒரு பையனும் இருக்கின்றான் என்று அறிந்துக்கொண்ட நொடி பரா நிர்மலாவை தான் பார்த்தாள். அவள் தன்னிடம் கூறிய அனைத்துமே சுத்தப் பொய் என்று அக்கணம் தெள்ளது தெளிவாக புரிந்தாலும் அவர்களோடு சண்டைபோட அவளுக்கு தோன்றவில்லை.
இரட்டை வாழ்க்கை வாழ்ந்து தன்னையும் ஏமாற்றி, தன் காதலியையும் ஏமாற்றும் ஆண்களுக்கு மத்தியில் ஆரம்பத்திலிருந்தே ரெஹான் அவனது முடிவில் தெளிவாகத்தான் இருந்திருக்கின்றான். என்ன அவன் நினைத்திருந்தால் இந்த திருமணமே நடக்காமல் தவிர்த்திருக்கலாம். தன்னுடைய வாழ்க்கையில் இத்தனை வருடங்களை அர்த்தமில்லாமல் கழித்திருக்க வேண்டியதில்லை.
இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று விதியிருந்தால் அதை யார்தான் தடுக்க முடியும்?
“அதான் இப்போ உண்மை தெரிஞ்சிருச்சே… வாங்கப்பா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றாள் பரா.
“என்னம்மா பேசுற? அப்போ உன் வாழ்க?”
“எல்லா சடங்கும் முறையா பண்ணி கல்யாணம் பண்ணாலும் மனப்பொருத்தம் இல்லைனா ஒண்ணா வாழ முடியாது அப்பா. வேற மதமானாலும் அக்கா சந்தோஷமா இருக்கானா அதுக்கு காரணம் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க புரிஞ்சிக்கோங்க. வாங்க போலாம்”
தனது சகோதரியால்தான் தனக்கு இன்று இந்த நிலைமை என்று எண்ணாமல் அங்கணமும் அவளை குடும்பத்தில் இணைக்க நினைத்தாள் பரா.

Advertisement