Advertisement

அத்தியாயம் 24
தூங்கி எழுந்து கொட்டாவி விட்டவாறாரே ஜெராட் வாசலுக்கு வர எஸ்தர் பெட்டியோடு நிற்பதை பார்த்து “அம்மா எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்டான்.
  
“ஏன்டா எங்கள இங்க கூட்டிட்டு வந்து நல்லா பாத்துக்கிறேன்னு சொன்னியே இதுதான் நீ எங்கள நல்லா பாத்துகிற லட்சணமா? குளிர் தாங்க முடியல. நைட்டுல தூங்க விடாம பேஸ்மான்ட்டுக்கு போ. கரண்ட் கட்டாச்சு. மரம் விழுந்திருச்சு. ஜெனரேட்ட தீ பிடிச்சிருச்சு னு கதை வேற சொல்லுற. வயசான எங்களுக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா? தனியா நாங்க என்ன பண்ணுறது? உனக்கு நாங்க இங்க இருக்குறது பிடிக்கலைன்னா பேசாம எங்கள ஊருக்கு அனுப்பிடு. ஆ உன்னால போ என்று சொல்ல முடியாதில்ல. அதான் நானே கிளம்பிட்டேன்” என்றாள்.
எஸ்தருக்கு இருந்தது போதும் ஊருக்கு செல்ல வேண்டும். அதற்கு காரணமும் வேண்டும். நேற்று நடந்த சம்பவத்தை சட்டென்று பற்றிக் கொண்டு காலையிலையே பிரச்சினை செய்ய ஆரம்பித்து விட்டாளென்று ஜெராடுக்கு நன்றாகவே புரிந்தது.
அனைவருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்த பராவோ “காலையிலையே ஆரம்பிச்சிட்டாங்களா?” என்று மாமியாரை பார்த்து “அத்த டீ குடிச்சிட்டு பேசுங்க” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,
“ஆமாம்மா… இப்போ டீ கொடு. இன்னும் கொஞ்சம் நேரத்துல டிபன். லன்ச் என்று கொடுத்து எங்கள இங்கயே தங்க வை. நாங்க ஹோட்டலல்ல இருக்கோம் பாரு. வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் கொடுக்குற. இது ஹோட்டல் இல்ல ஜெயில்” மருமகளை முறைத்தவள் டீயை வாங்கி அருந்தவும் ஆரம்பித்தாள்.
எஸ்தர் ஹோட்டல் என்றதில் பரா ஜெராடை பார்த்து “ரெஸ்டாரண்ட்” என்று முணுமுத்தாள்.
“உனக்கு குசும்புதான்” என்று ஜெராட் பொண்டாட்டியை செல்லமாக முறைத்தவாறே “இவங்க கிட்ட பசங்கள வச்சிட்டு ஹனிமூன் போலாம்னு பார்த்தா இப்படி பிரச்சினை பண்ணுறாங்களே” என்ன செய்வது என்று பரா கொடுத்த டீயை கையில் வாங்கினான் ஜெராட்.
எஸ்தர் கூறுவது போல் பராவும், ஜெராடும் வீட்டில் இல்லாத போது இவர்களது உடல்நிலை மோசமானால் வேலையாட்கள் உடனடியாக பிணியூர்தியை அழைத்து மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். தலைமை வேலையாள் ஜான் உட்பட இன்னும் இரண்டு வேலையாட்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்ற பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதாக ஜானே ஜெராடிடம் கூறி இருந்தார். அப்படி இருக்கும் பொழுது இவர்களுக்கு எதுவும் ஆகும் வரையில் பார்த்துக் கொண்டிருப்பார்களா?    
நேற்று நடந்த சம்பவத்துக்கு பிறகு காவலுக்கு மேலும் இரண்டு பேரை நியமில்ல வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக தற்காப்புக்கலை தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணினான். ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் தானே இது போல் மீண்டும் நடந்து வீடாக கூடாது என்று பாதுகாப்பு ஏற்பாட்டை மேக்கொள்ளும் எண்ணமே வரும்.
எல்லாமே சரியாக இருக்கும் பொழுது எஸ்தர் பெட்டியோடு நிற்கிறாளென்றால் அது இலங்கைக்கு கிளம்ப வேண்டும் என்று மட்டும் தான். அதை சரியாக புரிந்து கொண்ட ஜெராட் “இப்போ என்ன இங்க இருந்தது போதுமா? ஊருக்கு போகணுமா? சரி போ” என்று விட்டான்.
“ஏன்டா… ஒரு பேச்சுக்காகவாவது இருமானு சொல்ல மாட்டியா?” கோபமாக கேட்டாள் எஸ்தர்.
 “கெஞ்சினா ஒருவாரம், பத்துநாள் இருப்பியா? திரும்ப பிரச்சினை பண்ணுவ. உனக்கு ஊருக்கு போகணும்னா போ. எப்ப வரணும் என்று நினைக்கிறியோ சொல்லு டிக்கட் போடுறேன் வா. உனக்கு நான் மட்டும் புள்ள இல்லையே. ஜேம்ஸ் இருக்கான். தங்கச்சியும், அக்கா ரெண்டு பேரும் இருக்காங்க. உனக்கு உன் பேர பசங்கள பார்க்கணும் என்று எனக்கு நல்லாவே தெரியும்” என்றான்.
“இங்கயும் எனக்கு ரெண்டு பேர பசங்க இருக்காங்க. நான் வந்துதான் பார்க்கணும் என்று இல்ல. குழந்தைகளை கூட்டிகிட்டு நீயும் ஊருக்கு வரலாம்” நான் இப்போ கிளம்புறேன். நீ வா என்று சொல்லாமல் சொன்னாள் எஸ்தர்.
இப்பொழுது மாமியார் எதற்காக கோபமாக இருக்கிறாள் என்று பராவுக்கு சுத்தமாக புரியவில்லை. ஆனால் ஜெராடை போலவே பொய்க் கோபம் கொள்வதில் மாமியார் சிறந்தவள் என்று அறிந்ததால் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்திருந்தாள். 
“சந்தோசம். எங்க நீயும் என் பசங்க எனக்கும் பராவுக்கும் பொறந்த குழந்தைகள் இல்லையென்று நமக்காக ஒரு குழந்தையை பெத்துக்க சொல்லுவியோன்னு நினச்சேன்” என்றவன் “சிலபேருக்கு சொந்த பேரக் குழந்தைகள் இருந்தும் கொஞ்ச பாக்கியம் இல்ல. ஏன்னா ஜாதி, மதம் என்று வெட்டி, வீரப்பட்டு பார்த்து பெத்த பொண்ணையே ஒதுக்கி வச்சிருக்காங்க.
பொண்ணுதான் வந்து மன்னிப்பு கேட்கணுமா? பொண்ணு வேணும்னா? பேரக் குழந்தைகளை கொஞ்ச வேணும்னா பெத்தவங்க கொஞ்சம் இறங்கி வர மாட்டீங்களா?”
“என்ன இவர் சம்பந்தமே இல்லாம பேசுறாரே” என்று நினைத்த பரா எதேச்சையாக தனது பெற்றவர்களை பார்க்க ஜான்சி பால்ராஜின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டதை கண்டாள். 
“ஓஹ்… சந்துல சிந்து பாடுறாரா? தேவைதான்” என்று பெற்றோரை பார்த்து பெருமூச்சு விட்டாள். 
ஜெராட் அன்னையை விட்டு கண்களை அகற்றாமல் தான் பேசினான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மாமனாருக்கும், மாமியாருக்கும் பாடம் நடாத்த எண்ணினான். அதை அன்னை கண்டு கொள்ளவும் கூடாது என்றுதான் அவர்களை பாராது அன்னையை பார்த்தவாறே பேசினான்.
பராவின் அக்கா பாத்திமா பௌத்தனான லஷித்தை தந்தை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டார் என்றுதான் வீட்டாருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டிருந்தாள்.
அவன் அவளை நல்ல முறையில் நடாத்தினாலும், அவனது அன்னை இவளை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சினை செய்து கொண்டுதான் இருக்கின்றாள்.
அவளை திட்டினாள் கூட பொறுத்துக் கொள்வாள். அவளுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் சேர்த்து திட்டுவாள். குழந்தைகள் அவளுக்கு மட்டுமா பிறந்தார்கள் தனது மகனுக்கும் அல்லவா பிறந்தார்கள் என்று மறந்து வெறுங்கையோடு வந்தவள், விளங்காதவள் என்று தினமும் காலையில் திட்ட ஆரம்பிக்க, இவளும் மாமியாரை திட்ட ஆரம்பிக்க, வீட்டில் தினமும் ஒரு சண்டை.
வேலைக்கு சென்று வந்த உடன் “உன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள நான் வேண்டுமா? என்று ஆரம்பிப்பவள் பாத்திமா ஏதாவது சொன்ன உடன் மகனிடம் முறையிடுவாள்.
உண்மையிலயே பேரக் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. அவர்கள் தனது ஒரே மகனின் பிள்ளைகள் அல்லவா. பிடிக்காத மருமகளை குற்றம் சொல்ல காரணம் வேண்டாமா? மருமகள் வீட்டுக்கு வந்த உடன் ஏதாவது காரணம் கூறி சண்டையை ஆரம்பித்து விடுவாள். பாத்திமாவும் எத்தனை நாட்கள் தான் பொறுமையாக இருப்பாள்?
குழந்தைகளை ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொன்னாலும் திட்டுவாள். வேலைக்கு ஆளை ஏற்பாடு செய்தாலும் அவர்களிடம் குறை கண்டு சண்டை போட்டு வரவிடாமல் செய்து விடுவாள்.
கேட்டால் “ஏன் என் பேரக் குழந்தைகளை நான் பார்த்துக்கொள்ள மாட்டேனா?” என்று திருப்பிப் பேசுவாள். பாத்திமாவுக்கு எங்கே சென்று முட்டிக்கொள்வது என்று புரியவில்லை.
லக்ஷித்துக்கும் அன்னையின் மீதுதான் தவறு என்று தெரிந்தாலும், பாத்திமாவை பொறுமையாக இருக்கும்படி கூற, இவர்களுக்கிடையில் சண்டைகள் உருவாக ஆரம்பித்திருந்தன.   
பாத்திமாவுக்கு ஏன் தான் திருமணம் செய்து கொண்டோம் என்று நினைக்கும் அளவுக்கு திருமண வாழ்க்கை கசந்திருந்ததது.
தனது பெற்றோர்கள் தன்னிடம் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லையே, தனக்கு ஒன்றென்றால் அவர்கள் வந்து கேட்பதில்லை என்ற தைரியத்தில் தானே இவர்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்று பாத்திமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோரை காண வீடு சென்றாள்.
பாத்திமாவை பார்த்த உடனே கொதித்து விட்டார் பால்ராஜ். பேரக் குழந்தைகள் கூட அவரது கண்களுக்குத் தெரியவில்லை. மூத்தமகளை வசைபாட ஆரம்பித்தார்.
பல வருடங்கள் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறாள் மூத்தமகள். பலவருடங்கள் கழித்து இன்றுதான் மூத்த மகளை காண்கின்றாள். அதுவும் பேரக் குழந்தைகளோடு வந்திருக்கின்றாள். அவர்களை ஆசையோடு அரவணைத்துக் கொள்ளும் எண்ணமெல்லாம் ஜான்சிக்கு இருக்கின்றதா? இல்லையா? வார்த்தையில் கூட காட்டாமல் பாத்திமாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஏவிக் கொண்டிருந்தாள் ஜான்சி.
பாத்திமா காதல் திருமணம் செய்து கொண்டதால் தான் பராவுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்ய நேர்ந்ததாகவும், அதனால்தான் அவளது வாழ்க்கை வீணாகி விட்டதாகவும், இப்பொழுது அவள் வாழ்க்கையை இழந்து வீட்டில் இருப்பதாகவும். “திரும்ப ஏன் வந்தாய்? மீண்டும் என்னை மருத்துவமனையில் படுக்க வைக்கவா? இல்ல ஒரேயடியாக கொல்லவா” நெஞ்சை பிடித்துக் கொண்டு பால்ராஜ் கத்த பாத்திமா அங்கிருந்து அமைதியாக வெளியேறினாள்.
தான் மனநிம்மதிக்காக வீட்டுக்கு சென்றால் தங்கையின் நிலைமை தன்னை விட மோசமாக இருப்பதாய் அறிந்தவள், அதுவும் தன்னால் என்று அறிந்தவள் அழுது கரைந்தாள்.
பாத்திமா வீட்டுக்கு வந்து சென்றதை கூட ஜான்சியும், பால்ராஜூம் பராவிடம் மூச்சு கூட விடவில்லை.
அக்காவை பற்றி தந்தையிடம் பேசினால் அவர் கோபப்படுவார் மீண்டும் உடல்நிலை பாதிப்படையாக் கூடும் என்று அஞ்சி அவரிடம் பேசாமல் இருந்தாலும் அன்னையிடம் பேசிக் கொண்டுதான் இருந்தாள் பரா.
எங்கே இருக்கின்றாளோ? என்ன செய்கின்றாளோ? குழந்தைகள் கூட இருக்குமே. அவளுக்கு எங்கள் ஞாபகம் வருதா தெரியல? ஒரு போன் கூட பண்ணவில்லையே! என்றெல்லாம் புலம்புவாள்.
“அவளுக்கென்ன குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருப்பா. நீ உன் வாழ்க்கையை பார்” சின்ன மகளை திட்டுவாள் ஜான்சி.
ஜெராடோடு திருமணம் நிகழும் போது கூட, கூடப் பிறந்த ஒரே அக்கா இல்லையே என்ற வருத்தம் பராவுக்கு இருக்கத்தான் செய்தது. எங்கே இருக்கின்றாள் என்று அறிந்தாலாவது திருமணத்துக்கு அழைத்திருக்கலாம். அழைத்தால் வருவாளோ? பெற்றோர்கள் சண்டை போடுவார்களா? என்றெல்லாம் அவள் எண்ணத்தில் உதிக்க திருமணமே முடிவடைந்து ஜெராடோடு இங்கிலாந்தும் சென்றுவிட்டாள்.
பராவும், ஜெராடும் இலங்கை வந்திருந்த பொழுது ஒருநாள் எதேச்சையாக பாத்திமாவை சாலையோரம் நடந்து செல்வதை பார்த்து பரா ஓடிச்சென்று “அக்கா” என்று கட்டியணைத்திருந்தாள்.
பல வருடங்கள் கழித்து தங்கையை கண்ட ஆனந்தத்தில் பாத்திமா பராவை கட்டியணைத்தாலும், தந்தை சொன்னது ஞாபகத்தில் வரவே சாலையிலையே நின்று அழுதாள்.
“என்னாலதான் உனக்கு இப்படி ஆச்சு. நான் செத்திருக்கணும். ஆனா என்னால சாக கூட முடியல. என் பசங்க அநாதையாகி விடுவாங்க” என்று பாத்திமா புலம்ப,
ஜெராடை அறிமுகப்படுத்தி வைத்தவள். தான் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக கூறி பாத்திமாவின் வீட்டுக்கு சென்று குழந்தைகளையும் பார்த்தாள்.
லஷித்தும் நல்ல முறையில் தான் பேசினான். அவன் அன்னை வாசலில் அமர்ந்திருந்தவள் வெடுக்கென்று உள்ளே சென்று விட்டாள்.
“அங்க எங்க அப்பா என்றா, இங்க இவங்களா?” பரா அக்காவிடம் கிசுகிசுத்தாள்.
“நீ இங்க வந்தது அப்பாக்கு தெரிஞ்சா உன்னையும் திட்டுவாரு” சோகமாக சொன்னாள் பாத்திமா.  
“நான் எதுக்கு அவர் கிட்ட சொல்ல போறேன்” என்றாள் பரா துடுக்காக. அவளது பதிலில் சின்ன வயதில் அக்கா தங்கை இருவதும் அப்பாவுக்குத் தெரியாமல் செய்யும் திருட்டுத்தனங்கள் இருவரினதும் கண்முன் வந்து செல்ல புன்னகைத்தாள் கொண்டனர். 
“அன்னைக்கி என்ன தேடி வந்த அப்பா என்ன அடிக்க போனப்போ இவர் தடுக்க பிடிச்சி இழுத்தார்ரு. அதுல பேலன்ஸ் தவறி அப்பா விழுந்துட்டாரு. அப்பா விழுவார் என்று இவரும் எதிர்பார்கல. நான் அதிர்ச்சில அப்படி நின்னுகிட்டு இருந்தேன். தூக்கி விடப் போன இவரை தள்ளி விட்டு அப்பா போய்ட்டாரு.
கோபமாக இருப்பாரு அப்பொறம் போய் பேசலாம் என்று இவர் சொன்னதால நானும் இருந்துட்டேன். ஆபீஸ் போய் இவர் அப்பாவை பார்த்து மன்னிப்பும் கேட்டிருக்காரு. அப்பா கண்டபடி திட்டி அனுப்பியிருக்காரு” என்றாள் பாத்திமா.
“என் மேல நம்பிக்கையில்லாம அவசர அவசரமாக எனக்கு கல்யாணத்த பண்ணிட்டு உன்ன குத்தம் சொல்வாரா? மச்சான் வந்து மன்னிப்பு கேட்டதெல்லாம் வீட்டுல சொல்லவே இல்ல. என்னமோ தள்ளி விட்டார் என்றுதான் கோபமா கத்திக்கிட்டு இருந்தாரு. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு நல்ல திட்டணும்னு தோணுது. உடம்பு முடியாம இருக்கிறாரே என்று பாக்குறேன்”
“அப்பாக்கு என்ன?” பாத்திமா பதற.
“உன் கிட்ட வீர வசனம் பேசிட்டு. நீ இல்லாம நெஞ்ச பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டாரு. இப்போ எந்த பிரச்சினையுமில்ல. எப்போ வெட்டி வீரப்பெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு அவரே உன்ன பாக்க வருவாரோ வரட்டும். நீ எதுக்கு வந்து பேச்சு வாங்குற? அவரு உன்ன பார்க்கணும் போல இருக்குனு சொன்னாலும் சரி நான் போன் பண்ணி சொல்லுறேன் நீ வந்துடு” கேலி போல் கூறி  அக்காவை சமாதானப்படுத்தினாள்.
தன்னால் தான் தந்தைக்கு உடல்நிலை மோசமானது என்று பாத்திமாவுக்கும் புரிந்தது. தன்னை பார்த்தால் மீண்டும் கோபப்படுவார் அது அவருக்கு நல்லதல்ல என்று அவளும் விலகியே இருந்தாள். 
தங்கையின் வாழ்க்கை தன்னால்தான் இப்படி ஆயிற்று என்று அவளும் தன்மீது கோபமாகத்தான் இருப்பாளென்று அவளாகவே எண்ணி இருந்தாள். பரா ஆசிரமத்தில் வேலை பார்ப்பது பாத்திமாவுக்கு தெரியவில்லை. பராவை வீட்டில் சென்றுதானே சந்திக்க வேண்டும். சென்றால் மீண்டும் பிரச்சினை மட்டும் தானே வரும் என்று செல்லாமல் இருந்து விட்டாள்.
லஷித் வேலையின் காரணமாக இரத்தினபுரியில் சிலவருடங்களும், பொலன்னறுவையில் சிலவருடங்களும் இருந்து விட்டு இப்பொழுதுதான் கொழும்புக்கு மாற்றலாகி வந்திருந்தான். அதனால்தான் பாத்திமாவால் பராவை பெற்றோர் அறியாமல் வந்து சந்திக்கவும் முடியவில்லை. அதை பற்றியும் கூறி தங்கையிடம் மன்னிப்பும் கேட்டாள்.
“உக்காந்து பேசினாவே பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆளாளுக்கு ஒவ்வொண்ண நினைச்சி ஒதுங்கி இருக்குறவரைக்கும் பிரச்சினைகள் ஓயாது” என்றாள் பரா.
அக்காவின் பிரச்சினையை பரா ஜெராடிடம் கூறித்தான் இருந்தாள். மூன்று சகோதரிகளோடு பிறந்தவனுக்கு பாத்திமாவின் பிரச்சினை புரியாமளா இருக்கும்?
வாங்கிய விளையாட்டு பொருட்களை பாத்திமாவின் குழந்தைகளுக்கு கொடுக்கும்படி கூறி ஜெஸிக்கும், லெனினுக்கு வேறு வாங்கி தருவதாக சமாதான்னப்படுத்த அவர்கள் அதை பெரிதாகி எடுத்துக்கொள்ளவேயில்லை.
காப்பகத்தில் பகிர்ந்து விளையாடுவது தானே சட்டென்று கொடுத்தது மட்டுமல்லாது, சகோதரர்களோடு சேர்ந்து விளையாடவும் ஆரம்பித்திருந்தனர்.
கூடிய விரைவில் பால்ராஜ் மற்றும் ஜான்சி பாத்திமாவை குடும்பத்தோடு ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜெராட் லக்ஷித்துக்கு வாக்கு கொடுக்க,
“கண்டிப்பாக. அவ ரொம்ப ட்ரெஸ்ல இருக்கா. அவளுக்காக அம்மாவையும், அம்மாவுக்காக அவளையும் விட்டுக் கொடுக்க முடியாது. அவ வீட்டாளுங்க இங்க வந்து போனாதான் அம்மா கொஞ்சமாவது அமைதியா இருப்பாங்க” என்றான் லஷித்.
அவன் சொல்வதும் சரிதான். கூடிய சீக்கிரம் ஏதாவது பண்ணலாம் என்று அவர்களிடமிருந்து விடைபெற்று வந்தனர்.
வீட்டுக்கு வண்டியில் வரும் பொழுது திருமணத்தின் போதே பரா கூறியிருந்தால் “குழந்தைகளை தத்தெடுத்தாதான் கல்யாணம் என்று கோரிக்கை வச்சது போல கட் அண்ட் ரைட்டா உங்கக்காவும் கல்யாணத்துக்கு வரணும் என்று கோரிக்கை வச்சிருக்கலாம்” என்றான் ஜெராட்.
“எனக்கு கூட அப்போ தோணல” சோகமானாள் பரா.
குழந்தைகள் விஷயமே பூதாகரமாக இருந்த பொழுது உண்மையிலயே அவளுக்கு அக்காவை பற்றிய எண்ணம் தோன்றியிருக்காது என்று ஜெராடுக்கு புரிந்து பேச்சை மாற்றினான்.
“உங்க அப்பா வந்து போக வேணாம் உன் அக்காக்கு சேர வேண்டிய பணம், நகையை கொடுத்தாலே போதும் அந்தம்மா அமைதியாவாங்க” பராவிடம் கூறி சிரித்தான் ஜெராட்.
அவனது இரண்டாவது அக்காவின் வாழ்க்கையிலும் இது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்க, “ரொம்ப அனுபவம் தான்” என்றவள் “நகை கொடுத்தா போட்டுக்க போறது எங்க அக்கா. பணம் கொடுத்தா அவ குடும்பத்து செலவழிப்பா. மச்சான் ஒரே பையன் கூடப் பொறந்தவங்களும் இல்ல. அதான் அந்தம்மா கூடவே இருந்து உசுர வாங்குது. பணமும், நகையும் கொடுத்த பின்னால பேசாம அநாதை ஆசிரமத்துல சேர்த்துட்டா என்ன?” பரா சிரிக்க,
“உங்க அக்காக்கு இதுவரைக்கும் அப்படியொரு எண்ணம் வரல. நீயே ஐடியா கொடுத்துதவ போலயே. முதல்ல உன் சகவாசத்தை கட் பண்ண சொல்லணும்” மாறி மாறி வம்பிழுத்தாலும் பால்ராஜ் மனதை எவ்வாறு மாறுவது என்ற யோசனையில் தான் இருந்தனர்.
பரா தான் தந்தையோடு பாத்திமாவை பற்றி பேச அச்சப்படுகிறாளே நாமளாவது மாமனாரிடம் பேசிப் பார்க்கலாமென்று ஜெராட் ஒருநாள் தனியாக சந்தித்துப் பேசினான்.
பாத்திமா என்ற பெயரைக் கேட்ட உடனே பால்ராஜின் முகம் கடுகடுவென மாறி ஜெராட் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர் “அவ என் பொண்ணே இல்ல மாப்புள. அவளை குடும்பத்துல சேர்த்துக்குற எண்ணமெல்லாம் எனக்கு இல்ல” என்று விட்டார்.
சரி ஜான்சியிடமாவது பேசலாமென்று பேசிப் பார்த்தான். “அவளால குடும்ப மானமே போச்சு. அவரு உசுருக்கு போராடி மீண்டு வந்துட்டாரு. அவரு ஏத்துக்க மாட்டாரு. அவர் சொல்றதைத்தான் நான் கேப்பேன்” என்று  பால்ராஜூக்கு மேலாக இருந்தாள் ஜான்சி.
இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்றும் ஜெராடுக்கு புரியவில்லை. வழிக்கு கொண்டு வருவது என்றும் புரியவில்லை.
“சரி இங்க தனியா இருக்க வேணாம். உடம்பு முடியாம வேற இருக்குறீங்களே. கொஞ்சம் நாள் எங்க கூட வந்து இறீங்க. அம்மாவும் வராங்க. அவங்க கூடவே ஊருக்கு கிளம்பலாம் என்று தான் இவர்களையும் அழைத்து வந்திருந்தான்.
இதோ சந்தர்ப்பம் கிடைத்த உடன் சொல்ல வேண்டியதை சொல்லியும் விட்டான்.
ஜெஸி மற்றும் லெனினோடு விளையாட ஆரம்பித்த பின் பால்ராஜூக்கு பாத்திமாவின் குழந்தைகளின் ஞாபகம் வரத்தான் செய்தது.
தனது கோபத்தால் வீட்டுக்கு வந்த பேரக் குழந்தைகளின் முகத்தைக் கூட பாராமல் துரத்தியடைத்ததை எண்ணி மனைவியிடம் கூறி புலம்பத்தான் செய்தார்.
“பாத்திமாவின் கணவன் அவள அடிக்கக் கூடாது என்றுதான் என்ன தள்ளி விட்டான். என்ன அவள் தூக்கி விடாத கோபம், நான் அவள அப்படித்தான் வளர்த்தேனா என்ற கோபம் என்ன ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருச்சு. கொஞ்சம் பொறுமையாக யோசிச்சிருந்தா பராவின் முதல் திருமணத்தால் நடந்த அனைத்துக்கும் நான் தான் காரணம். என்னால் தான் எல்லாமே நடந்தது என்று எனக்கே புரிஞ்சிருக்கும். பாத்திமாவின் மீது இருந்த கோபத்தால பழியை அவள் மேல் போட்டு அவள விலக்கி வச்சேன்.
நீ கூட அவள பத்தி பேசியதே இல்லை. அது அவள் மீது பாசமில்லாம இல்லை. அவளால நம்ம குடும்ப மானம் போச்சு என்று சொல்லுறதாலையுமில்ல. அவள பத்தி பேசினா எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் தான் இது நாள்வரைக்கும் நீ அவள பத்தி பேசாம இருந்த.
அன்னக்கி பாத்திமா குழந்தைகளோடு வீட்டுக்கு வந்தப்போ நீ அவள துரத்தினது கூட கோபத்துல நான் அவள ஏதாவது பண்ணிடுவேன் என்று மட்டுமில்ல. எனக்கு ஏதாவது ஆகிடக் கூடாது என்றும் தான்.
நீ அவள ரகசியமா கூட சந்திச்சு தொடர்பு வச்சிருக்கணும் என்று நினைக்கல. அத தெரிஞ்சா பராவும் அக்கா கூட தொடர்புள இருப்பா. அது எனக்கு தெரிஞ்சா உங்க எல்லார் மேலையும் என் கோபத்தை காட்டுவேன் என்று உனக்கு நல்லாவே தெரியும்.
கோபத்தில் பராவுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க எடுத்த தப்பான முடிவு போல இன்னொரு முடிவை எடுப்பேன் என்ற பயம். என் மேல இருக்குற பயமும், மரியாதையும் உன்ன எண் கிட்ட பேசாவிடல.    
அது மட்டுமா? ஏற்கனவே ஒரு பெண்ணை பிரிஞ்சி இருக்குறது போதாதா? இன்னொரு பெண்ணையும் பிரியணுமா என்றுதான் நீ இத்தனை நாள் அமைதியாக இருந்த. இப்போதான் எனக்கு எல்லாமே புரியுது. நான் செஞ்ச எல்லா தப்பும் புரியுது. பாத்திமாவையும் அவளுடைய கணவனையும் சந்தித்து பேசணும். வீட்டுக்கு வர சொல்லணும். குழந்தைகளை பார்க்கணும்” என்று இரண்டு நாட்களுக்கு முதல் தான் ஜான்சியிடம் கூறியிருந்தார். 
மனுஷனுக்கு யோசிக்கவாவது கொஞ்சம் டைம் கொடுக்கக் கூடாதா? மாளிகைக்குள் மைக்கல் அன்றோவோடு புகுந்திருக்க, அடுத்த நாள் கலையிலையே ஜெராட் பாடம் எடுத்திருந்தான்.
“இப்போ நீ என்ன சம்பந்தமில்லாம உளறிக்கிட்டு இருக்க? நான் ஊருக்கு போக ஏற்பாடு செய்வியா? மாட்டியா?” எஸ்தர் ஜெராடை முறைக்க,
“மாப்புள நாங்களும் ஊருக்கு போறோம். பாத்திமாவோட பர்த்டே வருது. இந்த பார்டேக்காகவாவது நாங்க அவளோட இருக்கணும் என்று ஆசைப்படுறோம்” என்றார் பால்ராஜ்.
“அப்பா…” பரா ஆச்சரியமாக தந்தையை பார்க்க,
“அக்காக்கு போன் போட்டு நாங்க வரோம் என்று சொல்லு” என்றவர் கனைக்க வேறு செய்தார். 
பாத்திமாவின் அலைபேசி எண் தான் அவரிடம் இல்லையே. பராவிடம் நேரடியாக அலைபேசி எண்ணை கேட்க முடியாமல் இவ்வாறு கூறியிருந்தார்.
“நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. நான் ஊருக்கு போகணும் ஏற்பாடு பண்ணு” தான் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றதால் மகன் கோபமாக இருப்பதாக எண்ணிய எஸ்தர் பெட்டியோடு உள்ளே சென்றாள்.
“சரி வாங்க” என்று அன்னையையும் தந்தையையும் அறைக்கு அழைத்து சென்ற பரா “நீங்களே உங்க பொண்ணு கூட பேசிக்கோங்க” என்றவள் அக்காவுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து தந்தையிடம் கொடுக்க, பால்ராஜூக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
பாத்திமா “அப்பா” என்றதும் கண்கள் கலங்க இவரும் நலம் விசாரிக்க, ஜான்சியும் அலைபேசியை பறிக்காத குறையாக உரையாடலானாள்.
“என்னங்க நீங்க போட்ட போடுல எங்கப்பா இப்படி சட்டுனு மனசு மாறிட்டாரு” பரா வம்பிழுத்தாள்.
“அவர் மனசு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கிட்டுதான் இருந்திருக்கு. சட்டுனு மாறுற மனசா உங்கப்பா மனசு. கல்மனசு” ஜெராட் அழுத்தமாக கூற பரா அவனை முறைத்தாள்.

Advertisement