Advertisement

அத்தியாயம் 23
பரா இரகசிய அறையை திறந்து கொண்டு படிக்கட்டுகளில் இறங்கும் பொழுதே பால்ராஜூம், எஸ்தரும் ஆளுக்கொரு கட்டையை கையில் எடுத்துக் கொண்டு மறைந்து நின்று பராவை அடிக்க பாய்ந்தனர்.
“ஜீசஸ்…” பரா அலற
“ஐயோ நம்ம பொண்ணு” எஸ்தர் அலற பால்ராஜ் கட்டையை கீழே போட்டிருந்தார்.
“என்ன ரெண்டு பேரும் என்ன அடிச்சே கொல்ல போறீங்களா?” புன்னகையோடு கேட்டவள் “என்ன பயந்துட்டீங்களா?” என்று சிரித்தாள்.
“ஆமா…” எஸ்தரும் கட்டையை கீழே போட்டவாறு கூறினாள்.
“உங்க பையன் சேஃப்டிக்கு கட்ட கூட வச்சிருக்காரா?” என்றவாறே அறைக்குள் நுழைந்தாள்.
குழந்தைகள் இருவரும் தூங்கியிருக்க, ஜான்சியும் அவர்களோடு சேர்ந்து தூங்கியிருந்தாள்.
“அம்மாவுக்கு மட்டும் எந்த பயமும் இல்ல போலயே”
“வீணா பயப்படாம வந்து படுங்க ஜீசஸ் பார்த்துப்பார்” என்று ஜான்சி குழந்தைகளோடு இருக்க, பால்ராஜூம் எஸ்தரும் இரகசிய வழிகளின் படிக்கட்டுகளையே மாறிமாறி காவல் காத்தனர். 
“என்னதான் ஆச்சு? எதுக்கு எங்களை இங்க இருக்க சொன்ன? மேல என்ன நடக்குது?” எஸ்தர் பராவை பார்த்து கேள்விகளை அடுக்கினாள்.
“ஆ ஆடு நடக்குது. மாடு நடக்குது. அதுங்க மட்டும்தான் இந்த மாளிகைல இல்ல. உங்க புள்ள இம்புட்டு பெரிய மாளிகையை வாங்கி போட்டு என்ன பிரயோஜனம்? ஒழுங்கா மெயின்டனன்ஸ் பார்க்கணுமா வேணாமா? மரம் விழுந்து பவர் கட் ஆனதும், ஜெனரேட்டர் வேலை செய்யணுமா இல்லையா? ஒழுங்கான மெயின்டனன்ஸ் இல்லாத காரணத்தால ஜெனரேட்டர் தீ பிடிச்சிருச்சு. எதோ திருடன் புகுந்தது போல அளப்பறைய கூடிட்டாங்க” தான் கூறியதை மாமியாரும் தந்தையும், சந்தேகப்படாமல் நம்ப வேண்டும் என்பதற்காக, படபடவென பேசியவள் கோபமாக இருப்பது போல் முகத்தையும் வைத்துக் கொண்டாள். 
“பரா இப்போதான் எந்த பிரச்சினையும் இல்லையே. அம்மாவும், உன் அப்பா, அம்மாவும் பயந்திருப்பாங்க. நீ போய் அவங்க கூட இரு. இங்க நடந்த எதுவும் அவங்களுக்குத் தெரிய வேணாம்” என்றிருந்தான் ஜெராட்.
“அவ்வளவு தானா? அப்போ இவ்வளவு நேரம் என்ன பண்ண? ஏன் இங்க வர லேட் ஆச்சு” சரியாகத்தான் கேட்டிருந்தாள் எஸ்தர்.
“ஆமா அரை மணிநேரம் தாமதமான போலீசுக்கு போன் பண்ண சொன்ன போன் போகவே இல்ல” மகள் எதோ மறைகிறாள் என்று புரியவே பால்ராஜ்  நிதானத்தோடுதான் கேட்டார்.
ஏதாவது ஆகியிருந்தால் பரா இங்கே வந்திருக்க முடியாதே.
“அதுவாப்பா… இந்த அறைக்குள்ள போன் சிக்னலும் கிடைக்காதாம். அத இப்போதான் அவர் சொல்லுறாரு மாளிகை முழுக்க கரண்ட் இல்லல. இங்க மட்டும் கரண்ட் இருக்குறதால என்னையும் உங்க கூட இருக்க சொன்னாரு” ஜமார் வைத்ததால் தான் அலைபேசி வேலை செய்யவில்லையென்று கூற முடியுமா? இவ்வாறு கூறி சமாளித்தாள் பரா.
ஆம் ஜெராட் அவ்வாறுதான் கூறினான். ட்ரான்ஸ்பார்மரை சேதமடைய செய்ததால் ஜெராடின் மாளிகையில் மட்டும் மின்சாரம் தடையாகாதே. அக்கம்,பக்கமுள்ள மாளிகை, வீடு, கடைகள் என்று அனைத்திலும்தான் மின்சாரம் இல்லாமல் போகும். கண்டிப்பாக அவர்களுள் யாராவது புகார் அளித்திருப்பார்கள். வேலையாள் சொன்னது போல் தாமதிக்க மாட்டார்கள். சட்டுன்னு சரி செய்யும் வேலையும் ஆரம்பமாகியிருக்கும். ஏனெனில் இந்த ஏரியாவில் தான் அநேகமான மாளிகைகள் இருக்கின்றன. பாதுகாப்பு காரணமாக இருப்பத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது நியதி. ஆகையால் மாளிகையில் சற்று நேரத்தில் மின்சாரம் வந்து விடும்.
நடந்த அமளிதுமளியில் என்னென்ன பொருட்கள் உடைந்து விட்டதோ தெரியவில்லை. அதை பெற்றவர்கள் பார்த்தால் வீணாக பதட்டமயடைவார்கள். வேலையாட்களை வைத்து சுத்தம் செய்த பின் நான் அழைக்கிறேன் என்று விட்டான். பராவுக்கும் அதுவே சரியென்று தோன்ற கீழே வந்திருந்தாள்.  
இதோ இப்பொழுது இவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி சமாளித்து விட்டாள்.
“ஏதாவது சாப்பிடுறீங்களா?”
“ஒன்னும் வேணாம் தூங்கினா போதும். கரண்ட் எப்போ வரும்?” கடுப்பாக கேட்டாள் எஸ்தர்.
“இப்போ வந்துடும். அதுவரைக்கும் ஏதாச்சும் குடிங்க” இருவருக்கும் தேநீர் அருந்த கொடுத்தவள் ஜெராட் வந்ததும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மேலே சென்றாள்.
மேலே வந்தால் எல்லாமே இருந்த மாதிரி இருக்க பாரா நிம்மதியாக ஜெராடை பார்த்தாள்.
அன்றோவே வாக்குமூலம் கொடுத்ததில் ஜெராட் கம்பளைண்ட் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலையில் காவல்நிலையம் வந்தால் போதும் என்று விட்டு காவலாளிகள் கைது செய்தவர்களோடு கிளம்பி சென்றிருந்தனர்.
“சரி சரி எல்லாரும் போய் தூங்குங்க” அன்னையை பாராமல் கூறிய ஜெராட் மெதுவாக அறைக்குள் நுழையலானான்.
“எங்க போற? தூக்கம் வருதா? எங்களை பதற வச்சிட்டு உனக்கு மட்டும் தூக்கம் வருதா?” எஸ்தர் ஜெராடை திட்ட ஆரம்பித்தாள்.
“அத்த உங்களுக்கு தூக்கம் வரதா சொன்னீங்களே போங்க போய் தூங்குங்க” பரா எஸ்தரை அங்கிருந்து அனுப்ப பார்த்தாள்.
“நீ பேசாத. நான் உன் கிட்ட பேசல. நான் என் பையன் கிட்ட பேசுறேன். நீ எதுக்கு நடுவுல வர?”
அவ்வளவுதான் பரா கப்சிப். “நீங்களே பார்த்துக்கோங்க” என்று ஜெராடுக்கு சைகை செய்து விட்டு அறைக்கு சென்றாள். 
மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? மருமகள் வேறு கூட இருந்தாலே அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ற கோபத்தில் தான் எஸ்தர் பேசினாள். அதை சரியாக புரிந்து கொண்டதால் பரா ஜெராடிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.  
கோபத்தில் இவ்வாறு பேசுவதுதான். இதையே மனதில் வைத்துக் கொண்டு மாமியாரிடம் முகம் திருப்பவதும், ஏட்டிக்கு போட்டியாக பேசுவதும் பல பெண்கள் செய்யும் தவறு. இதனால் தான் மாமியார் மருமகளுக்கிடையில் முடியாத சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  
“மகன் மாளிகை வாங்கி குடியிருக்கான்னு சந்தோஷபட்டு கொஞ்ச நேரம் கூட ஆகல என்னென்ன பிரச்சினை? உண்மைய சொல்லு. உண்மையிலயே கரண்ட்டுதான் போச்சா? இல்ல திருடனுங்க புகுந்துட்டானுங்களா?” மகனை பற்றி நன்கு அறிந்தமையால் எஸ்தர் கிடுக்கிப் பிடி போட்டாள்.
“ஆஹா… எஸ்தர் எலிசபெத்து குயின் ரேஞ்சுக்கு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்களே” முடியை கலைத்தவன் “ம்மா… நான் ஒன்னும் காலேஜ் படிக்கிற பையன் இல்ல நடுராத்திரல வந்ததுக்குக்கு நிக்க வச்சி கேள்வி கேட்க, போம்மா… போ… போய் தூங்கு” என்ன சொல்லி அன்னையை சமாதானப்படுத்துவது? சந்தர்ப்பத்துக்கு ஒன்றும் மூளையில் உதிக்கவில்லையே என்று நொந்து கொண்டான் ஜெராட். 
“மாளிகைல வாழ்றதாக சந்தோஷப்பட முடியல திருடனுங்க தொல்லை” எஸ்தர் ஆரம்பிக்கும் போதே
“நடக்காத ஒன்ன நடந்திருச்சுனு புலம்பாதீங்க. இங்கயெல்லாம் திருடனுங்க வர மாட்டானுங்க. பெட்ரோல் போலீஸ் எந்த நேரமும் சுத்திக்கிட்டுதான் இருக்காங்க. கரண்ட் கூட போகாது. இன்னக்கி எதோ போச்சு. நம்ம நேரம் ஜெனரேட்டர்ல எதோ பிரச்சினை. என்ன நடக்குது என்று தெரியாம சட்டுனு வெளிய போக முடியுமா? உங்க எல்லாரையும் பாதுகாப்பா வைக்கிறது என் பொறுப்பில்லையா?” இவனும் படபடவென பேசி அன்னையை அமைதி படுத்த முயன்றான். 
“ஆஹா… ஆஹா… நடந்தது என்னனு உங்க அம்மாக்கு தெரியல இல்ல. அதான் சார் துள்ளளா பேசுறாரு. இன்னும் அந்த பெட்ரோல் போலீஸ் வண்டி சுத்துறத சொல்லாம இருக்காரா? அவனுங்க என்ன தூக்கிட்டு போன கத மட்டும் உங்க அம்மாக்கு தெரிஞ்சது. அவ்வளவுதான்” அறைக்குள் இருந்து கொண்டு ஜெராட் எப்படியெல்லாம் எஸ்தரை சமாளிக்கின்றான் என்று வேடிக்கை பார்த்தவாறு பதில் கூறிக் கொண்டிருந்தாள் பரா.
“ஏன்டா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா… நான் உசுரோட இருப்பேனா?” ஐந்து பிள்ளைகள் பெற்றிருந்தாலும், ஐந்தில் ஒன்றை கூட விட்டுக் கொடுப்பாளா?
“இதையேதான் பராவும் சொன்னா… அப்பா செத்ததற்காக நீ ஒன்னும் சாகலையே. இதோ என் கூட இங்கிலாந்து வரைக்கும் வந்து நடுராத்திரில தூங்க விடாம பிரச்சினை பண்ணிகிட்டல்ல இருக்க” சத்தமாக வேறு சிரித்தான்.
ஜெராடுக்கு ஏதாவது ஆகியிருந்தால் எஸ்ர் துடித்துப்போவாளென்று ஜெராடுக்கு தெரியாமலில்லை. இப்பொழுது இவ்வாறு கூறி அன்னையின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லையானால் விடியும் வரையில் பேசிக் கொண்டிருப்பாள். என்றுதான் இவ்வாறு பேசியிருந்தான்.
“ஓஹோ… இவர் பெரிய ரோமியோ. ஜூலியட் செத்தது போல நாங்களும் உசுர விடணுமா? உங்கப்பா என்ன டாச்சர் பண்ணாரோ உங்கம்மா போய் சேர்ந்தார் புண்ணியவான்னு இப்போ சந்தோஷமா சிரிச்ச முகமா இருக்காங்க”
” ஐயோ…. பார்த்தே இல்லாத மாமனாரை தப்பா பேசாத” மனசாட்சி முறைக்க,
“அவரு நல்லவராகவே இருந்துட்டு போகட்டும். அவர் செத்தா… இந்தம்மா சகனுமா? அப்போ ஐஞ்சி பசங்களுக்கும் அம்மா வேணாமா?”
“நீ அடங்கு” பராவின் மனசாட்ச்சி மீண்டும் முறைத்தது.
மகனை முறைத்த எஸ்தர் “அப்போ நான் உங்க அப்பா கூடவே சாகலானு வருத்தப்படுறியா?” என்று கண்ணை கசக்கினாள்.
“ஐயோ… என் செல்ல அம்மா… நான் அப்படி சொல்லல. பிறப்பும், இறப்பும் நம்ம கைல இல்லையே. ஐவி இறந்துட்டா… அதுக்காக நான் அவ கூடவே போகலேயே. பராவை கல்யாணம் பண்ணி சந்தோஷமாகத்தான் இருக்கேன். அத சொன்னேன்”
“ஆமா…ஆமா… ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இன்னும் ஹனிமூன் கூட போகல” நொடித்தாள் பரா.
“போடா… போடா… மாத்தி மாத்தி பேசி என்ன ஏமாத்துற” மகன் சந்தோஷமாக இருக்கிறான் என்றதும் மற்றதெல்லாம் மறந்து போனாள் எஸ்தர்.
“சரிம்மா… போ… போய் தூங்கு” என்றவனோ எஸ்தர் அறைக்கு சென்ற பிறகு அறைக்கு வந்தான்.
“என்ன ஒருவழியா அம்மாவ சமாதானப்படுத்திட்டீங்க போல?” தலையணையை மடியில் வைத்தவாறு அமர்ந்திருந்தாள் பரா.
“நீ இன்னும் தூங்கலையா? இந்நேரத்துக்கு குறட்டை விட்டு தூங்கியிருப்பான்னு இல்ல நினச்சேன்” தான் அன்னையோடு பேசியதை கேட்டு கிண்டல் செய்கிறாள் என்று புரியவரும் பராவை வம்பிழுத்தான் ஜெராட்.
“நடந்த சம்பவத்தை நினச்சா தூக்கம் வருமா? இந்நேரம் மேலோகத்துல இருந்திருப்போம். ஐவி நடுல புகுந்து குட்டைய குழப்பிட்டாங்க” என்று சிரித்தாள்.
“ஐவியா…. என்ன சொல்லுற?”
ஐவியின் ஆவி பராவின் உடம்பில் புகுந்ததது பராவுக்கு ஞாபகம் இருக்கிறதா? நடந்த அனைத்துமே அவளுக்குத் தெரியுமா?
போலீசார் வந்த போது மயக்கத்தில் இருந்த பரா மெதுவாக கண்களை திறந்து பார்த்திருக்க, ஜெராட் அங்கே நடப்பவைகளை கூட கவனிக்காது பராவைத்தான் கவனித்தான்.
“ஆர் யு ஓகே?” அவள் ஐவியா? பராவா என்று தெரியாமல் பெயரைக் கூட சொல்லி அழைக்க முடியாத நிலை.
“என்ன ஆச்சு ஜெராட்? மயங்கிட்டேனா?” என்றதும் தான் பரா மீண்டு விட்டாள் என்று அறிந்தவன் பெற்றவர்களோடு இருக்குமாறு அனுப்பி வைத்தான். இதோ இப்பொழுதுதான் அதை பற்றி பேசவே முடிந்தது.
“பின்ன ஐவியோட ஆவி இல்லாம வேற யாரோட ஆவி இந்த மாளிகைல இருக்கு? அப்படியே இருந்தாலும் நமக்கு உதவி செய்யுமா? கண்டிப்பா அது ஐவியோட ஆவிதான். இல்லனா இந்நேரம் நான் செத்து ஆவியா அலைஞ்சிருப்பேன்” என்றவள் “புல்லட் என்ன துளைக்காம எதோ ஒன்னு என்ன ரொம்ப பக்கத்துல நின்னு தடுத்தது. அத நான் நல்லாவே உணர்ந்தேன். என் உடம்பு… உடம்பு என்ன உடம்பு எலும்பு வரைக்கும் குளிர் தாக்கிருச்சு.
அப்படியே நான் ப்ரீஸ் ஆகிட்டேன். அதற்க்கு பிறகு என்ன ஆச்சு என்றுதான் தெரியல. கண்ண முழிச்சி பார்த்தா மயங்கியிருக்கேன். ஒருவேளை அதிர்ச்சில மயங்கி இருப்பேன்” தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
ஐவியின் ஆவி உடலில் ஏறியதை தாங்க முடியாமல் பரா மயங்கி இருப்பாள். அது அவளுக்கே தெரியாது. ஜெராடுக்கும் அதை பற்றி சொல்லும் எண்ணமில்லை.
“ஐவியோட ஆவியா இருக்கலாம். வா தூங்கலாம்” என்றவன் அவளை இறுக கட்டிக் கொண்டு கண்களை மூட, பராவும் அவன் மேல் கால்களை போட்டுக் கொண்டு கட்டிக் கொண்டாள்.
“ஆமா உன் கிட்ட ஒன்னு கேக்கணுமே….” என்று இழுத்த ஜெராட் “இல்ல வேணாம்” என்று நிறுத்தினான்.
மாளிகையை தான் ஐவிக்காக வாங்கியதை பராவிடம் கூறவே இல்லையே அதை இவள் எவ்வாறு அறிந்து கொண்டாள் என்றுதான் கேட்கப் போனான்.
மாளிகையை ஐவிக்காக வாங்கியது என்று கூறினால் பராவின் மனது காயப்படும், ஏமாற்றமாக உணர்வாள் என்றுதான் கூற மறுத்தான். எந்த பெண்தான் தன் முன்னாள் மனைவிக்காக வாங்கிய பொருட்களை பாவிக்க விரும்புவாள். சின்ன பொருட்களையே பாவிக்க மறுக்கும் பெண் மனம் குடியிருக்கும் வீட்டை வாங்கியதாக கூறினால் பாடுபடாதா? அந்த வீட்டில் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக உணர மாட்டாளா? என்றுதான் கூறாமல் இருந்தான் ஜெராட். 
ஆனால் பரா எப்படி அறிந்து கொண்டாள்? ஒருவேளை ஐவி தான் பராவின் உடம்பில் புகுந்து கூறினாலோ. இல்லையே” என்று நினைத்தவன் பராவிடம் அதை பற்றி கேட்ட பின் தான் “இல்ல வேண்டாம். அவளே மறந்து போய் இருப்பாள். திரும்ப அதை ஞாபகப்படுத்த வேண்டுமா? என்று “வேண்டாம் என்றிருந்தான்”
“என்ன வேணாம்? இந்த மாளிகையை நீங்க ஐவிக்காக வாங்கினத நான் எப்படி தெரிஞ்சி கிட்டேன் என்று நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று அவன் முகம் பார்த்து நிற்க, ஜெராடும் பராவின் புறம் திரும்பி “சொல்லு” சாதாரணமாகவே கூறினான்.
தான் என்ன கேட்கப் போகிறோம்? என்று புரிந்து கொண்டு பராவே அதை பற்றி பேச முன் வந்ததால் அவள் ஐவிக்காக மாளிகை வாங்கியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவே அவள் எவ்வாறு அறிந்து கொண்டாலென்று கூறுமாறு சாதாரணமாகவே கூறினான்.
“எல்லாமே ஒரு கெஸ்சிங் தான்”
“என்னது கெஸ் பண்ணியா? ஹேய் பொய் சொல்லாத. அன்னக்கி மாளிகைல பார்ட்டி நடந்தப்போ. நான் வான்யா கூட பேசினது கேட்டுட்டு நீ சொல்லி இருப்ப” என்றான்.
ஜெராட் உண்மையிலயே அவ்வாறுதான் நினைத்தான். வான்யாவோடு பேசிய அனைத்தையுமே பரா கேட்டு விட்டாள் என்றுதான் நினைத்தான். ஆனால் பரா கடைசியாக பேசிய போதுதானே அங்கே வந்தாள். ஆகையால் அப்பொழுது மாளிகையை ஐவிக்காக வாங்கியது அவளுக்குத் தெரியாது.
“இல்ல ஜெராட் அப்போ நான் கேட்கல. இவ்வளவு பிரியா மாளிகையை, அவ்வளவு விலை கொடுத்து வாங்கணும் எங்குறது நிச்சயமாக உங்க கனவாக இருக்க முடியாது. அது ஐவியோட கனவாகத்தான் இருக்கணும்” என்றாள்.
“உண்மையிலயே நீ கெஸ் தான் பண்ணியா? உனக்கு இம்புட்டு அறிவு ஆகாது” சிரித்த ஜெராட் அவள் நெற்றியில் முட்டினான்.
“ஆமா வரவு எட்டணா செலவு பத்தணா. கடன்பட்டு யாராச்சும் மாளிகை வாங்குவாங்களா? இதுல என் கிட்ட மறைக்க நீங்க போராடணுமா? சொல்லியிருக்கலாமே” சிரித்தவள் தான் எவ்வாறு அறிந்து கொண்ட ரகசியத்தை கூற மறுத்தாள்.
குடித்துக் கொண்டு வந்த ஜெராட் ஒரு நாள் புலம்பித தீர்த்திருக்க, அன்றுதான் பரா மாளிகையை ஐவிக்காக வாங்கியதை அறிந்து கொண்டாள்.
அதிர்ந்தவள். ஆச்சரியமும் அடைந்தாள். அவள் மீது இவ்வளவு காதல் கொண்டிருந்தானா? என்று பொறாமையும் கொண்டாள். பின்பு இவன் தனக்கானவன். தனக்கு சொந்தமானவன். இந்த மாளிகையை விட இவனும், இவனது அன்பும் தான் தனக்குத் தேவை அதுவே தனக்கு கிடைத்து விட்டது. இந்த கல்லாலான மாளிகை தான் பெரிதா? என்று கூறிக் கொண்டாள்.
“உனக்கு வருத்தமாக இல்லையே. உனக்கு வேண்டாம்னா இந்த மாளிகையை வித்துடலாம்” என்றான்.
“ஐவி இங்க இருக்காங்க என்று தெரிஞ்ச பிறகும் மாளிகையை விற்பீங்களா? உங்க மனசு ஒத்துக்கொள்ளுமா? ஐவி உங்கள இங்கிருந்து போக விடுவாங்களா?”
தனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்று யோசிப்பவன் அவனுடைய விருப்பம் என்ன என்று சொல்லவில்லையே அதற்கு மேலும் ஆவியாக இருக்கும் ஐவி நிச்சயமாக ஜெராடை விட மாட்டாள் என்று எண்ணினாள் பரா.
ஐவியை பற்றி ஜெராட் யோசிக்கவுமில்லை. அவள் இங்கிருந்து செல்ல அனுமதியளிக்க மாட்டாள் என்று எண்ணவுமில்லை. இப்போது அவன் மனதில் இருப்பது பரா மட்டுமே. அவளது சந்தோஷமும், மனநிம்மதியும் முக்கியமானது தோன்ற கேட்டு விட்டான்.
“உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பம். என்னோட விருப்பத்தை ஐவி மதிப்பா. குறுக்க வர மாட்டா” என்றான்.
ஜெராட் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எண்ணுபவள் ஐவி. அவள் நிச்சயமாக அவனது முடிவுக்கு மதிப்பு கொடுப்பாள் என்ற நம்பிக்கை ஜெராடுக்கு இருந்தததால் அவ்வாறு கூறினான்.
அவன் பதிலில் பரா முகம் மலர்ந்தாள். தன்னுடைய விருப்பம் தான் அவனுடைய விருப்பம் என்று சொல்வது என்றால் அவன் தன் உணர்வுகளுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டும், தன்னை எவ்வளவு நேசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாள்.
“எனக்கு இந்த மாளிகைல இருக்கதான் பிடிச்சிருக்கு. எல்லாருக்கும் மாளிகைல வாழும் கொடுப்பணை இருக்கா?” கண்சிமிட்டியவள் உள்ளுக்கு இவன் யாருக்காக இந்த மாளிகையை வாங்கினானோ அவளுக்கே அந்த கொடுப்பணை இல்லை என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
“அதுவும் சரிதான். ஆனா மாளிகையை வாங்கினா மட்டும் போதாது மெயின்டைன் பண்ணவே அலாதியா சம்பாதிக்க வேண்டியிருக்கு. பேசாம வேலைய விட்டுடலாம் என்று இருக்கேன்” என்றான்.
“விட்டுட்டு மாளிகைல ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ண போறீங்களா?” சட்டென்று நக்கலடித்தாள் பரா.
“உன்ன…” மீண்டும் அவள் நெற்றியில் முட்டியவன் “நானும் டேவிட்டும் கம்பனி ஆரம்பிக்கலாம் என்று இருக்கோம்” என்றான். நெடுநாள் திட்டம் தான். அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின் தான் இவளிடம் கூறியிருந்தான்.  
“ஏற்கனவே மாளிகை வாங்கின கடன் இருக்கே. இதுல கம்பனி என்று வந்தா இன்னும் செலவுதான். அப்போ மாளிகையை வித்துடலாமா?” ஜெராட்டுக்காக யோசனை கூறினாள் பரா.
“வேணாம் வேணாம் என் பொண்டாட்டி ஆசைப்பட்டா. எக்சுவலி வாங்குற சம்பளத்தை நம்பி இருக்க முடியுமா? சைடுல ஷார் மார்க்கட்ல சம்பாதிச்சுக்கிட்டுதான் இருக்கேன். கம்பனியை சின்னதா ஆரம்பிக்கலாம் என்றுதான் முடிவு பண்ணியிருக்கோம். நீ டென்சன் ஆகாத” என்றவன் “ஆமா அன்றோவோட ரகசியத்தை சொல்லுறேன்னு மிரட்டினியே உண்மையிலயே ரகசியம் ஏதாவது இருக்கா? இல்ல சும்மா தானே மிரட்டின?” தனக்கே அவனை பற்றி முழுசாகத் தெரியாத பொழுது பராவுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றுதான் கூறினான்.
அதுவும் அன்றோவின் பேச்சை ஆரம்பித்தது பரா கம்பனி ஆரம்பிப்பது பற்றி யோசிக்கக் கூடாது என்று தான்.
“அதுவா….” என்று தனக்கு எவ்வாறு அன்றோவின் தினக்குறிப்பு கிடைத்தது என்று கூறியவள் “ஐவியின் அப்பா எங்க அப்பாவை விட கண்டிப்பானவர் போல, சின்ன தவறுக்கும் பெல்டாளையே அடி வெளுப்பார். இவன் அப்பா என்றும் பார்க்காம அவரை நல்லா வச்சி செஞ்சிருக்கான். ஒருநாள் ஐவி கிட்ட வசமா மாட்டிக்கிட்டான். எப்படியோ அக்காவ சமாதானப்படுத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி சரண்டர் ஆகிட்டான்” என்றாள்.   
ஐவி பெரிதாக பெற்றோரை பற்றியோ, சின்ன வயதில் நடந்ததை பற்றியோ பேசியதில்லை. பசுமையான நினைவுகளாக இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம். அடியும், உதையும் கிடைத்தால் யார் தான் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள்?
அது ஜெராடுக்கு புரியவே தான் இன்னும் அவளை நன்கு பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமோ என்று எண்ணினான்.
பேசிப் பேசியே பரா தூங்கியிருக்க, ஜெராட்டுக்குத்தான் தூக்கம் வரவில்லை.
“ஐவி இத்தனை நாட்களாக என்னோடுதான் இருந்தாளா? என்னை பார்த்துக் கொண்டுதான் இருந்தாளா? நான் பராவை திருமணம் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டு பண்ணியிருக்கவில்லை மாறாக சந்தோசம் தான் அடைந்திருப்பாள்.
கோபப்பட்டிருந்தால் அவளே பராவை ஏதாவது செய்திருப்பாள். எவ்வழியிலேனும் துன்புறுத்தியிருக்க முடியும். அப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக பார்த்திருந்தாளென்றால் பரா நல்லவள் என்பதால் மட்டும் தான்” பராவை அணைத்திருந்த கையால் அவள் முதுகை நீவிவிட்டவாறே யோசித்துக் கொண்டிருந்தான் ஜெராட்.
“நீ என் கூட ஒரு தடவையாவது பேசியிருக்கலாமே ஐவி. உனக்குத்தான் காமினியுகேட் பண்ண மனித உடல் தேவை படுத்தே. அப்படி யாருடைய உடலிலையோ புகுந்து நீ அவங்களுக்கு கஷ்டம் கொடுக்குறதுக்கு பதிலா. என் உடம்புளையே புகுந்து என்ன சொல்லணுமோ எல்லாத்தையும் சொல்லி இருக்கலாமே.
ஒருவேளை பரா மயக்கம் போட்டு விழுந்தது போல நானும் விழுந்துடுவேன்னு நினைச்சி என் உடம்புல ஏறாம இருந்தியா?
என் உடம்புல வந்து ஒரு பேப்பர்ல எழுதி வச்சிருக்கலாம். இல்ல வேணாம், வேணாம் அது ரொம்ப கஷ்டம். வீடியோ ரெகார்ட் பண்ணி வச்சிருக்கலாம். அத பார்த்து நான் உன்ன புரிஞ்சிக்கிட்டிருந்தேப்பேனே. உன் பாடியையும் சீக்கிரம் கண்டு பிடிச்சிருப்பேனே”
எதோ ஐவி அங்கேயே இருந்து அவனை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணிய ஜெராட் பராவை இடது கையால் அணைத்திருந்த போதிலும், வலது கையை ஐவிக்காக நீட்டியவாறு பேசிக் கொண்டிருந்தான்.
ஐவி அவனது கையை பிடித்திருப்பதாக அவனுக்குள் ஒரு உணர்வு.
“என்ன எதுவுமே சொல்லாம இருக்க? ஏதாவது சொல்லு? உன்னாலதான் பேச முடியாதே. சரி ஏதாவது பொருளை அசச்சு நீ இங்கதான் இருக்க என்று எனக்கு தெரிவி” என்றவன் சுற்றிலும் கண்களை சுழற்ற எந்த பொருளும் அசையவில்லை.
“அப்போ நீ இங்க இல்லையா?”
“ஒருவேளை எங்களை காப்பாத்தாத் தான் நீ இத்தனை நாட்களாக எங்க கூடவே இருந்தியா? இப்போ நீ எங்க கூட இல்லையோ? போய்ட்டியா?” சந்தோசமா? கவலையா? என்று கூற முடியாத உணர்வில் இருந்தான் ஜெராட்.
ஐவி அவனுடைய அறையிலும் இல்லை. அவன் பேசியதை கேட்டிருக்கவுமில்லை.

Advertisement