Advertisement

அத்தியாயம் 2
மணமேடையில் நின்றிருந்த பராவின் முகத்தில் இன்னுமே தெளிவில்லை. பக்கத்தில் நின்றிருக்கும் ஜெராட்டை கவனித்திருப்பாளா? ஒரு நொடி கண்ணை மூடச் சொல்லி அவன் என்ன ஆடை அணிந்திருக்கிறான் என்று கேட்டால் முழிப்பாள். அவளது மண்டைக்குள் பல காட்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க, மனதோ எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது.   தான் எடுத்த முடிவு சரிதானா? என்ற குழப்பம் அவள் முகத்தில் இன்னுமே அப்பட்டமாகவே தெரிந்தது. “தான் எங்கே முடிவெடுத்தேன்? பெற்ற உடன் பெயர் வைப்பதிலிருந்து தன்னுடைய வாழ்க்கையில் என்றுமே யாரோ தான் முடிவெடுத்திருக்கிறார்கள்” தனக்குள்ளேயே பேசலானாள்
“அறியா வயதில் பெற்றோருக்கு பிடித்த பாடசாலையில் சேர்த்து விட்டார்கள் என்றால் அவர்கள் கூறிய படிப்பையும் தான் படிக்க வேண்டிய கட்டாயம்.
அதையும் நிம்மதியாக படிக்க முடிந்ததா? அக்காவின் காதலால் தன்னுடைய வாழ்க்கையே திசைமாறி விட்டது” பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
பராவின் தந்தை பால்ராஜ் ரொம்பவும் கண்டிப்பானவர். அன்னை ஜான்சி குடும்பத்தலைவி. அக்கா பாத்திமா. இதுதான் பராவின் அழகான குடும்பம்.
எதை கேட்டாலும் அன்னையிடம் தான் கேட்டுப் பழக்கம். தந்தையிடம் எதையுமே நேரடியாக கேட்டும் பழக்கமில்லை. அவரிடம் பேசியும் பழக்கமில்லை. இத்தனைக்கும் பால்ராஜ் குடிகாரரோ, கோபக்காரரோ கிடையாது. அவருக்கென்று சில சட்டதிட்டங்களை வகுத்து வாழ்பவர். அதுவும் பெண்கள் என்றால் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை அவரே கடைபிடிப்பவர். ஜான்சி அவர் மனைவி அவரை புரிந்து நடந்துகொள்கின்றாள். அவர் பெற்ற பிள்ளைகள் இன்றைய உலகின் சிறகுகள். அவரை மீறி பறக்கத்தானே ஆசைப்படுவார்கள்?
சின்ன வயதில் சின்ன சின்ன ஆசைகள் அவர்களுக்குள் இருந்தது. வித விதமான காதணிகள் அணிய வேண்டும். கலர் கலரான வளையல்கள் அணிய வேண்டும். முத்து மணிமாலைகள் அணிய வேண்டும். அன்னையின் புடவைகளை, காலணிகளை அணிந்து பார்க்க வேண்டும் என்பதே.
கல்லூரி செல்லும் பொழுது சற்று சுதந்திரம் கிடைக்க, தந்தையின் கண்களை மறைத்து தோழிகளோடு மெஜஸ்டிக்கு சிட்டிக்கு {ஷாப்பிங் மால்} ஷாப்பிங் செல்வது, சினிமாவுக்கு செல்வது, அங்கிருக்கும் உணவகங்களில் வித விதமான துரித உணவுகளை ருசிபார்ப்பது என்று வாழ்க்கையை இன்பமாக கழிக்க ஆரம்பித்தனர்.
வானுக்குத்தான் எல்லையில்லை. இன்பத்துக்கு நிச்சயமாக எல்லையுண்டு. அதன் முடிவில் துன்பம் ஆரம்பிக்கும். அது யாருக்கு என்பது தான் இங்கே ஆரம்பிக்கும் கேள்வி. அதில் என்ன சந்தேகம். அது பராவுக்குத்தான். அது யாரால் என்பதுதான் முக்கியமான கேள்வி?
தந்தையால் தங்களது சுதந்திரம் பறிக்கப்படுவதாக நினைத்து பரா தனது குட்டி குட்டி ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வேளை. பாத்திமாவோ தான் படிக்கும் கல்லூரியில் ஒரு பௌத்தனை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தாள்.
வீட்டில் பாத்திமாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் அவளோ கணவனோடு சென்று விட்டாள். மூத்த மகளை காணாது தேடிப்பார்க்கும் பொழுதுதான் பாத்திமா திருமணம் செய்து கொண்டது பால்ராஜுக்கு தெரிய வந்தது.
அதிர்ச்சிக்கு மேல் கோபம் மேலோங்க மகளை தேடித் சென்று அடிக்க பாய, மகளை மணந்தவன் சும்மா இருப்பானா? இவரை பிடித்து தள்ளி விட்டிருந்தான்.
எவனோ ஒருவன் தன் மீது கை வைக்கின்றான். அதை தான் பெற்ற மகள் வேடிக்கை பார்த்திருக்கின்றாளே என்ற கோபம் வெறுப்பாக மாற, மகளுக்கு சாபமிட்டு விட்டு சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து வந்து விட்டார்.
வீட்டுக்கு வந்தவருக்கு சின்ன மகளை பார்க்கையில் எங்கே அவளும் மூத்த மகளை போல் மாற்று மதத்தவனோடு ஓடிவிடுவாளோ என்ற அச்சம் மேலோங்க, பரா காலேஜ் செல்வதை நிறுத்தினார்.
அக்கா இவ்வாறான ஒரு காரியத்தை செய்து விட்டாலே என்று அதிர்ந்து அமர்ந்திருந்தவள் உடைந்து நிலை குலைந்து போய் இருக்கும் அன்னையை தேற்றுவதா? துக்கம் விசாரிக்க வீட்டுப் படியேறி வரும் சொந்தபந்தங்களை சமாளிப்பதா? என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் தந்தை அவளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தால் அவளும் தான் என்ன செய்வாள்?
பேசிப் பார்த்தாள்.
கெஞ்சிப் பார்த்தாள்.
அழுதுப் பார்த்தாள்.
மன்றாடிப் பார்த்தாள்.
எதற்கும் பால்ராஜ் மசியவில்லை. மனமிறங்கவில்லை. தான் பார்க்கும் மாப்பிள்ளையை பரா உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்.
பராவுக்கு இருந்த ஒரே துணை பெற்ற அன்னை ஜான்சி மட்டுமே! அன்னையிடம் முறையிட்டாள். மூத்தமகள் கொடுத்த மனக்காயத்தால் ஜான்சியால் எதையுமே சிந்திக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. கணவன் சொல்லே மந்திரம். கணவன் சொல்லே வேதவாக்கு என்று கூறி விட்டாள்.
அது என்னவோ காதலில் மட்டும் தான் ஜாதி, மதம், இனம், மொழி பாராமல் ஒரு பெண் செய்யும் தவறுக்கு மற்ற பெண்ணுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
அடுத்து ஒரு வாரத்திலையே பராவுக்கு அவசர அவசரமாக கொழும்பிலுள்ள பெரிய ஆலயத்தில் ரெஹானோடு திருமணம் நிகழ்ந்தேறியது.
ரெஹான் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றான். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவனை பராவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர்.
சொந்தபந்தங்களுக்கு ஒரு ஹோட்டலில் விருந்து வைத்து பாராவை ரெஹானின் வீட்டில் விட்ட அவளது வீட்டார் கிளம்பியுமிருந்தனர்.
ரெஹானுக்கு அம்மா மற்றும் ஒரு தங்கை. தங்கை ஷான்விக்கு திருமணமாகி ஆறு மாத குழந்தையும் இருக்கின்றான். ரெஹானும் துபாயில் இருப்பதால் அன்னையோடுதான் இருக்கின்றாள்.
அவசர அவசரமாக திருமணம் நிகழ்ந்தாலும் மணமக்களுக்கு தேவையான துணிமணிகள், நகைகள், மணமக்களின் அறைக்கு தேவையான மரச்சாமான்கள் என்று அனைத்தையுமே கொடுத்திருந்தார் பால்ராஜ்.
எதை கொடுத்தாலும் சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமா?
பராவுடைய சொந்தபந்தங்கள் தான் கிளம்பி விட்டார்கள் என்று பார்த்தால் ரெஹானுடைய சொந்தபந்தங்கள் கூட தங்காமல் கிளம்பியது பராவின் கருத்தை கவரவில்லை.
பாராவை ரெஹானின் வீட்டில் விட்டு விட்டு சென்ற அடுத்த கணம் அவன் அவனது அறைக்கு சென்று கதைவடைத்துக் கொண்டான்.
ஷான்வி குழந்தை அழுவதாக அவளது அறையில் இருக்க, ரெஹானின் அன்னை நிர்மலா தலை வலிப்பதாக அவளது அறையில் தூங்கிக் கொண்டிருக்க பரா வாசலில் அம்போ என்று விடப்பட்டாள்.
ஷான்வியின் கணவன் வின்சன்ட் அங்குதான் இருந்தான். அவனுக்கு பராவிடம் என்ன பேசுவதென்று புரியவில்லை. அறைக்குள் நுழைந்தவன் ஷான்வியிடம் “உன் அண்ணி வாசலிலேயே அமர்ந்து இருக்காங்க. உன் அண்ணன் என்னடான்னா ரூமுக்கு போய் பூட்டிக்கிட்டான். நீ போய் உன் அண்ணிய ரூமுக்கு அனுப்பி வை” என்றான்.
“இவளெல்லாம் எனக்கு அண்ணி. என் நேரம்” என்று முணுமுணுத்தவள் “ஆம்பளைங்கள எப்படியெல்லாம் மயக்கணும் என்று நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிற அவளெல்லாம் சரியா புருஷன கைக்குள்ள போட்டுக்குவா. நீங்க ஒன்னும் நீலிக்கண்ணீர் வடிக்காதீங்க” என்றாள்
“ஏய் நான் என்ன சொன்னா நீ என்ன பேசுற?”
“ஆ…ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத்துச்சாம்” கழுத்தை நொடித்தவள் குழந்தையை கவனிக்கலானாள்.
“உன் கூட மனுஷன் பேசுவானா? எக்கேடும் கெட்டுது தொலையுங்க” என்றவன் கட்டிலின் மறுபுறம் வந்து சாய்ந்துக் கொண்டான். 
இவர்கள் பேசியது அனைத்தும் வாசலில் அமர்ந்திருந்த பராவின் காதில் தெளிவாகவே விழுந்திருந்தது. தனது திருமணம் தனக்கே பேரதிர்ச்சியாக இருக்க பரா யாரையும் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. ஷான்வி தன்னிடம் முகம் கொடுத்து பேசாதது இப்பொழுதுதான் அவளது கண்ணுக்குள் வந்து நின்றது. அவள் மட்டுமா பராவின் கணவனான ரெஹான் கூட அவளோடு ஒரு வார்த்தையேனும் பேசவில்லையே.
தான் யார் என்றே தெரியாத இவர்களுக்கு தன் மீது அப்படியென்ன வன்மம்? எல்லாம் தன் அக்கா ஓடிப் போனதுதான் காரணம் என்று தெளிவாக புரிந்தது.
அதற்காக ஒருத்தி தன் கணவனையே சம்பந்தத்தப்படுத்தி பேசுவாளா? என்ன உலகம் இது? தான் அவ்வாறில்லை என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அக்கா ஒரு காரியம் செய்தால் என்றால் தந்தை இவள் ஓடி விடுவாள் என்று அவசரமாக திருமணம் செய்து அவராகவே விம்பம் உருவாக்கியதால் இவர்களை நொந்து என்ன பயன் என்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மனச்சோர்வு. நேற்றிரவு தூங்காத உடற்சோர்வு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாலோ அமர்ந்தவாக்கிளையே தூங்கியிருந்தாள்.
ரெஹானின் அன்னை நிர்மலா உலுக்கி எழுப்பவும் திடுக்குண்டு விழித்தாள்.
“போம்மா போய் முகம் கழுவிக் கொண்டு வா”
யாரென்றே தெரியாத இவர்களின் மத்தியில் தனித்து விடப்பட்ட உணர்வு. நிர்மலா என்னவெல்லாம் சொன்னாலோ அனைத்தும் செய்தாள் பரா.
இரவு உணவை அனைவரும் ஒன்றாகத்தான் அமர்ந்து உண்டனர். அவளை அலங்கரித்து ரெஹானின் அறையில் நிர்மலாவே விட்டு விட்டாள்.
முதலிரவுக்காக அறை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் பரா அறைக்குள் நுழைந்த பொழுது ஒரு விரிப்பும், தலையணையும் கீழே போடப்பட்டிருக்க, ரெஹான் கட்டிலில் தூங்கியிருந்தான்.
தன்னிடம் நெருங்காதே. உனக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என்பவனிடம் இவளாக சென்று என்ன பேசுவது?
இத்தனைக்கும் அவன் தூங்குவது பராவின் தந்தை பால்ராஜ் வாங்கி கொடுத்த கட்டிலில். வாயாடிக் பெண்ணாக இருந்திருந்தால் அதைக் காரணமாக வைத்தாவது பேசியிருப்பாள். பரா தான் அமைதியின் சொரூபமாயிர்றே. ரெஹான் வீசியிருந்த விரிப்பை விரித்து தூங்க முயன்றாள்.
உருண்டு புரண்டாலும், புது இடம், நிலத்தில் தூங்கி பழக்கமில்லாதது, மனப்போராட்டம் என்று பரா எப்பொழுது தூங்கினாலோ அவளே அறியாள்.
கதவு தட்டுப்படும் போதுதான் கண் விழித்தாள்.
கண்ணும் எரிந்தது. தலையும் வலித்தது. மெதுவாக எழுந்து கதவை திறந்தாள் நிர்மலா நின்றிருந்தாள்.
“உன் வீட்டுல நீ எப்படி வேணாலும் இருந்திருக்கலாம். இந்த வீட்டுல அஞ்சி மணிக்கெல்லாம் எந்திரிக்கணும் பூஜை செய்யணும். காலை உணவை தயாரிக்கணும்” என்று கூற, பரா தலையை அசைத்தாலே ஒழிய நேரம் சென்று எழுந்தமைக்கான எந்த விளக்கத்தையும் கொடுக்க முனைய வில்லை. பால்ராஜின் வளர்ப்பு அப்படி. அண்ணையையோ தந்தையையோ எதிர்த்துப் பேசி பழக்கமில்லை. அன்னையை விட வயதில் மூத்த பெண்மணியான நிர்மலாவை எதிர்த்துப் பேசுவாளா? அமைதியாக தலையசைத்து குளிக்கச் சென்றாள். 
செல்லும் பொழுது ஓரக்கண்ணால் ரெஹான் கட்டிலில் தூங்குகின்றானா என்று நோட்டம் விட்டாள். அவன் எப்பொழுது விழித்தானென்று தெரியவில்லை. கட்டில் விரிப்புக்கள் மடிக்கப்பட்டு அதனிடத்தில் அமர்ந்திருந்தது.
ஆகா மொத்தத்தில் எக்காரணத்தைக் கொண்டும் இவளை நெருங்க விடக் கூடாது என்று அவன் தெளிவாகத்தான் இருக்கின்றான்.
எத்தனை நாட்களுக்கு இவ்வாறு இருப்பான்? பார்க்கலாம் என்று எண்ணியவாறே பராவும் தான் தூங்கி விரிப்பை மடித்து அதன் இடத்தில் வைத்தவள் குளிக்கச் சென்றாள்.
ரெஹான் பிடிவாதத்தால் அல்ல அவளை பிடிக்காததால் தான் அவளை விட்டு விலகி இருக்கின்றான் என்று பராவுக்கு சுத்தமாக புரியவே இல்லை.
மணமேடைக்கு வந்து வாழ்த்தியவர்கள் விடைபெறும் வேளை பராவின் தந்தை பால்ராஜ் வந்து ஜெராட்டையும், பராவையும் சாப்பிட அழைத்ததும் தான் பரா இந்த உலத்துக்கே மீண்டு வந்தாள். 
பாராவை திரும்பிப் பார்த்த ஜெராட் இடது கையை அவள் முதுகு புறம் பிடிப்பது போல் வைத்து வலது கையை முன் நோக்கி வைத்து செல்லலாமா என்று கேட்டாலும் அவளை பார்க்கவே இல்லை.
இவளும் அவனை பாராமல் தலையசைத்து முன்னோக்கி நடக்க பார்ப்பவர்களுக்கு அவர்கள் ரொம்பவும் அன்னியோன்யமாக நடந்துகொள்வது போல்தான் தெரிந்தது.
உண்மையில் ஜெராட் அவளை தொடவுமில்லை. அவளோடு பேசவுவில்லை. இவளும் அவனது செய்கைக்கு சைகையால் பதில் கூறியிருந்தாலே ஒழிய வாய்மொழியால் எந்த ஒரு பதிலையும் கூறியிருக்கவில்லை. ஏன் இருவர் முகத்திலும் பெரிதாய் புன்னகையுமில்லை.
இருவருக்குமே இது மறுமணம் என்பதினால் யாருமே உணவூட்டிக்கொல்லச் சொல்லி வற்புறுத்தவில்லை. இதுவே பராவின் முதல் திருமணத்தின் பொழுது பராவுக்கு ஊட்டி விடும்படி ரெஹானை வற்புறுத்திய பொழுது அவன் முறைத்த முறைப்பு போட்டோவில் விழுந்து கன்றாவியாய் காட்ச்சியளித்தது.
இவ்வாறு பரா நடந்த ஒவ்வொரு சடங்கையும், ஒவ்வொரு நிகழ்வையும் ரெஹானோடு ஒப்பிட்டுக் கொண்டே இருந்தாள். அவள் மனம் அதை நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் அவளையும் மீறி முதல் திருமணத்தையே அவளுக்கு ஞாபகமூட்டியது.
“என்ன இது? காதலித்து மணந்தவன் விட்டுப் பிரிந்ததை போல் அவனையே நினைத்துக் கொண்டிருக்கின்றாய் என்று” இவள் மனம் இவளையே தூற்ற,
அது காதலால் அல்ல அச்சத்தால். ஏற்கனவே நடந்ததை போல் மீண்டும் நடந்து விடுமோ என்ற அச்சம். ரெஹானுக்கு தன்னை பிடிக்காது என்று தெரியாமல் திருமணம் செய்து அல்லல் பட்டேன். ஜெராட்டுக்கு பிடிக்காது என்று தெரிந்தே திருமணம் செய்கிறேன் என்ற அச்சம் என்றது அவள் ஆழ்மனம்.
“என்ன மணமேடைக்கு வந்ததிலிருந்தே ஒரு மாதிரியாக இருக்கிறீங்க?” சாப்பிட்டு விட்டு மணமேடையை நோக்கி செல்லும் வழியில் பராவின் புறம் திரும்பிக் கேட்டான் ஜெராட்.
இவளை சந்திக்க வந்த அன்று பேசியவன் இன்று இப்பொழுதுதான் முதன் முறையாக இவளிடத்தில் பேசுகின்றான். இவன் கேட்ட உடனே இவளும்தான் வாய் திறந்து கூறி விடுவாளா?
ஒன்றுமில்லையென்று தலையசைப்பிள்ளையே பதில் கூறினாள். 
“அம்மா, அப்பாவை விட்டுட்டு என் கூட இங்கிலாந்துக்கு போறத பத்தி யோசிக்கிறீங்களோ” 
சட்டென்று அவனை திரும்பிப் பார்த்த பரா எதுவும் பேசவில்லை. அப்பொழுது கூட அவளை அம்போ என்று விட்டுச் சென்ற ரெஹான் தான் அவள் கண்ணுக்குள் வந்து நின்றான்.
ரெஹான் வீட்டில் பராவின் வாழ்க்கை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை. ரெஹான் காலையில் வீட்டை விட்டு சென்றால் இரவில் தூங்கத்தான் வீடு வந்தான்.
ஷான்வி இவளிடத்தில் எந்த விதமான பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை. குழந்தையையும் இவளிடம் கொடுக்கவில்லை. இவளும் வழியச் சென்று பேச முனைய வில்லை.
நிர்மலாவும் பால்ராஜை போல் கண்டிப்பானவள். அவளிடமும் பராவால் ஒட்ட முடியவில்லை. இவளுண்டு இவள் வேலையுண்டு என்றிருக்க சமையலறை இவள் வசமானது.
திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. மாமியார் சமையலறையை தனக்கு விட்டுக் கொடுத்து விட்டாரே. அவராவது தன்னை மருமகளாக ஏற்றுக்கொண்டாரே என்று நிம்மதியடைந்தாள் பரா.
நிர்மலா ஞாயிறு தோறும் ஆலயத்துக்கு செல்வாள். கூடவே இவளும் செல்வாள். சில சமயங்களில் ஷான்வியும் குழந்தையோடு வருவாள். இருவரும் செல்லாத தினத்தில் ரெஹானை வற்புறுத்தி அழைத்து செல்வாள்.
அந்த வீட்டில் யாரும் யாருடனும் அதிகமாக பேசியோ, சிரித்துப் பேசியோ பரா பார்த்ததில்லை. அவள் வீடும் அவ்வாறான கண்டிப்பான குடும்பம் தானே அதனால் அவள் அதை பெரிதாக எண்ணியிருக்கவில்லை.
ஒருநாள் மாலை நிர்மலாவும் ரெஹானும் தோட்டத்தில் எதையோ பற்றி காரசாரமாக விவாதிப்பது பால்களினியில் காய போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த பராவின் கண்களில் விழுந்தது.
அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்று பராவின் காதுகளை எட்டவில்லை. இருந்தாலும் என்றுமில்லாமல் இருவரும் இவ்வளவு நெருக்கத்தில் பேசிக்கொள்வதே அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்க, அவர்களையே அதிசயமாக பார்த்திருந்தாள். 
இவளை கண்டு அதிர்ந்த அவர்கள் அமைதியாக அங்கிருந்து அகன்று விட்டார்கள். ஏதாவது பிரச்சினையா என்றோ? இல்லை சாதாரணமாக என்னவென்றோ பராவால் அவர்களிடத்தில் கேட்க முடியாது. திருமணமாகி ஆறு மாதங்களான நிலையிலும் ரெஹான் அவளோடு முகம் கொடுத்து பேசுவதில்லை. இதுவரையில் அவளோடு அவள் வீட்டுக்கு வரவுமில்லை. ஏதாவது காரணம் கூறிக் கொண்டு தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கின்றான்.
நிர்மலா பாராவை அதட்டவோ, அதிகாரம் செய்யவோ இல்லை. ஆனால் அவளது ஆளுமையான குரலால் இவளை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். பரவும் அவளது அடிமை போல் எதிர்த்துக் கேள்விக்கு கேளாமல் அமைதியாக மாமியார் சொல்வதை செய்து கொண்டிருந்தாள்.
பால்ராஜ் வந்து மறுவீட்டுக்கு அழைத்த பொழுது தனக்கு உடம்பு முடியவில்லை என்று ரெஹான் சில முறை கூறியிருந்தான். நிர்மலாவும் நாள் நன்றாக இல்லை. அடுத்த வாரம் பார்க்கலாம் என்று காரணம் கூறிக் கொண்டே இருந்தாள்.
பால்ராஜ் பெண்ணைக் கொடுத்து விட்டு இவர்கள் சொல்வதை கேட்க்கும் நிலையில் இருக்க, தந்தையை ஒருபெருமூச்சோடு வழியனுப்பி வைப்பாள் பரா.
“நீ சந்தோஷமாகத்தான் இருக்கின்றாயா?” என்ற கேள்வியை கூட மகளிடம் பால்ராஜால் கேட்க முடியவில்லை. எங்கே தான் கேட்கப் போய் மகள் அழுது கரைவாளோ என்ற அச்சம் அவர் மனதை இறுக்க, மாரடைப்பு வந்து மருத்துமனையில் தஞ்சமடைந்தார்.
தந்தைக்கு உடம்பு முடியாத சூழ்நிலையில் பரா தந்தையோடு இருக்க வேண்டும் என்று நிர்மலாவிடம் கூற, அவளை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மகனை ஏவினாள் நிர்மலா.  
பால்ராஜ் உடம்பு முடியாமல் இருக்கும் நேரத்தில் தான் அங்கு சென்று இருக்க முடியாது என்று மறுத்த ரெஹான் பரா மட்டும் செல்ல வண்டி ஏற்பாடு செய்திருந்தான். அவன் வராவிட்டால் என்ன தந்தையை காணச் செல்ல வண்டி ஏற்பாடு செய்து தந்து விட்டானே என்ற நிம்மதியில் பரா அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்.
பால்ராஜ் மருத்துவமனையில் இருக்கும் பொழுது நிர்மலா ஷான்வியோடு வந்து பார்த்து விட்டு சென்றாள். அக்கணம் பரா வீட்டில் இருந்தாள். ஜான்சியிடம் பால்ராஜ் முற்றாக குணமடைந்த பின் பரா வந்தால் போதும் என்று விட்டு சென்றிருந்தாள் நிர்மலா.
மாமனார் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் நிலையில் கூட மருமகனான ரெஹான் ஒரு எட்டு வந்து ஏன் பார்க்கவில்லை என்ற கேள்வி ஜான்சி நிர்மலாவை பார்த்துக் கேட்டிருக்க வேண்டும். அவளிருந்த மனநிலையில் எதையுமே சிந்திக்க முடியாததால் அழுதவாறே பால்ராஜை பற்றி மட்டுமே பேசி அவர்களை அனுப்பி வைத்திருந்தாள். 
பால்ராஜ் முற்றாக குணமடைந்து வீடு செல்ல இரண்டு வாரங்கள் எடுத்திருந்தாலும் பரா மாமியார் வீடு திரும்பவில்லை. மேலும் இரண்டு வாரங்கள் வீட்டில் தங்கி தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தங்கி விட்டாள்.
நிர்மலா வீட்டிலிருந்து யாருமே அவளை அழைத்து அலைபேசி வழியில் கூட பேசவில்லை. பராவுக்கு அது மனதுக்குள் உறுத்தினாலும் நிர்மலாவை தவிர யாரும் அவளோடு பேசப்போவதில்லை என்பதனால் போனில் என்ன பேச இருக்கு என்று அவளும் பேசாமல் இருக்கின்றாள் எண்ணிக் கொண்டாள்.
இரண்டு வாரம் தந்தையை பார்த்துக்கொள்ள வீடு வந்தவள் ஒரு மாதம் வீட்டில் இருக்கவும் தான் ஜான்சிக்கு வாழ வேண்டிய மகள் மருமகனின் வீடு செல்லாதது புத்தியில் உரைத்தது.
பால்ராஜும் உடம்பு தேறி நடக்கவே ஆரம்பித்திருந்தால் ஜான்சி கணவனிடம் பாராவை நாமளே சென்று ரெஹானின் வீட்டில் விட்டுட்டு வரலாம் என்று கூற பால்ராஜும் சரியென்றார்.
நிர்மலாவும் ஷான்வியும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டு சென்றதோடு சரி, அலைபேசி அழைப்பாவது விடுக்காதது ஜான்சிக்கு உறுத்தியது. தங்களது பெண்ணுடைய வாழ்க்கை. அவர்கள் வந்து அழைத்து செல்லும் வரையில் காத்திருக்கத்தான் முடியுமா? மறுநாள் பாராவை அழைத்துக் கொண்டு ஜான்சியும், பால்ராஜும் நிர்மலாவின் வீட்டுக்கு கிளம்பியிருந்தனர்.
இவர்களை கண்டு அதிர்ந்தாலும் நிர்மலா சட்டென்று இன்முகமாக வரவேற்றாள் நிர்மலா.
“மாப்புள வீட்டுல இல்லையா?” பால்ராஜ் கேட்க, நிர்மலா என்ன கூறுவதென்று யோசிக்கையில்,
“அண்ணா வெளிய போய் இருக்கான். வர லேட் ஆகும்” என்றாள்  ஷான்வி.
சரியென்று ஜான்சியும், பால்ராஜும் கிளம்பி விட்டனர்.
இரவுணவு வேளையாகியும் ரெஹான் வீடு வந்திருக்கவில்லை. ஒருநாளும் இவ்வளவு தாமதமாக அவன் எங்கும் சென்றிருக்காததால் பராவின் உள்ளுக்குள் சிறு அச்சமும், பதட்டமும் உண்டானாலும், நிர்மலாவிடம் அவன் எங்கே சென்றிருக்கின்றான் என்று கேட்கத்தான் தயக்கமாக இருந்தது.
அவன் தான் ஒதுங்கியிருக்கின்றான். ஒதுங்கிப் போகின்றான். தானாவது வழியச் சென்று பேசிப் பழகி இருக்க வேண்டுமோ என்று தாமதமாக உணர்ந்தாள் பரா.

Advertisement