Advertisement

அத்தியாயம் 22
இங்கே அறைக்குள் வந்த ஜெராட் குளியலறை கதவை பூட்ட முனைய “எதுக்கு கதவை பூட்டுற?  திறந்து வை” என்றான் வில்லியம்.
“உன் இஷ்டம். அந்த பக்கம் திரும்பு” என்ற ஜெராட் அவன் திரும்பும் வரை அப்படியே நின்றான்.
“ஆச்சா… ஆச்சா…” என்று வில்லியம் கேட்டுக் கொண்டே இருக்க, “ம்ம்.. என்ற ஜெராடின் சத்தம் சட்டென்று நின்றது.
திரும்பி பார்த்த வில்லியமுக்கு அதிர்ச்சி. குளியலறையில் ஜெராடை காணவில்லை. உள்ளே நுழைந்த பின்தான் அந்த பக்கமாக ஒரு கதவிருப்பது தெரிந்தது. பெட்ரிக்கும், தாமஸும் தானே குழந்தைகளையும், பெரியவர்களையும் தேடி அறைக்கு வந்தது. வில்லியம் ஒரு அறைக்கு பல கதவுகள் இருப்பது இப்பொழுதுதான் அறிந்து கொண்டான். கதவை திறந்தால் குழந்தைகளின் அறை தெரிய, திறந்துப் பார்த்தான் ஜெராட் உள்ளே இருப்பது போல் தெரியவில்லை.
இந்த பக்கம் வந்திருப்பானோ என்று ஜெராடின் அறை பக்கம் வந்தால் “எங்க போயிட்டு வர?” என்று ஜெராட் இவனை பார்த்துக் கேட்டான்.
“நீ எங்க போன?” குழம்பினான் வில்லியம்.
மர்மப் புன்னகையோடு “நான் எங்க போக? ஷவர் கேட்டிங்கு உள்ள தானே இருந்தேன். ஆம்பளையானாலும் நீ பார்க்கும் போது நான் எப்படி போறது?” 
“ஒருவேளை நாமதான் கவனிக்கலையோ” குழப்பமாக ஜெராடை ஏறிட்டவன் “சரி நட” என்று அவனை துப்பாக்கி முனையில் வாசலுக்கு தள்ளிச் சென்றான்.
“ஐவியின் ஆவி தன்மேல் புகுந்தது என்று நாடகமாடி இவனுங்கள திசை திருப்பலாம் என்றும், பயமுறுத்தலாம் என்றும் பார்த்தா பயபுள்ளைங்க சிக்க மாட்டேங்குறானுகளே. ஜெராட் போன வேலைய சரியா முடிச்சிட்டாரா தெரியல” மனதுக்குள் புலம்பலானாள் பரா.
இந்த ஐவரும் இவர்களை கொல்வதற்காக திட்டமிட்டால் இவர்களை தனியாக பிரித்து அடித்து கட்டிப் போட்டு போலீசை அழைக்க வேண்டும் என்று எண்ணினாள் பரா. அதற்காக ஐவியின் ஆவி தன்னுள் புகுந்ததாக அன்றோவிடம் கதை சொன்னாள்.
அதை அன்றோ நம்பி விட்டால் போதும். அவனை நம்ப விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான் மைக்கல்.
பராவுக்கு வேறு வழியில்லை. போலீஸ் இதோ இப்பொழுது வந்து விடுவார்கள் என்று ஜெராட் கூறவும் நிம்மதியடைந்த அவளது மனம் போலீசார் வர மாட்டார்கள் என்று மைக்கல் கூறியதும் என்ன செய்வது என்று யோசிக்கலானது.
அப்பொழுதுதான் ஐவியின் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த பொழுது வாஷ்ரூம் போக வேண்டும் எண்டு வான்யாவிடம் கூறிய போது அவள் பராவை அன்றோவின் அறைக்கு அழைத்து சென்றது ஞாபகத்தில் வந்தது.
பரா உள்ளே சென்ற பொழுது அது அன்றோவின் அறை என்று அவளுக்குத் தெரியவில்லை. சுவர் நிறைய அன்றோ மற்றும் ஐவியின் குழந்தை பருவ புகைப்படங்கள் தான் நிறைந்திருந்தன.
“யார் இந்த பசங்க?” என்று பார்த்தவளுக்கு அங்கிருந்த மேசையில் ஐவியும், அன்றோவும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் கண்ணில் விழுந்தது. அதை கையில் எடுத்துக் பார்கலானாள்.
ஐவியை பராவுக்கு யார் என்று தெரியும். “இந்த பையன் யார்?” அந்த நீல நிறக் கண்களை வைத்தே அது ஐவியின் தம்பியாகத்தான் இருக்க வேண்டும். ஐவியின் அன்னை லூசியின் சாயலில் வேறு இருக்கின்றான் என்று எண்ணியவள் புகைப்படத்தை மேசையில் இருந்த இடத்திலையே வைத்து விட்டு புகைப்படத்தையே பார்த்திருந்தாள்.  அழகோவியமாக இருந்த அவர்களின் மீதிருந்து அவளால் கண்களை அகற்ற முடியவில்லை. 
ஐவி ஒரு மரக்கட்டைக்கு மேல் அமர்ந்திருக்க, அன்றோ அவள் கழுத்தை பின்னால் இருந்து கட்டிக் கொண்டிருந்தான். அவனது சிரிப்பும், அக்காவை கட்டியணைத்திருந்த விதமும், அவள் மீது அவன் வைத்திருந்த அளவில்லாத அன்பை எடுத்துக் கூறியதோடு எந்த சூழ்நிலையிலும் நான் உன்னை காப்பேன் என்று உறுதிமொழியளிப்பதும் போலிருந்தது. அதை பார்த்து புன்னகைத்த பராவுக்கு தனக்கொரு சகோதரன் இல்லையே என்று கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.
ஐவிக்கு ஒரு தம்பி இருப்பது பராவுக்குத் தெரியாது. இறுதிச் சடங்கில் அவனை காணவில்லை. ஏன் அவன் வரவில்லை என்ற சிந்தனை அவள் எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் பார்வை மேசையின் பக்கவாட்டில் வரைந்திருந்த ஓவியத்தின் மீது விழுந்தது.
பேனாவால் டாட்டூ போல் வித்தியாசமாக வரையப்பட்டிருந்தாலும் கண்ணை கவரவே பரா அதை தடவிப் பார்த்தாள். அப்பொழுது வெளியே யாரோ பேசும் குரல் கேட்டு திடுக்கிட்டவள் கையை சற்று அவ்விடத்தில் அமிழ்த்திருக்க, அது ஒரு இரகசிய இழுப்பறை போலும் திறந்து கொண்டிருந்தது.
அதை ஆச்சரியத்தோடு பார்த்த பரா சற்றும் யோசிக்காமல் திறந்து விட்டாள்.
“எங்க வந்திருக்க? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? முதல்ல எதுக்காக வந்திருக்கோம் என்று நினைவிருக்கா?” அவள் மனசாட்ச்சி கேள்வி எழுப்ப இழுப்பறையை மூடலாமா? என்று யோசித்தவள் மனசாட்ச்சியை இழுத்து மூடிவிட்டு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.
ஒரு டயரிதான் இருந்தது. “இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?” என்று பார்த்தவள் “இத இவன் பொக்கிஷமா எதுக்கு பத்திரப்படுத்தி வச்சிருக்கான்? அப்படி என்ன இருக்கும்?” என்ற கேள்வி பராவின் மனதுக்குள் எழுந்தது.
“அடுத்தவங்க பெர்சனல் படிக்கிறதே தப்பு. இவன் வேற ஐவியோட தம்பி. அவன் டயரிய போய் படிக்கணும் என்று நினைக்கிறியே” மனசாட்ச்சி மீண்டும் தூற்ற, அதை வைக்கப்போனவள் அதில் ஐவியின் பெயரை பார்த்து “இது ஐவியோட டயறியா? அக்கா டயரிய இவன் எதுக்கு பத்திரமா எடுத்து வச்சிருக்கான்?” புரியாமல் யோசித்தவள் ஒருவேளை ஐவியை பற்றி ஏதாவது எழுதியிருந்தால் ஜெராடை சமாளிக்க அது தனக்கு பெரிதும் உதவும் என்றெண்ணினாள். இப்பொழுது படிக்க நேரமில்லாததால் அதை கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். 
ஜெராட் தங்களை விட்டு விலகிப் போவதால் டயரியை படித்து ஐவியை பற்றி மேலதிகமாக ஏதாவது தகவல் தெரிந்துகொள்ளலாம் என்று டயரியை திறந்தாள்.
ஆனால் அது ஐவி அன்றோவுக்கு கொடுத்த பரிசு போலும் தன்னுடைய பெயரை போட்டு கொடுத்திருக்கிறாள். அதுவும் ரொம்ப பழைய டயறியாக இருக்க வேண்டும். சின்ன வயதில் அம்மா, அடித்தது, அப்பா அடித்தது, ஸ்கூல் டீச்சர் திட்டியது என்றெல்லாம் எழுதியிருக்க, மை டீபாஸ்ட் சீக்ரட் என்று எதோ கிறுக்கியிருப்பதை பார்த்து வாசிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தாள்.
வேண்டாமென்று முடிவெடுத்தவள் டயரியை மூடியும் வைத்திருந்தாள். தண்ணீர் அருந்தி விட்டு கிளாஸை வைக்கும் பொழுது டயரி விழுந்து அந்த பக்கமே திறந்துகொள்ள, பராவின் கண்கள் தானாக வாசிக்க ஆரம்பிக்க, வாயோ “அடப்பாவி” என்றது.
இவ்வாறுதான் அன்றோவின் இரகசியம் பரா அறிந்து கொண்டாள்.
கைக்கட்டை கழற்ற முயன்ற பராவுக்கு கயிற்றின் நுனி பிடிபடவே மெதுவாக இழுத்துப் பார்க்க கட்டு சட்டென்று அவிழ்ந்தது.
கயிறை முடிச்சு விடும் வகைகளில் பலவிதம் இருக்க, சிலது முடிச்சை இலகுவாக அவிக்கக் கூடிய வகையில் போடக் கூடிய முடிச்சாக இருக்கும். வில்லியம்தானே அவள் கைக்கட்டை கட்டியது. அவசரத்தில் அவ்வாறான ஒரு முடிச்சை தான் அவன் போட்டிருக்கிறான் போலும், அதனால்தான் கட்டு அவழிந்திருந்தது.
ஜெராடுடைய கயிற்றின் நுனியையும் பிடித்து மெதுவாக இழுத்த பரா சட்டென்று சோபாவில் அமர்ந்தாள்.
எத்தனை சினிமா பார்த்திருப்பாள் ஆவி உடலில் புகுந்தது போல் கொஞ்சம் குரலை மாற்றி நடிக்க முடியாதா என்று தான் முயற்சி செய்தாள்.
ஆனால் சினிமாவில் வருவது போல் ஆவி உடம்பில் புகுந்தால் முகத்தில் வித்தியாசமான மேக்கப் போடுவார்கள். அதை தன்னுடைய முகத்தில் கொண்டு வர முடியாது. பறக்கவும் முடியாது. கைகள் முறுக்கவும் முடியாது. குறைந்தபட்சம் கூந்தலை கூட காற்றில் பறக்காது இதெல்லாம் இல்லாமல் இவனுங்க ஆவி புகுந்து இருக்கும் என்று நம்பமாட்டானுங்களே என்று  எண்ணிய பரா அமைதியாக சோபாவில் அமர்ந்து பேசலானாள்.
வில்லியம் கட்டிய கைக்கட்டு எவ்வாறு அவிழ்ந்தது என்று ஜெராட் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளை, மாளிகையை ஐவிக்காக வாங்கியதாக கூறி பரா அதிர்ச்சி கொடுக்க, உண்மையிலயே ஐவியின் ஆவி பராவின் உடம்பில் புகுந்து விட்டதாக ஜெராடே நம்பி விட்டான்,
ஜெராட் பெரிய ஹீரோ எல்லாம் கிடையாதே துப்பாக்கியோடு இருக்கும் ஐந்து பேரை நொடியில் அடித்துப் போட்டு சமாளிக்க, அவனை இழுத்து சோபாவில் அமர்த்தி கட்டிக் கொண்டு “மாளிகையை ஐவிக்காக வாங்கினது எப்படி என்று அப்பொறம் சொல்லுறேன் முதல்ல ரூமுக்கு போய் எமெர்ஜென்சி ஸ்விட்ச்சை ஆன் பண்ணுங்க” என்று தமிழில் கிசுகிசுத்தாள்.
இருவரினதும் கைக்கட்டு அவிழ்ந்ததே ஐவரையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்திருந்தது என்பது தான் உண்மை. அவர்கள் அது எப்படி நிகழ்ந்தது என்ற அதிர்ச்சியில் இருந்தனர். 
மாளிகையை ஐவிக்காக வாங்கியதை ஜெராட் பராவிடம் கூறியிருக்கவே இல்லையே. பரா அதை பற்றி பேசியதும் ஐவியின் ஆவி பராவின் உடம்பில் ஏறிவிட்டது என்று அவனும் ஒரு நொடி நம்பினான். அவள் அவனை போய் எமர்ஜென்சி ஸ்விட்ச்சை ஆன் செய்ய கூறியதும் தான் அப்படியொரு இருப்பதே ஞாபகம் வந்தது. 
பரா நடிப்பதை புரிந்து கொண்டவன் சிறு நம்பைக்கை உருவாக ஒண்ணுக்கு வருவதாக சிறுபிள்ளை தனமாக ஒரு காரணம் கூறி அறைக்கு சென்று எமெர்ஜென்சி ஸ்விட்ச்சை ஆன் செய்தான். 
மாளிகை பழமை வாந்ததாக இருந்தாலும் டெக்னோலிஜியில் புதியதாக இருக்க வேண்டும் என்று பரா கூறியிருந்ததை கவனத்தில் கொண்டு ஜெராட் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துதான் வடிவமைத்தான்.
“எல்லாம் சரிதாங்க. எப்படியோ கொள்ளையடிக்க திருடனுங்க புகுந்துட்டானுங்கனு வைங்க, போலீசுக்கு போன் பண்ணவும், முடியாது, நம்மளாலையும் வெளிய போக முடியாது என்றா என்ன பண்ணுறது?”
இப்படியெல்லாம் நடக்கப் போகிறது என்றெண்ணி பரா கேட்டிருக்கவில்லை. அன்று அவளுக்குத் தோன்றியதை தான் கேட்டிருந்தாள்.
“இது ஒரு நல்ல கேள்வி” என்றவன் பாதுகாப்பை மேற்கொள்ளும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு மாளிகையின் முக்கியமான அறைகளில் எமர்ஜென்சி ஸ்விட்ச்களை பொறுத்தினான். அதை அழுத்தினால் போதும் தகவல் காவல் நிலையத்துக்கு செல்லும்.
தகவல் சென்றதற்காக அவர்கள் உடனே வந்து விடமாட்டார்கள். குழந்தைகள் அறியாமல் ஸ்விட்ச்சை அழுத்தி விட்டார்களா என்று அலைபேசி அழைப்பு விடுத்து கேட்பார்கள்.
இவர்கள்தான் தொலைபேசி வயரையும் பிடுங்கி எறிந்து விட்டு, அலைபேசி சிக்னலையும் முடக்கி விட்டிருந்தார்களே போலீசார் அலைபேசி அழைப்பு விடுக்கும் பொழுது யாருக்குமே அழைப்பு செல்லவில்லையென்றால் அவர்கள் மாளிகையை நோக்கி படையெடுத்து வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஜெராடுக்கு வந்தது.
போலீசார் வருவத்துக்குள் இவர்கள் பரா நடிப்பதை கண்டு பிடிக்காமல் இருக்க வேண்டும். அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று அவசரமாக வாசலுக்கு வந்தான்.  
“இதோ இவனும் வந்துட்டான். என்னடா உன் கடைசி ஆசை நிறைவேறியாச்சா” ஜெராடை பார்த்துக் கேட்டவன் “சீக்கிரமாக ரெண்டு பேரையும் முடிச்சிட்டு கிளம்பலாம்” அன்றோவை பார்த்துக் கூறினான் மைக்கல்.
“இல்ல இவள கொல்ல முடியாது. இவ உடம்புல என் அக்கா இருக்கா” பைத்தியம் பிடித்தவன் போல் கத்தினான் அன்றோ.
“டேய் முட்டாளா நீ. இவ நடிக்கிறாடா…. அது கூட புரியாம” கடுப்பின் உச்சத்தில் கத்திய மைக்கல் அன்றோவை அடிக்கவே பாய்ந்தான். 
“டேய் நிறுத்துங்கடா… வந்த வேலைய பார்க்காம இப்போ எதுக்காக சண்டை போடுறீங்க?” பேட்ரிக் அவர்களை சமாதானப்படுத்த முயன்றான். 
“டேய் என்னடா பிரச்சினை?” வில்லியம் கேட்கும் பொழுதே பராவின் அருகே அமர்ந்த ஜெராட் கண்களாளேயே தான் சென்ற காரியத்தை சரியாக செய்து விட்டதாக கூறினான்.
“இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு” என்ற மைக்கல் துப்பாக்கியை ஜெராடின் புறம் நீட்டி சுட முயல அன்றோ குறுக்கே வந்தான்.
“என்ன உன் அக்கா அமைதியா இருக்காங்க. அவ புருஷனுக்கு ஒன்னுனா தான் வருவாளா? தம்பிக்கு ஒன்னுனா வர மாட்டாளா? நீயும் இவங்க கூடயே சாவுடா….” என்று மைக்கல் அன்றோவை அடித்து துப்பாக்கியை அன்றோவின் தலையில் வைத்திருந்தான்.
“ஆமாடா… இவனையும் இவங்க கூடவே முடிச்சிட்டு கிளம்பிடலாம்” என்றான் வில்லியம்.
இதை ஜெராடும், பராவும் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவர்களுக்குள் அடித்துக் கொண்டாலும் அவர்களின் ஒருவனையே கொல்லத் துணிவார்கள் என்று யோசித்துக் கூட பார்க்கவில்லை.
“தாமஸ்? பேட்ரிக்? நீங்க என்ன சொல்லுறீங்க?” என் பேச்சை மீறுவியா? என்பது போல்தான் மைக்கலின் பேச்சின் தோரணை இருந்தது.
மறுத்தால் இதே முடிவுதான் தங்களுக்கும் என்று அறிந்த தாமஸும், பெட்ரிக்கும் “நீ சொல்லுறது தான் மச்சான்” என்றனர்.
“டேய்  நான் உன் நண்பன்டா. என்னையே கொல்ல பாக்குறியா?” அதிர்ச்சியின் உச்சத்தில் கத்தினான் அன்றோ.
“நண்பனா? நீ பச்சை துரோகி… நம்ம கொள்ளை என்ன? அத மறந்து அக்கா வந்தாளாம். அவளை வாழ வைக்க போறானாம். சாவுடா…” அன்றோவை துப்பாக்கி முனையால் அடித்தான்.
பராவின் உடல் ஆட்டம் கண்டது.
“என்னத்தான் கொல்ல வந்த என்ன கொல்லுடா…” ஜெராடுக்கு வேறு வழி தெரியவில்லை. ஐவியைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அன்றோ அவள் தம்பி அந்த குடும்பத்தில் அவனாவது உயிரோடு இருக்க வேண்டுமல்லவா.
“நீ கடைசியா சாக போறவாண்டா… முதல்ல உன் பொண்டாட்டி அவ சாகுறத நீங்க ரெண்டு பேரும் கண்குளிர பாருங்க” என்ற மைக்கல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பராவை சுட்டிருந்தான்.
வேட்டை துப்பாக்கி தூர இருந்து சுட்டால் பொத்தலாகும், அருகிலிருந்து சுட்டால் குண்டு துளைத்து மறுபக்கமாக வந்து விழுந்திருக்கும்.  
     
அவ்வளவு அருகில் இருந்து நெஞ்சை குறிபார்த்து சுட்ட பொழுதிலும் குண்டு பராவை துளைக்காமல் அந்தரத்தில் நின்று கீழே விழுந்தது.
அதை பார்த்து அனைவருமே திகைத்து நிற்க, பராவின் கூந்தல் காற்றில் பறந்து.
தன் அருகில் எதோ ஒன்று இருப்பதை நன்கு உணர்ந்தவளுக்கு அது என்னவென்றுதான் தெரியவில்லை.
அடுத்த கணம் மைக்கலின் கன்னத்தில் பல அறைகளை தாறுமாறாக விழுந்தன. அவன் யாரை சுட? கண்களுக்குத் தெரியாத ஐவியின் ஆவியையா? அவனுக்கு விழுந்த அடியிலையே மற்ற மூவரும் தலைதெறிக்க வாசற்கதவை நோக்கி ஓட்டமெடுக்க மூவருமே அந்தரத்தில் பறந்ததோடு கையிலிருந்த துப்பாக்கிகளும் கீழே விழுந்தன.
என்ன நடந்க்கிறது என்று யாருக்குமே புரியவில்லை. மைக்கல் அதிர்ந்து சிலையாகி நிற்க அவனது துப்பாக்கியும் பறிக்கப்பட்டு அவனும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தரத்தில் மிதந்தான்.
“அக்கா… நீதானே அது? எங்க இருக்க? என் கண்ணு முன்னால வா… நான் உன்ன பார்க்கணும்” கதறினான் அன்றோ.
“ஐவி… எங்க இருக்க?” நாளா பக்கமும் ஜெராட் தேட,
“நான் இங்க இருக்கேன்” என்று ஐவியின் குரல் கேட்டது.
ஜெராடும், அன்றோவும் திரும்பி பார்த்த போது பரா அந்தரத்தில் மிதந்துக் கொண்டிருந்தாள்.
“பரா….” ஜெராட் அதிர்ச்சியில் கத்த…
“கொஞ்சம் நேரத்துக்கு நான் அவ உடம்ப எடுத்துக்கிட்டேன் ஜெராட். ஒரு மனித உடம்பு இல்லாம என்னால உங்க கூட கமியுனிகேட் பண்ண முடியாது” என்ற ஐவி மெதுவாக தரையிறங்கினாள்.
“ஐவி…” குரல் கமற அவளை நெருங்கினான் ஜெராட்.
தன்னை நெருங்கிய ஜெராடாது தடுத்தவள் அன்றோவின் கன்னத்தில் “பளார்” என்று அறைந்தாள்.
“அக்கா…” அடியை கூட பொருட்படுத்தாது ஐவியை தேடினான் அன்றோ.  
“என்ன காரியம்டா… பண்ண பார்த்தாய்? நான் செத்ததுக்கு எந்த விதத்துலையும் ஜெராட் காரணமில்ல. எந்த வகைலயும் அவன் பாதிப்படைய கூடாது என்று நான் அவனை விட்டு விலகித்தான் போனேன். நீ அவனையே குடும்பத்தோட கொல்ல திட்டம் போடுறியா? எல்லாத்தையும் பார்த்துகிட்டு இவ்வளவு நேரம் தடுக்காம எதுக்காக அமைதியாக நின்னேனு தெரியுமா? உன் நண்பர்களோடு சுயரூபம் உனக்குத் தெரியணும் என்றுதான்.
நீ யாரை கொல்ல வந்தியோ அவரே எனக்காக உன்ன காப்பாத்தணும் என்று நினைச்சாரு”
“என்ன மன்னிச்சுடுகா… எல்லாம் என் தப்புதான். யாரு நல்லவங்க, யாரு கெட்டுவாங்கனு தெரியாம புத்தி கெட்டு பண்ணிட்டேன்” பராவின் காலடியில் விழுந்து கதறினான் அன்றோ.
எத்தனை வருடங்கள் ஐவியோடு வாழ்ந்திருப்பான். அவள் எவ்வாறு பேசுவாள்? என்று அவனுக்குத் தெரியாதா?  ஐவி பேசப் பேச தான் காண்பது கனவா? என்று ஜெராட் கண்ணீரோடு பராவை பார்த்திருந்தான்.
“என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்ன ஆகிடப் போகுது? ஜெராட் கிட்ட மன்னிப்பு கேளு. இனிமேல் இந்த தப்ப பண்ண மாட்டேன்னு சொல்லு. திருந்து” அடிக்குரலில் ஆவேசமானவள் சட்டென்று அமைதியானாள்.
“ஐவி…” கண்கள் கலங்க ஜெராட் அவளை அழைத்தான்.
அவனை திரும்பிப் பாராமலையே “நான் உங்களுக்கு பண்ணதுக்கெல்லாமே சாரி கேட்க மாட்டேன் ஜெராட். எல்லாம் நான் தெரிஞ்சே பண்ண தப்புக்கள் தான். அதுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
“நான் உன்ன மன்னிக்கவும் மாட்டேன்” என்ற ஜெராட் அவளை இறுக கட்டிக் கொண்டான்.
“ஏன்டி என்ன விட்டு போன? உனக்கு இப்படியொரு கொடிய நோய் இருக்குறத ஏன் என்கிட்டே சொல்லாம விட்ட? நானும் உன் கூடவே வந்திருப்பேனே” ஜெராடால் அழுகையை அடக்க முடியவில்லை.
“என் டைம் முடிஞ்சி போச்சு ஜெராட். யு ஹவ் அ பியுட்டிபுல் பமிலி. பரா இஸ் அ லவ்லி சோல். நீ அவளை லவ் பண்ணலன்னு சொல்லு நான் அவ உடம்புலையே இருந்துடுறேன்” என்று ஜெராடை பார்த்தாள். 
“நோ….” சற்றும் யோசிக்காமல் ஜெராடின் வாயிலிருந்து பதில் வந்திருக்க, பரா ஜெராடின் கைகளில் மயங்கி சரிந்திருந்தாள்.
“ஐவி… ஐவி… என்ன ஆச்சு” ஜெராட் பராவின் கன்னத்தை தட்ட அன்றோவும் பராவின் அருகில் வந்திருந்தான்.
பராவின் உடலில் இருந்து பிரிந்த ஐவியின் ஆத்மா அவர்களை பார்த்து புன்னகைத்தது.
ஐவி நினைத்திருந்தால் என்றோ பராவின் உடலை எடுத்துக் கொண்டு ஜெராடோடு வாழ்ந்திருக்கலாம். பராவும் தன்னை போலவே நல்லவள் ஜெராட் அவளை விரும்புகிறான் என்று அறிந்து கொண்ட பின் அவர்களின் வாழ்க்கையில் ஆன்மாவான தான் குறிக்கிடக் கூடாது என்று தான் எந்த தொல்லையும் செய்யாமல் மாளிகைக்கு அவர்கள் வந்த நாளிலிருந்து அவர்களை பார்த்திருந்தாள்.
ஒருவர் மீது வைத்த காதல் என்றுமே மாறாது. அதை பராவும் நன்கு அறிந்திருந்தாள். ஐவியும் நன்கு உணர்ந்திருந்தாள்.
தான் தவறு செய்தாலும் அது ஜெராடின் நன்மைக்காக என்று அவனுக்கு தெரிந்ததால் கோபத்தில் தன்னை மன்னிக்க மாட்டேன் என்று கூறினாலும் அவன் தன் மீது வைத்த காதல் மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அந்த அன்பு ஒன்றே போதும்.
தன் மீது ஜெராட் வைத்திருக்கும் காதலின் ஆழம் அதிகமா? பராவின் மீது வைத்திருக்கும் காதலின் ஆழம் அதிகமா? என்றெல்லாம் ஆராச்சி செய்ய ஐவி நினைத்து பராவின் உடம்பில் தங்கி விடவா என்று ஜெராடிடம் கேட்கவில்லை.
ஐவி ஜெராடின் இறந்தகாலம். பரா நிகழ்காலம். அது அவனுக்கு ஞாபகம் இருந்தாலும், ஐவியின் மீதிருந்த காதலால் அக்கணம் மறந்து போய் இருக்க, ஐவி ஞாபகப்படுத்தினாள் அவ்வளவுதான்.
“பரா… பரா…” கண்ணை திற” சற்று முன் ஐவி என்று அழைத்த ஜெராட் தான் பராவுக்கு என்ன ஆச்சோ என்று பதறிக் கொண்டிருந்தான்.
வாயிலுக்கு வந்த போலீஸார் உள்ளே வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அனைத்தும் நிகழ்ந்திருக்க, போலீஸார் மாளிகையின் உள்ளே அடியெடுத்த மறுகணம் அந்தரத்தில் மிதந்த அனைவருமே கீழே விழுந்திருந்தனர்.
போலீஸார் அனைவரையும் கைது செய்ய, அன்றோ அவனாகவே தங்களது திட்டத்தை வாக்குமூலம் கொடுத்தான்.
ஜெராடை குடும்பத்தோடு கொலை செய்து விட்டு கொள்ளையடுத்து விட்டு சென்றது போல் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மைகளில்ன் திட்டம் தவிடு பொடியானத்தில் தப்பியோடக் கூட தோன்றாமல் ஐவியின் ஆவியிடம் அறை வாக்கியத்தில் பிரம்மை பிடித்தவன் போல் அங்கேயே நின்றிருக்க, மற்றவர்களின் நிலையம் அதுவே தான்.
ஜெராட் அவசரமாக சென்றது வேலையாட்களின் நிலை என்னவென்று காணத்தான்.
தலைமை வேலையாள் ஜான் உட்பட எல்லா வேலையாட்களையும் கட்டிப் போட்டிருந்தாலும், கறுப்பினத்தவரான ஹென்றி என்பவரை மைக்கல் பலமாகி தாக்கி இருந்ததில் சுயநினைவே இல்லாமல் இருந்தார். ஜான் கூட வெள்ளையர் கிடையாது. பிரெஞ்சுக்காரர். அது தெரியாமல் தோல் நிறம் வெள்ளை என்பதால் அவரை விட்டிருந்தான் முட்டாள் மைக்கல்.
வாயிலில் காவல் இருக்கும் காவலாளியின் அறையில் மயங்கி இருந்த வேலையாளுக்கு தலையில் பலத்த காயம். அவரையும் ஹென்றியையும்  உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான் ஜெராட்.
ஹென்றியை தான் அருகிலையே இருந்து பார்த்துக் கொள்வதாக ஜெராடுக்கு வாக்கு கொடுத்தார் ஜான்.
மதம், இனம், மொழி என்று எல்லா நாடுகளிலும் பிரிவினை பார்ப்போருக்கு மத்தியில்தான் நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். நல்லவரா? கெட்டவரா? என்று பார்த்து யாரும் யாருக்கும் உதவி செய்வதுமில்லை.
  
எந்தத் தாயும் தனக்கு பிறந்த குழந்தையென்றாலும், தான் வளர்க்கும் குழந்தையென்றாலும் தப்பாக வளர்க்க நினைக்க மாட்டாள். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவளை அவ்வாறு மாற்றியிருக்கலாம். அல்லது குழந்தை வளரும் பொழுது அவ்வாறு மாறியிருக்கலாம்.
அந்த சந்தர்ப்பம், அந்த சூழ்நிலையின் போது நாம் எடுக்கும் முடிவு கூட நம்மளை நல்லவனா? கெட்டவனா? மாத்திடும் என்றால் முடிவெடுக்குற நாமதான் சரியான முடிவை எடுத்து சரியான பாதையில் போக வேண்டும்.  

Advertisement