Advertisement

அத்தியாயம் 21
கிழக்கு பக்கமாக தீப்பற்றிக் கொண்டிருந்த இரண்டு ஜெனரேட்டர்களையும் வேலையாட்கள் அனைத்த பொழுதுதான் ஜெராட் அங்கு வந்தான்.
அப்பொழுது மேற்கு பக்கமாக உள்ள இரண்டு ஜெனரேட்டர்களும் தீப்பற்றுவதாக ஒரு வேலையாள் கத்தியவாறே வந்தார்.
கிழக்கு பக்கமாக இருக்கும் இரண்டு ஜெனரேட்டரும் பக்கத்தில் இருந்ததால் எதிர்பாராத விதமாக ஒன்றில் தீப்பற்ற மற்றத்தில் தீ பற்றியதாக எடுத்துக் கொண்டாலும், மேற்கு பக்கமாக இருக்கும் இரண்டு ஜெனரேட்டர்களும் தானாக தீப்பற்றியிருக்க முடியாது. யாரோ தான் தீ வைத்திருக்க வேண்டும் என்று ஜெராடுக்கு சட்டென்று புரிந்து போனது.
தீயை அணைக்க வேலையாட்கள் ஓடும் பொழுதே யாரோ தீ வைத்திருக்கிறார்கள் கவனம் என்றவன் அவசர எண்ணுக்கு அழைக்க அலைபேசியை எடுத்தான். போலீசுக்கு அழைக்க முடியாமால் ஒரு வேலையாளை அழைத்து மாளிகைக்கு வெளியே சென்று பெட்ரோல் போலீஸ் கார் வரும் நேரமென்பதால் போலிஸுக்கு தகவல் கூறும்படி கூறியவாறே மேற்கு பக்கமாக ஓடினான்.
கிழக்கு பக்கமாக இருக்கும் ஜெனரேட்டர் இருக்கும் இடத்துக்கு பரா வர வேண்டுமானால் சமயலறை பக்கமாகத்தான் வர வேண்டும் அவள் சமையலறை கதவை சாத்தி விட்டு வெளியே வர வாயிலை நோக்கி ஓடும் காவலாளியை பார்த்து “எங்கே போறீங்க?” என்று கேட்டாள்.
“போன் கூட வேர்க் ஆகலம்மா… போலீசுக்கு தகவல் சொல்லச் சொல்லி சார் சொன்னாரு அதான் போறேன்” என்றார் அவர்.
“போன் வேலை செய்யலையா?” என்றவளுக்கு நடப்பது எதுவுமே சரியாக படவில்லை. ஜெராடை நோக்கி ஓடினாள்.
வாயிலை நோக்கி ஓடிய வேலையாள் வெளியே செல்லும் முன் பின் மண்டையில் தாக்கப்பட்டு மயக்கடைந்தார். அவரை இழுத்து சென்று வாயிலுக்கு அருகில் காவலாளி இருக்கும் அறையில் போட்டு அறையை வெளியால் பூட்டிய தாமஸ் வேட்டை துப்பாக்கியை கழுத்தில் வைத்தவாறு கிழக்கு பக்கமாக நடந்தான்.
மேற்கு பக்கமாக வந்த ஜெராடும் வேலையாட்களும் ஜெனரேட்டரை அனைத்து தீயையும் அனைத்திருந்தனர்.
மாளிகை முழுக்க இருட்டில் இருக்க, யார் மாளிகைக்குள் புகுந்திருப்பார்கள்? எவ்வாறு புகுந்திருப்பார்கள் என்று ஜெராடுக்கு புரியவில்லை. ஜெராடும் வேலையாட்களும் அலைபேசியிலுள்ள டார்ச் லைட்டை உயிர்பித்து நாளா புறமும் அடிக்க அங்கே ஒருவன் முகக்கவசம் அணிந்து நிற்பதை பார்த்து அவனை பிடிக்க முனைய அவனோ வேட்டை துப்பாக்கியை நீட்டி இவர்களை மிரட்ட ஆரம்பித்தான். தலையில் ஹெல்மட்டோடு கூடிய டார்ச் லைட் வேறு அணிந்திருந்தான். அந்த வெளிச்சத்தில்தான் அங்கே ஒருவன் இருப்பதே அவர்களுக்குத் தெரிந்தது. காரிருளில் மறைந்து கருஞ்சிறுத்தை போல் நின்றிருந்தான்.
“சார் ஒருவன்தான் இருக்கான் அவனை அடிச்சி போட்டு துப்பாக்கியை கை பற்றிடலாம்” என்றார் தலைமை வேலையாள் ஜான்.
“எத்தனை பேர் வந்திருக்காங்க என்று தெரியல. நாம அவசரப்பட்டு எதுவும் பண்ண வேணாம். போலீஸ் வரட்டும்” போலீசுக்கு தகவல் சொல்ல சென்ற வேலையாள் மயங்கி விட்டார் என்று அறியாமல் பேசினான் ஜெராட்.
“ஜெராட்” என்றவாறே அங்கு வந்தாள் பரா.
அவள் அங்கு வந்த நேரம் அவள் பின்னால் வந்த தாமஸும் துப்பாக்கியை இவர்களின் புறம் நீட்டி மாளிகைக்கு உள்ளே நடக்குமாறு ஏவினான். 
“நீ இங்க என்ன பண்ணுற? பசங்க எங்க? அம்மா அம்மா எங்க? அத்தையும் மாமாவும்” நடப்பது எதுவும் சரியில்லை என்றதும் குடும்பத்தின் பாதுகாப்பு முக்கியம் என்றெண்ணியவனுக்கு அனைவரினதும் ஞாபகம் சட்டென்று வந்திருந்தது. 
“எல்லாரையும் இரகசிய அறைக்கு அனுப்பிட்டேன்” என்றாள்.
“நீயும் அவங்க கூட இருக்க வேண்டியது தானே நீ எதுக்கு வெளிய வந்த?” அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தவாறே கூறினான் ஜெராட்.
“நீங்க இல்லாமலா?” இருட்டிலும் ஜெராடை முறைத்தாள் பரா.
“இந்த நேரத்துலையும் உனக்கு ரொமான்ஸ் பண்ண தோணுதா?” கடுப்பானவன் “நீ பசங்க மட்டும் இல்ல என் பொறுப்பு. வேலைக்கு இருக்குறவங்களோட பாதுகாப்பையும் பார்க்கணும்” என்றான்.
பரா ஜெராடின் பாதுகாப்பை கருதி அவனை தேடி வந்தது ஜெராடுக்கு புரியாமலில்லை. என்ன நடக்கிறது என்று அவனுக்கே தெரியாத பொழுது இவள் வேறு வெளியே வந்து ஆபத்தை தேடிக் கொண்டால், இவன் அவனை பாதுகாப்பானா? அவளை காப்பாற்றுவானா? என்ற கோபத்தில் தான் பேசியிருந்தான்.
பராவுக்கும் அவன் கோபம் புரிந்தது. அவளுக்கும் அவன் பேச்சு கோபத்தை தூண்டத்தான் செய்தது. சண்டை போடும் நேரமா இது? அமைதியாக அவனோடு நடந்தான்
இவர்கள் தமிழில் பேசியது வேலையாட்களுக்கு புரியவில்லை. முகக்கவசம் அணிந்திருந்தவர்களுக்கும் புரியவில்லை. ஆகையால் குழந்தைகளும் பெற்றவர்களும் இரகசிய அறையில் இருப்பது இவர்களை தவிர யாருக்கும் தெரியவில்லை.
“பேசாம நடங்கடா…”  என்று தாமஸ் மிரட்டினான்.
மாளிகைக்கு அருகே வரும் பொழுது “பராவை பார்த்து வேகமா உள்ளே போய்டு இந்த ரெண்டு பேரும் உள்ளே வராம நாங்க சமாளிக்கிறோம் என்று அவளுக்கு தமிழில் சொன்னவன் பிரென்ச் மொழியில் ஜானுக்கும் அதையே கூறினான்.
ஜான் ஒரு பிரென்ச் நாட்டவர். ஜெராடுக்கு முன்பு மாளிகையை வாங்கியிருந்தவர் ஒரு பிரென்ச்காரர். அதனால் பிரென்ச் பேசும் ஜானை நியமித்திருக்க, ஜானுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சும் தெரியும் என்பத்தினாலும், ஜெராடும் பிரென்ச் சரளமாக பேசுவதினாலும் ஜெராட் ஜானை தன்னோடு இருத்திக் கொண்டான்.
பரா உள்ளே நுழையும் பொழுதே ஜெராட் வேலையாட்களோடு அவ்விருவரையும் தள்ளி விட்டு உள்ளே வந்து கதவை பூட்டியிருந்தான்.
மாளிகைக்கு உள்ளே வந்தவன் எல்லா கதவுகளையும் பூட்டுமாறு வேலையாட்களுக்கு பணித்ததோடு, மெழுகுவத்திகளையும் ஏற்றிவைக்குமாறு பணித்தான்.
குளிர் காலம் என்பதால் எல்லா ஜன்னல் கதவுகளும் பூட்டித்தான் வைக்கப்பட்டிருக்கும். அதனால் யாரும் உள்ளே நுழைந்திருக்க மாட்டார்கள் என்று நம்பினான்.
“பரா நீ போய் பசங்க கூட இரு” என்றான்.
“முடியாது. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சாகும் வரைக்கும் என்னாலையே என்ன மன்னிக்க முடியாம போய்டும்” பிடிவாதமாக கூறியவளின் உணர்வு அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
ஐவிக்கு மூளைக்கட்டி இருந்தது அறியாமல் அவளை விலக்கி வைத்து அவள் இறந்து போனது எந்த அளவு வலியை ஜெராடுக்கு கொடுத்தது என்று அவனால் வாய்மொழியாக கூறிட முடியாது. ஐவியின் உடல்நிலை மோசமானத்திற்கும் ஜெராட் காரணமில்லை. அவளது இறப்புக்கும் அவன் காரணமில்லை. ஆனால் அவன் சாகும் வரை அவளது உடல்நிலையை அறியாமல் அவள் செய்ததை மட்டும் எண்ணி அவளை விட்டு விலகி இருந்தோம் என்று நினைத்தே மனதுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
இதைத்தான் பராவும் கூறினாள். பாதுகாப்பாக இருப்பதென்றால் இருவரும் இருக்க வேண்டும். அவள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஜெராடுக்கு என்ன ஆனதோ என்று நிம்மதியை இழந்து புலம்பிக் கொண்டு இருக்க முடியுமா? அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவள் கூட இருந்தும் எதுவுமே செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சியிலையே கொஞ்சம் கொஞ்சமாக இறக்க மாட்டாளா?
அது ஜெராடுக்கு புரியவே “சரி ரூம்ல இரு. போலீஸ் இப்போ வந்துடுவாங்க” என்றான்.
ஓடிவந்து அவனை இறுக அணைத்துக் கொண்டவள் “எதுவும் தப்பா நடக்காது ஜெராட்” என்றாள்.
ஜெராட் பராவிடம் கூறவில்லையானாலும் அவனுக்கு உள்ளுக்குள் அச்சமாக இருக்கவே அமைதியாக அவளை கட்டியணைத்தான்.
“இதோடா காதல் பறவைகள். ஒண்ணா சாக ரெடியாகிட்டாங்க” என்றவாறே அங்கே துப்பாக்கியோடு வந்து நின்றான் வில்லியம்.
மேற்கு பக்கமுள்ள ஜெனரேட்டருக்கு தீ வைத்து விட்டு அடுத்து இவர்கள் போலீஸை அழைக்க முயன்று முடியா விட்டால் வாயில் பக்கம் வருவார்கள் என்று தாமஸை அங்கே செல்ல உத்தர விட்ட மைக்கல். வில்லியமையும் அன்றோவையும் அழைத்துக் கொண்டு மாளிகைக்குள் புகுந்திருந்தான்.
ஜெராட் தாமஸையும், பெட்ரிக்கையும் தான் அடித்து தள்ளி விட்டு சமையலறை பக்கமாக உள்ள கதவை பூட்டியிருந்தான். பூட்டி என்ன பயன்? இவர்கள் மூவரும் உள்ளே தானே இருந்திருக்கிறார்கள்.
வேலையாட்கள் ஒவ்வொருவராக அடித்து கட்டிப்போட்டு பூட்டிய கதவையும் திறந்து தாமஸையும் பெட்ரிக்கையும் உள்ளே கொண்டு வந்திருந்தனர்.
“ஏய் யார்டா நீ? எப்படி நீ உள்ள வந்த?” அச்சமாக இருந்தாலும் பராவை தன் பின்னால் பாதுகாப்பாக நிறுத்தியவாறே கேட்டான் ஜெராட்.
இருவரை சமாளித்தாயிற்று இப்பொழுது போலீசார் வந்து விடுவார்கள் என்று எண்ணுகையில் ஒருவன் உள்ளேயே வந்து விட்டானே. இன்னும் எத்தனை பேர் வந்திருக்கின்றார்களோ தெரியவில்லையே என்ற அச்சம் அவனுக்குள் எழுந்தது.
“இவனுக்கு பதுங்க பார்த்தானுங்க துப்பாக்கியை காட்டியதும் கைய தூக்கிட்டானுங்க” இரண்டு வேலையாட்களை தள்ளிக்கொண்டு அங்கே வந்தான் தாமஸ்.
“மத்த வேலையாட்கள் எங்க?” அன்றோவும் அங்கே வந்தான்.
முகக்கவசம் அணிந்த ஐவரையும் பார்த்ததும் ஜெராடுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட புரியவில்லை.     
“ஒவ்வொருத்தனா கட்டிப் போட்டு அவங்க ரூம்லயே அடச்சீ வச்சிட்டோம். டேய் இவனுங்களையும் கட்டிப் போட்டு அங்கேயே அடச்சீ வை. நாம யாரையும் கொல்ல வரல. கொள்ளையடிக்க மட்டும் தான் வந்திருக்கோம். வீணா போராடி உசுர விடாதீங்க” என்று சிரித்தான் மைக்கல்.
இதுதான் இவர்களின் திட்டம். மாளிகையிலுள்ள புராதான பொருட்களை திருட வந்தது போல் தோற்றத்தை உருவாக்கி ஜெராடை குடும்பத்தோடு கொல்ல வேண்டும். வேலையாட்களை கொல்லும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்களை கட்டிப் போட்டு ஒரு அறையில் பூட்டி விட்டனர்.
ஜெராடையும் பராவையும் துப்பாக்கி முனையில் முட்டி போட வைத்து பின்னாடி கைகள் இரண்டும் கட்டப்பட்டிருந்த நிலையில் அன்றோ துப்பாக்கி முனையால் ஜெராடின் தலையில் அடித்தான்.
“ஜெராட்….” பரா கதற அவள் கன்னத்தில் அறைந்த மைக்கல் கண்டமேனிக்கு அவளை வசைபாடலானான்.
“டேய் இவன் குடும்பத்தை இங்க இழுத்துட்டு வா” அன்றோ கத்த தாமஸும், பெட்ரிக்கும் எந்த அறையாக இருக்கும் என்று தேடியலைந்தனர்.
வாசலில் இருந்த பெரிய மணிக் கூண்டின் முள் வேகமாக சுழன்றதே ஒழிய சென்றவர்கள் திரும்பவில்லை.
“எங்கடா போனவங்க இன்னும் இல்ல” கடுப்பில் உச்சத்தில் இருந்தான் அன்றோ.
“கூல் ப்ரோ… போலீஸ் கூட வரமாட்டாங்க இவனுங்கள பொறுமையா கருவருக்கலாம்” என்றான் மைக்கல்.
“ஜெராட்….” உடல் நடுங்க பரா ஜெராடை ஏறிட்டாள்.
ஒரே நம்பிக்கையாக வேலையாள் சென்று பெற்றல் போலீஸை அழைத்து வருவார் என்பதும் களைந்து போனதில் என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தான் ஜெராட். 
ஐந்து பேர் இருக்கிறார்கள் ஐந்து பேரிடமும் துப்பாக்கி இருக்கிறது. ஐந்து பேரையும் தனியாளாக சமாளிப்பது கடினம். போலீஸ் வரும் என்று கைகளை கட்ட விட்டது தான் செய்த பெரிய முட்டாள்தனம் என்று நொந்து கொண்டான் ஜெராட்.
அவர்களின் கையில் இருக்கும் துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா? தோட்டா இருக்கா? என்பது கூட சந்தேகம் தான். ஆனால் அவர்களின் பேச்சில் தங்களை உயிரோடு விட எண்ணவில்லை என்று மட்டும் ஜெராடுக்கு நன்றாகவே புரிந்தது.
“இவன் குழந்தைங்க, பேரன்ட்ஸ் யாரும் இங்க இல்ல” என்றவாறே அங்கு வந்தனர் தாமஸும், பெட்ரிக்கும்.
“என்ன சொல்லுற?” என்று மைக்கல் கேட்ட போது
“எங்கடா உன் பசங்க? எங்க உன் அம்மா?” ஜெராடை மீண்டும் அடித்தான் அன்றோ…”
பரா கத்த “ச்சீ கத்தாதே….” வில்லியம் அவளை மிரட்டினான்.
“நீங்க மாளிகையை கொள்ளையடிக்கத்தானே வந்தீங்க. எதுக்கு என் பசங்களையும் அம்மாவையும் தேடுறீங்க” ஜெராட் அவர்களின் எண்ணம் புரிந்தாலும் பேசியே அவர்களை திசை திருப்ப முயன்றான்.
சத்தமாக சிரித்த அவர்கள் “என்னது கொள்ளையடிக்கவா? யார் சொன்னா? நாங்க வந்தது உன்ன கொல்ல. கொலை நடந்த மோட்டிவ் போலீஸ் கண்டு பிடிக்கக் கூடாதென்று இங்க இருக்குற சில பொருட்களை கொள்ளையடிச்சிட்டு போவோம்” என்றான் மைக்கல்.
“பேசினது போதும். எங்க உன் பசங்க சொல்லு” அன்றோ ஜெராடை அடிக்க,
“நீங்க எல்லாம் யாரு? எதுக்கு எங்களை கொல்ல பாக்குறீங்க?” என்று வலியோடு கேட்டான்.
“எங்க நாட்டுக்கு வந்து நீ மேன்ஷன் வாங்கி குடியேறுவ. நாங்க அமைதியா பார்த்துகிட்டு இருக்கணுமா?” என்றான் வில்லியம்.
“டேய் போதும்டா… சாக போற நேரத்துல கூட ஏன் சாகுறோம் எதுக்காக சாகுறோம் என்று தெரிஞ்சிக்கிட்டு சாகட்டும்” என்ற அன்றோ முகக்கவசத்தை தலைக்கு மேல் தூக்கினான்.
“அன்றோ நீயா?” அப்பொழுதுதான் ஜெராட் அன்றோவை கண்டு கொண்டான். எத்தனையோ வருடங்களாக அவனை சந்திக்காததால் அவன் குரல் கூட ஜெராடுக்கு மறந்து போய் இருந்தது.
“நானே தான்…. உன் ஊருல இவள கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளய பெத்து வச்சிட்டு, இங்க வந்து என் அக்காவ காதலிக்கிறேன்னு ஏமாத்தி சிட்டிசன்ஷிப்புக்காக கல்யாணம் பண்ணியிருக்க. சாவுடா…” என்றவன் ஜெராடின் முகத்தில் அடித்தான்.
அன்றோ கூறிய குற்றச்சாட்டை கிரகித்த பரா “டேய் முட்டாள். நான் ஒரு டிவோர்சி. பசங்கள நாங்க தத்தெடுத்திருக்கோம். அவங்க எங்களுக்கு பொறந்த குழந்தையே இல்ல. நாங்க சந்திச்சு ஒன்பது மாசம் கூட முழுசா முடியல” என்று ஆங்கிலத்தில் கத்தினாள்.
“என்ன…” என்று ஆன்றோ அதிர்ச்சியடைந்தாலும் “என் அக்காக்கு நீயெல்லாம் கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அவளை லவ் பண்ணித்தானே கல்யாணம் பண்ண? அவளே செத்துட்டா நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாமா? இது நியாயமா? சொல்லு? நீயும் அவ கூடவே போ. அவ போன இடத்துக்கே. நீ சாகனும்” என்றான்.
விண்ட்சிம்ஸ் எல்லாம் வினோதமாக சத்தமெழுப்ப, காற்றும் வேகமாக வீசியது.
வீசிய குளிர் காற்று கனத்த கம்பளி துணியையும் தாண்டி மேனியை உரசிச்ச செல்ல உடல் சில்லிட்டது அங்கிருந்த அனைவருமே உணர்ந்தனர்.
“என்ன இப்படி குளிருது?” மைக்கல் நெஞ்சை தடவ
“உள்ள ஒரு கார்டன் இருக்கு அதுல இருந்து வர்ற காத்துதான்” என்றான் வில்லியம்.
“இவன் பசங்க தத்தெடுத்த பசங்க என்று சொல்லுறாளே… பசங்க வேற இல்ல. இவங்க ரெண்டு பேரையும் மட்டும் போட்டுட்டு போய்டலாமா?” என்ன செய்வது என்று கேட்டான் பேட்ரிக்.
“புள்ளைங்க இவனுக்கு பொறந்ததுங்களா? இல்ல இவ முன்னாள் புருஷனுக்கு பொறந்ததுங்களா என்று டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தா பார்க்க முடியும்?” மைக்கல் சிரிக்க,
“சொல்லுடா உன் பசங்க எங்க?” அன்றோ ஜெராடை மீண்டும் அடித்தான்.
விண்ட்சிம்ஸ் தாறுமாறாக சத்தமெழுப்ப, “டேய் இந்த மேன்ஷனே ஒரே அமானுஷ்யமா இருக்கு” பீதியோடு சொன்னான் பேட்ரிக்.
அவன் கூறியதை யாருமே கண்டு கொள்ளவில்லை. “அநாதை பசங்க மீண்டும் அநாதையாகட்டுமடா… இவங்கள மட்டும் போட்டுட்டு நாம போய்டலாம்” என்றான் வில்லியம்.
“இவன பட்டுனு போடுறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல. அணுவணுவா சித்தரவதை செஞ்சு கொல்லனும். அப்படி பண்ணா இது திட்டமிட்ட கொலை என்று போலீஸ் மோப்பம் பிடிச்சிடும்” என்றான் அன்றோ.
“எப்படியோ இவன் செத்தா சரிதானே?” என்று கேட்ட தாமஸ் ஜெராடை சுட துப்பாக்கியை அவன் தலையில் வைத்தான்.
வேட்டை துப்பாக்கி சுட்டால் தலை சிதரும். ஜெராட் கொஞ்சம் கூட அச்சப்படவில்லை. கதற வேண்டிய பராவோ தலை குனிந்து நின்றிருந்தாள்.    
“டேய் உனக்கு என்னதான் கொல்லனும். என்ன மட்டும் கொல்லு என் பொண்டாட்டிய விட்டுடு. உன் அக்காவுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவ யார்னு கூட இவளுக்குத் தெரியாது” என்றான் ஜெராட்.
“என் அக்காவ அவளுக்குத் தெரியாது. ஆனா இப்போ என்ன யார்னு தெரியுமே? உன்ன கொலை பண்ணத அவ போலீசுக்கு சொன்னா நான் ஜெயிலுக்கு போக வேண்டி வரும். அதனால அவளும் சாகனும்” என்றான் அன்றோ.
“யார் சொன்னா எனக்கு ஐவிய தெரியாது என்று? யார் சொன்னா எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு? நானும் பராவும் வேற வேற இல்ல நாம ஒண்ணுதான்” என்றாள் பரா.
“என்ன உளறுற?” மைக்கல் துப்பாக்கியால் பராவின் முகத்தை நிமிர்த்த அவள் முகமே வித்தியாசமாக இருந்தது.
“டேய் அன்றோ நான் இருக்கும் போது நீ என் புருஷன கொல்லுவியா? அதுவும் அவர் எனக்காக வாங்கின மாளிகைல. இது நம்மளோட பூர்வீக சொத்து என்று உனக்குத் தெரியாதா? முட்டாள். முட்டாள்” பரா அவளது குரலில் தான் பேசினாள். ஆனால் சற்றும் முன் அவள் பேசிய தோரணை போலவே இல்லை. வித்தியாசமாக இருந்தது.
“டேய் என்னடா சொல்லுறா இவ?” தாமஸ் கொஞ்சம் அச்சத்தோடுதான் கேட்டான்.
“ஆமாடா இந்த மாளிகை எங்க பூர்வீக சொத்து என்று அம்மா சொல்லியிருக்காங்க. இவன் இத என் அக்காவுக்காக வாங்கிருப்பான் என்று நீங்க நம்புறீங்களா?” அதை கொஞ்சம் கூட நம்பாமல் கூறினான் அன்றோ.
“மேன்ஷன நான் ஐவிக்காக வாங்கினேன்னு உன் கிட்ட ஒரு தடவை கூட சொல்லலையே உனக்கு எப்படித் தெரியும் பரா?” அதிர்ச்சியோடு பராவிடம் கேட்டான் ஜெராட்.
“நான் பரா இல்ல ஜெராட் ஐவி…” மாளிகையை அதிரும்படி கத்தினாள் பரா.
பராவும் ஜெராடும் ஒன்றாக இணைவார்கள் என்று காத்திருந்தால் பராவோடு ஐவி இணைந்து விட்டாள். இருவரும் ஒருவராக இணைந்து விட்டார்கள். 
“ஏய் என்ன நாடகம் ஆடுறியா? நீ என் அக்கா போல பேசி ஏமாத்த பக்குறியா? நீ என் அக்கா வாய்ஸ்ல பேசினா கூட நான் ஏமாற மாட்டேன்” என்றான் அன்றோ.
தலையை குனிந்திருந்த பரா சட்டென்று எழுந்து சோபாவில் அமர்ந்தாள். கட்டப்பட்டிருந்த அவள் கைகளும் அவிழ்ந்திருந்தது. அவள் அமர்ந்திருந்த தோரணையும் ஐவி சோபாவில் அமர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது.
“ஏய் கைகட்ட எப்படி அவிழ்த்த? வில்லியம் நீ ஒழுங்கா கட்டலையா?” கடுப்பாக கேட்டான் மைக்கல்.
“அமைதியாக இரு. அவன் சரியாகத்தான் கட்டினான். முடிச்ச அவிழ்க்குறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயமில்ல” என்றவள் ஜெராடை தூக்கி ஷோபாவில் அமர்த்த அவனது கைகட்டுகளும் அவிழ்ந்திருந்ததை பார்த்து முகமூடி அணைந்திருந்தவர்களுக்கு மாத்திரமன்றி ஜெராடுக்குமே அதிர்ச்சி.
“பரா ஆர் யு ஓகே?” ஜெராட் பராவை உலுக்க,
ஜெராடை கட்டிக் கொண்டவள் அழுது கரைந்தாள். ஐவியும் ஜெராடும் எங்கு எப்படி சந்தித்துக் கொண்டார்கள், எப்பொழுது காதல் வயப்பட்டார்கள். என்று காதலை முதன் முதலாக காதலை சொன்னார்கள் என்றெல்லாம் பரா கதை சொல்ல “ஜெராட் ஐவி ஐவி… இது நீயா…” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“ஏய்… என்ன ரெண்டு பேரும் நாடகம் ஆடுறீங்களா? உங்கள…” அன்றோ யாரை முதலில் சுடுவது என்ற குழப்பத்தில் இருவர் புறமும் துப்பாக்கியை மாறி மாறி பிடித்தான்.
வில்லியமும், பெட்ரிக்கும், தாமஸும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்ப “உன் அக்காவ பத்தி இவன் இவளுக்கிட்ட சொன்னதை வச்சி இவ நம்மள ஏமாத்த பாக்குறா” என்றான் மைக்கல்.
“ஆமா… நான் கூட கொஞ்சம் தடுமாறிட்டேன்” என்றான் அன்றோ.
“அப்போ உனக்கும் எனக்கும் தெரிஞ்ச ரகசியத்த எல்லாருக்கும் சொல்லவா? அப்போ நான் தான் ஐவி என்று நீ நம்புறியா?” அன்றோவை பார்த்துக் கேட்டாள் பரா.
“என்ன ரகசியம் என்ன ரகசியம் அப்படி ஒண்ணுமில்ல” என்றான் பதட்டத்தோடு.
“டேய் எனக்கு அர்ஜன்ட்டா ஒண்ணுக்கு வருது” சட்டென்று எழுந்து நின்றான் ஜெராட்.
“டேய் சாக போறவனோட கடைசி ஆசைடா… நிறைவேத்து” சிரித்தான் பேட்ரிக். 
“ஏன்டா உன் பொண்டாட்டிய எங்க கூட தனியா வச்சிட்டு போக உனக்கு பயமா இல்லையா?” நக்கலாக கேட்டான் மைக்கல்.
“அவ தான் ஐவியாச்சே. அன்றோ அவளை ஒன்னும் பண்ண மாட்டான். உங்களையும் ஒன்னும் பண்ண விடமாட்டான்” என்ற ஜெராட் அவன் பாட்டுக்கு அறையை நோக்கி நடக்க,
“வில்லியம்” என்ற மைக்கல் பின்னால் போகும்படி உத்தரவிட்டான். அவனும் ஜெராடின் முதுகில் துப்பாக்கியை வைத்தவாறு தள்ளிக் கொண்டு சென்றான்.
“டேய் நீ பதட்டப் படுறத பார்த்தா உண்மையிலயே எதோ ரகசியம் இருக்கும் போலயே” அன்றோவை பார்த்து சிரித்தான் தாமஸ்.
“உனக்கு சிரிப்பாக இருக்கா?” அவனை அதட்டிய மைக்கல் “இவ பொய் சொல்லுறா. போட்டு வாங்க பாக்குறா” அன்றோவை பார்த்துக் கூறினான்.
“அத்தனை பேரோட முன்னால சொல்லனுமா? உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா? அன்றோ?” பரா கேலியாக சிரித்தாள்.
“இவ சொல்லுறாளேனு தனியா போகாத. ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும். நமக்கு அது தெரியவே வேணாம். நாம வந்தது இவங்கள போட்டுத் தள்ள சீக்கிரம் வந்த வேலைய முடிச்சிட்டு இங்க இருந்து கிளம்பலாம்” என்றான் மைக்கல்.
எந்த சூழ்நிலையிலும் கலங்காமல் தெளிவாக முடிவெடுக்கும் ஒருவனாக இருந்தான் மைக்கல். என்ன நல்லதை நினைத்திருந்தால் பலபேர் நன்மை அடைந்திருப்பார்கள். அவனது தீய குணம், கூடா சகவாசம் என்று இன்று இவ்வாறு இருக்கின்றான்.
அன்றோவுக்கு இன்னும் குழப்பம் தீரவில்லை. அக்கா மீது பாசமில்லாமலையா ஜெராடை கொல்ல கிளம்பி வந்தான்? அவள் ஜெராடை எவ்வளவு காதலித்தாள் என்று அவனுக்கு நனறாகவே தெரியும். “ஜெராடோடு வாழ வேண்டும் என்பதற்காக அக்கா இந்த பெண்ணின் உடலில் வசிக்கிறாள் என்று அறிந்த பின் இவளை எவ்வாறு கொல்வது? அது தன்கையால் தன்னுடைய அக்காவையே கொன்றது போல் ஆகி விடாதா? அக்காவுக்காக ஜெராடை கொல்லவும் முடியாது.
மைக்கல் கூறுவது போல் இவள் என்னை ஏமாற்றி திசை திருப்ப, அக்காவின் ஆவி புகுந்து விட்டது போல் நடிப்பதாக கூட இருக்கலாம். எனக்கும் அக்காவுக்கும் தெரிந்த ரகசியம் இவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஒருவேளை அக்கா அதை ஜெராடிடம் கூறி இருப்பாளோ? இருந்தாலும் ஜெராட் அதை இவளிடம் சொல்ல வாய்ப்பில்லையே.
அதை இவள் எவ்வாறு அறிந்து கொண்டாள்? தனியாக அழைத்து சென்று ரகசியத்தை கூறுவது போல் தப்பிக்க திட்டமிடுகிறாளோ? அத்தனை பேரின் முன்னால் ரகசியத்தை சொல்ல சொன்னால் என்ன? உண்மையிலயே இவள் உடம்பில் அக்கா இருந்தால் ஜெராடை காப்பாற்ற நிச்சயமாக உண்மையை கூறுவாள்” யோசனையில் இருந்தான் அன்றோ.
“டேய் என்னடா யோசிக்கிற? இவ உடம்புல உண்மையிலயே உன் அக்கா இருந்தாலும் அவன் கூட ஆவியால் வாழ முடியாது அவனும் செத்து உன் அக்கா கூட வாழட்டும்” என்றான் மைக்கல். அவனுக்குள் கொலைவெறி தாண்டவமாடியது.
“ஐவியின் ஆவி தன்மேல் புகுந்தது என்று நாடகமாடி இவனுங்கள திசை திருப்பலாம் என்றும், பயமுறுத்தலாம் என்றும் பார்த்தா பயபுள்ளைங்க சிக்க மாட்டேங்குறானுகளே. ஜெராட் போன வேலைய சரியா முடிச்சிட்டாரா தெரியல” மனதுக்குள் புலம்பலானாள் பரா.

Advertisement