Advertisement

அத்தியாயம் 19
“அப்பா… என்னா குளிர்?” வீட்டில் மேல் சட்டை கூட போடாமல் லுங்கியோடு சுதந்திரமாக அமர்ந்திருக்கும் பால்ராஜ் இங்கிலாந்து வந்த பின் வீட்டுக்குள்ளேயும் குல்லா தொப்பி, ரெண்டு சுவட்டர் அணிந்து, போதாதற்கு ஒரு கம்பளி போர்வையையும் போர்த்தியவாறு கட்டிலில் அமர்ந்திருந்தார்.
“நுவரெலியா குளிர் போல இருக்கும் என்று நினச்சேன். இது என்ன இப்படி பல்லெல்லாம் டான்ஸ் ஆடுது. என்னால முடியாது. ஜெராட் என்ன ஊருக்கு அனுப்பு” எஸ்தர் ஒரு பக்கம் புலம்பலானாள்.
“ஐயோ நான் வீட்டுல சுடுதண்ணியே குடிக்க மாட்டேன். இங்க வந்ததுல இருந்து காபி, டீ னு குடிச்சி, குடிச்சி சுகர் ஏறிடும் போலயே” ஜான்சி ஒரு மூலையில் சுருண்டு படுத்தவாறு புலம்பினாள்.
இவர்களை கதவருகே நிறு பாத்திருந்த பரா “ரூம்லதானே ஹீட்டர் இருக்கு. அத போட்டுக்கொள்ளாம இப்படி குளிருல இருந்தா சரியா? போட்டுக்க தெரியலனா வேலையாள் யாராவது கூப்பிடனும்” என்றாள்.
நவம்பர் மாதம் வேறு ஆரம்பமாக போகிறது. குளிர் அதிகமாகத்தான் இருக்கும். இந்த நிலைமையில் வயதானவர்களுக்கு காலநிலை ஒத்துக்கொள்ளுமா? அதை சாக்காக வைத்து இவர்கள் ஊருக்கு போக வேண்டும் என்று சொல்வார்களோ? என்ற கவலை பராவுக்கு இருந்தது. அதை அவள் ஜெராடிடமும் கூறியிருந்தாள்.
“வேற யாரு எங்கம்மாதான் உங்கம்மாவையும், அப்பாவையும் உசுப்பேத்தி கிளப்ப பார்ப்பாங்க. நீதான் அவங்கள மிரட்டணும்” என்று சிரிக்க அப்போதைக்கு பரா ஜெராடை முறைத்தாலும், அவன் சொன்னது போல் உண்மையிலயே இப்பொழுது மிரட்டத்தான் வேண்டியிருந்தது.
“வேலைக்கு ஆள் வச்சிருக்காலாமே ஆள். ஒருத்தனுக்கும் தமிழ் தெரியாது. அவனுங்க பேசுறது எனக்கு புரியல. நான் பேசுறது அவனுங்களுக்கு புரியல. இதுல ஹீட்டாரத்தான் போடச் சொல்லணும். வெள்ளைகாரிய வேல வாங்கவும் இங்கிலீசு தெரியனுமா? அதுங்க எங்களை பாடா படுத்தினாங்களே. இப்போவும் நாம இங்கிலீசுல பேசணுமா? அதுங்களுக்கு தமிழ் கத்துக்க சொல்லு” மருமகளை முறைத்தாள் எஸ்தர்.
“நான் எதுக்கு இருக்கேன். என்ன கூப்பிட வேண்டியது தானே. லெனின் கிட்ட சொன்னாவே போடுவான். இப்படி குளிர்ல இருக்கணுமா?” எஸ்தரை முறைத்தவள்  “அவங்க நாட்டுல இருந்து கிட்டு தமிழ் படிச்சிட்டு வேலைக்கு வான்னா எங்களைத்தான் தூக்கி உள்ள வைப்பாங்க” முணுமுணுத்தவாறே ஜான்சியை பார்த்து “யாரு உனக்கு காபி, டீ குடிக்க சொன்னா? நல்லா சுடுதண்ணி குடி. இல்ல கிறீன் டீ குடி. கொழந்த போல பிரச்சினை பண்ணிக்கிட்டு” எஸ்தரிடம் காட்ட முடியாத கோபத்தை அன்னையிடம் காட்டினாள் பரா.
அறையிலுள்ள ஹீட்டரை போட்டவள் “வெளிலதான் போக முடியாது. உள்ள கார்டன் இருக்கு. லைப்ரரி இருக்கு. வேற என்ன வேணுமோ சொல்லுங்க ஏற்பாடு செஞ்சி தாரேன்” என்றாள்.
“எங்கள பாத்துக்கிறேன்னு சொல்லி இப்படி அடச்சீ வச்சி கொடும படுத்துற நீ” சொர்க்கமே ஆனாலும் அட நாம்ம ஊர போல வருமா? என்ற கடுப்பில் இருந்தார் பால்ராஜ்.
இலங்கையிலிருந்து இங்கிலாந்து வரும் பொழுது மூவருமே சந்தோஷமாகத்தான் விமானம் ஏறினார்கள். விமானப்பயணமே அவர்களை ஒருவழி பண்ணியிருக்க, போதாததற்கு குளிர் வேறு பாடாய் படுத்தியது.
மாளிகையை பார்த்து வியந்தது என்னவோ உண்மைதான். வந்த களைப்பில் இரண்டு நாட்கள் தூங்கி எழுந்து மாளிகையை சுற்றிப்பார்க்கவும், பொருட்களை பார்க்கவும் இரண்டு, மூன்று நாட்கள் எடுத்திருக்க, அதன்பின் பின் புதிய சூழலையும், குளிரையும் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்ப ஆரம்பித்திருந்தனர்.
வயதானவர்கள் பிடிக்கா விட்டால் புலம்புவார்கள், கோபத்தை வார்த்தையால் காட்டுவார்கள். அதைத்தான் எஸ்தரும் செய்துகொண்டிருந்தாள்.
தன்னுடைய மகனின் வீடு. அதுவும் மாளிகை என்றதும் எஸ்தருக்கு மகனை நினைத்து கொஞ்சம் கர்வமாகக் கூட இருக்கும். போயும் போயும் இந்த ஊரில் மாளிகையை வாங்கி இருக்கிறான் சொந்தபந்தங்களுக்கு சொல்லிக்கொள்ள முடியாத கோபமும் இருக்கும்.
மனதில் உள்ளதை சொல்ல முடியாத விரக்தியும், சூழ்நிலையும் மெம்மேலும் கோபத்தை தூண்ட யார் மேல் கோபப்படுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தாள் எஸ்தர்.
அவளது நிலையை அறியாமல் குளிர் தாங்க முடியாமல் ஜான்சியும், பால்ராஜூம் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர்.
மகளை பற்றி கவலையில் இருந்தவர்களுக்கு மகள் மாளிகையில் வாழ்வது சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த சூழலை அவர்களுக்கு பொருந்தவில்லை என்றதும் புலம்பத்தான் செய்வார்கள்.
குழந்தைகளுக்குத்தான் புரியாது. சமாதானப்படுத்த வேண்டும். இவர்களுக்கு புரிகிறது தானே சமாதானப்படுத்த என்ன இருக்கிறது என்று தான் ஜெராட் பாராவை மிரட்ட சொன்னான்.
அது ஓரளவுக்கு கைகூடியது. ஆரம்பத்தில் பரா சமாதானப்படுத்தத்தான் முயன்றாள். இவள் பேசினால் அவர்கள் இவள் மேல் எகிறிக் கொண்டு வந்தனர். மிரட்டினால் தான் கொஞ்சமாவது அடங்கியிருந்தனர்.
எல்லா புலம்பல்களும் குழந்தைகள் பாடசாலை சென்றிருக்கும் நேரம் வரையில் தான். குழந்தைகள் வந்து விட்டால் இவர்கள் எல்லாவற்றையும் மறந்து இவர்களும் குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.
வெளியே சென்று விளையாட முடியாது. ஆனால் மாளிகைக்குள் விளையாடலாமே. பால்ராஜ் குழந்தைகளோடு கண்ணாமுச்சியிலிருந்து ஆரம்பித்து, படம் வரைவது, யானை சவாரி என்று தினமும் ஒரு விளையாட்டை விளையாடலானார்.
“எஸ்தர் பாட்டி நீங்களும் வாங்க, ஜான்சி பாட்டி நீங்களும் வாங்க” என்று ஜெஸியும், லெனினும் அழைக்க,
“என்னால ஓடவெல்லாம் முடியாது. உக்காந்து படம் வேணா வரைய பாக்குறேன்” என்பாள் எஸ்தர்.
“எந்நாளும் ஓட முடியாது. முழங்கால் வலி இருக்கு” என்றாள் ஜான்சி.
“நான் வரேன் விளையாட” பால்ராஜ் தான் முடியாது என்று சொல்லாமல் விளையாட ஒத்துக்கொண்டார்.
ஆனால் பரா “அப்பா உங்களுக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. நீங்க பாட்டுக்கு கொழந்தைகளோட ஓடி பிடிச்சி விளையாடி நெஞ்ச பிடிச்சிக்கிட்டு விழுந்துடாதீங்க. வேலையாட்கள் ஓடட்டும், நீங்க படம் மட்டும் வரைங்க” என்றாள்.
ஆனால் பால்ராஜ் பரா சொல்வதை கேட்கத் தயாராக இல்லை. செய்வதற்கும் ஒன்றுமில்லாத பொழுது குழந்தைகளோடு ஐக்கியமாவது மட்டும் தானே பெரியவர்களால் செய்ய முடியும்.
அதுவும் பராவும், பாத்திமாவும் குழந்தைகளாக இருக்கும் பொழுது பால்ராஜ் அவர்களோடு விளையாடியதே இல்லை. இப்பொழுது பராவை புரிந்து கொண்டிருந்தவருக்கு தான் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பதையும் உணர்ந்திருக்க, பேரக் குழந்தைகளோடு விளையாடி அந்த ஏக்கத்தை போக்க எண்ணினார்.
அதுவும் வயதான காலத்தில் பேரக் குழந்தைகளோடு விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்க, உடல்நிலைக் கூட பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தது தான் உண்மை.
பால்ராஜின் நேரம் குழந்தைகளோடு செல்ல, வேலையாட்கள் உதவியோடு சமைத்துக் கொண்டிருந்த பராவை சமையலறையிலிருந்து வெளியே தள்ளி, நமக்கு என்ன வேலை இருக்கிறது சமையலை நாங்க பார்த்துகிறோம் என்று ஜான்சியும், எஸ்தரும் சமையலறையை பூட்டிக்கொண்டு யாரையும் வர விடாமல் அங்கே ராஜ்ஜியம் நடாத்தலாயினர்.
“உங்கம்மாவும், எங்கம்மாவும் கிட்ச்சன ஹைஜாக் பண்ணி யாரையும் உள்ள விடாம அராஜகம் பண்ணுறாங்க” பரா ஜெராடிடம் முறையிட்டாள்.
“சரி விடு எத்தனை வருஷமா அம்மா கையால சாப்பிட முடியாம இருந்தேன். இப்போவாச்சும் வித விதமா சமைச்சி கொடுப்பாங்க இல்ல” என்றான் ஜெராட்.
ஜெராடை முயன்ற மட்டும் முறைத்தவள் “அப்போ இத்தனை நாளா என் கையால சமாச்சது எந்த கணக்குல வரும்? அம்மா வந்ததும் அம்மா கையால செஞ்ச சாப்பாடுதான் வேணுமோ? அதென்ன பொண்டாட்டி சமைச்சா நாக்கு வழிக்க நக்கிட்டு, அம்மாவ பார்த்ததும் என் பொண்டாட்டிக்கு சமைக்கவே தெரியல. உலகத்துலயே நீதான் பெஸ்ட்டு குக் னு அம்மா தலைல பாறாங் கல் சைஸ்ல ஐஸ் கட்டிய வைக்கிறீங்க”
“என்ன இவ என்னைக்கும் இல்லாம சண்டைக்கு நிக்கிறா? அதுவும் பாசமான அத்தைய இழுத்து. ஒன்னும் புரியலையே” பராவை சந்தேகமாக பார்த்த ஜெராட் “ஒருவேள ஹனிமூன் கூட்டிட்டு போறேன் என்று எங்கயும் போகாத கோபத்தை இப்படி காட்டுறாளோ?” என்று யோசித்தான்.
ஜெராட் இலங்கை வந்த பொழுதே இருவரும் மனதால் இணைந்து விட்டதில் தேனிலவுக்கு செல்லும் அவசரம் ஜெராட்டுக்குத்தான் இருந்தது.
“போலாம், போலாம் எங்கயாச்சும் போலாம்” என்றவனை செல்லமாக முறைத்த பரா  
“உங்க தம்பி கல்யாண வேலை இருக்கு. இந்த நேரத்துல ஊரு சுத்தினா சரியா? அதுவும் இங்க போறதுன்னா நுவரெலியாக்கு போகணும், இல்ல பீச் சைட் போகணும் அதுக்கு நாம நம்ம மாளிகையிலையே இருந்துடலாம்.
இங்கிலாந்து போய் எட்டு மாசமாகுது பாத் சிட்டியை தவிர எங்கயும் கூட்டிட்டு போகல. போகும் எண்ணமும் உங்களுக்கு இல்ல. சரி ஹனிமூன்காகவாவது அங்க சுத்தி பார்க்க கூட்டிட்டு போவீங்கன்னு பார்த்தா…”
“பார்த்தா…” புருவம் உயர்த்தினான் ஜெராட்.
“ஹனிமூனையும் இங்கயே முடிச்சிட்டு போலாம்னு திட்டம் போடுறீங்க. உங்கள என்ன பண்ணலாம்” கைகளை மடித்துக்கொண்டு ஜெராடை அடிப்பது போல் நின்றாள்.
பரா சொல்வதும் சரிதான். அவளை வெளியே பொது இடங்களுக்கு அழைத்து சென்றாலும் முக்கியமான இடங்கள் என்று எங்கும் அழைத்து செல்லவில்லை. பாத் சிட்டியில் அதுவும் மாளிகைக்கு அருகில்தான் சென்று வந்தான்.
“ஓகே அப்போ நாம நம்ம ஹனிமூன் அங்கேயே வச்சிக்கலாம்” அரை மனதோடு சம்மதித்தாலும் பராவின் விருப்பத்துக்கு இணங்கியிருந்தான் ஜெராட்.
பெற்றவர்களை அழைத்து சென்றதே குழந்தைகளை அவர்களிடம் விட்டு தாங்கள் இருவரும் மட்டும் தனியாக எங்கயாவது சென்று விட்டு வரலாம் என்றுதான்.
நினைப்பதெல்லாம் திட்டமிட்டபடி நடந்து விடுமா என்ன? ஆபீசில் ஒரு ப்ரொஜெக்டை உடனே முடிக்க வேண்டும் என்று வேலை ஒரு பக்கம் இழுத்துக்கொள்ள, வீட்டிலும் பெரியவர்கள் குளிர் தாங்க முடியவில்லை என்று பிரச்சினை செய்து கொண்டிருந்தனர்.
ஒருவாறு எல்லாவற்றையும் சமாளித்து விட்டோம் என்று நினைத்தால் பரா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நிற்கின்றாள்.
அவளை நன்கு உத்துப் பார்த்ததும் தான் அவள் உதடு கடித்து சிரிப்பை அடக்க முயற்சி செய்வது ஜெராடுக்கு புரிந்தது.
“என்னையே ஒரு செக்கன் கதிகலங்க வச்சிட்டியே உன்ன என்ன பண்ணலாம்? வர வர உன் சேட்டைக்கு அளவே இல்ல” மனதுக்குள் கொஞ்சிக் கொண்டவன்
“ஏன் வாரம் ஒரு நாள் நான் சமைக்கிறேனே. நீ மூக்கு முட்ட சாப்பிடுறியே. அத ஏன் சொல்ல மாட்டேங்குற? என்னமோ நான் உன் சமையலை ரசிச்சி ருசிச்சு சாப்பிடுறது சொல்லுற? நீதான் என் கைப்பக்குவத்துக்கு அடிமை. அதுவும் நான் யார் ஸ்டூடன்? எஸ்தர் மகனாக்கும். எங்கம்மா கைப்பக்குவம்” இவன் பராவை வம்பிழுத்தான்.
ஜெராடின் பேச்சும் தோரணையும் அவன் வம்பிழுப்பது தெரிய “ஒஹ்…” என்று பரா ஆரம்பிக்க அங்கே வந்து நின்றாள் ஜான்சி.
“என்னடி மாப்புள கூட ஒன்னுக்கொன்னு பேசிகிட்டு நிக்கிற? இதுல அவரை சமைக்க சொல்லி நீ உக்காந்து சாப்பிடுறியா?” குழந்தைகளுக்கு கை முறுக்கு செய்ததில் ஜெராடுக்கும் எடுத்து வந்தவள் இவர்களின் சம்பாஷணையை கேட்டு விட்டாள். 
இவர்கள் ஒருவரையொருவர் வம்பிழுக்கும் பொழுது எப்படி பேசுவார்கள் என்று அறியாத ஜான்சி மகள் மருமகனிடம் மரியாதை குறைவாக பேசுவதாக பராவை திட்ட ஆரம்பித்தாள்.
ஜெராடுக்கு சிரிப்பாக இருக்க, ஜான்சியிடமிருந்து பராவை காப்பாற்றாமல் வேடிக்கை பார்கலானான்.
“வீட்டுல இருக்கும் போதும் ஒரு வேல ஒழுங்கா செய்யிரியா? கல்யாணம் பண்ண கொஞ்சமாச்சும் புத்தி வேணாம். போதாததற்கு ரெண்டு புள்ளைய வளக்குறியே? அதுங்களுக்கு என்னத்த சொல்லிக்கொடுப்ப?”
இவ்வாறுதான் மகனுக்கும், மருமகளுக்கும் நடுவில் நடக்கும் பேச்சு வார்த்தை, மகளுக்கும் மருமகனுக்கும் நடுவில் நடக்கும் சம்பாஷணையை அரைகுறையாக காதில் போட்டுக்கொள்ளும் சில அன்னையர்கள் நடுவில் புகுந்து பேசுவதால் பல குடும்பங்களில் இல்லாத பிரச்சினைகள் உருவாக்கி விடுகின்றன.
அவர்களுக்கிடையில் பிரச்சினை இருந்தாலும் அவர்களே பேசி தீர்த்துக் கொண்டிருப்பார்கள். அல்லது கொஞ்சம் நாளில் சமாதானம் அடைந்திருப்பார்கள். இவர்கள் பேசப் போய் பிரச்சினை பெரிதானதுதான் மிச்சம்.
“ஆஹா… அத்த ஓவரா போறாங்களே…” என்று ஜெராட் நினைக்கும் பொழுது எஸ்தரும், பால்ராஜும் அங்கே வந்து நின்றனர். 
“என்ன பிரச்சினை?” எஸ்தரும் பால்ராஜும் ஒரே நேரத்தில் கேட்டிருக்க,
“ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ணி வாழ்க்கையை இழந்து தானே இந்த வாழ்க்கை அமைஞ்சது. இவ இப்படி பேசினா திரும்பவும் வாழ்க்கையை இழந்து வீட்டுக்கு வந்தா நாங்க நிம்மதியா இருக்க முடியுமா? அதுவும் இப்போ ரெண்டு குழந்தைகள வேற தத்தெடுத்திருக்கா இந்த குழந்தைகள யார் பாத்துப்பாங்க? நாளைக்கு இவளுக்கு என்று ஒரு குழந்தை உண்டானா அந்தக் குழந்தையை யார் பாத்துப்பாங்க? இவ இப்படி நடந்துகிறாளே நாங்க இவளை இப்படியா வளர்த்தோம்?” கண்ணை கசக்கிய ஜான்சி புடவை முந்தியால் கண்களை துடைத்தவாறே பேச
“என்ன இவங்க நடந்தது என்னனு தெரியாமலையே என்னென்னமோ பேசுறாங்க” என்னடா இது என்று ஜெராட் பராவை பார்த்தால் ஜான்சி பேச ஆரம்பிக்கும் பொழுதே முணுக்கென்று எட்டிப்பார்த்த கண்ணீரை மறைக்க அனைவருக்கும் முதுகுக்காட்டி நின்றுகொண்டிருந்தாள் பரா.
“உங்க பயம் புரியுது சம்பந்தி. அதுக்காக என்ன நடந்தது என்று தெரியாம தப்பு என் பையன் மேல இருக்கும் என்று கூட யோசிக்காம, உங்க பொண்ண நீங்க இப்படி பேசக் கூடாது. அவங்களுக்குள்ள பிரச்சினை என்றா அவங்க பேசி தீர்த்துப்பாங்க. முடியாத பட்சத்துல எங்க கிட்ட வருவாங்க. உங்க பயத்தால நீங்க பேசினா அதனால கூட வீணான பிரச்சினைகள் இவங்களுக்குள்ள வரலாம்” என்றாள் எஸ்தர்.
ஜான்சி பேசியதை கேட்டு சராசரியான மாமியாராக இருந்தால் “அப்போ உன் பொண்ணு மேல் தான் தப்பா? அதனால் தான் முதல் கல்யாணம் சரியாக அமையவில்லையா? எங்ககிட்ட வேற கதை சொன்னியே” என்று பிரச்சினை செய்திருக்கக் கூடும்.
எஸ்தரும் மூன்று பெண்களை பெற்றவள். ஒரு மாமியாருக்கு மருமகளாக இருந்தவள் ஜான்சியின் அச்சத்தை சட்டென்று புரிந்து கொண்டு பேசியவள் ஜெராடை பார்த்து “என்ன பிரச்சினை” என்று கேட்டாள்.  
சற்று முன் தான் அவர்கள் பிரச்சினையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றாள் இப்பொழுது மகனிடம் என்ன பிரச்சினை என்று கேட்கிறாளென்றால் அது ஜான்சிக்காக. இல்லையென்றால் தனிமையில் மகனை அழைத்து பேச அவளுக்கு தெரியாதா?
“சொல்லுப்பா கேக்குறேன்னில்ல”
ஒண்ணுமே இல்லாத ஒற்றை இவ்வளவு பெரிய பிரச்சினையாக கூட மாற்றலாமா? என்ன சொல்வது என்று யோசித்த ஜெராட் எழுந்து பராவின் அருகில் சென்றான்.
“எனக்கும்  என் பொண்டாட்டிக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. நான் சண்டை போட்டாலும் அவ ரொம்ப பொறுமையா போறவ. என்ன அவ சரியா புரிஞ்சி வச்சிருக்கா. சொல்ல போனா எங்க அம்மாவுக்கு அப்பொறம் என்ன சரியா புரிஞ்சிகிட்டு, என் மேல ரொம்ப அக்கறையா இருக்குற அதுவும் எந்த சூழ்நிலையிலையும் மத்தவங்கள பத்தியும் யோசிச்சு எங்க அம்மா போலவே பேசுற ஒரே ஜீவன் பரா மட்டும் தான்” என்றவன் மனதுக்கு “சாரி ஐவி நீயும் அப்படித்தான். உன்ன போலவே இருக்கல்ல அதான் இவளை இவ்வளவு பிடிக்குது” என்றவாறே  பராவின் தோளில் கை வைத்திருந்தான்.  
“அப்போ சண்டை போட்டீங்களே….” ஜான்சி தான் காதால் கேட்டது பொய்யா? என்று மீண்டும் கேட்டாள்.
“ஐயோ அத்த குட்டி, குட்டி சண்டை இல்லனா லைப் போர் அடிக்கும். நாங்க ரெண்டு பெரும் இப்படித்தான் விளையாடுவோம். ஆனா நீங்க இப்படி நான் உங்க பொண்ண விட்டுட்டு போய்டுவேன். அதுவும் பசங்கள விட்டுடு போய்டுவேன்னு பேசுறது எல்லாம் ரொம்ப ஓவர். பாருங்க உங்க பொண்ணு கண்கலங்குறா. கல்யாணம் பண்ணி வந்ததுல இருந்து நான் அவள கண்கலங்காம பாத்துக்கிட்டேன். நீங்க வந்து அழ வைக்கிறீங்க. முதல்ல உங்க எல்லாரையும் சிலோனுக்கு பேக் பண்ணனும் இல்ல பரா” மனைவியை சமாதானப்படுத்த முயன்றான்.    
“ஹேய் என்ன பேசுறீங்க…” சட்டென்று திரும்பி ஜெராடை அடிக்க ஆரம்பித்த பரா ஜான்சியை பார்த்து விட்டு நிறுத்தினாள்.
“பார்த்தீங்களா சம்பந்தி. இவன்தான் ஏதாவது சொல்லி என் மருமகளை கடுப்பேத்தி அடி வாங்குறான். ஏச்சு வாங்குறான். அத பார்த்து நீங்க உங்க பொண்ண திட்டுறீங்க. இவன் சின்ன வயசுலயும் இப்படித்தான் கூடப்பொறந்தவங்களையும் வம்பிழுத்துக்கிட்டுதான் இருப்பான். கட்டின பொண்டாட்டிய மட்டும் நிம்மதியா இருக்க விடுவானா. இதுங்க சண்டைல இனிமேல் மூக்கை நுழைக்காதீங்க. கடைசில நம்மள டம்மி பீஸாக்கிடுவாங்க. வாங்க நாம போய் நம்ம வேலைய பார்க்கலாம்” ஜான்சியையும் பால்ராஜையும் அழைத்துக் கொண்டு வெளியேறிய எஸ்தர்
திரும்பி ஜெராடை பார்த்து “நீ நல்லா சமைக்கிறான்னு மருமக சொல்லுறா. இன்னக்கி டின்னர் நீ தான் சமைக்கணும்” என்று உத்தரவிட்டாள்.
ஜெராட் தலையசைக்கும் பொழுதே “என்ன சம்பந்தி மாப்பிளையை போய் வேலை வாங்கி கிட்டு” ஜான்சி கேட்பது ஜெராடின் காதில் விழ கதவை பூட்டியவன்
பராவை இறுக அணைத்து “அம்மா தானே  எதுக்கு சும்மா, சும்மா கண்ண கசக்குற?”
“அம்மானாலும் இப்படித்தான் புரிஞ்சிக்காம பட்டென்று பேசுவாங்களா?”
“புரிஞ்சிகலதான். ஆனா உன் மேல இருக்குற பாசத்தலையும், ஏற்கனவே நடந்ததத போல திரும்ப நடந்திடக் கூடாது என்ற பயத்தாலயும் பேசிட்டாங்க. நீ அம்மா கிட்ட முகத்தை தூக்கி வச்சிக்க மாட்டேன்னு தெரியும்.
நம்ம பேசினத்துல எந்த தப்பும் இல்ல. நாம நம்ம ரூம்ல தானே பேசினோம். எல்லா இந்த மேன்ஷனோட தப்பு. நம்ம ரூம்க்கு வர நாலு கதவிருக்கு. இதுல எந்த கதவ எப்போ பூட்டி வைக்கிறது? யாரு எங்க இருந்து வருவாங்க என்று நமக்கு எப்படித் தெரியும்? சொல்லு? நம்ம தப்பு இல்ல. இல்லல”
“என்ன என்னய சமாதானம் செய்யிறீங்களா? போங்க போய் டின்னர் சமைங்க” ஜெராடை மிரட்ட ஆரம்பித்தாள் பரா.
“அடிப்பாவி கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உங்கம்மா சமையலுக்கும், சாப்பாட்டுக்கும் தாண்டி பிரச்சினை பண்ணாங்க. அத மறந்து இப்படி துரத்துற. உன்னயெல்லாம் கவனிக்கிற விதத்துல கவனிச்சா தான் சரிப்பட்டு வருவ” என்றவன் அவள் இதழ்களை சிறையெடுத்தான்.
 “அப்பா…” என்று ஜெஸி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வர, பின்னாலையே லெனினும் உள்ளே வந்து தாங்கள் வரைந்த படங்களை காட்டலாயினர்.
படங்களை பார்த்தவாறு “இவ்வளவு பெரிய மாளிகைல இருந்து என்ன பிரயோஜனம்? பிரைவசி கொஞ்சம் கூட இல்ல. கூடிய சீக்கிரம் நாம ஹனிமூன் போகலனா இப்படி ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு நிக்க வேண்டியது தான்” என்றான் ஜெராட்.
குழந்தைகளுக்கு அவன் பேச்சில் கவனமில்லை. கேட்டிருந்தாலும் புரிய வாய்ப்பில்லை. அவர்கள் வரைந்த படங்களை தந்தையிடம் காட்டும் ஆவலில் பேசிக் கொண்டிருந்தனர். 
பராவுக்கு அவன் ஆதங்கம் புரிந்தாலும் சிரிப்பாக  இருந்தது. அவனை மேலும் சீண்ட “போங்க போங்க போய் சமைக்கிற வேலைய பாருங்க” என்றாள் பரா.
அவளை முறைத்தாலும் “கண்டிப்பா என் கைப்பக்குவம் எப்படி இருக்கு என்று என் அம்மாவுக்கும், என் அத்தைக்கும், மாமாவுக்கும் காட்டத்தான் போறேன். பொண்ணு சமையல் நல்லா இருக்கா? மருமகன் சமையல் நல்லா இருக்கா? என்று இன்னக்கி ஒரு பஞ்சாயத்து இருக்கு” என்று பராவை வம்பிழுத்தான்.
“நீங்க அடங்கவே மாட்டீங்களா?” பரா ஜெராடை தலையணையால் அடிக்க குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.
ஜெராட் இரவுனை சமைக்க ஆயத்தமானதும் பராவும் குழந்தைகளும் கூட சமயலறைக்குள் செல்வதை பார்த்த எஸ்தர் “நீங்க எல்லாரும் எங்க போறீங்க?” என்று கேட்க,
ஜெஸியும், லெனினும் “அப்பாக்கு ஹெல்ப் பண்ண” என்றனர்.
“ஓஹ்… உங்கப்பா தனியா சமைக்க மாட்டானா? ஹெல்ப் பண்ணினா தான் சமைப்பானா? நம்மக்கு தான் யாரும் இல்ல ஹெல்ப் பண்ண” நொடித்தாள் எஸ்தர்.
“உண்மையிலயே மருமகன் தான் சமைக்கிறாரா? இல்ல பரா சமைக்கிறத கொண்டு வந்து வைக்க போறாரா?” என்று கேட்டார் பால்ராஜ்.
“எதோ நாலு பொருளை அங்கக்கும் இங்கேகும் கொடுத்தா இவங்க சமாச்சது என்று ஆகிடுமா? யாரும் வரக் கூடாது” அனைவரையும் முறைத்த ஜெராட் சமையலறையை பூட்டிக் கொண்டு சமைக்க ஆரம்பித்தான்.
இங்கே தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜெராடின் குடும்பத்தையே கொன்றொழிக்க வண்டியில் துப்பாக்கியோடு வந்து கொண்டிருந்தான் அன்றோ.

Advertisement