இரவு பத்து மணி இருக்கும் பராவின் வீட்டு அழைப்பு மணி அடித்தது.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியவாறே கதவை திறந்தார் பால்ராஜ்.
கதவுக்கு வெளியே கையில் சூட்கேசோடு ஜெராட் நின்றிருந்தான்.
“உள்ள வாங்க மாப்புள” பால்ராஜ் உள்ளே அழைக்க,
வாசலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜான்சி எழுந்து “சாப்டீங்களா மாப்புள” என்று கேட்டாள்.
“சாப்பிட்டேன் அத்த. சாப்பிடாம அம்மா அனுப்ப மாட்டாங்க. பராவும் பசங்களும் எங்க?” குழந்தைகளின் சத்தம் வராததால் உள்ளே பார்த்தவாறு கேட்டான் ஜெராட்.
பசங்க ரென்று பேரும் பரா கத சொன்னா தான் தூங்குறாங்க. தூங்க வைக்கிறா. அந்த ரூம்தான் போங்க” ஜான்சி பரா இருக்கும் அறையை ஜெராடுக்கு காட்டினாள்.
அழைப்பு மணி அடித்ததிலிருந்து வாசலில் நடந்த அனைத்தும் பராவின் காதில் விழத்தான் செய்தது.
“என்ன போன வேகத்துல திரும்பி வந்துட்டான். அத்த துரத்திட்டங்களா?” எஸ்தர் ஜெராடை அடித்து வீட்டை விட்டு துரத்தியிருந்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
கதை சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே லெனினும், ஜெஸியும் தூங்கியிருந்தனர். சிரிப்பு சத்தத்தில் குழந்தைகள் விழித்து விடவும் கூடும் என்று சிரிப்பை அடக்கினாலென்றால்
ஜெராட் எந்த நேரத்திலும் அறைக்குள் வந்து விடுவான். வந்தால் தான் சிரிப்பதை பார்த்து என்ன நினைப்பானோ? என்று கண்களை மூடி தூங்குவது போல் பாசங்கு செய்தாள்.
அறைக்கு வந்து மூவரையும் பார்த்தவன் “நேரம் வித்தியாசமானாலும் இவங்களுக்கு எங்க போனாலும் செட்டாகுது போல” முணுமுணுத்தவாறே பெட்டியை திறந்து துணியையும், துண்டையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றான்.
சற்று நேரத்தில் பால்ராஜ் வந்து “பரா… பராம்மா…” என்று அழைக்க
“என்னப்பா…” என்று பரா கதவை திறந்தாள்.
“மாப்புள குளிக்கிறாரா? அந்த ஊருல குளிருல இருக்குறவருக்கு, நம்ம ஊரு சூடாத்தான் இருக்கும்” என்றவாறே லெனினை தூக்க, பின்னால் வந்த ஜான்சியும் ஜெஸியை தூக்கியிருந்தாள்.
“உங்க கட்டில்ல மட்டும் இடமிருக்கா என்ன? குழந்தைகளை கட்டில்ல தூங்க வச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் கீழ தூங்க போறீங்களா? அதை தான் கேக்குறேன்” என்ன சொல்லி சமாளிக்கிறது. தனக்கு சொன்னதையே அன்னையிடம் கேட்டு வைத்தாள்.
மாளிகையில் குழந்தைகள் தங்களுக்கே என்று இருக்கும் அறையில் தனியாகத் தூங்குவது பெற்றோருக்கு தெரிந்த விசயம் தானே. இதற்கு மேல் எதுவும் பேச முடியாதே சரி என்று தலையசைத்து விட்டாள் பரா.
அறையில் நடந்தது எல்லாம் குளித்துக் கொண்டிருந்த ஜெராடின் காதில் விழுந்திருக்கோமோ? என்று சிந்தித்தவாறே பரா, மீண்டும் கண்களை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.
காதில் விழ வில்லையென்றால் பிரச்சினை இல்லை. பரா தூங்கி விட்டாள். குழந்தைகளை ஜான்சியும் பால்ராஜும் தூக்கிச் சென்றிருப்பார்கள் என்று எண்ணுவான்.
காதில் விழுந்திருந்தால் தான் தூங்கவில்லையென்று அவனுக்குத் தெரியும். அவனே பேசட்டும். தொல்லையென்று இன்னும் நினைத்தால் அவனும் பேசாமல் தூங்கட்டும் என்றுதான் கண்களை மூடி படுத்திருந்தாள்.
குளியலறையிலிருந்து வந்தவன் ஐந்து நிமிடங்களாகியும் அறைக்குள் அங்கும், இங்கும் நடந்தானே ஒழிய, பராவிடம் நெருங்கவுமில்லை. அவளை அழைக்கவுமில்லை.
பராவின் இதயத் துடிப்பு வேகமெடுக்க, அதை கட்டுப்படுத்துவது அவளுக்கு கடினமாக இருக்க, கொஞ்சம் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள்.
அறை கதவை திறந்து கொண்டு ஜெராட் அறையை விட்டு வெளியேற, கண்களை திறந்தவள் வேக,வேகமாக மூச்சை இழுத்து விட்டு “கொஞ்சம் நேரத்துக்கே மூச்சு வாங்குதே. தூங்கினாதான் சரி” என்று தூங்க முயன்றாள்.
மின்குமிழை எரிய விட்டு குழந்தைகளை முத்தமிட்டவன் மீண்டும் மின்குமிழை அனைத்து விட்டு அறைக்கு வந்தான்.
அறையிலுள்ள மின்குழிலை அனைத்து விட்டு கட்டிலில் சாய, பரா நன்றாகவே கண்களை இறுக்கிக் கொண்டு அசையாமல் நின்றாள்.
அவளை பின்னாலிருந்து கட்டிக் கொண்ட ஜெராட் “தூங்குறது போல நடிச்சது போதும். கொஞ்சம் இந்த பக்கம் திரும்பு” என்றான். அவன் குரலில் கோபம் சிறிதுமில்லை. அவளை இத்தனை நாட்கள் பிரிந்து இருந்து விட்டோமே என்று அவன் ஏங்குவது அவன் மூச்சுக்காற்றும், இதயத்துடிப்பும் அவளுக்கு கூற, அவன் சொல்லாத வார்த்தைகளுக்கு அவனது இறுகிய அணைப்பே அவளுக்கு சாட்ச்சி.
அந்த அணைப்பே ஜெராட் தன்னை தேடி வந்து விட்டான் என்று உணர்த்தினாலும், அவன் பேசியது மனத்தில் முள்ளாய் குத்த சட்டென்று அவன் மீது கோபமும் வந்தது. கூடவே தான் அகப்பட்டு கொண்டு விட்டோம் என்று தெரிந்தாலும், அதை ஒத்துக்கொள்ள பராவின் மனம் விரும்பவில்லை.
“உங்களுக்குத்தான் நான் பேசினாவே தொல்லையாக இருக்கே. அதான் உங்கள தொல்லை பண்ணாம தூங்க முயற்சி செய்யிறேன்” அவன் புறம் திரும்பாமலே கூறியவளின் குரல் சட்டென்று கமறி, கண்களிலிருந்து கண்ணீரும் முணுக்கென்று எட்டிப்பார்த்தது.
“ஹேய்… எதோ அன்னக்கி இருந்த மனநிலைல ஏதேதோ பேசியிருப்பேன். அதுக்காக அதையே நினைச்சி தொங்கிகிட்டு இருப்பியா. இங்க பாரு. சாரி…” தன் மீதுதான் தவறு என்று அறிந்ததால் ஜெராட் சட்டென்று மன்னிப்பும் கேட்டு விட்டான்.
காதல் கொண்ட அவள் மனம் உடனே சமாதானமடையுமா? “உங்க சாரி வேணாம். என்னமோ தம்பி கல்யாணத்துக்கு வந்ததாக சொன்னீங்க என்ன அத்த துரத்தி விட்டங்களா?” எதோ கோபத்தில் தான் கேட்டாள்.
“ஆமா… போ.. போய் பொண்டாட்டி கூட இருன்னு சொன்னாங்க” என்றான் ஜெராட்.
“என்ன? நிஜமாவா?” பக்கென்று சிரித்தவள் அவன் புறம் திரும்பியிருந்தாள். நிச்சயமாக எஸ்தர் அவ்வாறு சொல்பவள்தான். ஆனாலும் இரவென்றும் பாராமல் மகனை அனுப்பிவைப்பாளென்று பரா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
“எங்கம்மா என்ன திட்டினா உனக்கு எவ்வளவு சந்தோசம். ஊரு உலகத்துல இல்லாத மாமியாரும், மருமகளும். விடிஞ்சா, அந்திபட்டா போன்ல தொங்கிட்டு இருக்கிறீங்க. உங்க அம்மாகிட்ட கூட அவ்வளவு பேசியிருக்க மாட்ட. இரு அத்தைகிட்ட போட்டுக் கொடுக்குறேன்” மிரட்டும் குரலில் கொஞ்சினான்.
“ஐயே… எங்கம்மாவும் உங்கம்மாவும் தோஸ்து. அத்தைய கைக்குள்ள போட்டுக்கிட்டானு எங்கம்மா சந்தோஷம்தான் படுவாங்க. கோபமெல்லாம் படவே மாட்டாங்க” சிரித்தவாறே கூறிய பரா காலை தூக்கி அவன் மேல் வசதியாக போட்டுக் கொண்டாள்.
“இங்கயும் நான் ஸீரோவா” சிரித்தவன் “உண்மையிலயே என்ன நீ விட்டுட்டு போய்ட்டியோன்னு நினச்சேன்” என்றவன் பராவை இறுக கட்டிக் கொண்டான்.
“நான் எங்க விட்டுட்டு வந்தேன். அதான் தெளிவா சொல்லிட்டு தானே வந்தேன். எங்கம்மாக்கு உடம்பு முடியல. அதான் போறோம்னு. நீங்க அன்னக்கி வீட்டுக்கு வரலைனா நிஜமாகவே நான் உங்கள விட்டுட்டு வந்ததாக நினைச்சி இருப்பீங்க போல” ஜெராடின் நெற்றியில் முட்டியவள் “ஆனா நீங்க இப்போ எங்களுக்காக வரலையே” என்றாள். மனதுக்குள் ஆனந்தமும், சினமும் ஒன்றாக கலந்த உணர்வு. அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று பெண்ணவளுக்கு புரியவமில்லை. அவனை விட்டு விலக தோன்றவுமில்லை.
“ஆமா… ஆமா… அம்மா நைட்டு போக வேணாம்னு சொல்லியும் என் பொண்டாட்டிய பார்க்கணும் என்று வந்தேன் பாரு” என்றவன் “அம்மாக்கு உடம்பு முடியலன்னு போனவ ஒரு போனாவது ஏன் பண்ணல. விட்டுட்டு போகணும் என்று முடிவெடுத்து தானே போன் பண்ணாம இருந்த” அவள் மூக்கை செல்லமாக கடித்து வைத்தான்.
விமான நிலையத்திலிருந்து எஸ்தருக்கு அலைபேசி அழைப்பு விடுத்து வீட்டுக்கு வருவதாக கூற, முதலில் சந்தோஷப்பட்டவள் “ஏன்டா… பொண்டாட்டி புள்ளைய பார்க்காம நேரா இங்க வரேன்னு சொல்லுற? அறிவிருக்கா?” என்றுமில்லாமல் மகனை திட்டினாள் எஸ்தர்.
“உன்ன வச்சிக்கிட்டு என்ன பண்ணுறது?” நொந்து விட்டான் ஜெராட்.
அவனுக்கும் பராவை காண ஆசையும், ஆவலும் இருக்கத்தான் செய்தது. அன்னையை பார்த்து விட்டு பராவை காணச் சென்றால் அப்படியே அங்கு தங்கி விடலாமென்று இவன் நினைக்க, ஜான்சி உலகத்திலையே இல்லாத அத்தையாகி மருமகளையும், குழந்தைகளையும் முதலில் பார்த்து விட்டு வா என்று விட்டாள்.
சரிதான் சொன்னபடி செய்யாவிட்டால் வந்த உடன் திட்டு விழும் என்று பராவை காண வாந்தால் ஏன் வந்தாய் என்று கேட்பது போல் முறைத்துக் கொண்டு நிற்பவளை மாலை வந்து சமாதானப்படுத்திக் கொள்ளலாமென்று பராவின் கையால் சமைத்த உணவை கூட வேண்டாமென்று கிளம்பி விட்டான்.
அன்னையின் கையால் மதியம் சாப்பிட்டு விட்டு மாலையே கிளம்பி மாமனார் வீடு வந்தால் பொண்டாட்டி, குழந்தை என்று இருந்து விடலாமே.
இவன் கிளம்ப நினைக்கும் பொழுது ஜேம்ஸ் வந்து பேச ஆரம்பிக்க, சட்டென்று வர முடியவில்லை. சாதாரண பேச்சென்றால் வர முடியும். கல்யாண பேச்சாயிர்றே எப்படி வருவது? இரவுணவை வீட்டிலையே முடித்தவன் குழந்தைகளை காரணம் காட்டி கிளம்பி வந்து விட்டான்.
“ஓஹ்… அப்போ எங்களுக்காகத்தான் வந்தீங்களா… அப்போ நீங்க ஏன் ஒரு போன் கூட பண்ணல? நாங்க பண்ணலைனா நீங்க பண்ண மாட்டேங்களா?” ஜெராடின் கையை நன்றாக கிள்ளி விட்டாள். மூக்கை கடித்ததற்கு பழி வாங்குகிறாளாம்.
“நான் நீ விட்டுட்டு போய்ட்டானு நினைச்சி கோபத்துல கால் பண்ணாம இருந்த. நீ ஏன் பண்ணாம இருந்த?” அவளது பதில் தான் அவள் அவனை காதலிக்கிறாளா? இல்லையா என்று அவனுக்கு உணர்த்தி விடும். அதற்காகவே பதில் சொல்லுமாறு அவளை உலுக்கினான்.
“கோபத்துல இருந்தவரோட கோபம் எப்படி போச்சு? ஏன் எங்களை தேடி வந்தீங்க? முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க இந்த கேள்விக்கு அப்பொறம் பதில் சொல்லுறேன்” என்றாள் பரா. தங்களுக்காகத்தான் வந்தான் என்றதில் நெஞ்சம் நிறைந்தாலும் அவனது பதிலில்தான் அவள் மீதிருக்கும் காதல் தெரியும் என்பதால் இவளும் அவனது பதிலுக்காக அவனை பேசாத தூண்டினாள்.
“ஆ… உங்கம்மாவ வந்து பார்த்துட்டு போனாங்களே அதற்கு பிறகு எனக்கு போன் பண்ணாங்க. என்ன கேள்வி கேட்டது போதும் நீ சொல்லு. இல்ல நான் உன்ன கிள்ளுவேன்” அதே மிரட்டும் தொனி.
அதற்கெல்லாம் பரா அஞ்சுபவளா? “எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த பாடம் தான்” சிரிக்காமல் சொன்னவள் அமைதியாக அவன் என்ன சொல்வானென்று காத்து நின்றாள்.
“நானா? நான் எப்போ உனக்கு போன் பண்ண வேணாம்னு சொன்னேன்?” ஒருகணம் ஜெராடுக்கு பரா என்ன சொல்ல விளைகிறாள் என்று சுத்தமாக புரியவில்லை.
“என்னடி சொல்ல வர? விட்டு போகலானு சொல்லுற. நான்தான் விட்டு போக சொன்னான்னு சொல்லுற? நான் குடிச்சிட்டு உன்ன வீட்டை விட்டு போக சொன்னேனா? குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. அதையெல்லாம் சீரியஸ்ஸா எடுத்துப்பியா?” அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.
“ஆமா என்ன இன்னக்கி அதிசயமா குடிக்காம வந்திருக்குறீங்க?”
“அதெல்லாம் விட்டுட்டேண்டி.. அத எப்பயோ விட்டுட்டேன்” அவளை வார்த்தைக்கு வார்த்தை “டி” போட்டு பேசுவது கூட பராவின் கவனத்தில் இல்லை.
“எப்போ” அவனை நம்பாமல் கேட்டாள் பரா.
“அன்னக்கி நீங்க எல்லாரும் ஸ்ரீலங்காக்கு கிளம்பினப்போ. ரெண்டு நாள் வீட்டுக்கு வராம ஹாஸ்பிடல்ல இருந்து ட்ரீட்மெண்ட் எடுத்தேன்”
“தடுமால் காய்ச்சலா? ரெண்டு நாள்ல சரியாக?” அப்பொழுதும் அவனை நம்பாமல் கேட்டாள்.
“ஐவி போன சோகம், அவ பண்ண காரியம், குடிக்க காரணமா வேணும். அதுல இருந்து வெளிய வரணும் என்று முடிவு பண்ணா நாள் கணக்கு முக்கியமில்லை. மனதைரியம்தான் வேணும்”
“திரும்ப ஏதாவது வந்தா… ஐயா குடிக்க மாட்டீங்க என்று என்ன நிச்சயம்? பொம்பளைங்க நாங்க மட்டும் பிரச்சினைனு வந்தா சரக்க தேடித்தான் போறோமா? ஆம்பளைங்க நீங்க மட்டும் ஏன் போறீங்க? நாங்களும் போகவா?” அவனை மிரட்ட இவள் சொல்ல,
“குடும்பம் விளங்கும்” கொஞ்சம் சத்தமாகவே ஜெராட் சொன்னான்.
“ஆமா…ஆமா… குடிக்கிற ஆம்பளைங்க இருக்குற வீடு மட்டும் சீரும், சிறப்புமா இருக்கில்ல” நக்கலாக கூறினாள்.
“அதான் விட்டுட்டேன் இல்ல. இனி தொட மாட்டேன்”
“உங்கள நம்ப முடியாது. என் மேல சத்தியம் பண்ணுங்க”
“எதுக்கு இப்போ சத்தியமெல்லாம் கேக்குற? அதான் விட்டுட்டேன்னு சொல்லுறேன்” அவளை மேலும் தன்னுக்குள் இறுக்கி சமாதானப்படுத்தலானான்.
“உங்களுக்கு உங்க மேலையே நம்பிக்கை இல்ல. அதான் சத்தியம் பண்ண மறுக்குறீங்க” பரா ஜெராடை மீண்டும் கிள்ளினாள்.
“எனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம சத்தியம் பண்ணாம இல்ல. உன் மேல சத்தியம் பண்ண இஷ்டம் இல்ல”
“ஏன்… ஏன்.. ஏன்..” என்ன பதில் சொல்லி மழுப்பி போறான் என்ற ஆவல் மேலோங்க பரா ஜெராடின் பதிலுக்காக காத்திருந்தாள்.
“குடிக்கவே மாட்டேன் என்றா சத்தியம் பண்ணலாம். குளிர் அதிகமாக இருந்தா சரக்கு கொஞ்சூண்டு உள்ள போகும், பார்ட்டினு வந்தா கொஞ்சூண்டு குடிப்பேன். இப்போ சொல்லு உன் மேல எப்படி சத்தியம் செய்வேன்?” அவளிடமே கேட்டு வைத்தான்.
“பாத்தியா பாத்தியா உண்மைய சொன்னா கிண்டல் பண்ணுற. உன் கிட்ட பொய் சொல்லி இருக்கலாம். என்னைக்காவது பொய் சொன்னது தெரியவரும். அப்போ உன் மனசு கஷ்டப்படும். நமக்குள்ள பிரச்சினை வரும். அதுக்கு இப்போவே உண்மைய சொல்லிடலாமே”
ஜெராட் சொல்வது உண்மைதான். கணவன் மனைவிக்கிடையில் சமாதானப்படுத்தவென்று சொல்லும் சின்ன சின்ன பொய்கள் தான் பின்பு பூதாகரமாக வெடிக்கும். உண்மையை அப்பொழுதே கூறிவிட்டால் இருவரும் மற்றவரை புரிந்தும் கொள்வார்கள். விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள்.
“உனக்கு குளிருதுனா சொல்லு. உனக்கு நான் இருக்கேன். நானே சரக்க நிறுத்தலாம்னு இருக்கேன்” மறைமுகமாக குறிப்புக் காட்ட, அதை புரிந்து கொண்ட பரா வெட்கம் பிடுங்கித் தின்ன உதடு கடித்து அமைதியானாள்.
“என்ன மேடம் தூங்கிட்டீங்களா?” கிறக்கமாக இவன் கேட்க
“இல்ல… ஐவி… அவங்க மரணம்… அதுல இருந்து எப்படி வெளிய வந்தீங்க? அவங்க மாளிகைல செத்தது, அதுவும் தனிமைல, எவ்வளவு கொடுமை இல்ல. சாகும் போது அவங்க உங்கள நினைச்சிகிட்டே” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
தனக்கா ஒருத்தி இவ்வளவு கீழ்த்தரமான காரியத்தை செய்து விட்டாளே! ஐவி தன் மீது இவ்வளவு காதல் வைத்திருந்தாளா? என்று நினைத்து தாங்க முடியாமல் தான் குடிக்கவே ஆரம்பித்தான். ஏற்கனவே குடிக்கக் கூடாது என்று குடியிலிருந்து மீண்டவன் இப்பொழுதும் குடிக்கக் கூடாது என்று என்று நினைத்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பான்.
ஆனால் ஐவியின் நினைவுகளிலிருந்து அவனால் மீள முடியுமா? முழுமனதாக தன்னை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா? ஜெராட் நெருங்கி வந்த கணம் பராவுக்கு ஐவியின் ஞாபகம் சட்டென்று வந்திருக்க கேட்டு விட்டாள்.
மனதில் போட்டு உருட்டிக் கொண்டிருக்காமல் கேட்பதுதான் சரி. ஒவ்வொரு தடவையும் இதே நிலை உருவானால் தன்னால் ஜெராடை நெருங்க முடியாது. ஜெராட் ஐவியின் நினைவுகள் வருந்துகிறானோ இல்லையோ தான் ஜெராட் ஐவியை நினைத்துக் கொண்டு தன்னிடம் நெருக்குகிறானோ, அவளை மறக்க முடியாமல் நெருக்குகிறானோ என்று எண்ணி வருந்து வேண்டியிருக்கும் என்று எண்ணினாள்.
“ஐவி… ஐவிய நான் எவ்வளவு காதலிச்சேனோ அவளும் என்ன அவ்வளவு காதலிச்சா. அவளுக்கு அப்படியொரு கொடூரமான நோய் இருக்குறத தெரிஞ்சா சத்தியமா நானும் அவளை பின் தொடர்ந்து செத்துத்தான் போய் இருப்பேன்”
“ஜெராட்…” பரா ஜெராடின் வாயை கை கொண்டு மூட
அவள் கையை எடுத்து விட்டவன் “அப்படி நடக்கக் கூடாது என்றுதான் அவ என்ன விட்டு விலக முயற்சி செஞ்சா. சண்டை போட்டு பார்த்தா, கண்டபடி திட்டியும் பார்த்தா ஒன்னும் வேலைக்கு ஆக்கலைனு அப்படியொரு காரியத்தை பண்ணி நானே அவளை விட்டு விலகும்படி பண்ணிட்டா.
அவ அப்படி பண்ணது நான் நல்லா இருக்கணும், சந்தோஷமா வாழனும் என்றுதான். அந்த வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்கு. அவ ஆசை நிறைவேறியிருக்கு. சொல்லப்போனா… அது அவளோட கடைசி ஆசை. அதை கூட நான் நிறைவேத்தனும் இல்லையா?
அத விட்டுட்டு. அவ இப்படி பண்ணிட்டான்னு திரும்ப குடிச்சி அவ ஞாபகத்துல உன்ன கஷ்டப்படுத்தினா சத்தியமா அவ என்ன மன்னிக்க மாட்டா”
ஜெராட் பேசிக் கொண்டிருக்க…”அப்போ ஐவிக்காகத்தான் என்னை ஏற்றுக்கொண்டானா?” என்று நினைத்தாள் பரா.
“முதல்ல குடில இருந்து வெளிய வரணும் என்று ட்ரீட்மென்டுக்கு போக ஆரம்பிச்சேன். நைட்டு குடிச்சிட்டு வந்து காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு விட வண்டியோட்டக் கூட பயமாக இருந்தது. எனக்கு ஏதாவது ஆனா பரவால்ல. அவங்களுக்கு ஏதாவது ஆனா… அதனாலதான் அவங்கள ஸ்கூல் வேன்ல சேர்த்தேன்”
“ஓஹ்…”
“ஐவி மேல எவ்வளவு காதல் இருந்ததோ அவ்வளவு கோபமும் இருந்தது. அத உன் கிட்ட காட்ட ஆரம்பிச்சிட்டேன் என்றதும், எங்க பசங்க மேலையும் காட்ட ஆரம்பிச்சிடுவேனோனு உங்க கிட்ட இருந்து ஒதுங்கி இருந்தேன்.
ஓரளவுக்கு ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருந்தது. ரெண்டுநாள் ஹாஸ்பிடல்ல தங்க வேண்டியிருந்தது. தங்கிட்டு வந்தப்போதான் நீ ஊருக்கு கிளம்பிகிட்டு இருந்த.
நான் பேசின பேச்சாள நீ கோபத்துல கிளம்பிட்டதாகத்தான் நினச்சேன். ஆரம்பத்துல நானும் கோபமா இப்படியா நீ போவணு இருந்தேன். அப்பொறம் அத்தைக்கு உடம்பு முடியாம போனது தெரிய வந்ததும் நீ பொய் சொல்லலைனு தெரிஞ்சிகிட்டேன்.
உன் மனச நான் எவ்வளவு கஷ்டப்படுத்தியிருந்தா நீ என் கூட போன்ல பேசாம இருப்பான்னு யோசிச்சேன். நீ அப்படியெல்லாம் பண்ணுறவ இல்லையே. நான் உன்ன எவ்வளவு திட்டி ஒதுக்கினாலும் அத நீ கண்டுக்காம என் நிழல் போல கூடவே இருப்ப. அப்படிப்பட்ட நீ ஒரு மெஸேஜ் கூட ஏன் பண்ணல என்ற கேள்வி எனக்குள்ள வந்ததும் நான் உன்ன எவ்வாவு மிஸ் பண்ணுறேன்னு புரிஞ்சி கிட்டேன்.
நாம நிரந்தரமா பிரியக் கூடாது என்று நீ இங்க வந்தத பயன்படுத்திக் கிட்டு என் கூட பேசாம இருந்திருக்க”
அவள் என்ன நினைத்து ஜெராடை அழைத்து பேசவில்லையோ அதை அவன் சரியாக கணித்தான் என்றதும் பராவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
“ஆமா…. ஐவிய நிரந்தரமா பிரியக் கூடாது என்று நீங்க அமேரிக்கா போனதாக சொன்னீங்களே! நாம பிரியக் கூடாது என்று நான் ஸ்ரீலங்கா வந்தேன். அவ்வளவுதான்” என்றாள்.
“நீ இல்லாம சத்தியமா அந்த மாளிகைல என்னால இருக்க முடியல. இப்படி விட்டுட்டு போய்ட்டாளே என்று உன் மேல கொஞ்சம் கோபத்துல இருந்தேன். போகப்போகத்தான் என் மனசையே நான் உணர்ந்தேன். அப்பொறம்தான் எனக்கு புரிய வைக்க நீ பேசாம இருந்த என்று எனக்கு புரிஞ்சது” என்றான்.
“நீங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணவே இல்ல” கண்ணீரோடு சொன்னாள் பரா.
“அதான் கல்யாணமே பண்ணிட்டேன். இப்போ எதுக்கு”
“முடியாது முடியாது”
“எல்லாரும் ப்ரொபோஸ் பண்ணி காதலிக்கிறேன்னு சொல்வாங்க, இல்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்வாங்க. நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சு. ஐ லவ் யு என்று சொல்லைனாலும் காதலிக்கிறது தெரியும். ப்ரொபோஸ் பண்ணி ஹனிமூன் போலாமான்னுதான் கேட்கணும். சரி எங்க போலாம்னு கேட்குறேன்” ஜெராட் கிண்டல் செய்ய
“ஜெராட்…” பரா ஜெராடை அடிக்க ஆரம்பித்தாள்.
“ஹனிமூன் போறவரைக்கும் என் பாடி தாங்குமா… ஒரே ஒரு கிஸ்” என்றவன் அவளை முத்தமழையில் நனைய வைத்துக் கொண்டிருந்தான்.