பரா இலங்கைக்கு வந்து பத்து நாட்களாகி விட்டது. ஜெராடிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு கூட வரவில்லை.
பராவும் அவனை அழைத்துப் பேச நினைக்கவில்லை. தன்னையும் குழந்தைகளை தொல்லையாக நினைப்பவனை அழைத்து என்ன பேசுவது?
“நலம் விசாரிக்கவாவது அழைத்து பேசியிருக்கலாமே” என்று அவள் மனம் சொல்ல, கேட்டா மட்டும் பதில் சொல்வானா திட்டி விட்டு அலைபேசியை அனைத்து விடுவான் என்று அவள் மனமே கேலி செய்தது.
“அதற்காக ஒன்றும் நான் பேசாமல் இருக்கவில்லை. அதை விட முக்கியமான காரணம் இருக்கிறது” என்று சொல்லிக் கொள்வாள்.
லெனினும், ஜெஸியும் இலங்கைக்கு வந்த பிறகு ஜெராடை தேடவேயில்லை.
ஆசிரமத்துக்கு சென்று நண்பர்களை பார்ப்பதும், பால்ராஜோடு விளையாடுவது, கடைக்கு செல்வது, சைக்கிள் ஓட்டுவது என்று நேரம் செல்ல அப்பாவை தேடக் கூட நேரமில்லை.
ஜான்சிக்கு திடீரென்று உடம்பு முடியாமல் போனதில் என்ன செய்வது என்று புரியாமல் பராவை அழைத்து உடனே இலங்கைக்கு வருபடி கூறியிருக்கிறார் பால்ராஜ்.
காதலித்த பாவத்துக்காக மூத்த மகளை குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லாத போது, தொலைதூரத்தில் இருக்கும் மகளைத்தான் அழைக்க வேண்டி இருந்தது.
பால்ராஜுக்கு மாரடைப்பு வந்து உடம்பு முடியாமல் போன பொழுது குடும்பத் தலைவியான ஜான்சி தனியாளாக கணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தாள்.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுதும் அநேக நேரம் தனியாகத்தான் வந்து சென்றாள்.
பெண்களுக்கு இருக்கும் தைரியம் கூட சில ஆண்களுக்கு இருப்பதில்லை. அன்னையோ, மனைவியோ படுத்த படுக்கையானால் அடுத்து என்ன செய்வது என்று நிலைத்தடுமாறிப் போவார்கள்.
பால்ராஜும் அவ்வாறுதான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் பராவை அழைத்து விட்டார்.
அன்னைக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது என்றால் அவளால் நிம்மதியாக இருக்க முடியுமா? உடனே கிளம்பி விட்டாள்.
இரண்டு நாட்களாக ஜெராட் வீட்டுக்கு வரவில்லை. அலைபேசி அழைப்பு விடுத்தால் அவன் எடுக்கவில்லை. மாளிகையின் தலைமை வேலையாள் உதவியோடுதான் விமானத்துக்கான எல்லா ஏற்பாட்டையும் செய்து கொண்டு விமானநிலையத்துக்கு வண்டியையும் ஏற்பாடு செய்திருந்தாள்.
ஜெராட் வந்து தாங்கள் இல்லையென்றால் என்ன நினைப்பானோ என்ற கவலை மனதை வதைக்க, நல்லவேளை தாங்க வீட்டை விட்டு கிளம்பும் முன் அவன் வந்து விட்டான் சொல்லிக் கொண்டு வர முடிந்தது என்று பரா நினைக்க, அன்னையின் சிந்தனையில் இருந்தவளுக்கு ஜெராட் எந்த பதிலும் கூறாததில் அவனது மனதில் என்ன ஓடுகிறது என்று கணிக்கத் தவறினாள்.
பரா ஜான்சியை பார்த்துக்கொள்ள, பால்ராஜ் குழந்தைகளை பார்த்துக்கொண்டார்.
ஜான்சி படுக்கையில் இருப்பதால் ஜெராடோடு பரா பேசுகிறாளா? இல்லையா? என்று கவனிக்கும் மனநிலையில் இல்லை.
பால்ராஜுக்கு அந்த சிந்தனையே இல்லை. இருந்திருந்தால் “அப்பா போன் பண்ணலையா? அப்பா கூட போன்ல பேசலையா” என்று குழந்தைகளிடமாவது கேட்டிருப்பாரே.
நேர வித்தியாசம் வேறு இருப்பதால் பரா ஜெராடோடு அலைபேசியில் உரையாடிக் கொண்டுதான் இருக்கின்றாள் என்று பெற்றோர் நினைத்துக் கொண்டிருந்தனர்.
இலங்கைக்கு வந்த பின் ஜெராடோடு பேசாவிட்டாலும் ஜெராடை பெற்ற எஸ்தரை அழைத்து பேசியிருந்தாள் பரா.
“எப்படி இருக்கிறீங்க அத்த?”
“நான் நல்லா இருக்கேன்ம்மா… நீயும் குழந்தைகளும் எப்படி இருக்கிறீங்க? என் பையன் எப்படி இருக்கான்?” எப்பொழுது அலைபேசி அழைப்பு விடுத்தாலும் எஸ்தர் கேட்பதுதான்.
“நாங்க நல்லாத்தான் இருக்கோம். உங்க பையன் எப்படி இருக்கார் என்று தெரியலையே அத்த” பரா கேலி போல் கூறினாலும் உண்மையைத்தான் கூறினாள். அவள் தான் இப்பொழுது இலங்கையில் இருக்கின்றாளே. இங்கிலாந்தில் ஜெராட் என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்று அவளுக்கு எப்படித் தெரியும்?
அவளை பதற வைக்காமல் “அம்மாக்கு உடம்பு முடியலன்னு அப்பா போன் பண்ணாரு. நான் பசங்கள கூட்டிகிட்டு இங்க வந்துட்டேன். உங்க பையன் தனியா அங்கதான் இருக்காரு. ஏன் உங்க பையன் என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு சந்தோஷமா உங்களுக்கு போன் போட்டு சொல்லலையா?” மனதின் வலியையும் மீறி கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டாள் பரா.
ஜான்சிக்கு ரொம்பவே உடம்பு முடியாததால் வந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் பரா எஸ்தரை அழைத்து பேசியதே. தன்னை அழைத்து பேசாதவன் அன்னையை அழைத்துப் பேசி ஜான்சிக்கு உடம்பு முடியாமலிருப்பதைக் கூறியிருந்தால், எஸ்தர் கிளம்பி வந்திருப்பாள். ஜான்சியை பார்க்கும் சாக்கில் பராவும் குழந்தைகளும் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்திருப்பான் என்றுதான் எண்ணினாலே ஒழிய எஸ்தர் வரவில்லையென்றதும் ஜெராட் அழைத்திருக்க மாட்டான் என்று எண்ணவில்லை. எஸ்தருக்கு உடம்பு முடியாமல் இருக்கின்றாளோ என்றுதான் எண்ணினாள்.
“அட போம்மா… நான் போன் போட்டா… அம்மா நல்லா இருக்கியாம்மா, மாத்திரை போட்டியாம்மா, உடம்ப பாத்துக்கம்மானு சொல்லுவான். அவன் எங்க போன் பண்ணுறான். அப்படியே பண்ணாலும் இதைத்தான் கேப்பான். அவன் கூட பேசுறதுக்கு உன் கிட்டயே பேசலாம்” எஸ்தரும் சிரித்தாள்.
தன்னோடு வந்து இங்கிலாந்தில் தங்கிக்கொள்ளுமாறு ஜெராட் பலமுறை எஸ்தரை அழைத்துப் பார்த்தான். ஐவியோடு தங்க எஸ்தருக்கு சுத்தமாக இஷ்டமில்லை. அதனாலயே “அங்க குளிரும், எனக்கெல்லாம் அங்க வந்து இருக்க முடியாது” என்று ஏதேதோ காரணம் கூறி மறுத்து விட்டாள்.
அதன்பின் ஜெராடும் எஸ்தரை அழைப்பதே இல்லை. வயதான அன்னையிடம் அவன் வேறு என்னதான் பேசுவதாம்? வேளாவேளைக்கு மாத்திரையை போடும்படியும் உடம்பை பார்த்துக் கொள்ளும்படியும்தான் கூற முடியும்.
ஆனால் பரா போன் பண்ணினால் சமயலிலிருந்து காலநிலைவரை பேசுவாள்.
என் மகனுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும். இப்படி பண்ணிக்க கொடு என்று எஸ்தர் கூற, பராவும் செய்ததை போட்டோ எடுத்து அனுப்பி வைப்பாள்.
“நீ சமைக்கிறத நா சாப்பிட கொடுத்து வைக்கலையே என்று இவர்கள் பேச்சு இருக்கும். இப்படி ஜெராடிடம் பேசுவதில்லையே அதைத்தான் எஸ்தர் பராவிடம் கூறினாள்.
“அம்மாக்கு உடம்பு முடியலன்னு தெரியலையே. போன வாரத்துக்கு முந்தின வாரம் கூட சேர்ச்ல பார்த்து பேசினோம். போன வாரம் உங்க அம்மாவ சேர்ச்ல காணல. உடம்புக்கு முடியாம இருப்பாங்கன்னு நினைக்கலையே. மனுஷனுக்கு எப்போ என்ன நடக்கும் என்றே தெரியாது. இதுல கோட்ட கட்டி வாழனும் என்று ஆசை. சரிம்மா.. நா நாளைக்கு அம்மாவ பார்க்க வரேன்” என்று எஸ்தர் அலைபேசியை துண்டித்திருந்தாள்.
“அம்மாக்கு போன் போட்டு மாத்திரை போட்டியான்னு மட்டும்தான் கேப்பாரா? அத கேட்கக் கூட இவருக்கு நேரம் இல்லையா? நாங்க இல்லனா நல்லா குடிச்சிட்டு மாட்டயா கிடப்பாராய்க்கும்” ஜெராடை மனதுக்குள் வசைபாடலானாள் பரா.
“ஜெராட் தனியாக என்ன செய்து கொண்டிருப்பான்? ஒழுங்காக சாப்பிட்டானா?” என்று சிந்திக்கும் பாராவுக்கு மாளிகைக்கு அழைத்து வேலையாட்கள் யாரிடமாவது ஜெராடை பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணம் கூட வரவில்லை.
அவள் எண்ணத்தில் டேவிட் மட்டும் வந்து போக அவன் அலைபேசி எண் தெரியவில்லை என்று சோகமானவளுக்கு ஜெராடை அழைத்துப் பேச மனம் வரவில்லை.
ஜான்சி ஓரளவுக்கு உடம்பு தேறிவிட்டாள். உடம்பு தேறிய உடனே பராவிடம் ஜான்சி “மாப்பிள எப்படி இருக்காரு. மாப்புள உன்ன நல்லா பாத்துகிறாரா? நீ சந்தோஷமா இருக்குறியா? இப்போவே உனக்கு இருப்பத்தி நான்கு வயசாகுது சீக்கிரம் கொழந்த பெத்துகிறத பத்தி யோசி” ஜெசியையும், லெனினையும் பார்த்தவாறே “என்ன இருந்தாலும் இதுங்க நம்ம ரெத்தம் இல்லையே. உனக்கு என்று ஒரு கொழந்த இருந்தா தான் மாப்பிள்ளை உன் கூட அன்பா இருப்பாரு” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, பேசாம இங்கிலாந்திலையே இருந்திருக்கலாமோ என்று நினைத்தாள்.
“ஆஹ்… என்னைக்கும் இல்லாம இன்னைக்கி என்னடி அப்பா… அவருதான் இங்கிலாந்துல இருக்காரே. இல்லாத அவர் எப்படி உனக்கு கத சொல்ல முடியும்? வா நான் உனக்கு கத சொல்லுறேன்” என்றாள்
குழந்தையையும் சமாளிக்க வேண்டும், தனையே பார்த்திருக்கும் அன்னையையும் சமாளிக்க வேண்டும்.
“அப்பா நம்ம கூட தினமும் சாப்பிட்டு உங்க ரெண்டு பேருக்கும் கதை சொல்லி தூங்க வச்சிட்டு, என் கூட பேசிட்டுதான் உங்கப்பா தூங்குவாரு. இப்போ இங்க வந்தும் அப்பா வேணும் என்றா நான் எங்க போவேன். சமத்து குட்டியா நான் ஊட்டி விட்டப்போ சாப்பிட்டல்ல. இப்போ நான் உனக்கு ஒரு கதை சொல்லுறேன் அமைதியா தூங்கு சரியா அப்பா வந்தா அப்பா உனக்கு கதை சொல்வார்”
தனக்கும் தன் கணவனுக்கும் இடையில் நல்ல உறவு இருப்பதாக அன்னைக்கு கூறியதோடு குழந்தையும் சமாதானப்படுத்தியாகிற்று.
அதன்பின் ஜான்சி பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை. ஆனாலும் “சம்மந்தியம்மா வந்துட்டு போனப்போ கூட மாப்பிள்ளை வர்றதா சொல்லல. மாப்பிள்ளை வருவாரா? மாட்டாரா? எனக்கு குணமாச்சு என்று நீ குழந்தைகளை கூட்டிகிட்டு போய்டுவியா?”
“இப்போ என்னம்மா? என் புருஷன் வந்து கூட்டிட்டு போகலானா? நான் போகவா? இங்கயே இருக்கவா?” நாடியை தடவி யோசிப்பது போல் பாவனை செய்தாள் பரா.
உண்மையில் அவளது மனதுக்குள் இந்த கேள்வி இருக்கத்தான் செய்தது. என்ன? கொஞ்சம் வேற மாறி இருந்தது. பரா ஜெராட் வந்து தங்களை அழைத்து செல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. தங்களை தொல்லையென்று நினைப்பவன் திரும்ப சென்றால், திரும்பிச் சென்றால் எவ்வாறு வரவேற்பான்?
தொல்லையென்று மீண்டும் உதாசீனப்படுத்துவானா? அல்லது பழையபடி நல்லமுறையில் நடந்து கொள்வானா தெரியவில்லை.
அவன் அலைபேசி அழைப்பு விடுக்காததை பார்க்கையில் பழையபடி இனி வாழ்வது சாத்தியமில்லை என்றுதான் தெரிகிறது.
என்ன செய்வது? எப்படி ஜெராடை பழையபடி மாற்றுவது என்ற சிந்தனையில் இருந்தவளிடம் தான் ஜான்சி இந்தக் கேள்வியி கேட்டிருந்தாள்.
“ஏன் தனியாகத்தானே வந்த. தனியாக வந்தவளுக்கு தனியாக போகத் தெரியாதா? மாப்புள வந்துதான் கூட்டிகிட்டு போகணுமா” நொடித்தாள் ஜான்சி.
அடுத்த வாரம் பால்ராஜ் மற்றும் ஜான்சியின் திருமணநாள் வருகிறது. பிறந்தநாள், திருமணநாள் என்று வீட்டிலையே குடும்பமாக கொண்டாடுவதுதான்.
வயதான காலத்தில் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது வாழ்த்தல்ல, கூட இருப்பது தானே. தொலைதூரத்திலிருந்து அலைபேசி வழியாக வாழ்த்து தெரிவிப்பது கூடவே இருப்பதும் ஒன்றா?
பராவுக்கு தங்களது திருமணநாள் ஞாபகம் இருக்குமோ என்னவோ? கணவனிடம் செல்ல வேண்டும் என்று இருக்கும் பெண்ணை தங்களது திருமணநாளை காரணமாக் கூறி தங்களோடு இன்னும் சில நாட்கள் இருத்திக்கொள்ள முடியுமா?
திருமணம் செய்து கொடுக்கும் வரை பெண்ணை பெற்றவர்களுக்கு நிம்மதியில்லை. கட்டிக்க கொடுத்தப் பின் பெண் வீட்டுக்கு வர மாட்டாளா என்ற எதிர்பார்ப்பு இருக்கும், வந்தால் இன்னும் கொஞ்சம் நாட்கள் இருக்க மாட்டாளா என்ற ஆசை இருக்கும்.
அந்த ஆசைக்காக இரு என்றும் சொல்ல முடியாமல், எப்பொழுது திரும்ப போகப் போகிறாய் என்று கேட்கவும் முடியாமல் ஜான்சி பராவிடம் ஜெராட் வருவானா? மாட்டானா? என்று கேட்டிருந்தாள்.
பெற்றோரின் திருமணநாள் பராவுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. அடுத்தவாரம் திருமணநாள் இருக்க, சட்டென்று கிளம்பவும் மனம் வரவில்லை. இருந்து கொண்டாடி விட்டே செல்லலாம். போனால் கிரிஸ்மசுக்கும் வர மாட்டோம் என்று எண்ணினாள்.
“இன்னும் பத்துநாள் இருந்துட்டுதான் போவேன். என்ன துரத்தலாம் என்று கனவு காணாத போ… போய் ரெஸ்ட் எடு” அன்னையை துரத்த,
“மாப்பிள்ளையையும் இப்படித்தான் அதிகாரம் பண்ணுவியா?” முறைத்தாலும் சந்தோசமாக அகன்றாள் ஜான்சி.
“அப்பா…. அப்பா….” ஜெஸி வாசலில் சத்தம் போடுவது சமயலறையில் வேலை செய்து கொண்டிருந்த பராவின் காதில் விழ,
“ஆரம்பிச்சிட்டாளா…. அந்த மனிசன் எதை எதையோ கொடுத்து கூப்பிட்டு பார்த்தார். கதை சொல்லி பார்த்தார். பேசிப்பார்த்தார். என்னெல்லாம் செஞ்சாலும் திரும்பிக் கூட பார்காதவ அவர் கண்டுகொள்ளாத போதும் தேடாதவ, அவரை காணல்ல என்றதும் இப்படி தினமும் தேடுறா.
இவ இப்படி அப்பா அப்பான்னு கூப்பிடுறத கேட்டா அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார். இத கேட்க்க கூட அவருக்கு கொடுத்து வைக்கல” மனதுக்குள் வருந்தினாள்.
“ஹேய் வாடி செல்ல குட்டி… அப்பா கிட்ட வா…” என்று ஜெராட் ஜெஸியை தூக்கி தட்டாமாலை சுற்றி கன்னத்தில் முத்தம் வைக்க, லெனினும் அவனிடம் ஓடி கட்டிக் கொண்டான்.
ஜெராடின் குரல் கேட்டதும். செய்யும் வேலையும் ஓடவில்லை. “வந்துட்டான்னா… உண்மையிலயே வந்துட்டான்னா…” பராவால் நம்ப முடியவில்லை.
அவள் வாசலுக்கு விரைய “வாங்க மாப்புள, வாங்க வாங்க…” என்று ஜான்சியும், பால்ராஜும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
வாசலுக்கு வந்தவள் ஜெராடை தங்களை தேடி வந்து விட்டானா என்று ஆச்சரியப்பட்டு பார்க்க, அவனோ இவளை கண்டு கொள்ளவேயில்லை.
பராவுக்கு ஒரு தங்கை இருந்திருந்தால் “என்ன மச்சான் அக்காவை பிரிஞ்சி இருக்க முடியாதா? பின்னாலையே ஓடி வந்துட்டீங்க” என்று கேலி செய்திருப்பாள்.
அதற்கு ஜெராட் சொல்லும் பதிலை வைத்து அவன் மனதில் என்ன இருக்குறது என்று ஓரளவுக்கேனும் பரா கணித்திருப்பாள். இங்கே அந்த கொடுப்பணையுமில்லை.
என்ன திடீரென்று வந்திருக்கிறாய் என்று கேட்கவும் முடியாது? எங்களை காணவா வந்தாய் என்று கேட்கவும் தோணவில்லை. எங்கள் பிரிவு அவ்வளவு வலியென்றால் ஒரு வீடியோ கால் செய்திருக்கலாம் அதுதான் இல்லையே. அவனாக சொன்னால் தான் உண்டு. அதற்காக கேற்காமல் இருக்க முடியுமா?
பொதுவாகவே அன்னை மகனுக்கு இடையில் மருமகள் கூட வருவதை எந்த அம்மாவும் விரும்ப மாட்டாள். ரொம்ப நாள் கழித்து ஊருக்கு வந்த மகன் தன்னை காண வராமல் பொண்டாட்டியை காணச் சென்றால் சராசரியான அன்னையர்கள் கோபம் கொள்ளத்தான் செய்வார்கள்.
ஆனால் எஸ்தர் அவ்வாறு நினைப்பவளல்ல. மகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைப்பவள். அதை நன்கு அறிந்திருந்தும் பரா இந்தக் கேள்வியை கேட்கக் காரணம் ஜெராடின் பதில் என்னவாக இருக்கும் என்பதுதான்.
“ஏன் வந்தாய்?” என்று நேரடியாக கேட்காமல் இவ்வாறு சுற்றி வளைத்துக் கேட்டிருந்தாள்.
“வந்த உடனே அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். பசங்கள பார்த்துட்டு வீட்டுக்கு போய்டுவேன். ஜேம்ஸுக்கு கல்யாண தேதி குறிச்சாச்சே. சோ நா இல்லாம எப்படி கல்யாணம் பண்ணுறது அதான் வந்தேன்” என்றான். ஜெராட்.
ஜெராடின் தம்பி ஜேம்ஸுக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் என்றோ முடிந்திருந்தது. ஜெராட் என்று இலங்கை வருகிறானோ அப்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று எஸ்தர் அவனிடம் கூறியிருந்தாள்.
“நான் வந்து கல்யாணத்த நடாத்தி வைக்கவா போறேன்? அவன் வாழ்க்கை. அவன் விருப்படி செய்ய விடுங்க” என்றான் ஜெராட்.
“உன்ன போல யாரும் இல்லாத அநாதை போல கல்யாணம் பண்ண அவனால முடியாதாம். குடும்பத்துல எல்லாரும் இருக்கணும் என்று அவன்தான் சொல்லக் சொன்னான்” ஐவியை இங்கிலாந்தில் குடும்பத்தார் இல்லாமல் தனியாகத்தான் திருமணம் செய்து கொண்டான் ஜெராட் அதைத்தான் சந்தடி சாக்கில் சொல்லிக் காட்டினாள் எஸ்தர்.
ஜெராட் மற்றும் பராவின் திருமணத்தை கோலாகலமாக எஸ்தர் நடாத்தியிருந்தாலும், இருவருக்குமே இது மறுமணம் எப்படி வாழ்வார்களோ என்று ஒருசிலர் எஸ்தரின் காதுபடவே பேசியிருந்தனர்.
உண்மையில் அவளுக்கு ஜெராடும், பராவும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று குதர்க்கமாக பேசியவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று ஆசை. அதை மருமகளிடம் சொன்னால் புரிந்துக்கொள்வாள். மகனிடம் சொன்னால் “எதுக்கு ஊரார் பேச்செய்யெல்லாம் காதில் போட்டுக் கொள்ளுறீங்க” என்று அன்னைக்கே புத்திமதி சொல்வானென்று தான் இவ்வாறு பேசி அவனது வாயை அடைத்திருந்தாள் எஸ்தர்.
அன்னைக்கும் தனக்கும் இவ்வாறு ஒரு பேச்சு வார்த்தை சென்றது பராவிடம் கூற முடியுமா? தம்பியின் திருமணத்துக்காக வந்தேன் என்றான் ஜெராட்.
நான் உன்னை பார்க்க வரவில்லை. அம்மாவுக்காக வந்தேன். அதுவும் என் தம்பியுடைய கல்யாணத்துக்காக வந்தேன் என்று தெளிவாகவே சொன்னவன் குழந்தைகளை மட்டும் பார்க்க ஏன் வந்தான்? பிரிந்திருந்திருந்த இந்த குறுகியகாலத்தில் உண்மையிலையே குழந்தைகளை பிரிந்திருக்க முடியாமல் பார்க்க வந்தானா? அல்லது வீட்டுக்கு சென்றால் அன்னை பொண்டாட்டியையும் குழந்தையையும் பார்க்காமல் நேராக இங்கே ஏன் வந்தாய் என்று கேட்பாளேன்று வந்தானா?
வந்த இடத்தில் ஜெஸி அவனை “அப்பா…” என்று அழைப்பாளென்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். என்னதான் வேண்டானென்று ஒதுக்க முனைந்தாலும் கொஞ்சம் காலமேயானாலும் குழந்தையின் மீது வைத்த பாசம் இல்லாமல் போகுமா?
எத்தனை நாட்கள் ஜெஸி அவனை அப்பா என்று அழைக்க மாட்டாளா? அவனோடு பேசமாட்டாளா? அவனை பார்த்து சிறு புன்னையாவது சிந்தமாட்டாளா? என்று ஏங்கி இருப்பான்.
ஜெஸி “அப்பா” என்று அழைத்ததும் அவனையறியாமலே பாசம் மேலோங்க குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்திருப்பான் என்றுதான் எண்ணினாள் பரா.
எது எப்படியோ தனக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஜெராட் வராவிட்டாலும் குழந்தைகளின் மீதான அவனது பாசம் உண்மையானது. அதை வைத்தே அவனை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தாள்.
“இப்போவே வீட்டுக்கு போக மாட்டீங்களே மாப்புள .பரா சமைக்கிறா இருந்து சாப்பிட்டுட்டு போங்க” என்றாள் ஜான்சி.
“ஐயோ அத்த நான் போன் பண்ணதும் அம்மா விருந்தே சமைக்கிறதா சொல்லிட்டாங்க. நான் இங்க சாப்பிட்டுட்டு போனா அம்மா திட்டுவாங்க” பராவை பார்த்தவாறுதான் கூறினான்.
ஐவியின் இறுதிச் சடங்குக்கு சென்று வந்ததிலிருந்து ஜெராட் தங்களோடு ஒன்றாக உணவருந்தவே இல்லையே. இனி நீ சமைப்பதை சாப்பிட மாட்டேன் என்பதுதான் அவன் பேச்சின் அர்த்தமோ? பரா எதுவும் பேசவில்லை. எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்க முடியும்? பார்க்கலாம் ஜெராடை முறைத்தாள் பரா.
அவளை பார்த்தால் தானே அவள் முறைப்பது அவனுக்குத் தெரியும் குழந்தைகளோடு ஐக்கியமானவன் பால்ராஜ் மற்றும் ஜான்சியிடம் கூறிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.