Advertisement

அத்தியாயம் 14
போலீஸ் வண்டிகள் வரிசையாக மாளிகையின் முன் வந்து நிற்க, என்னவென்று புரியாமல் அனைவரும் அங்கே சென்றனர்.
கேப்டன் உட்பட நிறைய போலீஸ் ஆபீஸர்ஸ் வந்திருந்ததோடு. ஒரு ஆம்பியூலன்ஸ் மற்றும் போரான்சிஸ் டீம் கூட வந்திருந்தனர்.
என்ன நடக்கிறது என்று கேட்கக் கூட ஜெராட் இருந்த மனநிலையில் தோன்றாமல் நின்றிருக்க, டேவிட் தான் கேப்டனிடம் என்னவென்று விசாரித்தான்.
கேப்டன் என்ன கூறினாரோ டேவிட்டின் அதிர்ந்த முகம் கண்டு மற்ற நண்பர்களும் என்னவென்று விசாரிக்க, “ஐவி… ஐவி… மாளிகைக்கு உள்ளதான் இறந்து கிடக்குறாளாம்” என்றான்.
“என்ன?” அதிர்ச்சியில் உறைந்த ஜெராட் அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்து மாளிகையை நோக்கி ஓடினான்.
டேவிட் சொன்னதில் ஐவி மாளிகைக்குள் இருக்கிறாள் என்றுதான் புரிந்து கொண்டிருந்தான் ஜெராட். “ஐவி எப்பொழுது மாளிகைக்கு வந்தாள்? வந்தவள் மாளிகைக்குள் எங்கே தொலைந்து போனாள். ஒருவேளை இரகசிய அறைக்குள் இத்தனை நாட்களாக மறைந்திருந்து என்னை பார்த்திருந்தாளோ.  
ஏன் இவ்வாறெல்லாம் செய்கின்றாளோ. என் மனதை குடைந்து கிழிப்பதே அவள் வேலை” ஜெராட் இரகசிய அறையில் தான் ஐவி இருப்பாள் என்று அங்கு செல்ல முனைய அவனையே மாளிகைக்குள் விடாமல் காவலாளிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
“அவசரபடாதீங்க மிஸ்டர் ஜெராட். உங்க முன்னாள் மனைவியின் இறப்புக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று தெரியும் இருந்தாலும் உங்களையும் இங்க இருக்குறவங்களையும் விசாரிக்கணும். அதுக்காக காலைல வரோம். இப்போ எங்களுக்கு எங்க வேலைய செய்ய விடுங்க” ரொம்பவே பொறுமையாக அவனிடம் பேசினார் கேப்டன்.
கேப்டன் ஐவி இறந்து விட்டாள். அதுவும் அவளது உடல் மாளிகையில் தான் இருக்கிறது என்ற பின்தான் ஜெராட் சுயநினைவுக்கே வந்திருந்தான். “கேப்டன். காணாமல் போன ஐவி இங்க எப்படி? எனக்கு ஒன்னும் புரியல” ஜெராட் கேப்டனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பராவும் அவனருகில் வந்து நின்றாள்.
அப்பொழுதும் தன்னை கண்காணிக்கும் நபர் ஐவியாக இருக்குமோ என்று எண்ணம் பராவினுள் எழ, “ஐவி மாளிகையினுள் இறந்து விட்டதாக சொல்கிறார்களே. எப்படி இறந்தாள்? என்று மாளிகைக்குள் வந்தாள்? என்று இறந்தாள்? இவர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்?” என்ற கேள்விகள் பராவின் கண்முன் வந்து நிற்க வாய் திறந்து கேட்கத்தான் இல்லை.
கேள்விகள் பூதாகரமாக அவள் கண்முன் நின்றதோடு, தங்களது மாளிகையில் ஐவி இறந்ததினால் ஜெராடுக்கு பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சம் பராவின் மனதை இறுக்கி. உடல் ஆட்டம் கண்டது.
சாதாரணமாக இறந்ததை கூட ஜெராட் கொலை செய்து விட்டான் என்று ஊர் பேச ஆரம்பித்தால் தங்களது நிம்மதி குலைந்து விடுமே. அது இப்பொழுதே நிகழ்வது போல் காட்ச்சிகள் தோன்றி அவளை நிலைகுலைய செய்ய தடுமாறி ஜெராடின் மேலையே சரிந்தவளை அவன் அணைவாக பிடித்துக் கொண்டான்.
ஐவியின் மரணம் அவனுக்கு அதிர்ச்சியென்றால், என்று மரணித்தாலோ பிணத்தோடு எத்தனை நாட்கள் மாளிகையில் இருக்கின்றோம் என்று பராவுக்கு அதிர்ச்சி இல்லாமலா இருக்கும்? விழப் போனவளை ஜெராட் அனிச்சையாக பிடித்திருந்தாலும், அவளை விட்டு விலகவோ, தன்னிடமிருந்து பிரிக்கவோ தோன்றாமல் நின்றிருக்க, பரா அவனை நினைத்து கவலையடைந்தாள்.
மாளிகையினுள் போரான்சீஸ் டீம் ஐவியின் உடலை ஆட்டிகிள் வைத்தே முதற்கட்ட பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.
ஜெஸிகாவை அழைத்த டேவிட் அனைவரும் உணவருந்தி விட்டதால் கூட்டம் வேண்டாமென்று கிளம்புமாறு கூற, அவளும் நண்பர்களை வழியனுப்பி வைக்கலானாள். 
“கேப்டன் ஐவி மாளிகைக்குள் இறந்து கிடப்பதாக உங்களுக்கு யார் தகவல் சொன்னாங்க. காணாமல் போன ஐவி மாளிகைக்கு எப்போ வந்தா?” டேவிட் தான் கேப்டனை கேட்டான்.
கேள்வி கேட்க்கும் நிலையில் ஜெராட் இல்லையே! சிந்திக்கும் திறனையே இழந்து கவலையில் மூழ்கியிருந்தான்.
“நான் தான் சொன்னேனே ஐவிக்கு இந்த மாளிகைலதான் எதோ ஆச்சுன்னு. நான் அன்னைக்கி சொன்னப்போவே தேடியிருந்தா அவளை காப்பாத்தி கூட இருந்திருக்கலாம்” என்று வான்யா சொல்ல கதறி அழ ஆரம்பித்தான் ஜெராட்.
“ஏம்மா நீ கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறியா” டேவிட் வான்யாவை சிடுசிடுக்க, கேப்டன் பேச ஆரம்பித்தார்.
“மிஸ்டர் ஜெராட் ஸ்ரீலங்காக்கு போய் இருந்த போது அவரை பார்க்க மிஸ் ஐவி வந்திருக்காங்க. அவங்க இங்க வந்தப்போ கம்பனியோட வருடாந்த செலெப்ரேஷனுக்காக மாளிகைல ரெனவேஷன் வேலைகள் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருக்கு. அப்படின்னா மிஸ் ஐவி வரும் பொழுது இங்க யாருமே இல்ல. சோ அவங்க இங்க வந்தத யாருமே பார்க்கல” என்ன நடந்ததிருக்கும் என்பதை அனுமானமாக கூறலானார் கேப்டன்.
கேப்டனின் பேச்சில் குறுக்கிட்ட வான்யாவோ “நான் அப்பவே சொன்னேன். ஐவி இங்க தான் வந்தா இந்த மாளிகைக்குத்தான் வந்தானு. என் பேச்ச கேட்டிருந்தா அவளை என்னைக்கோ கண்டு பிடிச்சிருக்கலாம். எங்க அவ?”
வான்யாவை ஒரு பார்வை பார்த்த கேப்டன் “மிஸ்ட ஜெராடுக்கும் அவங்களுக்கும் விவாகரத்து ஆனது உங்களுக்குத் தெரியும் தானே. தெரிஞ்சிருந்தும் அவரை பார்க்க அவங்கள தனியாக ஏன் அனுப்பினீங்க?” என்னதான் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அஜாக்கிரதையால் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடிவதில்லையே என்ற கோபம் உள்ளுக்குள் இருக்க சற்று காட்டமாகவே கேட்டார் கேப்டன்.
“அப்படீன்னா ஜெராட் தான் ஐவிய கொலை பண்ணதாக சொல்லுறீங்களா?” வான்யாவின் வார்த்தைகள் அவ்வாறு இருந்தாலும் கண்கள் நீ சொன்னாலும் நான் அதை நம்ப மாட்டேன் என்றுதான் இருந்தன.
கேப்டனும் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லையே. ஜெராடின் மேல் சந்தேகம் இருந்திருந்தால் என்றோ அவனை கைது செய்து விசாரித்திருந்திருப்பார்.
“அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு முடியாம இருந்திருக்காங்க. அப்படியிருக்குறவங்கள ஜெராட்ட பார்க்க என்ன? தனியா எங்கயும் அனுப்பியது உங்க தவறு என்று சொல்லுறேன். வந்தவங்க இங்க மயங்கி விழுந்திருக்காங்க”
“நீங்க சொல்லுறத புரியல கேப்டன். மயங்கி விழுந்திருந்தா கண் முழிச்சு அவளே போய் இருப்பா. இல்ல யாராவது பார்த்து ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணியிருந்திருப்பங்களே” என்றான் ஜெராட்.
ஐவிக்கு என்னதான் நடந்தது? அவள் ஏன் இறந்தாள்? அதுவும் ஆட்டிக்கிள். சற்று முன்தான் அவளுக்கு கொடுமையான நோய் இருப்பதை தன்னிடமிருந்து மறைத்து தன்னை வில்லனாக்கினாள். இப்பொழுது என் வீட்டிலையே இறந்து என்னை பாவியாகின்றாள். 
“ஆமாம். சாதாரண மயக்கமாக இருந்தா அவங்களே எந்திரிச்சு போய் இருந்திருப்பாங்க. உடம்பு முடியாதவங்க மயக்கம் போட்டு விழுந்தா யாராவது வரும் வரைக்கும் தான் இருக்கணும். வந்தவன் நல்லவனாக இருந்தா ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணுவான். குறைந்தபட்சம் அக்கம் பக்கத்துல உதவிக்காகவாதது ஆட்களை கூப்பிடுவான்.
வந்தவன் சைக்கோவாக இருந்தா?” கேப்டனின் கேள்வியில் ஜெராட் மட்டுமல்லாது அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.
“நீங்க என்ன சொல்ல வரீங்க?” பரா அவனை இறுக பிடித்துக் கொண்டாள். அவள் கால்கள் ஆட்டம் காண அங்கிருந்த இருக்கையில் அவளை அமர வைத்தான் ஜெராட்.
இந்த ஏரியால நிறைய மேன்ஷன்ஸ் இருக்கு. என்னதான் செக்கியூரிட்டி சிஸ்டம் போட்டாலும், அந்த காலத்து பொருட்களை எவனாச்சும் திருடுவானோனு போலீஸ் பெட்ரோல் கார் சதா சுத்திக்கிட்டுதான் இருக்கும். ஏரியாகு புதுசா யாராசையும் பார்த்த உடனே புடிச்சி விசாரிக்கிறது நம்ம வழக்கம்” என்ற கேப்டன் பராவை பார்க்க மறக்கவில்லை.
அவளை பார்த்த உடன் கண்டும் காணாமல் போகாமல் காவலாளிகள் சட்டென்று வண்டியை நிறுத்தி இறங்கி வந்து விசாரித்தது இதற்காகத்தான்.
இவளுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. தன்னை தீவீரவாதியென்று நினைத்து இவள் தப்பித்து ஓடியதிலும் குழந்தைகளை தனியாக விட்டு வந்தததிலும் தான் அத்தனை கலவரமும் நிகழ்ந்தேறியிருந்தது. தான் யார்? எங்கே வசிப்பதாக கூறியிருந்தால் அவர்கள் விசாரித்து விட்டு அனுப்பியிருப்பார்கள்.
“டாக்சி வந்தா கூட விசாரிப்போம். ஐவி டாக்சிலதான் வந்திருக்காங்க. டாக்சி டைவரை வைட் பண்ண சொன்னவங்க மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. வந்தவனுக்கு மேன்ஷன்ல யாருமில்லன்னு தெரியாதே. வெயிட் பண்ணவன். ஐவிய தேடி உள்ள வந்திருக்கான். மயக்கம் போட்டிருந்த ஐவிய பார்த்ததும் அவன் எண்ணம் மாறியிருக்கு. அவங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கான். கண்ணு முழிச்சவங்க அவன்கிட்ட இருந்து தப்பிச்சு அட்டிக்ள போய் பூட்டிக்கிட்டாங்க. அவன் அதை திறக்க முயற்சி செஞ்சிருக்கான். அவனால முடியல.
அவனுக்கு பயந்து மிஸ் ஐவி அட்டிக்ளயே இருந்திருக்காங்க. அவங்க போன அவன் எடுத்துட்டு போய்ட்டான். அதனால போலீசுக்கோ, வேற யாருக்கோ போன் பண்ணக் கூட முடியாத நிலை அவங்களுக்கு. அநேகமா அந்த டென்சன். ப்ரெஷர்ல அவங்க அன்னக்கி ராத்திரியே உயிரை விட்டிருக்கணும்”
“எவ்வளவு கொடுமையான மரணம். யாருமே அருகில் இல்லாமல். யாரையுமே அழைக்கக் கூட முடியாமல் எவ்வளவு வேதனை பட்டிருப்பாளோ” நெஞ்சடைக்க கேவினாள் பரா.
“அப்படினா அவளோட பாடி அட்டிக்கலயா இருக்கு. ஓஹ்… மை கார்ட்” அன்று பராவுக்கு காட்ட அட்டிக்கை திறக்க முயன்று முடியாமல் போனதால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டான். அன்றே அதை ஆள் வைத்து திறந்திருந்தால் ஐவியின் உடலை கண்டெடுத்திருக்கலாம்” கதறலானான் ஜெராட்.
“ஏன் கேப்டன் இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படி?” டேவிட் கேட்க,
“அன்னக்கி அந்த டாக்சி ட்ரைவர் ரிட்டன் போறப்போ வண்டில ஒரு பொண்ணு போய் இருக்கா. உள்ள வர்ற டேக்சி ட்ரைவரை விசாரிக்கிற நம்ம போலீஸ், உக்காந்து வரும் சவாரியை விசாரிக்கிறது இல்லையே! அதனால உள்ள வந்த ஐவிய நம்மாளுங்களுக்கு அடையாளமும் தெரியல, அந்த டேக்சில ஒரு பொண்ணு ரிட்டன் போய் இருக்கா சோ வந்த சவாரி ரிட்டன் ஆச்சு என்று கணக்கு எழுதியாச்சா. ஐவி மாளிகைல மாட்டிகிட்டது தெரியல.
வேறொரு பொண்ணுகிட்ட சில்மிஷம் பண்ணும் பொது மாட்டிகிட்டான். அவன் வீட்டை செக் பண்ணதுல, பொண்ணுகளோட தின்க்ஸ் நிறைய இருந்தது. அதுல ஐவியோட போனும் இருந்தது. விசாரிச்சதுல குப்பை தொட்டில கிடந்தது போன் நல்லா இருக்குன்னு வச்சிருக்கான்னு சொன்னான். ஒன்னு போன வித்திருக்கணும். இல்ல பாவிக்கணும். எதுக்கு வச்சிருக்கான்னு ரெண்டு உதை விட்டதும் உண்மைய சொல்லிட்டான். பொண்ணுக ஞாபகமா ஏதாவது பொருள் வச்சிக்கும் சைக்கோ அவன்”  என்றார் கேப்டன்.
“இப்படிக்கு கூட நடக்குமா?” அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தாளவில்லை.
“பாடி அட்டிக்ள இருந்திருக்கு. மாளிகைல இத்தனை பேர் இருந்தும் பாடி டீகம்போஸ் ஆகும் ஸ்மெல் வரலையா?” வான்யா சந்தேகமாக கேட்க,
“மாளிகை ரெனவேஷன்ல இருந்தது. பெயிண்ட் வாசனையும், கெமிக்கல் வாசனையாலையும் யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாம இருந்திருக்கு” சோகமாக கூறிய ஜெராட் “நான் என் ஐவிய பார்க்கணும் கேப்டன். ப்ளீஸ் அலவ் மீ”  கேப்டனிடம் கெஞ்ச ஆரம்பித்தான்.
“போரான்ஸீசுக்கு அவங்க வேலைய பண்ண விடுங்க ஜெராட். ஹாஸ்பிடல் போய் உங்க எக்ஸ் வைப்ப பாருங்க” பராவை பார்த்தவாறே கூறிய கேப்டன் யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றவாறே மாளிகையினுள் சென்றார்.
ஐவியின் உடலை மருத்துவமனைக்கு எடுச்சு செல்ல ஜெராட் மட்டுமல்லாது வான்யாவும் கதறி அழுதாள்.
ஜெராட் இரவே மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமானான். அங்கு சென்று என்ன செய்யப் போகிறாய்? அவர்கள் அவர்களது வேலையை பார்த்து விட்டு அழைப்பார்கள் நீ வீட்டில் இரு” என்று டேவிட் தான் அவனை சமாதானப்படுத்தி விட்டு சென்றிருந்தான்.
குழந்தைகள் வேலையாட்களின் பொறுப்பில் இருக்க, ஜெராட் ஒருபக்கம், பரா ஒருபக்கம் என்று அமர்ந்திருந்தனர்.
கடமைக்காக திருமணம் செய்து சேர்ந்து வாழ்வோம் என்றவர்கள் இப்பொழுதுதான் மனதளவில் நெருங்கி வந்திருந்தார்கள். இந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் ஜெராட் நிலைகுலைந்து அமர்ந்திருந்தான்.
ஐவி ஜெராடுக்கு துரோகம் இழைத்தாள் என்ற போதிலும் அவளுக்காக யோசித்தவன் அவள் அவனுக்காக யோசித்து தவறிழைத்து உயிரையே விட்டிருக்கின்றாளென்றால் ஜெராட் நிச்சயமாக அவள் நினைவுகளிலிருந்து மீள மாட்டான். ஜெராடை பழைய நிலைமைக்கு எவ்வாறு கொண்டு வருவது. ஐவியின் நினைவுகளிலிருந்து அவனை எவ்வாறு மீட்டெடுப்பது என்று புரியாமல் அவனையே பார்த்திருந்தாள் பரா.
அதிகாலையிலையே டேவிட் வந்து விட்டான். ஜெராட் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல நண்பர்கள். அவனுக்கு ஐவியையும் நன்றாகத் தெரியும். ஜெராட் அவள் மீது வைத்திருந்த காதலும் நன்றாகத் தெரியும்.
எங்கே தான் கூறிய பின்னும் மருத்துவமனைக்கு கிளம்பி சென்று விடுவானோ என்ற அச்சத்தில் தான் அதிகாலையிலையே வந்திருந்தான்.
என்னதான் போலீசார் ஐவியின் மரணத்தில் ஜெராடுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறினாலும், அவள் மரணித்தது அவன் மாளிகையில் என்றபொழுது அவளது வீட்டார் ஜெராட்டை குற்றம் சொல்லாமல் இருப்பார்களா?
இவனை பார்த்தால் அமைதியாக இருப்பார்களா? மருத்துவமனை என்றும் பாராமல் நிச்சயமாக அடிதடி சண்டையாகும் என்றுதான் முக்கியமாக ஜெராட் அங்கு செல்வதை தடுத்தான்.
மாளிகையிலையே தங்கி இருந்திருப்பான். அவன் மனைவிக்கு வண்டியோட்டத் தெரியவில்லை. பொண்ணுக்கு பரீட்ச்சை இருப்பதனால் வீட்டில் விட்டவன் அதிகாலையில் வந்திருந்தான்.
“என்ன விடிய விடிய ரெண்டு பேரும். இப்படியே உட்காந்து இருந்தீங்களா?” கேலி போல் கேட்டாலும் இவ்வாறே ஒரு சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று அவனாலையே நினைத்துப் பார்க்க முடியாததனால் புன்னகைத்து வைத்தான்.
பரா டேவிடுக்கும், ஜெராடுக்கும் அருந்த காபி கொடுத்தாள்.
காபி வேண்டுமா என்று பரா கேட்கவேயில்லை. நேற்றிரவு பார்ட்டியில் ஜெராடும், பரவும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. டேவிட் வந்த உடன் ஐவியை காண மருத்துவமனைக்கு வெறும் வயித்தோடு கிளம்பிச் சென்று விடுவான்.
சாப்பிட சொன்னால் சாப்பிடவும் மாட்டான். காப்பியாவது குடிக்கட்டும் என்றுதான் இருவருக்கும் கொடுத்தாள்.
டேவிட்டிடம் கேட்டு அவன் மறுத்தால் ஜெராடும் தனக்கு வேண்டாம் என்பான். அதனால் கேளாமலே கொடுத்திருந்தாள். 
அதை சரியாக புரிந்துகொண்ட டேவிட் “எனக்கு காபி மட்டும் பத்தாது. நேத்து நைட் கூட நான் ஒன்னும் சாப்பிடல. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாம்மா. நீயும் சாப்பிடு ஜெராட். நாம சாப்பிட்டே கிளம்பலாம். ஏனம்மா நீயும் நெத்திலிருந்து எதுவுமே சாப்பிடல இல்ல” என்று பராவை பார்த்து கேட்டான்.
அப்பொழுதுதான் ஜெராட் பராவையே பார்த்தான். தனக்காக இவள் எதற்காக பசியில் இருக்க வேண்டும்? “பரா போய் சாப்பிடு” என்றான்.
“நீங்க முதல்ல எந்திரிச்சு வந்து முகம் கழுவுங்க. இப்படியேவா ஐவிய பார்க்க போவீங்க? அவங்க உங்கள இப்படி பார்த்தா சந்தோஷ படுவாங்களா?” அமைதியாக கேட்டாள்.
“நீங்க சாப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன்” என்று மிரட்டவோ, சினிமா வசனம் பேசவோ பரா முயலவில்லை. அவன் நிலையில் இருந்தான் பேசினாள்.
ஒருகணம் ஜெராட்டுக்கு பரா என்ன பேசுகிறாள் என்றே புரியவில்லை. கணவனுடைய முன்னாள் மனைவியை பற்றி பேசினாலோ அவள் சம்பந்தபட்ட ஏதாவது ஒன்று இருந்தாலோ சாதாரண நிலைமையில் ஒரு பெண் கோபப்படுவாள் அல்லது பொறாமை படுவாள். இவள் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்கின்றாள்?
அதுவும் ஐவி என்ன நினைப்பாள் என்று கேட்கின்றாள். இவளுடைய இந்த குணம்தான் எனக்கு இவளை பிடிக்க காரணம். தனக்குள் கூறிக் கொண்டவன் அமைதியாக சென்று முகம் கழுவிக் கொண்டு வந்து “சாப்பாடு எடுத்து வை” என்றான்.
வேலையாள் உதவியோடு அவசரமாக சமைத்தவள் தட்டில் வைக்க, “நீயும் உட்காரு” என்று அவளையும் அருகில் அமரவைத்து அவளோடு சேர்ந்தே சாப்பிட்டான். ஆனால் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.  
பேசும் மனநிலையிலும் அவன் இல்லை. என்ன பேசுவது என்னு அவனுக்குத் தெரியவில்லை.
ஐவி தனக்கு துரோகம் இழைத்தாள் என்று எண்ணியிருந்தால் தான் தான் அவளுக்கு துரோகம் இழைத்து விட்டேன்.
ஆறு வருடங்கள் கூடவே இருந்தவள்.  என் உயிரானவள் திடீரென்று நிலைமாறினால் ஏன் என்று தேடிப்பார்த்திருக்க வேண்டாமா? அவளுடைய பிரச்சினை என்னவென்று அவளிடம் கேட்டு அவள் கூறாமலிருப்பது அதை நான் அறிந்துக்கொள்ளக் கூடாது என்று ஏன் எனக்கு அப்பொழுது புரியவில்லை. புரிந்திருந்தால் அவளை பின் தொடர்ந்து சென்று கண்டறிந்திருப்பேனே. அதை கூட புரிந்துகொள்ள முடியாதபடி இருந்த நானெல்லாம் ஒரு நல்ல கணவனா? இதில் அவளை ஆறுவருடங்களாக காதலித்து அறிந்து வைத்துள்ளேன். நன்றாக புரிந்துகொண்டேன் என்று பெருமை வேறு.
என்ன காரியம் செய்து விட்டாள். நானே அவளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று என்ன காரியம் செய்து விட்டாள். எந்த பெண்ணுமே செய்யத் துணியாத காரியம்.
காதலித்து திருமணம் செய்தவனின் கண்களின் முன்னால் அவனோடு வாழும், வீட்டில், அவனோடு கூடிக்குலாவும் கட்டிலில் வேறொரு ஆணோடு இருப்பதென்றால் அவள் எவ்வளவு கல்நெஞ்சக்காரியாக இருக்க வேண்டும்.
அதையே ஐவி எனக்காக, என் நலனுக்கான செய்யத் துணிந்தால் என்றால் அந்த முடிவை எடுக்கவே அவள் எவ்வளவு வேதனை பட்டிருப்பதால். அந்த சம்பவத்துக்கு பிறகு எவ்வளவு வேதனை பட்டிருப்பாள்?
அன்று அவள் எந்த குற்றஉணர்ச்சியும் இல்லாமல் நின்றிருந்தாள். அது மட்டுமா? நான் பார்த்து விட்டேன் என்று கொஞ்சம் கூட அச்சப்படவுமில்லையே. அதை பார்த்தாவது இவள் எதையோ மறைகிறாள் என்று யோசித்திருக்க வேண்டாமா?
அப்படியொரு சம்பவத்தை பார்த்தால் எந்த கணவனும் நிலைகுலைந்துதான் போவான். ஏன்? எதற்குகாக? என்று சிந்திக்கும் மனநிலையில் இருக்கமாட்டான். அப்படித்தான் நானும் இருந்தேன்.
அதன் பின்னாவது நான் நிதானமாக யோசித்து பார்த்திருக்க வேண்டாமா? ஐவியிடம் சென்று ஏன் இவ்வாறு செய்தாய் என்று கூட கேளாமல் கோபத்தில் அவளை விவாகரத்து செய்து விட்டேன்.
அவள் என்னிடம் எதையும் எதிர்பாராமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றது கூட ஏன் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. அப்பொழுதாவது யோசித்திருந்தால் அவள் இறக்கும் வரையில் அவள் கூடவே இருந்திருப்பேன். இப்படி அவளை தனியாக மரணிக்க விட்டிருக்க மாட்டேனே.
அதுவும் அவளுக்கு ஆசையாசையாக வாங்கிய மாளிகையில் வந்து இப்படி யாரும் அறியாமல் யாரும் அருகில் கூட இல்லாமல், தனிமையில் அநாதை போல் மரணிக்க வேண்டும் என்பதுதான்  அவள் விதியா?
இதற்குத்தான் என்னிடமிருந்து விலகி சென்றாளா? என்னை பாவியாக்கிவிட்டாள். தப்பு பண்ணி விட்டேன். அவளை புரிந்துகொள்ளாமல் பெரிய தப்பு பண்ணி விட்டேன். தப்பு செய்தது மட்டுமல்லாமல் அவளை காதலித்து திருமணம் செய்து துரோகமும் செய்து விட்டேன். ஆம் துரோகம் தான் பராவை திருமணம் செய்தது அவளுக்கு இழைத்த மாபெரும் துரோகம்” குழாய் நீருக்கடியில் அழுது கரையலானான் ஜெராட்.
அதை பார்த்திருந்த ஐவியின் ஆத்மாவோ அவனை கட்டிக் கொண்டு அழ, அவன் கண்களுக்குத்தான் அவள் புலப்படவே இல்லை.

Advertisement