Advertisement

அத்தியாயம் 13
ஆப்பிள் மரத்தடியில் சிவப்பு நிற நீண்ட கவுன் அணிந்து நின்ற பெண்ணின் இடது பக்கத்து தோற்றம் ஐவியை போல இருக்கவே ஜெராட் “ஐவி” என்றான்.
“காணாமல் போய் இருந்தவள் மீண்டும் வந்து விட்டாளா? எங்கே போய் இருந்தாளாம்?” மனம் பதைபதைக்க மூளை ஆயிரம் கேள்விகளை எழுப்ப ஆடிக் கொண்டிருந்தவன் பராவை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவளிடம் செல்ல முனைந்தான்.  
“ஐயோ அது அவங்க இல்லைங்க. மிஸ் வான்யா என்னோட இங்கிஷ் டீச்சர்” என்றாள் பரா.
ஐவி ஜெராடுக்கு இழைத்த கொடுமையை பராவிடம் கூறிய அன்று. அவன் ஐவியின் புகைப்படத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்ததை பரா பார்த்தாளே. அவளுக்கு ஐவி யார் என்று தெரியாதா? அதனால்தான் அது ஐவியில்லை. வான்யா என்றாள்.
வான்யாவிடம் செல்ல முனைந்த கால்கள் ஆணியடித்து போல் அங்கேயே நிற்க பராவின் தோள்களை பற்றி  “என்ன சொல்லுற? நான் உனக்கு நம்ம ஊர் டீச்சரத்தானே ஏற்பாடு செஞ்சேன். அதுவும் வயசானவங்கள. இந்த பொண்ணு யாரு?” அதிர்ச்சியடைந்தான் ஜெராட்.
“நீங்க என்ன சொல்லுறீங்க?” பராவுக்குள் ஏகப்பட்ட குழப்பம். தன்னை கண்காணிக்கும் நபர் இந்த வான்யாவாக இருக்குமோ என்று மின்னல் போல் அவள் மூளைக்குள் வந்து போக, விறுவிறுவென்று வான்யாவிடம் விரைந்தாள்.
“பரா நில்லு” என்றவாறே ஜெராட் அவள் பின்னால் ஓடிவர வான்யாவின் தோளில் கைவைத்து தன்புறம் திருப்பியிருந்தாள் பரா. 
இருவரையும் பார்த்து முகம் மலர்ந்த வான்யாவோ “ஹாப்பி பர்த்டே பரா. என்று கூறியவள் ஜெராடின் புறம் திரும்பி “ஹவ் ஆர் யு மிர்ஸ்டர் ஜெராட்” என்று கேட்டாள்.
“யார் நீ? எங்க மாளிகைல என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” அடிக்குரலில் கேட்டாள் பரா.
“என்ன பரா பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிட்டு இப்போ யாருன்னு கேக்குறீங்க? இது உங்களுக்கே அநாகரீகமாக தெரியலையா?” புன்னகைத்தவாறுதான் கேட்டாள் வான்யா.
“நான் பராவுக்கு கதீஜா எங்குற ஸ்ரீலங்கன் லேடியை தான் டீச்சராக அப்பொய்ண்ட் பண்ணியிருந்தேன். அவங்க வயசானவங்க. நீ எப்படி இங்க வந்த? யார் நீ? போலீஸ் வந்து விசாரிச்சா தான் உண்மைய சொல்வன்னா வந்து விசாரிப்பாங்க” கண்களை இடுக்கி வான்யாவை கோபமாக பார்த்தான் ஜெராட்.
“அதுக்கு அவசியமில்லை மிஸ்டர் ஜெராட். ப்ரொபெஸர் கதிஜாவோட ஸ்டூடன்தான் நான்” தான் இந்தக் கல்லூரியில் தான் பாடம் எடுப்பதாகவும் கூறி வேண்டுமானால் விசாரித்துக் கொள்ளும்படியும் கூறியவள் “கதீஜா மேடம் அவங்க பொண்ணு பிரசவத்துக்காக ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்காங்க. உங்க வைப் க்ளாஸ என்ன அட்டண்ட் பண்ண சொன்னாங்க. அவங்க உங்களுக்கு போன் பண்ணி சொல்லுறதாக சொன்னாங்களே. சொல்லியிருப்பாங்கனு நான் பராகிட்ட எதுவும் சொல்லல. நீங்க வேணும்னா அவங்க கிட்டயே பேசி உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க” என்றாள்.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேர வித்தியாசமிருக்க, இலங்கையில் இப்பொழுது நள்ளிரவு. கதிஜா தூங்கிக்கொண்டிருப்பார் என்று சற்றும் யோசிக்காமல், தாமதிக்காமல் கதீஜாவை அழைத்தான் ஜெராட்.
“போன் பண்ணி சொல்லக் கூட எனக்கு நேரம் இருக்கல மிஸ்டர் ஜெராட். ஏர்போர்ட் போகும் போது உங்களுக்கு போன் பண்ணேன் நீங்க எடுக்கல. உங்களுக்கு எல்லா டீட்டைளையும் மெயில் பண்ணிட்டேன். நீங்க இன்னமும் பார்க்கவே இல்லையா? வான்யா என்னோட ஸ்டூடன்தான். ரொம்ப நல்ல பொண்ணு. தமிழ் நல்லாவே பேசுவா. அதனாலதான் உங்க வைப்புக்கு கத்துக்கொடுக்க கொஞ்சம் கூட தயங்காம அவளையே அனுப்பி வச்சேன். ஏதும் பிரச்சினையா?”
“நோ மேடம். மெயில் நான் பார்க்கல. க்ளாஸ் பீஸ உங்க அக்கவுண்ட்ல போட்டுட்டேன். அவங்க கேட்கவே இல்ல. அதான் உங்ககிட்ட அதை பத்தி பேசலாம்னு…” வான்யாவை பார்த்தவாறே ஆங்கிலத்தில் கூறினான் ஜெராட்.
ஆம் வான்யா ஆங்கில வகுப்புக்கான கட்டணத்தை கேட்டிருந்தால் இந்த குழப்பமே வந்திருக்காதே. ஏன் அவள் பணம் கேட்கவில்லை. அப்படியென்றால் அவள் எதோ மறைகின்றாள் என்றுதானே அர்த்தம். எதுவோ சரியில்லை என்று ஜெராடின் ஆழ்மனம் கூற, கதிஜாவோடு தமிழில் பேசிக் கொண்டிருந்தவன் வான்யாவுக்கு நன்றாகவே புரியட்டும் என்றுதான் பணத்தை பற்றி பேசும் பொழுது ஆங்கிலத்தில் பேசினான்.
வான்யா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாலே ஒழிய எந்த விதமான பாவனையும் முகத்தில் காட்டவில்லை.
“ஓஹ்… நான் கூட அக்கவுண்ட் செக் பண்ணல. நான் காச அவ அக்கவுண்ட்டுக்கு போட்டு விடுறேன். வான்யா என் கிட்ட கூட எதுவும் சொல்லல. சொல்லியிருந்தா எந்த குழப்பமும் நேர்ந்திருக்காது” என்று கதிஜா அலைபேசியை துண்டித்திருந்தார்.
அலைபேசி உரையாடலில் ஜெராட் பேசியதை வைத்து  வான்யா யார்? அவள் மீது தவறில்லை என்று பராவுக்கு புரிந்ததால் அவளிடம் மன்னிப்புக் கோரி சாப்பிட அழைத்துச் சென்றாள்.
செல்லும் அவளை பார்த்த ஜெராடுக்கு “இவள் எப்படி ஐவியின் சாயலில் இருக்க முடியும். அதுவும் ஐவிக்கு இருப்பது அன்றோ மட்டும்தான். வேறு சகோதரிகள் கிடையாதே. யார் இவ?”
தான் சந்தேகப்படும் நபரை கண்டு பிடிக்க வேண்டும் என்றிருந்த பரா அதை மறந்து குடும்பத்தோடு பார்ட்டியை கொண்டாடிக் கொண்டிருக்க, வான்யாவை சந்தேகக் கழுகுக் கண்கள் கொண்டு பார்த்திருந்தான் ஜெராட்.
“ஆமா உன் க்ளாஸ் எங்க நடக்கும்?” மாளிகையினுள் நுழையத்தானோ வான்யா திட்டம் போடுகிறாளென்றெண்ணி ஜெராட் பராவிடம் கேட்க,
“இல்லங்க ஆப்பிள் மரத்தடிலதான் க்ளாஸ் இருக்கும்”
“டைலியுமா?”
“ஆமாங்க… வான்யா மாளிகைக்குள்ள வந்ததே இல்ல. இப்பவும் பாருங்க ஆப்பிள் மரத்தடிலதான் இருக்காங்க”
வான்யா ஆப்பிள் மரத்தடியில் தான் அதிக நேரம் செலவளித்தாள். அதை ஜெராடும் கவனித்தான். “யார் இவள் அறிந்துகொண்டேயாக வேண்டும். நிச்சயமாக இவளால் பிரச்சினை உருவாகும் என்றெண்ணினான்”
இவளை பற்றி வெளியே விசாரிக்கும் முன் இவளிடம் சென்று பேசலாம் என்று முடிவு செய்த ஜெராட் “மிஸ் வான்யா…. மிஸ் தானே” என்று ஆரம்பித்தான்.
“எஸ் சொல்லுங்க” என்று ஜெராட்டை பார்த்தவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“உங்கள எங்கயோ பார்த்தது போலவே இருக்கு ஆனா எங்கனுதான் ஞாபகம் வரமாட்டேங்குது. உங்கள பத்தி நீங்க சொல்லுறீங்களா? அது எனக்கு உதவியாக இருக்கும்” என்றவனின் முகத்தில் கிஞ்சத்துக்கும் புன்னகையில்லை.
“என்ன சைட்ல பார்த்தா ஐவி மாதிரி இருக்கேன். இல்லையா மிஸ்டர் ஜெராட்” அவன் முகம் அதிர்ச்சியடைவதை எந்த சலனமும் இல்லாமல் பார்த்திருந்தவள் “அதே நீலநிறக் கண்கள். தங்கநிற முடி. எங்கயோ பார்த்திருக்கேன்னு உங்களால பொய் கூட ஒழுங்கா சொல்ல முடியல. அதுக்கு நீங்க ஐவி மாதிரி இருக்கேன்னு உண்மையையையே சொல்லி இருக்கலாம்” அவள் முகத்தில் சோகம் அப்பட்டமாக தெரிந்தாலும் முயன்று புன்னகைத்தாள்.       
“ஹேய் யார் நீ… ஐவிய உனக்கு எப்படித் தெரியும்? அவ காணாம போய்ட்டா. அவ இப்போ எங்க இருக்கான்னு உனக்குத் தெரியுமா? எங்கயோ இருந்துகிட்டு அவதான் உன்ன அனுப்பி புதுசா ஏதாவது ஒரு நாடகம் ஆடுறாளா?” கோபம் கணக்கக் கேட்டான் ஜெராட்.
“அவ உங்கள பார்க்கத்தான் வந்தா ஜெராட். ஆனா நீங்கதான் இங்க இருக்களையே” ஆப்பிள் மரத்தை தடவியவாறே கூறினாள் வான்யா.
“என்ன உளறுற” ஜெராடின் கோபம் அடங்கவேயில்லை.
“நீங்க மட்டுமா ஐவியை உண்மையா நேசிச்சீங்க. ஏன் அவ உங்கள உண்மையா நேசிக்கலையா?”
“நீ இப்படியொரு பாவத்தை செஞ்சிருக்கவே கூடாது ஐவி.உன் நிலைமையை நீ ஜெராடிடம் கூறினாள் நிச்சயமாக ஜெராட் புரிஞ்சிப்பார். உண்மையை கூறிவிடு” என்று வான்யா ஐவியிடம் கெஞ்சிக் கேட்டாள். ஆனால் அவள் ஏதேதோ பேசி அன்று வான்யாவின் வாயை அடைத்திருந்தாள்.
இன்று ஜெராடிடம் உண்மையை கூற வான்யாவை யார் தடுப்பாள்? ஐவியா? அவள் எங்கு இருக்கின்றாள் என்றே தெரியவில்லை. ஏன் உயிரோடு இருக்கின்றாளா என்றே தெரியவில்லை என்ற கவலையில்தான் வான்யா வாய் திறந்திருந்தாள்.
“டோன்ட் டாக் ரபிஸ்.அவ என்ன பண்ணானு உனக்குத் தெரியாம இருக்கலாம். நான் அத மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன். அவளை பத்தி பேசாம இங்க இருந்து கிளம்பு” ஐவியின் உருவத்தை ஒத்த உருவத்தில் ஒருத்தியை பார்த்தால் ஜெராடின் மனம் எவ்வளவு பாடுபடும்? ஆய்வின் மொத்த ஞாபகங்களும் அவனுள் எழுந்து கோபத்தை தூண்ட வான்யாவை இங்கிருந்து அனுப்ப முயன்றான். 
“ஐவி மேல கொஞ்சம் கூட காதல் இல்லாமத்தான் அவளை நீங்க இன்னமும் தேடிகிட்டு இருக்கீங்களா?” ஐவி என்ன செய்தாள் என்று வான்யாவுக்கு நன்றாகவே தெரியும். ஜெராட் காணாமல் போன அவளை தேடுகிறான் என்பதும் தெரியும். உண்மையாக காதலித்த இவர்களுக்கு இப்படியொரு பிரிவு நிகழ்ந்திருக்க வேண்டாமே என்ற ஆதங்கம்தான் வான்யாவை பேசவே வைத்திருந்தது.
அந்தக் கேள்விக்கு பதில் கூறாமல் ஜெராட் “நீ எதுக்காக என் மனைவி கிட்ட நெருங்கிப் பழகுற என்று எனக்குத் தெரியாது. உன்னால என் குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்தது. நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று மிரட்டினான்.
“டோன்ட் ஒர்ரி மிஸ்டர் ஜெராட் நான் இங்க வந்தது உங்களுக்கோ, உங்க குடும்பத்துக்கோ எந்த கஷ்டத்தையும் கொடுக்கவல்ல.
ஐவி உங்கள இப்படி குடும்பமா பார்க்கணும் என்றுதான் ஆசைப்பட்டா. அதுக்காக அவ பண்ணக் கூடாததையும் பண்ணா”
“நீ பேசினது போதும் முதல்ல கிளம்பு. க்ளாஸும் இனி நடக்காது. நீ வர வேண்டாம் நான் கதீஜா மேடம் கிட்ட பேசிக்கிறேன்”
என்னதான் ஐவி அவனுக்கு துரோகம் இழைத்தாலும் காணாமல் போன அவள் நன்றாக இருந்தால் போதும் என்ற தகவல் கிடைத்தால் போதும் என்றுதான் அவளை தேடிக் கொண்டிருக்கின்றான். அதற்காக அவளை பற்றி பேசுவதையோ, அவள் சம்பந்தப்பட்டவர்களை பார்ப்பதையே ஜெராட் விரும்பவில்லை.
தான் என்ன சொல்ல விளைகிறோம் என்று கூட புரிந்துகொள்ளாமல் தன்னை துரத்தியடிப்பதில் குறியாக இருப்பவனை பார்க்கையில் வான்யாவுக்குள் கோபம் கனன்றது. “ஐவிய எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா. செத்துப்போனவ எப்படி கிடைப்பா” கோபத்தில் கத்தினாள் வான்யா.
“ஹேய் உளறாத. குடிச்சீனா வீட்டுக்கு போய் அமைதியாக தூங்கு” இதற்கு மேல் இவளிடம் பேச ஒன்றுமில்லையென்று திரும்பி நடக்கனானான்.
“உங்களுக்கு ஐவிய பத்தி ஒரு மண்ணும் தெரியல. அவ உங்கள உண்மையா நேசிச்சா. அவளுக்கு பிரைன் டியூமர். அவளுக்கு உங்கள தவிர பல விஷயங்கள் மறந்துடும். உங்க பர்த்டே என்ன அவ பர்த்டேவ கூட அவளால ஞாபகம் வச்சிருக்க முடியாது. அந்த கட்டி அவளை அப்படி பாடப்படுத்தியிருக்கு. உங்க அன்புதான் அவ அத்தனை வருஷம் உயிர் வாழ உதவியிருக்கு” கொஞ்சம் மதுபானமும் அருந்தியிருப்பாள் போலும், கோபமும் சேர்ந்துகொள்ள உண்மையை கக்கியிருந்தாள் வான்யா.
அவள் புறம் திரும்பி அடியெடுத்து வைத்தவன் அவள் தோள்களை பிடித்து உலுக்கியவாறே “நீ நீ என்ன சொல்லுற? இதெல்லாம் உண்மையா? அவ அம்மா அப்பாக்கு இது தெரியாதா? இப்போ அவ எங்க?” தான் கேட்பது உண்மையா? பொய்யா? என்று கூட புரியாமல் குழம்பினான் ஜெராட்.
“நான் ஐவியோட அம்மாவோட தங்கச்சி பொண்ணுதான். சின்ன வயசுல இருந்தே ஒன்னாதான் இருந்தோம். அப்பாவுக்கு லண்டன்ல வேலை கிடைச்சி எங்க குடும்பம் லண்டன்கு ஷிப்ட் ஆகிட்டோம். ஆனாலும் அவளும் நானும் லெட்டர் மூலம் பேசிக்கிட்டோம்.
ஒவ்வொரு கிரிஸ்மஸுக்கும் நாங்க ஊருக்கு வந்தா ஜாலியா ஊர் சுத்துவோம். இதோ இந்த மாளிகை எங்களோட பூர்வீக சொத்து என்று உங்களுக்குத் தெரியும் தானே. இங்க வந்துதான் விளையாடுவோம். இந்த ஆப்பிள் மரத்தடியில்” மரத்தை தடவிக் கொடுத்தவள் பெருமூச்சு விட்டவாறே “காலேஜ் சேர்ந்த பிறகுதான் ஊருக்கு வர முடியல. ஆனா போன்ல மெஸேஜ் மூலம் பேசிக்கொள்வோம்.
அப்போதான் உங்கள பத்தி நிறைய சொன்னா” கண்கள் கலங்க துடைத்தவாறே பேசினாள்
ஐவி நண்பர்களோடு அலைபேசி வழியாக தொடர்பில் இருந்தது ஜெராடுக்கு நன்றாகவே தெரியும். யார் அவர்கள் என்று அவன் தோண்டித் துருவியதே இல்லை. அதில் ஒருத்தி வான்யாவாக இருப்பாள். வான்யா ஐவியின் சகோதரியும் கூட. தன்னை பற்றி இருவரும் பேசியிருக்காகவும் கூடும்.
“உங்க கல்யாணத்துக்கு நான் வர்றதாகத்தான் இருந்தேன். கடைசி நேரத்துல என்னால வர முடியல” ஐவி திருமணத்தை பற்றி கூறி எவ்வாறு மகிழ்ந்தாள் என்று நினைத்துப் பார்த்த வான்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்து மறைந்தது.
உன் குடும்பத்தார் யாருமே நம்ம கல்யாணத்துல இல்லையே” ஜெராட் ஐவியிடம் சோகமாக கூறிய பொழுது
“உங்க குடும்பத்தார் கூடத்தான் யாருமில்ல. ஆனாலும் நாம கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். ஒரு ஸ்பெஷல் கெஸ்ட்ட வர சொல்லியிருக்கேன். வந்தா பார்க்கலாம். என்ன நான் கல்யாண பொண்ணா? இல்ல அவளானு நீங்க குழம்பிப் போகக் கூடாது” என்றாள் ஐவி.
“ஒருவேளை அவள் கூறிய நபர் இந்த வான்யாவாக இருப்பாளோ. ஐவி அன்று அவ்வாறு கூறியதற்கு காரணமும் இருவரது உருவ ஒற்றுமையா? ” என்று அவளையே பார்த்திருந்தான் ஜெராட்.
“அவளுக்கு வேலை கிடைச்சி அதுல சாதிச்ச பிறகுதான் கல்யாணம் என்று சொன்னவ. உங்கள உடனே கல்யாணம் பண்ணிகிட்டாலே அதற்கு காரணமும் அவ உங்க மேல வச்ச லவ் தான்.
ஆனா அன்னக்கி அவ லேட்டா வீட்டுக்கு வந்தாலே அதுவும் குடிச்சிட்டு. அதுக்கே நீங்க அப்படி பதறிப் போய்ட்டீங்களே. அன்னகிதான் அவளுக்கு டியூமர் இருக்குற விஷயமே தெரிஞ்சது.
ஆபீஸ்ல வச்சி மயங்கி விழுந்திருக்கா. உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. அவ பிரிங்கப்ரின்ட் வச்சி போன அன்லாக் பண்ணி கடைசியா பேசின நம்பருக்கு கூப்பிட்டாங்க.
அவ அன்னைக்கி கடைசியா பேசினது என் கிட்டாதான். நான் ஊர்ல இருந்ததினால் ஹாஸ்பிடல் போய்ட்டேன்.
அன்னக்கி முழு நாளும் நான் அவ கூட ஹாஸ்பிடல்ல இருந்து எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தோம். அவளோட கடைசி நாட்களதான் அவள் உங்களோடு வாழ்ந்துகிட்டு இருக்கானு டாக்டர் சொன்னப்போ அவளால அழுறத கட்டுப்படுத்தவே முடியல. டியூமர் உடைஞ்சா அவர் இறந்துடுவா. இன்னைக்கோ நாளைக்கோ, ஒரு மாசம் இல்ல ஆறு மாசம் என்று சொல்லிட்டாரு டாக்டர்.
அப்போவும் அழுறத நிறுத்தாம அழ ஆரம்பிச்சவ சரக்கடிக்கலாமான்னு கேட்டா. ஓவரா குடிச்சா போலீஸ் வந்து நீங்க தேடுறதா சொல்லி கூட்டிட்டு போனாங்க.
அதற்கு பிறகு அவ போன் பண்ணுறப்போ எல்லாம் உங்கள நினைச்சிதான் கவலைப்படுவா. எனக்கு இப்படி ஆச்சுன்னு ஜெராடுக்கு தெரிஞ்சா அவன் தாங்க மாட்டான். நான் செத்துட்டா அவன் என்ன ஆவானோ என்று புலம்புவா.
அவளை வெறுத்து ஒதுக்கினாத்தான் நீங்க உங்க வாழ்க்கையை வாழ்வீங்க என்று உங்கள டாச்சர் பண்ண ஆரம்பிச்சா. ஆனா அவளால உங்க கிட்ட டைவோர்ஸ் மட்டும் கேட்க முடியல. என்ன பண்ணாலும் அவளால உங்கள விட்டு பிரிஞ்சு போகணும் என்று மனம் வரலன்னு சொல்லி அழுவா.
தன்னோட பேராசையால் உங்க வாழ்க நாசமாகிடக் கூடாது. கண்டிப்பாக உங்க விட்டு பிரியனும் என்று சொன்னவ இப்படியொரு காரியத்தை பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல     
டைவோர்ஸையும் நீங்களே கொடுக்கணும். உங்க வாயலையே டைவோர்ஸ் கொடுக்க வைக்கணும் என்று நீங்க அமெரிக்க போயிட்டு திரும்பி வர்றத தெரிஞ்சிக்கிட்டு அந்த காரியத்தை பண்ணிட்டா அன்னக்கிதான் தான் அவ கடைசியாக அழுதத நான் பார்த்தேன்” என்றாள் வான்யா.
“அப்போ அன்று தான் பார்த்தது எல்லாம் பொய்யா? கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று பெரியவங்க சும்மா சொல்லலையே.
அன்று ஐவியிடமிருந்த அமைதி. தப்பு பண்ணைட்டோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாத அவளுடைய கண்களும் அவளுடைய தோற்றமும் ஜெராடின் கண்களுக்குள் வந்து நிற்க வான்யா சொல்வதில் உண்மையிருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.
“உங்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காம உங்க விட்டு பிரிஞ்சி போகணும் என்றுதான் அவ முடிவு பண்ணா. அப்படியே பண்ணிட்டா. ஆனா அவளுக்காக இந்த மாளிகையையே நீங்க வாங்கியிருக்குறீங்க என்று தெரிஞ்சிக்கிட்டதும். அவளால எப்படி அமைதியாக இருக்க முடியும். நான் வேணாம்னு சொல்லியும் கிளம்பி வந்துட்டா.
வந்தவ இதோ இந்த ஆப்பிள் மரத்தடியில் இருந்து எனக்கு செல்பி கூட எடுத்து அனுப்பியிருந்தா” என்று வான்யாவின் அலைபேசியில் இருந்த ஐவியின் புகைப்படத்தை காட்டா, அங்கேயே அமர்ந்து புகைப்படத்தை பார்த்தவாறு கண்ணீர் வடிக்கலானான் ஜெராட்.
“அவ கடைசியாக இங்கதான் வந்தா. போலீஸ் கிட்டயும் நான் பல தடவ சொல்லிட்டேன். அவ போன் சிக்னல் லாஸ்ட்டா வேற ஒரு இடத்துல காட்டுது என்று போலீஸ் நான் சொல்லுறத கேக்க மாட்டேங்குறாங்க.
இங்க வந்த அவளுக்கு இங்க வச்சுதான் எதோ நடந்திருக்கணும் என்று என் உள்மனசு சொல்லுது.
இங்கிருந்து அவ வெளிய போய் இருந்தா கண்டிப்பாக அவ எனக்கு போன் பண்ணி பேசி இருப்பா. அவ போனுக்கு நான் ட்ரை பண்ணப்போ கால் கட் பண்ணாங்க. ஐவி என் கால ஒருநாளும் கட் பண்ணாதே இல்ல”
வான்யா பேசப் பேச ஜெராடின் இதயமே சுக்குநூறாக உடைந்தது. “ஆம் அவள் எந்த வேலையாக இருந்தாலும் அலைபேசியை எடுத்து பேசி விடுவாள். அடுத்தவரை பதட்டமடைய செய்யமாட்டாள். டியூமர் இருப்பதை அறிந்து மனமுடைந்து தன்னிடம் எவ்வாறு சொல்வதென்று அறியாமல் தான் முதல் தடவையாக அலைபேசியை எடுக்காமல் இருந்திருக்கின்றாள். அதன்பின்தான் என்னுடைய அழைப்புகளுக்கு அவள் எந்தவிதமான பதிலையும் சொல்வதை நிறுத்தியிருந்தாள்.
அப்படியென்றால் இந்த மாளிகையில்தான் அவளுக்கு ஏதாவது ஆகியிருக்குமா?” ஜெராடால் சிந்திக்கக் கூட முடியாதபடி மூளை மரத்து இதயம் இறுகி அடைத்துக் கொண்டது.
அவளாகவே எங்கோ போய் இருப்பாள் என்று எண்ணினால் உண்மையிலயே அவளுக்கு எதுவோ ஆகிவிட்டது. ஜெராடின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெறுக, அதை துடைக்கக் கூட மனமில்லாமல் நின்றிருந்தான் அவன்.
“சொல்லி இருக்கலாமே என்கிட்டே சொல்லி இருக்கலாமே. இப்படி அவளையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தி. கடைசில எங்கயோ தொலஞ்சி போய்ட்டாளே. இப்போ நான் அவளை எப்படி கண்டு பிடிப்பேன்”
மனமுடைந்து ஜெராட் கதற அவன் தோளில் கைவைத்திருந்தாள் பரா.
பார்ட்டியில் அவன் தோழர்கள் அவனை தேட, அவனோ வான்யாவோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கே வந்த பரா வான்யா இறுதியாக கூறியதிலிருந்து அனைத்தையும் கேட்டு விட்டாள்.
அவள் கண்களும் கலங்கியிருக்க, அவளை பார்த்த ஜெராடோ சற்று முன்தான் அவளிடம் அவளை பிடித்திருப்பதாக கூறியதையும் மறந்து “ஐவி வேண்டுமென்றேதான் எல்லாம் பண்ணியிருக்கா பரா. ஏன் அவ அப்படி பண்ணா. அவ என்ன புரிஞ்சிக்கவே மாட்டாளா? நான் அவளை மன்னிக்கவே மாட்டேன். என் கிட்ட சொல்லியிருந்தா உலகத்துல எந்த மூலையில இருக்குற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பார்த்திருப்பேன்.
குடிச்சி குடிச்சுதான் அவ இப்படியாகிட்டான்னு தாப்பா நினைச்சிட்டேனே. நோயாலதான் அவ அப்படியாகிட்டான்னு தெரியாம போச்சே”
ஜெராட் கதறுவதை பார்த்து நண்பர்களும் அங்கு வர அவர்களிடமும் சொல்லி அழுது கரைந்தான்.
“சரிடா நடந்த எதையுமே மாற்ற முடியாது. நீ நல்லா இருக்கணும் என்று தானே ஐவி அப்படி பண்ணா. இன்னக்கி நீ பாராவோட ரெண்டு குழந்தைகளோட குடும்பமா நல்லாதானே இருக்க. உன்ன பார்த்து ஐவி உண்மையிலயே சந்தோஷப்படுவா” டேவிட் ஜெராடை தேற்ற முயன்றான். 
பராவால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்பொழுதுதான் தனக்கொரு விடிவுகாலம் வந்து விட்டது என்று மகிழ்ந்தாள் அதற்குள் மீண்டும் ஜெராட் பழையபடி ஐவியின் புராணம் பாட ஆரம்பித்து விட்டான். இதனால் அவனுக்கு ஆகிவிடுமோ என்ற அச்சம் வேறு உள்ளுக்குள் எழ அதற்கும் சேர்த்து அழலானாள்.
“கொஞ்சம் நாட்களாகத்தான் ஜெராட் ஐவியை மறந்து நிம்மதியாக இருக்கின்றான் என்று சந்தோசம் அடைத்தோம் யார் கண் பட்டது என்று தெரியல இப்படிஆகுதே” என்று நண்பர்கள் பேசிக்கொண்டிருக்க,    போலீஸ் வண்டிகள் படியெடுத்து மாளிகைக்குள் நுழைந்தன.

Advertisement