Advertisement

அத்தியாயம் 12
ஜெராடின் மாளிகையில் பார்ட்டி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவனோடு வேலை பார்க்கும் அனைவரையும் குடும்பத்தாரோடு வருமாறு அழைப்பு விடுத்திருந்தான் ஜெராட்.
“இங்க பாருங்க ஜெராட் பார்ட்டி வீட்டுல ஏற்பாடு செஞ்சிருக்குறீங்க, அதுவும் குடும்பத்தோட வர சொல்லியிருக்குறீங்க, நோ ஆல்கஹால். புரியுதா” பார்ட்டிக்கு என்னனென்ன உணவுவகைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டவாறே ஜெராட்டை மிரட்டிக் கொண்டிருந்தாள் பரா.
“நான் குடிக்க மாட்டேன்னு பார்ட்டில சரக்கு வைக்கலானா அவனுங்க என்ன உண்டு இல்லனு ஒருவழி பண்ணிடுவாங்க” மாட்டேன் என்று பொய் கூறி அவளை சமாதானப்படுத்த நினைக்காமல் என்ன நடக்கும் என்பதை எடுத்துக் கூறினான்.
“அறிவிருக்கா? குழந்தைகளும் வருவாங்க. பெத்தவங்க நீங்களே இப்படியா குழந்தைகளுக்கு நல்லவழி காட்டுறீங்க” முறைத்தவள் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பிக்க,
“குடிக்கிறவங்களுக்கு நான் வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிடுறேன். பார்ட்டி ஹால்ல எந்த சரக்கும் இருக்காது சரியா” வேறு வழியில்லை சமாதானக்கொடியை பறக்க விட்டுத்தானேயாக வேண்டும் என்று ஜெராட் வேறு அறையில் ஏற்பாடு செய்துகொள்வதாக கூறினான்.
“வேற ரூம்ல ஏற்பாடு செஞ்சா மட்டும் எல்லாம் சரியாகுமா? ஓவரா குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனாங்க. நான் சும்மா இருக்க மாட்டேன்” கோபமாக எழுந்து சென்று விட்டாள் பரா.
“ஐயோ இவள சமாதானப்படுத்த ரெண்டு பேக் உள்ள போனாதான் ஜடியாவே கிடைக்கும் போலயே” புலம்பலானான் ஜெராட்.
இயல்பில்லையே ஜெராட் நல்ல குணம் கொண்டவன். மற்றவர்களை புரிந்து நடந்துகொள்வதில் வல்லவன். பராவை திருமணம் செய்து தனக்கு ஒரு நல்ல தோழியாக மட்டும் இருந்தால் போதும் என்று கூறியிருந்தாலும் இந்த மூன்று மாதகாலமாக அவள் விருப்பப்படிதான் மாளிகையில் அனைத்து செயல்பாடுகளும் இருந்தது.
மாளிகையை ஐவிக்காக வாங்கினான். அதை அவளிடம் கூறும் முன்பே அவள் அவனிடமிருந்து பிரிந்து சென்று விட்டாள்.
பழமை மாறாமல் அவனுக்கும், ஐவிக்கும் பிடித்தது போல்தான் மாளிகையை திருத்தியமைக்க ஏற்பாடு செய்திருந்தான்.
அதற்கிடையில் பராவை திருமணம் செய்து குழந்தைகளோடு குடியேறி விட்டான்.
அவன் நினைத்திருந்தால் எதையுமே மாற்றாமல் இருந்திருக்கலாம். “உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது. ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சொல்லு அப்படியே செஞ்சிடலாம்” என்று பராவிடம் கூறினான்.
“நான் நினச்சதுக்கு அதிகமாகவே இந்த மாளிகை இருக்கு. குட்டி குட்டி மாற்றம்தான் செய்யணும்” என்றவள் முக்கியமாக எல்லா இடங்களிலுமே விண்ட் சிம்ஸ் தொங்க விட்டிருந்தாள்.
“எனக்கு பறவைகளோட சத்தமே ஆகாது என்று சொன்னேன். நீ என்னடான்னா வீடு முழுக்க இத தொங்க விட்டிருக்க. என் காதுல ரெத்தம் வராம இருந்தா சரி” என்றான் ஜெராட்.
மாளிகைக்கு வெளியேவும், உள்ளேயும் பெரிதாக காற்றாடிக்காத பொழுது எதற்கு இத்தனை விண்ட் சிம்ஸ்கள் என்றுதான் ஜெராட் கேட்டிருக்க வேண்டும். அவனுக்கு சத்தம் அலார்ஜி என்பதால் அதை பற்றி பேசியிருக்க, பராவும் எந்த பதிலும் கூறவில்லை.
வீட்டு வேலைகள் முடிந்த பின்னும் தன்னை யாரோ கவனிப்பது மாத்திரம் பராவுக்கு உள்ளுணர்வில் இருந்து நீங்கவில்லை.
வேலையாட்களை கூட மீண்டும் ஒருதடவை விசாரித்து விட்டாள். தன்னை யாரென்றே அறியாத இவர்கள் எதற்கு தன்னை கண்காணிக்க வேண்டும். சீசீடிவியில் அவர்களை கண்காணித்தால் வெளியாட்கள் அவர்களது வேலையை சரியாகத்தான் செய்கிறார்கள்.
சீசீடிவிலிலும் சிக்காத அந்த நபர் எங்கு சென்றாலும் கதவின் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்றுதான் கதவுகளில் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும் சத்தம் வர விண்ட் சிம்ஸ்களை தொங்கவிட்டாள்.
“சரி உன் விருப்பம். எதோ பண்ணிக்க” என்று விட்டான் ஜெராட். சொன்னது மட்டுமில்லாமல் அவனுக்கு பிடிக்குதோ இல்லையோ வீட்டை அலங்கரிக்க என்னனென்ன பொருட்கள் கேட்பாளோ அவற்றை கொண்டு வந்தும் கொடுப்பான். 
மாளிகையின் மொத்த பொறுப்பும் பராவின் வசமானது. வீட்டுக்கு பொருள்வாங்குவதிலிருந்து வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை அத்தனை வேலைகளும் பராவே பார்த்துக்கொள்வாள்.
ஜெராட் காலையில் காரியாலயம் செல்லும் பொழுது குழந்தைகளை அழைத்து சென்று பாடசாலையில் விடுவது மாத்திரம்தான் அவனது வேலை. அதை தவிர வார இறுதியிலும், விடுமுறை தினங்களிலும் குழந்தைகளையும் பராவையும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்.
“நீயே எல்லா வேலையையும் பார்த்துகிறதால எனக்கு எந்த டென்ஷனும் இல்ல” ஜெராட் அடிக்கடி பராவிடம் கூறும் வார்த்தைதான் அதற்காக அவன் ஒன்றும் அவளுக்கு நன்றியெல்லாம் சொல்ல மாட்டான்.
பராவும் அவனிடம் நன்றியை எதிர்பார்த்து இதையெல்லாம் செய்வதில்லையே. அது தன்னுடைய கடமை, கடமையையும் தாண்டி உரிமை என்றுதான் எண்ணி செய்கிறாள்.
அவன் அவளுக்காக செய்யும் அனைத்திலும் அன்பும், அக்கறையும் இருக்கிறது. அதில் காதல் இருக்கிறதா என்று கேட்டால் பராவுக்கு சொல்லத் தெரியவில்லை.
சிலநேரம் ஜெராடின் நடவடிக்கைகள் அவளை காதலிப்பது போலவும், அவளிடம் நெருங்கி வருவது போலவும் இருக்கும். சிலநேரம் எல்லாம் மாயை என்பது போல் அவனே அவளிடம் விலகி நிற்பான்.
தங்களுடைய கல்யாணமே பெற்றோருக்கான ஒரு கண்துடைப்பு என்றவனிடம் தன் மனதை திறக்க பராவுக்கு மனம் வரவில்லை.
என்று அவன் அவளை திருமணம் செய்ய சம்மதம் கேட்டானோ, அன்றே அக்கணமே அவளுக்கு அவனை பிடிக்கத்தான் செய்தது.
சட்டென்று காதல் மலரும் என்றெல்லாம் பராவுக்கு துளியளவேனும் நம்பிக்கை இல்லை. அக்கணம் கேட்டிருந்தால் நிச்சயமாக ஜெராட்டை காதலிப்பதாக கூறியிருக்க மாட்டாள்.
ஆனால் இன்று எல்லாம் மாறியிருந்தது. அன்று அவனை பிடிக்க காரணம் இருந்தது. இன்று அவனை பற்றி முழுவதுமாக அறிந்துகொண்டுதான் அவனை காதலிக்கவும் செய்கிறாள்.
அவன் அவளது கணவன். அழகான இரு குழந்தைகளோடு, யாருக்குமே அமையாத நிம்மதியான ஒரு குடும்பவாழ்க்கையை அவளுக்கு அமைந்திருக்கிறது என்று பெருமை கொள்வதா?
நடந்ததையே எண்ணி அவன் மனதுக்குள் மருகிக் கொண்டிருக்கின்றான். கடந்தகாலத்தை விட்டு இன்னுமே வெளியே வராமல் பிடிவாதம் பிடிக்கின்றான் என்று கவலை கொள்வதா? 
அவன் அவளை நெருங்கி வராமல் அவள் ஒருகாலமும் அவள் மனதை அவனிடம் திறக்கவும் மாட்டாள். அவ்வாறு செய்தால் தோழியாக நினைத்தேன் உன்னை. துரோகம் இழைத்து விட்டாய் என்று எண்ணி விட மாட்டானா? என்ற அச்சம் பராவுக்குள் எழுந்து அவள் நிம்மதியை குழைத்துக் கொண்டிருந்தது.
அதனாலே முயன்ற மட்டும் ஜெராடோடு பேசும் பொழுது அவனை தொடாமல், அவன் முகம் பாராமல் பேச பழகியிருந்தாள். 
ஆனால் அவனுக்கு அந்த தடையெல்லாம் இல்லை. இவளை இம்சை செய்யவென்றே பிறந்தவன் போல் பராவின் பொறுமையை சோதிப்பான்.
குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்து செல்லும் பொழுது லெனினும், ஜெஸியும் இவளது கன்னத்தில் முத்தமிட்டு விடைபெற்றுத்தான் செல்வார்கள். குழந்தை போல் ஜெராடும் “நானும் நானும்” என்று வலுக்கட்டாயமாக பராவின் கன்னத்தில் முத்திட்டுதான் விடைபெறுவான்.
“ஏன் இப்படி தொல்லை பண்ணுறீங்க” என்று பரா முறைத்தால்
“குழந்தைகள் வளர்ந்தா கேள்வி கேட்க மாட்டாங்களா? ஏன் அம்மாவும், அப்பாவும் ஒண்ணா இருந்தும் பிரிஞ்சி இருக்கிறாங்க என்று சந்தேகப்பட மாட்டாங்களா?” என்று இவளையே கேள்வி கேட்டு மடக்குவான்.
சரி குழந்தைகளின் முன்னிலையில் தான் இவளை முத்தமிட்டும், கட்டியணைத்தும் இம்சை செய்கிறான் என்றால், அவர்களது அறையில் தூங்கும் பொழுதும் “குட் நைட் பரா” என்று அவளது கன்னத்தில் அல்லது நெற்றியில் முத்தம் வைத்து விட்டு தூங்குவான் கண்விழித்ததும் “குட் மோர்னிங்” சொல்வதும் முத்தத்தோடுதான்.
“சரியான இம்ச புடிச்சவன்” பரா மனதுக்குள் செல்லமாக முறைத்தாலும் அவளுக்கு அது பிடித்திருக்கவே அவனை தடுக்கவும் மாட்டாள், அதை பற்றி அவனிடம் பேசவும் மாட்டாள்.
பேசப் போய் தனது செயலால் அவள் வருந்துகின்றாளென்று எண்ணி அவன் ஒதுங்கி விடுவானென்று இப்டியொரு சம்பவமே நிகழவில்லையென்று இருப்பாள் பரா. 
இன்றும் அவ்வாறுதான் இவள் பார்ட்டிக்கு லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தால் அதை போட்டியா? இதை போட்டியா? டேவிடுக்கு ப்ரவ்ன்னா அலர்ஜி. முகம் வீங்கிடும். பீட்டர் பால் உணவுகள் சாப்பிட மாட்டான். ஜெசிகா எதை கொடுத்தாலும் முழுங்குவா. அது ஒரு தீனிப்பண்டாரம்” இவளை நெருங்கி அமர்ந்து எழுந்திக் கொண்டிருந்தவள் கையை பிடித்து, நோட்டை பார்த்ததுமில்லாமல் இவளது தோளில் தாடையை வைத்து இவள் பார்த்தேயிராத இவனது கொலிக்ஸ்ஐ பற்றி பேசலானான்.
அவனது மூச்சுக்கு காற்றும், தொடுகையும், அருகாமையும் இம்சை செய்ய பார்ட்டியில் மதுபானம் வைக்கக் கூடாது என்று சண்டை போட்டு, அவனை திட்டி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.
அறைக்கு வந்தவள் கதவை சத்தி விட்டு வேகமாக மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தலானாள்.
“ஏன் இப்படியெல்லாம் பண்ணுறான்? லூசு, கூமுட்டை, அரைவேக்காடு” காலேஜ் செல்லும் பராவாக மாறி ஜெராடை வசைபாட ஆரம்பித்தாள்.
ஜெராடின் அனைத்து சில்மிஷங்களை பொறுத்துக்க கொண்டு தனது மனதையும் வெளிக்காட்டாமல் இந்த நான்கு மாதங்களாக பரா வெற்றிகரமாக அவனோடு குடும்பம் நடாத்திக் கொண்டிருக்கின்றாள்.
இரவு ஏழுமணி தாண்டியிருந்தது. சூரியன் மறைந்து மாளிகையின் எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பித்திருந்தன. இதுவே இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றால் சூரியன் இரவு எட்டுமணி தாண்டியும் விழித்திருந்தான்  ஆக்டொபர் மாதம் வந்து விட்டால் நான்கு மணி ஆகும் பொழுதே கதிரவன் கடலை தேடி சென்றுவிடுவானென்றும் ஜெராட் பராவிடம் கூறியிருந்தான்.
ஐவி வீடு வர தாமதமாகும் பொழுது ஜெராட் அச்சப்பட சூரியனின் மறைவின் நேரமாற்றமும் ஒருகணம் என்று புரிந்துகொண்டிருந்தாள் பரா.
“பார்ட்டி என்று மெழுகுவர்த்தி ஏத்துறதோ, பார்ட்டி பல்ப்ஸ் வைக்கிறதோ கூடாது. மாளிகையில் உள்ள எல்லா விளக்கும் எரியனும். கரண்ட் கட் ஆனா ஜெனரேட்டர் உடனே வேலை செய்யணும் புரியுதா” அப்பொழுதும் ஜெராட்டை மிரட்டினாள்.
“சரிங்க மகாராணி” அவள் நெற்றியில் முட்டி விட்டு கன்னம் கிள்ளிவிட்டு சென்றான் ஜெராட்.
தன்னையோ தன் குடும்பத்தையே கண்காணிக்கும் நபர் பார்ட்டியை சாக்காக வைத்து உள்ளே நுழைந்து விடக் கூடும். அப்படி கலந்து விட்டால் சீசீடிவியில் சிக்காமலா இருப்பான்? அவன் நோக்கம் என்ன? அவன் யார் என்று கண்டு பிடித்தேயாக வேண்டும். அதனாலயே எக்காரணத்தைக் கொண்டும் மின்சாரம் தடைபட்டு விடக் கூடாதென்று கூற்றினாள் பரா.
மாலை மங்கி இரவு நெருங்க, நெருங்க பார்ட்டிக்கு குடும்பம், குடும்பமாக ஜெராடின் காரியாலய நண்பர்கள் வர ஆரம்பித்திருக்க, ஜெராடும் குடும்பத்தோடு வாசலில் நின்று வரவேற்கலானான்.
வந்தவர்கள் பரிசுப் பொருட்களோடு வருகை தந்திருக்க, “எதுக்கு இதெல்லாம். வேண்டாமென்று சொல்லியிருக்கலாமே” மாளிகையின் குடிபுகுவதால் இந்த பார்ட்டி என்று இவர்கள் பரிசுப் பொருட்களை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று எண்ணிய பரா ஜெராடின் காதுக்குள் கூற,
“எனக்குத் தெரியாது. தெரிஞ்சி வேணாம்னு சொல்லியிருந்தாலும், இவனுங்க கேட்க மாட்டானுங்க. பர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வரானுன்களே வெறுங்கையோட வர முடியுமா? அதான். கண்டுக்காத விடு. ஜெஸியும், லெனினும் ரொம்ப குஷியா இருக்காங்க பாரு” குழந்தைகளின் பக்கம் அவள் கவனத்தை திசை திரும்பியவன் வந்தவர்களிடம் பேசலானான்.
பார்ட்டியும் ஆரம்பமாக பரா ஜெராட் அறிமுகப்படுத்தி வைக்கும் ஒவ்வொருவரையும் கவனமாக பார்த்து வைத்துக்கொண்டது மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தாரையும் யார் யார் என்று கண்காணித்து வைத்தாள்.  
பராவின் ஆங்கிலமும் ஓரலளவுக்கு நன்றாகவே இருக்க, அவளும் வந்தவர்களிடம் இன்முகமாக பேசிக்கொண்டிருந்தாள்.
திடிரென்று மாளிகையின் அனைத்து மின்விளக்குகளை அணைந்து போனது. பராவின் ஒரே வேண்டுகோள் மின்சாரம் மட்டும் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே.
“ஜெராட்…. லெனின்… ஜெஸி…” அச்சத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேட முயன்றாள்.
கண்களுக்கே புலப்படாத அந்த நபரால் தன் குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் அடிக்குரலில் அனைவரது பெயர்களையும் கூறி இவள் அழைத்தாலும், வருகை தந்திருந்தவர்கள் கூட பதட்டமடையாமல் அமைதியாக இருந்ததை இவள் தான் உணரவில்லை.
சட்டென்று ஒரு கதவு திறக்கும் சத்தம். அது அவள் கதவில் பூட்டியிருந்த விண்ட் சிம்மினால் எழுப்பப்பட தான் சந்தேகிக்கும் நபர்தான் அக்கதவின் வழியாக வருவதாக நினைத்தாள் பரா.
அப்பக்கம் அவள் பார்வை செல்ல அங்கே ஒரு வெளிச்சம். அது விளக்கா? என்ன அது? என்று அவள் யோசிக்கும் தருவாயில் அது அவளிருக்கும் திசையில் பயணிக்க அது ஒரு மெழுகுவர்த்தி என்று கண்களுக்கு புலப்பட்டது.
கூடவே பிறந்தநாள் வாழ்த்து பாடலும் அவளுக்காக ஜெராட் பாட ஆரம்பிக்க பார்ட்டி ஹாலிலுள்ள ஒவ்வொரு விளக்காக எரிய ஆரைம்பித்ததோடு மாளிகையின் மொத்த விளக்குகளும் மீண்டும் உயிர் பெற்றன.
இன்று பராவின் பிறந்தநாள். அதை தெரிந்துதான் ஜெராட் இன்று வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான்.
வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்ததும், அன்றுதான் என்னுடைய பிறந்தநாள் என்று அவள் சொல்வாளென்று ஜெராட் எதிர்பார்த்தான் பரா வாய் திறக்கவில்லை. அவள் தான் அவனிடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க முடிவு செய்து விட்டாளே.
சாதாரண ஒருநாளாக இருந்தால் இன்று என் பிறந்தநாள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆலயத்துக்கு சென்று வருகிறேன் என்றாவது கூறியிருப்பாள். ஜெராட் தானும் வருகிறேன் என்று வந்தாலும் சரி இல்லாவிடினும் சரி அவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றிருப்பாள்.
பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யவிருக்கும் பொழுது அவள் வெளியே செல்லவும் முடியாது. பிறந்தநாள் என்று கூறி, அவனிடம் எதையும் எதிர்பார்க்கவும் அவள் விரும்பவில்லை.
“இவனுக்கு எப்படி என் பிறந்தநாள் இன்று என்று தெரியும்? பசங்ககிட்ட கூட சொல்லலையே. அப்பாவும், அம்மாவும் காலையில் தானே பேசினாங்க. அதுவும் இவன் ஆபீஸ் போனப்போ” பரா யோசித்துக் கொண்டே ஜெராடை பார்த்திருக்க, அங்கிருந்த அனைவரும் பிறந்தநாள் பாடல் பாட ஆரம்பித்தனர்.
ஒரே ஒரு மெழுகுவர்த்தியேந்திய கேக்கை ஜெராட் கையில் ஏந்தியவாறு அவள் முன் வந்து நிற்க, ஆச்சரியமாக அவனை பார்த்திருந்த அவளது கண்கள் அவனை கொஞ்சம் கோபமாகவும் முறைக்க ஆரம்பித்தன.
“பவர் கட் ஆகக்கூடாது என்று சொன்னேனே. என்ன காரியம் பண்ணுறீங்க. நான் பயந்துட்டேன்” என்றவள் வந்தவர்களை மீண்டும் பார்வையால் அலசலானாள்.
“டார்லிங். நீயொரு பயந்தான்கொள்ளினு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் உனக்கு சப்ரைஸ் கொடுக்காம இருக்க முடியுமா? வா கேக் கட் பண்ணலாம்” என்றவன் அதற்குண்டான ஏற்பாட்டை செய்யலானான்.
சந்தேக நபரை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவளுக்கு ஜெராடின் பேச்சின் மாற்றம் கூட புரியவில்லை. 
குழந்தைகள் இருவரும் அருகில் வர பரா கேக்கை கட் செய்து முதலில் ஜெராட்டுக்குத்தான் ஊட்டினாள். அதன் பின் லெனின், ஜெஸி என்று ஊட்ட, ஜெராடும் அவளுக்கு ஊட்டி விட்டு அவனது பரிசாக ஒரு வைர மாலையை கொடுத்தது மட்டுமல்லாது அதை அணிவிக்கவும் செய்தான்.
“ஓஹ்… அந்நியோன்யமான தம்பதியர்கள்னா இப்படித்தான் இருக்கணும் போல” என்று பராவால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அனைவரும் அவளை வாழ்த்தி தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும் கொடுக்க, அப்பொழுதுதான் அது தனக்காக கொண்டு வரப்பட்டது என்று பராவுக்கு புரிந்தது.
ஜெஸி, மற்றும் லெனின் கூட அவளுக்கா பர்த்டே கார்டும், பரிசுபொருளும் கொடுக்க “என் பர்த்டே செலெப்ரேஷன் என்னத்த தவிர எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு” ஜெராடை முறைத்த பரா “பசங்கள விட்டுட்டு எனக்கு பர்த்டே செலெப்ரெட் பண்ணா அவங்க மனசு கஷ்டப்பட மாட்டாங்களா?” காப்பகத்தில் அவர்களுக்கு தனியாக கேக் வெட்டி கொண்டாடியதே இல்லை. அவர்களது பிறந்தநாள் என்று என்றும் அவர்களுக்குத் தெரியாது.
கைகுழந்தையாகவே லெனினும், ஜெஸியும் காப்பகத்துக்கு கிடைத்திருக்க, மருத்துவரின் உதவியோடு அவர்களை பிறந்து இத்தனை நாட்கள் என்று கணித்து பிறப்பு சான்றிதழை எழுதியிருந்தார் பாதிரியார்.
தத்தெடுக்கும் பொழுது ஜெராடும், பரவும் அவர்களின் பிறந்தநாளில் எந்த மாற்றமும் செய்திருக்கவில்லை.
“உன்ன போல அவங்க யோசிக்கல. டபுள் பார்ட்டி என்றதும் குஷியா ரெடியாகிட்டாங்க” என்றான் ஜெராட்.
பராவுக்கு மனம் கேட்கவில்லை. குழந்தைகளிடம் “உங்க பார்த்டேயையும் இப்படி பார்ட்டி ஏற்பாடு செஞ்சி பெருசா கொண்டாடலாம்” என்றாள்
“சப்ரைஸ் டார்லிங். சப்ரைஸ். இப்போ அதை பற்றி சொல்லக் கூடாது இல்லடா பசங்களா” என்று புன்னகைத்தான் ஜெராட். அவன் அவர்களிடம் பேசி புரியவைத்துதான் இந்த ஏற்பார்டையே செய்திருக்கிறான் என்று அவர்களின் புன்னகையில், தலையசைப்பிலும் புரிந்துகொண்டாள் பரா.
அப்பொழுதுதான் அவனது “டார்லிங்” என்ற வார்த்தையை கவனித்தாள் “ரொம்ப நடிக்காதீங்க ஜெராட். உங்க ப்ரெண்ட்ஸ் போன பிறகு பசங்க உங்காத்தான் கேள்வி கேட்பாங்க” என்றாள்.
அவள் அதை யதார்தமாகத்தான் கூறினாள். குழந்தைகளுக்காகத்தான் ஒரேயறையில் தங்க முடிவு செய்தார்கள். குழந்தைகளுக்காக என்று நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்தும், பொறுமையாகவும் இருக்கின்றாள்.
நண்பர்களை நம்பவைக்க இவன் நடித்தால் அதை குழந்தைகள் கண்டு கொண்டு கேள்வி கேட்க மாட்டார்களா?
“சப்ரைஸ் இன்னும் முடியல டார்லிங்” என்றவனோ ஒரு வேலையாளை அழைக்க ரோஜா பூஞ்செண்டை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
அதை கையில் வாங்கியவன் பராவிடம் நீட்டியவாறே “நமக்கு ஏற்கனவே கல்யாணமாச்சு. அதனால மண்டியிட்டு கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்குறது எல்லாம் கொஞ்சம் ஓவர்.
என் லைப்ல இன்னொரு பொண்ணுக்கு நிச்சயமாக இடம் இருக்காதுன்னு நினச்சேன். ஆனா உன்ன போல ஒரு தேவதைக்கு நிச்சயமாக இடம் இருக்குனு உன் கூட இருக்க ஆரம்பிச்சப்போவே நான் உணர ஆரம்பிச்சேன்.
எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. அது காதலா என்று கேட்டா எனக்கு சொல்லத் தெரியல. இப்போதைக்கு நீ என் கூட நல்ல ப்ரெண்டா இருந்தா போதும். அது எப்படீன்னா… என் பெட்டர் ஹாப். என்னோட நிழல், என்னோட விம்பம் எப்படி வேணா எடுத்துக்க, கடைசிவரைக்கும் கூட இரு.
உனக்குத்தான் தெரியுமே நான் எவ்வளவு பேசுவேன்னு. இத சொன்னா நீ ஏத்துப்பியா? மாட்டியா? சந்தேகமா பார்பியா? ஒரே டென்சன். சோ எனக்கு வேற வழியும் தெரியல. இத்தனை பேர் சாட்ச்சியா உன் கிட்ட சொன்னா நீ ஏத்துப்ப, அட்லீஸ் புரிஞ்சிப்ப என்ற ஒரு நம்பிக்கை, சொல்லிட்டேன்” மனதில் இருந்ததை பட்டென்று கூறியவன் ரோஜா செண்டையும் பராவின் கையில் வைத்திருந்தான்.
“அடப்பாவி… என்னமோ காதல சொன்னது போல என்ன ஒரு பில்டப்பு” பராவின் உதடுகள் முணுமுணுத்தாலும் அவனுக்கு அவளை பிடித்திருக்கு என்றதில் ரொம்பவே மகிழ்ந்தவள் ஜெராட்டை கிள்ளினாள். அவன் தமிழில் என்ன கூறினான் என்று புரியாவிடினும் அனைவரின் கரகோசத்தில் ஜெராட் அலறியது கேட்கவில்லை. பராவின் கண்கள் கலங்கி இருந்ததன.
“ஹேய் ஹேய் எதுக்கு இப்போ அழுற. உனக்கு பிடிக்கலையா? நான் ஏதாச்சும் தப்பு பண்ணிட்டேனா?” பரா மெல்ல மெல்ல அவன் மனதில் அடியெடுத்து வைத்து விட்டாள். ஐவியின் மேல் இருக்கும் காதலால் ஜெராட் தான் அதை உணர்ந்தானில்லை.
ஜெராட் இந்த ஜென்மத்தில் தன்னை காதலிக்கவே மாட்டான் என்று எண்ணியிருந்த பராவுக்கு அவன் மதில் தன் மீது காதல் மலர்ந்து விட்டது என்று இன்னும் புரியவில்லை. அதற்கு அந்த சந்தேக நபர் அவள் மனதில் புகுந்து சிந்திக்க விடாமல் செய்து கொண்டிருந்தானென்றால், பார்ட்டியின் சூழலும் இன்று அமைந்திருந்தது. நிதானமாக யோசித்தால் புரிந்துக்கொள்வாள்.
ஆனால் அவள் மதில் அவன் மீது காதல் இருக்கத்தானே செய்கிறது. “போடா லூசு…” என்றவாறே அவளை இறுக கட்டிக் கொண்டவள் “ஐ லவ் யு ஜெராட்” என்று மெல்லமாக முணுமுணுத்தாள்.
“அப்பா…அப்பா.. என்று லெனின் ஜெராடின் காற்சட்டையில் தொங்க “அம்மா அம்மா” என்று பராவின் கவுனை பிடித்து இழுத்தாள் ஜெஸி.
“டேய் வாங்கடா… நீங்க ரெண்டு பேரும் இல்லனா உங்க அம்மாவே எனக்கு இல்லடா” சந்தோஷமாக சிரித்தான் ஜெராட்.
அனைவரையும் உணவருந்த ஜெராட் அழைத்திருக்க, பாதிபேர் பார்ட்டி ஹாலிலும், கொஞ்சம் பேர் தோட்டத்திலும், கொஞ்சம் பேர் ஜெராட் ஏற்பாடு செய்திருந்த மதுபான விருந்தில் தங்களது உணவுத்தட்டுகளோடு ஐக்கியமாகியிருந்தனர்.
வேலையாட்களை அழைத்து அனைவருக்கும் தேவையானதை பார்த்து வழங்குமாறு உத்தரவிட்ட ஜெராட் தன் குடும்பத்தை விட்டு அகலவில்லை.
“உன்ன இப்படி பார்க்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கு ஜெராட். நீ எந்த ஒரு விஷயத்தையும் டக்குனு விட்டுக்கொடுக்க மாட்ட, விட்டிடீனா மூவ் ஆன் பண்ணி போய்டுவ. எனக்கு உன் கிட்ட பிடிச்ச குணமே அதுதான்” என்றான் டேவிட்.
“உண்மையிலயே உன் வைப் தேவதைதான் ஜெராட் நீ ரொம்ப லக்கி” என்றாள் ஜெசிகா.
அவர்கள் பேசியது பராவுக்கு புரிந்ததினால் இன்முகமாகவே நின்றிருந்தாள்.
சட்டென்று டேவிட் பிரெஞ்சில் பேச ஆரம்பித்தான். “பழசை மறந்து புது வாழ்க்கை ஆரம்பிச்சு சந்தோசமாக இருக்க, காயங்கள் மாறினாலும் வடு இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை தடவிகிட்டே இருக்கக் கூடாது. திரும்ப காயம் ஆகாம பார்த்துக்கணும் புரியுதா?”
“இப்போதான் நான் கஷ்டப்பட்டு இங்லிஷ் கத்துக்கிட்டேன். இன்னொரு லாங்குஏஜ் எல்லாம் கத்துக்க என்னால முடியாது. மரியாதையா எனக்கும் தெரிஞ்ச பாஷைல பேசுங்க” தமிழில் சிரித்தவாறே ஜெராட்டை மிரட்டினாள் பரா.
ஜெசிகாவும் ஆங்கிலத்தில் அதையே கூறி திட்ட, சத்தமாக சிரித்த ஜெராடோ “இந்த பொம்பளைங்களு நாம ரகசியம் பேசினா பிடிக்காது டேவிட்” என்று பிரெஞ்சில் பேசி அவர்களை வெறுப்பேத்தலானான்.
அதன்பின் தங்கள் ஜோடியொடு அனைவரும் ஆட ஜெராட் பராவை பார்த்து புன்னகைத்தான்.
“என்ன சார் உங்களுக்கு ஆடத் தெரியுமா? தெரியாதா?” பரா கிண்டல் செய்ய,
“எனக்கு பால்ரூம் ஆடத் தெரியும், உனக்குத் தெரியாதே. சொல்லிக் கொடுக்கணும் என்ற எண்ணமும் எனக்கு வரல. நெக்ஸ்ட் பார்ட்டில ஆடலாம்” என்றான்.
“யார் சொன்னா எனக்குத் தெரியாது என்று. வாங்க” என்றவள் ஜெராடோடு அவனுக்கு இணையாக ஆட “உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க. ஸ்ரீலங்கால இதுக்கெல்லாம் க்ளாஸ் கூட இருக்கா என்ன?” என்று கேட்டான்.
“ஸ்ரீலங்கால க்ளாஸ் இருக்கு. ஆனா நான் அங்க போகல. இங்க என் இங்லிஷ் டீச்சர்தான் சொல்லிக் கொடுத்தாங்க” என்றாள் பரா.
“ஆமா உன் டீச்சரம்மாவா பார்ட்டிக்கு இன்வைட் பண்ணலயா?” டீச்சரை காணவில்லை என்று கேட்டான் ஜெராட்.
“பண்ணேன். வந்திருந்தாங்களே. அதோ அங்க” என்று ஆப்பிள் மரத்தடியில் நின்ற வான்யாவை காட்ட
“ஐவி…” என்றான் ஜெராட்.

Advertisement