Advertisement

அத்தியாயம் 11
பராவின் வாழ்க்கை ஜெராடும் குழந்தைகளோடும் நிம்மதியாகவும், அமைதியாகவும் அழகாகவும் நகர்ந்து கொண்டிருந்தது.
காலையிலையே ஜெராடின் முகத்தில் புன்னகையோடு கண் விழிப்பவள் முதலில் செல்வது குழந்தைகளில் அறைக்குத்தான். அவர்களை பார்த்து விட்டுத்தான் காலை கடனையே முடிப்பாள்.
அதன்பின் காலை உணவை தயாரித்து வைத்து குழந்தைகளை எழுப்பி அவர்களை பாடசாலை செல்ல தயார்படுத்துவாள். அந்த நேரத்தில் ஜெராட் எழுந்து ஜாகிங் சென்றிருப்பான்.
அவன் தயாராகி வரும் பொழுது இவர்கள் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து அவனுக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள்.
நேற்று என்ன பாடசாலையில் நடந்து என்று நேற்றிரவே பேசியிருப்பார்கள். இன்று என்ன செய்ய இருக்கிறோம் என்பதே காலை உணவின் பிரதான பேச்சாக இருக்கும்.
“நேரமாகுது. நேரமாகுது ஜெஸி… லெனின்… கிளம்புங்க” ஜெராட் அழைக்கவும் குழந்தைகள் இருவரும் சிட்டாக பறந்து வந்து வண்டியில் ஏறிக்கொள்வார்கள்.
ஆரம்பத்தில் ஜெஸி வண்டியில் ஏறாது பராவும் வர வேண்டும் என்று அடம் பிடித்தாள். ஜெஸியை பாடசாலையில் விட்டு விட்டு பரா திரும்ப நடந்து வீட்டுக்கு வருவது ஒன்றும் அவளுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. எத்தனை நாட்களுக்கு அதை செய்வதாம்?
“நீ அப்பா கூட போ… உன்ன கூட்டிட்டு வர அம்மாதான் வருவேன். நீ போகலனா உன்ன வீட்டுல பூட்டி வச்சிட்டு அம்மா அம்மாவோட கிளாசுக்கு கிளம்பிடுவேன். நீ வீட்டுல தனியாகத்தான் இருக்கணும். அண்ணனும் ஸ்கூல் போறான் பார்த்துக்க” என்று மிரட்ட ஜெராடும் தடுக்கவில்லை அமைதியாக பார்த்திருந்தான்.
ஜெஸி ஜெராட் ஏதாவது சொல்வானோ என்று அவனை பார்த்து விட்டு லெனின் அழைக்கவே வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“குழந்தைகிட்ட அப்படியெல்லாம் பேசக் கூடாது என்று சொல்வேன் என்று என்ன பார்த்திருப்பாளோ” பராவிடம் ஜெராட் சந்தேகம் கேட்க,
“அவளே உங்க கிட்ட கம்பளைண்ட் பண்ணா மட்டும் அவளுக்காக பேசுங்க அதுவரைக்கும் வாய திறக்கக் கூடாது” என்று இவனையும் மிரட்டினாள் பரா.
புருவம் உயர்த்தி அவளை பார்த்தவன் குறும்பு மின்ன “சரிங்க மகாராணி” என்பது போல தலையசைத்து விட்டு வண்டியை எடுக்க,
“அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க” என்றாள் ஜெஸி. அவளிடம் பரா இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதே இல்லையே. 
கண்ணாடி வழியாக அவளை பாவமாக பார்த்த ஜெராட் “என்னையும் செமையா திட்டுறாங்க ஜெஸி. என்னக்கு நீ கேளு” என்று சொல்ல கப்சிப் என்றானாள் ஜெஸி.
லெனின் பேச ஆரம்பித்த பின்தான் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
ஜெராட் இறங்கி கதவை திறந்து ஜெஸியை இறக்கி கையை பிடித்து அழைத்து சென்று நுழைவாயினுள் விட்டுத்தான் லெனினை அவன் பாடசாலையில் விட செல்வான்.
ஜெஸி இறங்கும் பொழுது பிடிமானத்துக்காக ஜெராடின் கையை பிடிக்க ஆரம்பித்தவள் தான் மூன்று மாதமாக இப்பொழுதெல்லாம் வெளியே எங்கு சென்றாலும் அவன் கையை சகஜமாக பிடித்துக் கொண்டு நடப்பாள். ஆனால் இன்றுவரை அவனை “அப்பா” என்று அழைக்கத்தான் இல்லை.
“என்னகி ஜெஸி என்ன அப்பான்னு கூப்பிடுவான்னு தெரியல” தினமும் தூங்கும் பொழுது பராவிடம் ஜெராட் பேசுவது ஜெஸியை பற்றி தான்.
“அவ கிட்ட நிறைய மாற்றம் தெரியுது இல்ல. கூடிய சீக்கிரம் கூப்டுவா” பராவும் இவனை சமாதானப்படுத்துவாள்.  
பராவும் அவள் வகுப்பை வீட்டுலையே ஆரம்பித்திருந்தாள். எதோ ஒரு வயதான டீச்சரம்மாவை எதிர்பாத்திருந்த பராவுக்கு தனது வயதில் ஒரு பெண்ணை தனக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஜெராட் ஏற்பாடு செய்திருப்பான்னென்று கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. 
வீட்டு வேலைகளை முடித்த பரா ஆப்பிள் மரத்தடியில் தங்க நிற முடியும், நீலக் கண்களோடும் ஒரு மங்கை அமர்ந்திருப்பதைக் கண்டு தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவள் யார்? இங்கு என்ன செய்கின்றாள் என்று வினவினாள்.
“நான் வான்யா. பரா நீங்க தானே. உங்களுக்கு பாடம் எடுக்கத்தான் வந்தேன். வீட்டுக்குள்ள இருக்குறத விட இங்கயே அமர்ந்து படிக்கலாமா?” என்று தமிழில் கேட்டவளை பராவுக்கு ரொம்பவுமே பிடித்திருந்தது. 
“சரியான டீச்சரத்தான் எனக்காக செலெக்ட் பண்ணியிருக்குறீங்க ஜெராட். ரொம்ப தேங்க்ஸ்” முதல் நாளே ஜெராடுக்கு குறுஞ்செய்தி மூலம் நன்றி சொல்லி இருந்தாள் பரா.
“வித் மை ப்ளெஷர்” என்று ஜெராட் ஸ்மைலியுடன் பதில் அனுப்பியிருக்க, அன்றிலிருந்து அவர்கள் இருவரும் குறுஞ்செய்தி மூலம் பேச ஆரம்பித்தனர். அதுவும் ஆங்கிலத்தில் தான் ஜெராட் பராவுக்கு குறுஞ்செய்தி அனுப்புவான்.
பரா தமிழில் அனுப்பினால் பதில் அனுப்ப மாட்டான். ஆங்கிலத்தில் அனுப்பினால் மட்டும் பதில் அனுப்புவான் அதில் பிழைகள் இருந்தால் திருத்தி அதையும் சேர்த்து அனுப்புவான்.
சிவந்த முகத்தை ஸ்மைலியாக அனுப்பி பரா கோபத்தைக் காட்ட, இவன் இரண்டு ரோஜாக்களை அனுப்பி சமாதானம் செய்வான்.
கோபமாக ஸ்மைலி அனுப்பினாலும் பரா சிரித்தவாறேதான் அனுப்புவாள். ஜெராடுக்கும் அவள் கோபமாக இல்லையென்று நன்றாகவே தெரியும். அவளது குறும்புத்தனம் அவனுக்கு ரொம்பவும் பிடித்திருக்கவே சிலநேரம் அவளை வம்பிழுப்பான். சிலநேரம் சமாதானமாவது போல் நடிப்பான்.
பரா ஆங்கிலம் கற்றுக்கொள்ள வான்யா உதவினாலென்றால் பேச ஜெராட் தான் உதவிக்கு கொண்டிருந்தான். மெல்ல மெல்ல பாராவை மரியாதை பன்மையில் பேசிக் கொண்டிருந்த ஜெராட் ஒருமையில் பாராவை பேச ஆரம்பித்திருந்தான்.  
மாளிகையின் உள்வேலைகள் அனைத்தும் முடிவு பெற்று வெளிச்சுவர்களுக்கு நிறம் பூசும் வேலை நடந்துகொண்டிருந்தது.
“எத்தனை மாசமா வேலை நடக்குது? நாங்க வந்தே மூணு மாசமாகுது இன்னுமா வேலை முடியல” வேலை பார்ப்பவர்களால் எந்த தொந்தரவும் இல்லையென்றாலும் சில நேரம் யாரோ தன்னை கவனிப்பது போல் ஒரு உள்ளுணர்வு பராவுக்குள் இருந்து கொண்டே இருக்க, ஜெராடிடம் கூறி மாளிகையின் உள்ளேயும், வெளியேயும் சீசீடிவி கூட பொருத்தினாள். ஆனால் சந்தேகப்படும்படியாக யாரும் கேமராவில் சிக்கவில்லை.
“பல வருஷமா ரெனவேஷன் செய்யவே இல்லயாம் சோ ஒரு வருஷம் ஆகும் என்று சொன்னாங்க. எட்டு மாசமா வேலை நடக்குது. இன்னும் கொஞ்சம் தானே. அப்பொறம் கார்டன சரி பண்ணனும்” என்றான் ஜெராட்.
“மாளிகையை வாங்கினதும் வாங்கினீங்க எல்லா செலவையும் உங்க தலைல கட்டீட்டானுங்களா? ஆமா நான் இப்படி கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க? எதுக்காக இந்த மாளிகையை வாங்குனீங்க? இங்க ஏதாச்சும் புதையல் இருக்கா என்ன? இவ்வளவு பெரிய மாளிகை. எம்புட்டு செலவாகியிருக்கும்”
எட்டு வருடங்களாக அவன் சம்பாதித்த பணத்தில் முக்காவாசியை சேமித்து, பங்கு சந்தையில் வந்த லாபத்தையும் போட்டு, அது போக கடன்பட்டுத்தான் இந்த பங்களாவை வாங்கினான் என்றால் பராவிடம் யாருக்காக இந்த பங்களாவை வாங்கினேன் என்று கூற நேரிடும் என்று ஜெராட் சிரித்து மழுப்பினான்.
“சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க ஏதாச்சும் கள்ளக்கடத்தல் பண்ணுறீங்களா? ஆயுத கடத்தல், தங்கம் கடத்துறது, ட்ராக்ஸ் இல்ல ஏதாச்சும் இல்லீகல் பிசினஸ் அப்படியேதாச்சும் பண்ணமா உங்களால இந்த பங்களாவ வங்கியிருக்கவே முடியாது” வித்தியாசமான குரலில் பேச முயன்று தோற்றாள்.
அதுவே ஜெராட்டுக்கு சிரிப்பை மூட்டியது. அவள் தலையை தட்டியவன் “வெளிநாட்டுக்காரன் இந்த நாட்டுல ப்ரோபர்டி வாங்குறான்னா அவனை பத்தி விசாரிக்க மாட்டாங்களா? எல்லா டாகிமன்ட்ஸும் ஐயா பக்காவா சப்மிட் பண்ணிதான் இந்த பங்களாவ வாங்கினேன்” அதனால் தானே அன்று பராவை விசாரிக்க வந்த காவலாளிகள் கூட இது ஜெராடின் பங்களா என்று அறிந்து வைத்திருந்தனர்.  
“அப்போ கண்டிப்பா புதையல் இருக்கும்” நாடியை தடவி யோசித்தாள்.
“புதையல் இருக்கோ, பொணம் இருக்கோ யாருக்குத் தெரியும்” ஜெராட் அதை விளையாட்டுக்கு சொல்லவில்லை. வரலாற்றை பார்த்தால் அவன் கூறியதில் உண்மையும் அடங்கியிருந்தது.
“என்னது பொணமா?” மிரண்டவள் அவனை கட்டிக்கொள்ள “ஆமா ரோமர்கள் படையெடுத்தப்போ யுத்தம் நடந்ததில்லை அப்போ எத்தனை உயிர் போய் இருக்கும்.  அனாமத்தா போன உசுரு. அடங்காத ஆசையோட அலையும் ஆத்மா…  ஆவிங்க கூட இருக்கலாம்” என்றான் ஜெராட்.
“ஆத்தி…. பேயா…” அடிக்குரலில் அலறியவளை கண்டு சத்தமாக சிரித்தான் ஜெராட்.
“என்ன பேய பார்த்தது போலயே இப்படியா பயந்து நடுங்குவ” ஜெராடால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“நான் காஞ்சனா பேய்ல இருந்து காஞ்சூரியன் பேய் வரைக்கும் பார்த்திருக்கேன். எந்த பேய் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன்” அவ்வளவு நேரம் அஞ்சியவளா இவள் என்பது போல் வீரவசனம் பேசலானாள்.
அதை பார்த்து ஜெராடுக்கு மேலும் சிரிப்பாகத்தான் இருந்தது.
“உன்னால சொல்ல வந்ததது கூட மறந்து போகுது. என் கொலிக்ஸ் பார்ட்டி கேட்டுகிட்டே இருக்கானுங்க. வீட்டு வேலை முடியட்டும்னு நானும் சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்போதான் வீட்டு வேலை முடிய போகுதே கூடிய சீக்கிரம் பார்ட்டியையும் வைக்கணும். அதுக்கு தயாராகு”
“ஜெஸி, லெனின் பத்தி அவங்களுக்குத் தெரியுமா?”
ஜெராடோடு வேலை பார்ப்பவர்களுக்கு ஜெராட் விவாகர்த்தானவன் என்று தெரியும். பார்ட்டியின் பொழுது பராவை என் மனைவி என்று அறிமுகம் செய்து வைத்தால் கூட பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தால் எந்த மாதிரியான கேள்விகளை கேட்பார்களோ என்ற அச்சம் பராக்குள் இருந்ததைத்தான் இவ்வாறு கேட்டாள்.
“எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னபோவே ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டானுங்க. நீயும் டிவோர்சி, நானும் டிவோர்சி. உன் வேண்டுகோள் ரெண்டு குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்பதுதான் அப்போதான் என்ன கல்யாணமே பண்ணிப்பேன்னு சொன்னதாக சொன்னேன். யாரப்பா அந்த தேவதை? சீக்கிர நம்ம கண்ணுல காட்டுப்பான்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க”
“வேற ஒண்ணுமே சொல்லலையா?”
பராவின் வாழ்க்கையில் எவ்வளவோ நடந்திருக்க, தான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது போல் கூட ஜெராட் நண்பர்களிடம் பெருமையடித்திருக்கலாம். அல்லது கவலையாகக் கூட பராவின் வாழ்க்கையில் இவ்வாறெல்லாம் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கலாம்.
திருமணமானதை தவிர எதுவுமே கூறவில்லையா என்று சற்று ஆச்சரியத்தில் தான் கேட்டாள் பரா.
“உன் பெர்சனல் லைப்ல நடந்ததை பத்தி உன் அனுமதியில்லாம யார் கிட்டயும் பகிர்ந்துக்க யாருக்குமே உரிமை இல்ல. எனக்கும் தான். திடிரென்று குழந்தைகளை பார்த்தாலும் வேண்டாத கேள்விகள் எழும் அதனால முன் கூட்டியே சொல்லிட்டேன்” என்றவன் பராவின் தலையை இழுத்து நெற்றியில் முட்டியவன் “ரொம்ப யோசிக்காத பொண்டாட்டி…” என்றான்.
திருமணமானத்திலிருந்து ஜெராட் பரா என்று அவள் பெயரை கூறித்தான் அழைப்பான். அதுவும் மரியாதை பன்மையில். மெல்ல மெல்ல அவனறியாமலே ஒருமையில் பேச ஆரம்பித்திருந்தவன் இன்றுதான் பேச்சுவாக்கில் அவள் மனைவி என்பதையே கூறியிருந்தான்.
பராவின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன. அவளுக்கும் அவனோடு இவ்வாறெல்லாம் பேச வேண்டும் என்று உள்ளுக்குள் ஆச இருந்தாலும், திருமணம் செய்யும் முன்பே அவன் தெளிவாக பேசிவிட்டதால் அவனிடத்தில் எந்தவிதமான உரிமையான அழைப்பையும் விடுக்க மாட்டாள்.
இன்று அவனே அவளை “பொண்டாட்டி” என்று அழைத்ததில் தரையிலிருந்து இரண்டடி மிதப்பது போல் ஒரு உணர்வு.
அதை கூட முழுமனதாக அனுபவிக்க  விடாமல் “சார்” வாசலிருந்து வேலை பார்ப்பவர்களின் ஒருவர் அழைக்க வெளியே சென்றான் ஜெராட்.
“அட்டைப்பலகையை எடுத்துடலாம்னு இருக்கோம். குழந்தைகள் விளையாடுறாங்களானு தெரியாதே அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார்.
“ஆ… சரி நீங்க வேலைய பாருங்க. பசங்க எங்க கூடத்தான் இருக்காங்க” என்றான் ஜெராட்.
அட்டைப்பலகையை நீக்கும் வரையில் ஜெராட்டை தவிர யாரும் வாசலில் இருக்கவில்லை. சத்தத்தால் குழந்தைகள் அஞ்சுவார்களென்று பரா அறைக்குள் சென்றிருந்தாள்.
அட்டைப்பலகை முழுவதுமாக நீக்கப்பட்டதும் ஜெராட் அழைக்கவே பரா அப்பகுதிக்கு வந்தாள்.
“என்ன இது? வாசல்னு நமக்கு வரண்டாவ காட்டிட்டு வாசலை இங்க பூட்டி வச்சிருந்திருக்குறீங்க?” அவர்கள் பாவிப்பதை விட இரண்டு மடங்காக இருந்தது அந்தப்பகுதி.
“இது பார்ட்டி ஹால். அந்த காலத்துல பார்ட்டி எல்லாம் இங்கதான் பண்ணாங்க”
“அடப்பாவிங்களா… ராஜ வாழ்க வாழறீங்கன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையிலயே வாழ்ந்திருக்குறீங்களேடா…”
பராவை கண்டுகொள்ளாது ஜெராட் அவரிடம் ஆங்கிலத்தில் எதோ வினவ பரா “என்ன? என்ன?” என்று கேட்டு குடைந்தாள்.
“வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு இடது பக்கமாக சென்று ஒரு கதவை திறந்தவன் அங்கே வீட்டுக்குள் இருந்த தோட்டத்தை காட்டினான்.
அந்த மாளிகையின் நடுவில் தான் அந்த தோட்டம் அமைந்திருந்தது. எங்கிருந்தாலும் தோட்டத்துக்கு வந்து செல்லக் கூடியபடி கண்ணாடிக் கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
“வாவ் செம்மையா இருக்கே” கண்களை நிறைக்கும் அழகான மலர்கள் நிறைந்திருந்த அவ்வறை காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான தாக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று அமைக்கட்டிருந்ததது.  
“அந்த காலத்துல பறவைகளையும் வளர்த்திருக்காங்க. நான் வேணாம்னு சொல்லிட்டேன். வீடுன்னா அமைதியா இருக்கணும். “கிசி பிசி” என்று ஒரே சத்தமாக இருந்தா எனக்கு தலைவலி வந்துடும்”
“பறவைகளை கூண்டுல அடைகிறது எனக்கு பிடிக்காது” ஜெராட் ஒரு காரணம் கூற இவள் இன்னொரு காரணம் கூறியவள் “ஜில்லுனு நல்ல காத்தோட்டமா இருக்கு. இங்க ஒரு ஊஞ்சல் போட்டா நல்லா இருக்கும்” தனது எண்ணத்தையும் கூறினாள் பரா.
“உத்தரவு மகாராணி” கிண்டல் செய்தாலும் ஜெராட் தலையசைத்திருந்தான்.
“பங்களாவ இவ்வளவு பெருசா கட்டியிருக்காங்க வெளிய ஏன் முத்தம் இவ்வளவு சின்னதா இருக்குனு யோசிச்சேன். கார்டான உள்ள கொண்டு வந்து வச்சிருங்காங்க. ஆமா நம்ம ரூம்ல இருந்து கூட இங்க வரலாமா?”
“வரலாமே நம்ம ரூம்ல இன்னொரு கதவு இருந்ததே அது எதுக்குன்னு கேட்டியே அது ஆபீஸ் ரூம்க்கு வேலை முடியல சோ பூட்டி வச்சிருந்தேன். இப்போ போய் பார்க்கலாம். ஆபீஸ் ரூம்ல இருந்தா கார்டான பார்க்கலாம். ஆபீஸ் ரூமுக்கு பக்கத்துல லைப்ரரி”
“வாவ் சூப்பர். இன்னும் என்ன எல்லாம் இருக்கு?”
“பாத் சிட்டிக்கு என்றே ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு வா…” என்று அவளை மீண்டும் வாசலுக்கு அழைத்து வந்தவன் வலது புறமுள்ள கதவை திறக்க, அங்கே பெரியதொரு குளியலறை தொட்டியுடன் கூடிய குளியலறை இருந்தது.
அந்த அறை முழுவதும். பண்டைய ரோமர்களின் சிற்பங்கள் நிறைந்திருக்க, “நாம டைம் ட்ராவல் பண்ணி ஒன்றும் வந்துடல இல்ல” சிரித்தாள் பரா.
“ஹாஹாஹா… அந்த காலத்துல குளிக்க ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க கண்ட இடத்துல எல்லாம் பாத் டாப் கட்டியிருக்காங்க. இங்க எல்லா இடத்திலையும் இந்த மாதிரி ஒன்ன பார்க்கலாம். இத விட பெரிய பாத் டாப் இந்த ஊர்ல இருக்கு”
“இது உங்களுக்கே அநியாயமாக இல்ல. இது பாத் டப்பா? ஸ்மிங் பூளுங்க”
“ஹாஹா… ஸ்மிங் பூல் போல பெரிசா இருந்தாலும் ஆழம் இல்ல மேடம். நாம உக்காந்தாலும் இடுப்பளவுக்குத்தான் தண்ணி இருக்கும்”
“அப்போ எதுக்கு இம்புட்டு பெருசா கட்டி வச்சிருக்கானுங்க”
“அதுவா… கூட்டமா குளிக்கத்தான்”
“என்ன?” அவள் மண்டைக்குள் என்ன ஓடியதோ அப்படியொரு முகபாவனை கொடுத்தவள் எதுவும் ஜெராடிடம் கேட்டு வைக்கவில்லை.
“ஹாஹா…” பரா கொடுத்த முகபாவனையில் ஜெராட் ஏன் இங்கு அழைத்து வந்தான் என்பதையே மறந்து சிரித்தான்.
“சரி வாங்க வெளிய போகலாம்”
“அட இருமா…” என்றவன் அங்கிருந்த தொங்கும் ஒரு விளக்கை பிடித்திழுக்க, இரகசிய கதவு திறந்துக் கொண்டது.
“வா…”
“எங்க போறோம்… இந்த பங்களா… பேய் பங்களாவா? ஒரே மர்மமா இருக்கு”
“பேஸ்மாண்ட்” என்றவன் படிகளில் இறங்க பராவும் கூடவே இறங்கியவாறே “இந்த இங்லிஸ் படத்துல வர்றது போல ஒரு குண்டு பல்பு. அத சுத்தி மட்டும்தான் வெளிச்சம். பேஸ்மாண்ட் பழைய பொருட்களோடு கும்மிருட்டாக இருக்கும். அங்கதான் பேய் இருக்கிறதாக காட்டுவாங்க. என்னால எல்லாம் இங்க வர முடியாது” என்றவள் அவன் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
“லைட்ட போட மறந்துட்டேன் சாரி” அலைபேசியில் உள்ள டார்ச் லைட்டை உயிர்ப்பித்து படிகளில் இறங்கி மின்குழிலை எரிய விட அங்கே தாராளமாக வெளிச்சம் இருந்தது.
“அப்பாடா… கண்ட குப்பையெல்லாம் இங்க போடாம இருக்கிறதே நல்லது. ஆமா பேஸ்ட்மன்ட்ன்னு சொன்னீங்க பேஸ்ட்மெண்ட்டுக்கே மூணு கதவு எதுக்கு”
“அந்த காலத்துல எதிரிகள் வந்தா இங்கதான் மறைஞ்சிருந்திருக்காங்க. இது பாத் ரூம், இது கிட்ச்சன். இது பெட்ரூம்” ஒவ்வொன்றாக திறந்துக் காட்டியவன், படுக்கை அறை வழியாக இன்னுமொரு இரகசிய பாதையை திறந்து படிகளில் ஏறியவாறே “கிச்சன்ல ஒரு சுவர் இருக்கு அது வழியா தப்பிச்சு போக வழி இருக்கு. அது எங்க பொய் முடியுதுனு தெரியல. இப்போ பல பில்டரிங்ஸ் வந்ததினால அந்த பாதை மூடப்பட்டுக் கூட இருக்கலாம்” என்றான் ஜெராட். 
“ஆஹ்… உண்மையிலயே இங்கிலிஷ் படம் பார்த்து போலத்தான் இருக்கு” சிலிர்த்தாள் பரா.
“இங்க இப்படி சீக்ரட் ரூம்ஸ் இருக்குனு யாருக்கும் தெரியாது. மாளிகையை வாங்குனப்போ கூட ஓனர் சொல்லல. அநேகமா அவருக்கு கூட தெரியாது. நான் வாங்கினப்போ முதல்ல வந்து பார்த்தது பேஸ்மாண்ட்தான். ஒரே தூசியும், பழைய பொருட்களுமா இருந்தது. தனியாகத்தான் எல்லாத்தையும் க்ளியர் பண்ணி. பங்களால பவர் கட் ஆனாலும் இந்த ரூம்ஸ்ல கரண்ட் போகக் கூடாது என்று தனியா கரண்ட் கனெக்ஷன் கொடுத்து, பெயிண்ட் பண்ணி அதுக்கு பிறகுதான் பங்களாவையே ரெனவேஷனுக்கு வேற ஒரு கம்பனிக்கு கொடுத்தேன்”
“பெரிய ஆளுதான் போங்க. ஆனா உங்களுக்கு எப்படி இங்க இப்படியொரு இடம் இருக்குனு தெரியும்?”
அதை எவ்வாறு சொல்வான்? அதை சொன்னவளே ஐவி தானே. அவளுக்கு கூட இங்கே இப்படியொரு இடம் இருக்கிறது என்று தெரியுமே தவிர வழி தெரியாது. குத்துமதிப்பாகத்தான் கூறியிருந்தாள். ஐவிதான் கூறினால் என்று பராவிடம் கூறினால் இந்த பங்களாவையே அவளுக்காகத்தான் வாங்கியதாக கூற நேரிடும் என்று “எல்லாம் ஒரு கணிப்புதான். வா அட்டிக பார்க்காலம்”
அவர்கள் வந்து நின்ற இடம் அவர்களது குளியலறையாக இருக்க, “இந்த சுவத்துக்கு பின்னால இப்படியொரு பாத போகுதுனு நான் கனவுல கூட நினைக்கல. இந்த பங்களால இன்னும் என்னென்ன மர்மங்கள் இருக்கோ” என்ற பரா ஜெராடின் பின்னால் சென்றாள்.
மீண்டும் பார்ட்டி ஹாலுக்கு வாந்தார்கள். அதன் மேற்கு புறத்திலுள்ள கூரையின் ஒரு பலகையை ஜெராட் பிடித்து இழுக்க அது நகரவேயில்லை.
“என்ன இது? அன்னக்கி சட்டுனு படிக்கட்டு கீழ வந்தது. இன்னக்கி வரமாட்டேங்குது”
“மேல என்ன இருக்கு?”
“ஒண்ணுமே இல்ல. இருந்ததை எல்லாம் ஆட்களை வச்சி க்ளியர் பண்ணிட்டேன். சுத்தமாகத்தான் இருக்கு”
“ரொம்ப பழைய பங்களா இல்ல குளிரினால் ஜாமாகி இருக்கும். என்னாச்சுன்னு அப்பொறமா பார்க்கலாம்” என்றாள் பரா.
சரி வா மத்த ரூம்ஸ எல்லாம் காட்டுறேன் மேலும் மூன்று படுக்கையறை. இசைக்கருவிகளை கொண்ட ஒரு அறை என பரா இவ்வாறு கூடவா இருக்கும் என்று நினைக்காத அளவுக்கு விதவிதமான பொருட்களோடு கூடிய அறைகள் இருந்தன.
“பங்களாவ வாங்கினீங்க இந்த பொருட்களையெல்லாம் உங்களுக்கே எப்படி கொடுத்தாங்க. இதுக்கு வேற காசு கொடுத்திருக்கணுமே. இது பங்களாவா? மியூசியமானே எனக்கு டவுட்டா இருக்கு”
“ம்ம்.. நிறைய பொருட்களை அரசாங்க மியூசியத்துக்கு எடுத்துட்டு போய்ட்டாங்கனு பழைய ஓனர் சொன்னாரு. எஞ்சி இருக்குறது எல்லாம் இந்த பங்களாகேன்னே உரித்தானது. பங்களாவ வாங்குறதனா போராளோடதான் இல்லனா கொடுக்க மாட்டாங்க” என்றான்.
“திருட்டுப்பயலுங்களுக்கு இதோட மதிப்பு தெரிஞ்சா புகுந்துடுவாங்களே. ரெனவேஷனுக்கு வேற ஆட்கள் உள்ள வந்துட்டு போய் இருக்காங்களே. திட்டம் போட்டு புகுந்துடுவானுங்களோ” பீதியிலையே கூறினாள் பரா.
“நீ ரொம்ப சினிமா பாக்குற பரா. நைட்ல இங்க பெட்ரோல் போலீஸ் சுத்திக்கிட்டுதான் இருப்பாங்க. இந்த ஏரியா ரொம்பவே சேப்”
தன்னை கைது செய்தவர்களின் முகம் கண்ணுக்குள் வந்து போக, “ஆமா… ஆமா… அப்பாவிங்களையும் சேர்த்து கொத்தோட தூக்கிடுவானுங்க” உதடு பிதுக்கினாள்.
“டீவி பார்க்க ஒரு ரூம் வேணும். குழந்தைகள் விளையாட ஒரு ரூம் வேணும். அதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன்” என்று அதையும் காட்டினான் ஜெராட்.
“எல்லாம் சரி இந்த மாளிகையை கூட்டி பெருக்கவே ஒருநாள் பத்தாதே. இதுல கார்டான வேற சுத்தம் செய்யணும்” அழகாகத்தான் இருக்கிறது. அழகை பேணி பாதுகாக்கவும் வேண்டுமல்லவா?
“உள்ள, வெளிய கார்டன க்ளீன் பண்ண, மென்டைன் பண்ண ஆள் நியமிச்சாச்சு. மாளிகையை க்ளீன் பண்ணவும் பழைய ஓனரோட ஆட்களே வேலைக்கு இருப்பதாக சொல்லிட்டாங்க”
“நிஜமாகவா? நம்பிக்கையானவங்க தானே” யாரையும் பராவால் சட்டென்று நம்ப முடியவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்திடுமோ என்று உள்ளுக்குள் அச்சமாகவே இருந்தது.
“டோன்ட் ஒர்ரி. எல்லார் பத்தியும் தரவா விசாரிச்சுதான் வேலைக்கு எடுத்திருக்கேன். கிட்சன் பக்கத்துல சர்வன்ட் ரூம்ஸ் இருக்கு. அவங்க அங்க தங்கிக்கொள்வாங்க”
“நீங்க சொன்னா சரி” என்றாலும் பராவின் மனதுக்கு நெருடலாகவே இருந்தது.  

Advertisement