Advertisement

அத்தியாயம் 20
“ஐயோ நான் வேற இவன சமைக்க சொல்லிட்டேன். என்னத்த சமைக்கிறானோ தெரியலையே. பத்து வருஷமா வெள்ளைகாரங்க கூடவே இருந்து அவனுங்க சாப்பாடே சாப்பிட்டு, நாக்கு மரத்து போய் இருக்குறவனுக்கு என்னத்த சமைக்க தெரியும்? நூட்லஸ், பாஸ்த்தானு சமைச்சி என் உசுர வாங்க போறான்” எஸ்தர் ஒரு பக்கம் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள். 
ஜெராடுக்கு சமைக்க தெரியும் என்பதே பரா சொல்லித்தான் எஸ்தருக்குத் தெரியும். இத்தனை வருடங்களாகியும் மகன் பேச்சுக்கு கூட சொல்லியிருக்கவில்லை. ஐவியோடு குடும்பம் நடாத்தியவனுக்கு இலங்கை சமயலா தெரியும்? ஐவி சொல்லிக் கொடுத்த வெள்ளைக்காரர்கள் உண்ணும் வேக வைக்காத உணவுகளும், தங்களுக்கு சற்றும் பொருந்தாத உணவுகளும் தான் ஜெராடுக்கு சமைக்கத் தெரிந்திருக்கும்.
அது தெரியாமல் மகனுக்கு சமைக்கத் தெரியும் என்று அறிந்த ஆனந்தத்தில் அவன் கையால் சமைத்ததை ருசி பார்க்க வேண்டும் என்ற எதோ ஒரு ஆர்வத்தில் மகனை சமைக்குமாறு கூறி விட்டு எதை கொண்டு வந்து கொடுப்பானோ என்று புலம்பலானாள் எஸ்தர்.
“வெள்ளைகாரங்க சாப்பாடு ரொம்ப காரமில்லாம, எண்ணெய் இல்லாம இருக்கும் சம்பந்தி கவலைப்படாதீங்க” பால்ராஜ் சமாதானப்படுத்த,
“நாக்குல வைக்க முடியாதபடி சப்பென்று இருக்கும்னு சொல்லுறீங்க” ஜான்சி கணவனை முறைத்தாள்.
சமைப்பது மருமகனாயிர்றே. அவனே வந்து பரிமாறுவான். இதை சாப்பிட்டு பாருங்க, அதை சாப்பிட்டு பாருங்க என்று கண்டதையெல்லாம் தட்டில் வைத்தால், மறுக்க முடியாமல் முழுங்க வேண்டியதாக இருக்கும் என்ற கவலை அவளுக்கு. இதில் பால்ராஜ் உப்பு, காரம், என்று பேசினால் கடுப்பாகாதா? எஸ்தர் அங்கிருப்பதால் எதுவும் பேசவும் முடியாத நிலை. கோபத்தை காட்டவும் முடியாமல் கணவனிடம்தான் காய்ந்தாள் ஜான்சி. 
பரா அங்குதான் அமர்ந்து குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவிக் கொண்டிருந்தாள். இவர்களின் சம்பாஷணை காதில் விழுந்தாலும் அவர்களுக்கு எந்த பதிலையும் கூறாமல், அவர்களை கவனிக்கவே இல்லை என்பது போல் அமர்ந்திருந்தாள்.
ஜெராடுக்கு உதவி செய்ய இரண்டு வேலையாட்களை அவன் உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தான். அவர்களில் ஒருவர் வெள்ளையர். ஒருவர் கறுப்பினத்தவர். ஆகையால் அவர்கள் சமைத்தாலும் தங்களுக்கு தங்கள் நாட்டு சாப்பாடு மட்டும் கிடைக்காது என்று நன்கு புலப்பட்டவும் இவர்களின் புலம்பல் மேலும் அதிகமானதே ஒழிய அடங்கவில்லை.
ஆனால் ஜெராட் அவர்களை சமைக்க சொல்லவில்லை. காய்கறிகளை நறுக்கவும், சமைத்தபின் சுத்தம் செய்யவும் தான் அழைத்திருந்தான்.
வேலையாட்கள் மூடிய பாத்திரங்களில் என்னென்னவோ கொண்டு வந்து மேசையில் வைக்க, எட்டிப் பார்த்தாலும் அது என்னவென்று அறியாததால் “பாத்திரத்தை பார்த்தா தெரியல உள்ள என்ன இருக்கும் என்று? ரோஸ்ட்டு பண்ண சிக்கன் தான்” என்றாள் எஸ்தர். 
“ஏன் பாட்டி உங்களுக்கு சிக்கன் பிடிக்காதா?” லெனின் கேட்க,
“இன்னக்கி அத மட்டும்தான் சாப்பிட வேண்டி இருக்கும் போலடா… ஆனா உங்கப்பன் எப்படி சமைச்சி வச்சிருக்கான்னு தான் தெரியல” என்றாள்.
லெனின் எஸ்தரை புரியாமல் பார்க்க “பசி ருசி அறியாது என்று சொல்வாங்க. இந்த குளிருக்கு எதையாவது முழிங்கிட்டு தூங்க வேண்டியதுதான்” பெருமூச்சு வேறு விட்டுக் கொண்டாள் எஸ்தர்.  
“சாப்பாடு ரெடி எல்லாரும் வாங்க” ஏப்ரன் அணிந்து அங்கே வந்து நின்ற ஜெராட் எல்லோரையும் அழைக்க,
“மருமகளே மதியம் சமச்சது ஏதும் மீதம் இருக்கா?” பராவை பாவமாய் பார்த்தாள் எஸ்தர். 
“உங்க மகன் கையால சாப்பிடணும் என்று நீங்க தானே ரொம்ப ஆசைப்பட்டீங்க. போங்க போய் சாப்பிடுங்க” பராவால் முறைக்கவும் முடியவில்லை. மிரட்டவும் முடியவில்லை.
அவள் கணவனது கைப்பக்குவம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் தானே. சமையல் நன்றாக இல்லையென்றால் ஜெராடை கிண்டல் செய்து எஸ்தரிடம் மாட்டி விட்டு வேடிக்கை பார்த்திருக்கலாம். ஆனால் அவன் என்னவெல்லாம் சமைத்திருப்பான் என்று பராவுக்கு தெரியும் அதனால் அதிகமாக பேச முடியமால் திண்டாடினாள். 
“போறேன் போறேன். என் தலையெழுத்து இந்த குளிருல இங்க வந்து இவன் கையால எதையெதையோ சாப்பிட வேண்டியிருக்கு” என்றாள் எஸ்தர்.
ஜெராட்டை பார்த்த ஜான்சி எதுவுமே பேச முடியாமல், பராவை பாவமாய் பார்த்தவாறு சென்று சாப்பாட்டு மேசையில் பால்ராஜோடு அமர்ந்து கொண்டாள்.  
முதல் பாத்திரத்தை திறக்க அதில் கோழிக்கறி இருந்தது. அடுத்த பாத்திரத்தில் வெங்காய சம்பலும் தொடர்ந்து உருளை கிழங்கு கறியும், தேங்காய் சுண்டலும், அவித்த முட்டை, பருப்பு கறி என்று இருந்ததை பார்த்து “சோறு தான் சமச்சீங்களா மாப்புள? நாங்க வீணா பயந்துட்டோம்” புன்னகை முகமாக சொன்னார் பால்ராஜ்.
“கொஞ்சம் அமைதியா இருங்க. நாங்க சொன்னதெல்லாம் மாப்புள காதுல போட்டுடுவீங்க போலயே” ஜான்சி பால்ராஜை முறைத்தாள்.
“சோறு இல்ல மாமா” என்ற ஜெராட் மூடியிருந்த பெரிய பாத்திரங்களை திறக்க அதில் இடியாப்பமும், புட்டும் இருந்தன.
கண்களை அகல விரித்துப் பார்த்த எஸ்தர் “இங்க எந்த கடைல இடியாப்பமும், புட்டும் வாங்கிட்டு வந்த?” என்று மகனை சந்தேகமாக கேட்டாள்.
“அம்மா இது உனக்கே ஓவரா தெரியலையா? கடைல வாங்கணுமென்றா உன்ன ஹோட்டலுக்கே கூட்டிட்டு போய் சாப்பிட வச்சிருக்க மாட்டேனா?” அன்னைக்கு இடியாப்பத்தை வைத்தவாறே கூறினான் ஜெராட்.
“ஏன்டா புட்டும் இடியாப்பமும் சட்டுனு பண்ண முடியுமா என்ன? அரிசி ஊர போடனும், இடிக்கணும், வறுக்கணும். உன் வெள்ளக்கார வேலையாட்கள் இதெல்லாம் செய்வாங்களா?” பரா பரிமாறுவதை பார்த்தவாறே சந்தேகம் கேட்டாள் எஸ்தர்.
இதெல்லாம் பரா செய்தாளா? அல்லது இங்கிருக்கும் வேலையாட்களை செய்வித்தாளா? என்பதுதான் எஸ்தரின் கேள்வி.  
“ஏம்மா வெள்ளைக்காரன் எதுக்கெதுக்கோ மெஷின்ஸ் கண்டு பிடிச்சி வச்சிருக்கான் இதுக்கெல்லாம் மெஷினினரி இல்லாமலா இருக்கும். யோசிக்க மாட்டியா?” அறிவான தன்னுடைய அம்மாவா இப்படி பேசுகிறாள் என்று கொஞ்சம் கோபமாக அன்னையை ஏறிட்டான் ஜெராட்.
“சரிடா சரிடா அந்த எப்ரன கழட்டி வச்சிட்டு நீயும், உன் பொட்டாடியும் உக்காருங்க சாப்பிடலாம். பார்க்க நல்லாத்தான் இருக்கு ருசி எப்படி இருக்குனு பார்க்க வேணாம்” நீ என்ன எனக்கு சொல்லுறது? என்பது போல் மகனை முறைத்த எஸ்தர் சாப்பிட ஆரம்பித்தாள்.
“நீங்க என்னமோ உங்க அம்மா கிட்ட சமையல் கத்துக்கிட்டதா சொல்லுறீங்க. உங்க அம்மா இப்படி உங்கள சந்தேகப்படுறாங்களே” ஜெரடுக்கு பரிமாறியவாறே ரகசியமாக வம்பிழுத்தாள் பரா.
“சாப்பிடும் போது என்ன பேச்சு அமைதியா சாப்பிடு. பாரு உன் அம்மா முறைக்கிறாங்க” ஜான்சியை பராவோடு கோர்த்து விட முனைந்தான் ஜெராட்.
பரா அன்னையை பார்த்தாள் தானே. ஜெராட் கூறியது காதிலையே விழாதது போல் சாப்பிடலானாள்.
இலங்கையிலிருந்து பயணம் செய்து வந்த களைப்பில் வேலையாட்கள் செய்யும் உணவுகளைத்தான் மூன்று, நான்கு நாட்கள் உண்டனர்.
அதன்பின்தான் மாளிகையில் என்ன இல்லை. என்ன வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டு பரா பொருட்களை வாங்கி வந்திருந்தாள்.
சில பொருட்கள் மாளிகைக்கு அருகிலிருந்த கடைகளில் கிடைத்திருக்க, சில பொருட்கள் கிடைக்கவில்லை. தனது கம்பனி இருக்கும் இடத்தில் ஒரு கேரளா கடை இருக்கிறதாகவும் அங்கிருந்தால் வாங்கி வருவதாகவும் ஜெராட் கூறியிருக்க, பரா சரியென்றிருந்தாள்.
அங்குதான் இடியாப்பமாவும், புட்டு மாவும் வாங்கி வருவான். பொருட்கள் வாங்க போனபோது மறக்காமல் வாங்கி வந்திருந்தான். தான் சமைக்கிறேன் என்று அன்னையையும் பராவின் பெற்றோரோரையும் ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்றே புட்டும், இடியாப்பமும் செய்திருந்தான்.
ஜெராட் கூறியது போல் இடியாப்பம் செய்யவும் அவன் ஒரு இயந்திரம் வாங்கி வந்திருக்க, சட்டென்று செய்திருந்தான். 
பராவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்பதால் தான் பெற்றவர்கள் புலம்பிய போது அமைதியாக இருந்தாள். 
குழந்தைகளும் அமைதியாக சாப்பிட, கரண்டிகள் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் அங்கு இல்லை.
உணவுக்கு பின் ஜெராட் அனைவருக்கும் இனிப்பு கொடுக்க, “இது வேறயா? இத பரா தானே பண்ணா?” என்று எஸ்தர் பராவை பார்க்க,
“நான் தானே எல்லாம் சமைக்கிறேன் என்று சொன்னேன். இத மட்டும் இவளுக்கு பண்ண கொடுப்பேனா?” என்றான் ஜெராட். அவனுக்கு கோபம் வரவில்லை. தான் எவ்வாறு இவ்வளவு நன்றாக சமைக்கிறோம் என்று அன்னைக்கு தெரியாததால் சந்தேகப்படுகிறாள் என்று புரியவும் சிரிப்பாக தான் இருந்தது. 
“நான் உங்க கூடாது தானே இருந்தேன். நான் எதுவும் பண்ணல” என்றாள் பரா. இவர்களுக்காக ஜெராட் இவ்வளவு செய்திருக்கிறான். அவனை புகழ வேண்டாம் சந்தேகப்படாமலாவது இருக்கலாம் இல்ல என்ற ஆதங்கம் பராவினுள் எழ தான் எதுவும் செய்யவில்லை என்றாள்.
பரா எஸ்தரை பார்த்த பார்வையை வைத்தே “என்ன புருஷனுக்கு சப்போர்ட்டா? போ போய் எனக்கு குடிக்க சுடுதண்ணி எடுத்துட்டு வா” என்றாள் எஸ்தர்.
எஸ்தரை எதுவும் கூறாமல் எழுந்து சென்றாள் பரா.
“ஏன்மா ஞாபகம் இருக்கா? நான் ஒலெவல் படிக்கும் போது உனக்கு உடம்பு முடியாம இருந்ததே. அப்போ கட்டில்ல இருந்துகிட்டே இந்த கறிக்கு இந்த சில்லறத்துல இந்த அளவுல போடு, அரிசிக்கு இவ்வளவு தண்ணி வைன்னு சொன்னியே அப்போ கத்துக்கிட்டது தான்” என்றான் ஜெராட்.
“அட போடா… உன் பொண்டாட்டி சொல்லி கொடுத்து சமைக்க கத்துக்கிட்டு அவ இங்க இல்லனதும் புதுசா காரணம் சொல்லி எனக்கு ஐஸ் வைக்க பாக்குறியா? இரு அவ வரட்டும் பத்த வைக்கிறேன்” எஸ்தர் மகனை நம்பாமல் முறைத்தாள்.
ஜெராட் சொன்னது உண்மைதான். அன்றுதான் ஜெராட் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. அவனுக்கு ஆசையும் ஆர்வமும் மட்டும் இருக்கவில்லை. இங்கிலாந்து வந்த பின் தேவையும் இருக்கவே கற்றுக்கொண்டான்.
அதை பரா புரிந்து கொண்டிருந்த அளவுக்கு எஸ்தர் புரிந்து கொள்ளாததற்கு காரணம் இவன் இலங்கைக்கு சென்றிருக்கும் பொழுது ஒரு தடவையாவது அன்னையை அமரவைத்து சமைத்துக் கொடுக்காததுதான்.
வேலையாட்கள் உணவருந்திக் கொண்டிருக்கவே பரா சுடுதண்ணீர் எடுக்கலானாள்.
அப்பொழுது ஒருவேளையாள் “நம்ம ஏரியால டிரான்ஸ்பார்மர் பிரேக் டவுன் ஆகிருச்சு. நமக்கு நாளா பக்கமும் ஜெனரேட்டர் இருக்குறதால பவர் கட் ஆனது கூட தெரியல” என்றார்.      
“இதற்கு முன் இப்படி ஆனதே இல்லையே” என்றார் இன்னொருவர்.
“ரொம்ப பழையது இல்ல. ஏதாவது பிரச்சினையாக இருக்கும். எல்லா வீட்டுலையும் ஜெனரேட்டர் இருக்குறதால யாரும் கம்பளைண்ட் கூட கொடுக்க மாட்டாங்க. கொடுத்தாலும் காலைல தான் வந்து பார்ப்பாங்க” என்றார் மறறொருவர்.
இவர்களின் சம்பாஷணை காதில் விழுந்தாலும் பரா அதில் கலந்து கொள்ளாமல் தண்ணீர் எடுத்துக் கொண்டு சாப்பாட்டறைக்கு வந்தாள்.
அந்த அறையில் இருந்த விண்ட்சிம்ஸ் எல்லாம் ஒரே நேரத்தில் ஆடி சத்தம் எழுப்ப, ஒரு நொடி அதிர்ந்து நின்றாள் பரா.
குளிர்காலம் என்பதால் பகலில் கூட ஜன்னல்களை திறந்து வைப்பதில்லை. அப்படியிருக்க, யாராவது ஜன்னல்களை திறந்தார்களா என்று தான் அவள் பார்வை ஜன்னல்களில் புறம் சென்றது.
ஜன்னல்கள் அனைத்துமே மூடியிருந்தது மட்டுமல்லாது கனமான திரைசீலைகளும் போடப்பட்டிருந்தன. விண்ட்சிம்ஸ் எவ்வாறு சத்தம் எழுப்பியது என்று அவளுக்கு புரியவில்லை. அதுவும் ஒரே நேரத்தில்.
“நல்லவேளை கெண்டல் ஏத்தாம விட்டேன். இல்லனா உள்ள தோட்டத்துல இருந்து வரும் காத்துனால கெண்டல் எல்லாம் அணஞ்சி இருக்கும்” என்றான் ஜெராட்.
“இன்சைட் கார்டான்ல இருந்தா இவ்வளவு பலமாக காத்து வீசிச்சு?” பராவால் நம்ப முடியவில்லை.
அப்படியே வீசியிருந்தாலும் ஒரு பக்கமாகத்தானே வீசியிருக்க வேண்டும்? அது என்ன நாளா பக்கம் வீசுது? எதுவோ சரியில்லை என்று அவள் உள்மனம் உறுத்த ஆரம்பித்தது.
“லெனின், ஜெஸி படம் வரைய, விளையாட நினைக்க வேணாம். பெட்டுக்கு போங்க” என்றாள் பரா.
“என்னாச்சு பரா? சாப்பிட்ட உடனே பசங்கள பெட்ல இருக்கக் கூடாது என்று சொல்லுற நீயா இன்னைக்கு இப்படி சொல்லுற?” ஜெராட் அவளை புரியாது பார்த்தான்.
“நான் கத சொல்லுறேன்” என்று பால்ராஜ் குழந்தைகளை அறைக்கு அழைத்து செல்ல, ஜான்சியும் கூடவே சென்றாள்.
“ஏதாவது பிரச்சினையா பரா?” என்று எஸ்தர் கேட்கும் பொழுதே மீண்டும் விண்ட்சிம்ஸ் எல்லாம் ஆடி சத்தம் எழுப்பியது.
அது ஜெராடுக்கும் வித்தியாசமாக இருக்க, எஸ்தரும் வினோதமாக பார்த்தாள்.
“சார் கிழக்கு பக்கமாக கரண்ட் கனக்ஷன் கொடுத்த ஜெனரேட்டர் தீ பிடிச்சிருச்சு அதை அணைக்கும் முயற்சில இருக்கும் போது அடுத்ததும் எரிய ஆரம்பிச்சது. அதனால ரெண்டையும் ஆப் பண்ணிட்டோம்” என்று ஒரு வேலையாள் வந்து சொல்ல
“பரா நீ அம்மாவை கூட்டிகிட்டு போய் பசங்க கூட இரு. நான் என்னனு பார்த்துட்டு வரேன்” என்றான் ஜெராட்.
“இல்ல நானும் வரேன்” என்றவளை முறைத்துப் பார்த்தவன் “சொன்னா கேளு” என்று அதட்டினான்.
“நீ வாம்மா என்று எஸ்தர் பராவை அழைத்துக் கொண்டு குழந்தைகளின் அறைக்கு சென்றாள்.
பராவின் மனம் அடித்துக்கொண்டே இருக்க, எதோ தவறாக நடக்கப் போவதாக உறுத்தவே குழந்தைகளின் அறைக்கு வந்தவள் “அத்த, அப்பா பசங்கள கூட்டிகிட்டு சீக்கிரம் என் கூட வாங்க” என்று குளியலறையை நோக்கி நடந்தாள்.
“என்ன பரா?”
“என்னம்மா…” என்று இவர்கள் பின்னால் செல்லும் பொழுதே இவர்கள் இருக்கும் பகுதியிலும் மின்சாரம் தடைபட்டது.
“என்ன நடக்குது” எஸ்தர் அச்சத்தோடு கேட்க
“தெரியல அத்த. எதோ தப்பா நடக்கப் போகுதுனு உள்மனசு சொல்லுது. என்ன நடந்தாலும் நான் அவர் கூட இருக்கணும். நான் வந்து கதவை திறக்கும் வரைக்கும் இந்த கதவை திறக்காதீங்க. அரைமணி நேரத்துக்குள்ள நான் திறக்கலைனா போலீசுக்கு போன் பண்ணுங்க” என்று அவளது அலைபேசியையும் எஸ்தரின் கையில் கொடுத்தவள் குளியலறையினூடாக இரகசிய அறைக்கு செல்லும் கதவை திறந்தாள்.
கீழே செல்லும் படிக்கட்டை பார்த்ததும் “என்ன இது? எங்களை எங்க அனுப்புற? நீயும் மாப்புளையும் வா” என்றாள் ஜான்சி.
படிக்கட்டின் ஆரம்பத்தில் இருந்த மின் ஸ்விட்ச்சை தட்டியவள் மின் குமிழ் எரிவதை பார்த்தவாறே “ஜெனரேட்டருக்கு ஏதாச்சும் ஆனா கரண் கட்டாக்காம இருக்க, பேஸ்மான்ட்டுல மட்டும் இன்வேட்டர் பிக்ஸ் பண்ணி இருக்கோம். கீழ போனா லைட் போட்டுக்கலாம். ரூம்ல இருங்க. நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றவள் அவசர அவசரமாக அவர்களை கீழே இறங்கும்படியும் உள்ளே போகும்படியும் கூறி இரகசிய வழியை பூட்டி விட்டு ஜெராட் இருந்த இடத்துக்கு சென்றாள்.
ஐவி ஜெராடின் மாளிகையில் இறந்து கிடந்தாள் என்று அறிந்த நொடியே அன்றோ அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து பயணிக்க எண்ணினான். அவனுக்கு பரிட்சை நடந்துக் கொண்டிருந்ததால் வீட்டார் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்திருந்தனர்.
மாளிகையில் வேலை முடிவடைந்து பீட்டரும் சென்று விட்டதால் அன்றோவுக்கு தகவல் சொல்லவும் யாருமிருக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து அவன் கிளம்பி வரும் பொழுது ஐவியின் உடலை அடக்கம் செய்திருந்தனர்.
அக்காவின் சமாதியின் முன் அழுது கரைந்தவனுக்கு ஜெராடை அப்பொழுதே கொல்லும் கோபம். அவசரப்பட்டு எதுவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் திட்டமிட்டுதான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவன் அமைதியானான்.
அதற்காக அவன் முதலில் பிடித்தது தன்னோடு படித்த கறுப்பினத்தவர்களை வெறுக்கும் நண்பர்கள் சிலரைத்தான்.
அவர்களிடம் ஜெராட் ஐவியை எவ்வாறெல்லாம் ஏமாற்றி திருமணம் செய்து கொன்றான் என்று கதை சொன்னான்.
“அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா… எங்க நாட்டுல இருந்துகிட்டு எங்க பொண்ணையே கொன்னிருப்பான். அவன் தனியா சாகக் கூடாது. அவன் கண்ணு முன்னாடி அவன் பொண்டாட்டி, புள்ளைங்க என்று எல்லாரும் சாகனும்” என்றான் அன்றோவின் நண்பன் தாமஸ்.
“அவனை தனியா போடணும்னா ஆபீஸ் போறப்போவே போட்டிருப்பேன். அவன் கண்ணு முன்னாடி அவன் குடும்பத்தை போடணும். அத பார்த்தே அவன் சாகனும்” என்றான் அன்றோ.
“அவன் இருக்குற ஏரியாகு சட்டுனு உள்ள போக முடியாது. அதுவும் ஆயுதத்தோட போறது அவ்வளவு ஈஸியான காரியம் இல்ல” என்றான் இன்னொரு நண்பன் பேட்ரிக்.
“ஏரியாக்குள்ள போனா மட்டும் அவன் மாளிகைக்குள் போய்ட முடியுமா? மாளிகைல அவன் குடும்பம் மட்டுமா இருக்கு? வேலைக்கு ஆட்கள் இருப்பாங்க. சிகியூரிட்டி இருப்பான். போதாததுக்கு பெட்ரோல் போலீஸ் இருப்பாங்க. போலீஸ் வர்றதுக்குள்ள அவங்கள போட்டுட்டு அங்கிருந்து மாட்டிக்காம போகணும். சரியான திட்டம் இல்லாம இத பண்ண முடியாது” என்றான் அன்றோவின் உயிர் நண்பன் மைக்கல்.
“மைக்கல் சொல்லுறது சரிதான். முதல்ல நாம வேவு பார்க்கலாம். அப்பொறம் வேட்டையாடலாம்” என்றான் ஐந்தாவது நபரான வில்லியம்.
“முதல்ல அந்த ஏரியால ஒரு வீடு வாங்குறோம். வாடகைக்கு இல்லனா சொந்தமாக கூட வாங்கிக்கலாம். ஒன்னு இல்லனா ரெண்டு வீடுன்னாலும் ஓகே. ஜாகிங் போற சாக்குல மாளிகைல உள்ள வேலையாட்கள் கூட பேசி பழகணும்” என்றான் மைக்கல்.
“ரொம்ப ஓவரா பழகினாலும் நமக்கு பிரச்சினையா முடியலாம்” என்றான் தாமஸ்.
“பழகுறது என்றா நாம எல்லாரும் ஒண்ணா போய் எல்லார் கிட்டயும் பழகக் கூடாது” மைக்கல் சொல்ல ஆரம்பிக்க,
“உதவி செய்வது போல் தகவல் கறக்கணும்” என்றான் பேட்ரிக். 
“ஜாகிங் போறது போல் வேவு பார்க்கணும்” வில்லியம் சொல்ல 
“சந்தர்ப்பம் கிடைச்சா பேசணும், உதவி கேட்கிறது போல நடிக்கணும்” என்றான் அன்றோ. 
“முடிஞ்சா உதவி செய்றது போல உள்ள புகுந்து வேவு பார்க்கணும்” என்ற மைக்கல் “நாம ஒரே வீட்டுல இருக்குறது அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு கூட தெரியாக் கூடாது. ஏரியால யாருக்கும் நாம நண்பர்கள் என்று தெரியாக் கூடாது. அதே போல மாளிகைல இருக்குறவங்களுக்கும்” என்றான்.
திட்டமிடடபடி ஏரியாவிலுள்ள கடைசி வீட்டைத்தான் வாடகைக்கு வாங்கியுமிருந்தனர்.
ஆளாளுக்கு தனியாக வேவு பார்த்து வேலையாட்களோடு பேசி தகவல் சேகரித்ததோடு ஜெராட் இலங்கை சென்றிருப்பதையும் அறிந்து கொண்டனர்.
“எர்லியா இருட்டிடும். டிரான்ஸ்பார்மர் வேலை செய்யலைன்னா மாளிகைல நாலு ஜெனரேட்டரும் வேலை செய்ய ஆரம்பிக்கும். உள்ள போன உடனே ஜெனரேட்டர் எல்லாத்துக்கும் தீ வைக்கணும்” என்றான் வில்லியம்.
“அதுக்கு முன்னாடி போலீசுக்கு கால் பண்ண முடியாதபடி ஜாமர் வைக்கணும்” என்றான் தாமஸ்.
“எல்லாம் சரி மாளிகைக்கு உள்ள எப்படி போறது? நாம வர்றோம் என்றதும் கேட்ட திறந்து விடுவானுங்களா?’ நக்கலாக கேட்டான் பேட்ரிக்.
“எட்டு மணிக்கு கேட்ல நிக்கிறவன் தம்மடிக்க ஆப்பிள் மரத்தடியில் ஒதுங்குவான். ட்ரான்ஸ்பார்மர் ஆப் ஆனதும் அத பத்தி போன்ல பேசிக்கிட்டே நீ அங்க போ… அவன் என்னனு கேப்பான். நீ விசயத்த சொல்லுற சாக்குல உள்ள புகுந்து பேச்சு கொடுத்துகிட்டே அவன் கூட தம்மடி. கேட்ட பூட்டாம பாத்துக்க. அந்த நேரம் நான் உள்ள வந்துடுறேன். அப்பொறம் அவன் சாப்பிட போயிடுவான். அவன் போன பிறகு உங்களுக்கு கேட்ட நான் திறந்து விடுறேன்” பேட்ரிக்கிடம் கூறினான் அன்றோ.
ஜெராட் இலங்கையிலிருந்து வந்ததை அறிந்து “டேய் ஊருக்கு போனவன் அவனோட அம்மாவையும் பொண்டாட்டியோட பெத்தவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காண்டா…” சிரித்தான்  தாமஸ்.
“நல்லதா போச்சு. பையன் செத்துட்டான்னு அம்மா அழ வேண்டியதில்லை” கருவினான் அன்றோ.
இன்று கேப்டன் ஊரில் இல்லை என்று அறிந்த உடன் ஜெராடை குடும்பத்தோடு கொன்றொழிக்க இன்றுதான் நல்ல நாளென்று முடிவு செய்தவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து, கருப்பு நிற முகக்கவசமும் அணிந்து, யாருடைய கைரேகையும் எங்கேயும் பதிந்து விடக் கூடாதென்று கைக்கவசம் கூட அணிந்திருந்தனர். துப்பாக்கிகளோடு வண்டியில் வந்து ட்ரான்ஸ்பார்மரை செயலிழக்க செய்தவர்கள் வண்டியை ஜெராடின் மாளிகையின் அருகில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
வேலையாள் புகைக்க ஆரம்பிக்கும் பொழுதே சாதாரணமாக அலைபேசியில் கூறுவது போல் பேட்ரிக் “இந்த ஏரியால கூட பவர் கட் ஆகுது. நல்லவேளை வீடுகள்ல ஜெனரேட்டர் இருக்கு. அந்த வெளிச்சத்துல வீட்டுக்கு போய் கிட்டு இருக்கேன். இல்ல. இல்ல. ட்ரான்ஸ்போமர்கள தான் எதோ சிக்கல் போல” அங்கே நின்று ஷூ லேஸை கட்ட குனிந்தான்.
அவன் பேசுவது காதில் விழவும் காவலாளி என்ன எது என்று விசாரிக்க ஆரம்பித்தார்.
பெட்ரிக்தான் ஜாகிங் செல்வது போல் மாளிகையை வேவு பார்த்தான் ஆகையால் காவலாளிக்கு அவனை நன்கு தெரியும். நம்ம ஏரியா பையன் என்று காவலாளி சாதாரணமாக பேச “தம்மு கிடைக்குமா?” என்று உள்ளே புகுந்தவன் வாயில் மூடி விடாதபடி கையிலிருந்த பையை போட்டு விட்டு காவலாளியோடு நடந்தான்.
அதை காவலாளி கவனிக்கவில்லை. அன்றோ உள்ளே நுழைந்து மறைந்துக்கொள்ள, பேட்ரிக் பேசி விட்டு அன்றோ ஓரமாக எடுத்து வைத்திருந்த பையோடு வெளியேறியவன் அன்றோ அலைபேசி அழைப்பு விடுத்ததும் வண்டியோடு உள்ளே நுழைந்தான்.
வண்டியை இவர்கள் சத்தமே இல்லாமல் கொண்டுவந்து நிறுத்தி வைத்து கால் செய்ய முடியாதபடி ஜமரை இயக்கி ஜெனரேட்டர் எல்லாவற்றுக்கும் தீ வைத்திருந்தனர்.

Advertisement