Advertisement

அத்தியாயம் 08

அன்று நண்பகல் வேளையிலே தங்கராசு வெளியில் கிளம்புவதைச் சரவணன் கவனித்திருந்தான். மாலையில் வரையிலும் அவன் வந்த மாதிரி தெரியவில்லை.

முகில் சென்று சாவியைக் கொடுக்கச் செல்ல, இடை மறித்த சரவணன், “எனக்குக் கொஞ்சம் கணக்குசரிபார்க்க வேண்டிய வேலையிருக்கு நான் முடிச்சிட்டு சாவியை கொடுத்துக்கிறேன், நீ கிளம்பு, போ” என விரட்டினான்.

முகிலோ கேலிச் சிரிப்போடு, “அதென்ன இத்தனை நாளா இல்லாத வேலை இன்னைக்கு மட்டும்?” என விளக்கம் கேட்பது போலே மல்லுக்கு நின்றான்.

குதூகலமாக முகம் பூரிக்க, “உனக்கு இப்போ என்ன தெரியுணும்?” விரல் நீட்டியபடி, முகிலின் முதுகிலே ஒன்று வைத்தான் சரவணன்.

வலியில் நெளிந்தவன், “நீ என்ன கணக்குப் பார்க்கப் போறேன்னு தெரியும்! தங்கராசு கையில சிக்கி தந்தூரி ஆகிடாதே..” கிண்டல் போலே எச்சரித்துவிட்டுச் சென்றான் முகில்.

ஐந்து மணிப் பொழுதில் வேலையாட்கள் சென்றிருக்க, ஆறுமணி போலே கணக்கு வழக்குகளை முடித்து விட்டு சாவியைக் கொடுக்க வந்தான் சரவணன்.

லலிதா அப்போது தான் வாசல் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இவனைக் கண்டவள், அப்படியே வேலையை விட்டுவிட்டு எழுந்து வர, லேசான புன்சிரிப்போடு சாவியை நீட்டினான்.

லலிதாவும் மெல்லிய சிரிப்போடு வாங்கிக்கொள்ள, ஏனோ அந்தச் சிரிப்பு சரவணனிற்கு முழுமை பெறவில்லை.

அப்புறம் நானே உங்ககிட்ட பேசணும்னு தான் எதிர்பார்த்து இருந்தேன். அன்னைக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணிங்க, தேங்க்ஸ்ங்க!” லலிதா மென்குரலில் மொழிய, கிளம்ப இருந்த சரவணன் சற்றே தேங்கி நின்றான்.

மறுமொழி இன்றி இவன் நிற்க, “அன்னைக்கு மாமாவும் உங்ககிட்ட அப்படி நடந்திருக்கக் கூடாது, தப்பு தான்..” என்றவள் தங்கராசு சார்பாக மன்னிப்பு வேண்ட வந்தாள்.

இடையிட்ட சரவணன், “அவருக்கு தெரிஞ்ச மரியாதை அவ்வளவு தான் நினைச்சிப்பேன். இதை நான் பெரிசா நினைக்கலை. விடு லலிதா” என்றான் சமாதானமாக.

இவளுக்குத் தெரியும் தங்கராசு இவனைக் குறைவாகத்தான் நடத்தினான். இருந்தும் பொறுத்துக்கொண்டு தன் கேட்டதற்காக இருந்தானே? உதவினானே? நினைக்க நினைக்க உள்ளம் உருகினாள்.

அப்புறம் அன்னைக்கு ஹாஸ்பிடல் செலவு எவ்வளவுன்னு கணக்குச் சொன்னா, முடிச்ச அளவு சீக்கிரமா கொடுத்திடுவேன்” என்றாள் மேலும் மெல்லிய குரலில்.

சரவணனிற்கு சுள்ளென கோபம் வந்தது, எல்லா நேரமும் பணத்தை தொழிலாகப் பார்ப்பவன் இல்லையே! என்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? இன்னுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை! ஆதங்கமாக விம்மினான்.

உற்ற நேரத்தில் உதவினாலும் பணம் அல்லவா? கொடுத்துவிட நினைத்தாள் லலிதா.

தேவையில்லை லலிதா, எல்லாமே பாட்டிக்காகச் செய்ததுதான். அவங்க கையால நான் எத்தனையோ முறை சாப்பிட்டு இருக்கேன். அவங்க என் மேல காட்டின பாசத்துக்கு நான் செய்த உதவி எல்லாம் கொஞ்சமும் ஈடாகாது. இரண்டையும் நீ நிறுத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை” வெட்டுக்கெனக் கூறிவிட்டான்.

ஒரு தலையசைப்போடு நில்லாது விறுவிறுவென சென்று விட்டான்.

லலிதாவிற்குள் சத்தமின்றி இதயம் தூள் தூளாக நொறுங்கிக் கொண்டிருந்தது.தனக்காக, தான் கேட்டதற்காக, தவித்து நின்ற பொழுது, தன் கண்ணீருக்காக என்றெல்லாம் நினைத்திருந்தேனே, எத்தனை பெரிய முட்டாள்தனம்!

பாட்டிக்காகச் செய்தானாம்! அப்போ தனக்கில்லை என்னும்போது இவன் உதவி ஒன்றும் தேவையில்லை என்னும் கோபம் ஒரு ஓரம் கனலாய் கனன்றது.

சரவணன் யாராக இருந்தாலும் அந்த அவசர நேரத்தில் நிச்சியமாக உதவி இருப்பான். ஆனால் அது பண உதவியாக மட்டும் தான் இருக்கும், இரண்டு நாட்களாக உடன் இருந்து உதவியது, தங்கராசுவின் அவமதிப்பையும் தங்கிக் கொண்டு இருந்தது லலிதாவிற்காக மட்டும் தான். லலிதா கேட்டதாலே!

இப்போது வரையிலும் பாட்டியின் இழப்பை விட, இவள் நிலைக்காகத்தான் மறுகி, உருகி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இவள் மனம் அறியாது இவளுக்காகத்தான் எனக் கூறிவிட இயலாதே!

இவளுக்காக தான் செய்தேன் என்றால், பொறுக்க மாட்டாள், ரோஷக்காரி! உடனே கடனை முடிக்கிறேன் என நகையைக் கழட்டுவாள். இல்லையென்றாலும் பணத்தை ஏற்பாடு செய்ய, அவள் தானே சிரமப்பட வேண்டும் என லலிதாவின் மீது கரிசனம்.

ஆகையால் தான் அவளால் மறுக்க முடியாத கரணமாக, பாட்டிக்காகச் செய்தாக கூறி வந்துள்ளான்.

ஆனால் இது தான் இவள் இதயத்தை வலிக்கச் செய்கிறது என்பதை உணரவில்லை சரவணன்.

லலிதா என்ன வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் நாள் முழுவதும் சரவணனின் நினைப்பு தான் உள்ளே குடைந்து கொண்டே இருந்தது.

பாட்டிக்காக செய்தானாமே? தாளாது பொறுமிக் கொண்டே இருந்தாள்.

தனக்காகவும் ஒருவன் இருக்கிறான், தனக்காக எதுவும் செய்வான், என்ற மிதப்பில் உச்சபட்ச கர்வத்தில் பறந்து கொண்டிருந்தவளுக்கு பெரும் அடி, கீழே விழுந்து, உடைந்து, நொறுங்கிய வலி!

ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்றம், கண்ணில் கண்ணீர் ஊற்றெடுத்துக் கொண்டு சரசரவென வழிந்தது.

நீ தானே அவனை நினைத்துக் கொண்டு கரைகிறாய், அவனுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் உன்னை ஏன் நினைக்கப் போகிறான்?

எத்தனையோ பேருக்குச் செய்த உதவியைப் போல் தான் பரிதாபப்பட்டு உனக்கும் செய்திருக்கிறான். மற்றபடி நீ ஒன்றும் அவனுக்கு எந்த வகையிலும் சிறப்பு இல்லை.

உதவிக்கு நன்றியுணர்வைத் தான் காட்ட வேண்டுமே தவிர, அவனிடத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் வைக்கக் கூடாது.வலிக்க வலிக்க மனதிற்குச் சொல்லி சொல்லி பதிய வைக்க முயன்று கொண்டிருந்தாள். அத்தனையும் இவளுக்கு பெரும் முயற்சி!

பாட்டியின் இழப்பு, சரவணன் கொடுத்த வலியும் ஏமாற்றும் மொத்தமும் பெரும் புயலில் சிக்கித் தவித்து, எழுந்தது போன்றிருந்தது லலிதாவிற்கு.

இப்போது தான் சற்று தேறியிருந்தாள். தனக்கு யார் உதவியும் தேவையில்லை என்ற பிடிவாதம். யார் இல்லாமலும் தன்னால் இருக்க இயலும் என்ற மனப்பாங்கு, அதை காட்டிவிட வேண்டும் என்ற முனைப்பு.

அவளாகவே அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். பாட்டி இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அத்தனை வேலைகளையும் இவள் ஒருத்தியாகச் செய்தாள். வீடு சுத்தம் செய்வது, சமையல் வேலை, தோப்பு வேலை என அனைத்தும் செய்தாள்.

சரவணன் மீது இருக்கும் கோபம், தன்னிலை எண்ணிய கழிவிரக்கம், தன் இயலாமை எல்லாவற்றையும் சேர்த்து அரணாக வைத்துக் கொண்ட லலிதா அதைத் தாண்டி பார்வையைச் செல்ல விடுவதில்லை.

கார்கால மேகங்கள் எல்லாம் காணாமல், கானலாகப் போனதைப் போன்றிருந்தது சரவணனிற்கு. லலிதாவின் பார்வை துளியும் இவன் புறம் வருவதில்லை.

லலிதா காலையில் தண்ணீர் பாய்ச்சும் நேரமும் மாலையில் முல்லைக்கொடியில் பூ பறிக்கும் நேரமும் என அவளின் வெளி வேலைகள் நேர அளவும் சரவணனிற்குத் தெரியும்.

அவள் பார்வை படும் இடத்தில் தவமாக நின்றும் பார்த்துவிட்டான், அவளோ முற்றிலுமாக இவனை தவிர்த்துவிட்டாள். சட்டென்று மாறிய இந்த வானிலை மாற்றத்தைச் சரவணனால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதையோ தொலைத்ததைப் போன்று ஏங்கித் தவித்துப் போனான்.

இன்று வரையிலும் லலிதாவின் வீட்டு முல்லைக் கொடியில் பூக்கள் பறிக்காமல் வாடியும் உதிர்ந்தும் சருகாகியது. அந்தச் சருகுகள் கூட, தங்களை விடவும் பரிதாபமாகத்தான் சரவணனை நினைத்திருக்கும்.

வேலையிடத்திலும் வீட்டிலும் அவனை மீறிய கோபமும் சிடுசிடுப்புமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் சரவணன். எப்போதும் சிரித்த முகமாகத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குபவன் இப்போது இந்த முசுடும் மூர்கத்தனும் புதிதாகத் தெரிந்தது அனைவருக்கும்.

இப்போ என்ன உன் பிரச்சனை?” பொறுக்க முடியாது முகில் கேட்டே விட்டான்.

என்னவென்று சொல்வான்? அவனுக்கே தெரியவில்லை உர்றென முறைப்போடு இறுக்கமாக அமர்ந்திருந்தான் சரவணன்.

இங்கப்பாருண்ணே இத்தனை நாள் பார்த்த பொண்ணு இப்போ ஏன் பார்க்கலை? அவ மனசுல என்ன இருக்குன்னு யோசி, இல்லையா உன் மனசுல இருக்கிறதையாவது போய் அவங்கிட்ட சொல்லு” என முடுக்கினான் முகில்.

டேய் நீயா எதையும் உளறாத? அப்படியெல்லாம் எதுவுமில்லை” பதறிய சரவணன் மழுப்ப, “அப்படியா? அப்புறம் ஏன் நீ இப்படியிருக்க?” எதிர்க்கேள்வி கேட்ட முகில் இவனை யோசிக்க விட்டுச் சென்று விட்டான்.

சில நாட்கள் முன்பு வரையிலும் நன்றாக இருந்தவளிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்? புரியாது குழம்பினான், யோசித்தான்.

தான் செய்த உதவிக்கு நன்றி சொல்லத் தான் தன்னை பார்த்திருந்தாளோ? அதான் அன்றே சொல்லிவிட்டாளோ? நான் உதவி செய்தேன், அவளும் நன்றி கூறி விட்டாள் அத்தோடு முடிந்தது என இருக்கிறாள்!

இதற்கு மேல் அவளிடம் எதையும் எதிர்பார்ப்பக் கூடாது, அப்படி கற்பனையில் ஆசையை வளர்த்துக்கொண்டால் அது தன் முட்டாள் தனமே இன்றி, அவளின் தவறு என்ன இருக்கிறது? அப்போதும் அவன் மனது அவளைத்தான் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

இத்தனையும் மீறி அவளிடம் சென்று பேசவோ தன் மனதைக் கூறவோ இவனால் இயலவில்லை.

இத்தனைக்கும் சரவணன் தான் மாலை வேளையில் சென்று சாவி கொடுக்கச் செல்வது, லலிதாவும் முகம் பார்க்காது வாங்கிக் கொண்டு விறுவிறுவென சென்றுவிடுவாள்.

இப்படி வெடுக்கென வெளிப்படுத்தும் செய்யலைக் கண்ட பின் சரவணனாலும் பேச முடியவில்லை. அதை தாண்டியும் ஒருவித தயக்கமும் குழப்பமும் சரவணனை அரித்துக் கொண்டிருந்தது.

உதவி செய்ததிற்காக உரிமை எடுத்துக் கொண்டால் அன்று தங்கராசு சொன்னபடி நான் கீழானவனே! அவளும் இவ்வாறு தானே நினைத்துக் கொள்வாள்? எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லையே இந்த உதவியை? அடங்கு மனமே என ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தான்.

காலை உணவிற்குப் பின், தங்கராசு வெளியில் கிளம்ப, இடையில் வந்தாள் லலிதா.

மாமா வாழைக்குலை தள்ளி, பதமா இருக்கு. காய்கறி மண்டியில ஏதாவது ஒரு கடையில விலை பேசி, அறுக்க ஆள் அனுப்பச் சொல்லுங்க மாமா. இன்னைக்கே காசு வேணும்னு சொல்லிடுங்க” என்றாள்.

ஏன் இவ்வளவு அவசரம் லலிதா?” இவளுக்கு என்ன தேவையோ என்ற அக்கறையில் கேட்டான் தங்கராசு.

அவசரம் தான். பாட்டியை அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வைச்சிருந்த அன்னைக்கு அவர்.. சரவணன் கொஞ்சம் பில் பே செய்தார். எவ்வளவுன்னு கேட்டு கொடுக்கணும் மாமா” பொறுப்பாகக் கூறினாள்.

பட்ட கடனை தீர்த்துவிட வேண்டும், பாட்டிக்காகச் செய்தது தனக்குத் தேவையில்லை என்ற கோபம் லலிதாவின் மனதில்.

அவனா..?” சற்றே இளக்கார தொனியில் கேட்ட தங்கராசு, “உங்கிட்ட வந்து எதுவும் கடன் கேட்டானா? பிரச்சனை செய்தானா? இல்லை மிரட்டினானா?” என்றான் இறுகிய குரலில்முறுக்கிய கைகளோடு.

இல்லையில்லை மாமா. அவர் இதை அவசரத்துக்கு ஒரு உதவியா தான் செய்தார். இது பத்தி சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை. இருந்தாலும் அவர் பணம் நாம திருப்பிக் கொடுக்கணும் தானே?” தாழ்ந்த குரலில் சரவணனிற்கு நியாயம் பேசினாள்.

சரி விடு நான் பேசி, கொடுத்துக்கிறேன்” தங்கராசு அசால்டாக கூற, லலிதாவால் ஏற்ற இயலவில்லை.

இவருக்கும் அவருக்கும் தான் ஆகாதே! மீண்டும் பிரச்சனையா? அவள் மனம் பதறியது.

இல்லை வேண்டாம் மாமா, இதுக்குன்னு நீங்க எங்கேயும் கடன் வாங்கி வைச்சிடாதீங்க! அவரோடு நீங்க எதுவும் பேச வேண்டாம் பிரச்சனை செய்யவும் வேண்டாம். நான் சொன்ன மாதிரி காய்கறி மண்டில இருந்து ஆள் அனுப்புங்க போதும், நானே விலை பேசிப்பேன்” என்றாள் திடமாக, உறுதியாக.

இப்போ எல்லாம் நீ அவனுக்கு ரொம்ப பரிந்து பேசுற லலிதா” குறைபட்டவன், கண்டிப்பும் காட்டினான்.

மாமா” உயர்ந்த குரலில் அழைத்தவள், “பரிந்து பேசலை, நியாத்தைப் பேசுறேன் மாமா. அன்னைக்கு நம்ம இருந்த நிலைமைக்கு யாரும் உதவி செய்யலை அவர் தான் செய்தார் அதை மறந்திடாதீங்க! அதுமட்டுமில்ல, நம்மளால திருப்பித் தர முடியுமா? இல்லை நம்ம கிட்ட என்ன இருக்குன்னு கொஞ்சமும் யோசிக்காம, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தேவைங்கிற நேரத்திற்குச் சரியா செஞ்சிருக்காரே? திரும்பிக் கொடுத்திடணும் மாமா அதான் மரியாதை!” உறுதியாக உரைத்தாள்.

தங்கராசுவிடம் சிறிதும் சரவணனை விட்டுக்கொடுக்க இயலவில்லை லலிதாவால்.

தங்கராசுவிற்கு கையில் காசில்லை, இனி பொறுப்பேற்க அன்னையும் இல்லாது ஊருக்குள் எவனும் கடன் தர மாட்டான் எனப் புரிந்தது.

அதற்கு மேல் தங்கராசு தர்க்கம் புரியவில்லை. அனைத்திற்கும் அமைதியாக தலையாட்டிவிட்டுச் சென்றான்.

பத்துமணிக்கு மேலே சைட்டில் வேலையாக இருந்த சரவணனிற்கு அன்னையிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அட்டென் செய்து பேச, அக்கா சாரதா மயக்கம் அடைந்து விட்டாள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும், விரைந்து வருமாறு பதைபதைப்புடன் அழைத்தார்.

 

Advertisement