Advertisement

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, அண்ணி, அவர்களின் இரண்டு வயது குழந்தை, என அனைவரும் அடங்கிய அழகிய பெரும் கூட்டுக்குடும்பம், கயல் உடையது.

      வீட்டின் ஒரே பெண் வாரிசான அன்பு கொஞ்சும் கயலின் மீது, அளப்பரியா பாசம் கொண்ட அனைவரும், அவள் வெளியூரில் பணிபுரிய, நாளுக்கு இரண்டு முறையேனும் அலைபேசியில் அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

      ஆனால் அன்று காலையிலிருந்து எவரும் அழைக்கவில்லை!!, மாலை ஐந்து ஆனது, ஆறும் ஆனது, அனைவருக்கும், அலைபேசியில் அழைத்தாள்.

      எவரிடமிருந்தும் பதில் வராமல் போகவே!!… சோர்வுடன் தான் தங்கி இருந்த வீட்டின் பால்கனிக்கு சென்று சிந்தித்தாள்.

      “வீட்டுல எவருக்காச்சும் உடல் நலம் சரியில்லையா!!!”என எண்ண, அவள் மனம் பதறியது.

      “தாத்தாவுக்கு வேற, ஆறு மாதம் முன் பஸ்ட் அட்டாக் வந்ததே. அப்போகூட அந்த டென்ஷனிலும் அப்பா என்கிட்ட பேசினாரே!!!, எனக்கு ஆறுதல் கூறி மனத சமன் செய்தாரே!!… இன்று என்ன ஆச்சு?”என மனம் பிசைய துவங்க,

      தன் வீட்டின் டிரைவர் கிட்டுவிற்கு அழைத்தாள், அந்த மடையன், இவளின் அதட்டலுக்கு பயந்து நடந்தவற்றை மறைக்க இயலாமல் உளற துவங்கி, இவளின் பயத்தை அதிகரித்தான்.

      கலக்கமான, அதேசமயம் ஆணையிடும் குரலில், “தெளிவாக சொல்லுங்கள், இல்லையேல் நாளையே வேலை போய்விடும்” என; அவள் கடுகடுக்க,

      கயலின் சொல்லுக்கு மறு பேச்சு இல்லை அந்த வீட்டில், என்பதை நன்கு அறிந்திருந்த கிட்டு , பயத்தில் உண்மையை கூறத் துவங்கினான்.

      “உங்கள் அண்ணன் ரஞ்சித் ஐயாவுக்கு சிறிய ஆக்சிடென்ட், பெரியப்பா மற்றும் தாத்தா உடன் சென்றிருந்ததால அவங்களுக்கும் லேசான அடி” என்று அவன் தடுமாற்றத்துடன் கூற,

      “என்ன!!” என்று அதிர்ந்தவள், “அப்பாவிடம் போனை கொடுங்க, நான் விசாரிக்கனும்” என கூற

      “அவருக்கும் லேசான” என துவங்கினான்.

      “இன்னும் யாருக்கெல்லாம்” என வினவிய, அவளின் குரல் தழுதழுத்தது.

       “ஐயோ பாப்பா!! பயப்படாதீங்க, லேசான காயம் தான், நம்ம கயல் ஹாஸ்பிடலில் தான் சிகிச்சை, நாளையே டிஸ்சார்ஜ் செய்து விடுவாங்களாம்.

நான் என் மச்சினிச்சி கல்யாணத்துக்கு கோயம்புத்தூர் வந்துள்ளேன், நாளை மாலை தான் செல்வேன். சென்றதும் அப்பாவை பேச சொல்றேன். பெண்கள் எல்லாரும் நல்லா இருக்காங்க, அவங்க பாத்துக்குவாங்க, கவலைப்படாதீங்க, தைரியமா இருங்க” என அவன் கூறிய ஆறுதல் எதுவும் அவள் மண்டையில் ஏறினார் போல் தெரியவில்லை.

      “அம்மா, பெரியம்மா, இருவருமே பயந்த சுபாவம் கொண்டவர்கள். பாட்டி ஏற்கனவே உடல் நலமில்லாத முதியவர். அண்ணி குழந்தையை பார்ப்பார்களா, இல்லை இவர்களை கவனிப்பாரா. இந்த கிட்டு கூறியபடி லேசான காயம் தானா, இல்லை பெரியதா” என மனதில் பல எண்ணங்கள் உதிக்க கலங்கினாள்.

      “அண்ணா சுயநினைவோடு இருந்தால், நிச்சயம் என்னிடம் பேசியிருப்பான்” என தோன்ற, இருப்பு கொள்ளாமல்,

      அவசரப்பட்டு ……இருட்டிக்கொண்டு வரும் அந்த மாலை வேளையிலும் தன்னை மீறி வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு, மனதை திடப்படுத்தி, வீட்டை பூட்டி விட்டு கிளம்பினாள்.

      “பஸ்சில் சென்றால் மிகவும் தாமதமாகும்… குறைந்தது ஏழு மணி நேரமாகும். அர்த்த சாமத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி டவுன் பஸ்சை பிடித்து நமது கிராம ஹாஸ்பிடலுக்கு செல்வது கொஞ்சம் கடினம்” என்ற சிந்தனையுடன் படிக்கட்டில் இறங்க, அவள் ஹேன்ட் பேக்கில் இருந்த, கார் சாவியை எடுத்து, தனது காரில் பறக்க துவங்கினாள்.

      “இப்படியே சென்றாள், ஐந்து மணி நேரத்தில் ஹாஸ்பிட்டல் அடைந்துவிடலாம்” என மனக்கணக்கு போட்டுக்கொண்டாள்.

       இதில் அவள் மறந்தது, முக்கியமான ஒரு விஷயத்தை. அது அவள் இதுவரை அரை மணி நேரத்திற்கு மேல் காரை ஓட்டியதில்லை, அதிலும் குறிப்பாக இரவு வேளையில் செல்ஃப் டிரைவ் செய்ததில்லை.

      ஏதோ ஒரு வேகத்தில், குடும்பத்தைக் காணவேண்டும் என்ற ஆர்வத்திளும், அவர்களுக்கு என்னவாயிற்றோ என்ற கவலையிலும், காரை எடுத்தவள்,

      ஒரு மணிநேர டிரைவிர்க்கு பின், அந்த காலியான இருண்ட பாதையில்!!, தான் தனியாக பயணிக்க , பயம் உணர்ந்தாள்.

தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொள்ள, டவுன் வந்தது.

      “வேலை…. வேலை… என காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தது நினைவு வர”, பசியில் லேசான மயக்கமும் உணர்ந்தாள்.

      ஓர் உயர்தர ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தி, அவசர அவசரமாக எதையோ உண்டுவிட்டு வண்டியை எடுக்க, மீண்டும் ஒரு காலியான சாலை!!.

      தெருவிளக்கு கூட இல்லாத ஆள் நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுப்பகுதி அது!!!,

அங்கு செல்லும் போது தான் கவனித்தாள் , அந்த சிவப்பு நிற இன்னோவா கார் தன்னை வெகுநேரமாக பின்தொடர்ந்து வருவதை.

       “இந்த கார் நம்மை பின் தொடர்கிறதா, இல்லை, நாம் செல்லும் வழியில் செல்கிறதா” என சிந்தனையில் மனம் பதைபதைக்க,

      சட்டென்று அந்த கார் வேகமாக சீறிக்கொண்டு முன் சென்றது, “அப்பாடா” என்று, பெருமூச்சு விட்டாள் கயல்.

      ஆனால் விதியின் விளையாட்டு !! அந்த கார் வேகமாக சென்று, இவளின் முன் நின்று இடை மறுக்க, அவள் சாலையில் ஓர் ஓரமாய் சென்று கொண்டிருந்ததாள் எதிர்பாராமல் இச்சம்பவம் நேரவும், சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினாள்.

      அங்கு வேறு வாகனம் எதுவும் வரவில்லை, வந்தது காரிலிருந்து இறங்கிய நான்கு தடிமாடுகள்தான்.

      என்ன நடக்கிறது, என்பதை அறிய இயலாமல் அமர்ந்திருந்த கயலின் கைகள் நடுங்க துவங்கின!!!

      அவர்கள் தம்மை நோக்கி வருகிறார்கள், என்பது புரிய, அதற்குள் அந்த நால்வரில் ஒருவன், அவளது கார் கதவை திறந்து அவளது கைகளை பிடித்து இழுத்தான்.

       “idiot”என்று, அவள் கத்த……

      “அமைதியாய் இருந்தால் சீக்கிரம் விட்டு விடுவோம், ஜஸ்ட், கோ ஆப்பரேட்” என்றான் இன்னொருவன்.

      மற்றவர்களோ கொடூரமாய் சிரித்தனர், தனது அனைத்து பளங்களையும் ஒன்றுதிரட்டி, வேகமாய் அவன் கையை உதறிவிட்டு காட்டுக்குல் ஓட துவங்கினாள் கயல்.

      “Shit!!? … Why these girls are like this” என்று கூறியவாறே அவளை துரத்திக் கொண்டு நால்வரும் ஓடினர்.

       கயல் ஓடினாள், எங்கு செல்கிறோம், என்பதை அறியாமல் ஓடினாள்…..தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை கேட்டாலே, இதையெல்லாம், கேட்கக் கூட இயலவில்லை என்று , சேனலை மாற்றி விடுவாள்,

      ஆனால் இன்று!!… அவளது நிலையே, இப்படி இருக்க செய்வதறியாது கண்ணில் நீர் வழிய ஓட, ஓடிய வேகத்தில், அந்த அடர்ந்த காடுகளில் உள்ள மரத்தினால் கீறப்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கசியத் துவங்கியது.

      அந்த நால்வரும் பல அவதூறு வார்த்தைகளை உதிற்த்தவாறே அவளை பின்தொடர,…. கயலுக்கு, தன் கண்முன் ஓர் உபாயம் தென்பட்டது.

      காடு முடிந்து, ஓர் வயல் தென்பட்டது!!!அதில் ஓர் கிணறு!!  இவர்களின் கையில் மாட்டி, மானம் இழப்பதை காட்டிலும், கிணற்றில் விழுந்து உயிரிழப்பது மேல் என தோன்ற,

       கிணற்றை நோக்கி ஓடினாள், அந்த பெரிய கிணற்றின் அருகே வந்த பின்தான், கயலுக்கு தன் கண் முன் வந்தனர்.

       தன்னை இழந்த அவர்களின் நிலை கண்முன் தெளிவாய் தெரிந்தது. நான் உயிர் துறந்தாள், குடும்பமே நிலைகுலையும், அதுவும் இந்த நேரத்தில்,

இப்படி நிகழவே கூடாது என்பதை அவள் அறிவு உரக்கக் கூறியது.

      “மானமா, குடும்பமா” என்ற வினாவிற்கு பதிலின்றி அழுதவாறே சோர்ந்து நின்றாள் கயல். அப்போது தான் இறைவன் கைகொடுத்தார்.

      “வாருங்க என்னோடு” என கூறிய ஓர் புதிய வாலிபன், அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.

      அதற்குள்ளாக அவர்கள் அருகில் வந்து விட!!…. அந்த இளைஞன் தனது தோளில் இருந்த பையையும், கையிலிருந்த பையையும், வேகமாக அவர்களின் மீது வீசி எறிந்து, அவர்களைக் கீழே தள்ளிவிட்டு, அவள் கையை விடாமல் பற்றி இழுத்துக்கொண்டு ஓடினான்.

      வேறு வழியின்றி அவனுடன் சென்றாள் கயல், சிறிது தூரம் ஓடிய பின், அங்கு ஓர் பெரிய விசாலமான வாய்க்காலும், அதன் மேல் சிறிய பாலமும், இருந்ததை கவனித்த அவன், அவர்கள் இன்னமும் வரவில்லை என்று அறிந்து கொண்டு,

வரண்டு போயிருந்த, அந்த வாய்க்காலுக்குள் குதித்து, பாலத்தின் கீழ் அவளுடன் மறைந்து கொண்டான்.

      தன் ஹீரோயிசத்தை வெளிக்காட்ட, அவர்களுடன் சண்டை போடாமல், சூழ்நிலைக்கேற்றவாறு அவன் நடந்து கொண்ட விதம் பற்றி எல்லாம் கயலின் கருத்தில் இல்லை, பயந்துபோய் கலவரமாய் அவன் அருகில் நின்றிருந்தாள்.

      அவர்களைத் தேடி வந்த அந்த நாலுபேர், பாலத்தில் ஏறி மறுபுறம் சென்றனர், “அவளை விடவே கூடாது” என்று வெறித்தனமாக அவர்கள் கத்திக் கொண்டு போக,

      அமைதியாய் இருவரும் கேட்டிருந்தனர், அவர்களின் காலடி சத்தம் ஓய்ந்த பின், நிசப்தம் நிறைந்த அந்த இடத்தில், அவளது மெல்லிய குரல் ஒலித்தது.

      “நன்றி” என, அழுதவாறு கூறினாள்.

      “இது என்னுடைய கடமை” என்றவன், “இங்கு பாம்பு, பூச்சி அதிகம் உள்ளது, நாம முதலில் இங்கிருந்து செல்ல வேண்டும்” என்று அவள் கையை மீண்டும் பிடித்துக் கொண்டு சென்றான். மழையும் இடியும் வானைப் பிளக்க தொடங்கியது.

      எளிதாய் அவளை தூக்கி வாய்க்காலில் இருந்து வெளியேற்றியவன், தானும் வெளிய வந்தான்.

      பின் இருவரும் அவர்கள் வருவதற்குள் செல்ல வேண்டுமென, அகோர மழையை பொருட்படுத்தாமல் வேகமாய் ஓட தொடங்கினர். செல்லும் வழியில் மறவாமல் தனது பைகளை எடுத்துக் கொண்டான் அந்த இளைஞன்.

      அவனது மனமும், அறிவும், இந்த சூழலிலும் தெளிவாய் இருக்க, “வந்த வழி நினைவுள்ளதா” என வினவினான்.

      “இல்லை, என் கார் ரோட்டில் உள்ளது” என தடுமாற்றத்தோடு அவள் கூற,

“சரி” என வயல் வழியே அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

      இருவரும் ரோட்டை அடைந்துவிட, அந்த முட்டாள் தடிமாடுகள், அப்போது தான் சந்தேகப்பட்டு, அந்த வாய்க்காலுக்குள் அவர்களை தேட துவங்கினர்.

       “உங்க கார் எது?” என, அவன் வினவ.

        அவள் கைகளால் காட்டவும், மறுபுறம் இருந்த அந்த அரக்கர்களின், கார் கதவை திறந்து சாவியை எடுத்து தனது பையில் வைத்தான். வரும் வழியில் அவனாகவே யூகித்திருந்தான், இப்படி தான் நடந்திருக்கும், என.

      மழையில் நனைந்து, தோய்ந்து போய்… நிற்க கூட சக்தியற்று நின்ற கயலின் முகத்தை, வீசிய மின்னலில் கண்டான்.

      அந்த முகம், அவளது மன வேதனையையும், உடல் களைப்பையும் எடுத்துரைக்க, அவள் அருகில் சென்று,

      “டோன்ட் வொரி” என ஆறுதலாய் கூறிவிட்டு, அவளை முன் சீட்டில் அமர்த்தி, காரை அவனே ஓட்டத் தொடங்கினான்.

      “மேடம்!! நீங்க எங்க போகனும்” என்று, அவன் வினவ.

      சொல்ல வார்த்தை ஏதும் வராமல், “நான்…. நான்….” என நடுங்கினாள் அந்த  இளம்பெண்.

      “நோ ப்ராப்ளம், ரிலாக்ஸ்” என்றவன் முதலில் அவ்விடத்தை விட்டு கிளம்ப வேண்டும் என முடிவெடுத்தான்.

      இப்போது அந்த நான்கு தடிமாடுகளின் கதைக்கு வருவோம்.

      வாய்க்காலுக்குள் வெறித்தனமாக, நான்கு பேரும் தேடிக்கொண்டிருக்க, ஒருவனை ஒரு தேள் கொட்டியது.

      “ஐயோ!!!…. அம்மா!!!….” என அவன் அலற, மற்றவர்கள் அம்மழையில் அவனை தூக்கி கொண்டு, தங்களது காருக்கு விரைந்தனர்.

       வலி தாள முடியாமல், அவன் அலற, வந்த வழி மறந்து,  தனது நண்பனை எப்படியேனும் காப்பாற்ற வேண்டுமென்று, மழையில் எப்படி எப்படியோ தேடி, இறுதியாக தங்களது காரை வந்ததடைந்தனர், அந்த நால்வரும்.

      அதற்குள்ளாக, வலியால் கதறியவன்  மூர்ச்சையடைந்து விட்டான்.

      “டேய் நண்பா, டேய்…… கண் திறடா!!….உன் பெற்றோர்களுக்கு, என்ன பதில் கூறுவோம்” என்று அவர்கள் கண்ணீர் மழை பொழிய.

      அப்போதுதான் ஒருவன் கவனித்தான், காரில் சாவி இல்லை என்பதையும், கயல் கார் அங்கு இல்லை என்பதையும்.

      “டேய்…. இவன் உயிருக்கு ஆபத்தோ என, பயமா இருக்கு” என்று ஒருவன் கூற.

      “இவன் உயிருக்கு ஏதாச்சும் ஆனால், அதுக்கு காரணமான அந்த பெண்னையும், அந்த ஆறடி முட்டாளையும், சும்மா விட மாட்டேன்” என்று உறுமினான் மற்றொருவன்.

      “போதுமடா!!!….இதுக்கு காரணம், நாமும், நமது வக்கிர புத்தியும் தான்.. இப்போதுகூட உணராவிட்டால், அந்த இறைவனால் கூட நம்மை காக்க முடியாது” என்று கூறினான் அந்த நால்வரில் ஒருவன்.

      அதற்கு பிறகு அவர்கள் என்ன ஆனார்கள், மூர்ச்சை அடைந்த வாலிபன் செத்தானா, பிழைத்தானா,  என்பதைப்பற்றிய கவலை நமக்கு எதற்கு.

     நமது கதையை கதாநாயகியாகிய கயல் புறம் திருப்புவோம்.

      சிறிது தூரம் கடந்து, ஆள் நடமாட்டம் மிக்க பகுதிக்கு வந்தபின், காரை ஓரமாக நிறுத்தி, தனது பையிலிருந்த  சுவட்டரை எடுத்து நீட்டினான், அந்த இளைஞன்.

      குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த கயல், சற்று தயக்கத்துடன் அதை வாங்கி அணிந்து கொண்டு, “கிளம்பலாமா” என வினவியவளுக்கு, “எங்கே அவர்கள் வந்து விடுவார்களோ என்ற பயம்”.

      “அவர்களின் கார் சாவி என்னிடம் உள்ளது ,அதனால்… தைரியமா இருங்க, உங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது” என அவன் தைரியம் கொடுக்க.

      “மிக்க நன்றி” என, கைகூப்பி அழ தொடங்கி விட்டாள்.

      “நீங்கள் மட்டும் இல்லையென்றால், நான்…. செத்தே போயிருப்பேன்” என அவள் கூற,

      “நீங்கள் தப்பித்து விட்டதை, எண்ணி மகிழுங்க, இன்னும் எவ்வளவு நேரம் தான் பேய் பிடித்தாற்போல வருவீங்க” என அவன் கூற , அதை உணர்ந்தவள் போல், கண்ணைத் துடைத்துக் கொண்டாள் கயல்.

     “நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதானா” என வினவியவண்ணம், அவளது மொபைலை நீட்டினான்.

      அவன் கையிலிருந்த தனது மொபைலை வாங்கியவள், முன்னம் அவள் போட்டிருந்த ரூட் மேப்பை பார்த்து, ஆம், என்பதுபோல் தலையசைக்க, மீண்டும் அந்த கார் பறக்கத் துவங்கியது.

      தன்னை ஒரு வழியாக ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “நீங்க எங்க போகனும்” என  வினவினாள் கயல். உண்மையில் அவன் மீதும் அவளுக்கு லேசான பயம் தான்.

      “இங்கிருந்து, இனி உங்கள் இடம் செல்ல ஒரு மணி நேரம் தான் ஆகும், அதுவரை காடுகள் தான், அதனால் உங்களை மேப்பில் உள்ளபடி  ஹாஸ்பிடலில் இறக்கிவிட்டு, அதன் அருகே உள்ள பஸ் ஸ்டாண்டில், பஸ் பிடித்து சென்று விடுகிறேன்” என்றான்.

      “அதாவது….. இப்போது என்னை இங்கு நடுரோட்டில் இறக்கிவிடாதே!!!,” என பொருள் புதைய கூறினான், அந்த துடிப்பான இளைஞன்.

      இவளைவிட இரண்டு வயது தான் அதிகம் இருக்கும்!!! கண்களில் கள்ள பார்வை இல்லை, பேச்சில் வஞ்சகமும் இல்லை, என்பதால் மீண்டும் நன்றி கூறிவிட்டு தனது வீட்டினர் குறித்த கவலையில்  மூழ்கினாள்.

      அவனும் வேறு சிந்தனையில் இருக்க, இவளும் அப்படியே அவளை அறியாமல் உறங்கிவிட, எப்போது, எப்படி, இவ்வளவு நேரம் உறங்கினாள் என்றே தெரியவில்லை அவளுக்கு.

       தன்னைக் காப்பாற்றிய வாலிபன் குரல் கேட்கவும், எழுந்து… அருகிலிருந்த சீட்டை  நோக்கினாள், அங்கு அவன் இல்லை.

      மாறாக….. அவளது கதவருகே, தனது பைகளுடன் நின்றுகொண்டிருந்தான்.

சட்டென கதவை திறந்து, கயல் இறங்க, 

      “மேப்பில் இருந்தபடி, ஹாஸ்பிடல் வந்தாயிற்று, இனி கவனமா இருங்க, பாய்…. பாய் …..” என்று கூறி அவன் வேகமாக ஓடினான்.

      “சார்…. ஒரு நிமிடம்” என்று அவள் அழைக்க,

      “சாரி மேடம், பஸ் வந்துவிட்டது” என அவளைப் பார்த்து,  ஒரு புன்னகையை வீசிவிட்டு ஓடினான்.

       அதுதான் கடைசி பஸ், என அறிந்த அவளும் அதற்குமேல் தடுக்க இயலாமல், அவனையே பார்த்திருந்தாள்.

      அவன் அந்த பஸ்ஸில் ஏற…… அவன்  பின் சில பயணிகள் ஏறியதால், ஒரு ஜன்னல் ஓர சீட்டில் சென்று அமர்ந்து , தன்னை நோக்கி, அவன் கையசைக்க கண்டவள்…… தானும் புன்னகையுடனே கைகளை கூப்பி தனது நன்றிகளை தெரிவித்தாள், அவளது கண்களுக்கு, அவன் தெய்வமாய் தான் தெரிந்தான்.

      பஸ் கிளம்பியது…… இருவரும் அவரவர் பெயரை கூட பரிமாறி கொள்ளவில்லை. பெயர் தெரியாத அந்த மனிதன், தனக்கு அறிமுகமில்லாத பெண்ணுக்கு உதவியது, இந்த காலத்தில் ஆச்சரியமே.

      அதிலும் அவன்….. அவளிடமிருந்து, குறைந்தபட்சம், அவளது பெயரை கூட அறிய முற்படவில்லை.

      தைரியம் சொன்னான், ஆறுதல் அளித்தான், ஏன் குளிருக்கு சுவட்டர் கூட தந்தான், இப்படி கடவுளாய் வந்து உதவிய மனிதனை… அவளால் என்றும் மறக்கவே இயலாது.

      இதற்கு நன்றி கூறும் வகையில், அந்தப் பெயர் தெரியாத வாலிபனுக்கு நல்வாழ்வு வழங்கும் படி அன்றாடம் இறைவனிடம் வேண்டிக் கொள்ள முடிவெடுத்தாள். வேறென்ன செய்ய இயலும் அவளால்.

      அவன் செய்த இந்த செயலும் காதலே…. மனிதநேயம் மீதுள்ள காதல்…. இது உள்ளவரை தான், மனித வர்க்கம் இப்பூவுலகில் ஜீவித்திருக்கும்.

     கயலை அந்த இளைஞன் காப்பாற்ற, அவளது குடும்பத்தை கடவுள்தான் காப்பாற்றிருந்தார்….

அண்ணன் சுய நினைவுக்கு வரவும், இவள் அங்கே செல்லவும், சரியாக இருந்தது.

       மற்ற ஆண்களுக்கு லேசான அடிகளே, என்பதால் நிம்மதியே.

      “எந்த ஓர் இக்கட்டான சூழ்நிலையிலும், அனைத்தையும் சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும், உணர்ச்சி மிகுந்து, அவசரமாய் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சூழ்நிலையை மேலும் நிலைகுலைய செய்யும்” என கயல் உணர்ந்த தருணம் அது தான்.

       “மகள் நமக்காக, இப்படி தனியே வந்துள்ளாலே, அவள் வரும் வழியில் ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால்!” என அவளது குடும்பத்தினர் வருத்தப்பட,

        அன்று அவர்கள் கற்றுக் கொண்ட ஒன்று “வெளியூரில் வசிக்கும் மகளோ, மகனோ, அன்னையோ, தந்தையோ….. அவர்களது அழைப்பை சட்டை செய்யாமல் தவிர்ப்பது மிக மிக தவறு”

       கயல் நடந்தவற்றை முழுவதுமாக மறைத்துவிட்டு, அவர்களுடன் ஐக்கியமானாள். மனதில் அந்த இளைஞன் வந்து சென்ற வாரே இருக்க, அவனை அவள் தெய்வமாக மட்டுமே கண்டாள்.

Advertisement