Advertisement

“சஞ்சய்… சாப்பிட்டியாப்பா…”

“ம்ம்… சாப்பிட கிளம்பிட்டேன் மா, நீங்க சாப்பிட்டிங்களா…”

“ம்ம்… இப்பதான் ஹர்ஷா, சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்திட்டுப் போனா…”

“ஹர்ஷாவா… அது யாரு…” என்றான் அவன் குழப்பத்துடன்.

“ஓ… உன்கிட்டே சொல்ல மறந்துட்டேன் டா, நம்ம சுகந்தி சொல்லியிருந்த நர்ஸ் இன்னைக்கு வந்துட்டா… அவ பேர் தான் ஹர்ஷா… ரொம்ப நல்ல பொண்ணு, எவ்ளோ அன்பா பழகுறா தெரியுமா… இப்ப கூட என்னோட ரூமை கீழே மாத்திக்கலாம்னு ரெடி பண்ணிட்டு இருக்கா…” சொல்லிக் கொண்டே போனவரைத் தடுத்தான் அவன்.

“அம்மா… என்ன இது, அவ யாரு, என்னன்னே தெரியாம இத்தனை சர்டிபிகேட் கொடுக்கறிங்க… இன்னைக்குப் பார்க்கறதுக்குள்ளே எத்தனையோ வருஷம் பழகின போல சொல்லறிங்க… உங்களுக்கு எத்தனை முறை பட்டாலும் புத்தியே வராதா… நீங்க முதல்ல போனை வைங்க… நான் இப்போ வந்திடறேன்…” என்றவன், அலைபேசியை அணைத்துவிட்டுக் கிளம்பினான்.

“ராணிம்மா… இந்த ஸ்க்ரீனை கொஞ்சம் பிடியுங்க…” ஒரு பக்கத்தை கையில் பிடித்துக் கொண்டு மறு பக்கத்தை பிடிக்க சொன்னாள் ஹர்ஷா. அவர் பிடித்துக் கொள்ள அதை ஜன்னலில் மாட்டியவள், சுற்றிலும் அறையை நோட்டம் விட்டாள்.  மனதுக்கு திருப்தியாய் இருந்தது.

“ராணிம்மா… சரியா இருக்கா…” என்றாள் அவரிடம்.

“ரொம்ப அழகா இருக்கு கண்ணு… சும்மா கிடந்த ரூம்… உன்னால இப்போ அழகா பளிச்சுன்னு இருக்கு…” என்று அவளை மெச்சுதலாய் பார்த்தார்.

அப்போது காரை நிறுத்திவிட்டு எரிச்சலுடன் இறங்கிய சஞ்சய், வேகமாய் மாடிப் படியேறி அன்னையின் அறைக்கு சென்றான். ராணியும், ஹர்ஷாவும் அறைக்கதவை சாத்தி இருந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை.

அன்னைக்கு செய்ய வேண்டிய அர்ச்சனையை அவன் செவ்வனே செய்து கொண்டிருக்க, ரேணுகா முழி பிதுங்கிப் போய் பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை அழைப்பதற்காய் அங்கு வந்தாள் ஹர்ஷா. அறைக்குள் பேச்சுக் குரல் கேட்டுத் திகைத்தவள் வெளியே நிற்க, லேசாய் திறந்திருந்த கதவின் வழியே உள்ளே நடந்த உரையாடல் அவள் காதில் விழுந்தது.

“வயசாச்சே ஒழிய, உங்களுக்கு இன்னும் மனுஷங்களைப் பத்தி புரிஞ்சுக்கவே முடியலை… இப்பவும், வெள்ளையா இருக்கவன்லாம் நல்லவன்னு நம்புற கேசா தான் இருக்கீங்க… அந்தப் பொண்ணு வந்ததும் என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டியது தானே… என்னதான் சுகந்தி ஆண்ட்டி சொல்லி இருந்தாலும் மனுஷங்க புத்தி எப்போ எப்படி மாறும்னு யாருக்குத் தெரியும்… நாம தான் ஜாக்கிரதையா இருந்துக்கணும்… உங்களைப் பார்த்துக்க வந்தவ, உங்களோட இருக்க வேண்டியது தானே… ரூமெல்லாம் மாத்தறதுக்கு இவளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது, எல்லாம் உங்களை சொல்லணும்…” என்று சொல்லிக் கொண்டே போனவன் வெளியில் நிழலாடுவது தெரியவே பேச்சை நிறுத்தினான்.

சட்டென்று எழுந்தவன் கதவைத் திறக்க வெளியே நர்ஸ் யூனிபார்மில் நின்று கொண்டிருந்தவளைக் கண்டு திகைத்தான். அவளது விழிகளில் திரண்டு நின்ற நீர் முத்துகள் இப்போதே விழுந்துவிடுவேன் எனக் கூறிக் கொண்டிருக்க, “இந்தப் பெண்ணைத்தானே அன்னைக்கு அம்மா கோவில்ல பார்த்துட்டு, ஜொள்ளு விட்டுட்டு இருந்தாங்க… அப்ப, இவ தான் அந்த ஹர்ஷாவா… அதான் அம்மா அவ்வளவு நம்பிக்கையா சொன்னாங்களா…” என்றவனுக்கு அவளது கலங்கிய முகம் வருத்தத்தைக் கொடுத்தாலும், முகத்தைக் கடினமாக்கிக் கொண்டான்.

இரவு உணவு முடிந்து உறக்கம் வராமல் கையில் கிடைத்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் வர்ஷா. தீபா அவள் அன்னையின் அறையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். வர்ஷாவின் மனது ஏனோ அவள் கட்டுப்பாட்டுக்குள் வராமல் லகான் போடாத குதிரையாய் தறி கெட்டுக் குதித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது மனதுக்குள் ஒளிர்ந்து மறைந்தது அந்த முகம். கூடவே ஒலித்த அந்தக் குரல் அவளுக்கு ஒருவித வருத்தத்தைக் கொடுத்தது.

“ச்ச்சே… எனக்கு என்ன ஆயிற்று… நான் ஏன் இப்படி இருக்கிறேன், மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்க அவன் தான் காரணமா… அவனது அந்த முகம் என் மனதை விட்டு விலகாமல் படுத்துகிறதே… இந்தத் தவிப்பை தாங்க முடியவில்லையே… அவனை என் வாழ்வில் சந்திக்காமலே இருந்திருக்கக் கூடாதா…” என பல நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். நினைத்துக் கொண்டே மனதை மாற்றுவதற்காய் அவர்கள் அறையில் இருந்த குட்டி டீவியை உயிர்ப்பித்தாள். அப்போது அங்கிருந்த தீபாவின் அலைபேசி சிணுங்கி அவளுக்குப் பிடித்தமான அந்த ரிங்டோன் ஒலிக்கத் தொடங்கியது.

யாரோ இவன்… யாரோ இவன்…

என் பூக்களின் வேரோ இவன்…

என் பெண்மையை வென்றான் இவன்…

அன்பானவன்…

உன் காதலில் கரைகின்றவன்…

உன் பார்வையில் உடைகின்றவன்…

உன் பாதையில் நிழலாகவே

வருகின்றவன்…

அலைபேசி அடித்து ஓய்ந்தும் அவள் எடுக்கவும் இல்லை, தீபாவிடம் கூறவும் இல்லை… அவள் மனதுக்குள் அந்த தேவதூதனின் முக பாவங்களே அலையடித்துக் கொண்டிருந்தது.

“டார்லிங்காம் டார்லிங்… பப்ளிக் பிளேஸ்ல எப்படித்தான் இப்படிலாம் கொஞ்ச முடியுதோ… கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம, அந்த டார்லிங் யாரா இருக்கும்… இதுல இந்த பக்கிங்களும், இப்போ அந்த பிராடுங்களோட பிரெண்டாகிடுச்சுங்க…” மீண்டும் அதையே யோசித்தாள்.

“மவனே… அந்த டார்லிங் மட்டும் என் கையில கிடைச்சா…” என்றவள் வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள் தீபா.

“ஏய்… என்னடி, தனியா புலம்பிட்டு இருக்கே… அதுவும் டார்லிங்னு எல்லாம்…” என்றாள் அவள் புரியாமல்.

“ஹூம்… எனக்கு ஒரு நட்டு கழண்டு போச்சு… அதான் அப்படிப் பேசறேன், நீ வந்து டைட் பண்ணி விடறியா…” என்றாள் கோபத்துடன்.

“இரு… இரு… எதுக்கு இப்போ காண்டாகிற… தூக்கம் வரலியா…”

“ஒண்ணும் இல்லை…” என்றவள் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாலும் அவள் மனம் ஏதோ அலைப்புறுதலில் இருப்பது தீபாவுக்குப் புரிந்தது. அப்போது மீண்டும் தீபாவின் அலைபேசி சிணுங்கி பாடத் தொடங்கியது.

அதை எடுத்த தீபா ஏதோ புதிய எண்ணாய் இருக்க, யோசித்துக் கொண்டே எடுத்தாள்.

“தெரிஞ்ச நம்பர் எடுக்கலைனாலும் புது நம்பர்ல இருந்து வர்ற காலை கண்டிப்பா எடுக்கணும்… நமக்கு வேண்டிய காலா இருந்தா…” என்றவள், அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்து ஹலோவினாள்.

“ஹலோ யார் பேசறீங்க…”

“நா…நான்… விக்கி பேசறேன்… தீபா தானே…”

“நீங்களா… உங்களுக்கு எப்படி இந்த நம்பர் கிடைச்சது… ஓ… உங்க பிரண்டு கொடுத்தாரா… எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க… சரி சொல்லுங்க…” படபடவென்று பேசி முடித்தாள்.

“ப்ளீஸ் தீபா… பக்கத்துல வர்ஷா இருந்தா கொஞ்சம் கொடுக்க முடியுமா… நான் அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…”

“வர்ஷாகிட்டே என்ன பேசணும்…” என்று தீபா கூறியதும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் வர்ஷா. அதைக் கண்ட தீபாவிற்கு, “ஒருவேளை… இவளது மூடு அவுட்டுக்கான பதில் அவனிடம் இருக்குமோ…” எனத் தோன்றியது.

“ஒரு நிமிஷம் கொடுக்கறேன், நீங்க பேசுங்க…” என்றவள், “ஏய்… வரு… விக்கி பேசுறார்… உன்கிட்டே ஏதோ பேசணுமாம்…” என்று அலைபேசியை நீட்டினாள். அலட்சியமாய் நோக்கியவள், “நீங்கல்லாம் தானே பிரண்டாகிட்டீங்க… என்னோட எதுக்குப் பேசணுமாம்… எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிடு…” என்றாள்.

“அம்மா தாயே… இந்த ராத்திரி நேரத்துல என்னைப் போஸ்ட்வுமன் வேலை பார்க்க வச்சுடாதே… நான் கொஞ்ச நேரம் வெளியே இருக்கேன், என்ன சொல்லணுமோ… அதை நீயே சொல்லிட்டு கட் பண்ணிடு…” என்று கூறி போனை அவள் கையில் கொடுத்துவிட்டு கதவை சாத்திவிட்டு சென்று விட்டாள்.

“ஹலோ யாருங்க நீங்க, என்கிட்டே எதுக்கு பேசணும்… நான் ஒண்ணும் உங்க டார்லிங் இல்லை… நம்பர் தவறி கால் பண்ணிட்டிங்களோ…” பட்டாசாய் பொரிந்தாள் வர்ஷா.

“ஹேய் பட்டர்பிளை… ப்ளீஸ், நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளு…”

“பட்டர் பிளையாம்… பட்டர்பிளை… எனக்கு ஒண்ணும் கேக்க வேண்டாம், நான் வச்சிடறேன்…” என்றவள் போனை அணைத்து விட்டாள்.

அதை அணைத்து விட்டாலும், அவள் மனதுக்குள் அவனுடன் பேச வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிவதை அணைக்க முடியாமல் தவித்தாள். அப்போது மீண்டும் அலைபேசி அதே எண்ணில் ஒளிர்ந்து அழைத்தது.

“எடுக்கலாமா… வேண்டாமா…” என மனம் யோசித்துக் கொண்டிருக்க, கைகள் தயக்கமில்லாமல் அதை எடுத்திருந்தது. உதடுகள் உலர்ந்து இதயம் ரேஸ் குதிரையாய் குதிப்பதை அவள் உணர்ந்தாள். அவள் மன சலனத்துக்கான விடை அவனிடமே இருப்பதை உணர்ந்தவள் ஆன் செய்து காதுக்குக் கொடுத்து மௌனமாய் இருந்தாள்.

“ஹேய்… பட்டர்பிளை, என் மேல கோபமா…” அவனது குரல் மென்மையாய், மயிலிறகால் வருடுவது போல் தோன்றியது அவளுக்கு.

“நான் யாரு உங்க மேல கோபப்பட….” தயக்கமாய் வந்தது அவளது குரல்.

“அப்ப… கோபம் இல்லைன்னு சொல்லுற… சரி… இருந்தாலும் உன் மனசுல உள்ள குழப்பத்தை தீர்க்க வேண்டியது என் கடமை… இல்லன்னா… உனக்குத் தூக்கம் வராது… சரிதானே…” கண்டது போல் அவன் கூற, மௌனமாய் இருந்தாள் அவள். அவன் தொடர்ந்தான்.

“நான் டார்லிங்னு சொன்னது தானே உனக்குக் கோபம்… அது யாருன்னு தெரிஞ்சுட்டா உன் கோபமெல்லாம் பறந்து போயிடும்…”

“அப்படியொண்ணும் இல்லை… நீங்க யாரை டார்லிங்னு கூப்பிட்டா எனக்கு என்ன…” என்றாள் அவள்.

“உனக்கு ஒண்ணும் இல்லாமலா, தூக்கம் வராமத் தவிச்சிட்டு இருக்கே… சரி, அந்த டார்லிங் வேற யாரும் இல்லை… என் அம்மா ரேணுகா தான்…”

“என்னது… அம்மாவா…” என்றவளின் உற்சாகமான குரல் மாற்றம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ம்ம்… என் அம்மாவை நான் சின்ன வயசுல இருந்து டார்லிங்னு தான் கொஞ்சி கூப்பிடுவேன்… அப்படியே பழகிடுச்சு… உன்னையும் டார்லிங்னு கூப்பிட நான் தயார் தான்… ஆனா உனக்குப் பிடிச்சிருக்கணுமே…” என்றான் அவன்.

“என்னது…” என்று எகிறினாள் அவள்.

“டார்லிங் அர்த்தம் என்ன தெரியுமா, பட்டர்பிளை… அன்பே… அன்பானவளே… இதானே… நீ அன்பானவன்னா நான் அப்படிக் கூப்பிடறதுல என்ன தப்பு…”

“ஒண்ணும் வேண்டாம்… எப்பவும் போலவே கூப்பிடுங்க…”

“அப்பன்னா நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்… ஓகேவா பட்டர்பிளை…”

“ம்ம்…” குழந்தையாய் சிணுங்கியவளின் முகமும் மனமும் தெளிந்திருந்தது. அதற்குப் பிறகு அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை… வெகுநேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

நீ எனை இயக்குகிறாய் பெண்ணே

உன்னை அறியாமலே…

நான் அதில் இயங்குகிறேன் கண்ணே…

என்னை அறியாமலே…

கோபம் கொண்ட வார்த்தைகள்

எல்லாம் இதழோடு நின்றுவிட…

காதல் மட்டும் கண்கள் கடந்து

இதயத்தில் நுழைந்ததடி…

இதயமே… என் இதய தாளமே…

உனக்குள் நான் துடிக்க,

எனக்குள் நீ கலந்திருக்கிறாய்…

என் ரத்த நாளங்களாய்…            

Advertisement