Advertisement

அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டவன், “ஹேய்… சும்மா… நைஸ் மீட்டிங் யூ… பை…” சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். அவனோடு சேர்ந்து அதுவரை அங்கே நிறைந்திருந்த பர்ப்யூம் மணமும், அவளது மனமும் செல்ல, சட்டென்று ஒரு வெறுமையை உணர்ந்தாள் வர்ஷா.

ஐந்தே நிமிடம்… ஐந்து நிமிடத்தில் அவளது தெளிவாய் இருந்த மனக் குளத்தில் கல்லை விட்டெறிந்து சலனப்படுத்தி விட்டு சென்று விட்டிருந்தான் அவன். ஏதோ கனவில் இருந்து விழித்தது போல சில நிமிடம் அப்படியே நின்றவள், மெல்ல வாஷ் பேசினை நோக்கி நகர்ந்தாள்.

தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த தீபா, எழுந்து வர்ஷாவைத் தேடி வந்தாள்.

“என்னடி வர்ஷூ…. ஏதாவது பிரச்சனையா…”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைடி…” சொல்லிக் கொண்டே சாஸ் விழுந்த இடத்தை அலசியவள், மேசையை நோக்கி நகர, அவளுடன் நடந்த தீபா அவனைத் தேடினாள். அதற்குள் அவன் எங்கோ மறைந்து விட்டிருந்தான்.

“என்னடி… யாரோ தொபுக்கடீர்னு விழுந்த சத்தம் கேட்டுச்சு… நீதானா…” என்றாள் ஷீலு.

“இல்லையே… நான் விழலையே, என்ன உளர்ற…” என்றாள் வர்ஷா.

“ஹாங்… இல்லியே… சட்டுன்னு யாரோ காதல் குளத்துல விழுந்துட்டதாகவும், கை கொடுத்து எழுப்ப யாரோ தேவதூதன் வந்த போலவும் இப்பதான நியூஸ் சானல்ல சொல்லிட்டு இருந்தாங்க…” என்றாள் கவி.

“ம்ம்ம்…. வரும், வரும்… அடங்குங்கடி…” என்றவளின் முகம் தேவதூதன் என்ற வார்த்தையில் அவனை நினைத்துப் பார்க்க நல்ல பொருத்தமாய் தோன்றியது.

அவனது முகம் அவள் மனதில் புன்னகைத்து கண்ணைச் சிமிட்டி இம்சை செய்ய மனதில் ஜிவ்வென்று உணர்வலைகள் பரவத் தொடங்கியது. கன்னங்களில் சிறு ரோஜாப்பூ பூப்பதை அவஸ்தையோடு உணர்ந்தாள் அவள்.

“ச்சே… என்ன இது, யாரோ ஒருவன்… மேலே இடித்து விட்டு அழகாய் ரெண்டு வார்த்தை பேசி விட்டால் அவன் மீது காதல் வந்து விடுமா என்ன, இது என்ன மடத்தனம்… அவன் என்னைப் பற்றி யோசிக்கப் போகிறானா என்ன… இதை இங்கேயே துடைத்துப் போட்டுவிட்டு மனதை அலைய விடாமல் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..” அவள் மனது அவசரமாய் தீர்மானித்தது. அவள் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு தோழியர் சிரித்துக் கொண்டிருக்க அவர்களிடம் சிடுசிடுத்தாள்.

“எதுக்கு இப்ப எல்லாரும் சேர்ந்து இளிக்கறீங்க… ரொம்ப தான் யோசிக்காம சாப்பிட்டு முடிங்க… நேரம் காலத்தோட கிளம்புவோம்…” என்றாள் அவள்.

அவர்கள் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்க, கான்பரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்த விக்ரமின் நண்பன் ராஜீவ், கண்ணாடி வழியாக நடந்ததைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். தீபா, விக்ரமைத் தேடியது வரைக்கும் அவன் கண்ணில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

அந்த அறைக் கண்ணாடியின் வெளியே கருப்பு கலர் ஸ்டிக்கர், ஒட்டி இருந்ததால் அவர்கள் உள்ளே இருப்பது இந்தப் பெண்களுக்குத் தெரியவில்லை.

புன்னகையுடன் உள்ளே நுழைந்த நண்பனைப் பொறாமையாய்ப் பார்த்தான் ராஜீவ்.

ராஜீவ் யாருன்னு பார்த்திருவோம்… நம்ம சஞ்சய் நம்புற ஒரே ஒரு மனுஷன், அவன் அப்பாவோட நண்பன் ராம் குமார் இருக்காருல்ல… அவரோட பையன் தான் ராஜீவ்… இவனும் நம்ம விக்கியும் டிரவுசர் போடத் தொடங்கின காலத்துல இருந்து நண்பர்கள்… நட்புன்னா நட்பு, அப்படியொரு நட்பு… ரெண்டு பேரும் ஒண்ணாவே படிப்பாங்க, சுத்துவாங்க… சைட் அடிப்பாங்க…

ராம் குமாரைப் போலவே அவர் பையன் மீதும் சஞ்சய்க்கு நம்பிக்கை இருந்ததால் தம்பியை அவனோடு பழக விட்டிருந்தான். எங்கு சென்றாலும் விக்ரமும், ராஜீவும் ஒன்றாகவே இருப்பார்கள். விக்கிரமாதித்தன், வேதாளம் போல. இப்போது இருவரும் SOFTWARE SOLUTION கம்பெனியில் ப்ரோஜக்ட் ஹெட்டாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

“டேய் மச்சி, யாருடா அந்த வானவில்… செமயா இருக்கு… அழகா வளைச்சு கையில பிடிச்சிட்டு இருந்தே…” என்றவனின் தோளில் தட்டிக் கொண்டே எதிரில் அமர்ந்தான் விக்ரம்.

“டேய் நண்பா, அப்படில்லாம் சொல்லக் கூடாதுடா… அவளை உனக்கு தங்கச்சியா தத்தெடுத்துக்கலாம்னு இருக்கேன்… ஒரு அண்ணனே தங்கையை வானவில்னு வர்ணிக்கறது எல்லாம் கொஞ்சம் அதிகம் இல்லையா…” என்றான் புன்னகையுடன்.

“அதெப்படி மச்சி, அழகான பொண்ணுங்களை எல்லாம் எனக்கு தங்கச்சியா தத்தெடுத்துக்கறே… இதெல்லாம் ரொம்ப ஓவர்டா… நான்லாம் ஸ்கூல்ல கூட, ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர் அண்ட் சிஸ்டர்னு சொன்னதே இல்லை… ஆனா நீ… எல்லாப் பொண்ணுங்களையும் எனக்கு தங்கச்சியாக்கிடற…”

“விடுடா மச்சி… பீல் பண்ணாத… உனக்குன்னு ஏதாவது, வத்தலோ தொத்தலோ எங்காவது ஒரு மூலைல பிறக்காமலா இருக்கும்…. கண்டிப்பா உன் கண்ணுல மாட்டும் டா…”

“ஓஹோ… அதெப்படி டா, எல்லா ஹீரோக்களும் கூட உள்ள நண்பனை சந்தானம் போலவே யோசிச்சுப் பாக்கறிங்க… ஏன்… எனக்கெல்லாம் அழகான பொண்ணு மேட்ச் ஆகாதா… என்னவொரு வில்லத்தனம்…”

“சரி… சரி, நீ ரொம்ப பீல் பண்ணுற… அங்கிள் கிட்ட சொல்லி உனக்கு பொண்ணு பார்க்க சொல்லிடலாம்…”

“ஹூம்… நீ நண்பேண்டா, ஆனா என் அப்பா, உன் சாமியார் அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சா தானே நம்ம ரெண்டு பேரைப் பத்தி யோசிப்பார்… நானா அது வரைக்கும் ஏதாவது பிகரைப் பார்த்து சைக்கிள் ஓட்டிட்டுப் போறேனே… சரி, அந்த வானவில்லை விடு மச்சி… இன்னொரு சில்வண்டு அவ பக்கத்துல உக்கார்ந்திருக்கே… அது எப்படி இருக்கு… எனக்கு மேட்ச் ஆகுற போல இருக்குல்ல…” என்றான் தீபாவைக் காட்டி, கண்ணாடி வழியாய் அவளை நோக்கிக் கொண்டே.

அவன் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே வெளியே இருந்த காபினில் கண்ணைப் பதித்தான் விக்ரம். வர்ஷாவும், தோழிகளும் சாப்பிட்டு முடித்து கிளம்பிக் கொண்டிருந்தனர். ஷீலாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே எழுந்தவளின் அழகிய முகத்தை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் பார்வை சென்ற திசையை நோக்கிய ராஜீவ்,

“டேய் விக்கி… நீ யாரைப் பார்க்கறே… அந்த பிரவுன் சுடி டா…” என்றான்.

“ம்ம்… நீ சொன்னது தப்புடா மச்சி… அவ வானவில் இல்லை… பட்டர்பிளை… அவ கண்ணு விரியும்போது இமைகள் துடிக்கறதைப் பக்கத்துல இருந்து பாத்திருக்கணும்… அப்படியே பட்டர்பிளை சிறகடிக்குற போலவே இருந்துச்சு…” என்றவனின் கண்கள் வர்ஷாவை விட்டு நகர மறுத்தன. அதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான் ராஜீவ்.

“நீல மேகம் தரையிறங்கி

மிதப்பது போல் நான் உணர்ந்தேன்…

நட்சத்திரம் ஒளியிழந்து உன்

குறுநகையை கேட்கக் கண்டேன்…”

“ம்ம்… அது சரி, அங்கே வேற யாருமே உன் கண்ணுல படலையா டா… அத்தனை பேர் இருக்காங்க…”

“டேய்… சும்மா பிகர்களைப் பத்தியே பேசிட்டு நிக்காம பில் பே பண்ணிட்டு கிளம்பற வழியைப் பாரு… நான் போயி காரை எடுத்திட்டு வரேன்…” என்றவன் சொல்லிக் கொண்டே பார்க்கிங்கை நோக்கி நகர்ந்தான். 

“அடப்பாவி… அப்பப்போ நண்பேண்டானு பீல் பண்ண வைக்குறியேடா…” என்றவன் பில்லை செட்டில் செய்துவிட்டு வரவேற்பரைக்கு வந்தான். அங்கே தீபா நின்று கொண்டிருக்க, அவனது முகம் மலர்ந்தது.

அவளை நோக்கி நகர்ந்தவன், “எக்ஸ்கியூஸ் மீ… நீங்க, பாஸ்கர் தங்கை நிஷா தானே…” என்றான் முகத்தை யோசனையுடன் சுளித்துக் கொண்டே.

அவனைக் குழப்பமாய் பார்த்தவள், “இல்லையே…” என்றாள்.

“ஓ… எனக்கு என் பிரண்டு பாஸ்கரோட தங்கை போலவே உங்களை தோணுச்சு… சாரி…” என்றான்.

“ஓ… இட்ஸ் ஓகேண்ணா, நீங்க என்னைக் கூட அப்படியே நினைச்சுக்கலாம்…” என்றாள் அவள் குறும்புடன்.

அவள் சொன்னதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டவன், “ஓ… நோ… ஒரு அழகான பொண்ணு, ஒரு அழகான பையனைப் பார்த்து இப்படி சொன்னா… அவனுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும்னு உங்களுக்கு தெரியாதா…” என்றான் அவன்.

“ஹஹா…” சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவள், “ஓகே… ஓகே… நான் கிளம்பறேண்ணா…” என்றாள் மீண்டும்.

“ம்ம்… நீங்க இப்படி சொல்லறச்சே எனக்கு அய்யராத்து பொண்ணு போலவே தோணறது… நான் அப்படியே எடுத்துக்கவா…” என்றவனை திகைப்புடன் நோக்கியவள், அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, “ஹஹா… நாட்டி…” என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தாள். ராஜீவின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை பரவ, வாசலை நோக்கி நடந்தவன் விக்கிக்காய் காத்திருந்தான்.

பார்க்கிங்கில் ஷீலா ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டிருக்க, அவளுக்காய் சற்றுத் தள்ளி காத்திருந்த வர்ஷா, அங்கு நின்றிருந்த ஆடி காரின் பளபளவென்ற முன் கண்ணாடியில் முகத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி விட்டுக் கொண்டவள், லேசாய் கண்ணுக்குக் கீழே பரவி இருந்த ஐ லைனரை டவலால் துடைத்துக் கொண்டாள். உலர்ந்திருந்த உதட்டை நாவால் தடவி நனைத்துக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

கண்ணாடி கீழே இறங்கி இருக்க, அங்கு தேவதூதனின் (ச்சே… விக்கியின்) முகம் தெரிந்தது. அவளையே குறுகுறுவென்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டு டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் கூச்சத்தில் நெளிந்தாள்.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா…”

“எ… என்னது…”

“இல்ல… நான் ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ணனுமானு கேட்டேன்…” என்றான் தலையை சரித்துக் கொண்டே.

“நோ… தேங்க்ஸ்…” என்றவளின் கண்களும், உதடுகளும் படபடவென்று துடிப்பதை ரசித்துக் கொண்டே,

“ஓ… ப்ளீஸ், அப்ப கொஞ்சம் தள்ளி நிக்கறீங்களா…” என்றான் அவன்.

“ச… சாரி…” என்று டைப்படித்தவள் அவசரமாய் விலகிக் கொள்ள, வண்டியை அழகாய் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்து அவளிடம் நிறுத்தியவன்,

“யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிபுல் ஏஸ் லைக் பட்டர்பிளை…” என்று கூறி, திகைப்புடன் நின்று கொண்டிருந்தவளிடம் கண்ணை சிமிட்டிவிட்டு வண்டியை எடுத்து முன் வாசலுக்கு சென்றான்.

அவளது முகத்தில், திகைப்பு மெல்ல மாறி சிறு புன்னகையுடன் செம்மை படர்வதை கார் கண்ணாடியில் ரசித்துக் கொண்டே காரின் முன்னில் நின்று கை காட்டிக் கொண்டிருந்த ராஜீவிடம் வண்டியை நிறுத்தினான்.

“டேய்… லூசு, நிறுத்த மாட்டேனா… எதுக்குடா கை காட்டினே…”

“பின்னே… அப்படியே மிதந்திட்டு இருக்குற போலல்ல இருக்கு… நான் இங்கே இருக்குறதை மறந்துட்டு நிறுத்தாமப் போயிருவியோன்னு தான் கை காட்டினேன்… ஐயாவோட பர்பார்மன்ஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கேன்…” என்றவன் அவனுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொள்ள, நண்பனை முறைத்துக் கொண்டே வண்டியை எடுத்தான் விக்ரம்.

கால் முளைத்த பட்டாம்பூச்சியாய்

கன்னியவள் வடிவம் கண்டேன்…

பொற்சிலை தான் உயிர் கொண்டு

தரை மேலே நடக்கக் கண்டேன்…

கன்னக் குழியில் குடித்தனம் நடத்த

கரிசனம் தான் வைப்பாயோ…

கண்மணியாய் நான் வரவே

கண் வாசல் திறப்பாயோ…

கண்களின் சிறகடிப்பில் – என்

இதயம் தான் துடிக்கக் கண்டேன்…

இமையின் மேல் குடியிருக்க

ஈடு என்ன சொல் கண்ணே…

பட்டாம் பூச்சி தோற்கும் கண்ணா…

பளபளக்கும் உன் உருவம் கண்டு…

பகலவனாய் ஜொலித்திடும் உன்

பளிங்கான சிரிப்பைக் கண்டு…

இதயத்தில் குடித்தனம் செய்ய

இதயமாற்று போதும் பெண்ணே…

இமைப்பொழுதும் நீங்காமல்

இணைந்திருக்க வந்திடு கண்ணே…

Advertisement