Advertisement

இதயம் – 2

அழகான இளமாலை நேரம்…

சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்திருந்த அந்த ரெஸ்டாரன்ட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அங்கங்கே இருக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு பசிக்காகவும், ருசிக்காகவும் காத்திருந்த முகங்கள்.

ஐந்து நாற்காலிகளால் சூழப்பட்டிருந்த வட்டவடிவ மேசை நிறைய விதவிதமான பதார்த்தங்கள் இடம் பிடித்திருக்க, கைக்கும், வாய்க்கும் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தாலும் உற்சாகத்திற்கும் சிரிப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது. கவலையில்லா கல்லூரிப் பருவத்தின் கன்னியர்கள் அவர்கள். பஞ்ச பாண்டவிகளும் ஐஐடி யில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் இறுதி வருட மாணவிகள். கல்லூரி முதலாமாண்டு முதல் இணை பிரியா தோழிகள்.

தீபாவின் வீட்டில் தான் வர்ஷா பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தாள். அவர்கள் வீட்டில் தீபாவின் அன்னையும் அவளும் மட்டுமே. தீபாவின் சிறு வயதிலேயே அவள் தந்தைக்கும் அன்னைக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் விவாகரத்து வாங்கி தனித்தனியே வசித்து வந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் அவள் தந்தை மறுமணம் புரிந்திருக்க, பாங்கில் வேலை செய்து வந்த அன்னை,  டிரான்ஸ்பரில் கோவையிலிருந்து சென்னை வரவே வர்ஷாவின் எஞ்சினியரிங் படிப்பு அங்கே தீபாவுடன் ஒரே கல்லூரியில் தொடர்ந்தது. அவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நெருங்கிய தோழிகள். தீபாவின் அன்னைக்கும் வர்ஷாவை மிகவும் பிடிக்குமாதலால் மகளைப் போலவே பார்த்துக் கொள்வார்.

மற்ற மூவரும் ஹாஸ்டலில் வாசம் செய்யும் பல இடத்துப் பறவைகள். அகிலாவின் பிறந்த நாளுக்கு அவளை ட்ரீட் கேட்டு இவர்கள் தொந்தரவு செய்ய, அகிலாவின் தந்தை ட்ரீட் கொடுக்குமாறு கூறி பணத்தை அனுப்பினார். அதைக் கொண்டாட வந்திருந்தனர். அவள் தந்தை திருச்சியில் பெரிய பைனான்ஸ் கம்பெனி வச்சிருந்தார்.

கவிதா, ஷீலா இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சென்னைக்கு அருகில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள் ஆனாலும் படிப்பிற்காய் ஹாஸ்டலில் தங்கி இருந்தனர்.

“ஏய்… அடுத்து எனக்கொரு சிக்கன் நூடுல்ஸ் சொல்லிடுடி…” என்றாள் கவிதா.

அடுத்தடுத்து அவர்கள் ஒவ்வொன்று ஆர்டர் செய்யும் போதும் அகிலாவின் இதயம் சற்று அதிகப் படியாய் துடித்துக் கொண்டிருந்தது. அவளைக் கண்டு கொள்ளாமல் பிடித்ததெல்லாம் ஆர்டர் செய்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர் நண்பிகள். வானவில் தேவதைகளாய் சிரிப்பும், கிண்டலுமாய் கலகலவென்று  அமர்ந்திருந்தவர்களின் மீது ஆவலோடு பதிந்து மீண்டது பலரின் கண்கள்.

“ஏய் கவி… உனக்கு எப்ப கல்யாணம்னு முடிவாகிடுச்சா… அடுத்தது உன்னோட ட்ரீட் தான்…” என்றாள் தீபா.

“ம்ம்… உங்களுக்கு ட்ரீட்க்கு ஒரு காரணம் வேணும்… முடியாதுன்னு சொன்னா விடவா போறீங்க…” என்றவள், “அடுத்த மாசத்துல நாலஞ்சு முகூர்த்தம் ஜோசியர் குறிச்சு கொடுத்திருக்காராம்… அவர் அமெரிக்கால இருந்து லீவுல வர்றதைப் பொறுத்து டேட் பிக்ஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கறேன்…”

“என்னடி சொல்லற… அப்ப உன்னோட எக்ஸாம்…” என்றாள் வர்ஷா.

“கல்யாணம் முடிஞ்சாலும் எக்ஸாம் முடிஞ்சு தான் அமேரிக்கா போவேன்டி… நிறைய பார்மாலிடீஸ் இருக்காம்… என்னையும் கூட்டிட்டுப் போறதுக்கு… அதான், சீக்கிரம் கல்யாணத்தை வைக்குறாங்க…” என்றாள் அவள்.

“ம்ம்… கூடிய சீக்கிரமே மணமகள் ஆகப் போறேன்னு சொல்லு…” என்ற அகிலா, அவள் கண்கள் கனவில் மிதப்பதைக் கண்டு மற்றவர்களிடம் சாடை காட்டினாள்.

அதைக் கண்டு அவர்கள் சிரிக்க, அசடு வழிந்தாள் கவிதா.

“நீ ஏன்டி தீப்ஸ்… அவகிட்டே கல்யாணத்தைப் பத்தி பேசினே, இல்லன்னாலே கனவுல மிதந்துகிட்டு இருப்பா… இப்பப் பாரு… அவ உடனே ட்ரீம்லாண்டுக்கு டிக்கட் வாங்கிட்டா…” ஷீலு சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

“ஏய்… ஷீலு, நம்ம லாஸ்ட் செமஸ்டர்க்கு ரெண்டு மாசம் தான் இருக்கு… அதுக்கப்புறம் நீ என்ன பண்ணற ஐடியால இருக்கே…” என்றாள் அகிலா.

“நான் ஆஸ்ட்ரேலியால ஹையர் ஸ்டடீஸ்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்டி… என் அம்மா வேற எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து  வீட்டை விட்டுத் தொரத்தி விடணும்னு குறியா இருக்காங்க… அப்பாவை தாஜா பண்ணி எப்படியாவது ஆஸ்ட்ரேலியா போயிடணும்… என் அக்கா அங்க தானே இருக்கா… அங்கே படிப்பை முடிச்சிட்டு அங்கேயே நல்ல ஜாப்க்கு டிரை பண்ணலாம்னு இருக்கேன்…” என்றாள் அவள்.

சட்டென்று ஷீலாவிடம் திரும்பிய கவிதா மெல்லிய குரலில் பேசினாள்.

“ஏய் ஷீலு… அங்க பார்த்தியா ஒரு கொரில்லா உன்னையே வெறிச்சு பார்த்திட்டு இருக்கு…”

“ஏய்… அது என்னைப் பார்க்கலைடி… என்னடா, நம்ம பெண்பால் ஒண்ணு இங்கே உக்கார்ந்திருக்கேன்னு உன்னை தான் பார்த்திட்டு இருக்கு…”

“ஹூம்… அதானே, நண்பிடி செல்லம்… நீ என் இனம்டி… நம்ம வர்க்கத்தை விட்டுக் கொடுத்து பேசுவியா…” அவள் கேட்டதும் அங்கே சின்னதாய் சிரிப்பு அலை எழுந்தது.

“ஏய்… அங்க பார்த்தியா, ரொம்ப நேரமா ஒருத்தன் நயாகராவைத் தொறந்து விட்டிருக்கான்… அவன் வாட்டர் பால்சை மூடலைனா இந்த ஹோட்டலே தண்ணியில மிதக்கப் போகுதுன்னு நினைக்கறேன்…” என்றாள் ஷீலா.

“சரி… சரி… நீ அதுல கப்பல் விடாம இரு… அவன் நம்ம பேசுறதை கவனிக்கறான்…” அவளை அடக்கினாள் தீபா.

“ஏய் வர்ஷு… நீ என்னடி ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு இருக்கே, எல்லாருக்கும் பர்த்டேக்கு பார்ட்டி கொடுக்க கூட்டிட்டு வந்திருக்காளே இந்த கஞ்சூஸ் அகிலா… பணம் வச்சிருப்பாளா… இல்லை நம்மை கொடுக்க வச்சிருவாளானு யோசிக்கறியா…” அவள் விலாவில் இடித்தாள் தீபா.

அதைக் கேட்டதும் அவளை முறைத்த அகிலா, “ஏய் ரவுடி, என்னை கஞ்சூஸ்னு சொன்னே… அப்புறம் உன்னை மாவாட்ட விட்டிருவேன் சொல்லிட்டேன்…”

“அட… அதெல்லாம் ஆல்ரெடி நான் விசாரிச்சுட்டேன்டி… இந்த ஹோட்டல்ல அந்த வசதி எல்லாம் இல்லியாம்… ஒன்லி கிரைண்டர் தானாம், சோ… நோ பிராப்ளம்… ஸ்விட்ச் ஆன், ஆப் மட்டும் தான்….” சொல்லிக் கொண்டே சாஸ் பாட்டிலை எடுக்க, அவளை அடிக்கக் கை ஓங்கிய அகிலாவின் கை அதில் பட்டு விட்டது. சாஸ் பாட்டில் கையிலிருந்து சரிந்து, அவர்களை சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவின் இளநீல வண்ண நெட் சுரிதாரில் விழுந்து வரியாய் இறங்கியது.

“அடடா… சாஸ் போச்சே… ஏய் அகிலாண்டம், கையை வச்சிட்டு சும்மா இருக்காம தட்டி விட்டுட்ட… இப்ப அவ டிரஸ் எல்லாம் பாழாகிடுச்சுன்னு சாமியாடுவாளே…” என்றாள் ஷீலு.

“இம்சைகளா, நீங்க ஆளாளுக்கு அடிச்சுகிட்டு என் டிரஸ்ஸை நாசம் பண்ணிட்டீங்களே… ஏய்… அகி, ஒழுங்கு மரியாதையா உன்னோட பர்த்டே ட்ரீட்ல இந்த டிரை வாஷ் செலவும் சேர்த்துக்கோ…” என்றாள் வர்ஷா முகத்தை சுளித்துக் கொண்டே.

“சரி… சரி, மூஞ்ச தூக்கி வச்சுக்காம போயி வாஷ் பண்ணிட்டு வந்திடு… அப்புறம் டிரை வாஷ் கொடுத்திடலாம்…” என்றாள் அகிலா.

“கொரங்குகளா… உங்களை வந்து வச்சுக்கறேன்…” என்றவள் எழுந்து வாஷ் ரூம் நோக்கி நகர்ந்தாள்.

வர்ஷா… வெயில் காலத்தில் மனம் ஏங்கும் இளம்சாரலை போல் கண்ணுக்கு குளிர்மையாய், அழகாய் இருந்தாள்.

பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பெரிய விழிகளில் மஸ்காரா போட்டு இன்னும் அழகாக்கி இருந்தாள். சிறிய பிறை போன்ற நெற்றியில் கண்ணுக்குத் தெரியாதது போல் குட்டியாய் ஒரு பொட்டு. அழகான, சிறிய, எடுப்பான நாசி. குட்டி ஆரஞ்சு சுளைக்கு லிப்ஸ்டிக் போட்டது போல் அளவான சின்ன உதடுகள். அதை லிப் கிளாஸ் போட்டு மேலும் பளபளப்பாக்கி இருந்தாள்.

கழுத்தில் மெலிதாய் ஒரு செயின்… உடைக்கு மேட்சாய் காதில் போட்டிருந்த தொங்கட்டான், அவள் தலையாட்டும் ஒவ்வொரு முறையும் அழகாய் அசைந்து பார்ப்பவர்களின் மனதை அசைத்தது. அலை மோதும் கூந்தல் தோளில் தவழ்ந்து கொண்டிருக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே தனக்குப் பிடித்தமான அந்த டிரஸ்ஸை வருத்தத்துடன் நோக்கிக் கொண்டு நடந்தாள்.

அக்கா ஹர்ஷாவை விட அழகாய், நிறமாய் இருந்தாள். தங்க சிலைக்கு உயிர் கொடுத்தது போல பளிச்சென்ற அழகு, அவள் சற்று மெனக்கெட்டதில் மேலும் அதிகமாகி ஜொலித்தது. சுரிதாரையே பார்த்துக் கொண்டு வந்தவள் எதிரில் வந்தவனை கவனிக்காமல் வளைவில் திரும்பினாள். அவனும் அலைபேசியை நோண்டிக் கொண்டே வந்ததில் எதிரில் கவனிக்கவில்லை.

வளைவில் அவள் மீது அவன் இடித்துவிட, விழப் போனவளை சட்டென்று கை கொடுத்து தாங்கிக் கொண்டான் அவன்.

அவன்… விக்ரம் கிருஷ்ணா.

எதிர்பாராத விபத்தில், ஆம் விபத்து தான்… அவளது கண்கள் படபடவென்று அடித்துக் கொள்ள பட்டாம்பூச்சி சிறகை அடிப்பது போலத் தோன்றியது அவனுக்கு. அவனிடமிருந்து விலகி எழுந்தவள், கோபமாய் அவனைத் திட்டுவதற்காய் முகத்தை ஏறிட்டாள்.

அப்போது அவன் கைகளில் இருந்த அலைபேசி அழகாய் உயிர்த்து அந்த ரிங் டோனை எழுப்பியது.

“உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…

எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…

உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்…

அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…

ஓர் நொடியும் உனை நான் பிரிந்தால்

போர்க்களத்தை உணர்வேன் உயிரில்

என் ஆசை எல்லாம் சேர்த்து

ஓர் கடிதம் வரைகிறேன்… அன்பே…”

அவளுக்கு மிகவும் பிடித்தமான அந்தப் பாடலைக் கேட்டதும் அவள் முகம் கனிந்தது. அவனை மென்மையாய் ஏறிட்டவள் திகைத்துப் போனாள். சூரியன் உதித்தது போல பிரகாசமான அவனது புன்னகை நிறைந்த முகம் அவளுக்கு வார்த்தைகளை மறக்க வைத்தது.

அவனையே திகைப்புடன் அவள் நோக்கிக் கொண்டிருக்க, அவன் மீண்டும் சிரித்தான். கண், மூக்கு, கன்னம், உதடு என முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் அழகாய் சேர்ந்து சிரித்தன. அது அவனுக்கு நல்ல வசீகரத்தைக் கொடுத்தது. சிரிக்கும்போது டிரிம் செய்யப்பட்ட மீசைக்கு கீழே அழகாய் பளிச்சிட்ட பற்கள். கன்னத்தில் விழுந்த அழகான குழியில் அப்படியே விழுந்து விடலாம் போலத் தோன்றிய மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.

“ச… சாரி…” என்றான் அவன் தலையை ஆட்டிக் கொண்டே.

“பார்த்து வந்திருக்கலாமே…” என்றாள் மென்மையாக.

“பார்த்துட்டே தான் வந்தேன்… அதான் இடிச்சுட்டேன்…” என்றான் அவன்.

“வ்வாட்…” என்றவளின் குரல் சற்று உயர கண்கள் அழகாய் விரிந்தது.

“ஐ மீன் மொபைலைப் பார்த்துட்டே வந்தேன்னு சொல்ல வந்தேன்… நீங்களாவது பார்த்து வந்திருக்கலாமே… ம்ம்…” புருவத்தைத் தூக்கினான் அவன்.

“நான் பார்த்துட்டு தான் வந்தேன்…”

“ஓ… என்னைப் பார்த்துட்டு தான் வந்திங்களா…” என்றவனின் கண்களில் குறும்பு கொப்பளித்தது.

அவள் ஆச்சர்யமாய்ப் பார்க்க, “எப்படி… நான் ஹாண்ட்சமா, உங்களுக்கு மேட்சா இருக்கேனா…” கேட்டுக்கொண்டே சிரிப்புடன் கண்ணை சிமிட்டினான். அவள் ஷாக்காகி, என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

Advertisement