Advertisement

அத்தியாயம் 1
ஹாய்  மாலினி  ஐம் கிருஷ்ணன்
நான் இதை சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு
இவ்வளவு அழகை பார்த்திருக்கமாட்டாங்க
ஐம் இன் லவ் வித் யு
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போழ்து எண்ணோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
யாரோ ஒருவன் அவளை நெருங்கி வந்து முத்தமிடுவதை போல் கனவு. திடுக்கிட்டு விழிக்கவும், அலாரம் அடிக்கவும் சரியாக இருந்தது.
கண்களை திறந்தவள் அதை அனைத்து விட்டு. முத்தமிட்டவனின் முகத்தை நியாபகப்படுத்த முயற்சிக்க அந்தோ பரிதாபம் அவன் முகம் கனவில் வரவே இல்லை. கனவில் கூட அவளுக்கு முதுகு காட்டி தானே! நின்றிருந்தான்.
பெருமூச்சு விட்டுக்கொண்டவள் தான் திருமணம் செய்யப்போகும் க்ரிஷ்தான் கனவில் வந்தானா? என்று நினைத்துப் பார்க்க, கண்டிப்பாக, அவன் தனக்காக இவ்வாறெல்லாம் பாட மாட்டான் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருந்தது.
அந்த கிருஷ்ணனை மனதில் நிறுத்த இந்த மாலனி ஆல்வேஸ் கிருஷ்ணா புராணம் தான். ரிங் டோன்ல இருந்து, அலாரம்வரை, ஏன் கும்புடுற கடவுள் கூட க்ரிஷ்ணாதான் என்றால் பாருங்களேன்.
“ஹாய் என் பெயர் மாலனி. மாலனி கோத்தாண்டம். வயது எல்லாம் நல்ல வயசுதாங்க. பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருக்கேனு அப்பா சொல்வாரு. அவர் கண்ணுக்கு அப்படித்தான் தெரிவேன். ஏனென்றால் நான் அவருக்கு ஒரே பொண்ணு. அவர் நேசிச்ச மூணு பெண்கள்ல நானும் ஒருத்தி. அடுத்த ரெண்டு பேரும் யாருன்னு யோசிக்கிறீர்களா? ஒன்னு அவரை பெத்த ஆத்தா. அடுத்தது என்ன பெத்த அம்மா. நீங்க என்ன நெனச்சீங்க?
அவங்க ரெண்டு பேருமே இப்போ உயிரோட இல்ல. நான் பொறக்கும் போது என் அம்மா இறந்துட்டாங்க, வயசுக்கு வந்த போது பாட்டி இறந்துட்டாங்க. சோ.. சொந்தபந்தமெல்லாம் என்ன ராசி இல்லாதவனு சொல்றாங்க. ஆனா என் அப்பா அப்படி நினைக்கல அவர் வாழ்க்கைல கிடைச்ச தேவதையாதான் என்ன பாக்குறாரு. காரணம் நான் பொறந்த பிறகுதான் அவர் சி.எம் ஓட பி.ஏ. வாக வேல செய்ய ஆரம்பிச்சாரு. என் வயசுக்கு எத்தனையோ சி.எம். மாறிட்டாங்க ஆனா யாருமே அப்பாவை விடலயே! பிகோர்ஸ் என் அப்பா அவ்வளவு நல்லவர்.
என்னடா அப்பா புராணமே பாடுறாளேனு பாக்குறீங்களா? ஏன்னா.. எனக்கு இந்த உலகத்துல இருக்குற ஒரே சொந்தம் என் அப்பா. எனக்கு அவரை மட்டும்தான் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் செய்வேன். கடல்ல மூழ்காச் சொன்னாலும் மூழ்குவேன். கிணத்துல குதிக்க சொன்னாலும் குதிப்பேன். எனக்கு என் அப்பானா அவ்வளவு இஷ்டம். ஆனா அப்பா என் கிட்ட கேட்டது கல்யாணம் பண்ணிக்க சொல்லி. அதுவும் அவரோட நண்பன் பையன. எனக்கு பிடிக்கலைனாலும் அவருக்காக சரினு சொல்லிட்டேன்.
எனக்கு கிருஷ்ணாவ சுத்தாம்மா பிடிக்காது. பிடிக்காததுக்கு பெருசா எந்த காரணமும் சொல்ல முடியாது. அவனுக்கும் எனக்கும் செட் ஆகாது. அவ்வளவுதான். கிருஷ்ணா யாருன்னா.. அவன் பேர அப்படி சொன்னா அவனுக்கு பிடிக்காது. க்ரிஷ் என்று தான் சொல்லணும். அந்த க்ரிஷ் என் அப்பாவோட பெஸ்ட்டு பிரென்ட் கனகவேல் அங்கிளோட ரெண்டாவது மகன். அவனைத்தான் அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லுறாரு. அங்கிளும், ஆன்டியும் தங்கமானவங்க. ஆனா இந்த க்ரிஷ் இருக்கானே! கோகுல கிருஷ்ணன் போல பொண்ணுங்க கூடவே தான் இருப்பான். ஆனா அவன் முழுப் பெயர் என்னமோ க்ரிஷ்ணவேல் ராஜா. இல்ல… கிருஷ்ண வேலு ராஜா. அட ஏதோ ஒன்னு. பேர்ல ராஜா இருந்தாலும் எனக்கு அவன் டான்.
எனக்கு அவனை பிடிக்காத மாதிரி அவனுக்கும் என்ன சுத்தமா பிடிக்காது. நாங்க ரெண்டு பேரும் அப்பாக்களுக்காக கல்யாணம் பண்ண போறவங்க. என்னதான் அவனுக்கு என்ன பிடிக்காட்டியும் அவனை தான் நான் கல்யாணம் செய்யணும் இல்ல. அதனால அவனை கரெக்ட் பண்ண எனக்கு பிடிக்காத சப்ஜெக்ட்டை செலெக்ட் பண்ணி அவன் படிக்கிற காலேஜிளையே சேர்ந்து பிடிக்காத படிப்ப ஆர்வமா பாத்துக்க கிட்டு இருக்கேன். இதாங்க என் சொந்தக் கத, சோகக் கத. காலேஜ் போகணும் வாங்க அப்பா என்ன செய்யிறாருனு பார்க்கலாம்”
தனி வீடுதான் கோதாண்டத்துடைய வீடு. இரண்டு படுக்கையறை வாசல், சமையலறை என்று அப்பா மகளுக்கு மட்டும் போதுமானதாக இருக்க, யாரும் அந்த வீட்டுக்கு வருவதும் இல்லை. வர அனுமதியுமில்லை. முன்னாடி வளைவான பாதை மட்டும்தான் வண்டி வந்து நிறுத்தி அடுத்த வழியாக சென்று விடும். பின்னாடி ஒரு சிறிய முற்றம். அதில் ஒரு ஊஞ்சல். மாலினியின் தனிமை பொழுதுகள் ஊஞ்சலோடு கழியும்.
“ஹாய் அப்பா…”
“எழுந்துட்டியா? குளிக்காமயே! அப்பா முகத்துலதான் முழிக்கணும்னு அப்படி என்னமா உனக்கு வேண்டுதல்? குளிச்சிட்டு ரெடியாகிட்டே! வந்திருக்கலாம்ல” மாலனியின் தந்தையும், சி.எம் இன் பி.ஏயான கோதாண்டம் அன்பாக சொல்ல
“போ பா நீ மாறிட்ட” முகத்தை சுருக்கினாள் மாலனி.
தாயை இழந்த குழந்தை என்று தூங்கிக் கொண்டிருப்பவளை தூக்கிக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்த்தி வாயைக் கூட கழுவாமல் பாலை புகட்டி, சாப்பாடு ஊட்டி அவளோடு விளையாடி அதன் பின் பல் துலக்கி, குளிப்பாட்டி பாடசாலைக்கு அழைத்து செல்வார் கோதாண்டம்.
என்று திருமணம் பேசப்பட்டதோ! அன்றிலிருந்து கோதாண்டம் இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார். அன்னை இல்லாத குறை தெரியக் கூடாது என்று செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாச்சு. கல்யாணமாகிப் போகும் வீட்டில் அவ்வாறு இருக்க முடியாதே!
அதுவும் மகள் செல்ல இருக்கும் வீடு சி.எம் வீடு. அங்கு அவள் எவ்வளவு பொறுப்பான மருமகளாக இருக்க வேண்டும். நினைக்கும் பொழுதே! பெருமூச்சு வந்தது.
“போ.. மா… அப்பா சொல்லுறேன்ல…” அவரின் சோடா புட்டிக் கண்ணாடியை சரி செய்தவர் தோசையை சுட்டவாறு கெஞ்ச
“சிவாஜி கணேசன் தோத்தாறு போ.. என்னமா பாசத்தை பொழியுற? ஒரு காப்பியாவது கொடு பா…” என்று இவள் அதட்ட
மகளை முறைக்க முடியாமல் “முதல்ல குளிச்சிட்டு வா…” என்று அவளை எழுப்பி அவளது அறை புறம் நகர்த்தினார்.
“அம்மா.. இல்லாத பொண்ணுன்னுதானே! இப்படியெல்லாம் பண்ணுற? இரு இரு கல்யாணம் ஆகி போன பிறகு இந்த பக்கம் வர மாட்டேன். தனியா இருந்து கஷ்டப்படு” அழு குரலில் கூறிய மாலனி அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்த, அவளின் சிறு பிள்ளைத்தனமான பேச்சும், செயலும் கோதாண்டத்தின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
“என்ன சிவாஜி கணேஷன்னு சொல்லிட்டு, ஜெனிலியா ரேஞ்சுக்கு நடிச்சிட்டு போகுது. இவ திருந்தவே! மாட்டா” கோதாண்டம் தயாரித்த காலை உணவை கடைபரப்பலானார்.
குளித்து விட்டு வந்தவள் “இப்போவாச்சும் காபி தருவியா …ப்பா…” என்று தந்தையை மாலனி முறைக்க,
“தினமும் அறையை விட்டு வரும் பொழுது குளிச்சிட்டே வாம்மா… மகா லக்ஷிமி மாதிரி இருக்க” என்று புகழ,
“உடம்பு முடியலைனாலும் குளிச்சிட்டு வரணுமா?” என்று முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு கேட்டாள் மாலினி.
சின்ன வயதில் இருந்தே! துடுக்குத்தனமாக பேசுபவள்தான். ஆனால் தந்தை மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவள், சமீப காலமாக தந்தை கல்யாணம் என்ற ஒற்றை சொல்லை வைத்துக்கொண்டு அதை செய்யாதே! இதை செய்யாதே! என்று ரூல்ஸ் போட ஆரம்பித்து விட்டிருப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அவள் கோபத்தை இப்படி பேசி தீர்த்துக்கொள்வாள். 
கோதாண்டம் எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் மகளை நன்றாக முறைத்தவர் “எனக்கு லேட்டாச்சு சி.எம் காத்துக்கொண்டு இருப்பாரு. சாப்பிட்டுட்டு காலேஜ் போ.. வண்டி வரும்” என்றவர் விறு விறுவென்று வாசலை நோக்கி நடக்க
“அடுத்த தெருல இருக்குற சி. எம் வீட்டுக்கு போக என்ன பரபரப்பு” என்றவாறே மாலனி சாம்பாரில் ஊறிய தோசையை பிய்த்து தக்காளி சட்டினியோடு வாயில் திணித்தாள்.
கோதாண்டம் சி.எம் இன் வலதுகை. இப்பொழுது சம்மந்தியும் ஆகப்போறதால் அந்த காலணியியிலையே! பாதுகாப்பு கருதி மாலனிக்கும், கோதாண்டத்துக்கும் ஒரு வீடு அமைத்துக் கொடுத்திருக்க, அவள் பாதுகாப்பாக காலேஜ் சென்று வர வண்டியும் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டிருந்தது.
“நான் பாட்டுக்கு நிம்மதியா என் ஸ்கூட்டில போய்கிட்டு இருந்தேன். அதையும் புடுங்கி, எனக்குன்னு ஒரு டைவரை வச்சி… தண்டத்துக்கு பெட்ரோல் செலவு வேற, நல்லவேளை அந்த லூசு க்ரிஷ்னாவோட காலேஜ் போக சொல்லல. அவன் வேற முறிக்கிகிட்டு திரிவான்” என்றவள் அலைபேசியை நொண்டியவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.
இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றவள் அவளுடைய  நிகழ்நிலை தோழி கிருஷ்ணாவின் புதிய போட்டோக்ராப்களை பார்த்தவள்
“வண்டில போகும் போதே! எடுக்குறாளா? வானம், குளம், வண்டினு ஒண்ணத்தையும் விட மாட்டா போல இருக்கு. போட்டோல பார்க்கும் போது அழகாதான் இருக்கு” என்றவாறே அவற்றுக்கு சிவப்பு இதயங்களை பரிசாக வாழங்கியவள் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்கவே! சாப்பாட்டை மூடி வைத்துவிட்டு  போனை நோண்டியவாறே காலேஜ் கிளம்பினாள்.
இன்ஸ்டாகிராம் முகம் தெரியாத தோழி கூட கிருஷ்ணா என்ற பெயர் இருப்பதால் வைத்திருக்கிறாள். இந்த மாலினி இருக்காளே!….
மாலினி போனில் மூழ்கி விட்டால் சுற்றுப்புறம் நடப்பதை உணர மாட்டாள். டைவர் வந்து கதவை திறந்ததையும் உணரவில்லை ஏறி அமர்ந்தவள் காலேஜ் செல்லும்வரை அலைபேசியில் மூழ்கி இருந்தாள். 
ஒரு மணித்தியாலத்துக்கு முன்பு முதலமைச்சரின் மனையில்……
“டேய் உனக்கு வெக்கமே இல்லையா டா? காலங்காத்தால பல்லு கூட விளக்காம போன்ல கேம் விளையாடி கிட்டு இருக்க?” அண்ணன் அருள் தம்பியை வசை பாட சாப்பாட்டு மேசைக்கு வந்துக்கொண்டிருந்த நம் முதலமைச்சர் கனகவேல் ராஜாவின் காதில் விழுந்ததுதான் வினையாகிப்போனது.
“ஏழு கழுத வயசாகுது. இன்னும் குழந்தை மாதிரி கேம் விளையாடிகிட்டு. எல்லாம் உங்க அம்மாவ சொல்லணும்” சுப்பிரபாதம் போல் தினமும் காலையிலையே! இந்த வசனத்தை பேச வில்லையென்றால் அவருக்கு அந்த நாளே விடியாதது போல் இருக்கும்.
தந்தை திட்ட ஆரம்பிக்கவும் “இவருக்கு இதே வேலையா போச்சு. மேடைல ஏறி பேசுற வசனமெல்லாம் மனப்பாடமாக்க வேண்டியது அத வீட்டுல வந்தும் பேச வேண்டியது” தனக்குள் முணுமுணுத்தவன் தலையை தூக்காமல் “உங்களுக்கு பப்ஜிய பத்தி என்ன தெரியும்? சும்மா சைரன் வச்ச கார்ல ஏறி உக்காந்து போனோமா? வந்தோமான்னு நினைச்சீங்களா?” எதோ அவர் பார்க்கிக்கு செல்வது போல் நம் கிருஷ்ணா கூற,
கடுப்பானவர் “ஏன் ப்ளூவேல் விளையாடேன்” மகனை முறைக்க ஆரம்பித்தார்.
“நான் மோமோவ்வே விளையாடுவேன். அவ என் கூட ரூம் போட வருவாளா?” இவன் ஒரு அர்த்தத்தில் சொல்ல அவர் காதில் நரசமாக விழுந்தது.
“இவன்கிட்ட மனிசன் பேசுவானா?” முகம் கோபத்தை தத்தெடுக்க “ஒரு அப்பன்கிட்ட பேசுற பேச்சா இது” அவனை கண்ட மேனிக்கு வசை பாடியவாறே மனைவிக்கு அர்ச்சனை செய்ய தேடிச் சென்றார்.
இதுதான் இந்த அப்பா பையனுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சினை. கிருஷ்ணா என்ன சொல்கிறான் என்று இவர் காதுக்கொடுத்துக் கேக்க மாட்டார். முதலமைச்சரே! ஆனாலும் மதிக்க மாட்டேன்னு இந்த கிருஷ்ணா பய அவன் வேலைல மட்டும் மூழ்கி இருப்பான்.
தந்தை வந்ததிலிருந்து அமைதியாக இருந்த மூத்தவன் அருள்வேல் ராஜா தம்பியின் பேச்சில் அதிர்ச்சியாக அவனை பார்க்க, “அப்படி என்ன நான் தப்பா பேசிட்டேனு இவர் கோபமா போறாரு? லுடோல ரூம் போடுறதுல என்ன தப்பு” என்று அண்ணனை கேட்க, தலையில் அடித்துக் கொண்டான் அவன்
கனகவேல் ராஜா இந்த மாநிலத்தின் முதலமைச்சர். இந்த மாநிலமே! கையெடுத்துக் கும்பிடும் அவரின் குடும்ப வாழ்க்கையின் மறுபக்கம் குடும்பத்தாரை தவிர பிறருக்கு தெரியாது. அதற்கு காரணமும் குடும்பத்தார்தான்.
கனகவேல் ராஜாவின் தந்தை அவரின் பாலிய சிநேகிதனின் மகளை கனகவேல் ராஜாவுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்திருக்க, பெண் பார்க்க சென்றவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி. மூத்தவள் வத்சலா ரொம்பவே! குண்டான பெண். இந்த பெண்ணை பார்த்தால் கனகவேல் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார் என்று இளையவள் யாசோதாவை கனகவேலுக்குக் காட்டி திருமணத்துக்கு சம்மதம் வாங்கி இருந்தார் கனகவேலின் தந்தை ஞானவேல்.
சொந்தபந்தம் மொத்தமும் கூடி நிற்கும் வேளையில்தான் கனகவேலுக்கு தந்தை தனக்கு செய்த அநியாயம் புரிந்தது. தாலி கட்டவில்லையாயின் சொத்தில் எந்த பங்கும் தரமாட்டேன் என்று  ஞானவேல் மிரட்ட கனகவேல் எதுவும் பேசாது தாலி கட்டியதோடு அன்றே வத்சலாவோடு தாம்பத்திய வாழ்க்கையையும் ஆரம்பித்திருந்தார்.
கனகவேலின் பார்வை யசோதாவின் மீது படக்கூடாதென்று யசோதாவை வேறு எங்கையோ! மறைத்து வைத்திருக்க, அதற்கு அவசியமே! இல்லாதது போல் கனகவேல் மாமனாரின் வீட்டுப்பக்கம்! செல்லவில்லை.
வத்சலாவோடு சந்தோசமாக வாழ்ந்துக்கொண்டு அரசியலில் களமிறங்கி இருக்க, வத்சலாவும் கருவுற்றிருந்தாள். இதற்கிடையில் யசோதா காணாமல் போனாள்.
ஞானவேலும் யசோதாவின் தந்தை செல்வராஜும் தேடாத இடமில்லை. கனகவேலின் மீது சந்தேகம் கொள்ளவும் அவர்களால் முடியவில்லை. காரணம் வத்சலாவோடு அப்படியொரு அந்நியோன்யமான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருந்தார் கனகவேல்.
காலங்கள் பல கடந்து வத்சலா அருள்வேலை பெர்றேடுத்து, தந்தையின் சொத்தையும் கைப்பற்றி, உள்துறை அமைச்சராக கனகவேல் பதவியேற்று தன்னை அசைக்க முடியாத, யாரும் தொட முடியாத உயரத்தில் போய் அமர்ந்த கொண்டு தனது மனைவியென்று யசோதாவை மீடியா முன் நிறுத்திய போதுதான். யசோதாவை கடத்தி, கட்டாய கல்யாணம் செய்து, மிரட்டாத குறையாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார் என்பது குடும்பத்தாருக்கு புலப்பட்டது.
மீடியாவின் முன் கிருஷ்ணா தனது இரண்டாவது மகன் என்றும் மூத்தவன் அருள்வேல் ராஜா தந்தையோடு ஊரில் இருக்கின்றான் என்றும் கூறியிருந்தார்.
“யாரு கிட்ட? பக்கா அரசியல்வாதி நான். என் கிட்டயேவா? தங்கச்சிய காட்டி அக்காவ கட்டி கொடுப்பீங்களா? யார ஏமாத்த பாக்குறீங்க? வத்சலா கூடயே! வாழ்ந்து யார பொண்ணு பாக்க வந்தேன்னு அவ வாயாலேயே! கேட்டு தெரிஞ்சி கிட்டேன். ஊரு உலகத்துல அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கிட்டு யாரும் சந்தோசமா குடித்தனம் நடத்தலயா? உங்களுக்காக வத்சலாவை கட்டிகிட்டேன். எனக்காக யசோவ கட்டிகிட்டேன்” தந்தைக்கு அலைபேசி வழியாக திமிராக பதில் சொல்லி இருந்தார் கனகவேல்.  
இதைப்பார்த்த ஞானவேல் முற்றாக உடைந்து நண்பரின் முகம் பார்க்க முடியாமல் திண்டாட, வத்சலாதான், “தங்கையை காட்டி என்னை திருமணம் செய்து வைத்தது தப்பு” என்று அருளிடம் யசோதா தான் இனிமேல் உனக்கு அம்மா என்று அவனையும் யசோதாவிடம் அனுப்பி வைத்து விட்டு கனகவேலிடமிருந்து முற்றாக ஒதுங்கிக்கொண்டாள்.
யசோதாவால் அக்கா ஒதுங்கிக்கொண்டதை ஏற்றுக்கொள்ளவே! முடியவில்லை. “என் சம்மதமில்லாமல் கட்டப்பட்ட தாலி, என் சம்மதமில்லாமல் பெற்ற குழந்தை, நீ வாழ வேண்டிய வாழ்க்கை. எனக்கு வேண்டாம்” என்று அழுது கரைய, ஏழு வயதான கிருஷ்ணாவுக்கு அன்னை சதா கண்ணீர் வடிப்பது தந்தையால் என்பது மட்டும் நன்கு புரிந்து போக தந்தையை எதிரியாக பார்க்க ஆரம்பித்தான்.
பத்து வயதான அருள்ராஜுக்கு ஓரளவு புரிந்தும், புரியாத நிலைதான். அவனுக்கு யசோதாவை தெரியும், தந்தை ஏன் யசோதாவை மணந்தார் என்று புரியவில்லை.
இருவரும் வளர்ந்த பின் அருள் ஏற்றுக்கொண்டாலும், க்ரிஷ்ணாவால் தந்தையின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒன்றை செய்து அவரை வெறுப்பேத்திக்கொண்டுதான் இருக்கின்றான்.
அவர் எதை செய்யச் சொல்கிறாரோ அதை செய்ய மாட்டான். அவர் எதை செய்ய வேண்டாம் என்கிறாரே அதை தான் செய்வான்.
திருமண விஷயமும் அப்படித்தான். கோதாண்டம் நல்ல நண்பர் அவரின் ஒரே மகள் மாலினி கிருஷ்ணாவுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று பேச, அவர் சொன்ன ஒரே காரணத்துக்காக மறுத்து விட்டான். மாலினியையும் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.
“புள்ளய பெக்க சொன்னா பொறுக்கிய பெத்திருக்க சே சே சே …” எம் ஆர் ராதா போல் உள்ள தனது குரலால் மனைவியை வசைபாடியவாறு வர
“காலையிலையே! ஆரம்பிச்சாச்சா… இந்த அப்பாகும் பையனுக்கும் ஏழாம் பொருத்தம் நான் நடுவுல மாட்டிக்க வேண்டியது. இன்னைக்கு என்னவோ!” தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக முதல்வரின் தர்ம பத்தினி யசோதா அவருக்கு சாப்பிட ராகி தோசையை வைக்க
“என்ன டி என்ன நிரந்தரமா நோயாளியாக்கிடுவ போல இருக்கே! எதுக்கு இத வைக்கிற? நல்லா சமைச்சி உன் புள்ளைக்கு வை” அதற்கும் கிருஷ்ணாவை திட்டலானார் கனகவேல்.
“ஆமா உங்களுக்கு என் புள்ளய திட்டலைனா தூக்கம் வராதே! பொதுவா முதல்வர்னா வெளியே சாப்பிட மாட்டாங்க, என்னத்த கலந்திருப்பாங்களோனு பயம் இருக்கும். நீங்க அப்படியா! போற போற இடத்துல எல்லாம் கொடுக்கிறத சாப்பிடுறீங்க, அப்பொறம் சுகர், கொலஸ்டரோலு கூடிபோச்சுனு படுத்துக்க வேண்டியது. அப்போ இத சாப்பிடுறதுக்கு, இப்போவே! சாப்பிடுங்க” சாம்பாரை ஊத்தியவள் உள்ளே சென்று விட அவரால் கோபத்தை தோசையில்தான் காட்ட முடிந்தது.
“ஏய் அருளு… வந்து சாப்பிடுயா… பசிக்கலயா? எவ்வளவு வேல இருக்கு. வா யா…” மூத்த மகனை அன்பாக அழைத்தவர் கிருஷ்ணாவை மறந்தும் அழைக்கவில்லை.
“போ ..ண்ணா… போ… பாசமா கூப்பிடுறாருல்ல..” கிருஷ்ணா கிண்டலடிக்க
அவன் கையிலிருந்த அலைபேசியை பறித்த அருள் “நீயும் போய் குளிச்சிட்டு காலேஜ் போக ரெடியாகு போ” என்று விரட்டி விட்டு உணவுண்ண சென்றான்.
முதலமைச்சர் சாப்பிட்டு முடிந்து வாசலுக்கு வரவும் கோதாண்டம் அவருக்காக காத்திருக்க இருவரும் அன்றைய வேலைகளை பேசியவாறு காரியாலய அறைக்குள் செல்ல அருள்வேலும் கூடவே சென்றான்.
கனகவேளின் அரசியல் வாரிசு அருள்வேல்தான். இளைஞர் அணித் தலைவராக இருக்கின்றான். அடுத்த தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பது கனகவேலின் எண்ணம். அதற்குள் அவனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் நல்லது என்பது யசோதாவின் எண்ணம். அதை செய்ய வத்சலாவின் ஆசிர்வாதம் வேண்டும் என்பது அருளின் எண்ணம். இப்படியே! நினைக்கிறார்களே! ஒழிய பெண்ணை பார்க்க யோசிக்கவில்லை.
கிருஷ்ணாவுக்கு அரசியலில் எல்லாம் ஈடுபட இஷ்டமில்லை. அவனுக்கு தொழில் செய்யத்தான் விருப்பம். முடியாத பட்சத்தில் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்ப்பதாக யசோவிடம் கூறிக்கொண்டு இருக்கின்றான்.
“டேய் உங்கப்பா நாட்டை ஆளுறாரு. நீ என்னடா… எவன் கிட்டயோ! கைகட்டி வேல பாக்குறேன்னு சொல்லுற?” யசோதா கடிய,
“சுயமா சம்பாதிக்கிறது ஒன்னும் கேவலம் இல்லமா…” என்று சிரித்து விட்டு செல்வான்.
“முதல்ல இவன் ஜாதகத்தை நல்ல ஜோசியர்கிட்ட  காட்டணும்” என்று முணுமுணுப்பாள் யசோ.
“டேய் சாப்பிட்டுட்டு போ…” அன்னை கத்த..  
“ஏன் மா… கத்துற? நாலு இட்லியை வை. காலேஜ் போனா படிக்கிறேனோ இல்லையோ! அந்த மாலுவ திட்டனும், கிங்க சமாளிக்கணும், அப்பப்பப்பா…எவ்வளவு வேல இருக்கு” அலுத்துக்கொள்ள
“டேய் கண்ணா மாலினி ரொம்ப நல்ல பொண்ணு டா… அவளை கல்யாணம் பண்ணிக்கோடா…”
“இந்த ஜென்மத்துல முடியாது. வேணும்னா அடுத்த ஜென்மத்துல யோசிச்சு பாக்குறேன். நீ இட்லியை வை மா… ஆறிட போகுது”
நொடித்தவாறே “சூடா அடுப்புல கரி இருக்கு சாப்பிடுறியா கண்ணா?”
“அத உன் புருஷனுக்கு கொடு. அவருக்குத்தான் அதெல்லாம் செரிக்கும்” என்றவன் மீதம் வைக்காமல் வழித்து சாப்பிட்டு விட்டே காலேஜ் கிளம்பினான்.

Advertisement