Advertisement

அத்தியாயம் 8
“நீங்க அதீய கேக்காம இப்படியொரு முடிவு எடுத்தது தப்புங்க” வாகை கணவனிடம் பாய்துகொண்டிருக்க,
“இங்க பாரு வாகை செந்தில் என் நண்பன். நண்பரா இருக்குற நாம சம்மதியாகவும் இருக்கணும்னுதான் ஆசைப்பட்டு விழிக்கும், அர்ஜூனுக்கும் முடிச்சுப் போட்டோம்” சங்கரன் பேச்சை முடிக்கவில்லை. இடையில் புகுந்த வாகை
“அதான் இப்போ இல்லைனு ஆகிருச்சே விட வேண்டியது தானே!” ஒரு நாளும் இல்லாமல் கணவனின் மீது எரிந்து விழுந்தாள் வாகை.
அர்ஜூனுக்கும் விழிக்கும் இருக்கும் நெருக்கத்தை வாகை நன்கு அறிவாள். விழி அதீசனை திருமணம் செய்வதால் அதீசனும் சந்தோசமாக இருக்க, மாட்டான் அர்ஜுன் மாலினிக்கிடையிலும் பிரச்சினைகள் உருவாகக் கூடும். அதை புரிந்துக்கொள்ளாமல் வீட்டுக்கு வந்த உடனே! கணவன் செந்திலின் கையை பிடித்துக் கொண்டு “அர்ஜுன் இல்லைனா என்ன என் மகன் அதீசன் விழியை கல்யாணம் பண்ணிக்குவான்” என்று வாக்கு கொடுக்க, வாகைக்கு அப்படியொரு கோபம்.
“கொஞ்சம் வாங்க பேசணும்” என்று கணவனை இழுத்துக்கொண்டு வந்தவள் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டு இருக்கின்றாள்.
“அப்படியெல்லாம் விட முடியாது வாகை. அவன் என் நண்பன். நம்ம பையன் பண்ண தப்ப நாம தானே! சரி பண்ணனும்”
சரியெது? பிழையெது? நண்பனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற இங்கேயும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசாமல் தானாக ஒரு முடிவை இன்னொரு தந்தை எடுத்து விட்டார்.
“அதுக்காக யோசிக்காம? அதீ கிட்ட கலந்தாலோசிக்காம நீங்களாவே! ஒரு முடிவுக்கு வந்துடுவீங்களா?” வாகை காட்டமாக கேக்க,
“இங்க பாரு வாகை. அதீக்கு நாம பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாத்தான் உண்டு. அது விழியா இருந்தா என்ன? விழி அவனுக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு தானே! தெரியாத பொண்ண பாக்குறத விட அவனுக்கு தெரிஞ்ச பொண்ண பார்த்தா, புரிஞ்சி நடந்துப்பாங்க”
“புரிஞ்சி நடந்துப்பாங்களா? உங்களுக்குத்தான் புரியமாட்டேங்குது. அது யாரா இருந்தாலும் பரவால்ல விழி வேணாம்னு சொல்லுறேன். உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது. அர்ஜுனும், விழியும் எப்படி பழகுறாங்கனு உங்களுக்கு தெரியும். அதீயும் விழியும் எப்படி பழகுறாங்கனும் உங்களுக்கு தெரியும். தெரிஞ்சிதானே! அர்ஜுனுக்கு விழியை பேசினோம்” வாகை புரிய வைக்கும் முயற்சியில் இறங்க,
“இங்க பாரு வாகை. ஒன்னு அந்த பொண்ண அனுப்பிட்டு அர்ஜுனுக்கு விழியை கல்யாணம் பண்ணனும் இல்லையா? அதீக்கு விழிய கல்யாணம் பண்ணி வைக்கணும். இதுதான் என் முடிவு. விழிதான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு என் நண்பனோட ஆச. அதை நிறைவேத்த நான் என்ன வேணாலும் செய்வேன். இளையமருமகளா வருவான்னு நினச்சேன். மூத்த மருமகளா வருவா. அதீசனைப் பத்தின கவலைய விடு. அவன் என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான்” என்ற சங்கரன் வாசலுக்கு செல்ல, வாகை கோபமாக கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
“நீ அழாம போமா… நீ இந்த வீட்டு மருமகள் தான். அதுவும் மூத்த மருமகள்” என்று விழியின் தலையில் கைவைத்து சங்கரன் சொல்ல செந்தில் நண்பனைக் கட்டிக்கொண்டார்.
செந்திலுக்கு விழியை அதீசனுக்கு கொடுக்கத்தான் விருப்பம். ஆனால் அர்ஜுனும், விழியும்தான் சிறு வயதிலிருந்தே! நண்பர்கள் அதனால் அவர்கள்தான் மனமொத்து வாழ்வார்கள் என்று திருமண முடிச்சை பெரியவர்கள் இவர்களுக்கு போட்டிருந்தார்கள். சிறியவர்களுக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. விதி தனது வேலையை இவ்வாறு நடத்தி இருந்தது.
விழியின் பார்வையோ அர்ஜுனை நோக்கி இருக்க, அவனோ அனியோடு அமர்ந்து மாலினியை சைட்டடித்துக்கொண்டிருந்தான்.
மகளின் முகத்தை பார்த்த மங்கைக்கு இது சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை. வீட்டுக்கு சென்று கணவனோடு பேசிக்கொள்ளலாம் என்று மகளை இழுக்காத குறையாக அழைத்து சென்றாள்.
“ஏன் டா.. நீ தெரிஞ்சி தானே! தாலிய போட்ட அந்த பொண்ண இப்படி பாக்குற?” அனி சந்தேகமாக அர்ஜுனிடம் கேக்க,
“இவ யாருனு தெரியுமா? முதலமைச்சரோட பையன் கல்யாணம் பண்ண இருந்த பொண்ணு” மாலினியின் முகத்தை பார்த்தவாறே அர்ஜுன் கூற
“என்ன டா சொல்லுற?” அனி கிசுகிசுப்பாக கேட்டாள்.
கையை தூக்கி சோம்பல் முறித்தவன் குரலை உயர்த்தி “ஆமா அனி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசி வச்சிருக்காங்க, அவனுக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான் அதான் நிச்சயதார்த்தம் கூட பண்ணலன்னு காலேஜுல பேசிக்கிட்டாங்க” என்றவன் இரகசிய குரலில் கூறுவது போல் மாலினியின் காதில் விழவேண்டி “இவளுக்கு அவன்னா உசுரு… எனக்கும் அவனுக்கும் பகை. பகையாளி பொண்டாட்டியா போக வேண்டியவ நமக்கு பொண்டாட்டியா வாச்சிருக்கா எப்படியெல்லாம் வச்சி செய்யலாம்னு பாத்துகிட்டு இருக்கேன். நீ வேற, சைட்டு அடிக்கிறேனாம் சைட்டு” அர்ஜுன் கிண்டலாக சொல்ல பாதி மாலினியின் காதில் தெளிவாக விழுந்திருந்தாலும் மீதி அரையும்குறையுமாக விழுந்திருக்க,  விடுபட்டவைகள் என்னவாக இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடிந்தது.
“கிராதகா.. இரு டா… உன்ன நான் வச்சி செய்யுறேன்” என்று கருவிக்கொள்ள, செந்தில் குடும்பத்தை வழியனுப்பிவிட்டு சங்கரன் வரவும் வெளியே அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த கோதாண்டமும் வந்தமர்ந்தார்.
கோதாண்டம் யார்? என்ன? என்று சங்கரனுக்கு அறிமுகம் தேவையில்லை. டிவியிலும் அடிக்கடி பார்க்கும் முகம்தான். “சொல்லுங்க மிஸ்டர் கோதாண்டம் நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?” சங்கரன் நேரடியாக விசயத்துக்கு வர,
“என் பொண்ண சி.எம் ஓட பையனுக்குத்தான் பேசி வச்சிருந்தோம். அது உங்க பையனுக்கும் தெரிஞ்சிருக்கும். எல்லாரும் ஒரே காலேஜுல, ஒன்னாதான் படிக்கிறாங்க” கோதாண்டம் சொல்ல அர்ஜுன் தெரியும் எனும் விதமாக தலையசைத்தான்.
“யசோதா அம்மா..” சங்கரன் யார் அவங்க என்று கோதாண்டத்தை ஏறிட “சி.எம் ஓட.. சம்சாரம். அவங்க கிட்ட கோவில்ல நடந்த விசயத்த தெளிவா சொல்லிட்டேன். கோவில்ல வச்சி நடந்த கல்யாணம். நடந்தது நடந்ததாகவே! இருக்கட்டும் ஐயா கிட்ட நான் பேசிக்கிறேன்னு சொல்லிட்டாங்க”
“அப்பா…” மாலினி தந்தையை அழைக்க,
“என்ன சின்ன மருமகளே! திடிரென்று கல்யாணம் ஆகிருச்சேன்னு கலங்கி போய்ட்டியா? ஒன்னும் கவலை படாத அனி இருக்கா,  நான் இருக்கேன்” என்றவாறு மாலினியின் அருகில் வந்தமர்ந்தாள் வாகை.
“ஏன் மம்மி அதீயோட ஜாதகத்துல அவனுக்கு திடிரென்று கல்யாணம் நடக்கும்னு சொன்னீங்க, இந்த அஜ்ஜுக்கு ஜாதகம் பார்க்கலையா?” அதி முக்கியமான சந்தேகத்தை அனி கேக்க,
“இவன் சின்ன பையன் அதீக்கு கல்யாணம் பண்ணின பிறகுதானே! இவனுக்கு பண்ணனும் அதான் பார்க்கல”
“ஒருவேளை மாத்திகித்தி ஜாதகத்தை கொண்டு போய்ட்டிங்களோ! என்னமோ!” என்ற அனி “உன் பேர் மாலினி தானே! வரியா வீட்டை சுத்தி பார்க்கலாம்” என்று அழைக்க, மாலினி மறுத்து விட்டாள்.
“போ மா போய் பாரு. வாழ போற வீடுதான்” வாகை சொல்ல தந்தையின் முகம் பார்க்க, கோதாண்டம் தலையசைத்ததும் அனியோடு நடக்கலானாள்.
வாகையே! மாலினியை அந்த இடத்தை விட்டு அனுப்ப வேண்டும் என்று எண்ணி இருந்தாள். அனிக்கு கண்ணசைவிலோ! சைகையாளையோ! சொல்லி இருந்தாலாவது புரிந்துக்கொண்டிருக்க மாட்டாள். அவளாகவே! தோன்றி கேட்டிருக்க, வாகையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.
“அஜ்ஜு நீயும் கூட போடா” மகனையும் கிளப்ப முயற்சிக்க,
“அதான் அனி போய் இருக்காளே!” என்றவன் சட்டமாக அமர்ந்திருந்தான்.
“ஆமா நீங்க எப்படி அந்த நேரத்துல கோவில்ல” சங்கரன் கேக்க,
“இன்னக்கி எனக்கு பொறந்த நாள். மாலினி கட்டாயப்படுத்தி கூட்டிகிட்டு வந்தா..” என்ற கோதாண்டத்தின் முகத்தில் ஆயிரம் சிந்தனை ரேகைகள்
“ஒன்னும் கவலை படாதீங்க அண்ணா. மாலினி எங்க வீட்டு பொண்ணு. என்ன நம்பி கொடுங்க, நான் பாத்துக்கிறேன்” வாகை நெஞ்சுருகி சொல்ல,   
“நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் முக்கியமான விஷயம் பேசணும்” கோதாண்டம் சங்கரனையும், வாகையும் மாறி மாறி பார்த்தவாறு சொல்ல, அர்ஜுனும் ஆர்வமானான்.
அவனின் ஆர்வத்தைக் கண்டே! “தனியாக” என்று சொன்ன கோதாண்டம் அமைதியாக அர்ஜுன் வேண்டுமென்றே அசையாது அமர்ந்திருந்தான்.
வாகை அவனுக்கு கண்களால் செய்கை செய்து இடத்தை காலி செய்யும்படி சொல்ல அவன் வாகையின் புறம் திரும்பவுமில்லை. முறைத்துப் பார்க்கும் தந்தையின் புறம் திரும்பவுமில்லை. கோதாண்டத்தின் முகம் பார்த்தவாறு நின்றிருந்தான்.
“மாலினி என் மனைவி ஆகிட்டா எனக்கு தெரியாம ரகசியம் என்ன வேண்டி கிடக்கு” என்றது அவன் பார்வை
வேற நாட்களென்றால் கோதாண்டம் அர்ஜுனின் பார்வையை புரிந்துகொண்ட இருப்பாரோ! குழம்பிப்போய் கலங்கி இருந்த மனநிலையில் எதையும் சிந்திக்க முடியாமல் இருந்தவர் சங்கரனை பார்த்தார்.
 கோத்தாண்டத்தை பொறுத்தவரையில் அர்ஜுன் சின்ன பையன் இந்த விஷத்தை அவனிடம் சொல்லலாமா? வேண்டாமா?  என்ற குழப்பம் ஒரு புறம், சொன்னால் எப்படி எடுத்துக்கோவானோ! எனற அச்சம் வேறு. பெரியவர்களிடம் சொன்னால் புரிந்துக்கொள்வார்கள். என்ன செய்ய வேண்டுமோ! அதை செய்வார்கள்.   
“நாம் அந்த ரூம்ல போய் பேசலாம் சம்மந்தி” என்று வாகைக்கு கண்ணைக் காட்ட வாகையும் கணவனோடு கோதாண்டத்தை அழைத்துக்கொண்டு காரியாலய அறைக்குள் சென்று கதைவடைக்குக்கொண்டாள். 
அறைக்குள் நுழைந்த கோதாண்டம் அமர்ந்திருந்தாரே தவிர பேச வில்லை.
அவர் பேச அழைத்து அமைதியாக இருக்கும் பொழுது நாம எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது என்று வாகை கணவனை ஏறிட
“சம்மந்தி வர்ர முகூர்த்தத்திலையே! என் மூத்த பையனுக்கும், நண்பனுடைய மகளுக்கும் கல்யாணத்த வைக்கலாம்னு இருக்கோம். ஊரறிய அன்னைக்கே! உங்க பொண்ணுக்கும், என் இளைய மகனுக்கும் கல்யாணத்த பண்ணிடலாம்” கோதாண்டம் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவாரா என்று அறியாமல் அவரை முறை வைத்து அழைக்க சங்கரன் விரும்பவில்லை. அதனால்தான் முதலில் மிஸ்டர். கோதாண்டம் என்று அழைத்தவர் பின்பு சம்மந்தி என்று அழைத்திருந்தார்.
யாரோடு எவ்வாறு பேச வேண்டும் என்று சங்கரனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. என்ன சொல்ல வேண்டுமோ! அதை சரியாக கூறி கோதாண்டத்தின் மனக்கலக்கத்தை போக்க எண்ணினார்.
“அதுவரைக்கும்” என்று கோதாண்டம் சங்கரன் மற்றும் வாகையின் முகம் பார்க்க அவர்கள் புரியாது அவரை ஏறிட்டனர்.
“அதுவரைக்கும் என் பொண்ணு எங்க இருப்பா?” தெளிவாக அவர் மீண்டும் கேட்க,
“இது என்ன கேள்வி சம்மந்தி. உங்க கூட உங்க வீட்டுல இருப்பா…” சங்கரன் அதிருப்தியாக சொல்ல வாகை யோசனையாக கோதாண்டத்தை பார்த்தாள்.
கோதாண்டம் யோசனையில் விழ “அண்ணா ஏதாச்சும் பிரச்சினைனா சொல்லுங்க, நாங்க பாத்துகிறோம்” என்ற வாகை கணவனை பார்த்து “சொல்லுங்க” என்றும் விதமாக செய்கை செய்ய,
“ஆமா சம்மந்தி தைரியமா சொல்லுங்க” என்றார் சங்கரன்.
“உங்க பையனோடதான் என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் என்கிறது கடவுள் விருப்பம். அதுதான் விதி. அந்த அம்பாளே! என் பொண்ணுக்கு விடிவு காலத்தை காட்டிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன்” என்ற கோதாண்டம் சட்டென்று சங்கரனின் கையை பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.
“என்ன சம்மந்தி இது. என்ன பிரச்சினையாக இருந்தாலும் மனதைரியத்த விடாதீங்க. என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க” சங்கரன் சமாதானப்படுத்தியவாறே கேக்க,
கண்ணாடியை கழட்டியவர் கண்களை துடைத்தவாறே “ஒருநாள் சி.எம் வீட்டுக்கு பலம் பெரும் ஜோதிடர் ராமானுஜம் வந்திருந்தார்”
“ஆமா அவர்தான் எங்க குடும்பத்துக்கும் ஜாதகம் பாக்குறவர். எங்க குடும்பத்துக்கு மட்டுமில்ல. இந்தியா முழுக்க, பெரிய பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லாரும் அவரைத்தான் கூப்பிடுவாங்க. சிங்கப்பூர், மலேசியா கூட போறாருனு கேள்வி பட்டிருக்கேன்” சங்கரன் ஜோதிடரின் புகழ் பாட வாகை கணவனை முறைக்க ஆரம்பிக்க, கப்பென்று வாய் மூடிக்கொண்டவர் கோதண்டத்திடம் மேலே சொல்லும்படி கூறினார்.
“அவர் கிட்ட என் பொண்ணு ஜாதகத்தை காட்டலாமேன்னு வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரதுக்குள்ள, ஜோசியர் முதலமைச்சர் கிட்ட கிருஷ்ணா தம்பி ஜாதகத்தை பத்தி என்ன சொல்லி வச்சாருனு தெரியல, என் பொண்ணு ஜாதகத்தை பார்த்ததும் “அட, அட, அட இந்த ரெண்டு ஜாதகமும் பேஷா பொருந்துது. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா நீங்க நினைச்சது நடக்கும்னு” சொல்லிட்டு போய்ட்டாரு. அன்னக்கிதான் என் பொண்ண கிருஷ்ணா தம்பிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஐயா என் கிட்ட சொன்னது மட்டுமில்லாம, யசோதா அம்மாகிட்டயும் சொல்லி வச்சாரு.
“என் பொண்ணு சின்ன பொண்ணு படிக்கிற பொண்ணு, இப்போதான் காலேஜ் போக ஆரம்பிச்சா” என்று  நான் மறுத்து பார்த்தேன். அதற்கு அவர் படிப்பு முடிஞ்சா பிறகுதான் கல்யாணம்னு சொல்லி எங்களை அவர் கூடவே! தங்க வச்சிக்கிட்டாரு. வேற வழியில்லாம, அவர் என் பாலிய நம்பர், அவர் பையனைத்தான் என் பொண்ணுக்கு கல்யாணம் பேசி இருக்கேனு என் பொண்ணுக்கு சொல்லி வச்சேன்.
“அவங்க ரெண்டு பெரும் விரும்புறாங்களா?” வாகை சற்று கவலையாக கேக்க,
“ஐயோ… அப்படி ஒன்னும் இல்ல…. நான் அப்படி சொல்லலைனா அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கவே! மாட்டா” உடனே! மறுத்த கோதாண்டம் “என்ன காரணத்துக்காக கிருஷ்ணா தம்பிக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க நெனச்சாருனு தெரியல, இப்போ அது நடக்கலைனா, என் பொண்ண கொன்னாலும் கொன்டுவாரு”
“என்ன சொல்லுறீங்க ண்ணா…” வாகை புரியாது கேக்க, சங்கரனுக்கு புரிந்தது.
கோதண்டத்தின் அச்சம் சங்கரனுக்கு நன்றாகவே! புரிந்தது. அரசியையல்வாதிகள் அரசியலில் நிலைக்க, என்னவெல்லாம் செய்வார்கள் என்று அவர் அறியாததா? சி.எம் சீட்டுக்கு கனகவேல் நல்லதை மட்டும் செய்து விட்டு வந்தமர்ந்து இருக்க மாட்டார். அவர் பதவிக்கு அவரின் பாவங்களின் அளவு எவ்வளவு இருக்கும் என்று சங்கரனால் புரிந்துக்கொள்ள முடிந்ததோடு கூடவே இருக்கும் கோதாண்டம் விலாவரியாக கூறாமல் அச்சப்படுவதை வைத்தே! அர்ஜுனை கொன்றாவது, மாலினிக்கு கிருஷ்ணாவை திருமணம் செய்து வைக்கவும் தயங்க மாட்டார் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.       
“என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் சம்மந்தி. என் மருமக நம்ம வீட்டுல இருக்கட்டும். நீங்களும் இங்க தங்கிக்கீறீங்களா?”
“இல்ல. வேணாம். நான் அங்க இருந்தா தான் சி.எம் என்ன செய்ய யோசிக்கிறார்னு தெரியும்” கோதாண்டம் சங்கரனின் முகம் பார்த்துக் கூற, 
“அதுவும் சரிதான்”
“அப்போ நான் போயிட்டு வரேன். எதுக்கும் நீங்க எல்லோரும் பத்திரமா இருந்துக்கோங்க” என்ற கோதாண்டம் மகளிடம் கூட விடைபெறாமல் கிளம்பி சென்றிருந்தார்.
வண்டியில் ஏறிச் சென்ற கோதாண்டத்தை பார்த்தவாறு “ஏங்க அவர் கடைசியா? என்ன சொல்லிட்டு போறாரு?” வாகை புரியாது கேட்க,
“சி.எம் பையன் கல்யாணம் பண்ண இருந்த பொண்ண நம் பையன் கல்யாணம் பண்ணி இருக்கானில்ல. அதனால் நம்ம உசுருக்கு ஆபத்து வரலாம்னு சொல்லிட்டு போறாரு” சங்கரன் சாதாரணமாக சொல்ல,
“என்னங்க சொல்லுறீங்க?” அதிர்ச்சியியாக வாகை கேக்க,
“பார்த்துக்கலாம் விடு” மிரண்டு விழித்த மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் சங்கரன்.
மாடியில் ஒவ்வொரு அறையாக காட்டிக்கொண்டு வந்த அனி அர்ஜுனின் அறையை திறந்து கொண்டு மாலினியை உள்ளே அழைத்தவள் “வெல்கம் டூ யுவர் ரூம்” என்று சொல்ல
“வாவ் செமயா இருக்கு. இது என் ரூமா?” என்று சுத்திப் பார்த்தவள், ஆளுயர அர்ஜுனின் புகைப்படத்தைக் கண்டு “என்னது இது கொரங்கு போட்டோ எல்லாம் வச்சிருக்குறீங்க, என்ன த்ரிஷ்டிக்காகவா?”
“ஹாஹாஹா இத விட அவனை யாராலயும் கேவலமா கலாய்க்க முடியாது” என்று மாலினிக்கு ஹைப்பை கொடுத்த அனி “சே இத அஜ்ஜு மிஸ் பண்ணிட்டானே! என்று வேற சொல்ல,
“என்ன இவங்க கூடப்போறந்த தம்பிய கலாய்க்கிறேன், கண்டுக்காம இருக்காங்க” என்று யோசித்த மாலினி “வந்தவரைக்கும் லாபம்தான்”  அனியை பார்த்து நன்றாக சிரித்து வைத்தாள்.
“ஆமா டா மச்சான் திடிரென்று கல்யாண மாச்சு. அதுக்குதான் பூக்காரன் நம்பர் கேக்குறேன். இல்லனா உனக்கு எதுக்கு போன் பண்ண போறேன்” என்றவாறு அர்ஜுன் வர
“யாருக்குடா போன் பண்ணி பூக்காரன் நம்பர் கேக்குற?” அனி முழிக்க,
“ஐயாவுக்கு இன்னக்கி கல்யாணமாச்சு. முதலிரவுக்கு ரூமை டெகரேட் பண்ண வேணாமா அதுக்குதான்” துள்ளியவாறே அர்ஜுன் சொல்ல அனி வாயில் கை வைத்துக்கொள்ள, மாலினி அவனை முறைக்கலானாள்.
“என்னையா கொரங்குனு சொல்லுற? இரு டி கொரங்கு சேட்டை என்னனு காட்டுறேன்” கருவியவன் “அம்மா…” என்றவாறே கீழே செல்ல
“ஓகே… அனி நான் வீட்டுக்கு போறேன்” என்று மாலினி அர்ஜுனின் பின்னால் செல்ல, வாகையும், சங்கரனும் கோதாண்டத்தை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்து கொண்டிருந்திருந்தனர்.
“அப்பா எங்க?” மாலினி வாகையை ஏறிட
“என்னமா… கல்யாணமான பொண்ணு அப்பா கூடயா இருக்க முடியும், மாமியார் வீட்டுல இல்ல இருக்கணும்” என்று வாகை சொல்ல மாலினியின் பார்வை தானாக அர்ஜுனின் மேல் படிய அர்ஜுனும் அவளைத்தான் கிண்டலாக பார்த்திருந்தான்.
அவர்களின் பின்னால் வந்த அனி “மம்மி இந்த அஜ்ஜு பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்” என்று அவனை எரித்து விடுவதை போல் பார்க்க,
“இப்ப என்னடி பண்ணன் அவன்” “இருக்குற பிரச்சினை பத்தாதுன்னு இவங்க சண்டையை வேற தீர்த்து வைக்கணுமா?” என்று வாகை சோபாவில் அமர
“இன்னும் ஆதிக்கு கல்யாணமாகல, அக்கா எனக்கு கல்யாணமாகல, இவன் பூக்காரனுக்கு போன் பண்ணி பர்ஸ்ட் நைட்டுன்னு ரூம் டெகரேட் பண்ண பூக்கு ஆடர் கொடுக்கிறான்”
சங்கரன் மகனை முறைக்க, “அடிப்பாவி… மாலுவ உசுப்பேத்த போன் பண்ணுற மாதிரி நடிக்கத்தாண்டி செஞ்சேன். அதையே! இப்படி பத்த வச்சிட்டியே! உண்மையிலயே! ஒன்னும் பண்ண விடமாட்ட போல இருக்கே! போன ஜென்மத்துல எனக்கு மாமியாரை பொறந்திருப்ப” நொந்தவாறு அர்ஜுன் அன்னையின் மடியில் படுத்துக்கொள்ள,
“சும்மா..சும்மா.. அவனை திட்டாத அனி.. தாலினாவே!! என்னனு தெரியாம போட்டவன் பாஸ்ட் நைட் பத்தியெல்லாம் யோசிப்பானா? போ.. போய்.. உன் பக்கத்து ரூம மாலினிக்கு கொடு… அவ இனிமேல் இங்கதான் தங்குவா..”
“பாருங்க டேடி.. மம்மி எப்பவும் அஜ்ஜுக்குத்தான் சப்போர்ட் பண்ணுறாங்க” தந்தையிடம் புகார் வாசித்தவாறே மாலினியை அழைத்துக்கொண்டு சென்றாள் அனி.
வாகையின் மடியில் தலை வைத்தவாறு செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்கும் அர்ஜுனை பொறாமையாக பார்த்தவாறு அனியோடு உள்ளே சென்ற மாலினி தந்தையை அழைத்து பேசி இருக்க, சில விஷயங்களை கூறியவர் பத்திரமாக இருக்கும்படி கூறி இருந்தார்.
இங்கே! மங்கை காரை விட்டு இறங்கிய உடனே! தாம்தூம் என்று குதிக்க, ஆரம்பித்திருந்தாள்.
“நான் அப்போவே! சொன்னேன். ஊரைக்கூட்டி நிச்சயமாவது செஞ்சி இருக்கலாம்னு. கேட்டீங்களா? இப்போ என் பொண்ணு வாழ்க்கைதான் கேள்விக்குறியா நிக்குது. அர்ஜுன் இல்லனா அதீசன்னு சொல்ல இது என்ன விளையாட்டா? வாழ்க்கைங்க?” கையிலிருந்த பேர்ஸை தூக்கியடித்தபடியே சோபாவில் அமர
“என்ன மங்கா? புரியாம பேசுற? நிச்சயம் பண்ணி இருந்தா மட்டும் இன்னக்கி நடந்தது இல்லைனு ஆகிடுமா? நல்லவேளை நிச்சசயம் பண்ணலைன்னு நினைச்சுக்க, பண்ணி இருந்தா? எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும். இப்போ அந்த பிரச்சினை இல்ல. நம்ம பொண்ண அதீசனுக்கே! கட்டி வச்சிடலாம். அர்ஜுனன் விட அதீசன்தான் பொருத்தமா இருப்பான்” என்றவாறு செந்தில் அமர
“ஆளாளுக்கு விளையாட என் வாழ்க்கை என்ன புட்பாளா? எனக்கு அர்ஜுனதான் பிடிச்சிருக்கு, அர்ஜுன்தான் வேணும். அதுக்கு ஏதாச்சும் வழிய பாருங்க” விழி கத்த
அதிர்ச்சியாக விழியை பார்த்த மங்கை “விழி நீ அர்ஜுனன் விரும்புற? அர்ஜுனும் உன்ன விரும்புறானா?”
அன்னையை புரியாது பார்த்தவள் “விரும்பாமதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னானா?”
“சொன்னவன்தான் அந்த பொண்ணு கழுத்துல தாலிய போட்ட பின்னும் எந்த பதட்டமும் இல்லாம, கண்ணீர் வடிக்கிற உன்ன சமாதானம் கூட படுத்தாம, இந்த கல்யாணத்த எதிர்க்காம புடிச்சி வச்ச மண்ணு மாதிரி நின்னானா? எனக்கு என்னமோ! சந்தேகமாகவே! இருக்கு அர்ஜுன் தெரிஞ்சேதான் அந்த பொண்ணு கழுத்துல தாலிய போட்டிருப்பான்”
“என்னம்மா சொல்லுற?” விழி யோசிக்க ஆரம்பிக்க
“அப்படியே போட்டாலும் அந்த பொண்ணு எப்படி கரெக்ட்டா அந்த நேரத்துல அங்க வந்தா? தெரியாமத்தான் போட்டிருப்பான். சாத்திரம், சம்பிரதாயம்னு எல்லாரும் சேர்ந்து அர்ஜுனன் லாக் பண்ணிடீங்க அவனும் வேற என்ன செய்வான். அந்த பொண்ண ஏத்துக்கிட்டான்” மாலினிக்கு அர்ஜுனை விட்டால் மாப்பிளையே! அமையாது என்பது போல் செந்தில் பேச
“இவர் ஒருத்தர், இவர் போதும் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்க” கணவனை ஆயாசமாய் பார்த்திருந்தாள் மங்கை.

Advertisement