Advertisement

அத்தியாயம் 7
“ஏன் மா… இத நீ பண்ணிதான் ஆகணுமா?” என்றவாறே ஞானவேல் வந்தமர
கைத்தறி இயந்திரத்தை நிறுத்தாது “என் கையாள உங்க ரெண்டு பேருக்கும் துணி நெஞ்சு கொடுக்கலானா எனக்கு எதையோ! இழந்த மாதிரி இருக்கு மாமா” என்ற வத்சலா இயந்திரத்தை நிறுத்தாது இருந்தாள்.
“அப்பா எங்க?”
“பின் பக்கமாத்தான் தெளுவு {பதநீர்} வெட்டுறாங்க”
“வெயிலுக்கு இதமாதான் இருக்கும்” என்றவர் வத்சலா வேலை செய்யும் அழகை பாத்திருந்தார்.
கனகவேலை விட்டு ஒதுங்கிய பின் ஞானவேல் வத்சலாவை மறுமணம் கூட செய்து வைக்க முயற்சித்தார். ஆனால் வத்சலா அதற்கு சம்மதிக்கவில்லை.
“என் பையன யசோக்கு கொடுத்தாலும், அருள் என் பையன் இல்லைனு ஆகாது மாமா. என்னைக்காவது ஒருநாள் அவன் என் கிட்ட வந்து ஏன் என்ன கொடுத்தனு கேட்ட… சரியான காரணம் நான் கூறணும். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு அசிங்கமா காரணம் கூறக்கூடாதில்ல” என்று பொட்டில் அடித்தது போல் சொன்னாலும்,
அவள் மனதுக்குள் குண்டாக இருக்கும் தன்னை கனகவேல் மணந்தது சொத்துக்காக மட்டுமே! அதே! போல் இன்னொருவன் திருமணம் செய்ய சம்மதிப்பதும் சொத்துக்காக மட்டும்தான். பொய்யான ஒரு வாழ்க்கையை வாழ்வதை விட, தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள். யாரையும் எதிர்பார்க்காத, சுதந்திரமான ஒரு வாழ்க்கை.
ஞானவேலின் சொத்து முழுக்க கனகவேலுக்கு சேர்ந்திருக்க, செல்வராஜ் அவருடைய சொத்துக்களை வத்சலாவின் பெயரில் எழுதியதோடு அதை யார் பெயரிலும் எழுதக் கூடாது என்று சத்தியம் வேறு வாங்கி இருந்தார்.
“என்னப்பா… எனக்கு இருக்கிறதே! ரெண்டு பசங்க, எனக்கு பிறகு அருளுக்கும், கிருஷ்ணாகும் தானே! சொத்து போக போகுது அத இப்போவே! எழுதினா என்ன?” என்று வத்சலா கேட்க,
கிருஷ்ணாவையும் தன் மகன் என்று பிரித்துப் பார்க்காமல் கூறியது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இங்க பாருமா.. நா இல்லாத காலத்துல என் சொத்தை நீ பாதுக, நீ இல்லாத காலத்துல உன் பசங்க பார்த்துக்கட்டும்” வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக தன் முடிவை கூறி இருந்தார் செல்வராஜ்.
உண்மையில் இது ஞானவேலின் முடிவுதான். செல்வராஜுக்கு ஒரு பருத்தி ஆலையும் நூறு ஏக்கரில் பருத்திக் காடும் இருக்க, அதை வத்சலாவின் பெயரில் எழுதி வைத்து அதை அவள் பொறுப்பிலையே! விட்டு வைத்திருக்கிறார். அதில் அவள் மனம் லயித்தால் பழையதை நினைத்து கவலையடைய மாட்டாள் என்ற எண்ணம் இரு தகப்பன்களுக்கும். 
ஆனால் வத்சலா அருளை யசோதாவிடம் அனுப்பும் பொழுதே! தன் மனதை தேற்றிக்கொண்டு முடிவெடுத்து விட்டிருந்தாள் என்று இவர்களுக்குத்தான் புரியவில்லை.
வத்சலாவின் பெயரில் சொத்தை எழுதி வைத்ததை பற்றி யசோதாவுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை. யசோதாவால் கனகவேலை விட்டு வரவும் முடியாது. ஆலையையோ! பருத்திக்கு காட்டையே! பராமரிக்கவும் முடியாது. யசோதாவின் அச்சமெல்லாம் சொத்தை வத்சலாவின் பெயரில் எழுதியதை அறிந்துகொண்ட கனகவேல் என்ன செய்வாரோ! என்றிருந்தது.
ஆனால் கனகவேல் யசோதாவின் கலங்கிய முகம் பார்த்தே! “நமக்கு இருக்குற சொத்துபத்தே! இன்னொருத்தன வச்சி பாத்துக்கணும். இதுல உங்கப்பன் சொத்தை வத்சலா பாதுகாக்கப் போறா அதுல என்ன இருக்கு யசோ!… சாகும் போது நாம என்ன கொண்டா போக போறோம். நம்ம சொத்து நம்ம பசங்களுக்கு தானே!” என்று பெருந்தன்மையாக கூறி செல்ல, யசோதாவுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனால் உண்மையான காரணம் அது மட்டுமல்ல, அரசியலில் நுழைந்தபின் கனகவேல் ராஜாவின் சொத்து மதிப்பு பல மடங்கு கூடியிருந்தது என்பதுதான் உண்மை. ஸ்விஸ் பேங்கில் பதுக்கி இருக்கும் பணமும், சிங்கப்பூரில் இருக்கும் பேக்டரியும், டுபாயில் மாளிகை போன்ற வீடு என்று உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார். பாவம் யசோதாவுக்குத்தான் தெரியவில்லை. கனகவேலின் சொத்துக்களின் முன்னால், ஒரு பருத்தி ஆலையும், நூறு ஏக்கருக்கு, சாதாரண சொத்து. மனைவியிடம் உண்மையை கூறாமல் இப்படி பேசி வைத்திருந்தார் முதலமைச்சர்.  
கணவன் பாசம் கட்டி மோசம் செய்து விட்டான் என்று வத்சலா ஒன்றும் சோர்ந்து போய் முடங்கி விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கவென்றே! ஒரு இல்லத்தை அமைத்து அவர்களுக்கு தனது பருத்தி ஆலையிலும், காட்டிலும் வேலையும் போட்டுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினாள்.
அவர்களின் கதைகளைக் கேட்கும் பொழுது தனக்கு நேர்ந்தது எல்லாம் ஒன்றுமே! இல்லை என்ற எண்ணம்தான் வத்சலாவின் மனதில் உருவாகும்.
வத்சலா யசோதாவுக்கு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க, முடிவெடுத்ததன் முக்கிய காரணம் யசோதாவின் மனதிலும் கனகவேலை பற்றிய எண்ணம் இருந்ததினால்தான்.
ஞானவேல் செல்வராஜோடு பேசி யசோதாவை கனகவேலுக்கு கோவிலில் வைத்துதான் காட்டி இருந்தார். செல்வராஜும் யசோதாவிடம் அதுதான் உன் அக்காவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று கூறி இருந்தார். பெண்ணோடு பேச சந்தர்ப்பம் எல்லாம் கனகவேலுக்கு கிடைக்காததால் யசோதாதான் மணப்பெண் என்ற கனவோடு கனகவேல் வீடு திரும்பி இருக்க, வீடு வந்த யசோதா அக்காவிடம்
“மாமா ஜெமினி கணேசன் மாதிரி இருக்காரு. நான் கொஞ்சம் லேட்டா பொறந்துட்டேன். இல்லனா எனக்குதான் அவர் கூட கல்யாணம் நடத்திருக்கும்” என்று கேலி பேச வத்சலா பெரிது படுத்தவில்லை. வத்சலாவுக்கும் கனகவேலுக்கு யசோதாவை காட்டிய விஷயம் தெரியாது.
கல்யாணத்துக்கு பிறகு “கோவில்ல வச்சு மாமா கூட இருந்தது யாரு? புள்ள” என்று கனகவேல் வத்சலாவிடம் போட்டு வங்கி பக்காவா ஸ்கெட்ச்  போட்டு யசோதாவை தூக்கி தாலிகட்டி குடும்பம் நடத்திக்கொண்டிருந்ததை யாருமே! அறியவில்லை.
உண்மையெல்லாம் அறிந்த பின் வத்சலாவுக்கு தங்கை கேலி பேசியது அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குமோ! என்று தோன்ற, கனகவேலுக்கும் அவளைத்தான் பிடித்திருக்கிறது இதில் நடுவில் பிடிக்காத வாழ்க்கையை ஏன் வாழ வேண்டும். அதில் மூவருக்கும்தான் மனநிம்மதி இல்லாமல் போய் விடும் என்று எண்ணியே! ஒதுங்கிக்கொண்டாள்.
கனகவேல் வத்சலாவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒரு பொழுதும் எண்ணி இருக்கவில்லை. வத்சலாவே! ஒதுங்குவதாக சொல்ல அதுதான் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும் நல்லது என்று சுயநலமாக சிந்தித்து சரியென்றார்.
கனகவேல் உண்மையை சொல்லி இருக்கலாம். இப்படி ஏமாற்றி இருக்கக் கூடாது என்று வத்சலாவால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் காலமேயானாலும் சந்தோசமாக வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து கடைசிவரை வாழ்ந்து விடும் பாக்கியமாவது கிடைத்ததே என்றும் எண்ணுவாள்.
“எப்போ வந்த ஞானவேல்? வந்து ரொம்ப நேரமாச்சா?” என்றவாறு செல்வராஜ் வர
“இப்போதான் வந்தேன்” என்றவரின் பார்வை வத்சலாவின் மீது இருக்க, செல்வராஜுக்கு புரிந்தது நண்பன் எதற்காக வந்திருக்கின்றான் என்று. தினமும் வத்சலாவை பார்க்காவிட்டால் ஞானவேலுக்கு அந்த நாளில் எதையும் சரியாக செய்யாதது போல் இருக்கும் என்று செல்வராஜிடம் அடிக்கடி கூறுவதுதான் அதனால்தான் நண்பன் மகளை காண வந்திருக்கின்றான் என்று புரிந்தது. சிறு புன்னகையினூடாகவே! நண்பனை ஏறிட்டு “தெளுவு குடிக்கிறியா?” என்று கேட்க,
வேண்டாம் என்றவர் “என்னதான் ஆலைல நெஞ்சாலும், வத்சலா கையால நெஞ்சது போல வராது இல்ல செல்வா” மடித்து வைத்திருந்த துணிகளை தடவியவாறு ஞானவேல் பேச சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தாள் வத்சலா.
மனித மனம் தான் எவ்வளவு விசித்திரமானது. சற்று முன்தான் “இதை நீ செய்ய வேண்டுமா?” என்று கேட்டிருந்தார். அடுத்த நொடி “உன் கையால நெஞ்சது போல வராது” என்கின்றார்.
எல்லாம் அப்படித்தான் மனம் போன போக்கில்தான் சரி, பிழை கூட தீர்மானிக்கப் படுகிறது.
தனது பரம்பரையிலையே! கட்டிய மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க எந்த ஆணும் துணிந்ததில்லை என்ற இறுமாப்பில் இருந்த ஞானவேலுக்கு அவர் செய்தது சரி, தனது மகன் தன் இரத்தம் தவறிழைக்க மாட்டான் என்று நினைத்துதான் வத்தலாவை கட்டி வைத்தார்.
பிறப்பதும் இறப்பதும் ஒரு தடவைதான். ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழாமல் என்ன பிரயோஜனம் என்று யசோதாவை கடத்தி கல்யாணம் செய்த கனகவேலுக்கு அவர் செய்தது சரி.
தனக்கு நேர்ந்தது பிழை என்று அறிந்தும், தங்கை வாழ்க்கையாவது முறையாக இருக்கட்டும் என்று வத்சலா எடுத்த முடிவு. வத்சலாவுக்கு அவள் செய்தது சரி.
மகனிடம் உண்மையை கூறி இருந்தால் கனகவேல் ஒருவேளை வத்சலாவை ஏற்றுக்கொண்டிருக்கவும் கூடும். அதை செய்யாதது ஞானவேல் செய்த பிழை.
தந்தையின் சொத்துக்காக வத்சலாவின் கழுத்தில் தாலி கட்டியது கனகவேல் செய்த பிழை.
தான்தான் முதல் தாரம், கனகவேல் செய்தது துரோகம், சண்டை கூட போடாமல் ஒரு வார்த்தையேனும் நியாயம் கேட்காமல் கனகவேல் செய்தது சரி என்பது போல் வத்சலா ஒதுங்கிக் கொண்டது அவள் செய்த பிழை.
அவரவர் மனம் தான் செய்வது பிழை என்று அறிந்தும் தவறிழைத்து அதை நியாயப்படுத்த முனைவதும், அதுவே! சரி என்று வாதிடுவதும், அடுத்தவரை காயப்படுத்துவதும் தான் மனித இயல்பு.  
மனம் ஒரு விசித்திரமானது. எந்த நொடியில் தடம் மாறும் என்று யாருக்கும் தெரியாது. பிடிப்பது பிடிக்காமல் போகலாம், விரும்புவதை வெறுக்கலாம், நேசிப்பதிக் கூட மறக்கலாம். வெறுப்பதை விரும்பக்கூட செய்யலாம். ஏன் சட்டென்று காதல் கூட முளைக்கலாம்.
பார்த்த நொடியில் அதீசனுக்கு மஞ்சரியின் மேல் பூத்த காதல் போல். காதலை எதிர்பார்த்து காத்திருந்தாள் இவள்தான் அவள் என்று அந்த நொடியில் கண்டு கொண்டு போய் பேசி கூட இருப்பான்.
அர்ஜுன் சொல்வதை போல் ரோபோ போல் இருப்பவனுக்கு காதல் பூ மொட்டு விட்டு, மலர்ந்து அதன் வாசம் வீசி அதை அவன் நுகரவே! காலம் எடுத்திருக்க, மஞ்சரிக்கு கல்யாணம் நடந்து முடிந்திருந்தது.
அதீசன் மஞ்சரியை ஊட்டியில் தேடிக்கொண்டிருக்க, திருநெல்வேலியில் அவள் சித்திரவதை பட்டுக்கொண்டிருந்தாள்.
தேடிக்கலைத்து அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்று அவனே! ஒரு முடிவுக்கு வந்து விட்ட பின் அவள் விவாகரத்தாகி வீட்டுக்கே! வந்திருந்தாள்.
“கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது” என்று தாராக மந்திரம் போல் சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு இதோ! மூன்று வருடங்களுக்கு பிறகு மஞ்சரியை கடவுள் கண்ணில் காட்டி விட்டான். 
விதி யாருக்கு என்ன நிர்பந்திக்கிறதோ! அதை அனுபவித்துத்தான் ஆகா வேண்டும். மஞ்சரியும் அப்படித்தான். விதி நிர்பந்தித்த வேதனையை  அனுபவித்து விட்டாள். சந்தோசத்தை அனுபவிப்பாளா? எட்டி உதைப்பாளா?
அம்மன் கோவிலில் பூஜைக்கான எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. வாகை சொன்னது போல் பத்து ஜோடிகளுக்கு திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பரிகாரமாக பொன்தாலி செஞ்சி பூஜைக்காக ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தது. அது அவர்களின் குடும்பத்தாலிதான். அதீசனின் கல்யாணத்துக்காக வாங்கியது பூஜை செய்த பிறகாவது மணப்பெண் கிடைப்பாள் என்ற நம்பிக்கை வாகைக்கும் சங்கரனுக்கு இருந்தது. சங்கரன் குடும்பத்தோடு செந்தில் குடும்பமும் வந்திருக்க, அதீசனை மட்டும் காணவில்லை.
“என்ன அனி அதீ கிட்ட பேசிட்டனு சொன்னியே! இன்னும் ஆள காணோம்” சங்கரன் கேக்க,
“பூஜை ஆரம்பிக்கிறதுக்குள்ள வந்திடுறேன்னு சொன்னான். ட்ராபிக்ல மாட்டிகிட்டான் போல” தந்தைக்கு பதில் சொன்னவள் இரண்டு நாளைக்கு முன்னாடி வீட்டிலிருந்து அதீ கிளம்பும் பொழுது நடந்ததை நினைத்தவாறு இடத்தை காலி செய்து இருந்தாள்.
“டேய் என்ன டா  அதீ… இது… இன்னும் ரெண்டு நாள்ல பூஜையை வச்சி கிட்டு நீ இப்படி திடு திடுப்பென்று சைட்டுக்கு போகணும்னு சொல்லுற?” வாகை கடிய,
“சொன்னா புரிஞ்சிக்க மா… குழந்தை மாதிரி அடம் பிடிக்காத,  ஒரு முக்கியமான வேலைன்னுதானே! சொல்லுறேன்” அதீசன்  அன்னையை கொஞ்சலானான்.
அவன் மனம் ஒரு நிலையில்லாது தவித்துக்கொண்டிருந்தது. பாடசாலையின் கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பிக்கும் முன் மஞ்சரியை ஒரு தடவையாவது சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தான். அனியின் பிறந்தநாள் விழா, அதன்பின் தொடர்ந்து இழுத்துக்கொண்ட வேலைகளால் சென்னையிலிருந்து மஞ்சரியின் ஊர் நோக்கி பயணப்பட சாத்தியமில்லாமல் போனது.
இன்று ஏனோ! கண்விழித்ததிலிருந்து மனம் துடிக்க, ஏதோ! அசம்பாவிதம் நடக்கப்போவது போல் ஒரு மாயை. உடனே! மஞ்சரியை பார்த்தால்தான் அடங்குவேன் என்றது அவன் மனம். அதனால்தான் அன்னையிடம் வேலையிருக்கு சைட்டுக்கு போகணும் என்று காரணம் சொல்லில்லாண்டிருக்கின்றான். வாகையும் இரண்டு நாளில் பூஜையை வைத்துக்கொண்டு இவன் வெளியே சென்றால் ஏதாவது நடந்து விடுமோ! என்று அதீசனை கடிந்துக்கொண்டு இருக்கின்றாள்.
“என்ன வாகை புரியாமல் பேசுற, அதான் அதீ.. வேலை இருக்குனு சொல்லுறானே! அவன் என்ன குழந்தையா? வேலைய முடிச்சிட்டு வந்துடுவான்” சங்கரன் சொல்ல அரைமனதாக ஒப்புக்கொண்டாள் வாகை.
துணிப்பையோடு அதீசன் கிளம்பும் வேளையில் அவனை வழிமறித்த அனி “அதீ.. நீ வேலைனு உன் ஆள பார்க்க போறியோனு என் மைண்ட் சொல்லுது. ஐம் ஐ ரைட்” என்று கண்ணாடியை சரி செய்ய,
“எல்லாரும் கண்ணுக்குத்தான் கண்ணாடி போடுவாங்க, நீ மூளைக்கும் சேர்த்து போட்டிருக்க” என்ற அதீசன் மஞ்சரியை காண பயணிக்கலானான். 
அதீசனை காணாது எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்ற வேண்டுதலோடு வாகை ஐயர் சொன்னவைகைகளை செய்துகொண்டிருக்க,
“அம்மா… நான் வீட்டுக்கு போயிட்டு துணி மாத்திட்டு வரவா?” அர்ஜுன் வாகையின் முதுகை சுரண்ட,
“என்ன விளையாடுறியா, கம்முனு கிட” இன்னும் சற்று நேரத்தில் பூஜை ஆரம்பிக்க போகிறது இவன் என்ன பேசுகின்றான் என்ற கடுப்பில் வாகை கத்த
“என்னமா நீ… புரியாம பேசுற, இந்த வேட்டி… இடுப்புல நீக்கவே! மாட்டேங்குது கழண்டு கழண்டு விழுகுது” வீட்டிலிருந்து கோவிலுக்கு கிளம்பும் பொழுதே! ஆரம்பித்த பஞ்சாயத்துதான்  சிறுகுழந்தை போல் அடிக்கடி வாகையிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான்.  
“டேய் கண்ணா எப்பயும் அந்த இத்து போன ஜீன்ஸை தானே! போடுற? இன்னிக்கிதான் கல்யாண மாப்புள மாதிரி அழகா, லட்சணமா இருக்க, இன்னும் கொஞ்சம் நேரம்தான் டா இப்படியே! இரு டா..” வாகை எந்த நேரத்தில் சொன்னாளோ! கோவில் மணியை ஒரு குழந்தை அடிக்க ஆசைப்பட அந்த குழந்தையை ஒருவன் தூக்க குழந்தை மணியை அழகா அடித்திருந்தது.
“போ மா… வேட்டி அவுந்து ஏடா கூடமா ஏதாச்சும் ஆனா நான் பொறுப்பில்லை” என்ற அர்ஜுன் முகத்தை சுருக்கியவாறே சென்றான்.
“இவன் ஒருத்தன் நான் பூஜைக்கு தேவையான சாமான் எடுத்துக்கொடுப்பேனா? அதீ இன்னும் வரலையே!னு கவலை படுவேனா? இல்ல இவன் வேட்டிய பிடிச்சிக்கிட்டு திரிவேனா?”  வாகை இளைய மகனின் முதுகை செல்லமாக முறைத்து விட்டு வேலையில் கவனமானாள்.
பூஜையும் ஆரம்பித்திருக்க, இரு குடும்பமும் அம்மன் சன்னிதானத்தில் நின்றிருக்க, கோவிலுக்கு வந்த மக்கள் சிலரும் பூஜையில் கலந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு தட்டாக ஐயரின் கைக்கு கொடுக்கப் பட கடைசையாக பொன்தாலி இருக்கும் தட்டை கேக்க, அவர் தாலிய மட்டும்தான் கேட்டார் என்று எண்ணிய அர்ஜுன் சங்கரனின் கையிலிருந்த தட்டிலிருந்து பொன்தாலியை எடுத்துக் கொடுக்குக்க எண்ணி அதை கையில் எடுத்த வேளை கூட்ட நெரிசலில் யாரோ அவனின் வேட்டியை மிதித்து விட முன்னால் இருந்த பெண்ணின் கழுத்தில் பொன்தாலியியை நொடியில் போட்டுவிட்டவன் வேட்டி விழாதவாறு கைப்பற்றி இருந்தான்.
“ஈஸ்வரா…..”
“மகமாயி…”
“கடவுளே…” என்று அத்தனை பேரின் குரலையும் தாண்டி வேட்டி விழவில்லை என்ற சந்தோசம் அர்ஜுனின் முகத்தில் தாண்டவமாட, அவன் முதுகில் “பட் பட்”  என்று வாகையின் கைகள் நன்றாக சாத்தவும்
“ஐயோ…அம்மா… என்னமா பண்ணுற?” என்றவன் ஒருகையில் வேட்டியை பிடித்துக்கொண்டு மறுகையால் முதுகை நீவிவிட முயற்சி செய்யலானான்.
“என்ன காரியம் டா… பண்ணி வச்சிருக்க, என்று வாகை முறைத்துக்கொண்டிருக்க, அகல்விழி அழுது கரையலானாள்.
“எதுக்கு இப்போ இவ அழுகுறா?  எதுக்கு இப்போ அம்மா அடிச்சாங்க என்று அர்ஜுன் முழிக்கும் வேளை அவனை முறைத்துக்கொண்டு அவன் முன் நின்றிருந்தாள் மாலினி”
“ஹாய் மாலினி நீ எப்போ வந்த? கோவிலுக்கு எல்லாம் வருவியா?” என்றவனின் பார்வை அவளருகில் இருந்த கோதாண்டத்திடம் செல்ல
“யாரு இந்த சோடா புட்டி… உன் அப்பாவா” என்று சத்தமாக சிரிக்க, கோதாண்டம் அர்ஜுனை முறைக்க, வாகை இன்னும் இரண்டு முதுகில் வைத்திருந்தாள்.
“என்ன மம்மி” என்றவாறே அர்ஜுன் வாகையை முறைக்க,
“அடேய்.. இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சமாச்சும் புரியுதா?” என்று அனி அர்ஜுனின் தலையில் கொட்ட,
“பூஜை நடக்குது அது கூட தெரியாமத்தான் வந்தியா நீ” என்னமோ! அனியை கலாய்த்தது போல் சிரிக்க ஆரம்பித்தான்.
“வாங்கப்பா.. போலாம்” என்ற மாலினி செல்லப்போக
“ஏய் எங்க போற? கழுத்துல இருக்குறத எங்க வீட்டு பொருள்” என்றதும் கோதாண்டம் மகளின் கையை பிடித்து நிறுத்தி இருந்தார்.
“அர்ஜுன் கொஞ்சம் அமைதியாக இரு” என்ற சங்கரன் ஐயரை பார்த்து “சாமி இப்போ என்ன பண்ணுறது” என்று கேட்க,
“மூணு முடிச்சி போட்டாலும், பொன்தாலி பூட்டினாலும் தாலி தாலி தானே! நடந்த கல்யாணம் இல்லைனு ஆகிடுமா. பெரியவங்க நீங்கதான் சொல்லி புரிய வைக்கணும்” அர்ஜுன் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்வதை பார்த்தவாறே அவர் பேச
“அனி அவர் என்ன சொல்லுறாரு” அர்ஜுன் அனியின் காதை கடிக்கலானான்.
“உண்மையிலயே! இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா?” மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறு கேக்க, புரியாது முழித்தான் அர்ஜுன். அதில் அனி “அங்க கவனி. நீ என்ன பண்ணி வச்சிருக்கானு உனக்கு புரியும்” என்றதும் அர்ஜுன் கவனமானான்.
மங்கை அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள். அவள் நினைத்தது போல் நடந்து விட்டிருந்தது. மேடைக்கு வர முன்னதாகவே! திருமணம் நின்று விட்டிருந்தது. “ஐயோ… நான் என்ன பண்ணுவேன்.. என் பொண்ணு வாழ்க இப்படி ஆகிருச்சே! அர்ஜுனதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு எவ்வளவு ஆச பட்டிருப்பா… இப்படி ஆகிருச்சே! இப்போ அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்” மங்கை கதற, விழி அன்னையை கட்டிக்கொண்டு அழுது கரைந்தாள்.
“கொஞ்சம் பொறுமையாக இரு மங்கா…” என்ற செந்தில் “ஐயரே! தாலி கட்டினா மட்டும் கல்யாணம் நடந்திடுமா? ரெண்டு பேர் மனசும் ஒத்து போகணுமா வேணாமா? ஏதோ! மானத்தை காப்பாத்திக்க, பையன் கழுத்துல தாலிய போட்டுத்தான் கழட்டி கொடுக்க சொல்லுங்க” மனசாட்ச்சியே இல்லாமல் செந்தில் பேச
“அபச்சாரம் அபச்சாரம் என்ன பேசுறேல்? அம்மன் சன்னிதாணுதலே இப்படியொரு சம்பவம் நடந்திருக்குனா… அது அந்த அம்பாளோட முடிவு. அத மொதல்ல புரிஞ்சிக்கோங்கோ! தாலினா உங்களுக்கு விளையாட்டா போச்சா… கட்டுறதும், கழட்டுறதும் அவ்வளவு ஈஸியா? பெரியவா பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்கோ! பூஜை உங்க மூத்த மகனுக்கு தானே! அதையாவது செய்யுறேன்” கோபமாக தடை பட்ட பூஜையை தொடர அர்ஜுன் நெஞ்சில் கை வைத்தவாறு மாலினியை பார்க்க, அவள் முறைத்துக்கொண்டிருந்தாள்.
“முதல்ல பூஜை முடியட்டும் எதுவானாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்ற வாகை அதீசனின் வாழ்க்கையில் எந்த குழப்பமும் வந்து விடக் கூடாதே என்று கணவனிடம் கூற, சங்கரனுக்கு அதுதான் சரி என்று பட்டது.
மங்கையும் அகல்விழியும் அழுதவாறு இருக்க, செந்தில் யோசனையாக இருக்க, பூஜையை முடித்துக்கொண்டு ஏற்பாடு செய்திருந்த திருமணங்களை செய்து முடிக்குமாறு ஆனந்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கோதாண்டம் மற்றும் மாலினியை அழைத்துக்கொண்டு அனைவரும் சங்கரனின் வீட்டுக்கு கிளம்பி இருந்தனர். 
இந்த களோபரத்தில் அதீசனை அனைவரும் மறந்துதான் போயிருந்தனர்.

Advertisement