Advertisement

அத்தியாயம் 4
“ஆத்தா மகமாயி… யேன் வேண்டுதல் வீண் போகல. நல்ல சேதி சொல்லி இருக்க, பல வருஷமா ஒட்டும் இல்லாம உறவும் இல்லாம இருந்த யேன் பொண்ணு அவளே! கோபதாபத்தை விட்டு புட்டு பொண்ணு கேட்டு வராலாம்” பேச்சியம்மாளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
“ஏலே பொன்னுத்தாயி… என்னடி பண்ணிக்கிட்டு இருக்குறிய? இனிப்பு, காரம் எல்லாம் பண்ணிட்டியா?” மருமகளை விரட்டியவர்
“யப்பா… தங்கராசு… உன்ற அக்காளுக்கு தேன்மிட்டாய்ன்னா ரொம்ப பிடிக்கும்ல போய் கீழத்தெரு கடைல வாங்கி வாந்துடுல” என்று மகனை விரட்டியவர்
“மஞ்சு தயாராகிட்டாளா?” பேத்தியை தேடி பேச்சியம்மாளின் பார்வை தாவ
வாசலில் அமர்ந்தவாறே! வெத்தலையை  இடித்துக்கொண்டு அனைவரையும் விரட்டிக்கொண்டிருக்கும் மாமியாரின் குரல் சமையல்கட்டு பக்கம் வர பொன்னுத்தாயிக்கு உடம்பெல்லாம் உதற ஆரம்பித்திருந்தது.
“மஞ்சு… என்ன தாயி… இங்க வந்து நிக்குதிய? அங்கன உன்னோட அப்பத்தா… சாமியாடிகிட்டு இருக்கு… தெரியாதா… வெரசா வா… புள்ள… வந்து புடவைய கட்டிக்கோ” அன்னை பொன்னுத்தாயி சமையலறை வாசலிருந்தவாறே அழைக்க மஞ்சரி அசையவில்லை.
செய்யும் வேலையையும் விட்டு விட்டு மகளிடம் ஓடி வந்த பொன்னுத்தாயி “என்ன புள்ள… மாமனை கண்ணாலம் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?” அதிர்ச்சியாக நெஞ்சில் கைவைத்தவாறு கேக்க,
பின்னாடி துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்தவாறு வானை வெறித்துக்கொண்டிருந்தவளோ! “ப்ச்… இப்போவே! கல்யாணம் பண்ணி வைக்க இம்புட்டு பெரிய படிப்பெல்லாம் எதுக்கு படிக்க வச்சராம் உன் புருஷன்” விரக்தியாக கேட்டாள் மஞ்சரி.
“ஏய் என்ன புள்ள அப்பனையே! இப்படி பேசுத்திக?” மாமியாரின் காதில் விழுந்தால் அவ்வளவுதான் என்று சுற்றும்முற்றும் பார்த்தவாறு பொன்னுத்தாயி பேச
“நான் செம கோபத்துல இருக்கேன் ம்மா…” மஞ்சரி கண்களை உருட்டி அன்னையை முறைத்தாள்.
“யேன் பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்குனு யேன் புருஷன் நாலு பேர்கிட்ட சொல்லிக்க உன்ன படிக்க வச்சாக பாரு, அவர சொல்லணும் டி…” பொன்னுத்தாயி கோபமாக பேசியவள் உடனே “தாயி சொன்னா கேளு புள்ள… உன்ற அப்பா ஆசப்பட்டு கேட்டது இது ஒண்ணுதானே! தாயி… என்னக்கி இருந்தாலும் கண்ணாலம் பண்ணித்தானே! ஆகணும் புள்ள. உன்ற மாமன தானே! கட்டிக்க போற? அயித்த உன்ன ராசாத்தி மாதிரி பாத்துகுவாக. அவங்களுக்கு என்ன பொண்ணா இருக்கு” கெஞ்சியவள் மகளை கொஞ்ச ஆரம்பித்தாள்.   
அன்னையின் அப்பாவியான முகம் பார்த்து மனம் இளகியவள் “சரி வரேன். அழுவாத. அப்பத்தா உன்னைத்தான் வையும். மூஞ்ச துடச்சிக்க” என்றவள் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
திடுக்கிட்டு விழித்தவள் தினமும் காணும் கெட்ட கனவுடனையே! அன்றும் விழிக்க, கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டவள் கட்டிலை விட்டு இறங்கி போர்வையை மடித்து விட்டு சமயலறைக்குள் செல்ல, அன்னை சமையலில் ஈடுபட்டிருந்தாள். 
பேச்சியம்மாள் சுந்தரேசன் தம்பதியர்களுக்கு இரண்டு பிள்ளைகள். தங்கராசு, வைஜயந்தி. பக்கத்து ஊரில் உள்ள ஒன்னு விட்ட அண்ணன் குடும்பத்தில்தான் வைஜெயந்தியை கட்டிக்கொடுத்திருந்தந்தார் சுந்தரேசன்.
ஊரு திருவிழாவுக்கு போன நேரம் அங்காளி, பங்காளிகளுக்குள் பேச்சு கைகலப்பாகி, சுந்தரேசன் சம்பவ இடத்திலையே! உயிர் பிரிந்தார். அந்த சம்பவத்தில் வைஜயந்தியின் கணவனின் காலை யாரோ வெட்டி இருக்க, வெட்டியது தங்கராசு என்று தங்கராசை வெட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தனர் வைஜயந்தியின் கணவனின் சகோதரர்கள்.
எப்படியோ! அன்னையையும் கூட்டிக்கொண்டு, இறந்த தந்தையின் உடலையும் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பி இருந்தார் தங்கராசு.
அன்றிலிருந்து சொந்த அக்கா குடும்பத்தோடு ஜென்மப்பகை என்றானது.
இறந்தது கணவனே! எனறாலும் பெற்ற வயிறு கேட்கவில்லை. தான் கண் மூடும் முன் வைஜயந்தியை பார்க்க வேண்டும் என்று பேச்சியம்மா வேண்டாத கடவுளில்லை.
தங்கராசுக்காக பேச்சியம்மாள் பார்த்த பெண்தான் பொன்னுத்தாயி. தங்கராசு, பொன்னுத்தாயிக்கு பிறந்தவள்தான் வாரக மஞ்சரி.
வாரகி மாநிறம்தான். சாதாரண பெண்களை விடவும் சற்று உயரம். “ஆத்தி… என் புருஷன் கணக்கா வளந்து நிக்குறா.. என் பேத்தி. உன்ன  கட்டிக்க எந்த மவராசனுக்கு கொடுத்து வச்சிருக்கோ” பேச்சியம்மா தினமும் மஞ்சரியை பார்த்து கூறும் வார்த்தை இது. எந்த வித ஒப்பனையும் இல்லாத கிராமிய அழகுதான். 
தங்கராசு பால் வியாபாரத்தோடு, விவசாயமும் பார்ப்பவர். படிப்பறிவில்லாததால்தான், எதற்கெடுத்தாலும் சண்டை, தொழில் செய்வதிலும் பிரச்சினை என்று மகளை படிக்க வைத்திருந்தார்.
மஞ்சரியும் இளங்கலை பட்டம் முடித்ததோடு, பிஎட் முடித்திருந்தமையால் ஆசையாசையாக ஊர் பாடசாலையிலையே! ஆசிரியையாக பணிபுரியலாம் என்று எண்ணி இருக்க, அவசர அவசரமாக அவளுக்கு திருமணத்தை செய்து அத்தை வைஜயந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள்.
மஞ்சரியின் வாழ்க்கையில் எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது போல்தான் நடந்தேறி விட்டது. கல்யாணம் முதல் விவாகரத்துவரை. மின்னல் பட்டது போல் அவள் வாழ்க்கையும் கருகிதான் விட்டது.  
நடந்து முடிந்ததை நினைக்கக் கூடாதென்று எவ்வளவுதான் நினைத்தாலும், அப்பத்தாவின் புலம்பல்களும், கம்பீரமாக ஊருக்குள் நடமாடும் தந்தை சதா அவளைப் பார்க்கும் பொழுது தோளில் இருக்கும் துண்டால் வாயை பொத்திக்கொண்டு உடல் குலுங்குவதை கட்டுப்படுத்துவதை காணக் காண அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொன்னுத்தாயி ஒருத்திதான் எதுவும் பேசாமல் மகள் விருப்பப்படியே இனிமேல் எல்லாம் நடக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கிறாள். மகள் முன்னால் மட்டும் அழுவதில்லை. அழுது அவளை மேலும் ஒடுக்கி விடக்கூடாது என்ற மன உறுதியோடு இருக்கிறாள்.
“வா மஞ்சு… காபி சாப்பிடுறியா?” என்றவாறே பொன்னுத்தாயி காபியை கொடுக்க,
“வேண்டாம்மா…” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் முணுக்கென்று எட்டிப்பார்த்தது. அதை அன்னைக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டவள் குளிக்க சென்றாள்.
பெருமூச்சு விட்டுக்கொண்ட பொன்னுத்தாயி “எப்படி இருந்த என் பொண்ண ஒரு வாய் காபி கூட குடிக்க விடாதபடி பண்ணிபுட்டாளுகளே நாசமா போறவளுக, அவ தலைல இடி விழ,  விளங்குமா அவ குடும்பம்” வாய்க்குள்ளேயே வசை பாடியவாறு சத்தமில்லாமல் எந்நாளும் போல் சாபங்களை அள்ளித்தெளிக்கலானாள்.
குளித்து விட்டு வந்த வாரகி கண்ணை உறுத்தாத நிறத்தில் புடவை அணிந்து பாடசாலைக்கு செல்ல தயாராகி வர அவளுக்கு உணவை ஊட்டி விட்டாள் பொன்னுத்தாயி. இல்லையென்றால் அவள் சரியாக சாப்பிட மாட்டாள் என்ற பயம் அவளுக்கு. மதியத்துக்கு சாப்பாட்டைக் கட்டிக்கொடுத்தவளுக்கு மகளை பார்க்க பார்க்க மனதுக்கு வலித்தது.
பாடசாலைக்கு செல்கிறாள். சாதாரண புடவை. தலையில் பூ இல்லை. அது கூட பரவாயில்லல. பொட்டு கூட வைக்காமல் “புருஷனை விவாகரத்துதானே! பண்ணி இருக்கா. அவன் ஒண்ணும் செத்து தொலையாலயே! செத்து தொலஞ்சாலாவது மஞ்சரிக்கு இன்னொரு கண்ணாலத்த பண்ணலாம். அவனும் பண்ணாம இவளையும் பண்ண விடாம இருக்கான் படுபாவி. நாசமா போறவன்” மருமகனாக இருந்தவனை வசைபாடியவாறே மகளை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே! வந்தாள் பொன்னுத்தாயி.
“மஞ்சு.. ஸ்கூலுக்கு போய்ட்டாளா பொன்னு…” பேச்சியம்மாள் அறையிலிருந்தவாறே மெதுவாக கேக்க
“ஆமாங்க அத்த.. இப்போதான் போனாவ…. சுடுதண்ணி விளாவி வச்சிருக்கேன், வாங்க வந்து குளிச்சிட்டு சாப்பிடுங்க, இப்படி அறையிலையே! அடஞ்சி கெடந்தா என்ன அர்த்தம்”
“மனசு கேக்கலையே! பொன்னு… இப்படி பண்ணி புட்டாளே! யேன் வயித்துல பொறந்தவ இப்படியெல்லாம் பண்ணுவாளேனு நான் நெனச்சி கூட பாகலேயே! ஆத்தா மகமாயி… என்னாலதான் என் பேத்தி வாழ்க நாசமா போச்சு. நீதான் அவளுக்கு நல்ல வழிய காட்டணும் தாயி…” பேச்சியம்மா வழமையாக புலம்பலை ஆரம்பித்திருக்க,
“என்ன அத்த… திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? மஞ்சு இதெல்லாம் கேட்டா மனசு கஷ்டப்படுவானுதானே! எதையும் பேச வேணாம்னு சொல்லுறேன். அதையே! பேசுறிக, நீங்க இப்படி ஒப்பாரி வச்சா மட்டும் நடந்தது இல்லனு ஆகிடுமா என்ன? வாங்க வந்து குளிச்சிட்டு சாப்பிடுங்க” மாமியாரை அதட்டினாள் பொன்னுத்தாயி.
மாமியாருக்கு நடுங்கிக்கொண்டிருந்த மருமகளா இது என்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்குத்தான் மாறிப்போய் இருந்தாள் பொன்னுத்தாயி.
“என்னல… என்னையே! அதட்டுறியா? அவ்வளவு பயம் விட்டு போச்சா உனக்கு. இருடி… என் மவன் வரட்டும் சொல்லுதேன்” மருமகள் அதட்டவும் மாமியார் அவதாரம் எடுத்திருந்த பேச்சியம்மாள் குளிக்க செல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு பொன்னுத்தாயி வெளியே சென்ற கணவருக்காக சாப்பிடாமல் காத்திருக்கலானாள்.  
வீட்டிலிருந்த்து பாடசாலைக்கு அரைகிலோ மீட்டர் கூட இல்லை. தங்கராசு வண்டி வாங்கித் தரேன், அல்லது வண்டி ஏற்பாடாவது பண்ணித் தரேன் என்று சொல்லியும் கேட்காமல் வாரகி நடந்தேதான் பாடசாலைக்கு போவாள், நடந்தேதான் வருவாள்.
முதுகுக்குப்பின்னால் அவளை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்று அவளுக்கு தெரியாமல் இல்லை. அதையெல்லாம் கண்டுகொண்டால் ஊரிலுள்ள குழந்தைகளுக்கு படித்துக் கொடுக்க, முடியுமா? பொருட்படுத்தாமல்தான் போய் வருகிறாள்.
அதற்கும் வேட்டு வைக்க எண்ணி அவள் மாஜி கணவன் வேலை பார்த்திருக்கின்றான் என்பதைத்தான் அவளால் ஜீரணிக்கவே! முடியவில்லை. நல்லவேளை பள்ளி முதல்வர் தலையிட்டு அவளுக்காக பேசியதால் அவளால் நிம்மதியாக வேலைபார்க்க முடிந்தது.
“பள்ளி முதல்வர் ஒரு பெண் என்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுவே! ஆணாக இருந்திருந்தால், வயதானவர் என்றும் பாராமல் அவளோடு சம்பந்தப்படுத்தி அசிங்கமாக பேசி அவரையும் அசிங்கப்படுத்த தயங்கி இருக்க மாட்டான். அவன் பேச்சை கேட்டுக்கொண்டு ஆடும் ஊர்காரங்களை சொல்ல வேண்டும்” மனதில் உள்ள ரணம் அவளை விடாது துரத்த ஏதேதோ சிந்தனையினூடாகவே! பாடசாலையை வந்தடைந்தவள் மாணவர்களின் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்து புன்னகை முகமாகவே! முதல்வரின் அறையை அடைந்தாள்.
“குட் மோர்னிங் மஞ்சரி” முதல்வர் அமுதவேணி மஞ்சரிக்கு காலை வணக்கத்தை வைக்க,
“குட் மோர்னிங் மேம்” மஞ்சரியும் பதில் சொன்னாள்.
“காலையிலையே! ஒரு குட் நியூஸ் இருக்கு. நம்ம பாடசாலை கட்டிடம் எல்லாம் ரொம்ப பழசு எப்பொவேனாலும் இடிஞ்சி விழலாம்னு மனு கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு பதில் வந்திருக்கு”
“என்ன சொல்லுறீங்க மேம்”
“அடுத்த வாரம் கல்வித்துறையிலிருந்து ஆட்கள் வாரங்களாம். குறைநிறைகளை பார்த்துட்டுப்போய் முதலமைச்சர் கிட்ட பேசுவாங்கனு நினைக்கிறேன்”
“என்ன மேம் நீங்க, இலெக்சன் வருதுன்னா… இப்படி செய்யிறதுதானே! இதுக்கு போய் சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கீங்க” வாரகி சிரிக்க,
“எல்லாம் ஒரு நம்பிக்கைதான் மஞ்சரி” என்றார் அவர்.
“முதல்ல வரங்களானு பார்க்கலாம். அப்பொறம் கட்டிடம் கட்டுவாங்களா? இல்ல, ஓட்டு வாங்குறாங்களானு தெரியும்” என்றவள் அங்கிருந்த புத்தகத்தில் குனிந்து கையப்பமிட்டுவிட்டு தனது வகுப்பறையை நோக்கி நடந்தாள். 
கிராமங்களில் அரச பாடசாலைகளின் நிலைமை இவ்வாறு இருக்க, நமது ஹை லெவல் காலேஜில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
அந்த பாடவேளை நிறைவடைந்ததன் அறிகுறியாக பெல் ஒலிக்கப்பட இடைவேளை ஆரம்பமானதும் யாரும் அமர்ந்திருந்த இடத்தை விட்டு அசையாது, தங்களது செல்போன்களைத்தான் உயிர்பித்தனர்.
படிக்கு கொடுக்கும் பொழுது பேஸ்புக்கு, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சோசியல் மீடியா வழியாக உலகத்தை சுத்திப்பார்த்து விட்டு எக்ஸாமில் கோட்டை விட வேண்டியது. மற்ற காலேஜுகளில் அறியார் வைத்தால் மாணவர்களை திட்டுவார்கள், பெற்றோர்களை அழைத்து கண்டிக்கும்படி சொல்வார்கள். இங்கே எல்லாம் உல்டாவாக இருந்தது.
பெற்றோர்கள் வந்து சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களை சந்தித்து தனது மகன் அல்லது மகள் ஏன் உங்களது பாடத்தில் மட்டும் மதிப்பெண்கள் குறைவு? ஒழுங்காக படித்துக் கொடுக்க வில்லையா? என்று கேள்வி கேக்க, அவர்கள் முழிபிதுங்கி நிக்கலாயினர்.
“அந்த வகுப்புல அம்பதுக்கும் மேட்பட்டவங்க இருக்காங்க, உங்க பையனோட சேர்த்து பத்து பேர்தான் ஒழுங்கா படிக்கல” ஒரு விரிவுரையாளர் சொல்ல,
“என் சப்ஜக்ட்ல உங்க பையனோடு சேர்த்து மொத்தம் பதினஞ்சு பேர் குறைஞ்ச மார்க்ஸ் எடுத்திருக்காங்க” என்று இன்னொரு விரிவுரையாளர் சொல்ல
பணத்தின் வாடையை வீசி, பணத்தால் பேசி பழக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முனையாமல் “அதெல்லாம் தெரியாது எங்க பசங்க பாஸ் ஆகணும். இல்ல உங்கள வேலைய விட்டு தூக்கிடுவோம்” என்று மிரட்டி விட்டு சென்றிருந்தனர்.
“பாஸ் ஆகா முதல்ல இவனுங்க படிக்கணுமே!” விரிவுரையாளர்கள் முதல்வரிடம் சென்று முறையிட, அலைபேசிக்கு காலேஜில் தடை விதித்தாலும் திருட்டுத்தனமாக கொண்டு வந்து பாவிப்பதை தடுக்க முடியவில்லை.
“அடுத்து பைன்னும் போட்டு பார்த்தாச்சு, எவ்வளவுதான் பைன் போட்டாலும், அப்பன் காசுதானேனு பணம் கட்டிட்டு இவனுங்க பாட்டுக்கு போன நோண்டுறங்கு” முதலமைச்சர் ஏற்பாடு செய்துகொடுத்த மூளைசாலியிடம் முதல்வர் முறையிட மூளைசாலி வச்சான் ஆப்பு.
காலேஜ் ஆரம்பமான நேரம் முதல் இடைவேளைவரை ஜமார் ஆனில் இருக்கும். இடைவேளையில் மட்டும் ஜமார் அணைக்கப்படும். திரும்ப இடைவேளை முடிவடைந்ததிலிருந்து காலேஜ் முடியும்வரை ஜமார் ஆனில் இருக்கும். காலும் பண்ண முடியாது. நெட்டும் பாவிக்க முடியாதபடி தடை செய்ய துடித்துதான் போனார்கள் இளசுகள்.
“சார்… அவசரமா போன் பண்ணனும்” என்று ஒவ்வொருவராக காரணம் சொல்லிக்கொண்டு வரிசைக்கட்ட, முதல்வரின் அறையில் ஒரு தொலைபேசியை வைத்து ஒரு அழைப்புக்கு,   நிமிடத்துக்கு இவ்வளவு காசு என்று போர்ட் வேறு மாட்டி வைக்க, அந்த பக்கம் எவனும் தலை வைத்துக்கூட படுக்கவில்லை.
“மனுசனா அவன்? ஒரு நிமிசத்துக்கு ஆயிரம் ரூபானு சொல்லுறான்? அவன் அப்பன் ஊட்டு காசா?” முதல்வரை வாய்க்கு வந்தபடி திட்ட,
“சார்… எங்க போனையும்தான் ஜாமர் போட்டு ப்ளக் பண்ணிடீங்க, நாங்களும் அவசரத்துக்கு போன் பண்ணனும்னா ஆயிரம் ரூபா கொடுக்கணுமா?” சில பெண் விரிவுரையாளர்கள் கொஞ்சலாக கேட்க,
“இன்கமிங் ப்ரீ அவுட்கோயின்கு மட்டும்தான் காசு… அதனால வீட்டுல உள்ளவங்களுக்கு தேவைன்னா மட்டும் போன் பண்ண சொல்லுங்க. இப்போ போய் கிளாசை எடண்ட் பண்ணுறீங்களா?”அமைதியாக சொல்பவர் “வந்துடுவாளுங்க மினிக்கிகிட்டு சாரு, மோருனு… யாருகிட்ட? கட்ட பிரம்மச்சாரி நான் என்னையே! வளைக்க பாக்குறீங்களா? பாலமேடு லம்போதரன் ஒண்ணுத்துக்கும் அசரமாட்டான். காரியத்துல மட்டும்தான் கண்ணா இருப்பான்” தற்பெருமையும் பாடிக்கொள்வார்.
இடைவேளை என்பதால் ஜமாரை அனைத்திருக்க, அனைவரும் பசியை மறந்து அலைபேசியில் மூழ்கி இருந்தனர். 
 “டேய் என்னங்கடா… இது போன நோண்டிகிட்டு இருந்தா? யாருக்குமே! பசிக்கலயா? வாடா கேன்டீன் போகலாம்” கிருஷ்ணா நண்பர்களை அழைக்க அவன் முன் வந்து நின்றாள் மாலினி.
“வந்துட்டேன் கிருஷ்ணா… வா போலாம்” என்றவளின் முகம் புன்னகையை தத்தெடுத்திருக்க,
பல்லைக் கடித்தவாறே அவள் புறம் திரும்பிய க்ரிஷ்ணாவோ! “உனக்கு வெக்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே! இல்லையா?” என்று கேட்க வகுப்பறை மொத்தமும் “கொல்” என்று சிரித்தது.
A பிரிவைக் கடந்துதான் B பிரிவிலுள்ளவர்கள் கேன்டீனுக்கு செல்ல வேண்டும். அவ்வழியாக வந்த கிங் கேங்குற்கும் கிருஷ்ணாவின் பேச்சு காதில் விழ, மாலினியியை இளக்காரமாக பார்த்தவாறு விழி கடந்து செல்ல, மற்றவர்களும் சிரித்தவாறே நடந்தனர்.
ஆனால் மாலினிக்கு அந்த அவமானமெல்லாம் பொருட்டே இல்லை என்பது போல் “பசிக்குதுனு  சொன்னியே! கிருஷ்ணா பெல் அடிச்சிடுவாங்க வா போலாம்” என்று விட்டு கேண்டீனை நோக்கி நடக்க,
“இவள் என்ன பொண்ணா? இரும்பு மனிசியா? எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா?” என்று தனுஷ் முணுமுணுக்க, மற்ற மாணவர்களும் மாலினி கிருஷ்ணாவின் மேல் வைத்திருக்கும் காதலை வியந்துதான் பார்த்தனர்.
ஆனால் க்ரிஷ்ணாவோ! மாலினியை பொருட்படுத்தாது அங்கேயே அமர்ந்து அலைபேசியை நோண்ட ஆரம்பித்திருக்க, அவனுக்கென்று சேரும் பெண்கள் கூட்டம் அவனை சூழ்ந்துக்கொண்டு கதையடிக்க, தனுஷ் நண்பனை முறைக்க முடியாமல் பார்த்திருந்தான்.
“அங்க பாரு நம்ம டானோட குயின் மட்டும் தனியா வாரா..” விகாஷ் சொல்ல,
“ஏய் லூசு… கிங்குதான் குயின் இருக்க முடியும் டானுக்கு முடியாது” என்ற விழி அர்ஜுனின் கையை கட்டிக்கொள்ள….
“அவனவனுக்கு அவனவன் கேர்ள்பிரென்ட் குயின்தான்… அதான் அப்படி சொன்னேன்” என்று விகாஷ் விளக்கமளிக்க…
“நீங்க இங்கயே இருங்க… அன்னக்கி பேசினத்துக்கு குயின கொஞ்சம் கலாச்சிட்டு வரேன்” என்ற அர்ஜுன் மாலினியை நோக்கி விரைந்திருந்தான்.
“ஹாய் மாலினி… உனக்கு வெக்கம், மானம், சூடு, சொரணை இது எதுவுமே! இல்லையா?” கிருஷ்ணா கேட்ட அதே! கேள்விதான் கிருஷ்ணா கோபமாக கேட்டிருக்க அர்ஜுன் சிரித்துக்கொண்டு கேட்டதில் அவன் கிண்டலடிக்கிறான் என்று புரிய அவனை நன்றாக முறைத்த மாலினி பதில் சொல்லாது அவனை கடந்து போனாள்.   
மீண்டும் அவள் முன்னால் வந்து நின்றவன் “அது சரி அது எல்லாம் இருந்தா நீ எதுக்கு இஷ்டமே! இல்லாத ஒருத்தன் பின்னாடி லோலோனு நாக்குட்டி மாதிரி அலைவ” என்று அவள் கண்பார்த்து கேக்க
அவனை நேருக்கு நேராக பார்த்தவள் “நான் உன்ன பஞ்சாயத்து பண்ண சொல்லி கேட்டேனா? கேட்டேனா? சொல்லு கேட்டேனா?”
“இல்லையே!” வெக்கமே! இல்லமால் இளித்துக்கொண்டு பதில் சொன்னான் அர்ஜுன். 
“நம்மள இங்க இருக்க சொல்லிட்டு அந்த மாலினிகிட்ட அஜ்ஜு அப்படி என்ன பேசிகிட்டு இருக்கான்” எரிச்சலாக விழி கேக்க
“க்ரிஷ்னாகிட்ட வாங்கினது பத்தாதுன்னு அர்ஜூன்கிட்டயும் வாங்கிகிட்டு இருக்கா… கிருஷ்ணா கோபமா சொன்னதை இவன் சிரிச்சிகிட்டே சொல்லுறான்” என்று விகாஷ் சொல்ல
“நாமளும் எண்டரி கொடுக்க வேணாமா?” விழி ஆர்வமாக 
“ஒத்தக்கி ஒத்த நின்னா பிரச்சினை இல்ல. மூணு பேருக்கு ஒருத்தினா கலாட்டானு பிரச்சினையை பெருசாக்கி அந்த வழுக்க மண்ட முன்னாடி போய் நிக்க வேண்டி இருக்கும். கொஞ்சம் பொறுமா.. அர்ஜுன் காரியத்தை கர்சித்தமா முடிச்சிட்டு வருவான்” நண்பனை நன்கு அறிந்தவனாக விகாஷ் சொல்ல திருப்தியாக உணர்ந்தாள் விழி.
“உனக்குத்தான் வெக்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்ல. நான் கூப்டாமலையே! பஞ்சாயத்துப் பண்ண வந்திருக்க, க்ரிஷ்னாகிட்ட மோத முடியாம என் கிட்ட மோத முடிவெடுத்திருக்கியா?” கிண்டலாக மாலினி கேட்க,
சத்தமாக சிரித்தவன் “நல்லதுக்கே! காலாமில்லப்பா… எதோ தெரிஞ்ச பொண்ணாச்சே.. விருப்பமில்லாதவன் பின்னாடி போறாளே! புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்தலாமேன்னு பார்த்தேன்” நம்பியார் மாதிரி கையை தேய்த்தவாறு அர்ஜுன் அவள் வழியை மறைத்துக்கொண்டு நின்றான்.  
“இதோடா… ஜெர்ரிகு தும்மல் வரும்னு டாம் பேப்பர் சால்ட் போடாம சாப்பிட்ட எபிசோடா இல்ல இருக்கு. அந்த ஈர வெங்காயமெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ போய் உன் பின்னாடி அலையுறவள பாரு போ.. போ.. வழிய விடு காத்து வரட்டும்”
அவள் என்ன சொன்னால் என்று ஒரு நொடி யோசித்தவன் ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையைத்தான் இப்படி சொல்கிறாள் என்று புரிய உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு
“அந்த பச்சை மொளகா எல்லாம் எப்படி கரெக்ட் பண்ணனும்னு எங்களுக்கு தெரியும். நீ ஒன்னும் கிளாஸ் எடுக்க வேணாம். பார்த்து பத்திரமா இருந்துகமா… எனக்கென்னமோ! டான் கூடிய சீக்கிரம் கை நீட்டிடுவான்னு நினைக்கிறேன். அப்பாவும் எதுவுமே! நடக்காக மாதிரி இருந்துடுவியான்னு பார்க்கலாம்” சவால் விடுவதை போல் அர்ஜுன் பேச
அர்ஜுன் எதோ திட்டத்தோடு பேசுவதாக மாலனிக்கு தோன்ற “டான் அடிச்சாலும் ஒன்னும் பிரச்சினை இல்ல. என்ன கல்யாணம் பண்ணிக்க போறது டான் தானே!. நீ இடத்தை காலி பண்ணு” என்றவள் அவன் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளி விட பார்க்க
அவள் தொடமுன் சுதாரித்து விலகியவன் “அப்படியா?…. வாழ்த்துக்கள்…” நக்கலாக சிரித்தவாறே விழியை நோக்கி நடந்தான்.
“என்ன சொல்லுறா? அந்த வாரணம் ஆயிரம்” விழி எரிச்சலாக கேக்க
“பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கா” என்ற அர்ஜூனால் சிரிப்பை கட்டுப்படுத்தவே! முடியவில்லை.
“ஏன் டா.. இப்படி சிரிக்கிற?” விகாஷ் புரியாது கேக்க…
“இல்ல… ஐடியல் கபால்னு காலேஜ் முழுக்க பேச்சு அடிபடுதே! அப்படி என்ன லவ்வு நாங்க பார்க்காத லவ்வுன்னு பேசி பார்த்தேன். சினிமாட்டிக்கா ஒன்னு சொன்னா… டான் அடிச்சாலும் பரவால்ல அவன்தான் என்ன கல்யாணம் பண்ண போறான்” மாலினி சொன்னது போலவே! சொல்லிய அர்ஜுன் விழுந்து விழுந்து சிரிக்க,
“இதுல என்ன டா சிரிக்க இருக்கு?” விழியும் கேள்வி எழுப்ப?
“முதல்ல டான் மாலினியை கல்யாணம் பண்ணணும்ல” காலரை இழுத்து விட்டான் அர்ஜுன்.
“என்ன டா சொல்லுற?” விகாஷ் கேக்க,
“எல்லாம் விசாரிச்சிட்டேன். டான் இந்த ஜென்மத்துல மாலினியை கல்யாணம் பண்ண… நோ சான்ஸ்”
“பாவம் டா.. மாலினி” முதன் முறையாக மாலினிக்காக வருந்தினாள் விழி.

Advertisement