Advertisement

அத்தியாயம் 26
“என்னங்க இங்க கொஞ்சம் வாங்களேன். இந்த நியூச பாத்தீங்களா?” என்று வாகை அழைக்க
“எதுக்கு இப்போ கத்துற?” என்றவாறு மனைவியின் அருகில் வந்தமர்ந்தார் சங்கரன்.
“தற்கொலைக்கு தூண்டியதா பத்து வருஷம் ஜெயிலுக்கு போன லேடிய இப்போ கொலைக்கு உடைந்தையா இருந்த குற்றத்துக்காக பதினாலு வருஷம் உள்ள தூக்கி வச்சிட்டாங்களாம்” வாகை சந்தோசமாக சொல்ல
“அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு சந்தோஷப்படுற?” ஒருவேளை மஞ்சரிக்கு ஏற்கனவே! திருமணமான விஷயம் இவளுக்கு தெரியுமோ! என்று சங்கரன் கேக்க
“சந்தோச படாம பின்ன கவலை படுவாங்களா? இந்தமாதிரி ஆட்களை தூக்குல போடணும்” என்று வாகை பேச்சை முடித்துக் கொள்ள அதீசனும் மஞ்சரியும் உள்ளே! நுழைந்தனர்.
“வா.. அதீ.. ஸ்கூல் ப்ரொஜெக்ட் முடிஞ்சி அந்த சக்ஸஸ் பார்ட்டிக்கு நீ இல்ல. புது ப்ரொஜெக்ட் வேலைகளையும் உன் பொண்டாட்டி ஊருல இருந்துதான் பாத்துகிட்டு இருந்த, இப்போ என்ன திடிரென்று வீட்டுக்கு வந்திருக்க” என்று சங்கரன் கேக்க
அதீ பதில் சொல்லும் முன் “நாலு மாசம் கழிச்சு என் பையன் பொண்டாட்டியோட வீட்டுக்கு வந்திருக்கான். அவன் நல்லா இருக்கானான்னு கேக்குறத விட்டுட்டு என்ன நீங்க இப்படி எதிரி கூட பேசுற மாதிரி பேசுறீங்க?” வாகை பொரிய
“சரி சரி சண்டை போடாதீங்க… வா வாராகி நாம உள்ள போலாம்” என்று அதீ வாராகியை அழைத்துக்கொண்டு உள்ளே! சென்று விட
“கொஞ்சம் கூட பொறுப்பிருக்கானா அவனுக்கு, அவன்தானே! இந்த வீட்டுக்கு மூத்த பையன். அவன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிகிட்டான். அனிக்கு அப்படி பண்ணிட முடியாதே! நாலஞ்சு வரன் வந்திருக்கு அத பத்தி பேசலாம்னு கூப்பிட்டா அவன் போனே! எடுக்க மாட்டேங்குறான். அதான் கடுப்புல கேட்டுட்டேன். உனக்கும் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்னு என்கிற அக்கறை இல்ல” என்று சங்கரன் சொல்ல வாகைக்கு கண்ணீரே வந்து விட்டது.
“எனக்கு அக்கறை இல்லையா? தினமும் நான் அவளுக்காகத்தான் வேண்டிக்கிறேன்” என்று புலம்ப ஆரம்பிக்க
“அப்போ எனக்காக இல்லையா? டூ பேட் மம்மி” என்றவாறு வந்த அர்ஜுன் அன்னையை கட்டிக்கொள்ள
“எல்லாருக்காகவும்தான் வேண்டிக்கிறேன். நம்ம வீட்டுல அவளுக்கு மட்டும்தான் கல்யாணமாகல அதான் ஸ்பெஷலா வேண்டிக்கிறேன்” என்று சொல்ல
கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்த மனைவி இளைய மகனைக் கண்டதும் சட்டென்று முகம் சாந்தமானத்தைக் கண்ட சங்கரன் ஒரண்ட  இழுக்கலானார். “உன் மருமகளை பாத்தியா? முருங்கைக்கா மாதிரி இருந்தா… என் மகன் சம்பாத்தியத்துல நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு உடம்ப ஏத்தி வச்சிருக்கா…”
“என்ன பேசுறீங்க? உங்க மகன் மட்டும்தான் சம்பாதிக்கிறானா? என் மருமக்களும்தான் சம்மாபதிக்கிறா.. ஏன் அவ அவனுக்கு சோறு போட மாட்டானா? அப்போ நீங்க எனக்கு சோறு போடுறத சொல்லிக் காட்டுறீங்களா? இல்ல இல்ல இத்தனை வருஷமா நான் வீட்டுல உக்காந்து சாப்பிடுறேன்னு குத்திக்காட்டுறீங்க” என்று மீண்டும் கண்ணைக் கசக்க,
வாகையின் நடிப்பைப் பார்த்து சங்கரன் அசந்துதான் போனார். மஞ்சரியை எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று பேச்சை வாகையின் பக்கம் திசை திருப்பி இருப்பது நன்றாக புரிந்தது.
“ஆமா.. ஆ..ஊ ..னா உனக்கு நான் சோறு போடுறேன்னு பேசுற, என் சொத்து மதிப்பு என்ன? உன் சொத்து மதிப்பு என்ன? உன் கிட்ட வேல பாக்குற சாதாரண வேலைக்காரன்தானே! நான்” என்றார் சங்கரன். 
“என்ன டா உங்க டேடி இப்படியெல்லாம் பேச மாட்டாரே! இன்னக்கி என்ன ஆச்சு இவருக்கு” என்று வாகை அர்ஜுனின் காதைக் கடிக்க,
“ஓவர்டேக்ட்டிங் பண்ணதேனு சொன்னா கேட்டியா? சமாளி…”
“என்னங்கங்க நீங்க… என் சொத்து உன் சொத்துனு பிரிச்சி பேசுறீங்க? நம்ம சொத்துங்க, நீங்களே! இப்படி பேசினா.. நாளைக்கு அதீயும், அர்ஜுனும் சொத்தை பிரிச்சி கொடுங்கன்னு சண்டை போட மாட்டாங்களா?” சிரித்த முகமாக பேச
“அடிப்பாவி அவனுங்க சண்டை போடலைனாலும், நீ சொல்லி கொடுப்ப போல இருக்கே! ஒரு நாடக கம்பனி ஆரம்பிச்சிருந்தா இந்நேரத்துக்கு இவ எங்கயோ போய் இருப்பா..நல்லவேள உலகம் தப்பிச்சது” முணுமுணுத்தவர் “இப்போ புரியுதுடி உங்க அப்பா உன்ன ஏன் என் தலைல கட்டினார்னு… போ.. போய் டின்னருக்கு ஏற்பாடு பண்ணு” என்றவர் முறைத்தவாறே உள்ளே செல்ல
“ஏன் டா அஜ்ஜு உன் டேடி என்ன சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசிட்டு போறாரு? காத்து கருப்பு அடிச்சிருச்சா..”
“யாருக்கு தெரியும். நான் போய் ஷாப்பிங் பண்ண போன என் பொண்டாட்டியையும் அனியையும் கூட்டிட்டு வரேன்” என்று நகர்ந்தான் அர்ஜுன்.
“பாவம் ரெண்டு பையனும் திடீர் கல்யாணம் பண்ணதுல என் புருஷன் மூள குழம்பி போச்சு” கடவுளை வேண்டியவாறு வாகையும் உள்ளே சென்றாள்.
ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு மாலினியும், அனியும் ஐஸ் கிரீம் பாலருக்கும் நுழைய அங்கே! ஆனந்த் ஒரு பெண்ணோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“ஹேய் மாலினி அங்க பாரேன் அது நம்ம ஆனந்த் இல்ல”
“நம்ம ஆனந்தா? அது யாரு?” மாலினிக்கு ஆனந்தத்தை தெரியவில்லை. இந்த நான்கு மாதங்களில் அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் அவளுக்கு அமைந்திருக்கவில்லை.
“சரி நீ போய் நமக்கு ஐஸ் கிரீம் ஆடர் பண்ணு நான் போய் பேசிட்டு வரேன்” என்ற அனி மாலினியின் பதிலையும் எதிர்பார்க்காமல் ஆனந்தின் முன்னால் சென்று நின்றவள் “ஹாய் ஆனந்த்” என்று சொல்ல
அவளை அங்கு எதிர்பார்காதவனோ! “ஹாய்” என்று மாத்திரம் கூறி மேடம் என்ற வார்த்தையை தவிர்த்திருந்தான். அவனை பொறுத்தவரையில் அவன் பெர்சனல் விஷயமாக வெளியே! வந்திருக்கின்றான். அனிக்கு மரியாதையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணினான்.
அதெல்லாம் அவள் கவனித்தால் தானே! ஆனந்தும் அப்பெண்ணும் எதிரெதிரே அமர்ந்திருக்க, “ஹேய் ஹாய் ஐம் அனி… நீங்க?” என்று அப்பெண்ணிடம் கேட்டவாறு அவர்களின் அருகில் அமர்ந்தாள்.
“ஐம் அகிலா..” என்ற அந்த பெண்ணின் முகம் விழுந்து விட்டிருந்தது. அவள் அங்கு வந்து ஆனந்தை சந்திக்க, ஆனந்த் வந்தது அகிலாவை சந்திக்க, அங்கு நடந்து கொண்டிருந்தது மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அகிலாவும் வேலைக்கு செல்லும் பெண்தான். முதலில் மாப்பிள்ளை சந்தித்து பேசிப் பார்க்கின்றேன். பிடித்த பிறகு குடும்பமாக வீட்டுக்கு வந்து பெண் பார்க்கட்டும் என்று சொல்லி இருக்க, ஆனந்துக்கு அதுதான் சரியென்று பட்டது.
அனி வந்து அமரவும் ஆனந்த் காதலிக்கும் பெண்ணாக இருப்பாளோ! என்ற எண்ணம்தான் அகிலாவின் மனதில் ஓடியது. ஆனால் அவள் உடுத்திருந்த ஜீன்சும், டாப்பும், போட்டிருந்த லிப்ஸ்டிக்கும், கூலரும் அவளின் ஆபரணங்களும் அவளை சற்று வித்தியாசமாக காட்ட என்ன மாதிரியான பெண் இவள் என்று அகிலாவின் கண்கள் எடைபோட
அனியை அகிலாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஆனந்த். தனது பாஸின் மகள் என்று அறிமுகப்படுத்த, அகிலாவின் கண்களில் சுவாரஷ்யம் கூடியது.
“ஹேய், அனி.. ஆனந்த், அகில மூணு பேரோட பேரும் Aல ஸ்டார்ட் ஆகுது” அனி சிறுபிள்ளைபோல் சொல்ல
அகிலாவுக்கு அது அனி-ஆனந்துக்கு நடுவுல அகிலா வரப்பார்க்கிறா என்பது போல் கேட்டது.
“இன்னும் ஒண்ணும் ஆடர் கொடுக்கலயா?” என்று கேட்ட அனி ஆனந்தை பார்த்து “நீங்க இருக்கும் போது நாங்க போனா நல்லா இருக்காது ஆனந்த் சோ ப்ளீஸ்” என்று தனக்கு என்ன வேண்டும் என்று கூறியவள், அகிலாவுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதையும் ஆனந்திடம் கூற, அவன் எழுந்து செல்ல முற்பட அகிலா தான் செல்கிறேன் என்று செல்ல அனியும் சரியென்றாள்.
“யாரு ஆனந்த் அந்த பொண்ணு உங்க லவரா?..” அனி புன்னகை முகமாக கேக்க.
கொஞ்சம் அதிர்ச்சியடைந்த ஆனந்த் இல்லையென்று தலையசைக்க, “ஓகே” என்றாள் அனி.
ஆனந்த்தைக் கண்டு வந்து விட்டாள் தான். ஒரு பெண்ணோடு இருந்து பேசிக்கொண்டிருக்கின்றான் ஒருவேளை லவ்வரா? என்ற சந்தேகத்தில் அவனிடமே! கேட்டும் வைத்தாள். இல்லையென்றதும் உறவினரோ? அல்லது நண்பியாக இருக்குமோ! என்று எண்ணியவள் வேறு கேட்கவில்லை.
அகிலா அனி அங்கு எதற்கு வந்தாள் என்று புரியாது அவர்களை திரும்பித்திரும்பி பாத்திருந்தாள். ஆனந்த் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அப்பெண்ணை அறிமுகப்படுத்தத்தான் அனியை வரசொன்னானோ! என்று அகிலா எண்ணினாள். ஆனாலும் இப்போதான்! பெண் பார்க்க வந்தோம் ஒன்றும் புரியாமல் முற்றாக குழம்பி இருந்தாள்.
மாலனி அர்ஜுனுக்கு அலைபேசி வழியாக அழைப்பு விடுத்து தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறி விட்டு அனியை பார்க்க அவள் ஆனந்தோடு பேசிக்கொண்டிருக்க, “ரொம்ப தெரிஞ்சவங்க போல” என்று அலைபேசியில் மூழ்கிப்போனாள்.
அகிலா தான் கொண்டு வந்த ஐஸ் கிரீமை இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் அமர்ந்துகொள்ள அங்கு அனி மட்டும்தான் பேசினாள். அகிலா ஆனந்துக்காக பொறுமைகாக்க, ஆனந்த் அவளை எவ்வாறு அங்கிருந்து அனுப்புவதென்று பாத்திருந்தான்.
அர்ஜுன் வந்து விட்டதாக மாலினிக்கு அலைபேசி வழியாக தகவல் சொல்ல மாலினியும் அனியை அழைக்க, “பாய் அகிலா” என்றவள் ஆனந்தின் புறம் குனிந்து அவனை மெதுவாக அனைத்து விட்டு “பாய் ஆனந்த்” என்றவள் “இன்னக்கி உங்க பெர்பியூம் ஸ்மெல் நல்லா இருக்கு” என்று வாசம் பிடித்தவாறே சென்றாள்.
ஆனந்தத்துக்கு அவள் அனைத்துக் கொண்டது பேரதிர்ச்சியென்றால், அவளின் மென்மையான கன்னம் உரசியதில் உடலிலும் எதோ செய்ய பேச்சற்று நின்று விட்டான்.
“ஓகே மிஸ்டர் ஆனந்த் அப்போ நான் கிளம்புறேன்” என்று அகிலா எழுந்துகொள்ள
“நாம ஒண்ணுமே! பேசலையே!” என்று ஆனந்த் திக்கித் திக்கி பேச
“அதான் அவங்க உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன மாதிரியான உறவு இருக்குனு சொல்லிட்டு போய்ட்டாங்களே!” என்ற அகிலா நிற்காமல் நடக்கலானாள்.
வீட்டுக்கு சென்ற ஆனந்தத்தை மங்கை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள். மாணிக்கவேலும் அங்கிருந்தாலும் மனைவியிடம் மகனை எந்த கேள்வியும் கேட்க்க கூடாது என்று சொல்லி அடக்கி வைத்திருந்தார்.
அனி கொடுத்த அதிர்ச்சியில் அரைமணித்தியாளமாக ஆனந்த் அந்த காபிஷாப்பில் அமர்ந்திருக்க, அகிலா வீடு செல்லும் பொழுதே! “மாப்புள ஏற்கனவே! வேற பொண்ண லவ் பண்ணுறாங்க போல, அந்த பொண்ணையும் காபி ஷாப்புக்கு வர சொல்லி இருந்தாரு. வேற இடம் பாருங்க” என்று சொல்லி இருக்க, அந்த தகவல் ஆனந்த் வீடு செல்லும் முன்பாகவே! மங்கை மற்றும் மாணிக்கவேலை அடைந்திருந்தது. 
“டேய் சின்னவனே! உன் அண்ணன் யாரோ! ஒரு பொண்ண லவ் பண்ணுறானாம் டா… பொண்ணு பாக்க போனவன் அந்த பொண்ணையும் வர சொல்லி இருக்கானாம். என்ன டா நடக்குது?” அலைபேசி வழியாக சந்தோஷை அழைத்து மங்கை பேச
“என்னமா சொல்லுற? லவ் பண்ணுறவன் எதுக்கு வேற பொண்ண பொண்ணு பார்க்க போவான்? லவ் பண்ணுறேன்னு  சொல்ல மாட்டானா? அவன் வந்தா என்ன நடந்ததுன்னு கேளு” என்று சந்தோஷ் அலைபேசியை அனைத்திருந்தான்.
ஆனந்த் வந்ததும் சற்று நேரம் சோபாவில் அமர்ந்திருந்தவன் அறைக்கு சென்று விட மங்கை கணவனை நச்சரிக்கலானாள்.
“பேசாம இரு டி… அவனே! சொல்வான். நீ போய் சமையலை பாரு”
“ஆமா பொம்பளைங்க நாம எதுவும் பேச கூடாது சமய கட்டுல கெடந்தா சரி” கழுத்தை நொடித்தவாறு உள்ளே! சென்றாள் மங்கை.
இரவு உணவு மேசையில் அனைவரும் அமர்ந்திருக்க, மங்கை சந்தோஷுக்கு கண்ணால் சைகை செய்தவாறே இருக்க, “பொண்ணு பார்க்க போனியே! எண்ணனா ஆச்சு” என்று ஆரம்பிக்க
தம்பியை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக உண்ணலானான் ஆனந்த்.
“யார்டா.. அந்த பொண்ணு” பொறுமையை இழந்த மங்கை கேட்டு விட
“எந்த பொண்ணு?”
“நீ லவ் பண்ணுறியே” மங்கை முறைக்க
“நானா?” என்றவன் “அது என் பாஸோட பொண்ணு மா.. அந்த லூசு அங்க வருவான்னு எனக்கெப்படி தெரியும்” என்றான் ஆனந்த்.
“யாரு அனியா?  என்று விழி கேக்க
“என்னது அண்ணியா?” என்றான் சந்தோஷ்
மங்கையும் மாணிக்கவேலும் அவர்களை பார்க்க ஆனந்த் அதிர்ச்சியாகத்தான் பார்த்தான்.
“அண்ணி இல்ல அனி”
“அனி பிணினு” மங்கை முகம் சுளிக்க
“அவ பேர் அனன்யா செல்லமா வீட்டுல அனினு கூப்பிடுறாங்க” என்றாள் விழி
“ஓஹ்.. பொண்ணு பார்க்க எப்படி இருப்பா..” மகனை பெத்த அம்மாவாக ஆர்வமானாள் மங்கை.
” பெரிய மாமாவுக்கு பொருத்தமாகவே! இருப்பா” மங்கை எந்த அர்த்தத்தில் கேக்கிறாள் என்று புரிந்துக்கொள்ளாமல் இருவரும் கண்ணாடி அணிவதை வைத்து கிண்டலாக கூறினாள் விழி.
விழியை முறைத்த ஆனந்த் “ம்மா.. அவ என் பாஸோட பொண்ணுமா..”
“பொண்ணுதானே!” மங்கை மகனை ஒரு பார்வை பார்க்க
பல்லைக் கடித்தவன் “இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் ஆகலனாலும் பரவால்ல அவள மாதிரி ஒரு ஊதாரிய சத்தியமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” கோபமாக எழுந்து சென்று விட்டான் ஆனந்த்.
“என்ன டா இப்படி பேசிட்டு போறான்?” மங்கை அதிர்ச்சியாக
“விடுங்க அத்த அவரே! கட்டிக்கிறேன்னு சொன்னாலும் அவங்க பொண்ணு கொடுக்க சம்மதிக்க மாட்டாங்க” என்றாள் விழி.
“ஏன் என் மகனுக்கு என்ன குறைச்சல்” மனதுக்கு சுணங்கிக் கொண்டாள் மங்கை.
விருப்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசம் ஒரு சிறுநூலிடை வெளிதானாம். அனியை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் பிரச்சினை என்னவென்று அறியாமல் ஆனந்த் அவளை வெறுக்க, அவனே! அவளை திருமணம் செய்துகொள்வான் என்று அவன் எண்ணியும் பார்த்திருக்க மாட்டான்.
காரியாலய அறையில் ஒரு புதிய கபோர்ட்டை கொண்டுவந்து பொறுத்த சங்கரன் என்ன எது என்று பார்கலானார்.
“உள்ள வா வாராகி.  உன் புக்ஸ் எல்லாம் இங்க வச்சிக்க” என்றவாறு வந்த அதீ தந்தையை கண்டுகொள்ளவில்லை.
மஞ்சரி இங்குள்ள ஒரு பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்ற சேர்ந்திருந்தாள். அவள் சென்று வர ஒரு வண்டியும், ஒரு ஓட்டுனரையும் அதீ ஏற்பாடு செய்து கொடுத்திருக்க, கணவனை செல்லமாக முறைத்தவாறு ஏற்றுக்கொண்டாள் மஞ்சரி.
அந்த கப்போர்டை அதீ எங்க வேண்டுமென்றாலும் வைத்திருக்கலாம், வேண்டுமென்றேதான் காரியாலய அறையில் வைத்தான். அப்பொழுதுதான் அடிக்கடி வாராகி அங்கு வருவாள் சங்கரன் அவளை சந்திப்பார். இருவருக்கிடையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று கணித்தான்.
மஞ்சரியும் அடிக்கடி காரியாலய அறைக்குள் வந்துகொண்டுதான் இருந்தாள். சங்கரநன் அவர் பாட்டுக்கு அவர் வேலையை செய்துகொண்டிருந்தார். அவள் என்ன மாதிரியான புத்தகங்களை வைத்திருக்கிறாள் என்று கூட பார்க்க அவர் முயற்சி செய்யவில்லை. மஞ்சரையும் அவரை தொந்தரவு செய்யவில்லை.
இதற்கிடையில் சுக்லா தனது மகன் ஆகாஷுக்கு அனியை பெண் கேட்டு வந்திருக்க, சங்கரனுக்கு மறுக்க காரணங்கள் இருக்கவில்லை. ஆனாலும் அதீ “கொஞ்சம் பொறுங்க டேட் சுக்லா குடும்பத்தை பத்தி விசாரிச்சிகிட்டு இருக்கேன். டிடெக்டிவ் சொல்லட்டும்” என்று விட சங்கரனும் சரியென்று விட்டார்.
மஞ்சரி காரியாலய அறைக்குள் நுழைய சங்கரன் அலைபேசியில் உரையாடியவாறே கணனியில் எதையோ பார்த்தவாறு இருக்க அவள் தான் வந்த வேலையில் கவனமாக
“இங்க வாம்மா” என்று சங்கரன் அழைக்க ஒருநொடி தன்னைத்தானா? அழைத்தார் என்று திகைத்தவள் அறையில் அவர்களை தவிர யாருமில்லை. தன்னைத்தான் என்று உறுதியோடு அருகில் செல்ல “உனக்கு கம்பியூட்டர் தெரியுமா?” என்று கேக்க
“என்ன இவர் இப்படி கேக்குறார்” என்று மஞ்சரி பாக்க
“இங்கிலீஷ்தான் தெரியாதுன்னு நெனச்சேன். கம்பியூட்டரும் தெரியாதா? சரி போ” என்றார்.
தானாகவே! முடிவெடுப்பவரை என்ன செய்ய? “என்ன செய்யணும்?” என்று மஞ்சரி கேக்க
“போன்ல சொல்லுறத டைப் பண்ணனும் எந்த பைல் எங்க இருக்குனு தெரியல. இன்னக்கி சண்டே ஆனந்த கூப்பிடவும் முடியாது” என்று அவர் நீளமாக பேச
அவர் அருகில் கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள் அலைபேசியை காதில் வைத்துக்கொண்டு மறுமுனையில் சொல்வதை செய்து முடிக்க, சங்கரனுக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான்.
“ஆமா ஸ்கூல்ல நீ என்ன டீச்சரா இருக்க?” மருமகளிடம் முதன்முதலாக இணக்கமாக பேச
“இங்கிலிஷ் ஒரு மொழிதான் மாமா. வெள்ளைக்காரன் எங்க மேல திணிச்சிட்டு போன மொழி. அதைத்தான் படிச்சு கொடுக்குறேன். ஊருல இருக்குற பசங்களுக்கு எல்லா பாடங்களுக்கும் அரசாங்கத்தால் டீச்சர்ஸ் ஏற்பாடு பண்ணி கொடுக்க முடியிறதில்ல. ஏன்னா பட்டிக்காட்டுல வேல பாக்க நிறைய பேர் விருப்பப்படுறதில்ல. சேவை மனப்பான்மை இருக்குற சிலர்தான் வராங்க பாருங்க. அதனால கம்பியூட்டரும் நான்தான் சொல்லி கொடுப்பேன்” என்றவள் எழுந்து சென்றிருக்க,
“ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில சொல்லுறாளா பாரு? அதீய மாதிரியே பேசுறா” என்ற சங்கரனின் முகத்தில் புன்னகை மட்டும்தான் இருந்தது.
சங்கரனும் மஞ்சரியும் ராசியான சந்தோசத்தில் குடும்பம் மொத்தமும் இருக்க, இரட்டிப்பு சந்தோசமாக மஞ்சரி உண்டாகி இருக்கும் சந்தோஷமான செய்தியையும் கூறி இருந்தாள்.
அந்த சந்தோசம் நிலைக்கவில்லை. அனி காணாமல் போனாள்.

Advertisement