Advertisement

அத்தியாயம் 13
ஆரத்தியெடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்று அமர வைத்திருக்க, ஸ்டீவும் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தான்.
“பொன்னு… போ… போயி கொஞ்சம் செத்தல் மொளகா உப்பு எடுத்துட்டுவால” என்ற பேச்சியம்மா இருவருக்கும் கண்ணூர் கழித்து விட்டு ஸ்டீவுக்கும் சுத்திப்போட அவன் கண்கள் கலங்கியது.
“என்ன வெள்ளக்கார தொர கண்னு கலங்குது காரம் கண்ணனுக்கு போயிருசால” என்று கையை பிடித்துக்கொண்டு போய் பின் பக்கமிருக்கும் தண்ணி தொட்டியின் அருகில் விட்டு முகத்தை அலும்பும் படி செய்கையால் சொல்ல புன்னகைத்தவாறே முகத்தை கழுவலானான் ஸ்டீவ். அவனின் நிறத்தை வைத்து அவன் வெள்ளைக்காரன் என்று தீர்மானித்திருக்க, அவனும் பேசவில்லை.
ஸ்டீவுக்கு இப்படி அன்பு செலுத்த யாருமில்லை என்று அவன் கவலைப்பட்டது கிடையாது. வாகையும் அவனை நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறாள். வீட்டுக்கு வருவதில்லை என்ற குறை வேறு. அந்த குடும்பத்தின் பாசம் கூட ஸ்டீவுக்கு பயத்தை தான் கொடுத்தது.
அனுபவித்துக்கொண்டிருக்கும் பொழுது இனி உனக்கு இல்லை என்றானால் அவனால் தாங்க முடியாமல் போய் விடும். அதனால் அவனே! அவர்களை விட்டு ஒதுங்கி இருக்கின்றான். வீட்டுக்கு செல்வதை அறவே! நிறுத்தி இருந்தான். அனியின் பிறந்த நாள் அன்று விடுப்பு கேட்டுக்கொண்டு ஆசிரமத்து சென்றிருந்தான். அதீசனும் அவன் குணம் அப்படித்தான் என்று அவன் போக்கிலையே! விட்டு விட்டான்.  
இன்று புதிதாக ஒரு பாட்டி கிடைத்திருக்கிறாள். கூடவே! அதீசன் மூலமாக தங்கை, அப்பா, அம்மா, இல்லனா சித்தி சித்தப்பா என்று கூட சொல்லலாம். அவன் மனதோடு பேசியவாறு வாசலில் வந்தமர்ந்தான்.
பொன்னுத்தாயி சூடாக அனைவருக்கும் காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க மஞ்சரி மறுத்து விட,
“அத்த வாரகிக்கு டீதான் பிடிக்கும் போல” என்று அதீசன் சொல்ல மஞ்சரி அதீசனை பார்க்க, பொன்னுத்தாயி பெருமூச்சு விட்டவாறே அகன்றாள்.
“ஏன் பேபி.. நான் குடிச்சி பாதிய தரணும்னு எதிர் பாக்கிறியா?” மஞ்சரியின் புறம் குனிந்து கேக்க அதீசனை முறைத்த மஞ்சரி எழுந்து தனதறைக்கு சென்று கதைவடைத்துக்கொண்டாள்.
அதீசனின் பக்கத்தில் வந்தமர்ந்த ஸ்டீவ் “நீ லவ் பண்ணுற விஷயம் எனக்கு தெரியவே! தெரியாதே! அதீசா ஆமா வீட்டுக்கு தெரியுமா?” என்று கேக்க
“பேபிம்மா மட்டும் ஸ்மெல் பண்ணிட்டா. நைட் அம்மாக்கு போன் பண்ணி சொல்லணும்” என்றவனின் சிந்தனை முழுக்க மஞ்சரியின் மனதை எப்படி கவர்வது என்பதில் இருந்தது.
மஞ்சரியின் வீடு அந்த கால பழைய வீடுதான். குளுகுளுவென காற்றோட்டத்தோடு பெரிய தோட்டம் நடுவில் வீடு. பெரிய முற்றம், முற்றத்தில் வண்டியை நிறுத்தி விட்டு வந்திருக்க,
“நான் போய் நம்ம சூட்கேஸ் எடுத்துக் கொண்டு வரேன். இந்த ஊருல எங்கடா தங்குறதுனு  மண்டைய பிச்சிகிட்டு இருந்தேன். இப்படியொரு அழகான இடத்துல தங்க கிடைச்சது வரம்தான்” என்றவாறு ஸ்டீவ் வெளியே செல்ல
“மாப்புள குளிச்சிட்டு துணி மாத்திக்கிறீகளா?” என்றவாறு தங்கராசு வர
“வரேன் மாமா” என்றவன் எழுந்துக்கொள்ள ஸ்டீவும் வந்து சேர்ந்தான்.
“பொறத்தால தண்ணி தொட்டி இருக்கு மாப்புள அதுல குளிக்கிறீகளா? இல்ல கிணத்துல குளிக்கிறீகளா?” என்று தங்கராசு கேக்க, அதீசன் முழித்தான்.
பிறந்ததிலிருந்து குளியலறை ஒன்றைத்தவிர குளிக்க வெளி இடங்களை உபயோகித்ததில்லை. கடலில் குளித்தாலும், ஹோட்டலில் தங்கித்தான் குளிப்பான். நீர்வீழ்ச்சி, ஆறு, குளம் என்று சென்றதே! இல்லை. நீச்சல் குளத்தில் நீச்சலடித்திருக்கின்றான். அவ்வளவுதான்.
அவன் யோசிப்பதை பார்த்த ஸ்டீவ் புன்னகைத்தவாறு “தண்ணி தொட்டிலையே! குளிக்கிறோம் சித்தப்பா” என்று சொல்ல
“இங்கிலீசு தொரைக்கு தமிழ் தெரியுமா?” ஆச்சரியமாக அவனை பார்த்து முணுமுணுத்தவாறே தங்கராசு வெளியேறி இருந்தார்.
“ஏன் டா.. என்ன பார்த்தா பிரிட்டிஷ்காரன் மாதிரியா இருக்கு? எங்கப்பா பிரெஞ்சுக்காரன் இல்ல” தாடையை தடவியவாறு ஸ்டீவ் கேக்க
“ரொம்ப முக்கியம்” என்ற அதீசன் “தண்ணி தொட்டினா என்ன?” என்று கேக்க விழுந்து விழுந்து சிரித்த ஸ்டீவ் அதீசனை குளிக்க அழைத்து சென்றிருந்தான்.
அதீசனுக்கு அது ஒரு புது வித அனுபவமாகத்தான் இருந்தது. வாளியால் அள்ளி அள்ளி குளித்து விட்டு வந்தவர்கள் வாசலில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு சூடாக சாப்பிட வடை தட்டோடு வந்த பொன்னுத்தாயி
“ஐயோ… அம்மா..” என்றவாறு சமயலறைக்குள் மீண்டும் ஓடி விட்டாள்.
“என்ன டி போன வேகத்துல திரும்பி வந்துட்ட, என்ன பேய் முழி முளிக்குற?” என்று பேச்சியம்மா கேக்க
“அங்கன மாப்புள வெள்ளக்கார தொர போடுற துணி போட்டுக்கின்னு இருக்காப்புல” பொன்னுத்தாயி வெக்கப்பட்டு சொல்ல
“என்னால சொல்லுத?” என்றவாறு பேச்சியம்மா வாசலுக்கு வர
அதீசனும், ஸ்டீவும் முழங்கால் தெரிய ஒரு ஷோர்ட்டும், டீ ஷர்ட்டும் அணிந்தது வாசலில் அமர்ந்து டீவியை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆம் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். அது எவ்வளவு பழைய மாடல் என்ற டிஸ்கஷனில் இருந்தனர்.
“அட கருமமே! இந்த வெள்ளைக்காரனோட சினேகிதம் வச்சாலும் வச்சாங்க, நம்ம சனம் பூரா அர டவுசரை போட்டுக்கிட்டு அலையுதுங்க” என்றவாறு வந்த பேச்சியம்மா அதீசனின் தொடையை நன்றாக கிள்ளி விட “ஆ..” என்று கத்தியவன் பாட்டியை பாவமாய் பார்க்க    
“பேராண்டி.. இதெல்லாம் இதோ இவனுக்கு சரியாக இருக்கும். நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுல. இது கிராமம்” அதீசன் காலை தடவியவாறு முழித்தான் என்றால், ஸ்டீவ் பேச்சியம்மா சொல்வது புரியாது முழித்தான்.
“என்ன பாட்டி சொல்லுறீங்க?” அதீசன் கத்திய கத்தில் வெளிய வந்திருந்த மஞ்சரி என்ன பிரச்சினை என்று புரிந்துக்கொண்டு இரண்டு லுங்கியை தூக்கிப் போட்டு விட்டு உள்ளே சென்றாள்.
 அவளும் தலைக்கு குளித்திருந்தாள் போலும். மதியம் அணிந்திருந்த க்ரீம் கலர் சேலையை மாத்தி கடும் நீல நிற சேலையில் மஞ்சள் பூக்கள் உள்ள சேலையில் இருந்தாள். அந்த நிறம் அவளுக்கு எடுப்பாக இருந்தது என்று அதீசனின் கண்கள் அவள் வந்து சென்ற சில நிமிடங்களில் கணித்துக்கொண்டது. 
“பாத்தியா என் பேத்திக்கு தெரிஞ்சிருக்கு. முதல்ல இத கட்டிக்க ராசா” என்று விட்டு செல்ல ஸ்டீவுக்கு சகலவும் புரிந்தது.
அவன் அசால்ட்டாக லுங்கியை கட்டி இருக்க, அதீசன் என்ன எது என்ற ஆராய்ச்சியில் இருந்தான். பூஜை என்றால் அன்னை வற்புறுத்தி வேட்டி கட்ட சொல்லுவாள் லுங்கி நோ சான்ஸ்.
அவன் அதை கையில் வைத்துக்கொண்டு தடுமாறுவதைக் கண்ட ஸ்டீவ் தான் அணிந்ததை கழட்டி அதீசனை பார்த்து கண்ணால் செய்கை செய்ய, அதீசனும் இன்டராக்சனை பலோவ் செய்வது போல் ஸ்டீவை பின் தொடர்ந்தான்.
ஒருவாறு சக்ஸஸ்ஸா லுங்கியை கட்டிக்கொண்டு அமர்ந்துகொள்ள மஞ்சரி கதவருகே! நின்று தலையை துவட்டியவாறு இருவரையும் பார்த்திருந்தாள்.
“வா வாராகி” என்று அதீசன் புன்னகைக்க
“எதுக்கும் லுங்கிக்கு மேலால இந்த பெல்ட்ட போட்டுக்கோங்க, இல்லனா லுங்கி அவுந்து உங்க மானம் காத்துல பறந்துட போகுது” என்று விட்டு செல்ல
“அசிங்க பட்டுட்டியே! நண்பா…” என்று ஸ்டீவ் சிரிக்க,
“இப்போ அவ என்ன சொல்லிட்டு போறா?” என்று மஞ்சரி கொடுத்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கேட்டான் அதீசன்.
“சுத்தம்” என்றவன் விளக்கமளிக்க
பெல்ட்டை தூக்கிப்போட்ட அதீசன் உசாராக லுங்கி கழண்டு விழாதவாறு ஷோட்டுக்குள் சொருகி இருந்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் அதீசனும் ஸ்டீவும் லேப்டப்பை திறந்து வைத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்க, ஐந்து நிமிடத்து ஒருமுறை பொன்னுத்தாயி வந்து “மாப்புள ஏதாவது சாப்பிடுறீகளா?” என்று கேட்டு ஏதாவதை வைத்து விட்டு செல்ல ஆரம்பித்ததோடு “வெள்ளக்கார தொரைக்கு நம்ம ஊரு சாப்பாடெல்லாம் பிடிக்குமோ! என்னவோ!” என்றவாறு செல்ல
“ஏன் டா..  நீ பாஸா? நான் பாஸா? உன்ன ஏன் டா.. தொரைனு கூப்பிடுறாங்க” என்று அதீசன் கடுப்பாகி கத்த
“என்ன ஏன் இவ்வளவு அழகாக படச்ச ஆண்டவா?” என்ற ஸ்டீவ் “என்ன இருந்தாலும் வெள்ளைக்காரனுங்க நாடுகளை கைப்பற்றி ஆண்ட வர்க்கம்டா அந்த மரியாதைதான்” டி ஷர்ட்டில் இல்லாத காலரை இழுத்து விட
“வேலைய பாருடா வெண்ண” என்றான் அதீசன்.
அதற்கும் ஸ்டீவ் “ஆமாடா நான் வெண்ண கலருதான்” என்று கண்சிமிட்ட அதீசன் அவனை முறைக்கலானான்.
இரவும் வந்தது இருவரையும் உணவுண்ண தங்கராசு அழைக்க, “மஞ்சு வா.. மா.. வந்து மாப்பிளைக்கு பரிமாறுமா” என்று பொன்னுத்தாயி அழைக்க
அழைத்ததும் முதல் ஆளாக கிளம்பியவனை தடுத்து நிறுத்தி “ஏன் டா உனக்கு பக்கிக்குதா?” அதீசன் ஸ்டீவை ஒரு மார்க்கமாக பார்த்துக் கேட்டான்.
இந்த வீட்டுக்குள் வந்ததிலிருந்து பொன்னுத்தாயி கொண்டு வந்து வைப்பதெல்லாம் சாப்பிட்டு விட்டு இரவு உணவு என்றதும் உடனே! எழுந்து விட்டானே! இவனுக்கு இருக்குறது வயிறா? வானமா?
அதீசனுக்கு வீட்டு சாப்பாட்டின் அருமை தெரியவில்லை. ஸ்டீவுக்கு இனி வீட்டு சாப்பாடு என்று கிடைக்குமோ! என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் உள்ளே! தள்ளிக்கொண்டிருந்தான்.
“ஏன் பாஸ் எனக்கு சோறு தான் முக்கியம். வாங்க பாஸ். அட வெக்கப்படாம வாங்க” என்றவன் அதீசனின் கையை பிடித்து இழுத்து செல்ல தரையில் இலை போடப்பட்டிருக்க, அதீசன் மேசை, கதிரையை தேடிக்கொண்டிருந்தான்.
“உக்காருங்க மாப்ள” என்று தங்கராசு சொல்லி விட்டு வாசலுக்கு சென்றார்.
“எங்க உக்கார?” என்று அதீசன் கேக்க
“மாப்பிளைக்கு எப்பவும் தமாசுதான்” என்ற பொன்னுத்தாயி “பாருங்க வெள்ளக்கார தொர உக்காந்து இருக்காரு” என்று சிரிக்க, ஸ்டீவ் இலையின் முன் சட்டமாக அமர்ந்திருந்தான்.
“துரோகி” என்றவாறு அதீசனும் அமர அவசரத்துக்கு கீழே அமர்ந்து பழக்கப்படாததால் அவனால் ஒரு மாதிரி உக்கார முடியவில்லை. அப்படியும் இப்படியும் தடுமாறிக்கொண்டிருந்தான்.
மஞ்சரி பரிமாற அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தானே! தவிர போதும் என்று சொல்லவில்லை. எட்டு இட்லியை வைத்த பின்தான் “என்ன போதும் என்று சொல்லலையே!” என்று அவளும் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
முறைத்தவள், சாம்பாரை ஊற்றி காரச்சட்டினியும், தக்காளி சட்டினியும் வைக்க இலையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலையே! மஞ்சரியை பார்த்தவாறு உண்ண ஆரம்பித்தான் அதீசன்.
 “தொர அது கார சட்டினில காரமா இருக்கும். நாக்கு வெந்துட போகுது. பாத்துல” என்று பேச்சிப் பாட்டி சொல்ல ஸ்டீவ் காரச் சட்டினியோடு மட்டும் இட்லியை ருசி பார்த்துக்கொண்டிருக்க, அதீசன் காரம் தாங்காமல் கண்ணில் நீர் வழிய நாக்கை தொங்க போட்டுக்கொண்டு “ஆ.. ஊ .. ஆ.. ஊ..” என்றவாறு அகராதியை வாசித்துக்கொண்டிருந்தான்.
காலையில் பிரெட்டும் பாலும், பகல் மசாலா அதிகம் சேர்க்காத கறி வகையோடு சோறு, இரவைக்கு வேகவைத்த மரக்கறி, இடையிடையே! பழச்சாறு. இப்படி சாப்பிட்டு பழகியவனுக்கு இந்த சாப்பாடு காரணமாகத்தான் தெரியும்.
“என்னங்க டா இது” ஸ்டீவ் காரம் தாங்காமல் கத்துவான்னு எதிர்பார்க்க, அதீசன் கத்திக்கிக்கொண்டிருக்க, இதுல வெள்ளைக்காரன் பெத்த புள்ள யாரு? என்று சந்தேகமாக பேச்சியம்மா முகவாயை கை வைத்து அதீசனையும், ஸ்டீவையும் பாத்திருக்க மஞ்சரி அதீசனுக்கு தண்ணீர் புகட்டினாள்.
அப்பொழுதும் கரம் தாங்காமல் அவன் துடிக்க, பொன்னுத்தாயி சீனி டப்பாவை கொண்டு வந்து கொடுத்திருக்க, அள்ளி அள்ளி சாப்பிட்டவன் தண்ணீரையும் மடமடவென குடித்து முடிக்க, மஞ்சரி அவனை பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தமென்று அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
ஒன்று மட்டும் புரிந்தது மஞ்சரி தன் குடும்பத்தில், தன் கலாச்சாரத்தில் பொருந்த கஷ்டப்படுவாளோ! என்று கவலைப்பட்ட தன்னால் ஒருநாள் கூட அவளுடைய வீட்டில், அவளுடைய பழக்கவழக்கங்களோடு ஒன்றுவது எவ்வளவு கஷ்டம் என்று.
“மாப்பிளைக்கு சாம்பார் மட்டும் வை மஞ்சு சாப்பிடட்டும்” என்று பொன்னுத்தாயி சொல்ல
“மறுபடியும் மொதலிருந்தா” என்ற அதீசனின் மைண்ட் வாயிசை நிறுத்தி “எனக்கு பால் மட்டும் கொடுங்க அத்த என்றவன் ஸ்டீவை பார்க்க அவன் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“போதும் டா டேய். இங்க ஒருத்தன் உயிர் போய்.. உயிர் வந்திருக்கேன் பக்கத்துல இருக்குறவனுக்கு என்ன ஆச்சுன்னு பாக்கார்காம இந்த மொக்கு மொக்கிற? சாப்பாட்டையே! கண்ணுல பாத்திருக்க மாட்டியா என்ன?” அடிக்குரலில் சீறினான் அதீசன்.
“காமடி பண்ணாத நண்பா… உன்ன பாத்துக்கத்தான் தங்கச்சி இருக்காங்களே!” என்றவன் ஏப்பம் விட
“என்ன குசுகுசுன்னு பேசுறீக? தொர எங்க ஊரு சாப்பாடு ரொம்ப புடிச்சிருச்சு போல, காலைல அப்பமும், பாயாவும் பண்ணிடவா?” என்று பேச்சி பாட்டி கேக்க மண்டையை ஆட்டினான் ஸ்டீவ்.
“திண்ணிமாடு” என்று ஸ்டீவை திட்டியவாறு அதீசன் எழுந்துகொள்ள அவனால் எழ முடியவில்லை கால் மறத்து போய் இருந்தது. 
“ஐயோ.. மம்மி..” என்றவன் அமர்ந்து காலை பிடித்துக்கொண்டான்.
“என்னாச்சு? மாப்புள” என்று தங்கராசு வாசலில் இருந்து வர
“என்னாச்சு? மாப்புள” என்று பொன்னுத்தாயி சமையலறையிலிருந்து எட்டி பார்க்க,
“என்ன பேராண்டி?” என்று பேச்சி பாட்டி கேக்க
ஸ்டீவ் விரல்களை சூப்பியவாறு அதீசனை பார்த்திருக்க, அதீசன் “கால்ல கரண்ட் பாஞ்ச மாதிரி இருக்கு” என்றதும் மஞ்சரிக்கு விஷயம் புரிந்தது.
“கால் மறத்து இருக்கு” என்றவள் அதீசனை கை பிடித்து தூக்கி விட முயல
“நீ இருமா” என்ற ஸ்டீவ் கை கழுவிவிட்டு வந்து அதீசனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு சென்று மஞ்சரியின் கட்டிலில் கிடத்த
நொடியில் தூக்கிக்கி கொண்டு நடந்தவனை ஆச்சரியமாக பார்த்து “தொரைக்கு தீனி போட்டு கூடவே! வச்சிருக்குறது இதுக்குதான் போல” என்று பொன்னுத்தாயி பேச்சு பாட்டியின் காதைக் கடிக்க  
“பேசாம இருமா” என்றாள் மஞ்சரி.
“மஞ்சு காலுக்கு கொஞ்சம் எண்ணெயை பூசி நீவி விடு புள்ள” அறையின் வாசலில் இருந்தே அவனை பாத்திருந்த பாட்டி சொல்ல
“அப்பத்தா கொஞ்சம் நேரத்துல தானா சரியாகிடும்” என்று பேச்சியம்மாளை முறைத்தவள் கதவை சாத்தி விட்டு வெளியேறினாள்
“ஐயோ அம்மா முடியல… என் காலு காலு. ஒண்ணுமே! பீல் ஆகா மாட்டேங்குது கரன்ட்டு பாயுது” என்று அதீசன் கத்த
கன்னத்தில் கை வைத்து அமர்ந்த ஸ்டீவ் “இரத்தம்தான் பாயுது. நத்திங் டு ஒர்ரி. என்று காலுக்கு அடிக்க அதீசன் மேலும் கத்தினான்.
மெதுவாக மசாஜ் செய்ய ஆரம்பித்தவன் ஏதேதோ பேச அதீசனின் கவனமும் திசை மாறியது.
“இப்போ கால் ஓகே” ஸ்டீவ் சொல்ல காலை ஆட்டிப் பார்த்த அதீசன் கட்டிலை விட்டு கீழே இறங்கி துள்ளி குதிக்க கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தாள் மஞ்சரி.
“இப்போ ஓகே மஞ்சரி” என்றவனிடம் பால் கிளாஸை நீட்டியவள் ஸ்டீவிடம் திரும்பி “நீங்க ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”
“இல்ல வேணாம் சிஸ்டர்”
தலையசைத்தவள் “குடிச்சிட்டு வாங்க அப்பா பேசணும்னு சொன்னாரு” என்றவள் வெளியேறி இருந்தாள்.
“என்னவா இருக்கும்?” அதீசன் யோசிக்க,
“பால குடிச்சிட்டு வாங்க பாஸ் போலாம். போனா தெரிஞ்சிட போகுது” என்று ஸ்டீவ் சொல்ல அவனை முறைத்தவாறே பாலைக் குடித்தவன் வாசலுக்கு வர தங்கராசு யோசனையாக அமர்ந்திருந்தார்.
“சொல்லுங்க மாமா என்ன பேசணும்?” என்றவாறு அதீசன் அமர
“உங்க வீட்டுல நடந்த கண்ணாலத்த சொல்லிடீகளா? மாப்புள” தங்கராசு தயங்கியவாறே கேக்க,
இன்று சொல்லலாம் என்றுதான் எண்ணி இருந்தான் அதீசன். ஆனாலும் அன்னை அவனுடைய ஜாதக தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்தேறி விட்டது என்று சொன்னால் வாகையால் தாங்கிக்கொள்ள முடியாமல் போய் விடும் என்று அஞ்சினான். பூஜை முடிந்தபின் சொன்னால் ஏற்றுக்கொள்ளவும் கூடும் அல்லது மஞ்சரியை பார்த்தால் ஏற்றுக்கொள்ளக் கூடும் அதனால் பூஜை முடிந்த பின் மஞ்சரியை நேரில் அழைத்து செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் அதீசன்.
இதை தங்கராசுவிடம் தெளிவாகவே! சொல்ல, அவனின் ஜாதகத்தில் இருந்தபடியே! அவனுக்கு கல்யாணம் நடந்தது கடவுளின் செயல்தான் என்று கூறியவர்.
“உங்க வீட்டுல பேசி தாலி பெருக்கு செஞ்சி அப்போரமா மத்த சடங்கெல்லாம் வச்சிக்கலாம்” அதீசன் என்ன சொல்வானோ! என்று சங்கடமாகவே! அவனை ஏறிட
“அதுக்கென்ன மாமா… அப்படியே! பண்ணலாம்” என்றான்.
“ரொம்ப சந்தோசம் மாப்புள எங்க நீங்க கோபப்படுவீங்களோனு பயந்துட்டேன்”
“நான் எதுக்கு மாமா கோபப்பட போறேன். பெரியவங்க நீங்க, எது பண்ணாலும் எங்க நல்லதுக்குத்தானே!  சொல்லுவீங்க” என்று சொல்ல உச்சி குளிர்ந்துதான் போனார் தங்கராசு.
“சரி மாப்புள அப்போ நீங்களும், தொரையும் இந்த அறைல தங்கிக்கோங்க” என்ற தங்கராசு உள்ளே செல்ல
“இவர் என்ன லூசா” என்று மாமனாரின் முதுகை வெறித்தான் அதீசன்.
“எப்படி எப்படி நான் எதுக்கு மாமா கோபப்பட போறேன்னு சொல்லிட்டு அவரை மனசுக்குள்ள திட்டிகிட்டு இருக்கியா?”
“பின்ன கல்யாணமாக்கிருச்சு பொண்ணு கூட தூங்க சொல்லாம உன் கூட தூங்க சொல்லிட்டு போறாரு”
“அத அவர் கேட்டாரே! சடங்கேல்லாம் உங்க வீட்டுல பேசின பிறகு வச்சிக்கலாம்னு அப்போ சொல்லி இருக்கணும். இல்ல மாமா அதெல்லாம் அவசியமில்லன்னு”
“என்னடா சொல்லுற?”
“வந்து தூங்குங்க பாஸ்” ஸ்டீவ் அதீசனை இழுத்து சென்று கட்டிலில் தள்ளி கதவை தாளிட்டிருந்தான்.
“என்ன டா ரேப் பண்ண போற மாதிரியே பண்ணுற?”
“உனக்கு அவ்வளவு ஸீன் எல்லாம் இல்ல பாஸ். பேசாம தூங்கு” என்றவன் தரையில் ஒரு துண்டை விரித்து படுத்துக்கொள்ள
“டேய் கட்டில்ல இடம் இருக்குறப்போ எதுக்கு கீழ தூங்குற?”
“நீ சிங்களா இருக்குறவரைக்கும் ஓகே நண்பா… இப்போ உனக்குத்தான் கல்யாணமாகிருச்சே! அதுவும் இன்னக்கி உனக்கு பர்ஸ்ட் நைட் நடக்க வேண்டியது. மிஸ் ஆகிருச்சு. அதே! நெனப்புல என் மேல கைய வச்சிட்டீனா? என் கற்புக்கு என்ன ஆவது?”
“அட சீ.. நீ கீழயே தூங்கு” என்ற அதீசன்  போர்வையை இழுத்து போத்திக் கொண்டான்.
சற்று நேரத்து சென்றிருக்க வயிறு முட்ட சாப்பிட்ட ஸ்டீவ் குறைட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்க, அதீசனுக்கு கழிவறைக்கு செல்ல தேவை ஏற்பட்டது. அந்த அறையின் மின் குமிழுக்கான சுவிட்ச் எங்கு இருக்கிறது என்றும் தெரியாது. ஸ்டீவ் தான் அதை அனைத்திருந்தான். தட்டுத்தடுமாறி அறையை ஒரு சுற்று சுற்றியவனுக்கு அறையில் குளியலறை இருப்பது போல் தெரியவில்லை. மெதுவாக சென்று ஸ்டீவை எழுப்ப “ஐயோ அம்மா பேய்”  கத்தியவாறு ஸ்டீவ் எழுந்தமர, அவன் வாயை பொத்திய அதீசன்
“ஏன் டா நடு ராத்திரில பேய் மாதிரி கத்துற? எனக்கு வாஷ் ரூம் போகலாம் வா..”
“அதுக்கு ஏன் டா என்ன கூப்டுற? வந்தா போக வேண்டியதுதானே!” என்ற ஸ்டீவ் தூங்க முற்பட
“வாஷ்ரூம் எங்க இருக்குனு தெரிஞ்சா நான் போக மாட்டேனா?” என்று அதீசன் கேக்க
தாடையை தடவி யோசித்த ஸ்டீவ்  “நாம அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்தும் நீ ஒன் பாத்ரூம் போகலானா என்ன பிரச்சினை?” என்று கேக்க
“அது நான் குளிக்கும் போது போய்ட்டேன் டா” என்று அதீசன் அசால்ட்டாக சொல்ல
“அட நாசமா போன்றவனே! நீ உச்சா போனா இடத்துலதான் நான் கால வச்சி குளிச்சேனா ஐயோ கால கழுவணுமே!”
“சோப் போட்டு குளிச்சிட்டு தானே! வந்த? ஓவரா பண்ணாம வா? இல்லனா இங்கயே! போய்டுவேன். காலைல நீதான் போனேன்னு வேற சொல்லிடுவேன்”
“நீ செஞ்சாலும் செய்வ.. சரி வா கூட்டிட்டு போறேன்”
ஸ்டீவ் எழுந்துக்கொள்ள இருவரும் இருட்டில் மெதுவாக அடியெடுத்து செல்ல
“யாருல அது களவானிப்பய மாதிரி பதுங்கி பதுங்கி போறது” என்று பேச்சியம்மா இரும்பு தடியை இவர்கள் மீது வீசி இருந்தாள்.

Advertisement