Advertisement

அத்தியாயம் 12 
“அதீ… எங்க டா வந்து கொண்டு இருக்கீங்க” மங்கை மெதுவாக கேக்க,
“வீட்டு பக்கத்துல வந்துகிட்டு இருக்கோம் மா…”
“பாத்து பத்திரமா வா டா… என் மருமகள பார்க்க ஆசையா இருக்கேன்” வாகை வாஞ்சையாக சொல்ல அதீசன் மனைவியைத்தான் திரும்பிப் பார்த்தான். 
மஞ்சரி கழுத்தில் புதிதாக தொங்கிய தாலியை கட்டை விரலால் இழுத்தவாறு கண்ணாடிக்கு வெளியே! பார்த்துக்கொண்டிருந்தாள்.
கடனே! என்று கணவனுக்கான கடமைகளை செய்துகொண்டு இருக்கின்றாள். என்னதான் பேச்சுக் கொடுத்து அவளை நெருங்க முயற்சித்தாலும், ஒரு ஒதுக்கத்தை அமுலில் கொண்டு வந்து செயல் படுத்துகிறாள்.
அவள் இறந்தகாலம் என்னவென்று அறியாமல் அதை சரி செய்ய தன்னால் முடியாது என்று மட்டும் அதீசனுக்கு நன்றாக புரிந்தது அதை யாரிடம் கேட்பது? மஞ்சரியின் தந்தையிடம் கேட்டால் குலுங்கிக் குலுங்கி அழுகிறார். அவரை சமாதானப் படுத்த அதீசனுக்கு அகராதியிலுள்ள மொத்த ஆறுதலான அன்பான வசனங்களும் தேவைப்படுகிறது.
மற்ற இருவரும் பெண்கள் அவர்களிடம் கேட்கவும் முடியாது. மஞ்சரியின் தந்தை தங்கரசே! இந்த அழுகை அழுகிறார் என்றால் பெண்களை சொல்லவே! வேண்டாம். நினைக்கும் பொழுதே! அதீசனுக்கு தலை வலித்தது.  
அடுத்த பிரச்சினை வீட்டில் காத்துக்கொண்டு இருக்கிறது. தந்தையை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் அது.  
அன்று மனம் அடித்துக்கொள்ள அதீசன் கிளம்பிப் போனாலும் தனியாக ஒன்றும் போகவில்லை. அவனுடைய பி.ஏ. ஸ்டீவையும் அழைத்துக்கொண்டுதான் சென்றிருந்தான். 
ஸ்டீவ் மாகாபலிபுரத்தை சேர்ந்தவன். பிரெஞ்சுக்காரனுக்கு பிறந்தவன். அன்னை தமிழ்தான். அவன் பிறப்பை பற்றி விலாவரியாக விளக்குவதை விட அவன் தோற்றத்தை விளக்குவதுதான் சிறந்தது. பார்க்க ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருப்பான். வளர்ந்தது எல்லாம் அநாதை ஆசிரமம் தான்.
அவனின் வெள்ளைத் தோலையும், தங்க நிற முடியையும் கண்டே! அங்குள்ள குழந்தைகள் அவனை ஒதுக்க, பெற்றோரோடு ஆசிரமத்துக்கு வந்த அதீசன் அவனோடு ஆங்கிலத்தில் உரையாட திருதிருவென முழிக்கலானான் ஸ்டீவ்.
“உனக்கு இதெல்லாம் செட்டாகாது” என்று அவனை கான்வட்டில் படிக்க ஏற்பாடு செய்தான் அதீசன் அந்த நன்றிதான் அவனுக்கு நண்பன், பி.ஏ, பாடிகார்ட் சில சமயம் டைவர் வேலைக்கு கூட பார்ப்பான்.
இன்றும் ட்ரைவர் ப்ளஸ் பாடிகார்ட் வேலைதான். ஊருக்கு சென்ற பின்தான் பி,ஏ வேலையில் ஜோஇன் பண்ணுவான். ஆனாலும் மஞ்சரியின் ஊரை அடையும்வரை வேலையை தவிர இருவரும் வேறு எதையும் பேசிக்கொள்ளவுமில்லை. அதனால்தான் ஸ்டீவும் இன்னும் சிங்கிளாக சுத்திகொண்டு இருக்கின்றான். அதீசனும் வேலை வேலையென்று அலைந்துக்கொண்டு இருக்கின்றான்.
ஊருக்குள் நுழையும் பொழுதே! ஊரு மக்கள் ஓட்டமும், நடையுமாக எங்கயோ சென்று கொண்டிருக்க, ஸ்டீவிடம் வண்டியை நிறுத்துமாறு கூறிய அதீசன் கண்ணாடியை திறந்து விசாரித்தான்.
ஒரு கிழவி நடக்க முடியாமல் நடந்துக்கொண்டிருந்தவள் கோட் சூட்டில் இருந்த அதீசனைக் கண்டு தீர்ப்பு சொல்லும் மகராசன் போல் தோன்றியதோ! என்னவோ!
“அந்த தங்கராசு மருமவனுக்கு இதே! சோலியா போச்சு. ஊரக்கூட்டி பண்ணாலும் பண்ணான் இப்படி ஒரு கண்ணாலத்தை ஊரு மெச்ச இந்த ஊருல யாரும் பண்ணல அப்பு. எடுபட்ட பய, அந்த புள்ள கூட வாழாம பாடு படுத்தி அனுப்பியதும் இல்லாம இந்த ஊருலயே! வந்து குடிசை போட்டு அந்த புள்ள குடிய இல்ல கெடுக்குறான். நாசமா போறவன், விளங்குவானா அவன்” மஞ்சரியின் மாஜிக் கணவனைத்தான் கண்டமேனிக்கு வசைபாட ஆரம்பித்திருந்தாள் கிழவி.
அதீசனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிய “சரி வாங்க பாட்டி கார்ல கொண்டு போய் விடுறேன்” என்றதும்
“சீமைல இருந்து கப்பல் போல கார்ல எம்.சி.ஆர் கணக்கா வந்திருக்கிறீக, சத்த என்னனு கேளு அப்பு…” என்றவாறே அதீசன் திறந்த கார் கதவின் வழியே தன் உடலை உள்ளே நுழைத்து அமர்ந்து கொண்டவள் கார் செல்லும் பொழுது முன் இருக்கையை இறுக பிடித்துக்கொண்டிருந்தாள்.
“பாட்டி பின்னாடி சாஞ்சி நல்லா உக்காருங்க” கிழவியின் செய்கை சிரிப்பை மூட்டினாலும் அன்பாக கூறினான் அதீசன்.
“பஸ்ஸுல போய்கல குலுங்கும்ல… பழகிரிச்சுல…” கறை படிந்த சில பற்களைக் காட்டி சிரிக்க அதீசனும் புன்னகைத்தான்.
கோவிலுக்கு அருகே! உள்ள ஆலமரத்தடியில் மக்கள் வெள்ளமாக திரண்டு இருக்க, அதீசனின் கார் வந்து ஒரு இடத்தில் ஒதுங்கியதைக் கூட கவனிக்க யாருமில்லை. அதீசன் இறங்கி பாட்டியை இறக்கி விட பெண்களை குள்ளமாகிக் கொண்டு பெண்கள் கூட்டத்தில் மஞ்சரியின் முகம் தெரிய “இவ இங்க என்ன பண்ணுறா?” என்ற யோசனையினூடாக ஸ்டீவுக்கு செய்கை செய்தவாறே ஆண்களின் பின்னால் சென்று நின்று கொண்டான்.  
“இப்போ எதுக்கு தம்பி பஞ்சாயத்தை கூட்டி இருக்குறீக?” பெரிய மீசை வைத்த பருமனான உடல் வாகு கொண்ட ஒருவர் காது குடைந்தவாறே ஒருவனிடம் விசாரிக்க,
“ஐயா மன்னிக்கணும். என் மாஜி பொண்டாட்டி மஞ்சரி இருக்காளே! ஒரு நடத்த கெட்டவ, இவளுக்கு தக்க தண்டனையை கொடுங்கன்னு சொல்லுதேன் ஸ்கூல்லுல டீச்சரா கொண்டு வந்து வச்சிருக்கீக, பசங்களையும் கெடுத்துடுவானு சொன்னேன் யாரும் கேக்கல, இப்போ பாத்தீகளா? பட்ட பகல்ல ஸ்கூல்ல படிச்சி கொடுக்குற மாஸ்டர் கூடயே! தொடர்பு வச்சிருக்குறது தெரிஞ்சி போச்சு” யாரோ ஒருவன் மஞ்சரியை பற்றி பேச
அதீசனின் இதயத்தில் மின்னலே! அடித்தது. “என்னது மஞ்சரிக்கு கல்யாணம் ஆகிருச்சா?”
“ஷாக்கா குறைடா… டிவோர்ஸ் கூட ஆகிருச்சு” அவன் மனம் எடுத்துக்கொடுக்க அங்கே! என்ன நடக்கிறது என்று ஒரு குழப்பத்திலையே! பார்க்க, 
“ஐயோ… இவன் சொல்லுறத நம்பாதீக.. என் பொண்ண தங்கமா தாரைவார்த்து கொடுத்தேன்! இப்படி இரும்பாக்கி திருப்பி கொடுத்துட்டானே!” என்று தங்கராசு அழ,
“கோட்டி பய நீ நாசமாத்தாண்டா போவ, உன்ற வாயில புழுதான்லே வரும். இப்படி அபாண்டமான என் பொண்ணு மேல பழி போடுறியால” பொன்னுத்தாயி மண்ணை வாரி அடிக்க,
“ஆத்தா மகமாயி.. யேன் ஒருத்தி ஆசையா நிறைவேத்திக்க இப்படி என் பேத்திய நானே! பாழுங்கிணத்துல தள்ளிபுட்டேனே! என்று பேச்சியம்மா கதற, மஞ்சரி கண்கள் சிவந்தவாறு நின்றிருந்தாள்.
அதீசனின் இரத்தம் சூடாக “டேய் யார் டா நீ அபாண்டாமா பழி போட்டுக்கிட்டு இருக்கிய? இங்க பாருங்கள பஞ்சாயத்தை மதிச்சிதான் நான் இங்க நிக்குதேன். மஞ்சரி மிஸ் கிட்ட நான் பேசுதேன் அது நெசம். தப்பா ஒன்னும் நா பேசலங்க, அவங்கள கல்யாணம் பண்ணிக்கத்தான் கேட்டுனுங்க” அதீசன் பேச முன்பாக மஞ்சரியோடு சம்பந்தப்படுத்தி பேசப்பப்பட்ட மாஸ்டர் பேச அதீசனுக்கு ஓரளவுக்கு மஞ்சரியின் வாழ்க்கை வரலாறு புரிந்தது.
“அடப்பாவிங்களா.. நான் எண்டரி கொடுக்க முன்னா இங்க கலவரமே! நடக்குதே!”
“என்ன நண்பா என்ன பிரச்சினை?” என்றவாறு ஸ்டீவ் வர
“பொருள எடு நண்பா.. இவனுங்களுக்கு இப்படி பேசினா சரிவராது” என்ற அதீசன்
தடாலடியாக உள்ளே நுழைந்து “யோவ் யார்யா நீ மூணு வருஷமா மஞ்சுவை நான் லவ் பண்ணுறேன்… லவ்வ சொல்லுறதுக்குள்ள நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்டலாம்னு பாக்குறியா?” என்று மாஸ்டரின் சட்டையை பிடிக்க, 
“நீ யாரல?” என்று முத்துப்பாண்டி எகிறிக்கொண்டு வர 
“நீ மஞ்சரியோட எக்ஸ் நா.. நான் தான் அவ புருஷன். வா மஞ்சு…” என்று அவள் கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் செல்ல, மஞ்சரி அதிர்ச்சியில் அதீசனை விழி விரித்து பார்த்திருந்தாளே! ஒழிய அவனை தடுக்க வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்ற வில்லை.
முத்துப்பாண்டி “ஏய்..” என்றவாறு அரிவாளை தூக்க.. ஸ்டீவ் அவன் நெத்திப் பொட்டில் துப்பாக்கியை வைத்து “டோன்ட் மூவ்” என்று சொல்ல அவன் தொடைகள் ஆட்டம் காண ஆரம்பித்திருந்தன.
“யாருல இது  இங்கிலீசு படத்துல வர்ற மாதிரி கோட்டு சூட்டுல கைல துப்பாக்கியோட இருக்கான்” பஞ்சாயத்து தலைவர் கையை மேலே தூக்கியவாறு பக்கத்தில் இருந்தவரிடம் கேக்க,
“பேசாதீங்க பேசினா சுட்டுடுவான்” என்றான் அவர்.
மொத்த கூட்டமும் ஸ்தம்பித்து நிக்க, மூன்று அடி பின்னாடி நகர்ந்த ஸ்டீவ் அவர்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி இருந்தான்.
தங்கராசு.. “மஞ்சு” என்று கத்தியவாறு பின்னால் செல்ல மஞ்சரி “அப்பா அப்பா” என்று கத்தியதில் ஸ்டீவ் அவரை மட்டும் அதிசனோடு செல்ல அனுமதித்திருந்தான்.
“தம்பி… தம்பி.. நா.. மஞ்சுவோட அம்மா… இது அப்பத்தா..  எங்களையும் போக விடுப்பா…” என்று பொன்னுத்தாயி கெஞ்ச அவர்களையும் விட்டவன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி நின்றிருக்க, ஊர் மொத்தமும் கைகளை தூக்கியவாறு நின்றிருந்த கண்கொள்ளா காட்டிச்சியை படம்பிடிக்க யாராலையும் முடியாமல் போனது. 
“இப்படி துப்பாக்கியை காட்டி இழுத்துகிட்டு வந்தா பிரச்சினை இன்னும் பெருசாகுமே! தவிர குறையாது. முதல்ல என்ன விடுங்க” கோவிலுக்குள் வந்த மஞ்சரி திமிர தங்கராசும் அவர்களிடம் ஓடி வந்திருந்தார்.
“தம்பி யாரு தம்பி நீங்க? என் பொண்ண எங்க இழுத்து போறீக? விடுங்க தம்பி.. அவ பட்ட கஷ்டமெல்லாம் போதும்” கண்ணீர் மல்க தங்கராசு பேச
அவர்தான் மஞ்சரியின் அப்பா என்று புரிந்துக்கொண்ட அதீசன் “மாமா எத்தனை நாளைக்கு உங்க பொண்ண இப்படி பாக்க போறீங்க? இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணாம்?” அதீசன் தீர்க்கமாக கேக்க,
“என்ன உறவுமுறையெல்லாம் சொல்லி பேசுறான். நம்ம சொந்தக்காரனா?” என்று மஞ்சரி அவனையே! ஏறிட அதீசன் அவள் கையை இன்னும் இறுக பிடித்திருந்தான்.
“என்ன தம்பி சொல்லுறீக” என்று தங்கராசு கேக்கும் பொழுது பொன்னுத்தாயியும், பேச்சியம்மாளும் வந்து சேர்ந்திருந்தனர்.
தன்னையே! பார்த்திருந்த மஞ்சரியை பார்த்து கண்சிமிட்டிய அதீசன் “இந்த மாதிரியான பிரச்சினை வரக்கூடாது என்றால் உங்க பொண்ணுக்கு உடனே! கல்யாணம் நடக்கணும். அதுவும் இப்போவே! இந்த கோவிலிலேயே!” மஞ்சரி அதிர்ச்சியாகி அவனை பார்க்க “எனக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுங்க” என்றவனின் பார்வை மஞ்சரியின் முகத்திலையே! நின்றது.
அதீசன் யாரு? என்ன? என்று எதுவும் தங்கராசுவுக்கு தெரியவில்லை. அவன் தோற்றமோ! அவன் வந்த காரோ! அவர் கண்ணுக்கு தெரியவில்லை. தன் மகளை காப்பாற்ற வந்த அவருடைய குலசாமி சாத்சாத் அதிகிருதன் போல் தோன்ற அவனை கட்டிக்கொண்டவர் காலில் விழப்போக அவரை ஒற்றைக்கையால் பிடித்து நிறுத்தியவன்  
“என்ன காரியம் பண்ண போறீங்க?” கடிந்தவாறே “சரி வாங்க கல்யாணம் பண்ணலாம்” என்று சொல்ல அவ்வளவு நேரமும் அழுது கொண்டிருந்த பேச்சியம்மாளும், பொன்னுத்தாயியும் புடவை முந்தியல் கண்களை துடைத்துக்கொண்டனர்.
“ஆத்தா மகமாயி.. என் வேண்டுதல் வீண் போகல. என் பேத்திய காக்க ஒருத்தன அனுப்பிட்டியே!” பேச்சியம்மா சந்தோசமாக கோவிலின் குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி கையெடுத்து கும்பிட பொன்னுத்தாயி மகளைக் கட்டிக்கொண்டு “நான் கும்பிட்ட சாமி நம்மள கைவிடல மஞ்சு” என்றவாறு சந்தோசமிகுதியால் முத்தமிடலானாள்.   
அதீசனுக்கு அவர்களின் சந்தோசத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனாலும் இப்பொழுது நேரத்தைக் கடத்தாமல் திருமணம் செய்து ஆகா வேண்டும்.
தனது குடும்பத்தாரின் பேச்சை வைத்தே! அதீசன் சொந்தக்காரனில்லை என்று புரிந்துக்கொண்ட மஞ்சரி “அப்பா.. என்னால கண்ணாலம் எல்லாம் பண்ண முடியாது” மஞ்சரி அதீசனிடமிருந்து கையை உருவ முயற்சித்தவாறு கூற அதீசன் கையை விடவே! இல்லை.
“அப்படி சொல்லாதே! மா..” தங்கராசு துண்டை வாயில் வைத்துக்கொண்டு குலுங்க
“விட்டா அழுதுகிட்டே இருப்பாங்க போலயே!” அதீசன் மானசீகமாக தலையில் கை வைக்க
“இவ இப்படித்தான் பேசுவா… வா பொன்னு… கண்ணாலத்த பண்ணலாம்” என்ற பேச்சியம்மா விறுவிறுவென கோவிலுக்கு வெளியே சென்று மஞ்சள் கயிற்றில் மஞ்சளை கட்டி இரண்டு மாலைகளையும் வாங்கிக்கொண்டு வந்து அதீசனின் கையில் கொடுத்தவர் “கட்டுப்பா… பேராண்டி..” என்று சொல்ல மஞ்சரி தலையசைத்து மறுத்தாள்.
“என்ன டி உன்ற கைய கால கட்டி வச்சி தாலி கட்டணுமால” பழைய பேச்சியம்மாளாக அவதாரம் எடுத்திருக்க,
“அப்பத்தா என்ன பேசுறீக, அன்னக்கி இப்படித்தான் பேசி என் மனச மாத்தினீக. இன்னக்கி அது நடக்காது” மஞ்சரியும் விடாது பிடிவாதம் பிடிக்க,
“சொன்ன கேளுல இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பஞ்சாயத்து முன்னாடி நின்னு அவமானப்பட போறிக?”
“அதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியாகுமா? இவரு யாரு என்ன என்று தெரியுமா? இவருக்கு என்ன கல்யாணம் பண்ணி கொடுக்க போறீங்க? என்ன கொண்டு போய் பாம்பேல இல்லனா கல்கத்தால வித்துட்டார்னா உங்களுக்கு என்ன உசுரோட பார்க்க கூட முடியாம போய்டும்”
அதீசனின் வாய் “அடிப்பாவி” எனும் பொழுது தங்கராசு, பொன்னுத்தாயி, பேச்சியம்மா மூவரும் பயத்தோடு அவனை பார்த்திருந்தனர்.  
“யாருக்கு தெரியும், துப்பாக்கி எல்லாம் வச்சிருக்காரு, ஒருவேளை இவரு உங்க அருமை பேரன் ஏற்பாடு பண்ண ஆளா கூட இருக்கலாம்” என்று முடிக்க வாயடைத்துப் போனான் அதீசன்.
மூன்று வருடங்களாக இவளை தேடாத இடமில்லை. கண்டு கொண்ட நிம்மதியில் பேச கூட விடாமல் வேலை இழுத்துக்கொண்டது. இவளுக்கு இங்கு ஆபத்து என்றதும்தான் மனம் இப்படி அடித்துக்கொண்டிருந்திருக்கிறது. இங்கு வந்த பிறகுதான் இவளுக்கு விவாகரத்து ஆனதும் தெரியும். அது கூட பிரச்சினை இல்லை என்பது போல் அதீசன் அவளை திருமணம் செய்ய எண்ணினால் அவனை பற்றி அவள் ரொம்ப உயர்வாக நினைத்து இருக்கிறாள்.
அவளையே! பார்த்திருந்தவன் “உனக்கு நான் யார்னு தெரியாதா?” என்று கேக்க மஞ்சரியிடத்தில் மௌனம் மட்டுமே!
அவளுக்குத்தான் அவனை தெரியுமே! பாடசாலை கட்டிடத்தைக் காட்டிக்கொடுக்க வந்த காண்ட்ராக்ஷன் கம்பனிக்காரன் என்று. திருமணத்தை மறுக்க இப்படி கூறினால்தான் உண்டு.
“தம்பிய தெரியுமா உனக்கு” தங்கராசு கேக்க,
“மேடமும் நல்லாவே! தெரியும். நான் சொன்னது ஸ்கூல் ப்ரின்சிபாலுக்கு. ஆனா இப்போ அவங்கள கூட்டிட்டு வந்து விசாரிச்சு கிட்டு இருக்க நேரமில்லை” என்ற அதீசன் மஞ்சரி எதிர்பார்க்காத நேரம் அவளை தன்னோடு சேர்த்தணைத்து மூன்று முடிச்சுக்களையும் கட்டியிருந்தான்.
மஞ்சரி அவன் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு விலக முயற்சிக்க, அவள் காதுமடல் உரச “என்ன விட்டு உன்னால எங்கும் போக முடியாது கண்ணம்மா” என்றவன் அவளை விட்டு விலகி “பாட்டி மாலையை கொடுங்க மாலையை வாங்கி அவள் கழுத்தில் போட்டு விட்டு “சீக்கிரம் போடு… பஞ்சாயத்து காரங்களை ரொம்ப நேரம் காக்க வைக்க முடியாது” என்று புன்னகைக்க முறைத்தவாறே மாலையை போட்டாள்.
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி” என்று பேச்சியம்மாள் காலில் விழ கண்ணீரோடு வாழ்த்தியவர் கடவுளையும் வேண்டிக்கொண்டார்.
தங்கராசு மற்றும் பொன்னுத்தாயியின் காலில் விழுந்து எழ அவர்களும் வாழ்த்திய பின்  அனைவரும் சாமியை கும்பிட்டு விட்டே கோவிலை விட்டு வெளியேறினர்.
விஷயம் கேள்விப்பட்டு முதல்வர் அமுதவேணியும் அடித்துப்பிடித்து ஓடிவர கோவிலிலிருந்து இவர்கள் வெளியே வரவும் சரியாக இருந்தது.
“மஞ்சரி என்னமா ஆகிருச்சு…” என்றவாறு வந்த அமுதவேணி அதீசனைக் கண்டு “நீங்க எஸ்.எஸ். கான்ஸ்ட்ரக்ஷனோட எம்.டி மிஸ்டர் அதீசன் இல்லையா?” என்றவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் இருவரையும் மாறிமாறி பார்த்தவர் “வாழ்த்துக்கள்” என்று இருவருக்கும் கூறி “மஞ்சரி இனி உன் வாழ்க்கைல எந்த பிரச்சினையும் வரதுமா…” என்று புன்னகைக்க, மஞ்சரி எதுவும் பேசவில்லை.
மாலையும் கழுத்துமாக வரும் மஞ்சரியை முத்துப்பாண்டி வஞ்சமாக பார்த்துக்கொண்டிருக்க, “யேன்க சாரே! நீங்க பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னு இழுத்துக்கொண்டு போய் தாலிய கட்டி புட்டிக? பஞ்சாயத்துக்குனு ஒரு மருவாதி இருக்கு” காதை குடைந்தவாறே ஸ்டீவை பயப்பார்வை பார்கலானார் அந்த உடல் பருமனானவர்.
அவர்தான் பஞ்சாயத்து தலைவர் என்று புரிய “தலைவரே! வாங்க பஞ்சாயத்து பிரச்சினையை தீர்த்து வைக்கலாம் என்றவன் ஸ்டீவுக்கு கையால் செய்கை செய்தவாறே வர அவனும் அதீசனின் அருகில் வந்து நின்று கொண்டான்.
ஆல மரத்தடியில் பஞ்சாயத்து தலைவர் உட்பட, அதை சார்ந்தவர்கள் அமர்ந்திருக்க, ஊர் மொத்தமும் அவர்களுக்கு முன்னால் கூடி இருக்க, வலது புறத்தில் அதீசன் மஞ்சரி ஜோடியோடு ஸ்டீவ், அமுதவேணி, தங்கராசு, பேச்சியம்மாள், பொன்னுத்தாயி நின்றிருக்க, இடது புறத்தில் முத்துப்பாண்டியும் அவனுக்கு ஜால்றா அடிக்கும் கூட்டமும் நின்றிருந்தனர்.
“அது எப்படிங்க பஞ்சாயத்து நடக்குறப்போ…” என்று முத்துப்பாண்டி பேச்சை ஆரம்பிக்கும் பொழுது ஸ்டீவ்  துப்பாக்கியால் நெற்றியை சொரிய முத்துப்பாண்டியின் குரல் உள்ளே! சென்றது.
“தலைவரே! இது இங்க நிக்குறவன் மஞ்சரியோட முன்னால் புருஷன் அதான் விவாகரத்து ஆகிருச்சு இல்ல. அப்பொறம் எதுக்கு மஞ்சரி என்ன? பண்ணுறா? எங்க போறா? வரான்னு? நோட்டம் விட்டுகிட்டு இருக்கான்?” அதீசன் கேக்க, மஞ்சரி கையை கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்கலானாள்.
“ஆமா அப்பு… இவன் இந்த ஊர்க்காரனே இல்ல. இங்க வந்து தங்கி இருக்கான்” அதீசன் வண்டியில் அழைத்து வந்த கிழவி சொல்ல
“ஏய் கிழவி” என்று கத்திய முத்துப்பாண்டி ஸ்டீவின் பார்வையில் அப்படியே! அமைதியானான்.
“பேச்சியம்மாதான் பேரனுக்கு சொத்துல பாதிய எழுதி கொடுத்திருக்காகளே! அதான் முத்துப்பாண்டி இங்கன நிக்கான்” என்று ஒரு பெருசு சொல்ல, அதீசன் பாட்டியை பார்க்க,  பேச்சியம்மா முத்துப்பாண்டியை முறைத்துக்கொண்டிருந்தாள்.
“சரி அதவிடுங்க இப்போ இங்க என்ன பஞ்சாயத்து போய் கிட்டு இருந்தது?” அதீசன் விசாரிக்க,
“அதோ! அந்த மாஸ்டர் கூட மஞ்சரி பொண்ணு தனியா நின்னு பேசிகிட்டு இருந்திருக்கா.. அதுக்குதான்ல இந்த பஞ்சாயத்து” என்று ஒருவர் சொல்ல
“பேசினத்துக்கு எல்லாமா டா பஞ்சாயத்து பண்ணுவீங்க?”அதீசனின் மனதுக்குள் பொறுமியவாறே! “பேசிக்கிட்டுதானே! இருந்தாங்க? என்னமோ! நடு ரோட்டுல தப்பு பண்ண மாதிரி பஞ்சாயத்தை கூட்டி வச்சிருக்கீங்க? அத விடுங்க மஞ்சரி இப்போ என் பொண்டாட்டி எவனாச்சும் நாக்குல நரம்பில்லாம பேசினா… நான் சும்மா இருக்க மாட்டேன்” நாக்கை கடித்தவாறு முத்துப்பாண்டியின் கூட்டத்தை பார்த்து எச்சரிக்கை செய்ய
“பஞ்சாயத்தை அவமரியாதை செய்றது போல பஞ்சாயத்து நடக்கும் பொழுது அந்த புள்ள கைய புடிச்சி இழுத்து போனது தப்புல. அதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கணும்ல” என்று முத்துப்பாண்டியின் பக்கம் நின்ற ஒரு பெருசு பேச
போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் என்று அதீசனுக்கு அவர்களை புறக்கணித்து விட்டு செல்ல ஒரு நிமிடம் கூட எடுக்காது. அவர்களை ஒரு துப்பாக்கி முனையில் வைத்து விட்டுத்தானே! மஞ்சரியின் கழுத்தில் தாலியைக் கட்டி இருந்தான்.
அவன் மஞ்சரியை அழைத்து சென்று விடுவான். தங்கராசு பிறந்து, வளர்ந்த ஊரை விட்டு வருவாரா? கிராமத்துக்காரங்களுக்கு செண்டிமெண்ட் ரொம்பவே! அதிகம் அவன் எவ்வளவு கட்டிடங்களை இடிக்கும் பொழுது பார்த்திருக்கின்றான்.
முதலில் மஞ்சரி ஊர் பாடசாலையை விட்டு வர மாட்டேன் என்று கூறி விட்டால்? அவளை குண்டுக்கட்டாக தூக்கி வண்டியில் ஏத்த வேண்டியதுதான். அவன் மனம் கேலி செய்ய, எப்படி இருந்தாலும் பாடசாலைக் கட்டிடத்தைக் கட்டிக்கொடுக்கும் பொறுப்பு அவனுடையது. அவனும் சில நாட்கள் தங்க வேண்டி இருக்கும், வந்து போக வேண்டி இருக்கும். ஊர்க்கார்களை பகைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. இவர்களை சமாளித்துதான் ஆகவேண்டும்.
“ஆமா தம்பி பட்டணத்துக்காரங்களுக்கு ஊர்க் கட்டுப்பாடு என்னனு தெரியாதுல. பொசுக்குன்னு துப்பாக்கியை வேற காட்டிபுட்டிக” என்று பஞ்சாயத்து தலைவர் பேச
இவர்களை எப்படி மடக்க வேண்டும் என்று அதீசனுக்கு தெரியாதா? “தப்புதான் தலைவரே! நீங்களே! சொல்லுங்க மூணு வருசமா இவங்க தேடிகிட்டு இருக்கேன். கண்டு புடிச்சி வந்தா இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைல இருக்காங்க, எனக்கு சரினு பட்டத்தை செஞ்சேன். அவங்க பக்கத்துலையும் எந்த தப்பும் இல்லனு தெரியுது. அப்போ பஞ்சாயத்தை கூட்டி நேரத்தை வீணடிச்சி இருக்காங்க” என்று முத்துப்பாண்டியை முறைக்க,
“அவ ஒன்னும் பத்தினி இல்லல” முத்துப்பாண்டி வாய் திறந்ததும்
“அடேய் எடுபட்ட பயலே! யாரப் பார்த்து என்ன பேச்சு பேசுறியால?” என்ற பேச்சியம்மா பாய்ந்து சென்று முத்துப்பாண்டியின் கன்னத்தில் அறைந்திருக்க, முத்துப்பாண்டி பேச்சியம்மாவை தள்ளி விட்டிருந்தான்.
அதீசன் பாய்ந்து பேச்சியம்மா விழுந்து விடாதவாறு தாங்கிப் பிடித்து நிறுத்தியவன் “நாங்க துப்பாக்கியை நீட்டினத்துக்கும், இவன் பெரியவங்கள தள்ளி விட்டதுக்கும் சரியா போச்சு இல்ல தலைவரே!” என்று கேக்க,
“எலே முத்துப்பாண்டி… இப்படி நடந்துக்கொண்டா உன்ற மேலயும் பஞ்சாயத்து வைக்க வேண்டி இருக்கும் தெரிஞ்சிக்கல”  என்றார்.
“இங்க பாருங்க இன்னும் பேசி பஞ்சாயத்து நேரத்தை நான் வீணடிக்க விரும்பல” தான் யாரு, என்ன என்று சொன்னவன் இந்த ஊருக்கு எதற்காக வந்திருப்பதாகவும் கூற அமுதவேணியும் ஆமோத்தித்தாள். “நான் பண்ண தப்புக்கு ஊர் கோவில் பழுதுகளை சரி பார்த்து புதுசா பெயிண்ட் பண்ணி கொடுத்துடுறேன். இன்னும் மூணு மாசத்துல திருவிழா வேற வருதில்ல” என்று அதீசன் பேச அமுதவேணி அவனை மெச்சுதலாக பார்த்தாள்.
பஞ்சாயத்து தலைவரும் பஞ்சாயத்து போர்டு மெம்பராசுக்கும் அதை ஏற்றுக்கொண்டு பஞ்சாயத்தைக் கலைக்க, ஸ்டீவ் வாயருகே! துப்பாக்கியை கொண்டு வந்து ஊதியத்தில் முத்துப்பாண்டி கப்சிப் என்றானான்.
“என் ராசா எம்.சி.ஆரு கணக்கா வந்து புள்ளய கண்ணாலம் கட்டிக்கிட்டியேல்ல” கிழவி வந்து அதீசனின் நெற்றி முறித்து விட்டு “அடியேய் பேச்சி… சீமைல இருந்து தொர கணக்கா பேரன் வந்திருக்கான் வாய்க்கு ருசியா நல்லா ஆக்கிப்போடுல”
“சரி… நாச்சியக்கா… நீயும் ஒரு எட்டு வந்து சாப்பிட்டு போல” என்றவாறு நாச்சியார் பாட்டியிடம் விடைபெற்று அனைவரும் அதீசனின் காரில் வீட்டுக்கு கிளம்பி இருந்தனர். 

Advertisement