Advertisement

அத்தியாயம் 9
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா.
“என்னாச்சு? என்னாச்சு?” சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க
அவளை பார்த்து கும்பிட்டவன் “கொஞ்ச நேரம் பேசாம வரியா? காது ரெண்டும் நொய்ங்குது” என்று ஸ்டியரிங் வீலில் தலை சாய்த்து படுத்துக்கொள்ள, வண்டி நின்றதும் கனகவேல் ராஜாவால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு படையினர் கிருஷ்ணாவின் வண்டியின் அருகில் வந்திருந்தனர்.
இரண்டு பேரோடு ஒரு வண்டி போதும் என்று கிருஷ்ணா சொல்ல, நா உனக்கு அப்பன்டா என்று அவரும் கிருஷ்ணா சொல்வதை மதிக்காமல் கிருஷ்ணாவின் வண்டிக்கு முன்னால் ஒரு வண்டி பின்னால் ஒரு வண்டி என்று இரண்டு வண்டிகளும் ஒரு வண்டிக்கு நாலு பேர் என்று பாதுகாப்பு படையினரை அனுப்பி இருந்தார்.
அதில் ஒருவர் வந்து கண்ணாடியை தட்ட கிருஷ்ணா கண்ணாடியை திறந்த நொடி “வண்டில என்ன பிரச்சினை? தம்பி” காரணம் இல்லாமல் கிருஷ்ணா வண்டியை இந்த இடத்தில் நிறுத்த மாட்டான் என்று கேட்க,
“வண்டில எங்க அண்ணே! பிரச்சின? வண்டிக்கு உள்ளதான் பிரச்சின” என்ற அவன் மைண்ட் வாயிசை இழுத்து நிறுத்தி, “தலை வலிக்குது, தண்ணி குடிக்கலாம்னு நிறுத்தினேன். நீங்க யாராச்சும் வண்டிய எடுக்குறீங்களா?”
“சரிங்க தம்பி. நீங்க பின்னாடி உக்காருங்க” என்று அவரே! ஓட்டுநர் இருக்கைக்கு வர கிருஷ்ணா மறந்தும் பின்னாடி உக்காரவில்லை. அவரை பாவமாக ஒரு பார்வை பார்த்து விட்டு கோதையை பின்னாடி அமர சொன்னவன் முன்னாடி ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்துகொள்ள, எங்கே அவர் வண்டிய இயக்குவார் என்று காத்திருந்த கோதை பேச ஆரம்பித்தாள்.
“பிளேடு போட ஆரம்பிச்சிட்டா” என்று முணுமுணுத்த கிருஷ்ணா ஹெட்போனை காதில் மாட்டி கண்ணாடியில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள அந்த பாதுகாவலரிடம் பேச ஆரம்பித்தவள் குடைந்து எடுக்கலானாள். க்ரிஷ்ணாவால் அவருக்காக பரிதாபப்பட மட்டும்தான் முடிந்தது.
முதலிரவு அறையில் கிருஷ்ணா கத்தவும் “எதுக்கு இப்போ கத்துறீங்க? நீங்க கத்துறது வெளிய கேட்டா, அத்த என்ன தப்பா நினைக்க மாட்டாங்களா?”
என்னமோ! கோதை கிருஷ்ணாவிடம் தப்பாக நடந்துகொள்ள முயற்சிப்பதாகவும், கிருஷ்ணா அவளிடமிருந்து தப்பித்து ஓடுவதுமாக அவள் சித்தரிக்க,
“ஐயோ ராமா என்னால முடிய”
“என்னங்க நீங்க க்ரிஷ்ணர்னு பேர வச்சிக்கிட்டு ராமரை கூப்பிடுறீங்க தப்பில்ல” அதற்கும் பதில் சொல்ல கிருஷ்ணா அவளை நன்றாக முறைக்கலானான்.
யசோதா ஒரு கிருஷ்ணர் பக்த்தை. அதனாலே! தன் மகனுக்கு ஆசையாசையாக கிருஷ்ணா என்று பெயர் சூட்டி அழகு பார்த்திருந்தாள். தனக்கு வாய்த்த கணவன் இப்படி ஆனதில் ராமரை கும்பிட ஆரம்பித்து அடிக்கடி “ராமா ராமா” என்று சொல்வதை கேட்டு வளர்ந்தவன் கிருஷ்ணா. பெரிதாக கடவுள் நம்பிக்கையும் இல்லை. அவன் சூழ்நிலை கோவில்களுக்கும் போக முடிவதில்லை. இன்று அவன் மனைவியின் புண்ணியத்தால் முதலிரவின் போது ராமரை அழைக்க தூண்டப்பட்டிருந்தான்.
“அடியேய் இப்போ உனக்கு என்னதான் டி வேணும்?” நொந்தவனாக கிருஷ்ணா கேட்க,
“எனக்கு ஒன்னும் வேணாம். தூக்கம் வருது தூங்கவா?” குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் கோதை.
“போய் தூங்குடி.. நீ தூங்கும் போதாவது நான் நிம்மதியா இருக்கேன்” அடிக்குரலில் சீறினான் கிருஷ்ணா.
பேசி புரியவைக்க வேண்டும் என்று எண்ணி இருந்தவனை பேசிப்பேசியே! கடுப்பேற்றி இருக்க, விட்டால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளி இருந்தாள் அவன் மனையாள்.
“என்ன தூங்க சொல்லிட்டு நீ என்ன செய்ய போற? பலான படம் ஏதாவது பாக்க போறியா?”
அப்பா மாப்பிள்ளை பாத்திருக்கிறேன் என்றதும் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணிலாலே! ஒழிய கல்யாண கனவோ! முதலிரவை பற்றின நினைவோ! கோதைக்கு தோன்ற வில்லை.
ஏன் யுவனை சந்தித்த போது கூட பெரிதாக ஆசைகள் முளைக்கவில்லை. கிருஷ்ணா இரண்டு வருடங்களாக அவளை காதலித்தான் என்றதும் அவள் மனதில் மழை சாரல் தூவி இருக்க, அவனை அறிந்துகொள்ளும் ஆசைதான் அதிகரித்திருந்தது.
இதில் தோழிகள் சொன்ன பெரிய வீட்டு பையன், மலர் தாவும் வண்டு, அது இது என்ற பேச்சுக்கள் அவள் மனதை ஒரு பக்கம் குழப்பாமல் இல்லை. எல்லாம் சேர்ந்துதான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்திருந்தாள் கோதை.
மிகவும் சாதாரண முகபாவனையில் அதுவும் முன்ன பின்ன தெரியாத கணவனிடம், முதலிரவின் போது ஒரு மனைவி கேட்கும் கேள்வியா இது?
பல்லைக் கடித்தவன் “நான் சும்மா இருந்தாலும் சண்டாளி நீ சும்மா இருக்க விட மாட்ட போல இருக்கே! நானும் தூங்கத்தான் டி போறேன்” என்ற கிருஷ்ணாவின் கோபம் எல்லை கடக்க, நெஞ்சை நீவிக்கொண்டான்.
அப்பொழுது ஷார்ட் பாக்கெட்டில் சுவிங்கம் பெக்கட் தட்டுப்பட அதை பிரித்து ஒரேயடியாக மூன்றை வாயிற் திணித்து மெல்ல ஆரம்பித்தான்.
பொறுமையாக பேசி புரியவைக்கலாம் என்றிருந்தவனை பேசிப்பேசியே! கடுப்பேத்தி இருக்க, இவளிடம் பேசி புரிய வைக்க முடியாது என்று புரிந்து கொண்டவனிடம் இவ்வாறெல்லாம் கேள்வி கேட்டாள் அவன்தான் என்ன பதில் சொல்வான்.
“விட்டா டீடைலா பாடம் எடுத்து எக்ஸாம் வைப்பா போலயே! ஒருவேள போட்டு வாங்குறாளோ!” சந்தேகமாக அவளை பார்க்க
கிருஷ்ணாவின் பார்வை மாற்றத்தை கண்டுகொண்டவள், இன்னக்கி இது போதும் என்று நினைத்தாளோ அவள் சென்று கட்டிலில் விழுந்து தலையணையை கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருக்க, கிருஷ்ணா தான் தூக்கம் கெட்டு அவளையே! பாத்திருந்தான்.
“யார் டி நீ. நான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டது உன்ன பழிவாங்கனு சொல்லுற ஆனா நடக்குறது எல்லாம் பார்த்தா நீ என்ன பழிவாங்குறது மாதிரி இல்ல இருக்கு. இப்படி பச்….சயா பேசுற. கொஞ்சம் கூட கூச்சமே! இல்லாம” எனறவனுக்கு சந்தேகம் வர யாரையோ அழைத்து கோதை என்று தன்னோடு பேசிய நபர் எந்த எண்ணிலிருந்து பேசினாரோ! அது யாருடைய அலைபேசி எண் என்று கண்டுபிடித்து சொல்லுமாறு கூறி அலைபேசியை துண்டித்தான்.  
 கோதையின் மறுபுறம் வந்து படுத்துக்கொண்டவன் அவளையே! வெகுநேரம் பார்த்தவாறு யோசிக்கலானான்.
“உண்மையிலயே! என் கூட பேசினது நீ இல்லையா? நீ பேசுறது செய்யிறது எல்லாம் ரொம்ப நாள் பழகின மாதிரியே! இருக்கு”
பெருமூச்சு விட்டவன் “இதுக்குதான் அப்பா பேச்சு கேக்கணும்னு சொல்லுறது. பேசாம அப்பா பார்த்த மாலுவ கல்யாணம் பண்ணி இருக்கணும். அந்த அர்ஜுன் குரங்கு மட்டும் என் வாழ்க்கைல குறிக்கிடலனா இந்நேரம் சாந்த சுரூபியான மாலினிய கல்யாணம் பண்ணி ஜாலியா அமெரிக்கால செட்டில் ஆகி இருப்பேன். நாசமா போறவன் எனக்கேன்னே வந்து தொலஞ்சான். மாலினிய கல்யாணம் பண்ணி அவ கூட அமேரிக்கா போய் இருந்தா அன்னக்கி ஏர்போர்ட்டுல நான் உன்ன பாத்திருக்கவும் மாட்டேன். இன்னக்கி எனக்கு இந்த நிலமையும் வந்திருக்காது. டேய் அர்ஜுன் எனக்கு முதல் எதிரியே! நீதான் டா…”
கோதையை தான் காதலிப்பதையும் மறந்து, தான் காதலிக்காத மாலினியை அப்பா பார்த்த பெண் என்பதையும் தாண்டி தனது சிறு வயது தோழி என்பதால் அவள் தன்னை மறந்து விட்டாள், நண்பன் காதலிக்கிறான் என்று அறிந்துகொண்ட நொடி எங்கே! மாலினி தன் மீது காதல் கொண்டு விடுவாளோ!! என்று அவள் நெருங்கும் பொழுதெல்லாம் அவளை விரட்டியடித்தவன் கோதை செய்த சேட்டையால் உளர ஆரம்பித்திருந்தான். இதை மட்டும் கோதை கேட்டிருந்தால்?
 புலம்பிக்கொண்டிருந்தவனுக்கு பொறி தட்டியது போல் கோதையின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் வரிசையாக நியாபகத்தில் வந்து கண்முன் நிழலாடியது.
“அடிப்பாவி உன் கிட்ட எப்படி பேசி புரியவைக்க போகிறேன் என்று நான் இருந்த டென்ஷன்ல நீ என்ன பேசுறேன்னு ஒழுங்கா கவனிக்கல. முதலிரவன்னைக்கி ஒரு புருஷன் கிட்ட கேக்குற கேள்வியா டி… “எனக்கு இது பாஸ்ட் டைம் உனக்கு எப்படி?” நான் வேற மாதிரி பதில் சொல்லி இருந்தா என்ன டி பண்ணுவ? உன் மண்டையில நங்கு நங்குன்னு நல்ல கொட்டணும் டி. சரியான இம்ச.
அப்பொறம் என்ன கேட்ட? தூங்காம பலான படம் பாக்க போறியா? நானே! பட்டு பட்டுனு பேசுறவன் டி.. என்னையே! மிஞ்சுரியே! உன்ன எப்படி அடக்கணும்னு எனக்கு தெரியும் இரு டி பாத்துக்கிறேன்” கருவியவன் தூங்கியும் போனான்.
கிருஷ்ணா காலையில் எழும் பொழுது கோதை இல்லை அதுக்குள்ள எந்திரிச்சி போய்ட்டாளா? இந்த மாதிரி நல்ல பழக்கம் எல்லாம் இருக்கா? நம்ப முடியல” குளித்து அறையை விட்டு வெளியே! வந்தவனுக்கு காணக் கிடைத்தது பூஜையறையில் விளக்கேத்திக் கொண்டிருக்கும் மனைவியைத்தான்.
“டேய் பேரான்டி  நீயும் போய் சாமி கும்பிட்டு வா” வடிவுப்பாட்டி பத்திரிக்கையும் கையுமாக சொன்னார்.
நேற்று இரவு உணவுக்கு பின் அபரஞ்சிதா அன்னையிடம் மகளை ஒப்படைத்து விட்டு கணவன் மற்றும் மகனோடு கிளம்பி சென்றிருக்க, யசோதா அவரை பார்த்துக்கொள்வதாக கூறி இருந்தாள். 
“பழக்கமில்ல பாட்டி”
“பழகிக்க.. ஆமா.. என் பேத்தி அந்த திமிரு புடிச்ச கழுத உன் கிட்ட நல்ல முறைல நடந்து கிட்டாளா? கால்ல விழுந்தாளா?”
“ஆ விழுந்தா விழுந்தா” கோதையை பார்த்தவாறு நேற்று இரவு நடந்தை நினைத்து புன்னகைக்க,
“நீ சிரிக்கிறத பார்த்தா… ஆணுக்கு பெண் சமம்னு சொல்லி நீயும் அவ கால்ல விழுந்திருப்ப, இல்ல அவளே! உன்ன கால்ல விழ வச்சிருப்பா”
“பேத்தி இம்ச பத்தாதுன்னு. பாட்டி இம்சய வேற இங்க வச்சிட்டு போய் இருக்காங்க. இத கிழவினு ஏன் கூப்பிடுறாங்கனு இப்பதான் புரியுது. பார்க்கத்தான் பாட்டினா இப்படி இருக்கணும்னு எண்ணம் தோணும். பேசினா?…” முணுமுணுத்தவன் 
“அம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க” வடிவுப்பாட்டியின் பேச்சு காதில் விழாதது போலவே! அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் கிருஷ்ணா.  
“டேய் இப்போ உனக்கு கல்யாணம் ஆகிருச்சு. உன் பொண்டாட்டியோட வந்து சாப்பிடு. அவளுக்கு சொல்லு பரிமாற சொல்லி” முதலமைச்சர் வெளியே செல்லும் பொழுது சொல்லியவாறு செல்ல.
“ஆமா வீட்டுல ஒரு தொல்லை பத்தாதுன்னு தாலி கட்டி ஒரு இம்சய கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன். சாப்பிடும் போது கூட அத மடில கட்டிக்கணுமா?” என்றவாறு தனியாக சாப்பாட்டறையில் வந்தமர்ந்தான் கிருஷ்ணா.
“டேய் கிருஷ்ணா சாப்பிட்ட உடனே! நீயும் மருமகளும் ஊருக்கு கிளம்புறீங்க” மகன் பசி தாங்க மாட்டான் என்று அறிந்த அன்னை மருமக்களுக்காக காத்திருக்காமல் பரிமாற ஆரம்பித்தாள். 
“எதுக்குமா…”
“குறுக்க குறுக்க பேசாத டா வெண்ண மவனே!” யசோதா கடுப்பாக
“இரு இரு அப்பாகிட்ட போட்டு கொடுக்குறேன்” அன்னை மற்றும் மகனின் முகத்தில் புன்னகை தானாக மலர்ந்தது.    
“சொல்லுறத கேளுடா என் உசுர வாங்காத. உனக்கு கல்யாணம் ஆகிருச்சுனு அக்காக்கு போன் பண்ணி சொன்னேன். தாத்தா வேற உன் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட கொண்டு போய் காட்டி இருக்காரு உனக்கு நேரம் சரியில்லையாம். கவனமா இருக்க சொன்னாரு”
“என்னது நேரம் சரியில்லையா? அது சரி சனியன தூக்கி பெனியன்ல இல்ல வச்சி இருக்கேன். நீ மேல சொல்லு”
“குலதெய்வத்துக்கு ஒரு பூஜ பண்ணா எல்லாம் சரியாகும் என்று தாத்தா சொல்லுறாரு. ரெண்டு பேரும் உடனே! கிளம்புங்க”
இப்போவே! கிளம்ப வேண்டுமா? முகம் சுருங்கியவன் கோதையை கோர்த்து விட எண்ணி “என் பொண்டாட்டிகிட்ட சொல்லிடீங்களா? அவ ரெடியாக லேட்டாகும்”
“சொல்லிட்டேன்” எனும் பொழுதே! கோதை வர “நீயும் வந்து சாப்பிடுமா” என்றாள் யசோதா.
“தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற இல்ல. அவவங்க பசிக்கு அவவங்கதான் சாப்பிடணும்” கோதை பேச முன் கிருஷ்ணா பேச
தான் சொல்லப்போனதை சரியாக கணித்து பேசுபவனை என்ன செய்வது என்று பார்த்தவள் “ஆமா..ஆமா..” என்று சமாளித்தாள்.
“ஏன் மா இவனுக்காக காத்திருக்காத பாலாவது குடினு சொன்னேனே! கேட்டியா?  இவன் என்னடான்னா உன்ன விட்டுட்டு சாப்பிடுறான்” என்று யசோதா சொல்ல
“ராத்திரி பூரா தூங்காம வச்சிருந்த முந்திரி, பாதம், ஆப்பில்லு சாப்பிட்டா பசிக்குமா இவளுக்கு” என்ற கிருஷ்ணா கோதையின் புறம் திரும்பாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க, யசோதா இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள்.
“என்ன இவன் என்ன பேச விடக்கூடாது என்றே பேசுறான். இது சரியில்லையே!” என்று கோதை யோசிக்க,
சாப்பிட்டு முடிந்து கை கழுவியவாறே கிருஷ்ணா “சீக்கிரம் சாப்பிடு ஊருக்கு வேற போகணும்” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு செல்ல,
“என்ன ரொம்ப ஓவரா பண்ணுறான். என்னையே! மிரட்டுறியா? இருடா உன்ன வச்சிக்கிறேன்” கருவினாள் கோதை. 
 கோதையின் வீட்டாருக்கு அலைபேசி வழியாக தகவலை சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று பார்த்தல் வடிவுப் பாட்டியும் அவர்களோடு வருவதாக பிடிவாதம் பிடிக்கலானார்.
அவரை பின்னால் வரும் வண்டியில் ஏற்றிய கிருஷ்ணா கோதையோடு தனியாக பயணிக்க அவர்களின் முன்னால் ஒரு வண்டி என்று முதலமைச்சரின் ஏற்பாட்டில் பலத்த பாதுகாப்போடு யசோதாவிடம் விடைபெற்று கொண்டு ஊருக்கு கிளம்பி இருந்தனர் இளம் திருமண ஜோடி.    
வண்டி கிளம்பி ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்கவில்லை “கொஞ்சம் வண்டிய நிறுத்திருயா? பசிக்குது அந்த கடைல ஏதாச்சும் வாங்கிக்கலாம்”
யசோதா வழியில் சாப்பிட என்று பலவகையான உணவுகளை கட்டிக் கொடுத்திருக்க, அவைகளை தொட்டும் பார்க்காமல் கடையில் வண்டியை நிறுத்த சொல்பவளை என்னவென்று சொல்ல? முறைத்து பார்த்தவன் பாதுகாப்பு கருதி முடியாது என்று சொல்லி விட்டான்.
அதன்பின் அவள் அவதாரம் வேறு மாதிரி இருந்தது. ரோடா இது? உங்கப்பன் முதலமைச்சராக இருந்து என்ன சாதிச்சாரு? ஓட்டு போடுற மக்களை சொல்லணும். பாக்குற இடமெல்லாம் பள்ளம் தோண்டி வச்சி இருக்காங்க, விட்டா கிணறு வெட்டி தண்ணீரே! எடுக்கலாம் போலயே!”
கிருஷ்ணா முறைப்பதையும் பொருட்படுத்தாது “என்ன சென்னைல வெளில இப்படி மண்டைய பொளக்குது. உங்கப்பாக்கு ஓட்டு போட்ட மக்களை சொல்லணும்”
“சென்னை வெயிலுக்கும் எங்க அப்பாகும் என்ன டி சம்பந்தம்?” கடுப்பானான் கிருஷ்ணா.
“பின்ன? வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கணும் என்று சட்டம் போட்டா வெயில் தணியும், அத்தோட மழையும் கிடைக்கும்”
“ரொம்ப அறிவாளி மாதிரி பேசாத, சென்னைல மழையே! பெய்யாதா? வெள்ளமே! வரலையா?”
“ஏன் வராம? ஏரியையும், குளம் குட்ட என்று எல்லாத்தையும் நிரப்பி அடுக்குமாடிகள கட்டி வச்சா தண்ணி போக இடமில்லாம வீட்டுக்குள்ளதான் வரும்” அதற்கும் கனகவேல் தான் கரணம் போல் கிருஷ்ணாவை முறைத்தாள் அவன் மனைவி.
“அதுக்கு இப்போ என்ன பண்ணலாம். மக்கள் குடியிருக்கிற வீட்டை எல்லாம் இடிச்சிடலாமா?”
“ஆமா.. ஆமா.. உன் புத்தி உங்க அப்பா மாதிரி தானே! வேலை செய்யும். நல்லா இருக்குற உடைக்கணும் அப்படி தானே!”
“இப்போ என்ன சொல்லவர?”
“எங்க குடும்பம் ஒத்துமையாக ஒன்னு சேர போற நேரத்துல கரெக்ட்டா வந்து உடைச்சிட்ட  இல்ல” கோதை சிரிக்காமல் சொல்ல
அவளை திரும்பி முறைத்தவன் “ஆமா நான் வரலைன்னா நீ அன்னக்கி அப்படி பேசி இருக்கவும் மாட்ட, உங்க அம்மாவ பத்தின உண்மைகள் தெரிய வந்திருக்கவும் மாட்டாது”
“தங்க யு” அவன் முகம் பார்த்து சொன்னாள் கோதை.
“என்ன சொன்ன?” கிருஷ்ணா ஆச்சரியமாக அவள் புறம் திரும்ப
“ரோட்டை பாத்து வண்டிய ஓட்டுங்க, காது கேக்கலையா”
“நன்றி சொல்ல கூட நேரடியா சொல்ல மாட்டாளா? சுத்தி வளைச்சி கடுப்பேத்திதான் சொல்வாளா? என்ன டிசைனோ!” கிருஷ்ணாவுக்கு தலைவலியே! வந்திருக்க,
அதை உணராமல் கோதை தன் குடும்பத்தை பற்றியும், ஊரை பற்றியும் பெருமையாக பேச ஆரம்பிக்க கிருஷ்ணாவுக்கு எரிச்சல்தான் கூடியது.
“நாம எந்த ஊர்க்கு போறோம்?”
“எவ்வளவு தூரம்?”
“எத்தனை மணித்தியாலம் எடுக்கும்?”
“ஏன் இவ்வளவு ஸ்லோவா வண்டி ஓட்டுற? கொஞ்சம் வேகமாத்தான் போயேன். ஆம மாதிரி போற, இப்படி போனா நாளைக்கு காலைலதான் ஊருக்கு போய் சேர வேண்டி இருக்கும்”
ஊருக்கு போற ஆர்வத்தில் கேட்கின்றாளே! என்று கோதையின் எல்லா கேள்விகளுக்கும் கிருஷ்ணா பொறுமையாகத்தான் பதில் சொன்னான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் வண்டியை நிறுத்தியவன் அவளை பின்னால் இருத்தி பாதுகாப்புக்கு வந்தவரை வண்டியெடுக்க சொல்லி அவரை அவளோடு கோர்த்து விட்டு தூங்க முயற்சி செய்தான்.  
முயற்சிதான் செய்தான் முடியவில்லை. அவன் மனையாளின் சத்தம் அதிகமாக இருந்தது.
“கொஞ்ச நேரம் அமைதியா இரு பூ… அவரு வண்டி ஓட்ட வேணாமா? நீ டிஸ்டப் பண்ணி கிட்டே இருந்தா வண்டிய சுவர்கத்துக்குத்தான் ஓட்டிட்டு போவாரு” என்ற கிருஷ்ணா கண்ணை மட்டும் திறக்கவில்லை.
“நான் என்ன பண்ண? என்னால டிராவல் பண்ணும் போது உங்களை மாதிரி தூங்கவோ! மத்தவங்கள மாதிரி சாப்பிட்டுக்கிட்டோ! போக முடியாது பேசிகிட்டு போனாதான் வாந்தி வராது” என்றாள் அசால்டாக
அதற்கெல்லாம் அசராமல் “டிராவல் பண்ணும் போது மட்டும் பேசினா பரவால்ல இருபத்தி நாலு மணித்தியாலமும் பேசிக்கிட்டே இருந்தா?” என்ற கிருஷ்ணா வாக்கியத்தை முடிக்கவில்லை. வண்டி ஒட்டிக்கொண்டிருந்த பாதுகாப்பாளரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
“ஆகா பய புள்ள உஷாராகிட்டான். திருப்பி அடிக்க ஆரம்பிச்சுட்டான்” என்று கோதைக்கு நன்றாகவே! புரிந்தது.
“உனக்குத்தான் தலைவலிக்குதுனு சொன்னியே நீ அமைதியா இரு. நான் இவர் கூட பேசிக்கிறேன். உங்களுக்கு ஒன்னும் டிஸ்டப் இல்லையே! அண்ணா” என்று பாதுகாவலரிடமே! கேட்க, கிருஷ்ணா பட்டென்று கண்னை திறந்து அவரை பார்த்தான்.
இந்த புருஷன் பொண்டாட்டிகிட்ட மாட்டிகிட்டு முழிபிதுங்கி நின்றார் அவர்.
கண்ணபிரான் அபரஞ்சிதாவை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்தம் நடந்த வீட்டுக்கு சென்று தங்கிக் கொண்டார். அந்த வீடு யுவனின் பெயரில் இருக்க, யுவனும் வசந்தும் கூட அங்குதான் இருந்தனர்.   
கயந்திகாவின் அழைப்புகளை கூட அவர் ஏற்கவில்லை என்றதும் கயந்திகாவுக்கு உள்ளுக்குள் பதற ஆரம்பித்தது. எங்கே கணவன் சொல்லாமல் கொள்ளாமல் அபரஞ்சிதாவோடு பெங்களூர் கிளம்பி போய் விட்டாரோ! என்று அஞ்ச ஆரம்பித்தாள்.
ராதைத்தான்  அப்படி எதுவும் ஆகி இருக்காது என்று அன்னையை சமாதானப் படுத்தி யுவனை அழைத்து “அப்பா எங்கே” என்று விசாரிக்க, அவன் சி.எம் வீட்டிலிருந்து வர லேட் ஆனதாகவும் நிச்சயதார்த்தம் நடந்த வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறி இருக்க, ராதை மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு காலையிலையே! தந்தையின் முன் நின்றாள்.
காலையிலையே! வீட்டு வாசலில் பையோடு நிற்கும் மகளை கண்டு என்ன ஏதோ என்று கண்ணபிரான் பதற “முதல்ல உள்ள வாம்மா..” என்று அபரஞ்சிதா அவள் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு அதை வசந்த்திடம் கொடுத்தவாறே ராதையின் கையை பிடித்து அழைத்து சென்று சோபாவில் அமர்த்த தந்தையை கட்டிக்கொண்டு ஓ..வென அழ ஆரம்பித்தாள் ராதை.
என்ன இருந்தாலும் அக்கா இல்லையா வசந்துக்கு அவள் அழுவதை பார்க்க முடியவில்லை. சட்டை பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து நீட்டி இருந்தான்.
 அதை வாங்குவதா? வேண்டாமா? என்ற குழப்பமெல்லாம் ராதைக்கு இல்லை. சோபையாக சகோதரனை பார்த்து புன்னகைத்தவள் வாங்கி கையேடு வைத்துக்கொண்டாளே! தாவி கண்ணீரை துடைக்கவில்லை.
அபரஞ்சிதா ஓடிச்சென்று அவளுக்கு வெந்நீர் கொண்டு வந்து கொடுக்க, அதை பருகியவள் தந்தையை விடாது கட்டிக்கொண்டிருந்தாள்.
யுவன் வந்து என்ன? ஏது? என்று விசாரிக்க,
அபரஞ்சிதா ஓடி ஓடி வேலை செய்யும் பொழுதே! “இதே மாதிரி எனக்கும் எங்க அம்மாக்கும் வேலைக்காரியா உன்ன மாத்தள என் பேரு ராதை இல்ல டி” என்று கருவிக்கொண்டிருந்த ராதை யுவனை கண்டதும் “ஓ… இவரும் இங்கதான் இருக்காரா? நல்லதா போச்சு. ஒரே நேரத்துல நடிப்பை வெளிப்படுத்திடலாம்”
“என்னனு சொன்னா தானே! வந்த நேரத்துல இருந்து அழுது கிட்டே! இருக்கா” அபரஞ்சிதா கவலையாக சொல்ல
“என்னால அம்மா கூட இருக்க முடியாது” ராதை கண்களில் வழியும் கண்ணீரை துடைக்காமல் சொல்ல
“ஆமா.. அவங்க கூட மனிசன் இருப்பானா” யுவன் அசால்டாக சொல்ல
“யுவன்..” கண்ணபிரான் அதட்ட, ராதை யுவனை முறைக்கலானாள்.
“சரி சொல்லு இப்போ என்ன பண்ணாங்க?”
“வீட்டுல எல்லா சாமானையும் போட்டு உடைக்கிறாங்க, பைத்தியம் பிடிச்சது மாதிரி கத்துறாங்க, என்னையும் செம்மையா திட்டினாங்க”
“திட்டினத்துக்கா வீட்டை விட்டு வந்த?” யுவன் சந்தேகமாக கேட்க
“இல்ல. அவங்க ரெண்டாம் தாரம் என்ற உண்ம தெரிஞ்சது அவங்களால தாங்க முடியல, அத சொல்லி புரிய வைக்கலாம்னு முயற்சி பண்ணேன்”
“யாரு நீ?” யுவனுக்கு ராதை சொல்வதை நம்ப முடியவில்லை.
“யுவன் கொஞ்சம் அமைதியா இரு டா… என்ன நடந்தது என்று அவதான் சொல்லுறாளே!”
“ஆ… சொல்லட்டும், சொல்லட்டும்” கொஞ்சம் கிண்டல் குரலில் சொன்னவன் அமைதியானான்.
“அது அவங்களுக்கு பிடிக்கல என்ன அடிக்க கையோங்கிட்டாங்க, நான் கத்தினதுல என்ன பிடிச்சி தள்ளி விட்டுட்டாங்க”
“அதுக்கு இவ பைய தூக்கிகிட்டு வந்துட்டா இத நாங்க நம்பனும்” என்ற யுவன் முணுமுணுத்தான்.
வசந்த் நடப்பவைகளை அமைதியாக பாத்திருந்தான்.

Advertisement