Advertisement

அத்தியாயம் 7
சைரன் வண்டி சத்தத்தோடு முதலமைச்சர் கனகவேல் ராஜா வீடு வந்து சேர்ந்திருக்க, அவர் வரவை பார்த்ததும் அங்கு மயான அமைதி நிலவியது.
தொண்டர்களையும், பாதுகாவலர்களையும் அருள்வேல் தனது கண்ணசைவில் வாசலிலையே! நிற்கும்படி உத்தரவிட்டவாறு தந்தையின் பின்னால் வர,வேலையாட்கள் தானாகவே! அங்கிருந்து ஒதுங்கிக்கொண்டனர்.
கண்ணபிரான் உட்பட குடும்பத்தார் முதலமைச்சரைக் கண்டு எழுந்து நிற்க, அவர்களை கண்டுகொள்ளாதது “அம்மா எங்க? எனக்கு குடிக்க தண்ணி கொண்டு வர சொல்லு” என்று அருள்வேலை ஏறிட்டு கூறியவர் அங்கிருந்த ஒற்றை சோபாவில் ராஜ தோரணையில் அமர்ந்து கொண்டார்.
“ஆரம்பிச்சிட்டாரே!” என்ற மனக்குரலோடு அருள்வேல் அங்கிருந்து அசையாது வேலையாளை அழைத்து குடிக்க தண்ணீரும் கொண்டு வர சொல்லியதோடு, யசோதாவையும் அழைத்து வருமாறு கூறினான்.
“அப்பா இவங்க பொண்ணைத்தான் தம்பி கல்யாணம் பண்ணிகிட்டான்” கண்ணபிரானையும் அபரஞ்சிதாவையும் காட்டியவாறு அருள்வேல் தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்க,
“இதுதான் நீ கட்டிக்க போற பொண்ணுன்னு அப்பா மகனுக்கு அறிமுகப்படுத்திய காலம் போய் இவரு பொண்ணைத்தான் பையன் கல்யாணம் பண்ணி இருக்கான்னு அப்பா தெரிஞ்சிக்கிற காலாம்கிருச்சு” கோபம் கணக்க ஆரம்பித்த கனகாவேல் ராஜா மூத்த மகனையும் முறைக்க தவறவில்லை.
முதலமைச்சரின் மூத்த மகன், நாளை அமைச்சராகப் போகிறவன் என்று அருள்வேலுக்கு கல்யாண சம்பந்தங்க நீ, நான் என்று போட்டி போட்டவாறு வரிசைக் கட்டி நிற்க,  “அமைச்சர் பதவியில் உட்காரட்டும். அதன் பின் கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம்” கனகவேல் ராஜா மனைவிகளிடம் சொல்லி வைத்திருந்தார்.
 மகன் பதவியில் இருந்தால் வரும் சம்மந்தத்தையும், சீதனத்தையும், சீர்வரிசைகளையும் எண்ணி அவர் ஒரு கணக்கு போட, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று குலதெய்வத்துக்கு பூஜை செய்ய சென்றவன் ஊரில் ஒரு பெண்ணை திருமணம் செய்ததுதான் அவர் கோபத்துக்கு காரணம்.
“ஒன்றுமில்லாதவளை மருமகளாக நான் ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கர்ஜிக்க, அருள்வேலின் மனைவி வத்சலாவோடு அவள் வீட்டிலும், இவன் இங்கு தந்தையோடும் இருக்கின்றான்.
நடந்த திருமணம் வேறு ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளியாகி இருக்க, பெருத்த அவமானமாக உணர்ந்தார் முதலமைச்சர். இதனால் அருள்வேலுக்கு ஓட்டு விழாதோ என்று வேற அஞ்சலானார்.
ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக ஊரில் நடந்ததை ஒரு பத்திரிகை தெளிவாக எழுதி அருள்வேலின் புகழ் பாடி இருக்க, இளசுகளின் மத்தியில் ஹீரோ ஆகி இருந்த அருள்வேல் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கின்றான்.
மூத்த மகனின் திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும் இளைய மகனின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே! முடியாது. அதற்க்கு காரணம் அவனது ஜாதகம். 
“யோவ் அவனுக்கு முதலமைச்சராகுற ராஜயோகம் இருக்கியா.. பொருத்தமான ஜாதகம் கிடைச்சா அடுத்த வருஷம் கல்யாணம் பண்ண இருந்தேன். இப்படி அவன் எதிர்கால கனவுல மண்ண அள்ளி போட்டிடீங்களே!” என்று அவருடைய வெண்கல குரலில் கத்த ஆரம்பித்தார் முதலமைச்சர்.
என்னமோ! முதலமைச்சராவது கிருஷ்ணாவின் கனவு என்பது போலவும், அதில் குறுக்கிட்டது கோதையும் அவள் குடும்பத்தாரும் என்பது போலவும் அவர் பேச, என்னதான் இருவரும் காதலித்தாலும், பெண்ணை பெற்றவராக இறங்கி செல்ல வேண்டிய நிலையில் இருப்பது தான் தான் என்று கண்ணபிரானுக்கு நன்றாக புரிந்தது. அதுவும் தன் முன்னால் நிற்பவர் மாநிலத்தை ஆள்பவர்.  
“என் பொண்ணு ஜாதகம் தம்பி ஜாதகத்தோடு பொருந்துமான்னு பார்க்கலாம் ஐயா..” கண்ணபிரான் பவ்வியமாக சொல்ல
“யோவ் நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா? இல்லையா? ஜாதகம் பொருந்தினாலும் அடுத்த வருஷம் தான் கல்யாணம் பண்ணனும். இப்படி அவசரப்பட்டு அவன் கனவை குழி தோண்டி புதைக்க வச்சிட்டீங்களே!”
“இப்போ என்னங்கய்யா பண்ணுறது?” ஒரு தந்தையாக ஒரு தந்தையின் ஆசை, கனவை உணர்ந்து  கண்ணபிரான் பூஜை, பரிகாரம் என்று ஏதாவது பண்ணலாமா? என்ற அர்த்தத்தில் கேட்டிருக்க,
“யோவ் என் வாயில நல்லா வருது” கனகவேல் ராஜ உறுமியவாறு சோபாவிலிருந்து எழுந்துகொள்ள வசந்தும், யுவனும் “என்ன இது இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார்” என்று கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த வேளை முதலமைச்சர் எழுந்துகொள்ளவும் கண்ணபிரானுக்கு அரணாக இருவரும் இருபுறமும் வந்து நின்று கொண்டனர்.
“முதல்ல இத குடிங்கப்பா..” என்று தந்தையை அமர்த்தி வேலையாளிடமிருந்து வாங்கிய தண்ணீர் செம்பை கையில் கொடுத்த அருள்வேல் அமைதியின் சிகரமாக நின்றிருந்தான்.
“மூத்தவன் அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்த பேச மாட்டான் போலயே! மாப்பிள்ளையும் இப்படி அமைதியாக இருந்தா என் பொண்ணு நிலைமை?” கவலையாக அபரஞ்சிதா சொல்ல
பொறுமை இழந்த வடிவுப்பாட்டி “ஐயா முதலமைச்சர் ஐயா.. என்னமோ! எங்க பொண்ண உங்க பையனுக்கு நாங்க கல்யாணம் பண்ணி வச்சது மாதிரி துள்ளுறீங்க? நடந்தது என்னனு உங்களுக்கு தெரியுமா? யாராவது சொன்னாங்களா?”
பெங்களூரில் பிறந்து வளர்ந்த வடிவு ஒரு மார்டன் பாட்டி. யாரிடம் எதை எப்படி பேச வேண்டும் என்று சொல்லியா கொடுக்க வேண்டும்.
கனகவேல் ராஜாவுக்கு கிருஷ்ணா திடீர் திருமணம் செய்துகொண்டான் என்ற செய்தி வந்ததும் அது காதல் திருமணம் என்று முடிவு செய்திருக்க, நடந்தது என்னவென்று அவருக்கும் முழுசாக தெரியவில்லை.
“என்ன நடந்தது?” என்ற பார்வையை அருள்வேலிடம் வீசியவாறே தண்ணீரை மடமடவென அருந்தலானார்.
“அங்க என்ன பார்வ? இங்க பாருங்க தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறானே! எங்க வீட்டுக்கு வர வேண்டிய மாப்பிள்ளை இவன் தான். இவனுக்கும் என் பேத்திக்கும் தான் கல்யாண ஏற்பாடு பண்ணோம். அதுவும் என் பேத்தியோட சம்மத்தோட. எங்கிருந்தோ வந்த உங்க பையன் மணமேடைக்கு நடந்து போய்கிட்டு இருந்த என் பேத்தியோட கைய பிடிச்சி தரதரவென இழுத்துக்கொண்டு போய் மணமேடைக்கு முன்னால வச்சி தாலிய கட்டி புட்டான். நாங்களும் வேற என்ன பண்ண? தாலி கட்டினதால கல்யாணமா ஏத்துக்கிட்டோம். இதோ இவனுக்கு நீங்கதான் நியாயம் சொல்லணும்” என்று யுவனை கோர்த்து விட
“உங்கக்காக்கு இம்புட்டு வாயும் எங்க இருந்து வந்திருக்கும்னு யோசிச்சேன். இங்க இருந்துதான் வந்திருக்கு” வடிவுப் பாட்டியை முறைத்தவாறு வசந்த்திடம் பொருமினான் யுவன்.
“இதுதான் நடந்ததா?” என்று முதலமைச்சர் அருள்வேலை ஏறிட அவனோ! திருதிருவென முழிக்கலானான்.
கிருஷ்ணாவும் கோதையும் காதலிக்கிறார்கள் என்று கிருஷ்ணாவின் வாய் வழியாக அவன் அறிந்த விடயம், யுவனுடன் கல்யாணம் நடக்க போவதாக கோதை கிருஷ்ணாவுக்கு குறுந்செய்தி அனுப்பியது போல் அருள்வேலுக்கு கல்யாணத்துக்கான அழைப்பு கண்ணபிரானிடமிருந்து வந்ததும் உண்மை. பாட்டி சொன்னது போல்தான் அச்சு பிசகாமல் மண்டபத்தில் நடந்தது.  ஆனால் இருவரும் காதலித்தார்கள் என்பதை பாட்டி மறைத்து தவறு முழுக்க கிருஷ்ணாவின் மேல் என்பது போல் பேசினால் எப்படி? தந்தை தம்பியின் மீதல்லவா கோபம் கொள்வார். பாட்டி சொல்லிய பின் அதை மறுத்து அப்படி இல்லை என்று விளக்கமா கொடுக்க முடியும்? மௌனம் காப்பதுதான் சகலச் சிறந்தது என்று அமைதியையே! கடைபிடிக்கலானான் அருள்வேல். அது அவன் பிறவி குணம் அதை மாற்ற முடியாது. 
“ஒருவேளை என் பேத்தியோட ஜாதகம் பொருந்துதுனு நீங்கதான் தாலிய ஆசிர்வாதம் பண்ணி எடுத்துக் கொடுத்து உங்க பையன மண்டபத்துக்கு வழி அனுப்பி வச்சீங்களோ! அனுப்பிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி எங்க மேல பாயிறீங்களோ!” வடிவுப்பாட்டி பிளேட்டை அப்படியே! மாற்றிப் போட கனகவேல் ராஜாவே! அசந்து போனார்.
வசந்தும் யுவனும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த கிருஷ்ணாவை கடுமையாக முறைக்கலானார் முதலமைச்சர்.
கிருஷ்ணாவை கண்டு வடிவுப்பாட்டி “அதுக்குள்ள வந்துட்டானே!  இவன வச்சுதான் இவங்கப்பன மடக்கலாம்னு பார்த்தேன். இப்போ என்ன பண்ணுறது?”  என்று அருகில் இருந்த கண்ணபிரானிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்தார். 
“எல்லாம் இவனால. என்னைக்காவது என் பேச்ச கேட்டு நடந்திருக்கானா? எல்லாத்தையும் அவன் இஷ்டத்துக்கு பண்ணுறான். நான் என்ன பேசினாலும் எதிர்த்து பேசுறான். என்ன சொன்னாலும் மாத்திதான் பண்ணுவான். சின்ன வயசுல சின்ன பையன் விட்டு பிடிக்கலாம்னு விட்டது தப்பா போச்சு. நாலு சாத்து சாத்தி இருந்தா இப்படி வளர்ந்து நிக்க மாட்டான்” தனக்குள் பொரும
அவர் மனசாட்ச்சியோ! “உன்ன மாதிரிதான் அவனும், உன் வழிதான் போறான். நீ உன் மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணது தப்பில்ல. அவன் பண்ணா தப்பா?”
கிருஷ்ணா தந்தை முறைப்பதைக் கண்டுகொள்ளாமல் தனது மாமனார் குடும்பத்தை அவர் ஏதும் பேசி விட்டாரா என்று அவர்களை ஆராய, வசந்த்தும், யுவனும் சிரிப்பை அடக்குவதைக் கண்டு என்ன நடந்ததது என்று புரியாமல் குழம்பி நின்றான்.
“ஐயோ நான் பார்த்துட்டேன். நான் பார்த்துட்டேன். முதலமைச்சரை பார்த்துட்டேன்” யசோதாவோடு கைகோர்த்தவாறு நடந்து வந்துகொண்டிருந்த கோதை யசோதாவின் கையையும் உதறி விட்டு முன்னாடி சென்றுகொண்டிருந்த க்ரிஷ்ணாவையும் தள்ளி விட்டு ஓடிச் சென்று சி.எம் இன் முன்னால் போய் நின்று துள்ளிக் குதித்தவாறு கத்திக் கூப்பாடு போட கனகவேல் ராஜாவே! அதிர்ந்து நின்று விட்டார்.
“என்ன டா உங்க அக்கா தலைவர் பேனா?” யுவன் வசந்தின் காதைக் கடிக்க
“இல்ல சூர்யா பேன்” யுவன் எதற்கு கேற்கின்றான் என்று புரியாமலே! பதில் சொன்னவன் அக்காவை கவனிக்கலானான்.
“அய்யோ.. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல ரோட்டுல போகும் போது போஸ்டர், பேனர்ல பாத்திருக்கேன். பத்திரிக்கைல பாத்திருக்கேன்.  தினமும் டிவில பாத்திருக்கேன். ஆனா நேர்ல பார்க்க வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கலியே! ஆனா கிடைச்சிருச்சு. எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருச்சு”  
கனகவேல் ராஜாவை சுற்றி சுற்றி வந்தவள் சென்னை வந்த பொழுது பெரியார் சிலையை பார்த்து வியந்தது போல் வியந்து ஒரு விரல் கொண்டு தொட்டு வேறு பார்த்து சிலிர்த்து நிற்க, கனகவேல் ராஜாவுக்கு அவள் செய்கையில் சிரிப்பு வந்தது.
கடவுளை கண்ட பரவசத்தில் பக்தர்கள் கூச்சலிடுவது போல் பரவசத்தில் என்ன செய்வது என்று தன்னை அறியாமல் செய்பவர்களை போல், தலைவனை கண்ட தொண்டர்களும் செய்வதை அவரும் தினமும் காண்பது தானே! இந்த சிறு பெண்ணுக்கு தன் மீது இவ்வளவு பக்தியா? என்று அவர் வியந்து அவள் மீது இருந்து கோபமும் காணாமல் போய் ஒரு வித பாசம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது.
“அப்படியே! அச்சு பிசகாம சிங்கம் டயலாக்கை பேசி சூர்யா பேன்னு நிரூபிச்சிட்டா” யுவன் சிரிக்க, 
“இது அவளோட பேவரிட் டயலொக் எதுக்கெடுத்தாலும் பேசி தொலைக்கிறா. இன்னக்கி மண்டபத்துல பேசலயேன்னு பார்த்தேன். கரெக்ட்டா பேச வேண்டிய இடத்துல பேசிட்டா”
வசந்த்துக்கு தன் அக்கா நடிப்பதை கண்டு சிரிப்பெல்லாம் வரவில்லை. வீட்டில் தன்னோடு சண்டை போடுவாள் தன்னோடு மல்லு கட்ட முடியாது என்று தோன்றியதும் ஓ… வென அழுதவாறு அன்னையிடம் அல்லது, அம்மாச்சிடம் முறையிட்டு அவனுக்கு திட்டு வாங்கி கொடுப்பதுமல்லாது. தந்தை வீடு வரும் நாட்களில் என்றோ நடந்ததை அழுதவாறே கூறி வசந்த்துக்கு தந்தையிடமும் திட்டு வாங்கிக் கொடுப்பாள்.
“நீ அக்காவா? நான் அண்ணானே! தெரிய மாட்டேங்குது” அப்படி நடிப்பவளிடம் கடுப்பாகி கத்திவிட்டு செல்வான் வசந்த்.
“சி.எம். எவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் மனிதர். அவர் முன்னிலையில் பலர் நிற்கவே! அச்சப்பட, அத விடுங்க பெண்கள் கூச்சப்பட மாட்டார்களா? இது எதுவும் இல்லாமல் இவள் என்ன இப்படி நடிக்கிறாள் என்று இவள் திருந்தவே! மாட்டாள். பிறவி குணம் மாறாது. அவர் கிட்ட நல்லா மாட்டிகிட்டு முழிக்கட்டும்” என்று கருவினான்  வசந்த். 
“இங்க வாம்மா… உன் பேரென்னமா சொன்ன..” முதலமைச்சர் புன்னகை முகமாக கோதையின் தலையை தடவ
“பூங்கோதை ஐயா..” என்றாள் வெக்கப்பட்டவளாக
“என்னடி உலக அதிசயமா இருக்கு? உன் பொண்ணு வெக்கப்பட்டு இன்னிக்கிதான் நான் பார்க்குறேன்” வடிவுப்பாட்டி அபரஞ்சிதாவின் காதில் சொல்ல என்ன நடக்கிறது என்று புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“இவளுக்கு வெக்கப்படக் கூட தெரியுமா?” என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவின் கையை சுரண்டிய யசோதா
“டேய்… என்ன டா… உங்கப்பா.. கத்தி கூப்பாடு போடுவார்னு பார்த்தா இப்படி பெட்டி பாம்பா அடங்கிட்டாரு”
“அடங்கிட்டாரு இல்ல. அடக்கிட்டா… இன்னும் என்ன எல்லாம் செய்ய போறாளோ!” கிருஷ்ணா மிரண்டான்.
“என்னம்மா படிக்கிற?” கனகவேல் ராஜா இன்முகமாக கேட்க
“காலேஜ் முடிச்சிட்டேன். பொலிட்டிகள் சயன்ஸ் ஒரு சப்ஜட்டா படிச்சிருக்கேன். நீங்க ஆட்சிக்கு வந்த பிறகு நம்ம தமிழ்நாட்டுல எல்லா துரையிலையும் முன்னேற்றம் கண்டு வளர்ச்சியடைந்து வருது என்று பெங்களூருல பேசிக்கிறாங்க. நீங்கதான் எனக்கு பிடிச்ச தலைவர். நான் மட்டும் சென்னைல இருந்திருந்தா உங்களுக்குத்தான் ஓட்டு போட்டு இருப்பேன்” பாறாங்கல் சைசில் ஒரு ஐஸ் கட்டியை தூக்கி கனகவேல் ராஜாவின் தலையில் வைக்க மனுசனுக்கு பேச்சே வரவில்லை. 
“எங்கயோ! இருக்குற சின்ன பெண்ணுக்கு என்னோட அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சிருக்கு. நான் பெத்த தடிமாடு அவனுக்கு என் அருமை தெரியல. இவன் என் பையன் என்று தெரிஞ்ச பிறகுதான் இந்த பொண்ணு இந்த கல்யாணத்தையே! ஏத்து கிட்டு இருக்கும் போல” அவராகவே! கற்பனை பண்ணிக் கொண்டார்.
“யேம்மா சொல்லுமா… இவன் உனக்கு கட்டாய தாலியா கட்டினான்?” மனைவி முறைப்பதும் அறியாமல் கோதையின் பேச்சில் உச்சி குளிர்ந்திருந்தவர் கிருஷ்ணாவை முறைத்தவாறு கேட்க,
“ஆமாங்கய்யா.. அது வந்து” என்று கோதை முடிக்கவில்லை. கிருஷ்ணாவை அடிக்க கையோங்கிக் கொண்டு செல்ல யசோதா கணவனை தடுத்து கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளறைக்கு சென்று கதவை பூட்டி இருந்தாள்.
“பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல தொங்கித்தானே! ஆகணும். நாட்டை ஆளுற முதலமைச்சரா இருந்தா என்ன? ஒரு பொண்ணுக்கு புருஷனா இருந்தா என்ன? எந்த ஆம்பிளையோட நிலைமையும் இப்படித்தான் போல” கண்ணபிரான் முணுமுணுக்க, அது அபரஞ்சிதா மற்றும் வடிவுப்பாட்டியின் காதில் தெளிவாக விழுந்திருந்தாலும், கணவன் சொன்னது கேட்கவே! இல்லை என்பது போல் முகத்தை வைத்திருந்தாள் அபரஞ்சிதா.  
“ஆமாமா அதுவும் மோகினி பிசாசு, ரத்தக் காட்டேரி என்று ரெண்டு பேய சமாளிக்கிறது என்றால் சும்மாவா?” வடிவுப்பாட்டி சிரிக்காமல் சொல்ல அபிராஞ்சிதா சட்டென்று சிரித்து விட்டாள். 
அபரஞ்சிதா கண்ணபிரானின் இரண்டாவது தாரம் என்று அறிந்துகொண்ட பின்னும் மருமகனை வார்த்தைகளால் வடிவு குத்திக் குதறி எடுக்கவில்லை. காரணம் கண்ணபிரான் ஏற்கனவே! திருமணமானவர் என்று அறிந்துகொண்ட பின்தான் அபரஞ்சிதா கண்ணபிரானை திருமணம் செய்தாள் என்று மகள் கூறி இருக்க, குறைந்த பட்சம் கிண்டலாவது செய்யவில்லை. 
இன்று தனது மகளின் வாழ்க்கையில் எந்த குளறுபடிகளும் இல்லை என்றதும் நெஞ்சிலிருந்து பாரம் நீங்கி வடிவின் கேலிகிண்டல்கள் தலை தூக்கி இருந்தன.
மாமியாரின் பேச்சில் கண்ணபிரானின் முகத்திலும் புன்னகை மலர “முதலமைச்சர் காதுல விழுந்தா பிரச்சினையாகிட போகுது”
“அவர் காதுல விழுந்தா என்ன?” புரியாது வடிவு கேட்க,
“அம்மா… இங்க இருக்குறது அவரோட ரெண்டாவது சம்சாரம் மூத்தவங்க ஊருல இருக்காங்க”
“நான் உன் புருஷன சொன்னேன். ப்பா…” வடிவு மருமகனை கிண்டல் செய்தவாறே அபரஞ்சிதாவை ஒருபக்கம் அழைத்து சென்று கனகவேல் ராஜாவின் வாழ்க்கை சரித்திரத்தை அலசலானார்.  
“என்ன டி எங்க அப்பா கிட்ட என்ன கோர்த்து விடலாம்னு பாக்குறியா?” கிருஷ்ணா கோதையை முறைக்க,
கண்ணடித்து சிரித்தவள் “நடந்தது என்ன என்று ஆரம்பத்துல இருந்து சொல்லலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிருச்சு. உள்ள போனவர் வரட்டும் ஏர்போட்டுல நடந்ததுல இருந்து சொல்லுறேன்”  
“அடிப்பாவி கோர்த்து விட்டு வேடிக்க பார்க்க போறியா?”
“ஆமா..” என்றவளோ! அங்கிருந்தால் தானே! பெற்றோர்கள் இருக்கும் இடத்துக்கு விரைந்திருந்தாள்.          
உள்ளே முதலமைச்சரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள் யசோதா “என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க உங்க மனசுல? அத்தன பேர் முன்னால அதுவும் அவன் கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்த பொண்ணு இருக்கா, அவ குடும்பம் இருக்காங்க, அவங்க முன்னாடி தோளுக்கு மேல வளர்ந்த பையன போய் அடிக்க கையோங்குறீங்க கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?”
“அடிப்பாவி? மாநிலத்த ஆளுற முதலமைச்சர் கிட்ட கேக்குற கேள்வியாடி இது? யார் காதுலயாவது விழுந்தா.. இந்த மாநிலத்த நான் ஆளுறேனா? இல்ல உன் கட்டுப்பாட்டுல விட்டு வச்சிருக்கேனான்னு பேசுவாங்க டி..”
“இப்போ அதுவா முக்கியம்? எப்போ பார்த்தாலும், நாடு, மாநிலம், கட்ச்சி, தொண்டர்கள் என்று…. பேச்ச மாத்தாதீங்க. பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். அவன் இஷ்டப்பட்டு வந்தானா? இல்ல பொண்ண தூக்கிட்டு வந்தானா? எது பண்ணாலும் நீங்க பண்ணததான் பண்ணி இருக்கானா? கேள்வி கேக்குறதையும், வந்தவங்கள மிரட்டுறதையும் விட்டுட்டு சின்னங் சிறுசுகள ஆசிர்வாதம் பண்ணி வீட்டுல சேர்க்குற வழிய பாருங்க. அருள் விசயத்துல என்ன தலையிடக் கூடாதுனு அக்கா சொன்னதால அமைதியா இருக்கேன். கிருஷ்ணா விசயத்துல அப்படி இல்ல. ஏடா கூடமா ஏதாவது பண்ணினீங்க நான் பொல்லாதவலாகி விடுவேன். பாத்துக்கோங்க” பேசி விட்டு யசோதா முதலமைச்சரின் பதிலுக்கு காத்திருக்காமல் அறையை விட்டு வெளியேறி சென்றே விட்டாள்.
“உன்ன எப்போ கல்யாணம் பண்ணேனோ! அப்போல இருந்து எனக்கு ஏழரை சனி தான்டி. மனசுக்கு பிடிச்சவள கட்டிகிட்டேன்னு ஒரு நாளாவது சந்தோஷமா வாழ்ந்திருப்பேனா? நிம்மதியா தூங்கித்தான் இருப்பேனா? வீட்டுக்கு வந்தா அழுது வடிஞ்சி கிட்டு இருப்ப, பையன் பொறந்த சந்தோசத்த கொண்டாட முடியல. அவனும் ஒரு தறுதல. அப்பன் பேச்ச கேக்க மாட்டான். மதிக்க மாட்டான்.  ஏன் டா கல்யாணம் பண்ணேன்னு இருக்கு. பொல்லாதவளா ஆகிடுவாளாம். இவ சாந்த சுரூபி. என் வாயில நல்லா வருது” புலம்பியவாறே அவரும் அறையை விட்டு  யசோதாவின் பின்னால் வெளியே வந்தார்.
அவர் சொன்னது எல்லாம் யசோதாவின் காதில் விழுந்தாலும் “என் காது கேக்காது” பொலிசிதான். அதுக்கு பதில் சொல்ல போனால் பேச்சு வார்த்தை முற்றி வாய்தக்கம் சில நேரம் அடிதடியில் கூட முடிந்திருக்க, இத்தனை வருட வாழ்க்கை அனுபவத்தில் கற்ற பாடம் யசோதா அறிந்து வைத்திருந்த உண்மை முதல் அடியை பலமாக கொடுக்க வேண்டும் என்பதுதான்.
உள்ளே ஒன்றுமே! நடவாதது போல் மீண்டும் அவரது ஒற்றை சோபாவில் மிடுக்காக ராஜதோரணையில் வந்தமர்ந்தார் கனகவேல் ராஜா.
“டேய் கிருஷ்ணா.. என்ன இங்கயே! நிக்குற உன் பொண்டாட்டிய அழைச்சுக்கிட்டு உன் அறைக்கு போ.. பாவம் புள்ள ரொம்ப டயடா இருப்பா”
“ஐயோ சம்மத்தி…” என்று அபரஞ்சிதா முன்னால் வந்தவள் கனகவேல் ராஜாவின் பார்வையில் பேச்சற்று நிற்க,
“இரவைக்குதான் சடங்கெல்லாம் இருக்கு அதற்க்கு முன்னால அறைக்கு போக கூடாதுங்க” யசோதா சிரித்தவாறு கூறினாலும் பல்லைக் கடித்து கணவனை முறைக்கலானாள்.
“நான் என்ன சொன்னேனா வாழ போற வீடு சுத்தி பார்க்கட்டும், அறைல இருந்து ஆரம்பிக்கட்டும்” என்று அழகாக சமாளிக்க அவர் நோக்கம் புரியாமல் கிருஷ்ணாவும் கோதையை இழுக்காத குறையாக அங்கிருந்து நகர்ந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் என்னம்மா வாசலிலேயே! உக்காந்து இருக்கீங்க? இது உங்க வீடுன்னு நினைச்சுக்கோங்க, இரவு உணவு சாப்பிட்டுட்டு தானே! போவீங்க யசோ போ.. போய் யார் யாருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு சமைக்க சொல்லு. முதல்ல வந்தவங்களுக்கு குடிக்க கொடுமா”  என்று யசோதாவோடு அபரஞ்சிதா மற்றும் வடிவை அனுப்பி வைத்தவர்.
“டேய் அருளு… தம்பீங்களுக்கு நம்ம தோட்டத்தை சுத்தி காட்டிட்டு வா… நான் சம்மத்தி கிட்ட தனியா பேசணும்” பெண்கள் யாரும் இல்லை என்ற தைரியத்தில் கூற கண்ணபிரானாலும் மறுக்க முடியவில்லை.
 வசந்த்தும், யுவனும் முதலமைச்சர் “பேச வேண்டும்” என்று நேரடியாக சொன்னதில் அங்கிருக்கவும் முடியாமல் அவர் என்ன பேச போகிறாரோ! என்ற ஒரு வித பதை பதைப்பில் அருளோடு சென்றனர்.
  “சொல்லுங்க மிஸ்டர் கண்ணபிரான்? என்ன தொழில் செய்றீங்க? எவ்வளவு சொத்து வச்சிருக்கீங்க? உங்க பொண்னுக்குன்னு ஏதாச்சும் சேர்த்து வச்சு இருக்கீங்களா? இல்லையா? குடும்ப சொத்துனு எதுவும் இருக்கா? இல்ல நீங்களும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னும் இல்லாம வந்தவரா? இல்ல அனாதையா? நாளைப்பின்ன குழந்தை குட்டி என்றானா, சீமந்தம், காது குத்து, மொட்டை போடணும் இப்படி வரிசையா சீர் செய்யணும் வசதி இருக்கா?
என்ன இப்படி கேக்குறானே! என்று தப்பா நினைக்காதீங்க, நான் என்ன எனக்காகவா கேக்குறேன், உங்க பொண்ணுக்காகத்தானே! கேக்குறேன். சாதாரண இடத்துல பொண்ண கட்டி கொடுத்தாலே! நிறைய எதிர் பார்ப்பாங்க, இங்க நான் எதிர்பார்கலைனாலும் என் சொந்தபந்தம் எதிர்பார்ப்பாங்க, நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க, அதற்கு இடம் கொடுக்க கூடாதில்ல. நான் என்ன சொல்ல வரேன். என்று உங்களுக்கு நல்ல புரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்”
“புரிஞ்சது நல்லாவே புரிஞ்சது மாமா. அதெல்லாம் அப்பா சரியாவே! பண்ணுவாரு. இல்ல அப்பா.. அவருக்கு இருக்குறது ரெண்டு பொண்ணுக. எங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறாரு?” என்றவாறு வந்தமர்ந்தாள் கோதை.
அவளை கனகவேல் அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை.    

Advertisement