Advertisement

அத்தியாயம் 4

கிருஷ்ணா கோதையின் கையை பிடித்து இழுத்து செல்லவும் கோதையை விட அதிர்ச்சியடைந்து கோதையின் தோழிகள் தான். அதிர்ச்சியாகி அவர்கள் மண்டபத்துக்கு வரும் வழியில்லையே! நின்று விட கூட்டத்துக்கு மத்தியில் புகுந்து செல்ல அவர்களால் முடியவில்லை. கிருஷ்ணா கோதையின் கழுத்தில் தாலி கட்டியது பேரதிர்ச்சி என்றால் அடுத்து நடந்த அனைத்தும் அவர்களால் புரிந்துகொள்ள கூட முடியாதவைகள். அதனால் நடப்பவைகளை ஒரு ஓரமாக இருந்து கவனிக்கலாயினர்.

“என்ன டி கல்யாணத்துக்கு வந்தா நல்லா விருந்து சாப்பிட்டு போலாம்னு பார்த்தா இங்க ஒரே ரணகளமா இருக்கு” இன்பா முழித்தவாறு சொல்ல

“ஏன் டி இந்த கோதையை பாரேன். அவங்க அப்பாக்கு ரெண்டு பொண்டாட்டி எங்குறதும் எங்களுக்கு தெரியாது. அவ லவ் பண்ணதும் எங்களுக்கு தெரியாது. இன்னும் என்னத்த எல்லாம் எங்க கிட்ட இருந்து மறச்சி வச்சிருக்காளோ!” என்று சித்ரகலா சொல்ல

“முதல்ல இவ ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணனும் டி.. அவ்வளவு தூரத்துல இருந்து எங்கள வர வளச்சு அவ பாட்டுக்கு வசனம் பேசிகிட்டு இருக்கா.. இங்க என்ன நடக்க போகுதுனு முதல்லயே! சொல்லித் தொலைக்க வேணாமா?” கவி எனும் கவிதா திட்ட,

“கோதையோட ஆளு செம்ம ஹண்சம் டி.. அதான் பக்கி நம்ம கிட்ட சொல்லாம மறச்சி இருக்கா போல” இன்பா கிருஷ்ணாவை பார்த்து ஜொள்ளு விட

“ஆமா டி… ஆரியக் கூத்தாடினாலும் அவ காரியத்துல கண்ணா இருந்திருக்கா… நாம தான் ஒண்ணுத்துக்கும் ஒதவாம போய்ட்டோம். கடைசிவரைக்கும் சிங்கிளா இருந்து வீட்டுல பாக்குற ஒரு சொட்ட விழுந்த மாப்பிளையத்தான் கட்டிக்க வேண்டி இருக்கும்” பெருமூச்சு விட்டுக்கொண்டாள் கலா.

“நம்ம கூடவே! தானே! டி சுத்தி கிட்டு இருப்பா.. இப்படி ஒருத்தன எங்க இருந்து புடிச்சா. அதுவும் மினிஸ்டரோட தம்பிய? அமேரிக்கா ரிட்டன்ஸ் வேற. என்னமா லவ் லுக்கு விடுறான். சினிமால கூட ஹீரோயின அடிக்கும் போது இப்படி காப்பாத்தி இருக்க மாட்டாங்க” கவிதா தாடையை தடவியவாறு யோசிக்க ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.

தோழிகள் படை ஒரு பக்கம் இவ்வாறு பேச்சு வார்த்தையில் ஈடுபட நடு சபையில் கண்ணபிரான் அபரஞ்சிதா தான் தன்னுடைய முதல் மனைவி என்றதில் பிரச்சினை மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது.

“இங்க பாருப்பா… கண்ணபிரான் வேலுநாயக் இல்லனதும் இப்படி கண்டபடி பேசக் கூடாது. அவன் பொண்ணுக்கு அவன் ஒருநாளும் அடுத்தவ புருஷன மாப்பிள்ளையா கொண்டுவர மாட்டான். நீ ஆசைப்பட்டு கட்டிகிட்ட, கொழந்தைகளையும் பெத்துக்கிட்ட, உனக்கு அந்த பொண்ணு மூலமாத்தான் ஆண் வாரிசு இருக்கு. அதற்காக வாய் கூசாம அந்த பொண்ணுதான் உன் மொத சம்சாரம்னு சொல்லக் கூடாது” என்று வேலுநாயக்கின் அண்ணன் பேச 

“இங்க பாருங்க மாமா என் குடும்பத்துல சிக்கல உண்டு பண்ணிக்க நானும் விரும்ப மாட்டேன். இத்தனை வருஷமா நானும் அமைதியா இருந்தது தெய்வமா போன மாமாவுக்காகத்தான். யாரும் என் அபிய அவமரியாதையா பேசுறதையோ! ஏன் பாக்குறதையோ! நான் விரும்பல. அவளுக்கு கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்துட்டு இத்துணை வருஷமா ஒதுங்கித்தான் இருந்தா.. எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சி போச்சு. இந்த உண்மையும் தெரிய வரட்டும்” என்ற கண்ணபிரான் கண்களாலையே! வக்கீலை அழைக்க கல்யாணத்து பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தவரோ! மண்டபத்துக்கு வந்து வேலை பார்க்க நேரிடும் என்று கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்.

“இவர் எத்தனை வருஷமா மாமாவோட வக்கீல்னு உங்களுக்கு தெரியும் தானே! நான் சொன்னா நம்ப மாட்டீங்க, இவர் சொன்னா நம்புவீங்க இல்ல” என்ற கண்ணபிரான் அவரை ஏறிட

நடு சபையில் நின்றிருந்தவரை அனைவரும் எட்டி எட்டி பார்க்க, கடவுளை சில நொடிகள் வணங்கி நின்றவர் “நான் இப்போ சொல்ல போறது எல்லாம் உண்மை” என்று ஆரம்பித்தார்.

“வக்கீல்னு சரியா ப்ரூப் பண்ணுறார் இல்ல” அருள் தான் கிருஷ்ணாவிடம் சொல்லி இருக்க அண்ணனை முறைத்தவன் “ண்ணா… உனக்கு எதோ… கட்சி மீட்டிங் இருக்குனு சொன்னியே! நீ இடத்தை காலி பண்ணு… காத்து வரட்டு”

“டேய் நான் போனா.. உன்ன இந்த கும்பல் கிட்ட இருந்து யார் காப்பாத்துவாங்க?” தம்பியை விட்டு செல்ல மனமில்லாதுதான் கூறி இருந்தான் அருள்.

கோதை இத்தனை நேரமும் பேசிய பேச்சுக்கள் காதுக்குள் கணீரென ஒலித்துக்கொண்டிருக்க, “என் பொண்டாட்டி என்ன பாதுபா… நீ கவலை படாத”  என்றவனின் மனமோ! “அவ இந்த கும்பல என்ன? ஒரு ஊரே திரண்டு வந்தாலும் சமாளிப்பா” என்றது. “முடிஞ்சா வீட்டுக்கு போய் அம்மா காதுல விசயத்த போட்டு வை.. போ… போ..” என்று அண்ணனை துரத்துவதில்லையே! குறியாக இருந்தான் கிருஷ்ணா.

“இங்க பாருங்க வக்கீல் சார். சொல்ல வேண்டிய உண்மைய சீக்கிரம் சொல்லி என் தம்பிய வீட்டுக்கு அனுப்பி வைங்க, முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணணும்ல” என்றவாறு அருள்வேல் சபையோரிடமிருந்து விடைபெற  கூட்டத்தில் சிலர் சிரித்தாலும், பலர் முறைக்கத்தான் செய்தனர்.  

கோதை பார்த்த பார்வையில் “இன்னக்கி ஒரு சம்பவம் இருக்கு டா…” என்று எண்ணிய கிருஷ்ணாவின் உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“அட ராங்கி ரங்கம்மா பாக்குறதுக்கெல்லாம் நாம பயந்தா சரிப்பட்டு வருமா? என்ன வர சொன்னதே! இவ தானே!” கோதையை முறைத்தான் கிருஷ்ணா.   

 மீண்டும் சபையோரை வணங்கி விட்டு வக்கீல் அன்று நடந்ததை கூற ஆரம்பித்தார். “அன்னக்கி நடந்தது எனக்கு இன்னக்கி நடந்தது போல நியாபகம் இருக்கு. வேலுநாயகம் ஐயா என்ன அவசரமா வரச்சொன்னார். கூடவே! கண்ணபிரானையும் கூட்டிகிட்டு வரச்சொன்னார். என்ன ஏதோனு அவசரமா நாம போன இடம் ஹாஸ்பிடல். அங்க கயந்திகா அம்மா மயக்க நிலைல இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு விசாரிச்சதுல, விஷம் குடிச்சிட்டாங்களாம். அதுவும் கண்ணபிரானை கல்யாணம் பண்ணிக்கனும்னு வேலுநாயகம் அய்யாகிட்ட கேட்டதாகவும், ஐயா மறுத்ததால இப்படி விஷம் குடிச்சதாக சொன்னாரு”

கயந்திகா முறைப்பதை கண்டு “அதற்கான ஹாஸ்பிடல் பில்ஸ். ரெகோட்ஸ் எல்லாம் என் கிட்ட இன்னும் பத்திரமாத்தான் இருக்கு” என்றவர் தொடர்ந்து “உசுர காப்பாத்திட்டேன். என் பொண்ணு திரும்ப இப்படி பண்ணிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்” என்று சொன்னவாறு கண்ணபிரான் சாரோட கைய பிடிச்சிக்கிட்டு நீங்கதான் தம்பி என் பொண்ண கட்டிக்கணும் என்று  சொன்னாரு. அதுக்கு இவரு “இல்ல என்னால முடியாது. எனக்கு கல்யாணம் ஆகிருச்சுனு சொன்னாரு” அதிர்ந்த வேலுநாயகம் ஐயா உடைஞ்சி போய் அழ ஆரம்பிச்சவரு உடனே! “என் சொத்தெல்லாம் எடுத்துக்கோங்க, அந்த பொண்ண விட்டுட்டு வாங்க என் பொண்ண கட்டிக்கோங்கன்னு சொன்னாரு. இவரு கோபமா அங்கிருந்து போய்ட்டாரு”

ஆனா போனவர் கிட்ட ஐயா தன்னோட பெண்ணுக்காக என்னவேனாலும் செய்வாரு, உங்க மனைவியை கொன்னுட்டு அவர்க்கு உங்கள கட்டி வச்சாலும் வைப்பாறு ஜாக்கரதையாக இருங்கானு சொன்னேன். நான் நெனச்சா மாதிரி. இந்தம்மாவ கொலை பண்ண ஆள வேற அனுப்பி இருந்தாரு. ஆனா சாரோட மனைவி யார்னு தெரியாம யாரை கொல்லுறது? நான் போன் பண்ணதுல உசாரானவரு, மனைவியை பெங்களூருல இருந்து சென்னைக்கு வரவேணாம்னு சொல்லிட்டாரு” என்று வக்கீல் நிறுத்த

“நான் அபிய கல்யாணம் பண்ணி ஒரு வாரம் கூட இல்ல. அவ வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டம் மேரேஜ் பண்ணிக்கிட்டு கோவில்ல வச்சி தாலியும் கட்டினேன். என் வேலைய விட்டுடலாம்ன் பெங்களூருக்கே! வந்துடலாம்னுதான் நான் சென்னை வந்தேன். அப்போ எனக்கு ப்ரோமோஷன் கொடுக்க போறதா சொன்னாங்க, அபி கிட்ட போன்ல நாம சென்னைக்கே வந்துடலாமான்னு கேட்டேன். சரி அங்க வீடு பாருங்கன்னு சொன்னா… எல்லாம் செட்டில் ஆனா பிறகு அவள அழச்சிக்கலாம்னு நான் இருந்த நேரம்தான் கயந்திகா விஷம் குடிச்சது” என்று கண்ணபிரான் தெளிவாக சொல்ல அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் புரிந்தது.

“மூணு மாசம் சார் பெங்களூர் பக்கமே! போகல. கயந்திகா அம்மா ரொம்ப பிடிவாத குணம் கொண்டவங்க. அவங்க குணம் பிடிக்காமத்தான். தன்னோட பொண்ண கட்டிக்க இஷ்டமில்லேன்னுதான் சார் கல்யாணம் ஆச்சுன்னு பொய் சொல்லிட்டார்னு அவங்க வீட்டாளுங்கள கடத்தி சார கயந்திகா அம்மாக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வச்சாரு” தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார் வக்கீல்.  

“சார் அதிர்ச்சியிலையும், மனஉளைச்சலிலையும் என்ன பண்ணுறதுனு குடிக்கு வேற கொஞ்சம் கொஞ்சமா அடிமையாகி கிட்டு இருந்தாரு. அவரை மீட்க அபி மேடத்தால மட்டும் தான் முடியும். இந்த உண்மையெல்லாம் சாரோட மொத சம்சாரத்துக்கு நானே! நேர்ல போய் சொன்னேன். அவங்க ஒதுங்கிக்கிறேன்னுதான் சொன்னாங்க, சார் உசுரோட இருக்கணும்னா நீங்க அவர் கூட இருங்க இல்லனா விட்டுட்டு போய்டுங்கனு சொன்னேன். ஆனா அவங்க பண்ண ஒரே தப்பு கயந்திகா அம்மாவும் சார உண்மையா காதலிக்கிறதா நெனச்சி அவங்க கூடவும் வாழணும்னு சார் கிட்ட சத்தியம் வாங்கி கிட்டாங்க” என்றவர் கண்ணபிரானின் முகம் பார்க்க,

“ஒருநாள் இந்த உண்மையெல்லாம் மாமாக்கு தெரிய வந்தது. நான் பொய் சொல்லல, என் பொண்டாட்டியோட உசுர காப்பாத்தான் ஊருக்கே! போகலாளனு புரிஞ்சிக்கிட்டாரு. அவர் பண்ண பாவத்துக்கு சொத்தையும் நாளா பிரிச்சி. என் பசங்களுக்கும், யுவனுக்கு எழுதி வச்சிருக்காரு” என்று கண்ணபிரான் சொல்லி முடிக்க,           

“யார் சொத்தை? யார் அனுபவிக்க பாக்குறது? அது என் அப்பா சம்பாதிச்ச சொத்து அது என் குடும்பத்த சொத்து. அத இதோ இவ பெத்த பசங்களுக்கு கொடுத்துடுவேனா? அதான் என் தம்பிக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்து சொத்தை எழுதி எடுக்கலாம்னு திட்டம் போட்டோம். ஆனா இந்த கழுத எவனையோ! காதலிச்சு அவனை வர சொல்லி கட்டிக்கிட்டா” என்று கோதையின் மேல் பாய,

“ஓஹ்.. கத இப்படி போகுதா…” என்ற கோதை… கயந்திகாவை தடுத்தவாறே “பாத்தீங்களா… சொந்தபந்தங்களே! இந்த சித்தியோட சில்லரை புத்திய? சொத்துக்காகத்தான் இந்த கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்காங்க, யோவ் மாமா அதுக்கு நீயும் உடந்தையா? உங்க அக்காவ பிடிக்காத மாதிரியே! என்ன பேச்சு பேசுனா… உன்னயெல்லாம்” யுவனையும் விடாது முறைக்க கோதையின் பேச்சில் நொந்து விட்டான் யுவன்.

“எங்களுக்கு எதுக்கு ப்பா… இவங்க சொத்து… எதுவும் வேணாம். பாட்டி என்ன வசதி இல்லாத குடும்பமா? அம்மா சம்பாதிக்காததா? எங்க வீடே போதும். நான் படிச்சி முடிஞ்ச உடனே! வேலைக்கு போக போறேன் உங்கள எல்லாம் உக்கார வச்சி சோறு போட என் சம்பளம் போதாதா?” என்றான் வசந்த்.

மகனை பார்த்து புன்னகைத்த கண்ணபிரான் “ஆமா கயந்தி எனக்கு உன் சொத்து எதுவும் வேணாம். அதுக்கு பதிலா டிவோர்ஸ் கொடுத்திட்டு” என்றதும்

“அப்பா…” என்று அதிர்ந்தாள் ராதை.

அதை பொருட்படுத்தாமல் “கூடவே! ராதையோட எல்லா பொறுப்பும் எனக்கு சேரணும்னு எழுதிக் கொடுக்கணும். அப்போ சொத்து முழுக்க உனக்கு எழுதிக் கொடுத்திடுறேன்” என்று கண்ணபிரான் சொல்ல

“சபாஷ். அப்படி போடு” என்றான் யுவன். அவன் சொன்னது கிருஷ்ணாவின் காதில் விழ

“நீ வில்லனா? ஹீரோவா?” என்று கேட்க,

“இன்னுமா புரியல. ப்ரோ..” என்ற யுவன் கிருஷ்ணாவின் கழுத்தில் கையை போட்டு கொண்டு “என் அக்கா பொண்ணு பஜாரினு என் மாமாவோட சின்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். அவ பேசுற பேச்சுக்கு மூத்த பொண்ணே! பரவல்லானு தோணுது. அப்பப்பா நான் தப்பிச்சேன். நீ மாட்டிக்கிட்ட. ஆல் தி பெஸ்ட் ப்ரோ. வச்சி செய்ய போறா… என்ஜோய்” என்றவன் அக்காவின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டான்.

கண்ணபிரான் கேட்டதுக்கு கயந்திகாவிடம் எந்த பதிலும் இல்லை.

“சரி நல்லா யோசிச்சு சொல்லு” என்றவர் அங்கிருந்தவர்களை சாப்பிட அழைத்து செல்லுமாறு யுவன் மற்றும் வசந்த்திடம் பணித்து விட்டு கிருஷ்ணாவிடம் வந்தார்.

க்ரிஷ்ணாவோ! முற்றிலும் குழம்பிய மனநிலையில்தான் இருந்தான். இங்கு நடப்பதும் புரியவில்லை. தான் ஊமையென்று நம்பி காதலித்தவளின் அவதாரமும் புரியவில்லை. தன்னை பகடை காயாய் பயன் படுத்திக்கிட்டாளா? அப்போ நடந்த கல்யாணம் இல்லை என்று சொல்லி விடுவாளா? தாலி என்ன பொம்மைக்கா கட்டினேன். “எனக்கு கல்யாணம் நீ வானுதானே! மெஸேஜ் பண்ணி இருந்தா… கல்யாணத்த நிறுத்துன்னு சொல்லவும் இல்ல. என்ன கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லவும் இல்ல. அப்போ அதான் உன்னால பிரச்சினைனு சொன்னாளா? ஐயோ இங்க என்னதான் நடக்குது. ஊமை எப்படி பேசுறா?”

“என்ன மாப்புள உங்க அப்பாவ எப்படி சமாளிக்குறதுனு யோசிக்கிறீர்களா?” கிருஷ்ணாவின் அருகில் அமர்ந்தார் கண்ணபிரான்.

அவரின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவன் “உங்க பொண்ண எப்படி சமாளிக்க போறென்னே! தெரியல இதுல எங்க அப்பா வேறயா? அவரையும் உங்க பொண்ணே! சமாளிக்கட்டு” மனதில் நினைத்தவாறு புன்னகை மட்டும் சிந்தினான்.

“தாலியதான் அவசரப்பட்டு கட்டிடீங்க, மத்த சடங்கெல்லாம் முறையை பண்ணிடலாம் மாப்புள” என்று கையேடு அவனை அழைத்து சென்று கோதையோடு நிறுத்தி சடங்குகளை செய்ய, குடும்பத்தாரோடு பாதி உறவினர்தான் அங்கிருந்தார். மீதி பேர் சாப்பிட சென்றிருக்க, கோதையின் தோழிகளும் அவளை சூழ்ந்துகொண்டனர். 

கயந்திகாவும் ராதையும் மணமகன் அறையை பூட்டிக்கொண்டு அடுத்து என்ன செய்வது யோசித்து கொண்டிருந்தனர்.

“அம்மா நீ அப்பாக்கு டிவோர்ஸ் கொடுக்க போறீயா?”

“அது எப்படி முடியும். உங்க அப்பாவ நான் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவர் எனக்குதான் சொந்தம். யாருக்காகவும் அவரை விட மாட்டேன். ஏன் அவரே! சொன்னாலும் விட மாட்டேன்” அனல் தெறிக்கும் ஆவேசத்தோடு கூறினாள் கயந்திகா.

“அப்போ.. சொத்து? சொத்த அதுங்களுக்கே! கொடுத்துட போறியா?” சந்தேகமாக ராதை அன்னையை நோக்க,

“பைத்தியம் மாதிரி பேசாத, உங்கப்பாவும், சொத்தும் ரெண்டும் எனக்கு வேணும்”

“என்ன பண்ண போற? அந்த பொம்பளய கடத்தி சொத்ததையும் அப்பாவையும் உன் கூட இருக்க வைக்க போறியா? இல்ல குடும்பத்தையே! மொத்தமா தூக்கிட்டு அப்பாவ உன் கூட தக்கவச்சிக்கலாம்னு யோசிக்கிறியா?”

“ஆமா” என்ற காயந்திகாவின் பார்வையில் அவ்வளவு உறுதி இருந்தது.

அதை பார்த்து சத்தமாக சிரித்த ராதை “அப்படி பண்ணா அப்பா உன் கூட இருப்பாருனு நினைக்கிறியா? சான்சே இல்ல. அந்த குடும்பத்துக்கு ஏதாவது ஆச்சு. உன்ன கொன்னுடுவாரு”

மகள் சொல்வதின் உண்மை புரிய “எல்லாம் உன் மாமாவால வந்தது. உங்க அப்பாக்கு இன்னொரு குடும்பன் இருக்குனு தெரிஞ்ச உடனே! அந்த குடும்பத்தை போட்டு தள்ளி இருக்கணும். அப்போ இந்த பிரச்சினை எதுவும் வந்திருக்காது” சற்றும் யோசிக்காமல் பேசினாள் கயந்திகா.

“இப்போவும் நீ கோபத்துல பேசுற, அந்த ரெண்டுக்கும் ஏதாவது ஆச்சுன்னா சொத்து ட்ரஸ்ட்டுக்கு போகும்னு நம்ம தாத்தாவே! எழுதி இருக்காரு. மறந்திட்டியா?”

“ஆமா… அவளை அன்னைக்கே! தேடி கொல்ல துப்பில்லை, வயசான காலத்துல பாவம் புண்ணியம்னு சொத்த எழுதி வச்சதும் இல்லாம, அதுங்கள போட்டுத்தள்ள கூட முடியாதபடி பண்ணிட்டு போய்ட்டாரு” கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் கயந்திகா.

“கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லமா… இதுங்கள ஒரு வழி பண்ணணும்மா அதுக்கு ஒரே வழி.. அதுங்க ரூட்லயே! போய் அடிக்கணும்”

“என்ன டி… சொல்ல வர?” கயந்திகா புரியாது மகளை பார்க்க, அன்னைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறினாள் ராதை. 

எல்லா சடங்குகளும் முடிந்த பின்னால் கிருஷ்ணாவை கோதையின் தோழிகள் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

கிருஷ்ணாவும் கோதையும் எங்கே! சந்தித்துக்கொண்டார்கள்? எப்படி காதல் வயப்பட்டார்கள்? எப்படி காதலை வளர்த்தார்கள்? என்றெல்லாம் அவர்கள் கேள்வி எழுப்ப கிருஷ்ணா என்னவெல்லாம் பொய்யுரைக்க போகிறான் என்று கோதை கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

க்ரிஷ்ணாவுக்கோ தான் சந்தித்தது கோதை தானா என்ற சந்தேகமே! தீரவில்லை. இதில் அவள் தோழிகள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வான்?

முதலில் கோதையிடம் பேசி தீர்க்க வேண்டி இருக்க “உன் கிட்ட பேசணும் கொஞ்சம் உள்ள வா” என்று கோதையை பார்த்து கூறியவாறே மணமகள் அறையை காட்ட தோழிகள் ஒன்று சேர கோரஸ்ஸாக “ஓஹ்.. ஒஹ்..” போட அவர்கள் கொண்ட அர்த்தம் கண்டு

“ஐயோ… இவ வேற இந்த பார்வ பாக்குறா… இதுங்க வேற நான் என்னமோ! இவள ரூமுக்குள்ள இழுத்துக்கொண்டு  கிஸ் பண்ண போற மாதிரியே! பில்டப் பண்ணுறாங்களே!” புன்னகை முகமாக கிருஷ்ணா தோழிகளை ஏறிட கோதைக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவள் படித்தது பெண்கள் பாடசாலையில். பெண்கள் படிக்கும் கல்லூரியில். ஆண்கள் வாசமே இல்லாமல் இவள் எப்படி கிருஷ்ணாவை காதலித்தாள் என்று மண்டையை பிய்த்துக்கொண்டவர்கள் அவளிடம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் கேள்வி கேட்டிருக்க, அவர்களை வெறுப்பேற்ற வேண்டியே கிருஷ்ணாவின் தோள் உரச நின்று எல்லா சடங்குளையும் செய்தது மட்டுமல்லாது இது இப்பொழுதும் மிக உரிமையாக கையை பற்றிக்கொண்டு மணமகளின் அறைக்குள் நுழைந்து கதைவடைக்க, தோழிகளுக்கு புகைவராத குறை என்றால் கிருஷ்ணா என்ன மாதிரியான உணர்வுக்குள் சிக்குண்டான என்று அவனுக்கு புரியவில்லை. 

 கிருஷ்ணா மயங்கி நின்றது சில நொடிதான். கதவை மூடிய கோதை கையை கட்டிக்கொண்டு “யார் சொல்லி என் கழுத்துல தாலி கட்டின?” என்று கேட்டிருக்க

“என்ன பேசுற ராதை” என்றான் கிருஷ்ணா.

சுறுசுறுவென கோபம் பொங்கியது கோதைக்கு. கண்ணபிரான் அலைபேசியில் உரையாடும் பொழுது ஆயிரம் தடவை ராதை மற்றும் கோதையின் பெயர்களை மாற்றி கூறி இருப்பார். அப்பொழுது வராத கோபம் மஞ்ச தாலி மேஜிக்கல் நிகழ்ந்து விட்டதா?

கோதையின் கோப முகம் கண்டு “என்ன வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுது?” என்று கிருஷ்ணாவின் மைண்ட் வாய்ஸ் கூவ வாயும் “என்ன ஆச்சு ராதை?” என்று கேட்டு வைக்க

அனல் தெறிக்கும் பார்வையை வீசியவாறே “சுத்தம். என் பேர் கூட தெரியாதா? மண்டபத்து வாசல்ல பெரிய பேனர்ல போட்டோவோட பேரும் போட்டிருந்தாங்களே! பார்க்கலயா? பேர் கூட தெரியாமத்தான் என் கழுத்துல தாலி கட்டினியா?” அவ்வளவு இளக்காரம் அவள் குரலில்

“ஆ.. பார்த்தேன். ஈன்னு இளிச்சு கிட்டு இருந்தியே!” தன்னை காதலிப்பவாளால் இன்னொருவனை மணக்க போகிறோம் என்று அறிந்து கொண்ட பின் எவ்வாறு இவ்வளவு மனமகிழ்வோடு புன்னகைக்க முடிந்தது என்ற கோபம் அப்பட்டமாக கிருஷ்ணாவின் முகத்தில் தெரிந்தது.

நொடியில் கோபம் கொண்டவன் கோதை கேட்ட கேள்வியை மறந்து போய் இருக்க, கிருஷ்ணாவின் கோப முகம் கண்டு தன் கோபத்தை கைவிட்டு “என் பெயர் ராதை இல்ல. கோதை” என்றாள் பூங்கோதை.

அத்தனை பெயரின் முன்னிலையிலும் பஜாரி போல் கத்தி கூப்பாடு போட்ட கோதையா? இவள் என்பது போல் ஆச்சரியப்படுமளவுக்கு அவ்வளவு நிதானமாக இருந்தது கோதையின் பேச்சு.

“ஆமா… நான் லவ் பண்ணது ராதையை அவ ஊமை. அது நீயில்லை” என்ற கிருஷ்ணா விரலை நீட்டி சந்தேகமாய் “நீ ட்வின்சா?” என்று கேக்க

“இல்ல. எங்க அப்பாக்கு நான் ஒரே பொண்ணு. அட ச்சீ… எங்க அம்மாக்கு நான் ஒரே பொண்ணு. அப்பாக்கு தான் இன்னொரு கல்யாணமாகி பொண்ணு இருக்கே! அந்த பொண்ணு பேரும் ராதை தான்” உதடு சுளித்த கோதை கிருஷ்ணாவின் முகத்தை ஆராய்ச்சியாக பார்க்க

“அப்படினா? ராதையும் நீயும் பார்க்க ஒரே மாதிரி இருப்பீங்களா?” கண்டிப்பாக ஆள் மாறிப்போச்சு என்றுதான் எண்ணினான். கிருஷ்ணா.

“ச்சீ.. சீச்சீ.. இல்லவே! இல்ல. அவ பார்க்க அப்பா சாயல்ல இருப்பா… நான் அம்மா சாயல். அது மட்டுமில்ல. அவ ஊமையும் கிடையாது” என்ற கோதை அமைதியாக கிருஷ்ணாவை ஏறிட 

“ஆள் மாறாட்டமும் ஆகலனா? என்ன குளறுபடி நடந்திருக்கும் என்று சிந்தனையில் கிருஷ்ணா விழ,

“சி.எம் பையன் அதுவும் லவ் பண்ணுறேன்னு பொய் சொல்லி அதிரடியா.. ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுறான்னா? என்ன விஷயமா இருக்கும்?” யோசிப்பது போல் கோதை பாவனை செய்ய கிருஷ்ணா அவள் புறம் திரும்பினான்.

“ஒன்னு பழிவாங்க இருக்கணும். இல்லையா? ஜாதக தோஷமா இருக்கணும். இதுல எது?” இமைகளை மேலெழுப்பி அவள் கேட்ட விதத்தில் புருவங்களும் உயர அந்த அழகில் சொக்கி நின்றான் கிருஷ்ணா.

சத்தமாக சிரித்த கிருஷ்ணா “பழிவாங்கவா? யார? எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்ல”

“ஏன்? என்ன? எங்க அப்பாவை கூட இருக்கலாம்” என்ற கோதைக்கு கிருஷ்ணா திட்டமிட்டு தாலி கட்டியது நன்றாக புலப்பட்டது.

கண்களை மூடி ஒரு நொடி யோசித்தவனின் ஆள் மனதில் ஆழமாக பதிந்து போய் இருந்த கோதை அழகாக சிரிக்க, கண்களை திறந்தவன் மெதுவாக அடியெடுத்து கோதையின் அருகில் சென்று அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்ததோடு மட்டுமல்லாது தனது வலது கையால் அவளது இடது கன்னத்தை பிடித்து “இந்த முட்ட கண்ணு சொல்லுது நான் லவ் பண்ணுற பொண்ணு நீதான்னு. இந்த சின்ன மூக்கும், அது மேல இருக்குற மூக்குத்தியும் சொல்லுது நான் லவ் பண்ணுற பொண்ணு நீதான்னு. உன் உதடு கூட எனக்கு மறந்து போகும். ஆனா உதட்டுக்கு கீழ இடது பக்கத்துல இருக்குற இந்த மச்சம் என் கண்ணுகுள்ளேயே! நிக்குது.

பேரு வேணா மாறி இருக்கலாம். நான் பேசின ஆள் கூட மாறி இருக்கலாம். ஆனா நான் லவ் பண்ணது உன்னைத்தான். ஊமைனு நினைச்சி, உன் குரல் எப்படி இருக்கும்? நீ பேசினா? எப்படி இருக்கும்ன்னு அமெரிக்கால இருக்கும் போது தூங்காம யோசிச்சு இருக்கேன். ஆனா நீ இவ்வளவு பேசுற? முதல்ல…” என்றவன் அடுத்து பேசாது அவள் இதழ்களை சிறை எடுத்திருந்தான்.

கிருஷ்ணா கொடுத்த முத்தத்தில் தன்னை தொலைத்தவளின் ஆள் மனம் விழிக்க, அவள் அவனை எங்கே! சந்தித்தாள் என்று பெண்ணவளுக்கு நியாபகம் வந்திருந்தது.

Advertisement